குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/மங்கையர்க்கரசியார்
7
தமிழகம் வரலாற்றுப் புகழுடைய நாடாக விளங்கியது. தமிழகம் மொழி, கலை, இலக்கியம், சமயம் ஆகிய துறைகளில் செழித்து, வளர்ந்து விளங்கியது. தமிழகத்தை மூன்று பேரரசுகள் ஆண்டு வந்தன. அவை முறையே சேர, சோழ, பாண்டிய அரசுகள் என்ப. இந்தப் பேரரசுகளுக்கிடையில் சிற்றரசுகளும் இருந்து வந்தன. பொதுவாகப் பழந் தமிழகத்தின் வரலாறு சிறப்புடைய ஒன்றேயாம். தமிழக அரசுகள் மக்களின் தாய்மொழியாகிய தமிழை வளர்த்தன; கலை முதலியனவற்றையும் வளர்த்துப் பெருமைப்படுத்தின; சமயத்துறையில் நிறைந்த ஆர்வம் காட்டின; விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் எண்ணற்ற திருக்கோயில்கள் கண்டன; கல்லெல்லாம் கலையாக்கிப் பேசும் பொற்சித்திர மாக்கி இறைமையாக்கி அருள் நலம் காத்தன. திருக்கோயில்களைச் சமுதாய மையமாகக் கொண்டு மக்கள் நலப்பணிகளும் நடைபெற்று வந்தன.
கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும், கல்விபயில் கூடங்களாகவும், உடற்பிணி நீக்கும் மருத்துவச் சாலைகளாகவும் நீதி வழங்கும் முறை மன்றங்களாகவும், அற்றார்க்கு உதவும் அற நிலையங்களாகவும் தமிழகத் திருக்கோயில்கள் விளங்கின.
தமிழகத்தில் பண்டைக்காலத்தில் வழங்கிய சமயங்கள் இரண்டு. அவை முறையே சைவ, வைணவச் சமயங்கள் ஆகும். இவ்விரண்டு சமயங்களும் சான்றோர் வாழ்க்கையில் - முதிர்ந்த அறிவில் - அனுபவத்தில் - தத்துவத் தெளிவில் தோன்றியவை; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியவை; நல்வாழ்வுக்குத் துணை செய்பவை. இவ்விரண்டு சமய நெறிகளும் தமிழில் தோன்றி வளர்ந்தவை; தமிழால் வளர்ந்தவை. இச்சமயங்கள் தமிழை வளர்த்தும் பெருமை தேடிக்கொண்டன.
சைவம், தமிழ்நாட்டின் பழைமையான சமயம். சங்க கால இலக்கியங்களில் சைவசித்தாந்தத் தத்துவங்கள் ஊடுருவிக் கிடக்கின்றன. காப்பியங்களிலும் அப்படியே. பக்தி இலக்கிய காலமாகிய ஏழாம் நூற்றாண்டு முதல் நாயன் மார்களும், ஆழ்வார்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளும் தமிழில் பாடித் தமிழை வளர்த்தனர். *
தமிழர் சமயங்களாகிய சைவமும், வைணவமும் தமிழரின் வாழ்வியலில் முகிழ்த்த சமயங்கள். இச் சமயங்கள் தோன்றி வளர்ந்த தாயகம் தமிழகமே! இச்சமயங்களுக்குரிய மொழி தமிழேயாம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பினார்கள் என்றால் செந்தமிழின் பயனாகிய சிவநெறியையும் பரப்பினர் என்பது கருத்து. தமிழ்நாட்டின் சமயங்களைச் "செழுந்தமிழ் வழக்கு” என்று சேக்கிழார் புகழ்ந்து பேசுவார்.
தமிழில் சமய வாழ்வு, இயற்கையோடிசைந்தது; எளிதான்து. இதில் விரதங்களால் வருந்தும் செயல் முறைகள் இல்லை. புறச் சடங்குகளையே மையமாகக் கொள்ளாமல் நெஞ்சத்தை இடமாகக் கொள்வது.
"இமைப்பொழுதும் என்னெஞ்சில்
நீங்காதான்் தாள்வாழ்க’
என்றும்,
"நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்”
என்றும் வரும் திருமுறைகள் காண்க. திருக்கோயில் வழிபாடு. தமிழர் சமயங்களின் காரண காரியப் பயன்களாகும். அதே போழ்து அகநிலை வழிபாடும் வற்புறுத்தப் பெறுகிறது.
"உயிரா வணம்இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டிவாழ்தி”
என்ற அடிகளைக் கற்கவும்; இவ்வாறு உருவெழுதிப் பழகவும்.
தமிழ்ச் சமய வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி கலை முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. திருக்கோயில்கள் சிற்பக் கலையின் பெட்டகமாகும். ஆடல் வல்லான் திருமேனி தத்துவம், சிற்பம் மெய்ப்பொருள் தேர்வு ஆகியவற்றின் விளக்கமாகும். திருக்கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல் ஆகியனவற்றிற்குப் போதிய இடம் உண்டு. இறைவன் சந்நிதியில் திருப்பதிகம் விண்ணப் பித்தல் - பண்ணிசைப்பாடல் ஒதுதல் வழக்கு நடனம் ஆடுதல் ஆகியனவும் உண்டு. திருக்கோயில் அமைவினை,
"இன்னிசை விணையர் யாழின்ர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே”
(திருவாசகம்-திருப்பள்ளியெழுச்சி - 4)
என்ற பாடலில் காணலாம். நம்பியாரூரர்,
என்றார் இறைவனை!
தமிழர்தம் சமயவாழ்வில் ஆசைகளை நீக்குதல் உண்டு. ஆனால் துறத்தல் நியதியாக இல்லை. வளர்ச்சியில் துறவும் கூடும். தமிழர்தம் சமயங்கள் வாழ்க்கையை மதித்துப் போற்றின.
என்பது தேவாரம். தமிழர் சமயங்கள் பெண்களைப் பெருமைப்படுத்தின; மனையற வாழ்வுக்கு ஏற்றம் கொடுத்தன. இருபெரும் சமய நெறிகளின் கடவுளர்களும் மனையறம் வழாது நடத்தியவர்கள், நடந்துகின்றவர்கள் என்பதே தமிழர் சமயக் கொள்கை. இங்ங்ணம் செழித்து வளர்ந்த செந்தமிழையும் சிவநெறியையும் போற்றி வளர்த்த அரசுகளில் சோழ அரசும், பாண்டிய அரசும் என்றென்றும் நினைவிற்கொள்ள வேண்டிய அரசுகளாகும்.
சோழ அரசு, பேரரசாகப் புகழ்பெற்று விளங்கிய காலம் உண்டு. இராசராசன், இராசேந்திரன் ஆகிய அரசர்கள் பேரரசர்களாக விளங்கினர். இராசராசன் எடுத்த தஞ்சைப் பெரியகோயில் உலகப்புகழ் பெற்றது. அவன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயிலை எடுப்பித்தான்். அயல் வழக்கினர் மறைத்து அழிக்க நினைத்த தமிழ் மறைப் பாடல்களை திருமுறைகளை மீட்டுத் தந்தான்் இராசராச சோழன்.
இத்தகைய சோழப் பேரரசில் கீழப்பழையாறையைத் தலைநகராக்க் கொண்டு வாழ்ந்தவன் மணிமுடிச் சோழன். ஒருசில வரலாற்று ஆசிரியர்கள் கீழப்பழையாறை சோழ அரசர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாக இருந்தது என்று கூறுகின்றனர். மணிமுடிச் சோழன் ஆண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு. இந்தக் காலத்தில் சோழப் பேரரசு வலிமையுடையதாக இல்லை. சோழப் பேரரசின் உறையூர்ப் பகுதியைப் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் பிடித்துக் கொண்ட பின்னர் பாண்டியர்க்கும் சோழர்க்கும் இடையே நட்புறவு வளர்ந்ததன் பயனாக மணிமுடிச் சோழனின் மகள் மங்கையர்க்கரசியை நின்றசீர் நெடுமாறன் திருமணம் செய்து கொண்டான். சோழ மாதேவி, பாண்டிமாதேவியாகப் பாண்டி மண்டலம் வந்தாள். மங்கையர்க்கரசியின் கணவன் பாண்டியன் அப்போது அலை அலையாக வந்த அயல் வழக்குகளில் மயங்கினான்; செழுந்தமிழ் வழக்கின் மரபுகளை மறந்தான்். மங்கையர்க்கரசியார் மனம் பதறியது. வழி வழியாக வளர்ந்து வந்த வாழ்வியல் என்னாவது: சிந்தனை செய்தாள்; பாண்டியப் பேரரசின் அமைச்சர் குலச்சிறையாருடன் கலந்து ஆலோசனை செய்தாள். "ஞாலமுய்ய நாமுய்ய திருஞான சம்பந்தரை அழைக்க ஒருப்பட்டாள்.
திருஞானசம்பந்தரும் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். பாண்டிய அரசைச் சூழ்ச்சியால் கையகப் படுத்திய அயல்வழக்கினர் திருஞானசம்பந்தரை எதிர்க்கின்றனர். ஏன், அவர் தங்கியிருந்த திருமடத்திற்கே தீயிடுகின்றனர். விவாதங்கள் வளர்கின்றன. பாண்டியன் சூலைநோய்க்கு ஆளாகின்றான். பாண்டியனைச் சூலை நோயிலிருந்து மீட்டு, திருஞானசம்பந்தரின் மந்திரத் தன்மை நிறைந்த திருநீற்றுப் பூச்சு வெற்றிகொண்டது. அனல்வாதம் புனல்வாதம் என்றெல்லாம் தொடர்கின்றன. எல்லாவற்றிலும் திருஞான சம்பந்தரே வெற்றிகொள்கின்றார். பாண்டிய நாடுற்ற இடர் நீங்கியது. செந்தமிழ் பிழைத்தது. செந்தமிழின் பயனாகிய சிவநெறி விளக்கமுற்றது. திருநீறு பிழைத்தது. தமிழுலகம் மகிழ்ந்தது. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி தமிழக வரலாற்றைக் காப்பாற்றித் தந்த தெய்வம் ஆகிறாள். அதனால் சேக்கிழார்,
"மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே!"
என்று, பாராட்டிப் புகழ்ந்து போற்றுகின்றார். திருஞான சம்பந்தர் திருவாலவாய்ப் பதிக்கத்தில் மங்கையர்க்கரசி பாண்டிமாதேவியையும் அமைச்சர் குலச்சிறையாரையும் பாராட்டிப் பாடியுள்ளார்.
"பன்னலம் புணரும் பாண்டி மாதேவி
குலச்சிறை யெனும்இவர் பணியும்
அந்நலம் பெறுநீ ராலவாய் ஈசன்
திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமி ஜிவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவிற் றிருப்பவர் இனிதே'
-திருஞான சம்பந்தர்
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி வாழ்வால் மலர்ந்தது தமிழகம் இன்று நாம் தமிழராக வாழ்வது மங்கையர்க்கரசி அளித்த கொடையேயாம். இன்று பெண்கள் பெருமையோடு வாழ்வதற்கு மங்கையர்க்கரசியே வித்திட்டாள். மனையறம் விளங்கும் வீடுகள் மங்கையர்க்கரசியின் தவத்தின் பயனேயாம்! இன்று தமிழிசை பாடி மகிழும் வாய்ப்புக்கு அன்று வெற்றி பெற்றுத் தந்தது நமது குலதெய்வம் மங்கையர்க்கரசியே! மங்கையர்க்கரசியின் புகழ் போற்றுவோம்! பேணிக்காத்து மகிழ்வோம்!