குமண வள்ளல்/வெளிமானும் இளவெளிமானும்
5. வெளிமானும் இளவெளிமானும்
எப்போதும் ஒருவனையே அண்டி இரந்து பொருள் பெற்று வாழ்வது முறையாகுமா? உலகத்தில் வள்ளல் ஒருவன்தானா? எல்லோரும் குமணனைப் போலப் பெருவள்ளலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரளவு புலவர்களை ஆதரிக்கும் இயல்புடைய செல்வர்களும் குறுநில மன்னர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்துப் பழக்கம் செய்துகொண்டால் என்ன? என்ற எண்ணம் ஒரு நாள் பெருஞ்சித்திரனாருக்கு உண்டாயிற்று.
‘நம்மிடம் இருப்பது தமிழ், அவர்களிடம் இருப்பது செல்வம். அதை நமக்குக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நம் செல்வம் என்றும் குறை படாது. யார் தமிழ் நயம் தெரிந்து பழகுகிறார்களோ, யார் உள்ளங்கலந்து நட்புப் பூணுகிறார்களோ அத்தகையவர் சிலரைத் தெரிந்துகொண்டு அவர்களையும் பார்த்துப் பரிசில் பெறுவதில் தவறு இல்லை’ என்று அவருடைய எண்ணம் படர்ந்தது. அது செயலாவதற்கு முன், பெருஞ்சித்திரனார் தம்மோடு பழகும் புலவர்களை விசாரித்தார். பறவைகளுக்குப் பழம் உள்ள மரங்கள் இன்ன இடத்தில் இருக்கின்றன என்று தெரியும்; புலவர்களுக்கும் புரவலர்கள் உள்ள இடம் தெரியும். அவர் அப்படி விசாரிக்கையில் வெளிமான் என்ற குறுநில மன்னனைப்பற்றித் தெரிந்துகொண்டார். அவன் குமணனைப் போன்ற செல்வனல்லாவிட்டாலும் புலவர்களைப் போற்றி ஈயும் பண்புடையவன் என்று தெரிய வந்தது. அவன் ஊருக்குச் செல்லும் வழியையும் தெரிந்துகொண்டார்.
ஒரு நாள் பெருஞ்சித்திரனார் வெளிமானை நாடிப் புறப்பட்டார். அவனை அடைந்தபோது அவனும் மிக்க அன்புடன் வரவேற்ரான். குமணனுக்கு வேண்டியவர் அவர் என்பதை அவன் தெரிந்துகொண்டிருந்தான். அ“முதத்தைச் சுவைத்தவர்கள் பிறிதொன்றை நாட மாட்டார்கள். குமணனை நண்பனாகப் பெற்றவர்கள் வேறு இடத்துக்குப் போவதில்லை. நீங்கள் கருணை கூர்ந்து என்னிடம் வந்தீர்கள். இதனால் எனக்குத் தான் பெருமை” என்று பணிவோடு சொன்னன். குமணனைக் காட்டிலும் முதியவன் வெளிமான். அவனுடைய நல்லியல்புகளை அறிந்து அவனோடு புலவர் பழகினார்; பாடினார்; பரிசிலும் பெற்றார். புலவருடைய பழக்கம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதினான் வெளிமான். அவன் புலவருக்கு விடை கொடுத்து அனுப்பியபோது, ஒன்று சொல்ல விரும்புகிறேன். தங்களிடத்தில் எனக்கு இருக்கும் அன்பைத் தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அது ஒன்றையே கருதி இங்கே அடிக்கடி வந்து தங்களுடன் அளவளாவும் இன்பத்தை எனக்கு அளிக்க வேண்டும். நான் கொடுக்கும் சிறிய பொருளை நினைந்தால் தங்களுக்கு இங்கே வரத் தோன்றாது. இங்குள்ளவர்கள் யாவருமே தங்களிடம் அன்புடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. தமிழ் அருமை தெரியாத பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் சில சமயம் தங்கள் மனத்துக்கு உவப்பல்லாத காரியங்களைச் செய்யலாம். அவற்றையெல்லாம்
பொருட்படுத்தாமல் என்னுடைய அன்பைக் கருதித் தாங்கள் வரவேண்டும்” என்று கூறினான். புலவர் மீண்டும் வருவதாகச் சொல்லி வந்தார். மறுபடியும் ஒரு முறை போனார்.
இடையில் சில காலம் செல்லாமல் பின்பு ஒரு முறை சென்றபோது அவன் உலக வாழ்வை நீத்து விட்டான். இந்தச் செய்தியை அவர் கேள்வியுற்று மிக்க துயரத்தை அடைந்தார். அடிக்கடி வந்து பழகலாம் என்ற நினைவுடன் வந்தவர், விதி வேறு விதமாக முடிவு கட்டியதை எண்ணி எண்ணி இரங்கினார். புலவர் பலரைப் பாதுகாக்கும் இயல்புடையவன் வெளிமானென்பதை உணர்ந்தவர் பெருஞ்சித்திரனார். அப் புலவர்களெல்லாம் அவனைக் காணாமல், தம்மைப் பேணுவார் இன்றி வருந்துவார்களே என்பதை எண்ணித் துன்புற்றார். கண்ணீர்க் கடலிடைச் சுழன்று வருத்தப்படுவதைவிட இறந்து போவதே மேல் என்று அவர்கள் நினைத்தல் கூடும் என்ற எண்ணமும் வந்தது.[1]
வெளிமானுக்கு யாரேனும் மக்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறானென்றும், அவனே இப்போது நாட்டை ஆளுகிறானென்றும் கேள்வியுற்றார், அவனையாவது பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்தார்.
அப்படியே அரசன் மாளிகைக்குச் சென்று வெளிமான் தம்பியாகிய இளவெளிமானைக் காண முயன்றார். அங்கே இருந்தவர்கள் எளிதில் அவருக்கு வேண்டிய செய்திகளைச் சொல்லவில்லை. “இங்கே இருப்பவர்களிற் பலர் தமிழருமை அறியாதவர்கள்” என்று. முன்பு வெளிமான் சொன்னதை அவர் நினைத்துக் கொண்டார். மற்ற நாட்களாக இருந்தால் அவர் பேசாமல் திரும்பி வந்திருப்பார். வெளிமான் இறந்தான் என்ற துயரத்தைத் தாங்கிய அவர் அவன் தம்பியைக் கண்டு பேசி ஆறுதல் பெறலாம் என்று எண்ணியே நின்றார். கடைசியில் இளவெளிமானைக் கண்டார்.
“தங்கள் தமையனாரோடு பழகியவன் நான். அவருடைய வண்மையை நன்கு உணர்ந்திருக்கிறேன்.” என்று பேச்சைத் தொடங்கினார் பெருஞ்சித்திரனார்,
“இப்படித்தான் பல பேர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்” என்று கூறினான் இளவெளிமான்.
அப்படிச் சொன்னது அவனது அலட்சிய புத்தியைப் புலப்படுத்தியது. புலவர் அவன் குரலில் இருக்கும் அன்பற்ற தன்மையைத் தெரிந்துகொண்டார். ஆனாலும், ‘வந்தாயிற்று; பேசிவிட்டுப் போவோம்’ என்று மேலும் பேசினார்.
“அவருடைய வள்ளன்மையை அறிந்த புலவர் பலர் அவரை அடைந்து பரிசில் பெற்றார்கள். அவரைக் காணலாம் என்ற ஆசையோடு வந்தேன். தம்மை நாடிய புலவர்களெல்லாரும் பொலிவு அழியும்படியாக, புகழுடம்பை நிறுத்திவிட்டு அவர் போய்விட்டார். அவரை இழந்த துயரம் தங்களுக்குப் பொறுத்தற்கரியதாக இருக்கும்.”
“அதை நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்வது எப்படி? போகிறவர்கள் போனால், இருக்கிறவர்களும் உடன் போய்விடுவார்களா? அவரவர்களுக்கு வாழ்வு, சுகம் எல்லாம் இல்லையா?” என்ற சொற்கள் இளவெளிமானிடமிருந்து வந்தன.அவற்றில் அன்புப் பசை இல்லை; வருத்தமும் இல்லை. ‘ஏன் இவனிடம் வந்தோம்!’ என்று உள்ளுக்குள் வருந்தினார் புலவர்.
“அவரை அண்டிப் பரிசில் பெற்று வாழலாம் என்று புலவர்கள் இருந்தார்கள். அவர்களை அவர் அன்புடன் வரவேற்று உபசரித்தார். நான் வந்தபோது எத்தனை அன்பு காட்டினர் அடிக்கடி வந்து பார்க்கலாம் என்ற ஆசையோடு இருந்தேன். அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. சோறு உண்ணலாம் என்று அடுப்பில் வைத்த பானையில் நெருப்புப் பற்றியதுபோல அவருடைய மறைவுச் செய்தியைக் கேட்கும் துர்ப்பாக்கியம் எங்களுக்கு உண்டாகிவிட்டது. சிறிதும் அறம் இல்லாத கூற்றுவன் முறையற்ற காரியத்தைச் செய்து விட்டான்............”
புலவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இளவெளிமான் எழுந்தான். உள்ளே சென்றான் சிறிதளவு பொருளை ஒரு கிழியில் வைத்துக் கொணர்ந்தான். “இந்தாருங்கள்; இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். என் தமையனாரிடம் அன்புள்ளவர் என்று சொன்னீர்கள். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இதுதான் நான் அளிக்கக்கூடிய பரிசில்” என்று கொடுத்தான். புலவர் அதை வாங்கிப் பார்த்தார். கீழே வைத்தார். அவர் தலை நிமிர்ந்தது. வெளிமானுடைய பெருந்தன்மையையும் இவனுடைய சிறுமையையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
‘பரிசில் பெறுவதற்கு நாம் வந்ததாக எண்ணி இந்தச் சிறிய பொருளை நாய்க்கு இரை வீசுவதுபோல அன்பு இன்றிக் கொடுக்கிறானே!’ என்ற கோபம் அவருக்கு உண்டாயிற்று. அவனை நேரில் பார்த்துப் பேச விரும்பவில்லை. தம் நெஞ்சைப் பார்த்துப் பேசுபவரைப் போலச் சொல்லத் தொடங்கினார்.
“என் நெஞ்சமே பசித்திருந்த காலத்தில் இங்கே வந்து பாடினேன். நான் பாடிய பாட்டு அந்த வள்ளலுடைய காதில் விழுந்தது. அது இன்பமாக விளைந்தது; கொடையாக விளைந்தது. இனியும் விளையும் என்று நச்சியிருந்தேன். அந்த ஆசை பழுதாகிவிட்டது. அறம் இல்லாத கூற்றம் முறையல்லாததைச் செய்யத் துணிந்துவிட்டது. பெண்கள் வருந்தவும் பரிசிலர் புலம்பவும் அவ்வீரன் போய் விட்டான். அவன் உயிரைக் கொண்டு போன யமன் பிழைத்துப் போகட்டும் புலவர்கள் உலகில் வாழத் தான் போகிறார்கள். அவர்கள் புலியைப் போல மிடுக்கு உடையவர்கள். புலி களிற்றை அட்டு உண்ணும் வீரம் உடையது. களிறு கிடைக்காமற் போனால் எலியைப் பார்த்து அடிக்கும் சிறுமை அதற்குத் தெரியாது. நெஞ்சே! வா போகலாம். பள்ளம் உள்ள இடத்துக்குப் போகும் புனலைப்போல அன்பும் வண்மையும் உடைய இடத்துக்குப் போகலாம் வா” என்று அவர் சொல்லித் தம் கருத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டார்.[2] அதைக் கேட்ட இளவெளிமான் சிறிதாவது நாணத்தை அடையவில்லை. புலவர் கூறிய சொற்கள் அவன் உள்ளத்தைப் புண்படுத்தவில்லை. “நான் தந்த பரிசில் சிறிதென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போல் இருக்கிறது. இதுகூடக் கிடைக்காமல் வாடுகிறவர் பலர் இருக்கிறார்கள். இதைப் பெற்றுக் கொண்டு மிக்க மகிழ்ச்சியோடு செல்பவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் ஒரேமாதிரி கிடைக்கும் என்று எண்ணலாமா?அவ்வப்போது கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போகவேண்டியதுதான்” என்று அவன் சொன்னான்.
‘அட பாவி நீயும் வெளிமானுக்குத் தம்பியாகப் பிறந்தாயே!’ என்று புலவர் மனத்துக்குள் வைதார். அவருக்குத் துயரமும் சினமும் பொங்கின. ‘இவன் முன் வந்து நிற்கும்படி, போதாத காலம் நமக்கு வந்ததே!’ என்று இரங்கினாலும், இவனுக்குப் புத்தி கற்பிக்கவேண்டும் என்ற ஆத்திரமும் உண்டாயிற்று. மறுபடியும் நெஞ்சைப் பார்த்துச் சொல்வதாகப் பேசினார்; பாடினர். அந்த இழிகுணமுடையவனை விளித்துப் பேசக்கூட அவருக்கு மனம் வரவில்லை.
‘நெஞ்சமே! புறப்படு. போவோம், பருகுவது போன்ற ஆர்வம் உடையவர்களிடம் பழகியிருக்கிறோம். அத்தகைய வேட்கையின்றி, அருகிலே வந்து அன்பை எதிர்பார்த்து நிற்கும்போதும் அறியாதவரைப் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளத்தில் சிறிதும் அன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசிலை பெறும் சோம்பேறிகள் இல்லாமற் போகவில்லை; அப்படியும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நாம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லோம். வா என்று அன்போடு அழைத்து உபசரிப்பவர்களிடம் போவோம். வரிசையறிந்து பேணுபவர்களைத் தேர்ந்து செல்வோம். உலகம் பெரிது. புலவர்களைப் போற்றிப் பேணுகிறவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் அத்தகையவர்களுக்குப் பஞ்சம் உண்டாகவில்லை. சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை. சிங்கத்தைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டுவா, போவோம். இப்படி யெல்லாம் நடக்கிறதே என்று வருந்த வேண்டாம். தம்முடைய நிலை கண்டு சிறிதேனும் வருத்தமடையாதவன் முன் நின்று தம் மெலிவைக் காட்டிக் கொண்டு ஏங்கி நிற்பவர்களும் மனிதர்களா? தானே கனியாத பழத்தைத் தடிகொண்டா கனிய வைப்பார்கள்? அன்பில்லாதவர்களைச் சார்ந்து மனம் கலங்குபவர்களும் புலவர்களா ? நமக்கு அவர்களைப்பற்றிக் கவலை இல்லை. வா, போவோம்.”[3]
இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பிக்கூடப் பாராமற் புறப்பட்டுவிட்டார் புலவர். இளவெளிமான் அவர் செய்கை கண்டு திகைப்படைந்தான். ‘இரவலனுக்கு வந்த இறுமாப்பைப் பார்!’ என்று நினைத்தாலும், பெருஞ்சித்திரனாருடைய பேச்சும், அதில் இருந்த வீரமும் அவனுக்கு அச்சத்தை உண்டாக்கின. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
- “பெரிதே உலகம், பேணுநர் பலரே”[4]
என்று அவர் சொன்ன வார்த்தை அவன் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பெருஞ்சித்திரனார் தம் சினத்தைக் காட்டிவிட்டுப் புறப்பட்டுப் போனார். அவருக்குப் பல விதமான எண்ணங்கள் தோன்றின. ‘வேம்பும் மாவும் ஓர் இடத்திலே வளர்வதுபோல வெளிமானைப் பெற்ற வயிற்றிலே இவனும் தோன்றியிருக்கிறான். செல்வத்தைப் படைத்துப் பாதுகாத்து வாழ்வதுதான் வாழ்வு என்று இவன் நினைத்திருக்கிறான் போலும் புலவர்களுடைய அருமை தெரியாத விலங்காக அல்லவா இருக்கிறான்? பிச்சைக்காரனுக்குச் சொல்வதுபோல, பெருங்குடிப் பிறந்த மக்கள் சொல்ல அஞ்சும் வார்த்தைகளைச் சொல்கிறான். இவனுக்குப் புலவருடைய பெருமையையும் கொடுப்போருடைய பெருந்தன்மையையும் அறிவுறுத்த வேண்டும். இவன் அவற்றைத் தெரிந்து நாணிக் குலையவேண்டும்’ என்று அவர் யோசனை படர்ந்தது. ‘என்ன செய்தால் இவனுக்குப் புத்தி உண்டாகும்?’ என்று சிந்தித்தார். அவருடைய அகக் கண்முன் குமணன் நின்றான். ‘ஆம்! அந்தப் பெருமானைக் கொண்டே இதைச் சாதிக்கவேண்டும்’ என்று திட்டமிட்டார்.