குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/பெரியபுராணச் சொற்பொழிவுகள்


1

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

தலைமைப் பேருரை*

தமிழகமும் சமயமும்

'தமிழினம் காலத்தால் மூத்த இனம்; கருத்தாலும் மூத்த இனம்; இற்றைக்குப் பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இன்பவுணர்வாகிய அகத்திணையியலிலும் பொருள் அறங்களின் உணர்வாகிய புறத்திணையியலிலும் செழுமையுற வளர்ந்த இனம். இதனைச் செப்பமுற வளர்ந்த தமிழ் மொழியின் இயல்பும் சிந்தனையிற் சிறந்த தமிழிலக்கியங்களும் முழுமையுற வளர்ந்த தமிழகச் சமய அமைப்பும் விளக்குவனவாம்.

தமிழ், வளர்ந்த மொழி; தனித்து இயங்க வல்ல நிறைநலஞ்சான்ற குறைவிலா மறைமொழி, இலக்கியத்தின் அனுபவத்திறன் தந்த பயனாக இலக்கண வரம்பு பெற்ற மொழி, எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி, அம்மொழியினைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் பொருளிலக்கணம் கண்ட மொழி; மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் பல கண்டமொழி, உயிர்த் தொடர்பான காதல் பற்றிய இலக்கியமும் இலக்கணமும் எளிமையும் இனிமையும் இயையப் படைத்த மொழி; வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியினைக் காட்டும் வள்ளுவமறை படைத்த மொழி, ஊன் கரைத்து உயிர் வளர்த்து உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தைப் பெற்ற திருமொழி; தொண்டர்நாதனைத் தூது கொண்ட தொன்மொழி; முதலையுண்ட பிள்ளையைப் பாரினில் தந்த மொழி, எலும்பைப் பெண்ணாக்கிய இறையருள் நிறைந்த இன்ப மொழி. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலக இனங்களின் வரலாற்றையும் தமிழின வரலாற்றையும் ஒப்புநோக்கினால், தமிழினத்தின் மூத்து முதிர்ந்த வளர்ச்சி, தெளிவாகத் தெரியும். வாழ்க்கை அருமையானது; வாழ்வது ஒரு கலை; வாழ்க்கைக்கு நெறியும் முறையும் உண்டு; வாழ்க்கை இலட்சிய நோக்குடையது; குறிக்கோளில்லாத வாழ்க்கை கூடைச் சாம்பலுக்கே; குறிக்கோளுடன் கூடிய வாழ்க்கையே குவலயம் போற்றும் வாழ்க்கை என்று வாழ்க்கைக்கொரு சிறப்பான குறிக்கோளைச் சமயநெறி வழியாகத் தந்து மனித வாழ்க்கையை வளப்படுத்திய மொழியும் தமிழே!

சிவநெறியின் மாண்பு


தமிழர்கள் வரலாற்றறிவுக்கு எட்டாத காலந்தொட்டே சமயநெறியைக் கண்டும், அந்நெறியில் நின்று ஒழுகியும் வந்துள்ளனர். தமிழகச் சமயநெறி செயற்கை வடிவம் கொண்டதன்று. சிறந்த வாழ்வின் படிமுறை வளர்ச்சியில் வளர்ந்து முழுமைநலம் பெற்ற பெருநெறியாகும். தமிழகச் சமயம், செம்பொருட்டுணரிவெனப்படும். "சித்தாந்தம்" என்று பெயர்பெறும். அஃதாவது, சிந்தனையின் எல்லை கண்ட முடிபு-முடிந்த முடிபு என்பது அதன் பொருளாகும். இன்று உலக அரங்கில் சமய நெறிக்கு மாறுபாடாக எழுந்துள்ள கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்தை ஈடுகொடுக்கக்கூடிய உண்மைத் தகுதி, தத்துவச் செழுமை தமிழகச் சமயநெறிக்கே உண்டு. கம்யூனிசக் கொள்கைக்கும் நமது சமய நெறிக்கும் இருக்கின்ற ஒரே வேறுபாடு கடவுள் நம்பிக்கை ஒன்றுதான். ஆனாலும் மனித உலகம்-அவற்றின் அமைப்பு-சமநிலைச் சமுதாயம் ஆகிய துறைகளில் கம்யூனிசத்திற்கும் நம்முடைய சமயநெறிக்கும் முரண்பாடுகள் இல்லை என்பதை அறிவிக்க மகிழ்கின்றோம். கடவுள் மறுப்புக் கொள்கையினால் எழுப்பப்படும் வினாக்கள் அனைத்தையும் இயல்பிலேயே வாழ்க்கையின் அனுபவப்படிகளில் ஆராய்ந்து தெளித்து முடிவெடுக்கப்பெற்ற-வளர்ந்த ஒருநெறி தமிழகச் சமயநெறி. "சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்று திருமுறை சிறப்பிக்கும் திருநெறி. தமிழகச் சமய நெறி, கற்பனையிற் கருக்கொண்டதன்று; சிந்தனையிற் செழித்து வளர்ந்த செந்நெறி. தமிழகச் சமயம் சிந்தனையில் முன்னுக்குப்பின் முரணில்லை. அது நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் ஏற்றது; ஐயத்திற்கிடமின்றித் தெளிவுற அமைந்த அருள்நெறியாகும். சிவ்ம் பெயர் மட்டுமன்று. அதுவே இன்பம், மெய்யுணர்வு, திருவடி ஞானம், உலகம் எல்லாமே!

தமிழகச் சமயநெறியை வாழையடி வாழையாகப் பலர் போற்றி வளர்த்தும், வளர்த்தாங்கு ஒழுகியும் திருவருளால் சிறப்புறச் செய்திருக்கின்றனர். சங்க கால இலக்கியங்கள் கடவுள் நெறிபற்றி நிரல்பட நிறையப் பேசவில்லை. அருமையாகவே ஆங்காங்குப் பேசுகின்றன. எனினும், அவற்றிலிருக்கிற அளத்தற்கரிய ஆழமும் அகலமும் நினைந்து நினைந்து மகிழத்தக்கன.

"நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே”

(புறம். 91)
என்று ஒளவையார் பாடுகிறார். சிவநெறிகாட்டும் செம்பொருள்-தமிழர் தம் வழிபடு கடவுள், பிறப்பையும் இறப்பையும் கடந்த பொருள் என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்குகின்றார்! இளங்கோவடிகள் இந்த அடிகளுக்கு உரைகறி விளக்குவார் போல,

        "விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
        உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”

(சிலப். 12. வேட்டுவவரி)

என்று அருளியிருப்பது அறிந்து இன்புறத் தக்கது. மேலும், "பிறவா யாக்கைப் பெரியோன்” என்று கூறி எந்நெறிக்கு மில்லாத தனித்தமிழர் நன்னெறியுண்மையினை நயம்பெற நாட்டுகின்றார்.

அடுத்து, சமயநெறிகளில் மிகவும் சிக்கலான செய்தி, உயிர்களைப்பற்றியதேயாம். தமிழகச் சமயநெறியாகிய சிவநெறியைத் தவிர, மற்றைச் சமயங்களெல்லாம் உயிர் பற்றிக் கொண்டுள்ள கொள்கைகள் வளர்ந்துவரும் அறிவியலுக்கும் உலகியலுக்கும் இசைந்தனவாக இல்லை. பெரும்பான்மையான சமயங்கள், கடவுள் உயிர்களைத் தன்னினின்றும் படைத்தான் என்று கூறுகின்றன. உயிர்கள் இயற்கையில் குறையுடையன. கடவுள் நிறை பொருள். ஒரு நிறையிலிருந்து குறை தோன்றமுடியாது. குறையிலிருந்து வளர்நிறை தோன்றலாம். அதுவே, பரிணாம வளர்ச்சி; உலகியல் நியதியுங்கூட. ஆனால், குறைவிலா நிறைவாகவும், கோதிலா அமுதாகவும் உள்ள கடவுட் பரம்பொருளினின்று தோன்றப்பெற்ற பொருள்கள் குறையுடையனவாக இருத்தல் முடியாது; இருத்தலுங் கூடாது. இதைவிடப் பேராபத்து, உயிர்களே பரம்பொருளின் பிரதிபலிப்புகள் என்றும், பரம்பொருளின் பகுதியென்றும் கூறும் கொள்கை! அக்கொள்கையினர் ஒரு குடத்திலுள்ள நீர் பரம்பொரு ளென்றும் அதில் ஒரு திவலை உயிர் என்றும் எடுத்துக் காட்டுகிறார்கள். குடத்திற்குள்ளிருக்கும் நீருக்கும் அதிலிருந்து பிரிந்த ஒரு திவலைக்கும் சுவையில் மாறுபாடு இருத்தற் கில்லை. கடவுளின் நிறைவையும் உயிர்களின் குறைகளையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும்பொழுது, "அதுவே இது” என்று கூறுவது பயனற்ற கொள்கையாகும். ஆனால், அறிவுக்கு ஒரு சிறிதும் பொருந்தாத இத்தக் கொள்கைதான் இன்று, எடுப்பாரின் உலகியலாற்றல் காரணமாகச் சமூகத்தில் பெருகிக் காணப்படுகிறது. தமிழ்நெறி, உயிர்கள் படைக்கப் பட்டனவல்ல. அவை இறைவனைப் போல என்றும் உள்ள உள்பொருள் என்ற கொள்கையுடையது. சங்க இலக்கியங்கள் உயிரை "மன்னுயிர்” என்றே பேசுகின்றன. மன்னுயிர் என்றால் நிலை பெற்ற அழிவில்லாத என்றுமுள்ள உயிர் என்பது பொருள். அஃதாவது, உயிர்களுக்குத் தோற்றமு மில்லை; அழிவுமில்லை; சார்ந்ததன் வண்ணமாந் தன்மை யுடையன. உயிர்கள் இயல்பிலேயே சிற்றறிவுடையன. ஆனாலும், இயல்பான அவ் அறிவு, இருள்மலத்தொடக்கின் காரணமாக விளக்கமின்றி அறியாமையாய்க் கிடந்தன. ஆனால் அந்த அறியாமை நிலையானதன்று. உயிர்கள் இறைவனோடு தொடர்பு கொள்ளும்பொழுது, அறியாமை அடங்கி அறிவு விளக்கமுற்று உய்திபெறுகின்றன. ஆக இறை, உயிர், தளை என்ற மூன்று நிலையான உள்பொருள்களை மையமாகக் கொண்டு தமிழகச் சமயநெறியின் தத்துவம் வளர்ந்திருக்கிறது. இந்தத் தத்துவப்பார்வை வளர்ந்து வரும் மார்க்சியத்தைக் கூட ஈடுகொடுக்கும் தகுதியுடையதாக இருக் கிறது என்பதை அறிவிக்க உண்மையிலேயே அளவிலாப் பெருமைப்படுகிறோம்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்

இங்ஙனம் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த திருமுறைக்காலம் சமயநெறியின் பொற்காலமாகும். இல்லை, தமிழகத்தின் பொற்காலமாகும். இல்லை, மனித உலகத்திற்கே பொற்காலம் எனலாம். ஏழாம் நூற்றாண்டில் ஞாயிறும் திங்களுமென இரண்டு ஞானஒளிக் கதிர்கள் தமிழகவானில் நடமாடின. ஞாயிறனைய ஞானசம்பந்தரும், திங்களனைய திருநாவுக்கரசரும் அவதரித்து, மனித உலகத்தின் நாகரிகத்தைக் காத்தமையை எங்ங்னம் வாழ்த்துவது! திரு வருளால் ஞானசம்பந்தர் தோன்றியிராது போனால், இசையும் கலையும் ஏது? உயிர்களை அன்பில் தோய்த்து வளர்க்கும் காதல் மனையற வாழ்க்கை ஏது? உலக உயிர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிக்குத் தொண்டுசெய்யும் தாய்க்குலத்தின் பெருமை ஏது? இயற்கையோடியைந்த வாழ்வு ஏது? இன்பம் ஏது? இவையனைத்தையும் மறைத்து வாழ்க்கையை வறண்ட பாலைவன மாக்கும் புறநெறிகள் தலையெடுத்தபோது ஞானத்தின் திருவுருவமாக எழுந் தருளிய திருஞானசம்பந்தர் அயல்வழக்கை வென்று, தமிழ் வழக்கை நிலைபெறச் செய்து மன்னுயிர்க்கு வாழ்வளித்தார். மனிதகுலத்தின் உரிமையை முடக்கி அடிமை கொண்ட முடியரசை, உலகினர் அஞ்சியடங்கி உச்சிமேற் கொண்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது அப்பரடிகள்,

      "நமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
          நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
      ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
          இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
      தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
          சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
      கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
          கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே
"

என்று முழங்கி முடியாட்சிக் கொள்கைக்கு எதிராக வீரக்குரல் கொடுத்தார். உலக நாடுகளில், "அரசனது ஆணை தெய்வத்தின் ஆணை” என்ற கொள்கை நிலவியபொழுது அப்பரடிகள், அரசின் ஆணையைத் துச்சமெனத் தூர எறிந்தார்! ஆள்கிறவன் - ஆளப்படுகிறவன் என்ற வேற்றுமையைக் களைய முதன்முதலில் வித்திட்டவர் அப்பரடிகளே! அதற்குப்பிறகுதான் அமெரிக்க விடுதலைப் புரட்சி. பிரஞ்சுப் புரட்சி! மனித உலகத்தின் உரிமை விளக்கை முதன்முதலில் ஏற்றித் தந்தவர் அப்பரடிகளேயாம். தமிழ்மறை அருளிச்செய்த திருமூலர், "ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்” என்றார். ஆயினும், தமிழ் நெறிக்கு ஒவ்வாத சாதி வேற்றுமைகள் எப்படியோ தமிழகத்தில் கால் கொண்டன. அதனால், எண்ணத்தொலையாத சாதிகள் தோன்றி வீட்டிலும் வீதியிலும் வளர்ந்து வெறுப்பை வளர்த்துப் பகை நெருப்பை மூட்டின. இந்தத் தீமை வீதியோடு நிற்கவில்லை. எல்லா உலகுக்கும் ஆதியாய், பொது வாய், நடுவாய், எங்கணும் நிறைந்திருந்து அருள் வழங்கும் அம்மையப்பன் ஆலயத்துக்குள்ளும் புகுந்து புல்லுருவியென வளர்ந்தது; இறைவன் பெயராலும் சாதிகள் வளர்க்கப் பெற்றன; அரண்செய்யப் பெற்றன. இறைவனுக்குப் பூசனை பண்ணும் உரிமை-திருவமுது படைக்கும் உரிமை அகனமர்ந்த அன்பினராகித் தொழும்பாய் அடிமை பூண்ட அடியார்க் கல்லாமற் பிறப்பின்பாற்பட்ட ஒரு சாதியின்பாற் படுத்தப் பெற்றன. அதன் காரணமாகப் "போதொடு நீர்சுமந் தேத்தி" வழிபடும் புண்ணிய சீலர்கள் அருகிப்போயினர். இந்தக் கொடுமையை அருள்பழுத்த நெஞ்சினராகிய அப்ப ரடிகளும் தாங்க முடியாமல் சாதி வேற்றுமைகளைப் பொய் புனைந்து கட்டிய புரை தீராச் சாத்திரங்களைக் காட்டி நிலைநிறுத்த முயல்பவர்களைச் "சழக்கர்காள்!” என்று சாடுகின்றார். சழக்கர் - முறைகேடர்.

      "சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
      கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
      பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
      மாத்தி ரைக்குள் அருளு மாற்பேறரே.”

—5. 60-3
சாதி வேற்றுமையை அடுத்து மனிதகுலத்தின் நல் வாழ்வுக்கெதிராக நிற்கும் பகை, வளம்-வறுமை என்ற வேறு பாடுகள், ஒரு சாதாரண மாளிகையைக் கூடச் சமதளத்தில் தான் கட்டமுடிகிறது. மேடு பள்ளமற்ற சாலைதான் பயணத்திற்கு இன்பம் தருகிறது. அது போலச் சமநிலைச் சமுதாயத்தில்தான் அன்பு தழிஇய உறவு வளர முடியும்; இன்ப ஒழுக்கத்தைக் காண இயலும். ஆதலால் அப்பரடிகள் வளம்-வறுமை என்ற வேறுபாட்டை ஈதற்பேரறத்தின் மூலம் நீக்கிச் சமநிலைச் சமுதாயங் காணத் துடித்தார். இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்குத்தான் செல்வம் வழங்கப் பெற்றது. இறைவன் திருவருள், தேவைப் படுகிறவர்களுக்குக் கொடுப்ப வர்களுக்குத்தாம் உண்டு. வழங்கி வாழ்வித்து வாழாத வன்கணாளர்களுக்கு நரகம்தான் கிடைக்கும். அரக்கருக்கும் மன்னித்தருள்பாலிக்கும் அண்ணல், ஈயாது இவறிக் கூட்டுப வர்களுக்கு நரகமே நல்கும் என்று அப்பரடிகள் கூறுகிறார். இந்தக் கொள்கையைத்தான் அண்மைக்காலத்தில் "தர்ம கர்த்தாக்கொள்கை" என்று அரசியல் பொருளியல் வல்லு நர்கள் குறிப்பிட்டார்கள். அண்ணல் காந்தியடிகளின் கொள்கை, தர்மகர்த்தாக் கொள்கையேயாகும். இந்த இனிய அரிய கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள்.

 "இரப்பவர்க் கீயவைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
  கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாறனாரே."

-4, 38–10


என்று பாடினார். சேக்கிழார்

ஏழாம் நூற்றாண்டு, தமிழகச் சமயத்தின் மறு மலர்ச்சிக் காலம் என்று கூறவேண்டும். ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த மாறிலா மறுமலர்ச்சி யியக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் பேணிப் பெரிதும் வளர்க்கப் பெற்று நிலை நிறுத்தப் பெற்றது. முன்னர்க் குறிப்பிட்டது போலத் தமிழகத்தில் ஆரவாரமின்றி அமைதியாக அருளொழுக்கம் பூண்டு திருத்தொண்டு செய்தவர்கள் காலத்திற்குக் காலம் இருந்து வந்துள்ளனர். இந்தத் திருத்தொண்டியக்கம், புறச்சமயத் தாக்குதல்களினால் ஏழாம் நூற்றாண்டில் வீறுபெற்று எழுந்தது. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த இந்தச் சமயப் புத்துணர்ச்சி-எழுச்சி பத்திவழிப்பட்ட திருத்தொண்டியக்கமாகவும், சமூக நல் வாழ்வுக்குரிய நற்பணியியக்கமாகவும் வளர்ந்து வடிவம் பெற்றது. அந்தப் பத்தியியக்கத்தில் ஈடுபடும் தொண்டர்கள் நாடெங்கும் பல்கிப் பெருகினர். ஆயினும், திருத்தொண்டர் களின் வரலாறொன்று முழுமையாக இல்லை. அதனால், பத்தியின் பயனையும் திருத்தொண்டின் சிறப்பையும் எளிதில் மக்கள் அறிந்து அவ்வழி நின்று ஒழுகுதற்குரிய வாய்ப்பு அருகிப் போயிற்று. புனைகதை வடிவிலமைந்து புகுந்த பிற சமயக் காப்பியங்கள் தமிழ் நாட்டில் தலையெடுக்கத் தொடங்கின. இந்தக் காலக் கட்டத்தில்தான்் சேக்கிழார் தோன்றிச் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் அரண் செய்தார். தமிழக வரலாற்றில் வேளாளப் பெருங்குடி மக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று வந்திருக்கின்றனர். தமிழக வேளாளப் பெருங்குடி மக்கள் தாளாண்மையிலும் வேளாண்மையிலும் சிறந்து விளங்கியதோடன்றி அரசவைகளில் அமைச்சர் களாகவும், அறங் கூறுவோர்களாகவும், பெரும்படைத் தலை வர்களாகவும், உற்றுழியுதவும் படை வைப்பினராகவும், பேரரசர்களுக்கு முடிசூட்டும் பொழுது அந்த அணி மணி முடியினை எழிலுற எடுத்துக் கொடுப்பவர்களாகவும், மகட் கொடை நல்கும் மாண்பினராகவும் இருந்திருக்கின்றனர். இவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருமுறையில் பாடிச் சிறப்பித்துள்ளார்.

     "வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
     தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
     வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும்
     தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

-2. 42.3

என்பதூஉம்,

   "நன்மையான் நாரணனும் நான்முகனும் காண்பரிய
   தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
   இன்மையாற் சென்றிரந்தோர்க் கில்லையென்னா தீந்துவைக்கும்
   தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

-2, 42,6

என்பதூஉம் திருஞானசம்பந்தர் திருப்பாடல்களாம்.

இங்ஙனம் வழிவழிச் சிறந்த விழுத்திணை வேளாண் மரபில் - சேக்கிழார் குடியில், சேக்கிழார் அவதரித்தார். சேக்கிழார் குடியில் தோன்றி, விளங்கிய புகழ் படைத்ததால் அந்தக் குடியின் பெயரே, இவர் பெயராகச் சிறப்புற வழங்குவதாயிற்று. இவருடைய இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பது. இவர் வாழ்ந்த காலத்தைக் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும், முதுபெரும் புலவர் க. வெள்ளை வாரணனார், சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தின் பிற் பகுதியும், இரண்டாம் இராசராசனின் மைந்தனாகிய மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியும் ( இரண்டாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1133-1150, மூன்றாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1170-1218) என்று நுண்ணிதின் ஆராய்ந்து கூறியிருப்பதே சரியானதெனக் கருதலாம்.

சேக்கிழாரின் சிறப்புக்கள்

சேக்கிழார், பிறந்த குடிக்கேற்ப இளமையிலேயே கல்வி, கேள்விகளிற் சிறந்து நுண்மாண் நுழைபுலம் உடையவராய் விளங்கினார். சேக்கிழாரின் அமைச்சுப் பொறுப்பால் சோழப் பேரரசு, புகழ் பெற்றது; அதுமட்டுமன்றிச் சிவ புண்ணியப் பேரரசாகத் திருவருட் சார்புடைய அருட் பேரரசாக விளங்கி இன்பம் பெருக்கிற்று. சேக்கிழார், கல்வியில் வல்லவராக இருந்தது போலவே, தேர்ந்து தெளியும் அறிவும் பெற்றிருந்தார்; சிவ நெறியில் சிந்தை கலந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அருள் பழுத்த மனத்தராக விளங்கினார்; பத்திச்சுவை நளிை சொட்டச் சொட்டப்பாடும் கவியரசாக விளங்கினார். சேக்கிழாரின் நெஞ்சம், திருவருளில் தோய்ந்த நெஞ்சமாதலால், அவர் வாழ்வும் வளநிறை வாக்கும் அருளியலுக்கு ஆக்கந் தருவனவாக அமைந்தன.

சேக்கிழாரைப் பாராட்டியோர்

சேக்கிழாரடிகள், அவர்தம் பெரிய புராணத்தை இனிதே தொடங்கி முடிக்க அம்பலத் தாடுவான் "உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்துச் சிறப்பித் தமையை வாழ்த்த வார்த்தைகளில்லை! அநபாயசோழனின் பேரரசு, அருளரசாகிய சேக்கிழார் பெருமானை அரசுக்குரிய மரியாதைகள் செய்தது. இல்லை, அரசனே அணிபெறு யானைமீதமர்த்தித் தான்் பின்னிருந்து துணைக்கையால் இணைக்கவரி வீசிச் சிறப்பித்தான்! சேக்கிழாருக்குப் பிறகு வந்த அனைத்துக் கவிஞர்களும் சேக்கிழாரைச் சிந்தை குளிர வாழ்த்தியிருக்கிறார்கள். உமாபதி சிவம் திருத்தொண்டர் புராண வரலாறு செய்து அதில் சேக்கிழாரை வாழ்த்தியுள் ளார். மாதவச் சிவஞான முனிவர், திருத்தொண்டத் தொகை நூலை விரித்துச் சொல்ல வல்லவர் சேக்கிழாரே என்று போற்றிப் பரவுகின்றார்.

"துர்க்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி னாற்சொல்ல வல்லபி ரானெங்கள் பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம்"

-காஞ்சிப் புராணம். சிறப்புப் பாயிரம். 17

       "திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைத்
           திணைவளமும் தெரித்துக் காட்ட
       மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்க்
           குலக்கவியே வல்லான் அல்லாற்
       கருத்தொண்டர் எம்போல்வா ரெவ்வாறு
           தெரிந்துரைப்பார் கலந்தார்க் கின்பம்
       அருத்தொண்ட ரணியிலவை யொன்றோடொன்
           றியைந்தனவும் ஆங்காங் குண்டால்”

-காஞ்சிப்புராணம். திருநாடு. 128

என்று பாடுகிறார்.

"
...............சங்கரன்தாள் தமது
சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தைஅள விடநஞ்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே"

என்பது திருத்தொண்டர் புராண வரலாற்று (51)ப் பாட்டு. சேக்கிழாரைப் போற்றிப் பாராட்டாமையைத் திருப்பெருந் துறைப் புராண ஆசிரியர், "கடும் பிழை” என்று கூறுகிறார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடிப் பரவித் துதித்துள்ளார். கவிச்சக்கர வர்த்தி கம்பன் போன்றோர், சேக்கிழாரின் செஞ்சொற் செஞ்சொற்களையும் அடிகளையும் அப்படியே எடுத்தாண்டு போற்றிப் பெருமைப் படுத்தியுள்ளனர்.

பெரியபுராணம்

சேக்கிழார், திருத்தொண்டர் சீர்பரவும் செஞ்சொற் காப்பியத்தை "எடுக்கும் மாக்கதை" என்று பாடத் தொடங்கினார். சேக்கிழார், தமது நூலுக்குப் பெரிய புராணம் என்று பெயர் சூட்டவில்லை. ஆனால், பெரியோர் வரலாற்றைக் கூறுவதாலும், ஒதுவோருக்குப் பேசரிய பெருமை சேர்ப்பதாலும், பிறவாயாக்கைப் பெரியோன் பெருமையை - அப் பெரியோன் அடியார்க்கு எளியனாக எழுந்தருளிய அருமையில் எளிய பெருமையை எடுத்து விளக்குவதனாலும், முன்னும் பின்னும் இதனை யொத்த பெருநூல் தோன்றாமையாலும் பெரியபுராணம் என்று பாராட்டப் பெறுகிறது. தமிழில் புராணங்கள் பலவுண்டு. அவற்றில் சிறப்புடையனவும் உண்டு; சிறப்பில்லாதனவும் உண்டு. ஆனால், அந்த வரிசையில் பெரியபுராணம் வைத்து எண்ணத் தக்கதன்று. புராணம் என்று உலக வழக்கில் கூறினாலும் பெரியபுராணம் புனைந்துரைக்கப் பட்டதன்று. அஃதொரு வரலாற்று நூல்; வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சரிதநூல்; பத்திச் சுவை நலம் பாரிக்கும் பெருநூல்; இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இன்தமிழ் மறைநூல்; "திசை யனைத்தின் பெருமை யெல்லாம் தென் திசையே வென்றேற"ச் செய்த திருநூல்; "அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல"த் தோன்றிய அரிய பெரிய அருள்நிறை விறல்நூல்; தமிழ் மொழியின், "இசை முழுதும் மெய்யறிவும்” கொண்டு விளங்கும் முழுமுதல்நூல். சேக்கிழாரின் செஞ்சொற் காப்பியம் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் தனிப்பேரரணாக அமைந்த தோடன்றி ஆக்கமும் வழங்கியது. ஆதலால், சேக்கிழார் தந்த பெரியபுராணத்தினை ஆரக்கற்றுத் துய்க்கவேண்டும்; நாள்தோறும் பெரியபுராணத்தை ஒதும் பழக்கம் மேற்கொண்டால் மலம் மடங்கும்; மனம் கரையும்; அருள் முகிழ்க்கும்; சங்கரன்தாள் சார்பு கிடைக்கும்.

பெரியபுராணம்-வரலாறு

சேக்கிழார், திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு அந்நூலினின்றும் தொடங்கித் திருமுறைகள், திருக்கோவிற் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சீர்சால் சாசனங்கள் ஆகியவற்றிலிருந்து அகச்சான்றும், செவி வழிச் செய்திகளாலமைந்த புறச்சான்றும் தேடி முறையான-குறைவிலா நிறைவுசேர் வரலாற்று நூலாகத் தமது பெரிய புராணத்தைச் செய்து தந்துள்ளார். பெரியபுராணத்தில் பேசப்பெறாத செய்தியில்லை; பத்தியென்ற ஆதாரசுருதியை அடிப்படையாகக் கொண்டு மனித குலத்திற்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் பேசப்பெற்றுள்ளன. சேக்கிழார் பெருமான் சிந்தையின் நிறைவையே அளவுகோலாகக் கொண்டு, "திரு நின்ற செம்மையுடையோர்” வரலாற்றை வகைபட விரித்துச் செய்துள்ளார். சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் அரனடிக்கு அன்புபூண்டு விளங்கிய அனைத்துப் பெருமக்களின் வரலாற்றையும் எந்தவித வேறு பாடுமின்றி இயல்புற எடுத்துக் கூறியிருக்கிறார்.

பெரியபுராணம் கடவுளைப்பற்றிப் பாடவில்லை; அது போலவே மனிதரைப்பற்றியும் பாடவில்லை! அடியார்க் கெளியராக விளங்கிய கடவுளையும், கடவுளுக்குத் தொழும்புபூண்டு கடவுளைத் தமது திருவுள்ளத்தில் எழுந்தருளச் செய்துகொண்ட அடியார்பெருமக்களைப் பற்றியுமே சேக்கிழார் பாடினார். அஃதாவது, அடியார் வழிபட்ட கடவுளையும், கடவுள் வழிப்பட்ட அடியார்களையுமே பாடினார். கயிலாயத்தின் உச்சியிலுள்ள இறைவனைப் பாடாமல் ஆரூர்த் திருவீதியில் நடந்த அண்டர் நாயகனையும், அருள்நிறை தில்லையில் அம்மை காண ஐந்தொழிற் கூத்தியற்றும் அம்பலவாணரையுமே பாடினார்; அரண்மனை வசித்தோரைப் பாடவில்லை; அவர்களில் அரனடிக்கு ஆளானோரையே பாடினார்.

பெரியபுராணத்தில் பாடப்பெற்றுள்ள பெருமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றிபெற்ற நற்றவச் சான்றோர்கள். பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்களுக்குப் பத்தி யுண்டு. ஆனால், பத்தியென்ற ஒரு தகுதி கருதியே சேக்கிழார் பாடிவிடவில்லை. சீலத்திலும் நோன்பிலும் செறிவிலும் அறிவிலும் ஆராஅன்பிலும் அருளிலும் சிறந்து விளங்கிப் பத்திமையும் கொண்டு ஒழுகியவர்களைத்தாம் சேக்கிழார் பாடினார். வாழ்க்கையைக் குறிக்கோளுடையதாகக் கொண்டு குறிக்கோளையடையும் உறுதியும் பூண்ட - இன்பத் துன்பங்களைப் பொருட்படுத்தாது இலட்சியப் பயணம் செய்த தவச் செல்வர்களைத்தாம் சேக்கிழார் சிந்தை குளிர, உளம் குளிர வாழ்த்துகின்றார். பத்திமைப்பாங்கில் நின்றவர் களும் திருத்தொண்டின் நெறியில் நின்றவர்களுமே போற்றப் பட்டிருக்கிறார்கள். “மாதேவர்க்கு ஏகாந்தராக" ஒழுகித் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர்களாகிய அடியார் பெருமக்களின் வாழ்க்கையை எந்த வேறுபாடும் கருதாது திருத்தொண்டின் தகுதி ஒன்றையே தகுதியாகக் கருதிப் பெரியபுராணத்தைப் பாடியிருப்பதொன்றே அஃதோர் உலகப் பொதுநூல் என்பதற்குச் சான்றாகும். பெரியபுராணத்தில்-ஆடவர்

பெரியபுராணத்தில் பாடிச் சிறப்பிக்கப் பெற்றுள்ள பெருமக்கள் நிறைநலம் பெற்று விளங்கியவர்கள். ஒரோ வழி, குறைநலம்போலத் தோற்றினாலும் அக்குறை தடிப்புடைய தாக இருந்ததில்லை. அதுமட்டுமின்றி இறை சார்பான வாழ்க்கைக்கு அக்குறை தடை செய்ததாகவும் இல்லை. திருநீலகண்ட நாயனார், வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்; “பொய் கடிந்த அறத்தில்" வாழ்ந்தவர்; "மெய்யடியார்களுக்கு வேண்டும் பணிசெய்யும்" நெறியில் நின்றொழுகியவர்: "வையகம் போற்றும்படி மனையறம்" மேற் கொண்டு வாழ்ந்தவர்; "சைவமெய்த்திருவின் சார்பே"சார்பெனக் கொண்டொழுகியவர்; ஆயினும் "இளமை மீதூர இன்பத்துறையினில் எளியரானார்". ஆனாலும், கற்பும் பொற்பும், கடவுட் பற்றும், கணவரையும் திருத்தும் கடமை யும் உரிமையும், தகை சான்ற சொற்காக்கும் தன்மையினு நீங்காத அவர் தம் மனைவியின் ஆணைக்குப் பின்பு, எந்த இன்பத் துறையில் எளியராக முன்பு விளங்கினாரோ, அந்த இன்பத் துறையை முற்றிலும் மறந்து, மனையில் தங்கியொழுக அவரால் முடிந்ததென்றால் அவர் தம் குறை, குறையாகவே தெரிவதற்கில்லை.

வாழ்க்கை, பெரும்பாலும் இயற்கையோடியைந்தது. இயற்கையோடியைந்த இனிய செயல்களைக் கூடப் பலர் செய்ய முடியாமல் அல்லற்படுகிறார்கள்! இவறிக் கூட்டுதல் செயற்கைப் பண்பே. ஈத்துவத்தல் இயற்கைப் பண்பே. துன்பம் விளைத்தல் செயற்கைப் பண்பே. துன்பகற்றி இன்பம் விளைத்தல் இயற்கைப் பண்பே. நன்றிமறத்தல் செயற்கைப் பண்பே. நாளும் நன்றியறிதல் இயற்கைப் பண்பே. ஆயினும், இங்குக் கூறிய இயற்கைப் பண்புகள் மன்பதையுலகில் விளங்கித் தோன்றுதல் அருமையாகவே இருக்கிறது. செயற்கைப் பண்புகளே விஞ்சி, எங்கும் துன்பத் தொடக்குகளையே பார்க்கிறோம். ஆனால், இயல்புக்கு மாறான எவரும் செய்ய இயலாத அதீத ஒழுங்குகளையும் ஏற்றுக்கொண்ட அடியார்களையும் பெரியபுராணத்தில் பார்க்கிறோம்.

இயற்பகை நாயனார் வரலாறு, இதற்கோர் எடுத்துக் காட்டு. ஈதலைக் கடமையாகக் கொண்டாலும் அதற்கோர் . உலகியல் வரையறை உண்டு. அதுவே உலகத்தியற்கை ஆனால், இயற்பகையார் வரையறைக்குட்படாத ஈதற் பெருங்கொள்கையை வாழ்க்கையின் நோன்பாகக் கொண்டார். இதனை,

"...................................................யாரேனும்
வேண்டும் யாவையும் இல்லை.என் னாதே
இக்கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்"

(2)

என்ற அடிகளால் அறியலாம். எம்பெருமான், அடியார்கள் அன்பினை உலகோர் உணர, அளந்து காட்டி அவருள் நின்று அனுபவிப்பவர். அங்ஙனம் அவர் அளக்கும் பொழுதெல்லாம் அன்பு, ஆரா அன்பாக முறுகி வளர்கிறது. எம்பெருமான் துார்த்த வடிவத்தில் வந்து இயற்பகையாரை அணுகி, "இரக்க வந்தனம்" என்றார். இவ்வாறு ஒருவர்வந்து இரப்பின் அது கேட்ட யாரும், "நியாயமாகத் தகுதியுடையதைக் கேள். இயன்றால் தருவேன்” என்று கூறுவதே எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், இயற்பகையாரோ,

"யாதும் ஒன்றும்என் பக்க லுண்டாகில்
அன்னதெம்பிரான் அடியவர் உடைமை
ஐயம் இல்லைநீர் அருள்செய்யும்”

(7)

என்று கூறுகிறார். இந்த ஒரு பதிலில் ஒன்றுக்கு மூன்றாக, உறுதிச் சொற்களை அடுக்கித் தமது, இல்லையெனாது ஈயும் ஒழுக்கத்தை உறுதி செய்கிறாா் இயற்பகையார். இங்கே இயற்பகை நாயனாரின் ஈதற்குரிய வரையறை இரக்கப்படும் பொருள் அவர்பால் இருக்கவேண்டும் என்பது ஒன்றேயாம். அதுவும்கூட இயற்பகையார் கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அப்பொருள் இரக்கப்பட்டவுடன் உடைமையின்மீது தமக்குரிய உரிமையை விலக்கிக் கொண்டு, இரப்பவரின்-அடியவரின் உடைமையாக்கி விடுகிறார். வந்த தூர்த்தர், கேட்கக்கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டார். கேட்டதில் வேண்டுமானால் குறையிருக்கலாம். அதுவுங்கூடக் கேட்ட சொல்லளவில்தான் குறை; சிந்தையிற் குறையில்லை; செயலிற் குறையில்லை! ஏதாவது ஒன்று குறையா, நிறையா என்பதையறியச் செயல்மட்டும் அளவன்று, அச்செயலின் நோக்கம் பற்றியும் ஆராய்தல் வேண்டும். இன்றைய தீங்கியல் சட்டம் கூட, ஒருசெயல் தீங்கெண்ணத்துடன் (Malice) அல்லது நேர்மையற்ற நோக்கத்துடன் (Improper motive) செய்தால்தான் குற்றம் என்று கருதுகிறது. வந்தவர் கேட்பதற்கு முன்பேயே திட்டமிடுவதையும் அத்திட்டத்தின் நோக்கத்தையும் சேக்கிழார் காட்டியுள்ளார். அதன்படி மனைவியைக் கேட்டதில் கேட்டார்க்கு நேர்மையற்ற நோக்கமோ, தீங்கெண்ணமோ இல்லையென்பது வெளிப்படை இரந்து கேட்டதன் நோக்கத்தை,

"தொண்டர்மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்"
(4)

என்று சேக்கிழார் அவ்வாய்மை தோன்றப் பாடுகின்றார். இயற்பகையாரின் மனைவியை வந்தவர் இரந்து கேட்டதன் நோக்கம் இயற்பகையாரின் இல்லையெனாது கொடுக்கும் திறத்தை அறிந்துகொள்ளக் கூட அன்று, உலகிற்கு அவர்தம் கொள்கையின் உறுதிப்பாட்டைக் காட்டவேயாகும். அஃதாவது, இயற்பகையாரின் கொடைத்திறத்தினை உலகிற்கு உணர்த்தவேயாம். இச்செயல் முடிந்தவுடன் அஃதாவது இயற்பகையார் மறுக்காமல் அவருடைய மனைவியைத் தந்தவுடன் இச்சோதனை முடிந்துவிடுகிறது. அங்கே வேறு தவறான பொருள் கற்பிக்க இடமில்லை; ஏதுவுமில்லை. ஆனால், சிலர் இந்த அருமைப்பாட்டினை அறிய முடியாமல் இந்தப் பண்பினைத் துய்த்துணரும் தாய அனுபவமில்லாமல் தவறாக எழுதியும் பேசியும் வருகிறார்கள்! இயற்பகையார் கொடுத்த வாக்குறுதியின்படி மனைவியைக் கொடுக்கின்றார். சிலமணித்துளிகளிலேயே இறைவன் மறைகின்றான்! உலகு உணர்கிறது, இயற்பகையார் கொடைத்திறத்தை!

இங்ஙனம், சேக்கிழார் எடுத்துக்காட்டும் நாயகர்கள் குறிக்கோளுடையவர்கள். அக்குறிக்கோளை நெஞ்சில் நடுக்கமின்றி, இன்பம் விழையாது இடும்பை இயல்பெனக் கொண்டு ஏற்றுத் தம்குறிக்கோளினையும் அதனைச் சாரத்திருவருளையும் அடைந்தனுபவித்தார்கள்.

பெரியபுராணத்தில் மகளிர்

சேக்கிழார் படித்துய்யப் படைத்துக் காட்டும் மங்கையர் திலகங்கள் "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்ற வினாவுக்கு விளக்கங் கூற வந்த பாத்திரங்களாவர். நமது இன, சமய வரலாற்றில் மங்கையர் பெற்றிருக்கும் சிறப்பு, பெருஞ்சிறப்பாகும். ஆடவர் தடம்புரண்டாலும் அவர்கள் தடம்புரளாது நெறியில் நின்றொழுகி வாய்மை வரலாற்றை வளப்படுத்தியிருக்கிறார்கள். சிலம்பில், கற்புக்கரசி கண்ணகி, மங்கை நல்லாள் மாதவி ஆகியோர் நிறை நெறியில் நின்று ஒழுகியவர்கள். கோவலன் ஒருதடவைக் கிருதடவை நெறிபிறழ்ந்தான். முறைபிறழாப் பேரரசுக்குப் பேர் போன பாண்டியப் பேரரசனும் அரசியல்நெறி பிழைத் தான். கூன்பாண்டியன் மாறவர்கன் அரிகேசரி தொன்று தொட்டுத் திருவருளால் தன் நாட்டில் நின்று நிலவியதும், தான் நின்றொழுகிப் பேணிக்காக்கவேண்டியதுமான பெரு நெறியை மறந்து "கொல்லாமை மறைந்துறையும் சமண்சமயம் குறுகினான். ஆனால், வளவர்கோன் பாவையராகிய மங்கையர்க்கரசியார் மாறவில்லை. மாறாத தோடன்றிப் பாண்டிய நாட்டைச் சிவநெறியில் மீட்டும் முன்போல் நிலை நிறுத்தும் வரலாற்றுப்புகழ் மிக்க சாதனையையும் செய்து முடித்தார். அதனாலன்றோ சேக்கிழார் "மங்கையர்க்குத் தனி யரசி எங்கள் தெய்வம்" என்று வாழ்த்துகிறார். பரமதத்தன் தனது வாழ்க்கையிற் பங்கேற்ற அருமை மனைவி புனிதவதி யார்க்கு ஒரு கனி வேண்டும் என்ற உணர்வின்றிக் கனிகள் இரண்டையும் கலத்திலிடப் பணித்தான். ஆனால் தவக் கொழுந்து புனிதவதியார் தாம் துய்க்கும் வேட்கையின்றி விருந்தும் கொழுநனும் துய்க்கவே விரும்பினார். ஏன்? ஏழாம் நூற்றாண்டில் தமிழகவானில் இருள் கடிந்தெழுந்த ஞாயிறாக உலாவிய தமிழாளியர், தமிழ்த்தலைவர் திருத்தொண்டின் நெறிக்காவலர், எவ்வுயிர்க்கும் இர்க்கம் இதயத்தே இயல் பாகவே கொண்டவர், முடியாட்சியை மறுத்திட்ட முதற் புரட்சிவீரர், பழுதிலாத் துறவறம் பூண்டவர், முன்னமே சிவத்தினைப் பிரியாத சிந்தை பெற்றவராக விளங்கிய நந்தம் குலமுதல்வர் மறையாசிரியர், வழித்துணை மாமருந்து அப்பரடிகளே கூடத் தொடக்கத்தில் தடம்புரண்டார்; தவமார் சிவநெறியகன்று அவமுறுஞ் சமண்நெறி நின்றார். அப்பருக்குத் தமக்கையாராகவும் அதிகையப்பருக்கு அணுக்கத் தொண்டராகவும், தவத்திற்கொரு கொழுகொம் பாகவும் தூண்டு தவவிளக்காகவும் திருவாளன் திருநீற்றின் திருநிறையாற்றலை விளக்க வந்தருளிய தந்நிகரில் தண்ணிலா வாகவும், தமிழினவரலாற்றை-தமிழகச் சமய வரலாற்றைத் தொய்வுவிழாமல் தூக்கி நிறுத்திய வரலாற்றுச் சிற்பியாகவும் விளங்கி, உயிர்க்குரிய நெறிபேணித் தந்தமையால் தமிழினத் திற்கு அன்னையினும் மேம்பட்ட அன்னையென நினைந்து நினைந்து வாழ்த்தி வணங்குதற்குரிய அன்னை, திலகவதியார் தடம்புரளவில்லை. இங்ங்னம், நாம் கூறுவதால் ஆடவருலகம் வருந்த வேண்டியதில்லை. நமது வரலாறு இப்படித்தான்் அமைந்திருக்கிறது! இனிவரும் வரலாற்றிலாவது ஆடவர் தடம் புரளாமல் தகுதிப்பாட்டுடன் நெறிநின்றொழுகிப் புகழ் சேர்க்க வேண்டும். எந்த இனத்தின் வரலாற்றுக்கும் தூய்மை மாறாத் தாய்மையுலகம் சிறப்புற்றிருப்பது பெருமைக்குரியதேயாம்

பெரியபுராணத்தில் மக்கட்பேறு

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு”
(60)

என்பது குறள். மக்கட்பேறு உலகியற்கை ஆனால், நன்மக்கட்பேறு இயல்பாக அமைவதன்று குடும்பத் தலைவனும் தலைவியும் நோன்பிருந்து பெற வேண்டிய ஒன்று. திருஞான சம்பந்தரை ஈன்று புறந்தந்த குடும்பத்தின் பெருமையை என்னென்று கூறிவாழ்த்துவது? வீட்டுக்குப் பிள்ளை தேடுவோர் பலர். ஆனால், சிவபாத இருதயர் நாட்டுக்குப் பிள்ளை வேண்டினார். ஞாலமுய்ய நாமுய்ய நாளும் சைவ நன்னெறியின் சீலமுய்ய மகப்பேறு வேண்டினார். இதனைச் சேக்கிழார்,

"......பரசமய நிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்

                              புரிந்தார்"
-12 சம்பந்தர்-19

என்று புகழ் பொருந்தக் குறிப்பிடுகிறார். இங்ங்ணம், திருத்தோணிபுரத்திலிருந்த ஈசனை ஊற்றெழும் அன்பால் வழிபட்ட தாயின் மணிவயிற்றில் திருஞானசம்பந்தர் தோன்றினார். அருளியல் தவம் செய்து பெற்ற குழந்தை யாதலால், ஞான மதலையாக இருந்தது. மூன்று வயதில் அழுகிறது! உடலுறவாகிய சீகாழித் தந்தை தாயரை நினைந்து அழவில்லை. உயிர்க்குத் தாயும் தாதையுமாகிய மங்கை பங்கனை நினைந்து அழுகிறது! வேதங்கள், "ஐயா!” எனத் தேடியலையும் பரம்பொருளை விரலாற் சுட்டிக் காட்டிக் குறிகளும் அடையாளமும் நின்றதோர் கோலமும் குறித்துணர்த்தி நம்மையாட்கொண்டது அந்தக் குழந்தை!

சேக்கிழார், பொறுத்தாற்றும் பண்பை வாழ்த்துகிறார்! ஆனால், அதே திருவாயினால் ஒறுத்தாற்றும் பண்பாம் வெகுளியையும் வாழ்த்துகிற்ார். ஆனால், சேக்கிழாரிடத்தில் முரண்பாடில்லை. வெகுளாமை ஒதிய திருவள்ளுவரும், வெகுண்டு ஒதிய இடங்கள் உண்டு. வெகுளல் இடம் பொறுத்து நன்றாகவும் தீதாகவும் அமைகிறது. தற்சார்பான நலன்கள் கருதி வெகுளல் தீது, சமுதாயப் பொது நீதி-பொது நியதி கருதி வெகுளல் நன்று. மெய்ப்பொருள் நாயனாரின் பொறுத்தாற்றும் பண்பைச் சேக்கிழார் வாழ்த்துகின்றார். மெய்ப்பொருள் நாயனாருக்கு வந்த தீங்கு அவருக்கேயாம். ஆங்கு, அவருடைய பொறுத்தாற்றும் பண்பே அறம். சண்டீச ரின் வெகுளியைச் சேக்கிழார் வாழ்த்துகிறார். சண்டீசர் வரலாற்றில் சண்டீசருக்குத் தீங்கு வரவில்லை. சண்டீசரின் தந்தை அவரைத் திட்டி மொத்தியபோது பொறுத்தாற்றும் பண்பே மேற்கொண்டார். ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு முன்னைப் பழைமைக்குப் பழமையாய், எல்லார்க்கும் முன்னே முளைத்ததாய், தமிழக வரலாற்றின் மையமாக-தமிழினத்தின் வழிபாட்டுச் சின்னமாய் விளங்கிவந்த சிவலிங்கத் திருமேனியைத் தீண்டிச் சிதைக்க முனைந்தமையைச் சண்டீசரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அதனால் வெகுண்டு, பெற்ற தாதையின் தாளைத் தடிந்தார். தனி மனிதர்கள் வரலாம், போகலாம். ஆனால், ஒரு நாட்டின் வழிவழி வளர்ந்து வரும் நாகரிகம் தனி மனிதரினும் விழுமியது; பெரியது. தனி மனிதர் தம்மை இழந்தாவது அந்த நாகரிகத்தினைக் காப்பாற்ற வேண்டும். இதுவே, வாழ்வாங்கு வாழ்பவரின் சீலம், இன்றோ, நம்மில் பலருக்கு 'நாமே ' தான் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. 'நம்முடைய ஏற்றமும் இழிவுமே முதனிலைப் படுத்தப்படு கின்றன. வழிவழி வளர்ந்துள்ள நெறிமுறைகளில்-நாகரிகப் பண்பில் நமக்கு ஊற்றமில்லை. அவற்றைப் பேணி அரண் செய்து காக்க வேண்டுமென்ற பெருவிருப்பமில்லை. ஆனால், ஆண்டின் இளையராகிய சண்டீசருக்கிருந்த நெறிமுறைப் பிடிப்பை நாம் அனைவரும் பின்பற்றி ஒழுகவேண்டும்.

சேக்கிழார் காப்பியத்தில் ஆண்டில் இளையருண்டு. ஆனால், ஞானத்தில் இளையர் யாருமிலர். அப்பூதியடிகளின் அருமந்த புதல்வன் மூத்த திருநாவுக்கரசை-அவன்றன் பண்பை எங்ங்ணம் எடுத்துக் கூறுவது? அப்பரடிகளுக்கு அமுது படைக்க இலை அரிந்து வரும்படி ஆணை தருகிறார் அன்னை அத்தர். வேடிக்கை பார்க்கும் வயதுடைய சிறுவன் விரைந்து ஒடுகிறான். அவர்தம் ஆணைக்காக ஓடாமல், அவ்ஆணை தனக்குக் கிடைத்தமை குறித்து அளப்பிலா மகிழ்வெய்துகின்றான். "நல்ல தாய்தந்தை ஏவ நானிது செயப் பெற்றேன்” என்று மூத்த திருநாவுக்கரசு பேசுவதாகச் சேக்கிழார் அருளிச் செய்திருப்பது நினைந்து நினைந்து இன்புறத் தக்கது. நச்சரவம் திண்டிய பிறகும், அப்பரடிகள் அமுது செய்தல் காலந் தாழ்க்கலாகாது என்று கருதி, நஞ்சின் வேகத்தோடு போராடி ஓடிவந்த மூத்த திருநாவுக்கரசின் இனிய பண்புகளை எண்ணும்பொழுது பண்டு பழுத்த முதுமை முழுத்தவத்தையுடைய உயிர் ஒன்று இன்று இவ்விளமையுடலில் உலாவியதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

பெரியபுராணத்தில் பணிஆள்

வாழ்க்கையை இன்பமாக்கத் தேவைகள் பலப்பல. அவற்றில் இன்றியமையாதது. பணியாள் அமைதல். கருத்திற் கிசைந்த ஆற்றலுடைய பணியாட்கள் அமைதல் அருமை யிலும் அருமை. நல்ல பணியாட்கள் கிடைக்காதவர்கள் இளமையிலேயே கிழட்டுத்தன்மையடைகிறார்கள்! பணி கொள்வோரின் இளமைக்கும் எழுச்சிக்கும் இன்பத்திற்கும் பணியாட்களே பொறுப்பு. காலத்தின் தேவையறிந்து செய்வோர் சிறந்த பணியாட்கள். குறிப்பறிந்து செய்பவர்கள் பரவாயில்லை! சொல்லிச் செய்பவர்களும் ஓரளவு நல்லவர்களே! சொல்லியும் செய்யாதவர்கள் சொர்க்கத்தின் கதவை அடைப்பவர்கள்! சிலர், குறிப்பில் உணர்ந்து தெளி வாக விடைதருவர், பலரிடமிருந்து கேட்டுக் கேட்டுத்தான்் பதில்பெற வேண்டும். அப்படியே பதில் கூறினாலும் தெளிவாகக் கூறமாட்டார்கள். இவர்களெல்லாம் பணியாட் களெனப் பயனின்றி உலவிப் பிணியைத் தருபவர்கள்!

சேக்கிழார், அப்பூதியடிகளுக்கு வாய்த்த பணியாளை அறிமுகப்படுத்துகிறார். அப்பணியாள் அப்பூதியடிகளின் தண்ணிர்ப்பந்தலில் வருகின்றவர்களுக்குத் தண்ணிர் வழங்கும் பணியாள். அவரை அணுகினார் அப்பரடிகள். "அப்பரடிகள் பெயரால் இத் தண்ணிர்ப் பந்தல் அமைத்தது யார்?’ என்று கேட்கிறார். அப்பூதியடிகளின் பணியாள் தெளிவாக விடை தருகிறார். அந்த விடையில் அப்பரடிகளின் பெருமை, அப்பூதியடிகளின் சிறப்பு, அப்பூதியடிகள் ஆற்றிய பிற அறங்கள் அனைத்தும் விளக்கமாகக் கிடைக்கின்றன. அடுத்து அப்பரடிகள் "அவர் எவ்விடத்தார்?" என்று வினவுகின்றார். அதற்கு எளிமையாக இன்றையப் பணியாளாக இருப்பின் "இந்த ஊர்தான்” என்று கூறுவர். ஆனால், அப்பூதியடிகளின் பணியாள், அந்த வினாவுக்குக் கூறிய விடை அடுத்து வினாக் கேட்க முடியாதவண்ணம் விளக்கமாக அமைந்திருக்கிறது. இத்தகு பணியாட்களைப் பெற நாம் த்வம் செய்தோமில்லை; என்ற ஏக்கம் வருகிறது! அந்தப் பணியாள் தந்த விடை

"துன்றியநூல் மார்பருமித் தொல்பதியார்,மனையின்கண்
சென்றனர், இப் பொழுது, அதுவுஞ் சேய்த்தன்று நணித்து"

என்பது. இங்ஙனம் சிறந்த பணியாட்களின் இயல்புகளைச் சேக்கிழார் செப்பும் முறைமை அறிந்து பாராட்டுதலுக் குரியது; பயன் பெறுதற்கும் உரியது.

பெரியபுராணத்தில் நட்பு

ஒருவர் வாழ்க்கை சிறப்புற ஒர்ந்துணரும் ஒப்பில்லா நட்பு இன்றியமையாதது. காதலிலும் நட்பே விழுமியது, காதலின்றி வாழலாம். ஆனால், நட்பின்றி வாழமுடியாது. நட்பு, மிகமிகத் தூய்மையானது. சேக்கிழார், நட்பின் இலக்கணத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். நட்பு என்பதும் தோழமை என்பதும் ஒரு பொருள் குறிக்கும் சொற்களேயாம். சுந்தரர், சிவபெருமானையே வலிய வந்து பொருந்திய வளமார் தோழராகப் பெற்றார்; வாழ்க்கை பெற்றார். ஆனால், சிவபெருமானோ யாதும் பெற்றாரல்லர். தோழமை என்பது வாணிகமன்று. ஒன்றைப் பெறுதற்காகவே நட்புக் காட்டுவது, நட்பாகாது; தோழமையுமாகாது. அது தொல்லையைத் தரக்கூடிய சதியாகும். சுந்தரர், சிவபெருமானைத் தோழமையாகப் பெற்றது, ஒன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ததன்று. தோழமை கனிந்தது! நட்பு வளர்ந்தது! சுந்தரருக்குத் தேவைகள் தோன்றின. அப்போது தேவையை நிறைவேற்றக் கூடிய பேராற்றல் தம்முடைய தோழனுக்கு இருந்ததால், கேட்டுப் பெற்றார். சுந்தரர் விரும்பிய வெல்லாம் தந்தருளித் தோழமை காட்டினான் சிவபெருமான்! கழுது கண் படுக்கும் பானாளிரவில் காரிகைபால் தோழனுக்காகத் துது சென்ற கண்ணுதற் பெருமானின் தோழமைப் பண்பை என்னென்று கூறுவது! சுந்தரர் வரலாறு முழுதும் நட்பின் இயல்புகளைச் சேக்கிழார் விரித்துப் பேசியுள்ளார். அதனைப் படித்து உணர்தலே நல்லது.

பெரியபுராணம் காட்டும் மனையறம்

பெரியபுராணம், தவத்திற் சிறந்த சீலர்களின் வரலாற்றைத்தான்் பேசுகிறது. ஆனால், இங்குத் தவமென்பது, தமிழகத்தில் காலத்தால் பின்னே வந்த இயற்கையோடியை பில்லாத தவமன்று, துய்ப்புணர்வுக்குரிய பொருள்களிலிருந்து அகன்று நின்று. "அவா அறுத்தேம்" என்பது பொய்யுரையே யாம். பொருளுடையவராக இருந்தும் அதனிடத்துப் பற்றின்றிப் பலருக்கும் பகுத்துப் பயன்பட வாழ்தலே சீலத்தில் சிறந்த தவநெறியாகும். தண்ணிரில் கிடக்கும் தாமரை தான் தண்ணிர் ஒட்டாமல் வளர்கிறது. தாமரையிலைமேல் தண்ணிர் கிடந்தாலும் தண்ணிர் அகற்றப்படும் பொழுது, அந்த இலைக்கு வடுக்களோ அல்லது வற்றாத பசையெனப்படும் ஈரமோ ஏற்படுவதில்லை. மாறாகத் தண்ணிர் கிடந்த சுவடுகூடத் தெரிவதற்கில்லை. அப்பரடிகள், யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்தேன் என்று கூறுகிறார்.


"மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான்
                                                மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின்
                                               புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடை கின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறுவருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதம் கண்டறி யாதன
                                               கண்டேன்”

என்பது அப்பர் திருப்பாடல், இங்குச் சுவடு என்பது உயிர்ச் சுவடுகளாகும். உயிரின் விருப்பும் வெறுப்பும், பற்றும் பாசமும் உயிரில் பதிந்து, அதுவே ஊழாக உருவம் பெற்றுப் பின்னைப் பிறப்பை வழங்குகிறது. ஆதலால், சிறந்த சமய வாழ்க்கையென்பது உயிரில் தன்னலச் சுவடுகள் அழுந்திப் பதியா வண்ணம் தற்காத்துத் திருவருட் பதிவும், திருத் தொண்டுணர்வின் சுவடும் பெறவாழும், பெருவாழ்வாகும். அப்பரடிகள். அங்ங்ணம் வாழ்ந்த, உலக வரலாறு கண்டறியாத ஒரு நிறை நலம் சான்ற, ஞானி. அவர்தம் சிந்தையில் சிவத்தின் பதிவைத் தவிர வேறு பதிவில்லை. அவர்தம் திருமேனியிலும் சிவத்தின் உடைமையென்பதை வெளிப்படுத்தச் சூலமும் இடபமும் பொருந்திய இலச்சினை களையும் கொண்டு திகழ்ந்தார். புறத்துங் காட்டப்படுவது போன்று சிவபெருமான் திருவருளால் கயிலைக் குளத்தில் மூழ்கித் திருவையாற்றுக் குளத்தில் எழுங்கால் இடை நிலங்களில் அப்பரடிகளின் திருவடிச் சுவடு சிறிதும் பதியாத பாங்கமைந்தது.

ஆதலால், தவம் என்று தமிழ்ச் சான்றோர் கருதியது, உடற் பழக்கத்திற் கியைந்த தவச் செயல்களையல்ல. “தவமும் தவமுடையார்க் காகும்” என்ற வள்ளுவமுங்கூட, உடலாற் செய்யும் தவநெறிச் செயல், உள்ளத்தால் தவமுடையார்க்கே

யாகும் என்ற கருத்தில் கூறப்பட்டதாகும். அஃதன்றி,

"நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி”

(புறப்பொருள் வெண்பாமாலை)

என்று இலக்கணம் கூறினாரேனும், அது தமிழக வழக்கில் மிகுதியும் இல்லை. தவம் பயிலுதற் கேற்ற இடம், வீடன்று காடு என்ற கருத்து தமிழர்க்கில்லை. மனையகன்று வாழ்வோரே மாதவம் இயற்ற முடியும் என்ற நம்பிக்கை தமிழர்க்கில்லை. சிவபெருமான் தவநிறை செல்வி சங்கிலியா ரிடம் சுந்தரரை மணக்கத் துதுசென்று கேட்கும்பொழுது, சுந்தரரைச் சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்திக் கூறும் பொழுது,

"சால என்பால் அன்புடையான் மேருவரையின் மேம்பட்ட தவத்தான்"

(239)

என்று சேக்கிழார் அருளிச் செய்துள்ள அருமை அறிந்து இன்புறத்தக்கது. எந்த ஒன்றும் இன்புறுதல் என்ற அடிப்படையில் செய்தால் அவமாகவும், இன்புறுத்தல் என்ற அடிப்படையில் செய்தால் தவமாகவும் ஆகும். சுந்தரர், இறைவனைப் பொன் கேட்டுப் பெற்றார்; நறுமணங்கமழ் சாந்து கேட்டுப் பெற்றார்; நங்கையர் இருவரை அவன் மூலமே கேட்டுப் பெற்றார். ஆயினும், யோக நெறி நின்றார் என்றே மரபுவழி மாறாது கூறும், சேக்கிழாரும், "தென்னாவ லுரர்மன்னன் தேவர்பிரான்

திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும்
மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் மேவினார்"
(181)

என்றருளிச் செய்துள்ளார். ஆதலால், தவம் அடிப்படைத் தளமாகிய மனையறத்திலும் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிப்பதே பெரியபுராணம்.

திருநீலகண்ட நாயனார் அவர்தம் அருமை மனைவி யுடன் நிகழ்த்திய மனையறம் பேரறம் மட்டுமன்று; பெருமைக்குரிய பெருந் தவழுமாகும். கணவன் மனைவிய ரிடையே உளங் கலந்த உறவு. தேவை. அவர்களது உறவு முறையில் சிக்கல்கள் தோன்றலாம். ஆனால், அந்தச் சிக்கல்களை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர் நுழைவுக்கு இடமில்லை. அங்ங்ணம் அமையும் மனை வாழ்க்கையே பொற்புடைய புனித வாழ்க்கை! அதனா லன்றோ, வாழ்க்கைத் துணை நலம் வகுத்து வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(56)

என்று பேசியது. திருநீல கண்டரும் சரி, அவருடைய மனைவியாரும் சரி, அவர்களுக்கிடையே ஏற்பட்ட சிக்கலை முறிவுக்குக் காரணமாக்காமலும் உணர்ச்சி வழிப்பட்ட உறவுக்குத் தடையாக இல்லாமலும் அயலறியா வண்ணம் வாழ்ந்த முறை வியந்து பாராட்டுதற்குரியது.

வேளாண் பெருங்குடியில் தோன்றிய இளையான்குடி மாறனார் முறையாக மனையறம் நிகழ்த்தியவர்; குறைவறச் செல்வம் பெற்றவர்; செல்வத்தின் பயனை, அடியார் பெருமக்களுக்கு மண்டுகாதலொடு அமுது செய்வித்து அனுபவித்தவர். அவர்தம் அருமைப் பத்தினி இந்தப் பணியில் இளையான்குடி மாறனாருக்கு இணைபிரியாத் துணையென நின்றார். இளையான்குடிமாறனாரின் வளம் பெரியபுராணச் சொற்பொழிவுகள் 45 .

சுருங்கிற்று. ஆனால், அவர்மனம் சுருங்கவில்லை. நஞ்சனைய நல்குரவு வந்து பற்றியது. நல்குரவால் நடுக்கமுறுவர் பலர். ஆனால், நமது மாறனார் நடுக்கமுற்றாரில்லை. g)_(FH) t_6Fs)lf)e?Fáið) sós?" விற்றும், கடன்பட்டும் தாமெடுத்த தொண்டினைத் தொடர்ந்து செய்தார். ஒருநாள், மழையில் நனைந்த சிவனடியார் ஒருவர், நள்ளிரவில் நாயனார் வீடு வந்தார். நாயனார், அடியாரை வரவேற்று ஈரவுடைமாற்றி இருக்கச் செய்து, அவர்தம் முகம்பார்த்துப் பின் அருமை வாழ்க்கைத் துணைவியின் முகம்பார்த்து,


"தீர வேபசித்தார் செய்வதென்?"

(10)

என்றார். மாறனாருக்கேற்ற மனைவியானதால், தமது பட்டினி உணர்ந்தாரில்லை. அண்டர் நாயகனடியார்க்கு அமுது செய்வித்தல் வேண்டும். அதற்கேற்ற ஆலோசனையை அணங்கு, அண்ணல் மாறனாருக்கு எடுத்துக் கூறுகிறார். வாழ்க்கையின் துணைமட்டுமில்லாமல் வழி நடத்தவும் செய்கின்ற ஆற்றலிருந்தமையை அறிதல் வேண்டும். அன்று மாறனார் வயலில் விதை பாவப் பெற்றது அம்மையார் நினைவுக்கு வருகிறது. அதை அரித்துக் கொண்டுவந்தால் வறுத்துக் குற்றிச் சமைத்து உணவாக்கலாம் என்ற அறிவொடுபட்ட ஆலோசனையை உறுதியுடனும் துணிவுடனும் அம்மையார் அன்பொடு கூறுகிறார். வித்தடுதலை யாரும் விரும்பி ஏற்பதில்லை. வித்தடுவதால் முதலுக்கு இழப்பு: பின்னேயுண்டாம் ஆக்கத்திற்கும் பேரிழப்பு. ஆயினும், கேடும் ஆக்கமும் கெட்ட திருவிற் சிறந்த நங்கை இந்த உறுதியை உளமுற ஏற்றுக்கொண்டது, வியக்கத்தக்கதன்று. கணவர் கழனிக்குச் சென்று நெல் அரித்துக்கொண்டு வந்து கொடுத்ததை, வாயிலினின்று வாங்கி, வீட்டலகு விறகால் வறுத்துக் குற்றிச் சோறாக்கிக் கறியமுது சமைக்கக் கொல்லைப் புறத்திலிருந்த கீரையைக் கணவரைத் துரண்டிப் பறிக்கச்செய்து, ஒரு கீரையைக் கொண்டு பல்வகைக் கறியமைத்து விருந்தமைத்த மாறனார் மனைவியின் திறத்தினை என்னென்று கூறிவாழ்த்துவது! இங்ங்னம், சேக்கிழார் சிறந்த மனையறத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறார்.

பெரிய புராணத்தில் சமூகத் தகுதிப்பாடு

பெரிய புராணம் ஒரு புரட்சிக் காப்பியம்; சமுதாய நூல். சேக்கிழார் காலத்தில் தமிழகத்தில் தமிழினத்திற்கு உரிமையல்லாத சாதிவேற்றுமைகள் கால்கொண்டு விட்டன. சேக்கிழார் சாதிவேற்றுமைகளைக் கடிந்து ஒதுக்காமல் ஒன்றிலொன்று உளங்கலந்து உயர்வற உயர்ந்த ஒழுக்கத்தாற் கலக்கச்செய்து, சாதிவேற்றுன்மயை அகற்றுகிறார். பெரிய புராணத்தில் தமிழகத்தின் ப்ல்வேறு குலத்தைச் சார்ந்த அடியார்கள் பேசப்பெற்றுள்ள்னர். திருஞான சம்பந்தருக்கும் யாழ்ப்பாணருக்கும் இடையிலுண்டான உறவைப் பாராட்டிப் பாடுகின்றார். அந்தணரிற் சிறந்த அப்பூதியடி களுக்கு, அப்பரடிகள்பால் ஏற்பட்ட உறவை, இல்லை, பத்திமையைச் சேக்கிழார் பாடுவதே பாட்டு! ஆதிசைவ மரபினில் தோன்றி, அரசரிடத்தில் வளர்ந்து கணிகையர் குலத்துப் பரவையாரை அகத்திணைக் களவு முறையாற் காதல்மணம் செய்த, வேளாண்குடிமரபுச் சங்கிலியாரையும் அகத்திணைக் கற்பு முறையான் மணந்த சுந்தரர் வரலாற்றைச் சுந்தரத் தமிழில் சேக்கிழார் எடுத்துக்கூறிச் சாதிகுல வேற்றுமைகளை அகற்றும் அரிய பணியைச் செய்ததுபோல் செய்தவர் யார்? ஆதலால், . சேக்கிழாரின் பெரியபுராணமே சாதிகளைக் கடிந்தெழுந்த முதல் வரலாற்று நூல் தத்துவத்தால் மட்டுமன்று நடைமுறையில் சாதிவேற்றுமைகளை மறந்து ஒருகுல உணர்வோடு நின்றொழுகியவர் வரலாற்றையே சேக்கிழார் பாடியுள்ளார். சேக்கிழார்முன் மனுநீதிச்சோழனும் திருக்குறிப்புத் தொண்டரும் ஒருதன்மையராகக் காட்சியளிக்கப் பெற்று வாழ்த்தப்படுதலினும் மிக்க புரட்சி ஏது? 

அதுமட்டுமின்றிப் பெரியபுராணம், தொழில்காரண , அடியார்க்குரிய தகுதியை மரியாதையைத் தரமறுப்பதை மறுக்கிறது. இன்று, எங்கும் சமூகத் தகுதிப்பாடு (Social Status) பற்றிப் பேசப் பெறுகிறது. ஆனால், அதனை வழங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. சேக்கிழாரின் கலிக் கம்பநாயனார் இந்தச் சமூகத் தகுதிப்பாட்டினை உணர்ந் தவர்; வழங்கியவர். அங்ங்னம், வழங்கத் தடையாக இருந்த தம் மனைவியின் கையைத் தாமே தடிந்து தண்டித்தவர். கலிக்கம்பர் வீட்டில் முன்னர்ப் பணியாளாக இருந்த ஒருவர், பணியிலிருந்து விலகியபிறகு, சிவனடியாராக வாழ்க்கையைத் தொடங்கிக் கலிக்கம்பர் வீட்டுக்கு வருகிறார். கலிக்கம்பர், அடியார்களை அமுது செய்ய அழைத்துச் செல்வதற்குமுன், தம் மனைவி தண்ணிர் வார்க்கத் தாமே அடியார் திருப்பாதங்களைக் கழுவித் தூய்மைசெய்து அழைத்துச் செல்லுதல் வழக்கம். அங்ஙனம் ஒருநாள் அடியார்களின் திருப்பாதம் விளக்கிக் கொண்டிருந்தபோது முன்சொன்ன சிவனடியார் வந்துவிட்டார். கலிக்கம்பரின் மனைவிக்கு உயர்வுணர்ச்சி ஏற்பட்டுத் தங்கைகளால் தண்ணிர் வார்ப்பது தடைப்பட்டது. கலிக்கம்பர், மனைவியின் கரத்தைத் தடிந்து தாமே திருப்பாதங்களில் தண்ணிர் வார்த்துக் கழுவுகின்றார். ஆதலால், அவரவர் ஒழுக்கத்திற்கியைந்த சமூகத் தகுதிப்பாட்டைத் தொழில் முதலிய வேறுபாடுகள் காணாமல் வழங்க வேண்டும் என்பது சேக்கிழாரின் திருவுள்ளம். -

காடவர்கோமான் கட்டிய கற்றளிக் கோயிலிலும் திருநின்றவூர்ப் பூசலார் நாயனார் எடுத்த மனக்கோயில் அற்புதமானது-அண்டர் நாயகன் தங்குதற்குரியது என்று எடுத்துப் பாடுவதன் மூலம் சேக்கிழார் பதவி செல்வம் முதலியவற்றாலுள்ள வேற்றுமைகளை விலக்கிப் போற்றற்குரியது உளம் நிறை அருளொழுக்கமே என்று உறுதியாகக் கூறுகிறார்.

பெரியபுராணத்தில் பொருளாதாரத் தகுதிப்பாடு

செல்வம், எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். ஒரு சிலரே எடுத்துக்கொள்ளலாகாது. இதனைச் சேக்கிழார் நயம்பட எடுத்துரைக்கின்றார். குண்டையூர்க்கிழவர் வேண்டுகோளின்படி இறையளித்த நெல்மலையைப் பரவையார் விருப்பத்தை நிறைவேற்றச் சுந்தரர் வேண்டுகோளுக்கிணங்கிப் பூதத்தின் வாயிலாக ஆரூரில் நெல்மலை குவித்தான் கோளிலியப்பன். ஆரூர்த்தெருவில் மலையெனக் குவிந்த நெல்லை ஆரூரிலுள்ளார் அனைவரும் அவரவர் மனைக்கு முன்னுள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளும்படி பரவைநாச்சியார் பறையறைந்து கேட்டுக் கொண்டது, பொருளியற் புரட்சிதான்! இன்றும் இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள குறை, விநியோக முறையில் உள்ள தவறுதானே!சேக்கிழார் காட்டும் பரவை நாச்சியாரின் பெரும் பண்பு நமது நாட்டில் அனைவருக்கும் வந்து விட்டால் களவு குறையாதா? காவல் நீங்காதா? பகைமை மாறாதா? பண்பு வளராதா? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

பெரியபுராணத்தில் அரசியல்

பெரியபுராணம் அரசியல் நூலாகவும் விளங்குகிறது. அஃது அரசனின் நெறிமுறை பற்றியும் பேசுகிறது. சேக்கிழார் அநபாய சோழனின் பேரரசைப் பாராட்டிப் பாடியுள்ளார். அநபாய சோழனின் அரசு, பேரரசு என்பதை “வையம் பொதுக் கடிந்து” என்று கூறிப் புகழ்கிறார். வையம், அநபாய சோழனின் அரவணைப்பில் இனிதே உளது என்று பாடுகிறார். அநபாய சோழனின் கொற்றக்குடை, குடிமக்களுக்குக் குளிர் நிழல் தரும் குடையென்று வாழ்த்துவதன் மூலம், அரசு பேரரசாக, இனியதாகத் தண்ணளியுடையதாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றார்.

"நற்றமிழ் வரைப்பின் ஒங்கு நாம்புகழ்
திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந்
தினிது காக்கும்
கொற்றவன் அநபா யன்பொற் குடைநிழற்
குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற
விளம்ப லாமோ!"

-62. திருநாடு-35

என்பது சேக்கிழார் பாடல்.

மேலும், அரசின் நெறிமுறை பற்றி மனுநீதிச் சோழன் வரலாற்றில் விரித்துப் பேசுகிறார். அரசநீதி என்பது உயிர் வேறுபாடின்றி, ஒத்த நீதியே வழங்குவதாகும். அரசநீதி என்பது அனைத்துயிர்களையும் அனைத்துத் துன்புறாமற் காப்பதாகும். இதனை,

"மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?”

(36)

என்று சேக்கிழார் பாடுகிறார். இதுவே நீதியும் நியதியுமாகும். வளர்ந்த யுகம் என்று கருதத்தக்க இந்த நூற்றாண்டில் கூட ஒரே குற்றத்திற்கு ஏழைக்கொரு தண்டனை! செல்வர்க்கொரு தண்டனை! பிராணிகளைக கொன்ற யாருக்கும் இன்று மரண தண்டனை வழங்கும் சட்டமில்லை. மனிதனைக் கொல்லும் மனிதனுக்குரிய மரண தண்டனையைக் கூட நிறுத்த வேண்டுமென்ற கிளர்ச்சியிருந்து வருகிறது. ஆனால், சேக்கிழாரின் மனுநீதிச் சோழன் ஒரு பசுவின் கன்று இறப்பதற்கு-நேரிடையாகக் கூட அன்று-மகனின் தேரூர்ந்த  நிகழ்ச்சி துணையாக இருந்தது என்பதற்காகத் தம் அருமந்த மகனின் உயிரையே வழங்கிய நீதியின் சிறப்பை என்னென்போம்! தண்டனை வழங்குதலின் நோக்கமே ஒரிழப்பை ஈடு செய்வதற்குத்தான்! இறந்த பசுவின் கன்றுக்கு இனிய மைந்தனின் நல்லுயிர்! கன்றையிழந்து வருந்திய பசுவுக் கீடாகத் தன் மைந்தனை இழந்து தான் துன்புறுதல்! இந்தப் பெரிய புராண நியதி எங்கே? நம்முடைய வாழ்க்கை எங்கே?

ஒருவர் ஒன்றன் மீது உரிமை கொண்டாடுதல் அவ்வளவு எளிதன்று. அந்த உரிமையைச் சோழப் பேரரசால் ஊர்தோறும் திருக்கோயிலின்கண் அமைக்கப் பெற்ற பஞ்சாயத்தின் முன் சாட்சியங்களுடன் எடுத்துக் கூறிப் பஞ்சாயத்தின் தீர்ப்பின் மூலம் உரிமையடைய வேண்டும். இறைவனே, "சுந்தரர் தமது ஆள்” என்ற வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்க்கோயிலிலமைந்திருந்த பஞ்சாயத்தார் முன்னேயே எடுத்துக் கூறுகிறார். அந்த வழக்காடிய படலத்தைச் சேக்கிழார் பாடியிருப்பது அவருடைய அறநெறிச் சார்பான அமைச்சியலை நன்கு வெளிப்படுத்துகிறது. ஒர் உரிமையை நிலை நாட்டுதற்கு அடியிற் கண்டவாறு ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்றயலார் தங்கள், காட்சியில் வேண்டுமென்பது சேக்கிழாரின் கொள்கை

பெரியபுராணத்தில் சமயம்

பெரியபுராணம் ஒர் உயர்ந்த சமய நூல்; உலகப் பொதுச் சமயநூல். சமய நெறிகளின் பெயர்களும் வழிபடும் பொருளின் பெயரும்-பெறும் கோலமும் மாறுபட்டாலும் சமய நெறியின் அடிப்படை இயல்பு, மாறி விளங்க வழியில்லை. கடவுளை நம்புதல், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பே தவமாதல், திருத்தொண்டில் இன்பமார்தல் ஆகியவை அனைத்துலகச் சமயத்திற்கும் பொதுவான கொள்கை, இத்தகு சமய நெறியில் வாழ்ந்த, இல்லை, தவம் செய்த தவஞானச் செல்வர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவதால், இஃது உலகப் பொதுச் சமய நூலாகும். எனினும், சேக்கிழாரின் சிந்தைச் சார்பு சிவநெறியிலேயாம். சிவநெறியின் அடிப்படைக் கொள்கைகளைச் சேக்கிழார் விளக்கியே பெரியபுராணம் செய்துள்ளார்.

இதனைச் சாக்கிய நாயனார் வரலாற்றால் நாம் உணர முடிகிறது. சாக்கிய நாயனார், முன்னை நல்லூழின்மையின் காரணமாகச் சிவநெறியிற் பிறக்கவில்லை. ஆயினும், பின்னைப் பெருந்தவத்தால் சிவநெறியே மெய்ந்நெறியென்பதை உணர்ந்துவிடுகிறார். சிவநெறியின் சிறந்த கொள்கையுள் வினைகளைச் செய்கின்ற உயிர்கள் உண்டு; செய்வினையுண்டு; செய்வினையின் பயனுண்டு; அந்தப் பயனை உயிர்களுக்குக் கூட்டுவிக்கும் பரம்பொருளுமுண்டு. இந்த நான்கு வகையாக அமைந்து விளங்கும் மெய்ந்நெறியாகும் சிவநெறி என்பது சேக்கிழார் கருத்து. இதனைச் சாக்கிய நாயனார் வாயிலாகக் கூறுகிறார் சேக்கிழார்.

"செய்வினையும் செய்வானும் அதன்பயனும்
கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்சிவன்என் றருளாலே
உணர்ந்தறிந்தார்"

(5)

என்பது பெரியபுராணம். ஆதலால், சேக்கிழார் சமயப்பொது நோக்குடையராகத் திகழ்ந்தாலும் சித்தாந்தச் சிவநெறியில் நிலைத்த ஈடுபாடுடையவர்.

சமய நெறியிலும் சேக்கிழார், சடங்குகளை வெறுத்தவரல்லர். ஆனால், சடங்குகளே சமயம் என்ற கருத்துச்  சேக்கிழாருக்கு உடன்பாடுடையதன்று. இதனைக் கண்ணப்ப நாயனார் வரலாற்றில், சேக்கிழார் வெளிப்படுத்துகிறார். சிவகோசரியார் ஆகமச் சடங்கின் திருவுருவம் கண்ணப்பர் அன்பின் திருவுருவம், கண்ணப்பருடைய தூய அன்பில்தான் காளத்தியப்பன் ஈடுபடுகிறான். காளத்தியப்பன், கண்ணப்பரைக் காட்டி உண்மை வழிபாடு இதுவேயெனச் சிவகோசரியாரைத் தெருட்டுகின்றான்.

"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் அவனுடைய நிலைஇவ்வா றறிநீஎன் றருள்செய்தார்”

(157)

என்று சேக்கிழார் அந் நிகழ்ச்சியைப் பாடுகின்றார். ஆதலால், சேக்கிழாரின் சமயம் பத்திச் சமயமேயாகும்; தொண்டின் நெறியேயாகும். .

பெரியபுராணத்தில் மக்கள் தொண்டு

சேக்கிழார் அருளித் தந்துள்ள பெரியபுராணத்தில் பேசப்பெற்றுள்ள அனைத்து அடியார்களும் சிவஞானிகள்; கடவுளைக் கண்டு காதலாகிக் கசிந்து வழிபட்டவர்கள்; அந்த ஆராஇன்பத்தில் திளைத்தவர்கள். அவர்கள் கடவுளைக் கண்டு - பரம்பொருளுடன் உறவுகொண்டு சிவானுபவத்தில் திளைத்து வாழ்ந்தாலும், வாழும் இந்த மனித சமுதாயத்தை மறக்கவில்லை, மறக்க எண்ணவில்லை. நீரும் நிலனும்போல மனித சமுதாயத்தின் இன்பத்துன்ப உணர்வோடு பின்னிக் கிடந்தார்கள். அவர்களுக்குத் தற்சார்பான விழைவு இல்லை - விருப்பமில்லை. ஆனாலும், சமுதாயத்தின் இருதயத் துடிப்புக்களை அவர்கள் எதிரொலித்தார்கள். .  திருஞானசம்பந்தர் ஞானத்தின் திருவுரு எம்பெருமானை விரலாற் சுட்டிக் காட்டும் பெருமை பெற்றவர்; ஞானப்பால் அருந்தியவர்; யாதொரு துன்பச் சுவடும் அறியாதவர். ஆனாலும், திருமருகல் திருத்தலத்தில் பெண்ணுரிமைக் கடமைக் கற்பொழுக்கால் வலியக் கூடி வந்த காதலனை இழந்து அல்லற்பட்ட செட்டிப் பெண்ணின் துன்பத்தை அப்படியே, இல்லை! ஒரு மாற்றுக் கூடுதலாகவே திருஞானசம்பந்தர் பிரதிபலிப்பது அவருடைய சமூக உணர்வுக்கோர் எடுத்துக்காட்டு. அப்பெண்ணின் கணவனை எழுப்பிக்கொடுத்து அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட பின்புதான் திருக்கோயிலை நண்ணுகிறார் திருஞான சம்பந்தர்.

சுந்தரர், இறைவனாலேயே தடுத்தாட் கொள்ளப் பெற்றவர்; அழகுச் சொக்கனை அன்புத் தோழமையாகப் பெற்றவர். கூடியும் ஊடியும், ஏசியும் பேசியும் பெருமானோடு உறவுகொண்டவர். ஆயினும், இந்தச் சமுதாயத்தின் துன்ப உணர்ச்சிகளை ஏற்று, அவர் வருந்தியது போல யாரும் வருந்த வில்லை. ஆரூரர், அவிநாசிக்குச் செல்லுகிறார். ஆங்கு ஒரு வீட்டில் மங்கலஒலி கேட்கிறது! அதற்கு எதிர் வீட்டில் அழுகுரல் கேட்கிறது! அவிநாசிக்கு வந்த ஆரூரர், அவிநாசியப்பனைக் காணப்போகவில்லை. வாழ்வோருக்கே வாழ்த்துக் கூறும் இயல்பிற் சிக்கி மங்கலமுழக்கொலியுள்ள வீட்டுக்கும் போகவில்லை. தொழுதகைத் துன்பம் துடைப்பானின் தோழரல்லவா? அழுகுரல் கேட்ட வீட்டு முன்னேயே நின்றார். குலம் விளக்க வந்த விளக்கை-ஈன்று புறந்தந்த இனியமகனை, இழந்த பெற்றோர் வந்து வணங்கினர். அவர்தம் துன்பத்தைக் கண்டு நெஞ்சு நடுங்கினார்: அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார்; அவிநாசியப்பரை ஆற்றாமையோடு வேண்டினார்; மூவா முதல்வனை, முதலையுண்ட பாலனைத் தருமாறு முத்தமிழ் விரகர் பாடிப்பரவி வேண்டி நின்றார். பிறவாயாக்கைப் பெரியோன் கருணையால் பிள்ளையை மீட்டுப் பெற்றோரிடம் கொடுத்து அவர்தம் மகிழ்வுகண்டு அவிநாசியப்பர் அடியிணை போற்றச் சென்றார். இத்தகு, நடமாடும் ஞானத் திருவுருவங்கள் மனித சமுதாயத்தின்பால் காட்டிய பரிவு, நம்மனோர் வாழ்க்கையில் வேண்டாமா? இந்தப் பரிவுணர்ச்சி நம்மிடம் இல்லாமையின் காரணமாகத்தான், நம்முடைய சமூகம் இன்று நிராதரவாக-அனாதையாகக் கிடக்கிறது. சமூகத்தை அணைத்து, அவர்களுடைய உணர்ச்சிகளைப் பிரதிபலித்து வளர்த்துப் பாதுகாக்காத சமயம் காலப் போக்கில் வரலாற்றிலேதான் இடம்பெறும்; வையகத்து வாழ்க்கையில் இடம்பெறுதல் அரிது! இதனை நம்முடைய தலைவர்கள் திருவுள்ளம் பற்றவேண்டும் என்பது நமது பிரார்த்தனை!

திருக்கோயில் வழிபாடு

சேக்கிழார் பெருமான், திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர். அவரே முறையாகத் திருக்கோயில் வழிபாடு செய்யும் வழக்கமுடையவராக இருந்தார் என்பது, சேக்கிழார் புராணம் உணர்த்தும் உண்மை. திருநாகேச்சுரம் திருக்கோயிலில் முறையாக வழிபடும் வழக்கமுடைய சேக்கிழார், குன்றத்தூரிலும் அதுபோன்றதொரு திருக்கோயில் எடுப்பித்தார் என்று வரலாறு கூறுகிறது. திருஞான சம்பந்தரும், அப்பரடிகளும், மற்ற அடியார்களும் திருக்கோயிலில் வழிபட்ட முறைமையை உணர்ச்சி ததும்பச் சேக்கிழார் எடுத்துக் கூறுகின்ற முறை இப்பொழுது படித்தாலும் அந்தக் காட்சி நம் கண்முன்னே வருகிறது.

திருக்கோயில்களில் வழிவழித் தமிழினத்தைச் சேர்ந்த ஆதிசைவர்கள் நாள்வழி பாட்டைச் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமேனியில் எம்பெருமானைத் திருவோலக்கம் செய்தற்குரிய மூன்றுகால வழிபாட்டினை, ஆதிசைவர்களே செய்து வந்தனர். இதனைத் திருத்தொண்டத் தொகையும் உணர்த்துகிறது. சேக்கிழாரும் எடுத்து விளக்கியுள்ளார். கோயில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்குப் பூவும் நீருமிட்டு வழிபாடு செய்து கொள்ளுதலைச் சேக்கிழார் எடுத்துக்காட்டுகின்றார். அன்னை காவிரிப்பேராறு, அன்றலர்ந்த மலர்களை அள்ளிக்கொண்டுவந்து, கரையோரத்தின் பாலுள்ள கோயில்களில் ஒதுக்குகிறது. இதனைப் பார்த்த சேக்கிழார், திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு அடியார்கள் பூவும் நீரும் கொண்டு அருச்சிப்பது போலிருக்கிறது, என்று பாடுகிறார். ஆதலால், விரும்பும் அடியார்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை அருச்சிப்பது சேக்கிழாருக்கு உடன்பாடான செய்தி! அதனால்தான் கண்ணப்பர் வரலாற்றில் சேக்கிழார் நின்றுருகிப்பாடுகிறார். கண்ணப்பருடைய அன்பு வழிபாட்டில் சேக்கிழாருக்கு உடன்பாடும் ஈடுபாடும் இருந்தமையால்தான், அந்த வரலாற்றை அவ்வளவு உருக்கமாகப் பாடமுடிந்தது.

அடுத்து, திருக்கோயிலில் திருமுறைத் தமிழால் அருச்சிக்கும் முறையைச் சேக்கிழாரே நமக்கு நினைவூட்டுகிறார். சுந்தரர் வரலாற்றில் தூமறை பாடுவோனாகிய சிவபெருமான் "அருச்சனை பாட்டே யாகும்” என்று அழகுத்தமிழில் ஆரூரரைப் பாடவேண்டியதைச் சேக்கிழார் எடுத்து விளக்குகிறார். நமது குலம் செய்த மாதவத்தால் கிடைத்த தேவாரப் பாடல்களால் இறைவனைப் பாடுவதே அருச்சனை. தேவாரப் பாடல்களை ஒதி மலர்களை இடுதலே வழிபாடு. இதுவே சேக்கிழாரின் தெள்ளிய முடிபு. சேக்கிழார் காட்டிய செந்நெறியை நாம் அனைவரும் கடைப்பிடித் தொழுகவேண்டும். இது நமது கடமை. இதுவே நமக்குரிய நற்றவம்!

பெரியபுராணமும்-திருமுறைகளும்

சேக்கிழார் திருமுறைகளில் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவற்றை முறையாக அவர் ஒதியுமிருக்கிறார். சேக்கிழார், திருமுறைப் பாடல்களைச் சிறப்பாகத் தேவாரத்  திருமுறைப் பாடல்களைப் பயபத்தியுடன் ஒதித் தெளிந்திருக்கிறார். சமயாசாரியார் மூவரும் தேவாரங்களை அருளிச் செய்த சந்தர்ப்பங்களைச் சேக்கிழார் எடுத்துக் கூறும் பொழுது பக்தியுணர்வின் மெய்ப்பாட்டுடன் கூறுகிறார். நம்மை அந்தந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். மதுரையில் திருஞான சம்பந்தர் அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பாட்டுப் பன்னிரண்டுக்கும் சேக்கிழார் இருபத்துநான்கு திருப்பாட்டுக்களால் தரும் விளக்கம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!

சேக்கிழார் திருமுறைப்பாடல்களைத் திருவருள் வெளிப்பாடாகவே கருதினார். திருமுறை ஆசிரியர்களை நிறைமொழி மாந்தரென நினைந்து நினைந்து வாழ்த்துகிறார். அவர்கள் அருளிய பாடல்களை மறைமொழிகளாக - மந்திர மொழிகளாகச் சேக்கிழார் ஏத்திப்போற்றுகிறார். திருமுறைகள் நிகழ்த்திய அற்புதங்களைச் சேக்கிழார் எடுத்து விளக்குவதன்மூலம், திருமுறைகளை வேண்டுவ அனைத்தும் சாதிக்கவல்லன என்ற நம்பிக்கையை நமக்கு வழங்குகிறார். இறைவனைத் திருமுறைத் தமிழால் அருச்சித்து வழிபடுவதும், திருமுறைநெறியில் நின்று ஒழுகுவதும் சேக்கிழாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடப்பாடாகும்.

திருமுறைகள், திருவருளின்பத்தை மட்டுமே நல்குவன வல்ல; இந்த வையத்து வாழ்வையும் வளமாக்கும். வறுமையில் அல்லற் படுவோர், "இடரினும் தளரினும்” என்று தொடங்கும் பதிகத்தை முறையே யோதி முன்னுவ அனைத்தும் பெறலாம். நாளால், கோளால் நலிவுறுவோர் "வேயுறு தோளி பங்கன்” என்று தொடங்கும் பதிகத்தை நெஞ்சில் நிறையுணர்வுடன் ஒதினால் வெற்றி பெறலாம். முன்னைத் தீவினை வருத்த வருந்துவோர் "அவ்வினைக் கிவ்வினை" என்று தொடங்கும் திருப்பதிகத்தினை ஒதினால் வினைத் துன்பம் நீங்கி இன்புறுவர். உண்டு மகிழ முடியாமல் வயிற்றுத் தொல்லையால் வேதனைப்படுவோர், வாறு” என்று தொடங்கும் பதிகத்தைப் பல்காலும் பயில்வதன் மூலம் நோய் நீங்கி வாழலாம். உடற் காய்ச்சலால் ஊனுடல் வருந்துவோர் "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் பதிகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு பாங்குற ஓதினால் உய்தி பெறலாம். போகங்கள் பல பெற்றுத் துய்க்க வேண்டுமா? "பத்தூர் புக்கு இரந்துண்டு" என்று தொடங்கும் என்னும் பதிகத்தை நெஞ்சில் நினைந்துருகி ஒதிப்போகங்கள் பல பெற்றுத் துய்க்கலாம். பெரிய புராணம் திருமுறைகளுக்கு விளக்கம் காணவே எழுந்ததென்று சொன்னால் மிகையன்று.

பெரியபுராணத்தில் இலக்கிய இன்பம்

சேக்கிழார், தவத்திற் சிறந்த தவஞான முனிவர்களின் வரலாற்றைப் பாடினாலும் சிறந்த இலக்கிய இன்பம் பொதுளவும் பாடியுள்ளார். சிறு திகழ்ச்சிகளில் கூட மிக ஆழ்ந்த சமயத் தத்துவங்களை இனிய எளிய உவமைகளில் சேக்கிழார் விளக்கும் ஆற்றல் அவருக்கே உரியது. இளையான் குடிமாற நாயனார், சிவனடியார்க்கு அமுது செய்விக்க - கறி சமைக்கக் கொல்லைப் புறத்திற் சென்று கீரைதான் பிடுங்குகின்றார். இஃதொரு சாதாரணமான நிகழ்ச்சி. ஆயினும், சேக்கிழாரின் திருவருளில் தோய்ந்த சிந்தை இந்த நிகழ்ச்சியை அடியிற் கண்டவாறு பாடுகிறது. -

“குழிநிரம் பாதபுன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”.


இந்த வரிகளில் மண்டிக் கிடக்கும் தத்துவச் செறிவும் இலக்கிய இன்பமும் கற்று இன்புறத்தக்கது. சேக்கிழார், இளையான்குடி மாறனாரின் பாச நீக்க நிகழ்ச்சிக்கு உவமையாகச் சொல்வதால் அதற்கேற்றவாறு சொற்களைப் பெய்கிறார். "குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர்” என்றார்.  குழி நிரம்பாத புன்செய்ப் பயிர் எப்படிச் சிறிதாகவும், பறித்தற்கு எளிதாகவும் இருக்குமோ, அதுபோல இளையான் குடிமாறனாரின் பாசப்பசை மிகமிக எளியது; அதுவும் பிறப்பின் சார்பால் விளைந்தது; அடியார்க்கு அமுது செய்விக்கும் அசைவில் ஆசையால் உருவானது. ஒரு பயிரை வேருடன் பிடுங்க வேண்டுமானால் அந்தப் பயிர் வளர்ந்துள்ள நிலம் நனைக்கப் பெற்று மண் நெகிழ்ந்து அவ்வழி பயிருக்கும் நிலத்திற்கு முள்ள பிடிப்புத் தளர்ந்திருத்தல் அவசியம். இளையான்குடி மாறனாரின் மனம் அன்பினில் நனைந்து தொண்டு நெறியில் நெகிழ்ந்து மிச்ச சொச்சமில்லாமல் முற்றாகப் பாசப் பசை நீக்கத்துக்குத் தகுதியாக இருந்தது என்பதே உணரப்படுகிறது. பாச நீக்கத்திற்குரிய முயற்சிகள் ஒவ்வொன்றாகச் செய்தலென்பது இயலாது. முற்றாகப் பாசத்தை நீக்க முழுமுயற்சி செய்தலே சீரிய தவ வாழ்க்கை என்பதும் பெறப்படுகிறது.

அடுத்து, மிகவுயர்ந்த தத்துவங்களை - மிகத்தரமான இலக்கிய உத்தியில் பாடும் சேக்கிழார் இங்குமங்குமாக நாம் சிரித்து மகிழவும், பாடியுள்ளார். இயற்பகை நாயனார் வரலாற்றில் இயற்பகையாரின் மனைவியைக் கேட்கவந்த சிவபெருமான், தம் வேடம் மறைத்துத் தூர்த்த வேடம் கொண்டுவந்தார்.

"ஆய நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவார் உம்பர் நாய கிக்கும் தறிய வோபிரியா
நங்கைதா னறியாமையோ அறியோம் தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமும் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்."

(4)
இங்ஙனம் சிவபெருமான் தூர்த்த வேடம் கொண்டமையைச் சேக்கிழார், உடனுறையும் உமையறியா வண்ணம் தூர்த்த வேடம் கொண்டதாகக் கூறுகிறார். இதில் நகைச்சுவையும் இருக்கிறது; பெண்ணியலார் இயல்பும் வெளிப்படுகிறது.

அடுத்து, சுந்தரருக்கும் பரவையாருக்கும் ஏற்பட்ட பிணக்கைச் சமாதானம் செய்து வைக்கச் சிவபெருமான் தூது போகிறார். சிவபெருமானைத் தூது அனுப்பிவிட்டுச் சுந்தரர், காதல் மீக்கூரக் காத்து நிற்கின்றார். சிவபெருமான் பரவையாரைச் சந்தித்துச் சமாதானம் செய்து விட்டுத் திரும்பி வரும் நடையைச் சேக்கிழார் வாக்கில் படிக்கும் பொழுது, நம்மையறியாமல் சிவபெருமான்மீது இரக்கம் ஏற்படுகிறது! "ஐயோ, பாவம் !" என்று கருத வேண்டியதிருக்கிறது. "அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவெய்த மின்னிடையார்பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடுங் கங்கை ததும்பத் திருவாரூர் மன்னவனாராம் மறையவனார்பால் வந்துற்றார்” என்று சேக்கிழார் அருமையாகப் பாடுகிறார். ஆயினும், கிண்டிக் கிளறி வேக வைத்த சோறு சுவையுடையதாகி மகிழ்ச்சி தருதல் போல, அடியார்கள் உள்ளத்தில் அன்பினைக் கிண்டிக் கிளறி ஆரத் துய்த்து இறைவன் மகிழ்கின்றான். அந்தத் துய்ப்பே அடியார்களுக்கு அருளின் ஆக்கமாகிறது.

பெரியபுராணத்தைப் போற்றும் முறை

பெரியபுராணம், வாழ்ந்து வாகை சூடிய பிறவியின் பயனையடைந்த சான்றோர்களின் வரலாற்று நூலாகும். பெரியபுராணத்தில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழந்தவை. ஏன்? இன்றும் முயன்றால் நிகழக்கூடியவை. ஆனால் நம்முடைய சமய வாழ்க்கை ஊற்றெழுச்சி யுடையதாக இல்லை; உள்ளக் கிளர்ச்சியுடையதாக இல்லை. பொறிகளில் சமயத் தோற்றம் காணப்படுகிறதே தவிரப் புலன்களில் சமய ஒழுக்கம் இல்லை. இந்தக் குறை எங்கிருக்கிறது,  எங்கில்லை என்பதை நாம் பகுத்துக் காட்ட விரும்பவில்லை. இன்றைக்குப் பெரிய புராணம், நம்முடைய வாழ்க்கை வீழ்ச்சியினால் வியப்புறத்தக்க வெறும் அற்புதமாகத் தெரிகிறது. ஏன்? நாம் பெரிய புராணத்தை ஒதுகின்றோம்; எழுத்து, சொல், பொருளுணர்ச்சியோடு தான் ஒதுகின்றோம். பொருளின் பயனுணர்வு நம்மிடத்தில் இல்லையென்று கூறினால் அன்பு கூர்ந்து சினவாது பொறுத்தாற்றுமின் !

ஏழாம் நூற்றாண்டில் திருக்கோயில்களில் திருத் தொண்டுகளாக இருந்தவை-அடியார்களால் தொண்டுள்ளம் கொண்டு செய்யப் பெற்ற தொண்டுகள் அனைத்தும் இன்று தொழில்மயமாகி விட்டன. ஊதியத் தகராறில் முப்போதும் திருமேனி தீண்டுவார் பரம்பரையில் தோன்றியவர்கள் பூசனை செய்ய மறுக்கிறார்கள். எல்லாவற்றையும் பூசனையின் மூலம் பெற்றது போக, இன்று பூசிப்போரே பூவுலகோரைப் பின் நின்று பேரம்பேசி இரக்கின்றனர். நம்முடைய ஆன்மீக வீழ்ச்சி பயங்கரமானது. ஆரவாரம் மிக்க சடங்குகளே நடை பெறுகின்றன. அகனமர்ந்த காதல் மிக்க வழிபாடு அருகிப் போயிற்று. நம் அடியார்களும் இறைவனும் இதுதான் வாழ்க்கை நெறி என்று சுட்டியுணர்த்திய நெறியை, நாம் உளமாரப் பின்பற்றவில்லை. இன்று திருத்தொண்டு ஏது? அல்லது எது? திருத்தொண்டர் யார்? நாடு தழுவிய திருவருட் பேரியக்கம் நடந்த தமிழகத்தில் அந்தத் திருவருட் புனல் வற்றாது முற்றாது வளம் கொழிக்க வேண்டுமென்ற நினைப்பில் அமைந்த திருக்கோயில்கள், திருமடங்கள் தேவைக்கேற்றவாறு இயங்கவில்லை. ஆங்கெல்லாம் உயிர்ப்புள்ள இயக்கங்களைக் காணோம். முன்னோர் வரலாற்றைச் சேக்கிழார் நமக்கு எடுத்துத் தந்தது, படித்து மகிழ்வதற்கு மட்டுமன்று; வாழ்ந்து பயன்கொள்ளவுமாகும். தமிழகத்தின் சமய இயக்கம், நாயன்மார்கள் நிகழ்த்திய தொண்டுகளைத் தொடர்ந்து செய்திருக்குமானால் இன்றிருக்கும் அவலநிலை தினையளவுகூடத் தோன்றியிருக்காது.  அப்பரடிகள் காலத்தில், திருக்கோயிலில் திருவலகிடுதல் ஒப்பற்ற திருத்தொண்டாக இருந்தது. அப்பரடிகளே உழவாரத்தொண்டு செய்திருக்கிறார். ஏன்? தில்லைநகரில் திருவருட் சுற்றுத் திருவீதியையே தூய்மை செய்திருக்கிறார். இன்று திருக்கோயிலில் திருவலகு திருத்தொண்டாகச் செய்வோரை ஒரு தடவையேனும் உங்களால் பார்க்க முடியுமா? அவர்கள் அகநலமும் புறநலமும் கெட்டுத் திருவலகுப் பணியைத் தொண்டாகச் செய்யாமல் வயிற்றுப் பிழைப்பாகச் செய்து வருகிறார்கள். அநேகமாக இதே நிலையில்தான் மற்றைத் தொண்டுகளும் இருக்கின்றன. அடியார்களுக்குப்பிறகு, அவர்கள் செய்த தொண்டினை நாம் வழிவழிச் செய்யத் தவறிவிட்டோம். அந்தத் தொண்டின் நெறி ஒல்லும் வகையாலெல்லாம் உயிர்ப்பிக்கப் பெற வேண்டும். அடியார்கள் செய்த தொண்டினைச் செய்கின்ற இயக்கங்கள் பெருகி வளர வேண்டும். அந்த அடியார்களிலும் பலர், மனித உருவில் நடமாடியவர்களுக்குத்தான் தொண்டு செய்தார்கள். பின்பு தான் மனித உருவிலேயே கடவுள் வந்து அதை ஏற்றுக் கொண்டார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களிலும் எளியவர்களுக்கே தொண்டு செய்தனர். சேக்கிழாரடிகளின் பெரியபுராணத்தில் அடியார்களோடு உறவு கொள்ளச் சிவபெருமான் எழுந்தருளிய போதெல்லாம் பெரும்பாலும் மனித உருவில் வந்ததைத்தான் பாடுகின்றார். மனித உருவிலும் எளிய உருவமே படைத்துக் காட்டினார். இன்று எளியோருக்குச் சமய அமைப்பில் ஏற்ற இடமில்லை. அஃது உயர் சாதியினர் - உயர்செல்வத்தினரோடு "கூட்டுப் பேரம்” நடத்துகிறது; அல்லது கூட்டுத்தொழில் நடத்துகிறது! இவையெல்லாம் பெரிய புராணத்தைப் போற்றும் முறையல்ல. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும்; பத்திமையால் பலகாலும் கும்பிட வேண்டும். அதுவே பெரியபுராணத்தைப் போற்றும் முறை அல்லது சேக்கிழாரை வழிபடும் முறை.  கழகத்தின் பெருமையும்-வாழ்த்தும்

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம் ஒரு பதிப்புக்கழகம் மட்டுமன்று, பைந்தமிழ்ப் பாசறையாகும்; வணிகநோக்குடையது மட்டுமன்று, வண்மைத் தமிழ்வளர்க்கும் நோக்குடையதுமாகும். தமிழ்ப் பாசறை மட்டுமன்று தமிழினத்திற்கோர் அரணுமாகும். அரண்மட்டுமன்று. அருள் நெறிவளர்க்கும் திருவோலக்கமாகும். இக்கழகம், தமிழும் சிவமும்போல் தழைத்து வளர்ந்திருக்கிறது; பொன்னார் மேனியன் புண்ணியத்தால் பொன்விழாக் கண்டிருக்கிறது. கழகத்தின் இயற்கைக் காவலராகிய தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை செந்தமிழன்பர்; சித்தாந்தச் சமய நெறியில் ஊற்றங் கொண்டவர். பல்லாற்றானும் தொழில் திறன் மிக்கவர். இக்கழகம், பொன்விழாவைச் சேக்கிழார் விழாவாகக் கொண்டாடுகிறது. தொண்டில் வளர்ந்த கழகம், தொண்டர் சீர் பரவுவதில் வியப்பில்லை. சேக்கிழார் வாழ்த்தியது போல் கழகம் இக்காசினியில் நின்று நிலவிடுக!

"என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்!”

-12. வெள்ளானை-53

"சேக்கிழார் பெம்மான் திருவருளால் தோன்றிலரேல்
ஆக்கமிகு நன்னெறியும் அஞ்செழுத்தும்-நோக்குடைய
செந்தமிழ்வெண் ணீறும் திருமுறையும் சீரமைவும்
மைந்தரிலா வாழ்வாகும் மற்று.


திருச்சிற்றம்பலம்