குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/வாழும் நெறி

7


வாழும் நெறி


வாழ்வாங்கு வாழ்தல் ஒரு கலை, அதிலும் இறைநெறி நின்று வாழ்தல் என்பது பெரும்பேறு. ஓர் ஆன்மா எப்படி வாழ்ந்தால் அந்த வாழ்வு பயனுடையதாக அமையும் என்று இறைவனே உணர்த்தியுள்ளார். தான் மட்டும் வாழ்தல், வாழ்க்கையே அல்ல. சிலர் இதனை விலங்கியல் வாழ்க்கை என்பர். இது தவறு. விலங்குகளும் தாவர இனங்களும் மற்ற உயிரினங்களுக்குப் பயன்படும் வாழ்க்கையை நடத்துகின்றன. ஆதலால், ஒன்றுக்கும் ஆகா வாழ்க்கையை விலங்கியல் வாழ்க்கை என்று கூறுவது தவறு. அப்படியானால் யாதொரு பயனுமிலாது வாழ்வோர் வாழ்க்கையை என்னென்பது? என்னவாக வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுபற்றி அலட்டிக் கொள்வதில் என்ன பயன்? இறைவன் மாணிக்கவாசகரை ஆண்டருளிய முறை நம்மனோர் வாழ்தலுக்குரிய நெறிமுறையாக அமைந்துள்ளது.

இறைவன்-திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரை வாழ்விக்க எண்ணுகிறான். ஒரு தாய் காட்டும் பரிவைவிடத் தகுதி மிகுதியுமுடைய பரிவுடன் எண்ணுகின்றான். தாயின் பரிவே பரிவு. தாய் காட்டும் அன்பே இத்தரணியில் தலையாயது என்பர். ஆயினும் எல்லாத் தாய்மாரும் ஒன்றுப் போலத் தம் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில்லை. அன்பிலும் தரம் இருக்கிறது. தாய்மார் தம் குழந்தைகளிடம் காட்டும் அன்பினில் தரப்பாகுபாடு இருக்கிறது. ஒரு சில தாய்மார் குழந்தை அழுதாலும் கவனிப்பதில்லை. அலட்சியப் போக்குடன் இருப்பர். இவர்கள் தாய்மாரே அல்லர். ஒருசில தாய்மார் குழந்தை அழுதவுடன் பாலூட்டுவார்கள் இவர்கள் பரவாயில்லை! ஒரு சில தாய்மார் குழந்தைக்குப் பசிக்குமே என்று நினைந்து அழத் தொடங்கு முன்பே உரிய காலத்தில் பாலூட்டி விடுவார்கள். இவர்கள் நற்றாய்மார். ஆனால் இறைவனாகிய தாய், நினைந்து ஊட்டுவதில்லை, மறப்பு என்ற ஒன்றினைத் தொடர்ந்து வருவது நினைப்பு. இறைவன் உயிர்களை மறப்பதே இல்லை. அதனால் இறைவனாகிய தாய் நினைந்து ஊட்டும் தாயினும் சிறந்து விளங்குகின்றான்.

ஒரு தாய் தன்னுடைய மக்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று மதிப்பிட்டு அன்பு காட்டமாட்டாள். தாயன்பு, குற்றங் குறைகள் உடைய பிள்ளைகளுக்கும் கிடைக்கும்; கட்டாயமாகக் கிடைக்கும். இந்தத் தாயின் மனத்தில் மகவு என்ற பொதுநிலை அங்கீகாரப் பண்பே ஆட்சி செய்கிறது. இறைவனும் அப்படித்தான். இன்னும் சொல்லப் போனால் இறைவனின் கருணை பாவிகள் மேல் விழுவதைப் போல், வேறு யார் மீதும் விழுவது இல்லை. இறைவன் பாவிகளையும் பரிவுடன் ஆட்கொள்கின்றான். அன்பின் ஆற்றல் முன்னே பாவம் ஏது?

பாவியை இறைவன் ஆட்சிகொண்டருளினாலும் பாவத்தை ஏற்பதில்லை; மன்னிப்பதில்லை. பாவச் செயல்களுக்குக் காரணமாக அமைந்துள்ள புலால் ஆற்றலுக்குத் துணைபோகும் ஊனினை உருக்கிப் பதப்படுத்துவான். ஊன் உருகினால் உயிர் உருகும். உயிர் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகினால் உயிர் உருகும். உயிர் நலம் சிறக்கும்! உள்ளொனி பெருகும். உள்ளொளி பெருகினால் இன்பம் போதரும். அந்த இன்பம் ஆரா இன்பம்! அந்த உலப்பிலாத முற்றுப்பெறாத இன்பத்தை இறைவன் வழங்கி அருள்கின்றான். வழங்கப் பெற்ற இந்த இன்ப அனுபவத்தை உயிர்கள் ஆர்ந்து அனுபவிக்கின்றனவா? என்று கண்டறிய வேண்டும். இதற்காக இறைவன் ஆன்மாக்கள் பின்னே சுற்றிக்கொண்டே இருக்கிறான். எந்த ஒரு பணியும், அறமும் தொடர்ச்சியாகப் பின் தொடர்நிலையில் கண்காணிக்கப் பெறாது போனால் அந்த அறம் வளராது. வளராதது மட்டுமல்ல, கெட்டும்விடும். ஆதலால் அறம் செய்தலைவிட அறத்தினைப் பாதுகாத்தல் நீங்காக் கடன். உயிர்களும், நன்னெறியைச் சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டும். இஃது ஓர் அருளியல் நிகழ்வு; இந்த நிகழ்வினை,

“பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருள்வது இனியே!”

என்ற திருவாசகப் பாடல் விளக்கிக் காட்டுகிறது.

ஆன்மாக்கள் உய்தி பெறுதற்குரிய சிறந்த நெறி தொண்டு நெறியேயாகும். ஏழை மக்கள் தங்களுக்கு எது நல்லது என்று தேர்ந்தறிய மாட்டார்கள். அவர்களால் இயலாது. ஆதலால் படித்தவர்கள்-வளர்ந்தவர்கள், வளராதவர்களுக்கு என்ன வேண்டும் என்று நினைக்க வேண்டும். தாயன்பினும் கூடுதலான அன்புடன் நினைக்க வேண்டும். முதல் நிலையில் நல்லதைக்கூட அந்த மக்கள் ஏற்கமாட்டார்கள். புறக்கணித்துப் பேழ்கணித்து நிற்பர். அந்த நிலையிலும் அவர்களைப் பரிவுணர்வுடன் அணுக வேண்டும். அவர்களுடைய குற்றங்களைக் காணக்கூடாது; கூறக்கூடாது. எவ்வித அடிப்படையும் இல்லாமலே - காரணங்கள் இல்லாமலே “மனித நிலை”யில் அவர்களுக்கு ஏற்பளிக்க வேண்டும். அதாவது மனிதனை மனிதனாக அங்கீகரித்தல் என்பதாகும். அதேபோழ்து உடன்பாட்டு நிலையில் நின்று, உடன்படுத்திக் கொண்டு அவர்களிடம் உள்ள பாவத்தை நீக்க வேண்டும். பாவத்திற்குக் காரணமான ஊன்தடிப்புடன் கூடிய வாழ்நிலையை மாற்ற வேண்டும். உடல், சதை தாங்கும் சுமைதாங்கியாக அமையாமல் அருள் நலம் சுமக்கும் உடலாக மாறவேண்டும். இருள் செறிந்த அறியாமையிலிருந்து மீட்க வேண்டும். இருளை நீக்கும் முயற்சி எது? ஒளியை உருவாக்க வேண்டும்; அதாவது உள்ளொளியை-ஆன்ம ஞானத்தை வளர்க்க வேண்டும்; இன்பத்தினை வழங்க வேண்டும். அளிக்கப் பெற்ற இன்பத்தினை இடைவழியில் இழக்காமல் வாழ்ந்திடத் துணை செய்ய வேண்டும். இதற்குத் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். இதனை ஆட்சியாளர் Follow up என்பார்கள். நமது நாட்டு நிலையில் முன்னேற்றத் திசையில் அடிவைத்த அளவுக்குப் பின்னோக்கியும் வந்திருக்கிறோம். மதிப்பீடுகள் சீராகச் செய்யப் பெறமையினாலேயே நமது முன்னேற்றம் முன்னேற்றமாகத் தெரியவில்லை. பயனுமில்லாமல் போகிறது.

வாழ வேண்டிவர்களைப் பற்றி எண்ணுமின்! அவர்களுக்குரிய நன்மைகளைப் பற்றி நினைமின்! அவர்கள் நன்றுணர மறுத்தாலும் நினைவகற்றாதீர்! செயலிழக்காதீர்! சாலப் பரிந்து அன்பு செய்ம்மின்! அவர்களிடத்தில் அறிவொளியை ஏற்றித் தருக! அவர்கள் இன்புறு நலன்கள் பெற்று வளர, வாழப் பணி செய்க! செய்த பணியைத் தொடர்ந்து பேணுக! இஃது ஒரு சிறந்த வாழும் நெறி!