குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/சேக்கிழார் விழாவில் தலைமை உரை



9


சேக்கிழார் விழாவில் தலைமை உரை

சேக்கிழார் பிறந்த திருப்பதியில் சேக்கிழார் விழாக் காணக் கூடியிருக்கும் மெய்யன்பர்களே! அருள் நலம் சான்ற அடிகள் பெருமக்களே! இந்த இனிய வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே! அமைச்சரின் கருத்தறிந்து செயற்பாடு நிகழ்த்தும் அறநிலையத் துறை ஆணையர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! திரு நெறிய தொண்டின் நெறி மண்ணில் நின்று நிலவ, புகழ்மிக்க வரலாற்றுக் காப்பியத்தை அருளிச் செய்த சேக்கிழார் பெருமானின் சேவடிகளைச் சென்னி மேற்கொண்டு போற்றுகின்றனம்.

ஒப்பற்ற சாதனை

சேக்கிழார் இயற்றித் தந்துள்ள காப்பியத்தில் வரும் வரலாற்று நாயகர்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்; பல்வேறு நாட்டில் வாழ்ந்தவர்கள்; பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள்; பல்வகைத் தொண்டுகளை மேற்கொண்டு வாழ்ந்தவர்கள். இவ்வளவையும் சேக்கிழார் கற்றும் தேர்ந்தும் தெளிந்தும் காப்பியத்தை இயற்றித் தந்துள்ளார். சேக்கிழார் இயற்றிய காப்பியத்தில் வரும் நாயகர்கள் கி.பி.300 முதல் கி.பி. 865 வரையுள்ள கால எல்லையில் வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றி பெற்ற அடியார்கள். அவர்களின் வரலாற்றைச் சேக்கிழார் தொகுத்துக் கூறியுள்ளார். அதாவது சேக்கிழார் காப்பியத்தில் வரும் நாயகர்கள் ஏறத்தாழ 600 ஆண்டுகள் இடை வெளிக் காலத்தில் வாழ்ந்தவர்களாகின்றனர். கண்ணப்பர், இயற்பகை நாயனார் போன்றவர்கள் கிறித்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்கள் என்னும் ஒரு கருத்து உண்டு. இந்தக் கால எல்லையில் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்க கூடும்? அதுவும் முறையாக வரலாற்றை எழுதி வைக்கத் தெரியாத சமுதாயத்தில், பரவலாக அங்கும் இங்குமாக வாழ்ந்த அடியார்களின் வரலாற்றையெல்லாம் கண்டும் கேட்டும் அறிந்து காப்பியத்தை இயற்றியுள்ளார் சேக்கிழார். இஃதோர் அருமையான பணி! அரிதின் முயன்று முடித்த பணி! முயற்சியின் அருமை அறிந்தோர் பாராட்டுதில் வியப் பென்ன? காப்பியத்தில் வரும் நாயகர்கள் பல்வேறு குலத்தினர்; சிலர் நாடறியத் தொண்டு செய்தவர்கள்; பலர் எங்கோ ஒரு மூலையில் எளிமையாக இருந்து கொண்டு செய்தவர்கள். இத்தகையோர் அனைவரின் வரலாற்றையும் சேக்கிழார் கண்டறிந்து எழுதியது ஒப்பற்றசாதனை. முதல் நூலினைத் தொடர்ந்து வரும் விரிவுநூல் இலக்கிய அமைப்பிலேயே வடிவம் பெறும். திருத்தொண்டத் தொகையாகிய முதல் நூலைத் தொடர்ந்து விரிவு நூல் செய்த சேக்கிழார் வரலாற்றுப் போக்கில் செய்திருப்பது அருமையான படைப்பு. இது போல் சேக்கிழாருக்கு முன்பும் யாரும் செய்ததில்லை, பின்பும் யாரும் செய்யவில்லை. திருத்தொண்டத் தொகையின் விரிவு இலக்கிய நலம் செறிந்த வரலாற்று நூலாக மலர்ந்திருக்கிறது; தத்துவ நூலாக உருப் பெற்றிருக்கிறது. மெய்ப்பொருளியல் விளக்கும் நூலாகக் கிடைத்திருக்கிறது. ஞான நெறியினை விளக்கும் ஞானப் பனுவலாக அமைந்திருக்கிறது.

செழுந்தமிழ் வழக்கே சேக்கிழார் குறிக்கோள்

சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் அவர் பல்வேறு தர்க்கங்களுக்கு ஆளாகியிருக்கின்றார். அது மட்டுமன்று சேக்கிழாரின் காப்பியத்தில் வருகிய நாயகர்களில் பலர் சமுதாய வரலாற்றுக் களங்களில் நின்றவர்கள்; அறைகூவல்களைச் சந்தித்தவர்கள். தமிழினமும் தமிழும் தமிழ் நெறியும் காலத்தால் முந்நியன. ஆயினும் இவை காலத்துக்குக் காலம் சந்தித்து வந்துள்ள அறை கூவல்களின் காரணமாகப் பல்வேறு இடர்ப்பாடுகளை அடைந்துள்ளன. தமிழ் வரலாறு தேக்க நிலை அடைந்திருக்கிறது. பல சமயங்களில் தமிழையும் தமிழ் நெறியையும் பாதுகாக்க அரசையே கூட எதிர்த்துப் போராட வேண்டியதிருந்திருக்கின்றது. அத்தகைய துணிவு மிக்க வரலாறுகள் பெரிய புராணத்தில் பலவுண்டு. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை திருஞான சம்பந்தர் வரலாறும் திரு நாவுக்கரசர் வரலாறுமாகும். சேக்கிழாரின் திருவுள்ளம் உலகம் தழிஇய ஒட்பமுடையது. ஆயினும் திசையனைத்தின் பெருமையெல்லாம் தென் திசையே வென்றேற வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டிருந்தவர், அவர், அசைவில் செந்தமிழ்வழக்கு அயல் வழக்கை வென்று விளங்க வேண்டும் என்ற நோக்குடையவர். ஏழாம் நூற்றாண்டில் அயல் வழக்கை செழுந்தமிழ் வழக்கு வென்று விளங்கியது. ஆயினும், அந்த வெற்றி வாழ்க்கை தொடரவில்லை. மீண்டும் தொய்வு! இருள் படர்ந்த நிலை! மயக்க நிலை! இந்த நிலையில்தான்் சேக்கிழாரின் திருத்தொண்டர் வரலாறு என்ற ஞானக் கதிர் இருள் கடிந்து எழுகின்றது. செந்தமிழ் வழக்கு நெறி நெறி இதுவென உணர்த்தியது. செழுந்தமிழ் நெறியில் நின்று. வாழ வழிகாட்டியது.

சேக்கிழாரின் காப்பிய நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்திலிருந்த சமுதாயச் சூழல்கள். சேக்கிழார் காலச் சூழல்கள் இவையனைத்தையும் நினைவிற்கொண்டு சேக்கிழார் காப்பியத்தைக் கற்றால்தான்் அதன் அருமைப்பாடு விளங்கும். -

சேக்கிழார் செந்தமிழ் நாட்டு மரபினை அரண் செய்யும் குறிக்கோளோடு நூல் இயற்றினார். ஞாலமளந்த மேன்மை தெய்வத்தமிழின் புகழ் பர்ப்பும் பணி! திரு நெறிய தொண்டின் நெறி நிற்கும் குறிக்கோள்! வழி வழி வந்த அகனைத்தினை வாழ்க்கையில் மக்களை நின்றொழுகச் செய்தல்: தமிழ்ச் சமுதாயத்தின் மையமென விளங்கிய திருக்கோயில்களைப் பேணுதல், தமிழிசையைப் பேணுதல் இயற்கையோடிசைந்த இறை நலம் சார்ந்த வாழ்க்கை நெறியைக் காணல்! அன்பு நலம் பாராட்டுதல் இவை யனைத்தும் சேக்கிழார் காப்பியத்தின் குறிக் கோளாகும்!

திருஞானசம்பந்தர் காலச்சூழல்

சேக்கிழார், திருஞானசம்பந்தரின் திருவவதாரத்தை விளக்கும் பொழுது, "அசைவில் செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறைவெல்ல" திருவவதாரம் செய்தார் என்று அருளிச் செய்கின்றார், திருஞானசம்பந்தர் அவருடைய பெற்றோரின் பெருந்தவத்தின் பயனாகப் பிறந்தவர். திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்யும் சூழ்நிலையை, "மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான் விரும்புவார் அனையநிலை தணைநின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் புனை மணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம் புரிந்தார். (பெரியபுராணம்-திருஞானசம்பந்தர் பா-19) என்ற சேக்கிழார் பாடலின் வாயிலாக அறியலாம். அதாவது திருஞான சம்பந்தர் திருவவதாரம் செய்வதற்கு முன்பே தமிழகத்தைத் தமிழ் நெறிக்கு மாறான புறச் சமய நெறிகள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன. இதனை,

"திசையனைத்தின் பெருமை எலாந் தென்றிசையே வென்றேற, மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல, "அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல, இசை முழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருக';

"அவம்பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரைநெறிக்ள் பாழ்படநல் லுரழிதொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்க ளெலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரஞ் செய்தார்"

என்னும் பாடல்களின் மூலம் அறியலாம்.

திருஞான சம்பந்தரின் பெற்றோர்கள் குலவழி அந்தணராயினும், சைவநெறியையே சார்ந்தொழுகியவர்கள். அந்தக் காலத்தில் சைவத்தில் வேதாந்தம் இருந்ததே தவிர வேதத்தின் அடிப்படையில் தோன்றிய ஏகான்மவாதம், மாயாவாதம் போன்ற சமயங்கள் தோன்றவில்லை. மறைமலையடிகள் பௌத்தத்தையே மாயாவாதம் என்று குறிப்பிடுவர். இச்செய்தி ஆய்வுக்குரியது. பண்டு, தமிழகத்தில் வாழ்ந்தவர் அனைவரும் சைவ, வைணவ நெறிகளிலேயே நின்று வாழ்ந்தனர்.

வேதம்-எது?

சேக்கிழார், திருஞானசம்பந்தர் திருவவதாரத்தை எடுத்துக் கூறும்போது, "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' என்று அருளியுள்ளார். வேதம்' மொழிகளைக் கடந்த ஒரு பொதுச்சொல். உலகத்தின் அனைத்துச் சமயங்களுக்கும் வேதம் உண்டு. வேதம், மொழி எல்லைகளைக் கடந்தது. மானிடர் அறியப்பெறுவனவாகவும் கருத்தாகவும் உயர் கொள்கையாகவும் உடைய அனைத்தையுமே வேதம் என்று போற்றுதல் மரபு என்பார் ஞானத்தமிழாகரர் வை. இரத்தினசபாபதி. தமிழில் வேதத்திற்கு 'மறை என்று பெயர். திருமுறைகளில் வேதம் என்ற சொல்லும் பயில்கிறது மறை என்ற சொல்லும் பயில்கிறது. "நால் வேதம் ஆனான்', மறையுடையான் என்ற வழக்குகளைக் காண்க. மறை, நூல்கள் என்று ஒத்துக் கொண்டாலும் ரிக், யசுர், சாம, அதர்வணம் என்று வேத வியாசரால் முறைப்படுத்தப் பெற்ற வேதங்களை, திருமுறைகள் நமக்கு அரண் செய்யும் நூலாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மறுப்பும் இல்லை. திருமுறைகளில் வரும் மறை, நிறைமொழி, மாந்தர் ஆணையிற்கிளந்த மறைகளே. அவை, பொதுவாக மொழி எல்லைகளைக் கடந்தன. உணர்த்தும் பொருளால் சிறப்பாகத் தமிழுக்கே யுரியன; இதனைத் திருஞான சம்பந்தர் பாடிய,


“பண்பொலி நான்மறை பாடியாடிப்பல வூர்கள் போய்
உண்பலி கொண்டுழல் வானும் வானினனொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கடவூரதனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லவே"


"தேம்பல் நுண்ணிடையாள் செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொால் திகழ் பொற் பதிபூந்தாராய் போற்றுதும்
என்றோம்பு தன்மையன முத்தமிழ் நான்மறை

ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலை கொண்டாம்படி இவை ஏத்தவல்லார்க்கு அடையா வினையே’ என்ற திருப்பாடல்களில் வரும் "பண்பொலி நான்மறை", "முத்தமிழ் நான்மறை” என்பவற்றால் அறியலாம். பொதுவான கொள்கை வேதநெறி யென்றும். அதே நெறி ஒன்றிய உள்ளத்தோடு உணர்வு நிலையிலிருந்து செயற்படுத்தும் பொழுது-அனுபவ நிலையில் வாழும் பொழுது சைவத்துறை யென்றும் பெயர் பெறுகின்றது. குளம்-படித்துறை ஆறுஇறங்கு துறை ஆகிய வழக்குகளோடு ஒப்பு நோக்குக. வேதநெறி, சைவநெறிக்கு அயல் வழக்கன்று. ஆனால் வேத நெறியே சைவ நெறியாகாது. முன்னையது பொது, பின்னையது சிறப்பு.

அயல்வழக்கு

திருஞானசம்பந்தர் காலத்தில் பௌத்த, சமண சமயங்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டன. அயல் வழக்கு என்று சேக்கிழார் கருதுவது பௌத்தத்தையும் சமணத்தையு மேயாம் அவை எப்படி அயல் வழக்காயின?

இந்தியாவின் வடபகுதியில் ஆரியமதம் கால் கொண்டிருந்தது. இது பெரும்பாலும் உயர் குடியினராகிய பார்ப்பனரின் மதமாக இருந்தது. கடுமையான வருணாசிரம வேறுபாடுகளை இந்த மதம் நடைமுறைப்படுத்தியது. வேள்வி முதலியன உயிர்ப்பலியுைம் வற்புறுத்தியது. சமூக ஏற்றத் தாழ்வுகள் இன்பதுன்பங்கள் ஆகியன விளையின் விளைவுகள் என்று ஒதின. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள இயலாத நால்வகை வருணத்தில் போர் செய்வதையும் ஆட்சி செய்வதையும் பிறப்புரிமையாகப் பெற்றிருந்த சூத்திரிய வமிசத்தினர் ஆரிய மதத்திலிருந்தும் ஆரிய புரோகிதர்களிடமிருந்தும் விடுதலை பெறுவதற் காக-தன்னாட்சி அமைப்புக்காகச் சமண பௌத்த சமயங்களைக் கண்டனர். வடக்கே ஒரளவு அச்சமங்களுக் கேற்ற சூழலிருந்ததால் பரவ முடிந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய சொந்த வாழ்வில் தோன்றிய சைவ வைணவ நெறிகளே சமயங்களாக விளங்கி வந்தன. இவை நெறிகள்; வாழ்வோடியைந்த சமயங்கள். பிறப்பின் அடிப்படையில் மனிதகுல வேறுபாட்டைக் கற்பிக்காத சமயங்கள். வினை வலியை நம்பினாலும் போரிட்டு, அதனை வெற்றிபெற இயலும் என்ற வழி நடத்திய சமயங்கள். ஆதலால், சமண பௌத்த சமயங்கள் நிலப்பகுதியினால் மட்டுமல்ல, வாழ்க்கை முறையினாலும் அயல்வழக்கு நெறிகளாயின. ஆயினும், வட புலத்தில் அரசுகளே கண்டு வளர்ந்த சமயங்களாதலால் அவை தமிழகத்திற்குள் வரும்பொழுது தமிழகத்தில் நிலவிய பல்லவ, பாண்டியப் பேரரசுகளும் வரவேற்றன; ஆதரவளித்தன. ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இத்தகைய போராட்டங்களைத்தான்் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாற்றில் பார்க்கிறோம்.

சமணக் கொள்கைகள்

சமணத்திற்கு உயிர் உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுண்டு. அதே பொழுது உயிர்களே முற்றுணர்வும் முடிவிலாற்றலும் உடையன என்னும் நம்பிக்கையுடையது. சமணர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அவர்களுடைய சமய மரபுப்படி கேவல ஞானம் எய்திய மனிதனே கடவுள் என்று வழிபடுகின்றனர். ஆனால் சமணர்களுக்கு வினைத் தொடர் பற்றிய நம்பிக்கையுண்டு. சமணர்கள் கொல்லா விரதத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். சமண சமயத்திலிருந்த கொல்லாமை என்ற அறம் இந்திய நாட்டில் நிலவிய அனைத்துச் சமயங்களையும் தன்வயப்படுத்தியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

பௌத்தக் கொள்கைகள்

பௌத்தம் பொதுவாக இந்து மதத்தோடு அதிகம் மாறுபடுவதில்லை என்ற ஒரு நம்பிக்கையுண்டு. ஆனால், பௌத்தம் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல பௌத்தத்திற்கு உயிர் உண்டு என்பதில் நம்பிக்கையில்லை. இதில் இருவேறு கருத்துக்கள் உண்டு. இதனை ஆய்வது இங்கு நோக்கமில்லையாதலால் கைவிடப்படுகிறது. கடுமையான துறவை வற்புறுத்துவது பௌத்தம். இவ்விரு சமயங்களையும் மறுத்து இயல்பாக அமைந்த வாழ்க்கை நெறியாக இருக்கிற சைவ நெறியை மக்களிடை வலியுறுத்திப் பரப்பவே சேக்கிழார் காப்பியம் செய்தார்.

செழுந்தமிழ் வழக்கு-சைவநெறி

சைவ சமயம், தமிழரின் பேரறிவில் பூத்து வளர்ந்த நெறி நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் ஏற்ற நெறி; இயற்கையோடிசைந்த நெறி. இம்மையிலும்-இம்மண்ணுலகிலும் மகிழ்ச்சியோடு வாழத்துணை செய்யும் நெறி. மறுமையிலும் இறவாத இன்ப அன்பு வழங்கும் நெறி, சைவ நெறியில் நம்பிக்கைகள் மட்டுமே ஆட்சி செய்யவில்லை. புனைந் துரைகள் அறவே இல்லை. மானுடம் போற்றப்படுகின்றது. கடவுள் மானுடத்தின் வாழ்முதலாகப் பேசப்படுகிறார். பரவப் படுகிறார். கடவுள் தந்தையாக, தாயாக, ஆசிரியனாக, தோழனாக, சேவகனாக நின்றாளும் பெற்றிமை தமிழகத்தின் சமய நெறிகளில் மட்டுமே உண்டு. ஆதலால் சைவம், செந்தமிழ் வழக்கு என்றும் இவற்றுக்கு ஒத்துவரா நெறிகள் அயல் வழக்கு என்றும் கொள்ள வேண்டும்.

சைவத்தின் சிறப்பு

இந்தியாவில் வழங்கும் சமயங்களில் அய்ல் வழக்குகள் பல உள்ளன. அதை எதிலுமில்லாத-நிலையில் அறிவியலடிப் படையில் வாழ்வியலை தத்துவ இயலைச் சேக்கிழார் விளக்குகிறார். இது சைவத்திற்கே உரிய தனிச் சிறப்பு.

"செய்வினையுஞ் செய்வானும் அதன் பயனுங் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே, இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என, உய்வகையாற் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்தறிந்தார்"

(சரக்கியநாயனார் புராணம்-பா5)

என்பது பெரிய புராணம்.

இந்தப் பாடல் சைவ நெறியின் தத்துவம் முழுதையும் ஒருங்கே விளக்கும் திருப்பாடல். இத்திருப்பாடல் சாக்கிய நாயனார் வரலாற்றில் வருகிறது. திருச் சங்க மங்கையில் வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அருள் காட்டியவர். நன்னெறியில் நின்று ஒழுகியவர் அவர் பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் ஆவலில் தத்துவ விசாரம் செய்யத் தொடங்கினார். இதற்காகக் காஞ்சிபுரம் சென்றார். அங்கிருந்த பௌத்த சமயத்தாருடன் பழகி பௌத்தத்திலே சேர்ந்தார். பௌத்தத்தை ஆராய்ந்தார். தெளிவு கிடைத்தபாடில்லை! பின் சைவ நூல்களைக் கற்கலானார்; அதன் பயனாகத் தெளிவு கண்டார். சைவ நெறியில் பொது வகையால் மூன்றும் சிறப்பு வகையால் நான்கு பொருள்களும் உண்டு. பொதுவகை மூன்றாவன உயிர், தளை, இறை. உயிர்-ஆன்மா-பல! அவை பிறப்பும் இறப்பு மற்றவை. உயிர்கள் துய்த்து அனுபவிக்கும் இயல்பின. உயிர், அறிவித்தால் அறியும் அறிவுப் பொருள் உயிர், இயல்பாக ஆணவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆன வத்தின் ஆற்றலுக்கு உயிர் அடங்கும் பொழுது உலகைத் துய்த்து மகிழும். கடவுள்-தலைவன். உயிர்களுக்கு அறிகருவி களையும் செய்கருவிகளையும் துய்த்து மகிழ்வதற்குரிய உலகையும் படைத்துத் தருபவன்! உயிர், ஆணவத்தின் சார்பில் உலகைத் துய்க்கும் பொழுது துணையாக இருந்து பொன்னும் பொருளும் போகமும் வழங்கி, துய்ப்பு வழித் துறவும் பெறச் செய்து இன்பு அன்பில் நிலைத்து நிற்கச் செய்பவன்.

இப்பாடலில்,


செய்வான்-ஆன்மா

செய்வினை-ஆன்மா செய்யும் நல்வினை, தீவினை

வினையின் பயன்-நல்வினையால் இன்பம்
தீவினையால்துன்பம்

பயன் கொடுப்பான்-இறைவன்

உயிர்கள் வினைகளைச் செய்கின்றன. அவை நல்வினை, தீவினை என்பன. நல்வினை இன்பம் பயக்குமானாலும் அவ்வின்பத்தைத் துய்த்தற்குப் பிறத்தல் வேண்டுமாதலால் பிறவித் துன்பம் நீங்க நல்வினையும் செய்யற்க! நல்வினையும் செய்யற்க என்றால் உலக இயக்கம் எப்படி நிகழும்? நன்று செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நல்வினை கூடாதென்றால் அறவே கூடா தென்பது பொருளன்று, நல்வினையைத் தன்னல நயப்புடன் இலாபம் கருதியோ, புகழ் கருதியோ, செய்யக் கூடாது. நன்மையை நன்மைக்காகவே செய்தல் வேண்டும். நன்மை செய்தலைத் தவிர வேறு உள் நோக்கம் இருத்தல் கூடாது. அத்தகைய நல்வினை செய்யத் தக்கது. இறைவன் உயிர்கள் செய்த வினைவழி அவ்வப் பயன்களை நுகர்விக்கும் நியதியாக விளங்குகிறானேயன்றி, அவன் தன்விருப்பப் படியாதொன்றும் செய்வதில்லை. இதுவே சைவத்தின் சிறப்பு.

ஊழையும் உப்பக்கம் காணலாம்!

சமணம், பௌத்தம் முதலியன ஊழ்வினையை ஒத்துக் கொள்கின்றன. அது மட்டுமல்ல; ஊழ்வினையின் ஆற்றலை மிகுத்துப் பேசுகின்றன. சைவ நெறியிலும் ஊழ்வினை நம்பிக்கை உண்டு. ஆயினும் அயல் நெறிகள் ஊழின் ஆற்றலை வெற்றி காண முடியாதென்று கூறும், சைவம் வெற்றி காண முடியும் என்று கூறும்.

திருஞானசம்பந்தர் கொடி மாடச் செங்குன்றம் என்ற திருச்செங்கோட்டில் அருளிய திருப்பதிகத்தில் வினையின் வழியிலானது துன்பம் என்று கூறிக்கொண்டு வினை மாற்றத்திற்குரிய முயற்சி மேற்கொள்ளாது வாளா இருப்போரை இடித்துக் கூறுகின்றார். வினையிலிருந்து மீள்வதற்கு முயற்சி மேற்கொள்ளாத வாழ்க்கை ஊனமுடைய வாழ்க்கை என்று ஏசுகிறார்.

"அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும்
அஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கே ஊனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமை தீண்டப் பெறா திருநீல கண்டம்”

(திருமுறை 1-16-1)

என்பது திருஞான சம்பந்தர் திருப்பாடல். ஆதலால் வினை வழியில் வரும் துன்பத்தை ஆண்டவன் அருளின் துணையாலும் அயர்விலா ஆள்வினையாலும் மாற்றமுடியும் என்பது சைவ நெறிக்கொள்கை. இறைவனின் ஆற்றல் இடர்களையும் ஆற்றல், மற்றவர்களின் இடர் களைவதற்காகவே நஞ்சினை உண்டு கண்டத்தில் அடக்கினான். அதனால் திருநீலகண்டன் என்று பெயர் பெற்றான். மற்றவர்கள் துன்பம் களைவதற்காக நஞ்சினையே ஏற்றான். செய்கின்ற தலைவனைத் தலைவனாகப் பெற்ற மானுடம் வினையுடன் போராடி வெற்றி பெறுவதற்கு என்ன ஐயம்? அவர்களால் "கூற்றம் குதித்தலும் கைகூடும்". சேக்கிழார், வழி வழி வளர்ந்து வந்துள்ள இலக்கியங்களில் தோய்ந்த நெஞ்சினர். திருநீல கண்டத்தை "நீலமணிமிடறு” என்று புறநானூறு பேசும்.


"விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”

(சிலம்பு-வேட்டுவரி 24-25)

என்று சிலப்பதிகாரம் கூறுதலும் அறிக. வல்வினையினால் வரும் இடர் தாக்காமல் பாதுகாக்கப்பதற்குரிய பெயர் திருநீல கண்டம் என்று தெரிகிறது. இதனைச் சேக்கிழார் "அவ்வினைக் கிவ்வினை என்றெடுத்து" ஐயர் அழுது செய்த வெவ்விடம் முன்தடுத்(து) எம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே செய்வினை தீண்டா திருநீலகண்டம்” எனச் செப்பினார்

திருஞானசம்பந்தர் புராணம் பா 335,


என்று விளக்குகிறார். ஆதலால் அயல் வழக்குகளால் மக்களிடையே பரவிய ஊழ் வலிது என்ற கொள்கை மறுக்கப்பட்டு'ஊழையும் உப்பக்கம் காண்பது சாலும் என்ற செழுந்தமிழ் வழக்கு அரண் செய்யப் பெறுகிறது.

மானிடப் பிறப்பின் சிறப்பு


தமிழர் வாழ்வியல் இயற்கையோடியைந்தது. தழுவி வாழ்வது உலக இயக்கத்திற்கும் தமிழ் நெறிக்கும் முரணில்லை. வாழ்க்கையைப் பொய்ம்மையென்று தமிழ் நெறி கூறாது, இந்த வாழ்க்கையையே நிலையானது என்று கூறியும் மயக்கம் தராது.

தமிழ்மரபில் போற்றுதல் என்ற சொல்லுக்கே பயன் கொள்ளுதல் என்பதுதான் பொருள்.

"வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்"
"மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"


என்று அப்பரடிகளும் -

"பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்

போகமும் திருவும் புணர்ப்பானை"


என்று சுந்தரரும்

"வந்த பிறப்பை வணங்குவாம்!” என்று சேக்கிழாரும் பிறப்பைப் போற்றும் பாங்கு அறிக! பிறப்பு, பயனுடையது; இயற்கை தழுவியது. அப்பிறப்பை உரியவாறு பயன் கொள்வது மாந்தர் கடமை. பிறப்பின் பயன் கொள்வதற்கு ஏற்றநெறி செழுந்தமிழ் நெறியேயாம்.

இயற்கையோடிசைந்த நெறி

நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை அழகுடையது; தன்மையுடையது; ஆக்கத்தருவது. இயற்கையில் தோய்ந்த நெஞ்சங்கள் அன்பில் திளைக்கும், வளர்ச்சியில் ஊக்கம் காட்டும்; தன்மையும் தண்ணளியும் சார்ந்ததாக விளங்கும். மானிடத்திற்குத் தீமை பயக்கும் எந்தச் சிந்தனையும் இயற்கையில் தோய்ந்து துய்த்தவர் செய்யார்! செய்ய நினையார்! திருமுறைகள் இயற்கையெழிலுக்குச் சொல்லோவியம் தீட்டுவன! அயல்வழக்கு புறக்கணிக்கத் தூண்டிய செழுந்தமிழ் வழக்கிற்கும் புத்துயிர் அளிக்க வந்த திருஞான சம்பந்தர் தமது பதிகம்தோறும் இயற்கையெழிலைப் பாடுகின்றார்! இயற்கையெழிலைத் திருக்கோலமாகக் காண்கிறார்! இயற்கையின் நிகழ்வுகளை இறைவனின் திருவிளையாடல்களாக வியந்து பாராட்டுகின்றார். ஆங்கிலக் கவிஞர்கள் வோர்ட்ஸ் வொர்த்தும், கீட்சும், டென்னிசனும் இயற்கையை வியந்து பாராட்டிய கவிஞர்களில் சிறந்தவர்கள். திருஞான சம்பந்தர் இயற்கையை வியந்து பாடிய கவிதைகள் அந்தக் கவிஞர்களின் கவிதைகளிலும் சிறந்தவை என்பதைக் கற்பார் உணர்வர்.


திருஞானசம்பந்தர் தீட்டிய இயற்கை ஓவியம்

பாண்டிய நாட்டில் உள்ளது திருக்கொடுங்குன்றம் என்னும் திருத்தலம். இத்திருத்தலத்திற்குச் சங்க காலத்துப் பெயர் பறம்புமலை! திருமுறைக் காலத்துப் பெயர் திருக்கொடுங்குன்றம், இன்று வழங்கும் பெயர் பிரான் மலை! மலையும் மலையைச் சார்ந்த இடமுமாதலால் குறிஞ்சி! மலை உயர்ந்தது! மலையின் முகட்டில் பிறைநிலா! சூல் முற்றிப் புயல்சுமந்த கருமேகம் உலாவருகிறது. பிறைநிலா அம்மேகத்தைக் கிழித்து இடையீடின்றி அன் பயணத்தைத் தொடர்கிறது: சூல் மேகம் கிழிக்கப் பெற்றதால் மழை பொழிகிறது! பெருமழையாதலால் அருவி கிழிந்து ஓடி வருகிறது! குளிரும் கூட இருக்கிறது: சூல் முற்றிய மேகம் மலர் செழிக்க மழை பொழிவது போல ஐம்புலன்களிலும் அன்பினால் செழித்த ஆன்மா இறைவனை அவாவி நிற்கிறது! அதற்கு ஆன்மாவே இறைவன் உவந்து குடிபுகும் திருக்கோயில். அன்பில் திளைத்தாடும் இடமாகும். இறைவன் ஊனுக்கும் உயிருக்கும் ஆக்கம் சேர்க்கும் அன்னையோடு எழுந்தருளியுள்ள திருநகரம் திருக்கொடுங் குன்றம் என்று பாடுகின்றார் திருஞான சம்பந்தர்.

"வானிற்பொலி வெய்தும்மழை மேகம்கிழித் தோடிக்
கூனற்பிறை சேரும்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆணிற்பொலி ஐந்தும்அமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொவி மொழியாளொடு மேயான் திருநகரே"


(திமுறை 1-14-1)


என்பது திருப்பாடல்.

பிறைநிலா மேகத்தைக் கிழித்தோடுகிறது. ஆன்மாவின் ஞானம் ஆணவப்படலத்தைக் கிழிந்தோடித் திருவருட் புயலைத் தருகிறது. பிறைநிலா மலையின் முகடு சேர்கிறது! ஆன்மா. வாழ்க்கையின் முகடாகிய இறைவன் திருவடியைச் சேர்கிறது. மலை, தண்சாரற் குன்று! இறைவன் திருவடி, தண்ணளி மிக்கது! இங்கனம் இயற்கையை வியந்து பாராட்டுவது தமிழ் மரபு: திமுறைவழக்கு! ஆங்கிலக் கவிஞர்கள் இயற்கையை வியந்து பாராட்டுவதற்கும் திருமறை வழக்கிற்கும் வேறுபாடு உண்டு. அவர்கள் இயற்கையே இறை என்று போற்றுபவர். திருமுறைகள் ஒரோ வழி இயற்கை இறை என்று

"வாச மலரெலாம் ஆனால் நீயே"
"முரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய்”

-என்று பாராட்டினாலும் இயற்கைக்கும் உள்ளிடாக இருந்து இயக்கும் இறைவனை அறிந்து பாராட்டும் இது தமிழ் மரபு! காலத்தின் காரணமாக மாறாத ஒன்றே இறைத்தன்மை உடையது. கடவுள் ஒருவனே காலத்தத்துவத்திற்கு அப்பாற் பட்டவன், கடவுள் தன்மையே மாறாதது, கடவுள் தத்துவத்தில் ஒரோவழி மாற்றம் உண்டெனினும் அஃது அடிப்படை மாற்றமன்று. மானுடத்தை, உய்வார்கள் உய்யும் வகை ஆட்கொள்வதற்காகத் தாமே ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றமே அது. ஆட்கொள்ளும் பொருள் அளப்பிலாற்றலுடையது. ஆட்கொள்ளப்படும் உயிர் அளவுக்குட்பட்ட ஆற்றலுடையது. அதனால் அளப்பிலாற்றலுடைய பொருள் அதன் இயல்பிற்கேற்ப மாறுகிறது.

சேக்கிழார் தீட்டிய இயற்கை ஒவியம்

சேக்கிழார் திருமுறை நெறிகளைச் சார்ந்து இயற்கையைச் சைவப்பார்வையில் பாராட்டும் இடங்கள் நினைத்து நினைத்து கற்கத்தக்கன! கழனியில் கதிர்கள் முற்றி விளைந்துள்ளன. முற்றி விளைந்த கதிர்கள் ஒன்றையொன்று தழுவிச் சாயும் இயல்பின. இதனைக் கண்ணுற்ற சேக்கிழாரின் சிந்தை மகிழ்கிறது. சிவனடியாரின் இயல்புகளோடு இக்காட்சியை ஒத்துப் பார்க்கிறார் சேக்கிழார் பெருமான்! பத்திமை உணர்வில் விளைந்த அடியார்கள், பரமனுக்கு ஆட்பட்ட்வர்கள் கூடினால் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு தலைவணங்கி மகிழ்வர்! அப்படி வணங்குதல் வித்தகத்தின் பயன். அடியாரை வணங்காமை ஆணவத்தின் விளைவு. இன்று வணங்கி மகிழ்தல் நம்மிடையில் இல்லை. யார் பெரியர் என்று ஆய்வே எங்கும் நிகழ்கிறது. இந்த ஆய்விற்குத் துறவிகளும் விலக்கல்லர்; பிறிதொருவரை வணங்காமையே, பெருமைக்கு அழகு என்ற பொய்யர்தம் மெய் இன்று உலா வருகிறது. வேண்டாம் இத்தகு தீமை! வணங்குதல் வாழ்க்கைக்கு அழகு! வணங்குதல் வளம் சேர்க்கும்! வணங்கிய வாயே வையகத்தை வளர்க்கும்; ஒருங்கிணைக்கும்! வணங்கி வாழ்தலே திருவருட்சார்புடைய வாழ்க்கைக்கு வாயில்! இதோ சேக்கிழாரின் செஞ்சொற் கவிதை!

"பக்தியின் பாலராகிப் பரமனுக்குக் காளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு
மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி
மற்றை
வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலியெல்லாம்


(பெரிய புராணம்-திருநாட்டுச் சிறப்பு-22)


மேலும்,

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சம் என்ன இருண்டது நீண்டவான்"


(பெரியபுராணம்-தடுத்தாட்கொண்ட புராணம் பா 159)


"தோற்றும் மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீணிலா"


(பெரியபுராணம்-தடுத்தாட்கொண்ட புராணம் பா-162)


என்ற பாடல்களில் இயற்கையின் நிகழ்வுகளை இறை நெறியோடு ஒப்பு நோக்கிக் கண்டு நன்னெறி உணர்த்தும் பாங்கினை அறிக.

அகனைந்திணை மரபு 

தமிழ் மரபு அகனைத்திணை மரபு! அதாவது காதல் வாழ்க்கை! தமிழ் மரபில் பெண்மை பெருமையுடையது. பாண்டிய நாடு அகனைந்திணை வாழ்க்கைக்குரிய நெறிகாட்டும் அகப்பொருள் இலக்கணம் இழந்ததை அறிந்து இறைவனே தமிழ் நிலம் உய்யுமாறு அகப் பொருளிலக்கணத்தை அருளிச் செய்தான் என்பது வரலாறு. இறையனார் அகப்பொருள் என்பது அந்த நூலின் பெயர். உலக மொழிகளில் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் உண்டு! ஆனால் வாழ்க்கைக்கு இலக்கணம் இல்லை! வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்டது தமிழேயாம்! ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் அறத்திற்கு அகப்பொருள் இலக்கணமும், அக்குடும்பம் நின்று நிலவும் சமுதாய நிகழ்வுக்கும் உறவுகளுக்கும், சமுதாயமேல் வரம்பாகிய அரசிற்கும் புறப்பொருள் இலக்கணமும் என்று கண்டது தொல்காப்பியம்!


அம்மையப்பன் திருக்கோலம்

வீடு பேற்றுக்குரிய வாயில் துறவே என்பது தமிழ் மரபுக்கு உடன்பாடுடையதன்று. தமிழரின் வழிபாட்டுத் திருவுருவம் அம்மையப்பரின் திருமேனியாகும்.

"நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!


(ஐங்குறுநூறு-கடவுள் வாழ்த்து)


என்று ஐங்குறுநூறு பேசும். தமிழ்ச்சமய நெறியில் நிலவும் கடவுள் திருமேனிகளில் அம்மையப்பன் திருவுருவமே தொன்மையானது என்பார் மாணிக்கவாசகர்.

"தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ!


(திரவாசகம்-232)


இத்திருப்பாடல் அம்மையப்பன், ஒருபகுதி அம்மையாகவும் ஒரு பகுதி அப்பனாகவும் விளங்குவதை விளக்கும் பாடல். இன்றைய வழக்கில் இத்திருவுருவத்தை அர்த்த நாரீசுவரர் என்பர். "அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர்” என்று சித்தாந்தச் சாத்திர நூல்களில் தொன்மை யதாகிய திருக்களிற்றுப்படியார் பேசும். அவன் என்று ஆண்பாலையும் அவள் என்று பெண்பாலையும் கட்டடுவது தமிழிலக்கண மரபு. குமர குருபரர் சிந்திக்கிறார். அம்மையப்பன் திருவுருவத்தைச் சிந்திக்கிறார். சிந்தனையில் முகிழ்க்கிறது தெளிவு.

"ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றால்அவ்
உருவையிஃ தொருத்தன் என்கோ ஒருத்தி என்கோ
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
இயற்சொல்இல தெனின்யான்மற்
றென்சொல் கேனே!

(சிதம்பரச் செய்யுட் கோவை-54) என்று பாடுகிறார்.


அவருக்கு ஒருவர் என்ற சொல் கிடைத்தது. இறைவன் அம்மையோடு உடனிருக்கின்ற பொழுதே அருள் செய்கின்றான். அதனால் இறைவனுடைய - திருவருட் செயற்பாடு நிகழ்ந்த பொழுதெல்லாம் அம்மையப்பன் திருமேனியே போற்றப்படுகிறது. இன்றைய திருக்கோயில்களில் கூட இறைவனின் திருவருட் செயல் வெளிப்பட்ட இடங்களில் எல்லாம் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால் அம்மையப்பன் திருமேனி எழுந்தருளச் செய்திருப்பதைக் காணலாம்.

இவ்வுலக இன்பம் திருவருள் இன்பத்திற்கு இட்டுச் செல்வது

உலக வழக்கில்-ஒரூருக்குச் செல்லும் வண்டியை அந்த ஊரைச் சொல்லி அழைப்பது வழக்கம். இராமேசுவரம் விரைவு வண்டியை "இராமேசுவரம்" என்றழைப்பார். அந்த வண்டி இராமேசுவரம் அல்ல. இராமேசுவரத்திற்கு அந்த வண்டி கொண்டு விடும் என்ற பொருளின் அடிப்படையில் உபசார வழக்காக அது இராமேசுவரம் என்று கூறப்பெறுகிறது. அது போல, உயிர் இந்த உலகில் துய்த்து மகிழும் இன்பங்கள் இன்பமல்ல. ஆனால் இந்த இன்பங்கள் முறையாகத் துய்க்கப் பெற்று அவாத் தணியும் பொழுது திருவருளின்பம் சிந்திக்கும். அதனால் உபசார வழக்காக இதையே திருவருளின்பம் போல உபசரித்துக் கூறுதல் மரபு. இவ்வுலக இன்பங்கள் திருவருளின்பம் அல்ல என்று கூறுவதால் அயல் வழக்கினர் போல் இவ்வுலக இன்பம் தவறானது முறைகேடானது; இறைவன் திருவுள்ளத்திற்கு மாறானது என்பது கருத்தன்று. ஓர் ஆன்மாவின் வளர்ச்சியில் அவ்வக்காலத்தில் நுகரும் இன்பங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்வன. திருவருள் இன்ப அன்புக்கு ஆற்றுப் படுத்துவன, அழைத்துச் செல்வன என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த நிரந்தினிது முறையைச் சுந்தரர்,

"பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை"

(திருமுறை 7-59-)


என்று பாடியதால் அறிக.

பொன்-மூலப்பொருள், பொருள்-நுகர்தலுக்குரிய பொருள். போகம்-நுகர்தலால் வரும் இன்பம், இவை மூன்றும் இறைவனால் ஆன்மாக்களுக்குத் தரப்படுகின்றன. திருவருள் சேர்ப்பிக்கப் பெறுகிறது. அதாவது புணர்த்தப் பெறுகிறது. தருதல்-புணர்தல் என்ற சொற்கள் இடம் நோக்கி அமைந்திருப்பதை அறிந்து இன்புறுக. இக்கருத்தினை மிக அழகாக விளக்கும் அப்பரடிகள் திருப்பாடல் இது.

அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும். உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ .
இறைவன்நீ ஏறுரர்ந்த செல்வன்நீயே!

(திருமுறை 6-95-1)

இது வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் அருமையான பாடல். அதுமட்டுமல்ல. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் பாடல்: ஒரு மானுட உயிர்க்குத் தந்தை முதல் துணை, தாய் இரண்டாம் துணை. தந்தை கருவுற்றே தாயிடம் கருமாற்றுப் பதியம் செய்யப் பெறுகிறது. மண்ணிற் பிறந்தவுடன் உடனிருந்து வளர்க்க உடன் பிறந்தான். பின் வளர்ந்த பருவ நிலையில் வாழ்க்கைக்குத் தாயாகவும், தோழியாகவும் அமைச்சனாகவும், காதல் மனைவியாகவும் விளங்குபவளை ஈன்று வளர்த்துத் தந்து உதவி செய்யும் அன்புடைய மாமனாகவும், மாமியாகவும், தன்னோடு ஒப்புமையுடைய வாழ்க்கைத்துணை நலமாகவும் மனையறம் நிகழ்த்துதற்குரிய பொருளாகவும் இறைவன் விளங்கியருள்கின்றான் என்று இத்திருப்பாடல் விளக்குகிறது. உலகின்பங்களைத் துய்த்து மகிழும்போதே இறைவன் துணையாய் அமைந்து உள்ளத்தின் வேட்கையை மெல்லத் தணித்தும் அதனைத் தூய துறவின்பால் ஆற்றுப் படுத்தும் பாங்கினையும் இப்பாடல் விளக்குகிறது. இதுவே செழுந் தமிழ் வழக்கு. அதனாலன்றோ இறைவன் சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் தந்தனன்; ஒன்றுக்கிரண்டாகத் திருமணம் செய்து வைத்தனன், சேக்கிழார் காப்பியத்தில் வரும் அடியார்களில் பெரும்பாலோர் மனையறத்தில் வாழ்ந்தவர்கள். சிவபெருமான் மண்ணுக்கு வந்த பொழுதெல்லாம் சிறந்த மனையறம் நிகழ்ந்த இல்லங்களுக்கு எழுந்தருளி அவர்களுடைய அன்பினில் மகிழ்ந்து, கலந்து உறவாடி அருள் செய்துள்ளான். காதல் மனை வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டபொழுது அந்தப் பிரிவினைத் தானே முன்னின்று சேர்த்து வைத்துள்ளான். திருநீலகண்டர் வரலாறும், சுந்தரர் வரலாறும் இதற்குச் சான்று. மனையறத்தில் நிகழும் வாழ்க்கை சமயச் சார்பில்லாதது; தவமன்று; அவம் என்ற அயல் வழக்கின் கருத்தைச் சேக்கிழார் சுந்தரர் வரலாற்றில் நயம்பட மறுத்துச் செழுந்தமிழ் வழக்கிற்கு அரண் செய்கிறார். ஏன்? இறைவனின் புகழை, அவனுடைய புகழில் தோய்ந்த அடியார்களைப் போற்றுவதற்காகக் காப்பியம் செய்த சேக்கிழார் காதலையும் பாடுகிறார். காதலைப் பாடுவது மட்டுமல்ல. காதலைக் கடவுள் தன்மையுடது என்றும் பாராட்டுகிறார். சுந்தரர்-பரவையார் காதல் பற்றி விளக்கும் சேக்கிழாரின் பாடல்கள் காலத்தை வென்று விளங்கம் புகழ் மிக்கவை.

திருவாரூரில் சுந்தரர் பரவையாரைச் சந்திக்கிறார். சுந்தர் பரவையாரைக் கண்டு காதல் கொண்டு அதிசயித்த நிலையைச் சேக்கிழார்,

"கற்பகத்தின் பூங்கொம்போ?காமன்தன் பெருவாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதியூத்த விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேன்என் றதிசயித்தார்"!


(தடுத்தாட்கொண்ட புராணம்-140) என்று பாடுகிறார். காமன்தன் பெருவாழ்வு சிவனருளில் சென்று சேர்கிறது என்ற குறிப்பு அறிந்து இன்புறத்தக்கது. சுந்தரரைக் கண்ட பரவையார்,

"முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ?
பெருகொளியால்
தன்னேரில் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ?
மின்னேர்.செஞ் சடைஅண்ணல் மெய்யருள்பெற்
றுடையவனோ?
என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ
எனநினைத்தார்

(தடுத்தாட்கொண்ட புராணம்-144)


என்று நினைந்து வியந்து பாராட்டுகிறார். இருவர் நினைப்பும் காதலில் தொடங்கி இறைவன் அருளில் முடிவதை எண்ணுக! எண்ணி எண்ணி இத்தகு காதல் நெறி இவ்வையகத்தில் நிலவத் தவம் செய்க! சுந்தரர் பரவையாருடன் கூடித் திருவாருரில் வாழ்ந்ததை,

"தென்னாவ லூர்மன்னன் தேவர்.பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்
தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்”


(தடுத்தாட் கொண்ட புராணம்-181)


என்று விளக்கும் பாடலால் தமிழ் வழிப்பட்ட மனையறத்திற்குக் கொடுத்த பெருமையை ஓர்க! உற்றறிக! அதுபோலவே சங்கிலியாரிடத்தில் சுந்தரரின் விருப்பத்தை உணர்த்த சென்ற சிவபெருமான் சங்கிலியாரிடம் சுந்தரரை அறிமுகப்படுத்தும் பொழுது பாடும் பாடல் அருமையிலும் அருமை.

"சாருந் தவத்துச் சங்கிலி! கேள்: சால என்பால்
அன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்
நல்லூரில்
யாரும் அறிய யான்ஆள உரியான்; உன்னை எனை
இரந்தான்
வார்கொள் முலையாய்! நீ அவனை மணத்தால்
அணைவாய் மகிழ்ந்தென்றார்”

(ஏயர்கோல கலிக்காமர் புராணம்-239)


என்ற பாடல் தவத்திற்கும், இறையன்பிற்கும், மனையறத்திற்கும் முரணில்லை என்ற தத்துவத்தை விளக்குவதை அறிக. அதே போலச் சுந்தரர் தம் வாழ்வின் இயல்பினைத் தன்னிலை விளக்கமாக எடுத்துக் கூறும்பொழுது,

"சங்கிலியார் மென்தடந் தோள் தோயும்போது
நின்திருவருள் மறக்ககில்லேன்"


என்றருளிச் செய்திருப்பது அறிக பெண்மையை இழிவுபடுத்தியும் திருவருளின்பத்திற்கு வாயிலாக அமைந்த மனையறத்தை- இயற்கையோடிசைந்த வாழ்வை இழிவெனக் கருதியும் அயல் வழக்கினர் பரப்பியதை மறுத்துச் செழுந்தமிழ் வழக்கை அரண் செய்ய அம்மையப்பர் வழிபாட்டு நெறி எடுத்தோதப் பெற்றது. மனையறம் போற்றப் பெற்றது.

கலை-கடவுளையடையும் சாதனம்

தமிழ் முத்தமிழாகத் தோன்றியது; வளர்ந்தது. இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். கூத்து, இசை, இயல் என்பது வளர்ச்சி முறை மரபென்றும் கூறுவர். தமிழ் கலைகளோடு வளர்ந்த மொழி. இசைக்கலை, ஆடற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை இங்ஙனம் பல்வேறு கலைகளிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கலையை வாழ்க்கையை மகிழ்ச்சி யாக்கும் கருவியாகவும், திருவருளை அடைதற்குரிய கருவியாகவும் கண்டு போற்றினர். சேக்கிழார் பெரிய புராணத்தில் வரும் அடியார்களில் பலர் நல்ல கலைஞர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும், ஆனாய நாயனாரும் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களாக விளங்கியவர்கள். தேவாரம் பாடிய மூவரும் நல்ல இசைப்பாடல்கள் பாடியவர்கள். திருஞானசம்பந்தர் இன்னிசையால் தமிழ் பரப்பினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருடைய தமிழிசைப் பாடல்களைக் கேட்பதற்காக இறைவன் நாளும் காசு தந்தனன். ஆதலால் சுந்தரர்,

"ஏழிசையாய் இசைப்பயனாய்”

(திருமறை 7-21-10)


என்று இறைவனைப் பாராட்டுவார். ஆடல் வல்லான் சுந்தரரின் பாடலில் ஒன்றிக்கலந்து போனதால் சேரமான் பெருமான் நாயனார் பூசைக்குச் செல்லக் காலம் தாழ்த்திற்று என்று சிவபெருமானே அருளிச் செய்ததாகச் சேக்கிழார் கூறும் பெற்றிமை அறிக.

"மன்றி னிடைநம் கூத்தாடல்
வந்து வணங்கி வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப்போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்ந்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.”

(கழறிற்றறிவார்-44)


ஆதலால் வாழ்க்கையை இம்பமயமாக்கம் கலைகளைப் புறக்கணித்த அயல்வழக்கினை மறுத்துக் கலைகளைக் கடவுட் சாதனமாக ஏற்றுப்போற்றிய சேக்கிழார் செழுந்தமிழ் வழக்குக்கு அரண் செய்துள்ளார்.

திருக்கோயில்கள் சமுதாய மையங்கள்


சேக்கிழார் காப்பியம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே இயங்குகிறது. செழுந்தமிழ் வழக்கின் மையம் திருக்கோயில்களே! தமிழர் சமுதாய அமைப்பும் நிகழ்வும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டவை. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்தில் மிகப்பெரிய திருக்கோயில் இருந்ததைப் புறநானூறு கூறகிறது. அந்தத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் திருமுன்னால் பேரரசர்களின் குடைகள் தாழ்ந்தன. இதுவே செழுந்தமிழ் வழக்கு.

"பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

(புறம்-6)


என்பது புறநானூறு. திருக்கோயில் நாகரிகம் தமிழ் நாகரிகம்; தமிழ் நாகரிகத்தின் பண்ணைகள் திருக்கோயில்கள். செழுந்தமிழ் வழக்குக்கு அரணாகவுள்ள திருக்கோயில்களைத் தமிழ் மக்கள் என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத் திருக்கோயில் தொண்டுகளைச் சேக்கிழார் சிறப்புற விளக்கியுள்ளார். ஏன்? சேக்கிழாரே தமது வாழ்க்கையின் இலட்சியமாக, செஞ்சொற்காப்பியமாகத் திருத்தொண்டர் வரலாறும் செய்தருளினார். அதுபோலவே இறைவனும் சிவனடியார்களும் மற்றைய சமுதாயமும் மகிழ்ந்து வாழ்வதற்குத் துணை செய்யும் திருக்கோயிலை எடுப்பித்தல், பேணுதல் அறங்களிற் சிறந்த அறம் என்று உணர்த்தவதற்காக,

முதலமைச்சராக இருந்தபொழுது திருநாகேச்சுரத்தில் தாமே முன்னின்று திருக்கோயில் எடுப்பித்தார். முன் முதலமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது பிறந்த ஊராகிய தொண்டைநாட்டுக் குன்றத்தூரிலும் திருநாகேச்சுரம் திருக்கோயிலைப் போலவே ஒரு திருக்கோயில் எடுப்பித்தார். அத் திருக்கோயிலில்தான் நாம் இன்று கூடியிருக்கிறோம். ஆதலால் சேக்கிழார் திருக்கோயிலை மையமாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கத் திருவுள்ளம் பற்றினார். அதுவே செழுந்தமிழ் வழக்கு.

சேக்கிழார் தமது அருமையான காப்பியத்தைச் செய்து நமக்குத் தந்தது இற்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்பாகும். இன்று நம்முடைய சமய வாழ்க்கையில் சேக்கிழார் இடம் பெற்றள்ளாரா, என்பதை அன்பு கூர்ந்து எண்ணுங்கள்! சேக்கிழார் தமிழ் மக்களின் வாழ்க்கையை அயல் வழக்கிலிருந்து மீட்க-தமிழ் நெறிப்படுத்தக் காப்பியம் செய்தார். சேக்கிழார் காப்பியத்தில் சிந்தனை உண்டு; கவிதை உண்டு; காப்பிய நலன்கள் உண்டு, சைவசீலம் உண்டு; திருவருள் பொலிவும் உண்டு. இவை மட்டுந்தானா? நாம் எப்படி வாழ்தல் வேண்டும் என்ற உண்மையில்லையா? சேக்கிழாரைப் படித்தால் போதாது ஓதினாலும் போதாது. உணர்தல் வேண்டும். நாம் சைவ நெறியின் சீலத்தை மேற்கொள்ள வேண்டும். திருத்தொண்டில் ஈடுபடவேண்டும். அறுபத்து மூவரில் எந்த ஓர் அடியார் செய்த திருத்தொண்டையாவது நாம் இன்று எடுத்துச் செய்யக் கூடாதா! நம்முடைய திருமடங்கள் செயற்படக் கூடாதா? நம்முடைய திருக்கோயில்கள் திருத்தொண்டின் பண்ணைகளாக மாறக்கூடாதா? தடை என்ன? மரபுகள் வழிகள் வழி நிற்றல் என்ற பெயரில் இடைக்காலத்தில் அயல்வழக்காக வந்த வாழ்க்கைக்கு ஒவ்வாத வெற்றுச்சடங்குகள், ஆரவாரங்கள், புன்மைத் தன்மையுடைய சாதி வேற்றமைகள், உயர்வு என்ற பெயரால் சமுதாயத்தினின்றும் ஒதுங்கி வாழ்தல் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு தமது அறியாமையை மரபின் மீதும் சைவத்தின் மீதும் ஏற்றுதல் முறையோ? ஒருக்காலும் முறையாகாது.

இன்றைய தமிழகத்தை நன்னெறிப் படுத்துதற்குரிய ஒரே காப்பியம் சேக்கிழார் காப்பியமேயாம். சேக்கிழார் எடுத்துக் கூறும் திருமுறை நெறியே செழுந்தமிழ் வழக்கு. இச் செழுந்தமிழ் வழக்கு தொல்காப்பியர் காலந்தொட்டு வளர்ந்து வரும் மரபு. ஆதலால் சேக்கிழார் செந்நெறி நிற்போமாக! திருத்தொண்டினால்தான் வையகத்தை வாழ்விக்க முடியும். ஒரு தத்துவத்திற்கு மக்கள் மன்றத்தில் நிலையான இடத்தைப் பெற்றுத் தருவது பிரசாரங்கள் மட்டுமல்ல. உபதேசங்கள் மட்டுமல்ல. அத்தத்துவம் செயலுருவம் பெற்றாக வேண்டும். மீண்டும் தமிழகத் திருக்கோயில்களில் அப்பரடிகள் தொடங்கி வைத்த உழவாரப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அவ்வழி நமது திருக்கோயில்கள் பேணிக் காக்கப் பெறுதல் வேண்டும். திருக்கோயில்கள் நமது வாழ்வின் மையம், உயிர் நாடி! திருக்கோயில்களைக் கடவுளின் இருப்பிடமாக மட்டும் கருதிச்சமுதாயத்தைப் புறத்தே தள்ளிய அயல்வழக்கின் கொடுமையை உணர்க! அக்கொடுமையால் திருக்கோயில்கள் சமுதாயத்திலிருந்து விலகிவிட்டன. சமுதாயமும் திருக்கோயில்களிலிருந்து நெடுந்தொலைவிற்கு விலகி விட்டது. இல்லை, திருக்கோயில்கள் மாறுபாடாகக் கூட நடக்கத் தலைப் பட்டுள்ளன. கடவுட் பொருள் தனிமைப்படுத்தப் பெற்று ஏகபோகத்திற்குரிய முதல் போலாகி விட்டது. புறத்தே தள்ளப்பட்ட மக்களோ "இவர்தேவர் அவர் தேவர்” என்று தேடி அலைந்து எய்த்துக் களைத்துப் போகின்றனர்! கடவுளும் ஆன்மாக்களும் கலந்து மகிழும் இடமே திருக்கோயில்களை மையமாகக் கொண்டே வளர. வேண்டும், விளக்கம்பெற வேண்டும் "கோயிலைத் துழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும் காண வேண்டும். வாழ்க்கைப் போக்கில் சமூகத்தில் நிகழும் சிக்கல்களுக்கு, திருக்கோயில்களில் பஞ்சாயத்துக்கள் காணப்பட்டு, அவற்றின் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும். திருக் கோயில்கள் சமுதாயப் பணிமனைகளாக உருக் கொண்டால் உடைமைச் சிக்கல்கள் தோன்றா; குத்தகை வரவில்லை, வசூலாக வில்லை, என்றெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் இருக்காது. ஏன்? களவுகளைக் கூட தவிர்த்து விடலாம். மீண்டும் பெண்மை பெருமை பெற வேண்டும். காதல் திருமணங்கள் நிகழவேண்டும். ஒரு வீட்டில் இன்பம் ஒரு விட்டில் துன்பம் என்ற நிலை தொடரக்கூடாது. எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். மண்ணில் விண்ணகம் காண வேண்டும். இதுவே சேக்கிழார் காட்டிய செழுந்தமிழ் வழக்கு.


தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு - வேண்டுகோள்


சேக்கிழாரின் செந்நெறி வெற்றி பெறுதல் இன்றைய தமிழகத்திற்கு நல்லது. தமிழ்நாடு அரசு இந்த நிலையை நன்கு அறிந்து, அறநிலையத்துறை மூலம் சேக்கிழார் விழா நெறியைப் பேணிக்காப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு இராசராசனுடைய ஆயிரமாவது முடிசூட்டு விழாவை இராசராசேச்சரத்தில் சிறப்பாக எடுத்த அரசு செழுந்தமிழ் வழக்கிற்கு அரணாகவுடைய திருமுறைகளை அயல் வழக்கினரிடமிருந்து மீட்டுத் தந்த இராசராசன் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் அரசு; கோச்செங்கட் சோழன் நினைவாகத் திருக்கோயில் திருப்பணிக்குப் பொது நிதி அமைத்த அரசு நாடெல்லாம் முன்னவன் பூசை முட்டின்றி நடக்க வைப்பு நிதி அமைத்துள்ள அரசு. நம்முடைய பாராட்டுதலுக்குரிய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீ. அவர்கள் சிறந்த சைவச்சிந்தனையார், திருமுறைப்பற்றாளர். அவர்தம் அறநிலையத்துறை அமைச்சில்தான்் இத்தகைய பணிகள் சிறப்புற நடைபெறுகின்றன. அரசுக்கும் அமைச்சருக்கும் நமது நன்றி! கடப்பாடு. அமைச்சர் அவர்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோள்! பொன்மனச் செம்மல் தலைமையில் அமைந்துள்ள தமிழ் நாடு அரசு சங்ககாலப் புலவர்களுக்கு நினைவுத் தூண் நட்டு, புகழ் பூத்த சங்க காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்துள்ளது. அதேபோல் சேக்கிழார் பாராட்டிய அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த பகுதிகளில் நினைவுச்சின்னங்கள் அமைத்தல் வேண்டும். திருக்கோயில்களில் செழுந்தமிழ் வழக்குகிற்கு அரண் செய்த நால்வர் சந்நிதியை அழகுறப் பொலிவுற அமைத்திடல் வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் திருவிழா நிகழும் பொழுது தவறாமல் திருமுறை விழா நடத்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். இவைகள் அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் நினைவிற்கிடக்கும் செய்திகளேயாம். நமது வேண்டுதல் தூண்டுதல் தன்மையதேயாம்!

திருத்தொண்டு செய்வோமாக

நமது இனம் மொழிவழியிலோ, சமய வழியிலோ எந்தக் காலத்திலும் ஒருமைப் பாடுடையதாக இருந்ததில்லை; இன்றும் இல்லை. இந்த ஒருமைப்பாட்டை உருவாக்கவும் சேக்கிழார் முயன்றுள்ளார். சேக்கிழார் காப்பியத்தில் வரும் அடியர்களுக்குள்ளேயும் கூடச் சில இடங்களில் வேறுபாடுகள், பிணக்குகள் தோன்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சேக்கிழார் அவற்றிற்கு எளிதில் தீர்வுகண்டது அதி அற்புதமானது. திருவிழா மிழலையில், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்குமிடையில் ஒரு சிறு வேற்றுமை கால் கொள்கிறது. இந்த வேற்றுமையைச் சிவபெருமானே நல்லெண்ணத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கிறான். திரநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசு. அதனால் திருநாவுக்கரசர் மடத்தில் காலத்தோடும், திருஞானசம்பந்தர் மடத்தில் காலந்தாழ்த்தும் அன்னம் பாலிக்கப் பெறுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இது என்ன சாதாரணமான பிரச்சனையா? அன்றும் அதே நிலைதான்! திருஞான சம்பந்தரின் உள்ளம் அலைமோதுகிறது. ஆனால், அஃது நம்மனோர் வாழ்க்கை போல அழுக்காறாக-அவாவாக வெளிப்படவில்லை. ஐயந்தொழிலாக வெளிப்படவில்லை; ஐயந்தெளிதலாக வெளிப்படுகிறது. காரணம் அறியும் முனைப்பு கால்கொள்கிறது. பெருமான், ஆளுடைய பிள்ளையின் ஐயத்தினைத் தீர்ந்து வைக்கிறான். அந்த ஐயத்தினைப் பெருமான் தீர்த்து வைத்துச் சொன்ன உரை அன்றும் இன்றும் என்றும் நம்மனோர்க்கு உய்யும் நெறியாகும்.

புனிதப் பேரவை விளங்கி வெல்க

பேச்சு, தொண்டாகாது; கைத்திருத்தொண்டு செய்ய வேண்டும். அப்பரடிகள் கைத்திருத்தொண்டு செய்தது உழ வாரப்படைப்பணி. அதனால் வாசியில்லாக்காசு. அம்மையின் சிவஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தருக்கே கைத்திருத் தொண்டின்மையின் வாசியுடைய காசு வழங்கப் பட்ட தென்றால் நம்மனோர் நிலையென்ன? போதும் பேச்சு? திருத்தொண்டு செய்வோமாக! அதுபோலவே சுந்தரருக்கும். ஏயர்கோன் கலிக்காம நாயனார் சினம் கொள்கிறார். இதனையும் பெருமானே சமாதான்ம் செய்துவைத்து ஆரூரரையும் ஏயர்கோன் கலிக்காம நாயனாரையும் இணைத்து வைக்கிறார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் விறன்மிண்டர் தலைமையில் இருக்கின்றனர். ஆரூரரை வழிபடும் வேட்கை மிகுதியால் நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்து அடியார்களுக்கு வணக்கம் செய்யாமல் சென்று விடுகிறார். தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியார்களுக்கு ஆற்றொனாச்சினம் தோன்றுகிறது. நம்பியாரூரர் புறமானவர் என்று ஒதுக்குகின்றனர். ஆருரீசன் நம்பியாரூரருக்கு இந்நிலை உணர்த்தி "அடியவர்க்கு வணக்கம் செய்க" என்று ஆற்றுப்படுத்துகிறார். அந்தச் சூழ்நிலையில் பிறந்ததுதான் சேக்கிழார் காப்பியத்துக்கு முதல் நூலாக விளங்கும் திருத்தொண்டத்தொகை அதனால் சேக்கிழார் தமது நூலின் குறிக்கோள்களை எடுத்துக் கூறும் பொழுது சைவ அடியார்கள் திருக்கூட்டம் அடங்கிய "புனிதர்பேரவை" என்றும் நின்றும் நிலவ வேண்டும் என்று பாடுகிறார்.

"மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே”

(பாயிரம்–4)

என்பது சேக்கிழார் பாடல்.

இன்றும் நம்முடைய செழுந்தமிழ் வழக்கில் நின்றொழுகும் அடியார்கள், திருமடத்துத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் ஒருங்கிணைந்து சமய இயல் நடத்தக் காணப்பெற்றதே தெய்வீகப் பேரவை. இன்றைய தமிழகத்தில் சமய நிறுவனங்களை ஒருங்கிணைத்துத் திருத்தொண்டின் நெறியில் ஈடுபடுத்துதல் தவிர்க்க இயலாத கடமை. அதற்குப் பேரவையே சாதனம். சிறப்புற இயங்கிய பேரவையைச் செழுந்தமிழ்வழக்கு வெற்றி பெற்றுவிடும் என்றஞ்சிய அயல்வழக்கினர்; நெருக்கடிக் கால ஆட்சியின்போது முடக்கி விட்டனர்; மூடச்செய்து விட்டனர்; இதனால் மீண்டும் தமிழகத்தில் செழுந்தமிழ் வழக்கிற்கு மாறாக அயல் வழக்கு புகுந்து வளர்கிறது.

இது தமிழகத்திற்கு நலம் செய்யாது. தமிழ்நாடு அரசுக்கும் நலமின்று. இதனை மாண்புமிகு அமைச்சர் அவர்களும் அறிந்தே இருக்கிறார்கள். இந்த விபத்தை இப்போது தடுக்காவிடில் மீண்டும் செழுந்தமிழ் வழக்கு நடுக்குறும். தனித்தன்மை மிக்க தமிழ் மரபுகள் மாசுறும். பாராட்டுதலுக்குரிய முதல்வர் "நான் தமிழ் மதத்தைச் சார்ந்தவன்" என்று கூறிய பெருமித உரை வரலாறாக மாறாமல் போய்விடும். ஆதலால் புனிதர் பேரவையை இயக்க எண்ணம் கொள்க! நம்மனோரைப் பணியில் ஈடுபடுத்துக! பயன்பெறுக என்பது நமது உரிமையோடு கூடிய வேண்டுகோள். பாராட்டு–நன்றி

சேக்கிழார் திருவடிகளைப் போற்றிச் சென்னிமேற் கொண்டு விழா எடுத்த தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை ஆணையருக்குப் பாராட்டுக்கள். இன்று நம்முடைய தலைமுறையில் சமய மறுமலர்ச்சிக்குரிய பலபணிகளைச் செய்து வருகின்ற மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி! கடப்பாடு! விழாவிற் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாழ்த்தியருளும் அடிகள் பெருந்தகைக்கு நன்றி! அறிஞர்களுக்கு பாராட்டு! சேக்கிழாரின் செவ்விய குறிக்கேளாக விளங்கிய "திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற”ச் செய்வோமாக! எவ்வுலகிலும் இம்மண்ணுலகம் சிறப்புடைய தென வாழ்ந்து காட்டு வோமாக! அயல்வழக்கின் துறைகளைவென்று, செழுந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்வோமாக! ஐயன் அரனுக்குப் பொருளாகிய அன்பினை வளர்ப்போமாக! உயிர்க்கு ஊதியமாகிய தொண்டினைச் செய்வோமாக! திருக்கோயில் வழிபாடு நாள்தோறும் இயற்றுவோமாக! அணி அணியாகத் திரண்டு சென்று கூட்டமாக வழிபடுவோமாக! இறைவனைத் தலைவனாகக் கொண்ட ஒப்புரவு நெறி கொண்டொழுகும் ஒருகுலம் ஆவோமாக!

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கு நிலவி உலகெலாம்.