III

கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந்தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள்; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார்மீது சாய்ந்துகொண்டிருப்பதை. "ஐயோ" என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, "அன்பே!" என்று கூறி, அவளை மீண்டும் தம்மீது சாய்த்துக்கொண்டார்.

"பாதகா! பாவி! மோசம் போனேனே! என்னமோ தின்னக் கொடுத்துவிட்டு, என்னை இக்கதிக்கு ஆளாக்கினாயே, நீ நாசமாப் போக " என்று வசைமொழியை வீசியபடி, கைகளைப் பிசைந்துகொண்டு, கலங்கினாள் குமரி. செட்டியார் முகத்திலே அச்சமோ, கவலையோ தோன்றவில்லை. பரிபூரணத் திருப்தி தாண்டவமாடிற்று.

"குமரி! கூச்சலிடாதே! உனக்குத்தான் தீமை அதனால். நடந்தது நடந்துவிட்டது" என்றார் அவர்.

"அட பாதகா! பதைக்காமல் துடிக்காமல் பேசுகிறாயே, ஒரு ஏழையின் வாழ்வை அழித்துவிட்டு. இதற்கா நீ பக்திமான் வேஷம் போட்டாய்? கோயில் கட்டினாய்? கதியற்ற பெண்களைக் கற்பழிக்கத்தானா, கோயில் கட்ட ஆரம்பித்தாய்? ஐயோ! நான் என்ன செய்வேன்! நீ கொடுத்த லேகியம், என் புத்தியைக் கெடுத்து, உன் மிருகத்தனத்துக்கு என்னைப் பலியாக்கி விட்டதே" என்று பதறினாள் குமரி.

"குமரி! நானும் இதுவரை இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டவனல்ல. யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார் என்னமோ விதிவசம் இப்படி நேரிட்டு விட்டது" என்றார் குழந்தைவேலர்.

"விதி! என்னைக் கெடுத்துவிட்டு.நிலை தவறச் செய்து என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டு, விதியின் மீதா பழி போடுகிறாய்! உன் மகளை, இப்படி ஒருவன் கெடுத்தால், நீ செய்துவிட்ட அக்ரமத்தை ஆண்டவனும் கேட்கமாட்டாரா? பாவி! கோயிலிலே, இந்த அக்ரமத்தை நடத்தினாயே, உனக்கு நல்ல கதி கிடைக்குமா?" என்று அழுதுகொண்டே கேட்டாள் குமரி.

"ஆண்டவன் கேட்பானேன்? இதோ, நான் கேட்கிறேன்" என்று ஒரு குரல் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுப் பார்க்க, அறை வாயிற்படியில் கோபமே உருவெடுத்து வந்ததுபோல, சொக்கன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணா! மோசம்போனேன்" என்று அலறித்துடித்துக்கொண்டு, அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள் குமரி.

"சீ ! நாயே! குலத்தைக்கெடுத்த கழுதே" என்று கூவி காலை உதறினான்; குமரி ஒருபக்கம் போய் வீழ்ந்தாள்.

"நடந்தது நடந்துவிட்டது! ஏனய்யா செட்டியாரே! அவ்வளவுதான் உனக்குச் சமாதானம் கூறக் தெரிந்தது? எவ்வளவு திமிர் இருந்தால், ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்துவிட்டு, ஏதோ கைதவறிக் கீழே உருண்டு விட்டதால் செம்பிலே இருந்த பால் கீழே கொட்டிவிட்டதற்குச் சமாதானம் சொல்வதுபோல, நடந்தது நடந்துவிட்டது என்று கூறத் துணிவு பிறக்கும் உனக்கு? என்னை வெளியூர் போகச்சொல்லி விட்டு, விடிவதற்குள், இவளை விபசாரியாக்கி விட்டாய். நடந்தது நடந்துவிட்டது ! நாயே! இனி நடக்க வேண்டியதைச் சொல்;" என்று செட்டியார் மீது பாய்ந்தான். அவர் அவன் காலில் விழுந்து, "அப்பா! நீ என்னை எது செய்தாலும் தகும். நான் செய்துவிட்ட அக்ரமத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தண்டிக்கலாம். காமாந்தகாரத்தால் நான் இந்த அந்நியாத்தைச் செய்து விட்டேன்," என்று புலம்பினார்.

"காமாந்தகாரம் ! அதை இந்த ஏழைப் பெண்ணிடம் காட்டவா, கோயில் ! ஊரெல்லாம் உன்னை உத்தமன் என்று புகழ்கிறது; பாவி, நீ என் குடும்பத்துக்குச் சனியனாக வந்தாயே நடந்தது நடந்து விட்டது என்றாயே! நினைத்துப் பாரடா பாதகா, நீ செய்த காரியத்தை. ஏமாளிப்பெண் ஒருத்தியை, ஏழையை. கூலிவேலை செய்ய வந்தவளைக் கற்பழித்திருக்கிறாய். நீ ஆயிரம் கோயில்கட்டி என்ன பிரயோஜனம்? உனக்குத் தாய், தங்கை, அக்கா, யாரும் கிடையாதா ? குமரி, எவ்வளவு களங்கமற்றவள், கொடியவனே! அவளை இக்கதிக்குக் கொண்டுவந்தாயே!" என்று சொக்கன் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டே, செட்டியாரைத் தாக்கினான்.

"சர்வேஸ்வரா! ஐயோ அப்பா! வேண்டாமடா. சொக்கா! நான் தாளமாட்டேண்டா, உயிர் போகிறதடா, உன் காலைக் குடும்பிடுகிறேனடா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்கிறேண்டா? அப்பா சொக்கா, நான் பாவிதான், என்னைக் கொல்லாதே என்று செட்டியார் கூவினார்.

"சொல்வதைச் செய்கிறாயா? ஆனால் கேள். குமரியைப் பலரறியக் கலியாணம் செய்துகொள்" என்று கர்ஜித்தான் சொக்கன்.

"கலியாணமா? ஐயோ: அடுக்காதே; என்றார் செட்டியார், கீழே வீழ்ந்துகிடந்த குமரியின் கூந்தலைப் பிடித்து அவளைத்தூக்கி நிறுத்தி, இது அடுக்குமா? இவளைக் கெடுத்துவிட்டு, பிறகு யார் தலையிலாவது கட்டுவது அடுக்குமா?" என்று சொக்கன் கேட்டான். குமரியின் கண்களிலே வழியும் நீரையும் கண்டார் செட்டியார்: இங்கே புனல், சொக்கனின் கண்களிலே அனல்; "ஆண்டவனே! நான் என்ன செய்வேன்?" என்று அழுகுரலுடன் கூறிக்கொண்டே தலையிலே அடித்துக்கொண்டார்.

"அக்ரமக்காரா! அடிக்கடி ஆண்டவனை ஏன் கூப்பிடுகிறாய்? அனாதைப் பெண்களை ஆலயத்திலே கற்பழிக்கும் உனக்கு ஆண்டவன் பெயரைக்கூடச் சொல்லத் தோன்றுகிறதா? இனி நடக்கவேண்டியதைச் சொல்" என்று சொக்கன் சீறினான்.

"அப்பா! என் பேச்சைக் கொஞ்சம் கேள்; நான் ஏதோ புத்தியில்லாமல் இக்காரியம் செய்துவிட்டேன். நான் குமரியைக் கைவிடுவதில்லை; கடைசிவரை காப்பாற்றுகிறேன்........."

“உன் கூத்தியாராகச் சொல்லுகிறாயா? என் எதிரிலே என் தங்கையை வைப்பாட்டியாக்கு என்று கேட்குமளவு உனக்குத் துணிவு பிறந்ததா?"

"வேறென்ன செய்வது, சொக்கா! நான் வைசிய குலம். ஊருக்கெல்லாம் ஜாதியாச்சாரத்தைப்பற்றிப் பேசுபவன், வேறு ஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டதற்காகச் சொந்த மகனையே வீட்டை விட்டுத் துரத்தியவன்......" "அதனால்........." "எங்கள் குலத்தவர் ஆச்சாரம் கெடக்கூடாதே! உலகம் என்னைப் பழிக்குமே, குடும்பமே இழிவாக்கப் படுமே!" "என் குடும்பத்திலே நீ செய்துவைத்த காரியத்துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!" "நான் வைசிய குலம்......." "நான் உப்பிரஜாதி........" "உப்பிரஜாதியில் பெண்கொள்ளும் வழக்கம், வைசிய குலத்தில் கிடையாதே. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம். எங்கள் குடும்பத்திலே ஜாதியைவிட்டு ஜாதியில் கலியாணம் செய்வதில்லையே."

"எங்கள் குலத்திலும் குடும்பத்திலும் காமப்பித்தம் பிடித்தவர்களுக்குப் பலியாவதற்காகப் பெண்களைப் பெற்றெடுக்கிறார்களா? என்ன திமிர் உனக்கு? உன்னிடம் அதிகம் பேசப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள், முடிவு சொல்லியாக வேண்டும்; இல்லையானால், உன்னையும் இந்தக் கள்ளியையும் கொன்றுவிட்டு, நானும் சாகவேண்டியதுதான். சொக்கன் சொன்னால் சொன்னதுதான்."

சொக்கன் குமரியை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான் புலி போல. செட்டியார் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கதறினார்.

***

இச்சம்பவம், ஜாடை மாடையாகக் கூலியாட்களுக்குத் தெரிந்துவிட்டது. கோபத்தால் சிவந்த கண்களுடன் சொக்கன் இருந்தது கண்டு, சகலருக்கும் பயம் பிடித்துக்கொண்டது. ஒரு வார்த்தை கேலி பேசினாலும் போதும், சொக்கன் கொன்றுவிடுவான் என்று அஞ்சினர். மீனா வேலைக்கே வரவில்லை, குமரிக்கோ காய்ச்சல். செட்டியாரோ, சாவு வரவில்லையே என்று தவித்தபடி இருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் சொக்கன்.

ஐந்தாம் நாள் அதிகாலையில் சொக்கன் திடுக்கிட்டுப் போனான். குமரியைக் காணாமல்; எங்கெங்கோ தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை; செட்டியாரிடம் சென்றான், "குமரி எங்கே?" என்று கேட்டான். "தெரியாதே" என்று குளறினார். 'கற்பழித்ததுமன்றிக் கொலையும் செய்துவிட்டாயா? குமரியை எந்தக் குளத்திலே தள்ளிவிட்டாய்? சொல். உன்னை விட மாட்டேன். பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்" என்று ஆத்திரமாகப் பேசிச் செட்டியாரின் கழுத்தை நெரிக்கலானான் சொக்கன். செட்டியார், சிவனாணையாக எனக்கொன்றும் தெரியாதே. நான் இன்றுதான், அவளைக் கலியாணம் செய்துகொள்வது. ஜாதி பேதத்தைப்பற்றிக் கவலை இல்லை என்று தீர்மானித்தேன்" என்று கூறிக் கதறினார். செட்டியாரை விட்டுவிட்டு, சொக்கன் ஓடினான் வெளியே, உலகிலே எந்தக் கோடியிலிருந்தாலும் குமரியைக் கண்டுபிடித்துவிடுவது என்ற உறுதியுடன்.

***

சொக்கனுடைய சுபாவம் நன்கு தெரியும் குமரிக்கு. ஆகவே, எங்காவது ஓடிவிடவேண்டும், அப்போதுதான் செட்டியார் தப்புவார் என்று எண்ணிய குமரி, இரவு நடுநிசிக்குப் பிறகு, சொக்கனுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாள். செட்டியார் தன்னைக் கலியாணம் செய்துகொள்வதென்பது முடியாத காரியம் என்பது அவள் எண்ணம். பொழுது விடிவதற்குள், இரண்டோர் கிராமங்களைத் தாண்டிவிட்டாள். பாதையிலே நடந்தால் யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, வயலோரம், ஒற்றை அடிப் பாதை,கொடிவழி இவைகளாகப் பார்த்து நடந்து, மறுதினம் இரவு ஒரு பெரிய கிராமம் போய்ச் சேர்ந்தாள். பசியால் களைத்துக் கீழே வீழ்ந்தாள். அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட கிராமத்தானொருவன், அவளுக்குக் கஞ்சி கொடுத்து, 'யார், என்ன' என்று விசாரித்தான். "ஓடிவந்து விட்டேன்— குடும்பச் சண்டை" என்றாள் குமரி, "தாலி இல்லையே" என்று அவன் கேட்டான். "கட்ட வில்லை" என்று குமரி கூறிவிட்டு அழுதாள்.

"அழாதே பெண்ணே, இந்தப் புத்தி முதலிலேயே இருக்கவேண்டும். போனது போகட்டும். என் வீட்டுக்கு வா; அங்கே ஊருக்கு உபகாரம் செய்யும் உத்தமர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் நியாயம் கேட்போம் வா" என்று ஆறுதல் கூறிக் குமரியை அவன் அழைத்துச் சென்றான். குமரிக்கு அவன் பேச்சும் ஒருவிதமான லேகியமோ, என்று பயமாகத்தான் இருந்தது. அவன் குறிப்பாக அதை உணர்ந்து "நான் உன் தகப்பன்போல, பயப்படாமல் வா" என்று தைரியம் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் வீட்டுத் திண்ணையிலும், மேடையிலும் கிராமத்து மக்கள் ஐம்பது அறுபது பேருக்குக் கூடியிருந்தார்கள். அவர்களிடம் அன்புடன் பழனி பேசிக்கொண்டிருந்தான்.

"ஐயாவுக்குத்தானே சொல்வது. உலகத்திலே நடக்கிற அநீதிகளை எல்லாம் சொல்லிவாரிங்களே. இதோ இந்தக் கொழந்தை சொல்ற அன்யாயத்தைக் கேளுங்க. கேட்டுவிட்டு ஒரு வழி சொல்லுங்க" என்று கிராமத்தான் பழனியிடம் கூறினான். பலபேர் எதிரிலே தன் கதையைக் கூற, அவள் கூச்சமடைவது தெரிந்த பழனி, கூட்டத்தைக் கலைந்துபோகச் சொல்லிவிட்டு. குமரியின் சேதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு திகைப்படைந்தான். "அம்மா,நீ எனக்குச் சிற்றன்னை என்று பழனி சொல்லக்கேட்டு, மெய்சிலிர்த்தது குமரிக்கு. "வேடிக்கை அல்ல, அவர் என் தகப்பனார்தான்" என்றான் பழனி. "நீங்கதானே யாரோ பெண்ணுடன்................" என்று கேட்டாள் குமரி "ஓடிவிட்டேன்". என்மனைவி சேரிப் புறம் போயிருக்கிறாள், வந்துவிடுவாள். நீ கவலைப் படாதே. நான் உன்பொருட்டு என் தகப்பனாரிடம் சென்று வாதாடத் தீர்மானித்துவிட்டேன். காதல் என்பது மகா பாதகம், ஜாதிக் கட்டுப்பாடே பெரிது என்று சொல்லிவந்தவர், தனக்கே ஒரு காலத்தில் 'காதல்' ஏற்படக்கூடும் என்று எண்ணியிருக்க மாட்டார். இதமாகச் சொன்னால், எல்லாம் நன்மையாகவே முடியும். நீ சோகிக்காதே, தைரியமாக இரு' என்று கூறினான்.

         *                    *                   *

மறுதினம், பழனி தன் மனைவி நாகவல்லியுடன் குமரியையும், கிராமப் பெரியவர்கள் பத்துப்பேரையும் அழைத்துக்கொண்டு, மறையூர் சென்று, தந்தையைச் சந்தித்தான். வெட்கம், துக்கம், பயம் என்னும் பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட குழந்தைவேல் செட்டியாரால் பழனியிடம் பேசவும் முடியவில்லை.

"பழனி! எனக்கு, என்ன சொல்வதென்றே புரியவில்லை. உன்னை நான் கொடுமைப் படுத்தினேன், குமரியைக் கெடுத்தேன், நான் எவ்வளவு தண்டனைக்கும் தயாராக வேண்டியவன். அவ்வளவுதான் பேச முடியும் என்னால்" என்றார். பழனி தகப்பனாரைச் சமாதானப் படுத்திவிட்டு, சொக்கனைக் கண்டுபிடித்து வருமாறு சிலரை அனுப்பிவிட்டு. தந்தையின் கலியாணத்துக்கான ஏற்பாடுகளைத் துவக்கினான். ஜாதியைப் பற்றிய பேச்சையே, செட்டியார் எடுக்கவில்லை. குமரிக்கு, ஏதோ ஒரு கனவு உலகில் இருப்பது போலத் தோன்றிற்று.

***

மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். வைசிய குல திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரஜாதிப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்ய க்ஷேத்திரத்தில் நடப்பதா?" என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறையூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று ஜாதி குலம் என்பதெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான், கலகம் கல்லடி இவைகளைப் பொருட்படுத்தாமல். ஆதார பூர்வமான அவனுடைய பிரசங்கத்தைக் கேட்டு, பெரும்பாலான மக்கள், அவனுக்கு ஆதரவுதர முன்வந்தனர். வைதிகர்கள் பயந்துபோயினர், ஜனசக்தி, பழனிபக்கம் குவிவது கண்டு. "இதுபோன்ற இனிமையான அறிவுக்கு விருந்தான பிரசங்கத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. உன்னை மகனாகப்பெற்ற நான் உண்மையிலேயே பாக்கியசாலி " என்று கூறிப் பூரித்தார், குழந்தைவேல் செட்டியார். தாழையூர் சத்சங்கத்தின் தூதர் ஒருவர், மறையூர் வந்துசேர்ந்து செட்டியாரைச் சந்தித்து, அவருடைய செயலைத் தடுக்க முயற்சித்தார். செட்டியாரோ, பழனி பிரசங்கத்திலே கூறின வாதங்களை வீசி, அந்த வைதிகரை விரட்டினார். வெகுண்ட வைதிகர்கள், கோயிலை இடிப்போம் என்று ஆர்ப்பரித்தனர் கூலிமக்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கலப்புமணம் செய்துகொள்ளச் சம்மதித்த செட்டியாருக்குப் பட்டாளமானது கண்டு, கோபம் கொண்டு, ஓர் இரவு அவர்கள் வசித்த குடிசைகளுக்கு தீயிட்டனர். குய்யோ முறையோ என்று கூவி, மக்கள் ஓடிவந்தனர்.எங்கும் தீ! பசு, கன்று, வெந்தன. பாண்டம் பழஞ்சாமான் தீய்ந்தன. பழனியும் அவன் நண்பர்களும், தீ விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி வீடு வாசல் இழந்தவர்களனைவரையும், அரைகுறையாக இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, இனி அங்கேயே இருக்கலாம் என்று கூறினர்.

***

கலியாணம் சிறப்பாக நடைபெற்றது. சொக்கன் சந்தோஷத்தால் மெய்மறந்தான். குமரிக்கு நடப்பது உண்மையா கனவா, என்று அடிக்கடி சந்தேகமே வந்தது. மறையூர் வைதிகர்கள் அன்று "துக்கதினம்" கொண்டாடினர்.

***

நாகவல்லி குமரிக்கு ஆசிரியையானாள். குமரியின் மனம், மொட்டு மலர்வதுபோல ஆகிவிட்டது. கோயில் வேலை நின்று இருந்தது. "என்ன செய்வது இனி?" என்று பழனியைச் செட்டியார் யோசனை கேட்டார். "என்ன இருக்கிறது செய்ய?" என்று பழனி கேட்டான். "ஆலயத் திருப்பணி அறைகுரையாகவே இருக்கிறதே"; என்று செட்டியார் சொன்னார். "கட்டடம் அரைகுறையாக இருக்கிறது; ஆனால் ஆண்டவன் இங்கே கோயில்கொண்டுவிட்டார். ஏழைகளின் இல்லமாக இந்த இடம் ஆக்கப்பட்டபோதே இங்கு இறைவன், அபிஷேகமின்றி, ஆராதனையின்றி, வேதபாராயணமின்றி, தானாகச் சந்தோஷத்துடன் வந்து விட்டார்" என்றன் பழனி. மகனைக் கட்டி அணைத்துக்கொண்டு, "உன் அறிவே அறிவு! இப்படிப்பட்ட உத்தமனை நான், ஊரிலே உலவும் சில வைதிக உலுத்தர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இம்சித்தேன். நற்குணம் படைத்த நாகவல்லியைத் துன்புறச் செய்தேன்." என்று உருக்கமாகச் செட்டியார் பேசினார்.

"அப்பா! தாங்கள் தீர்மானித்தபடி சொத்து முழுவதும் கோயில் காரியத்துக்கே செலவிடப்பட வேண்டியதுதான். ஆலயம் கட்டும் வேலையும் தொடர்ந்து நடத்தவேண்டியதுதான்.... ..." என்று பழனி கூறிக்கொண்டே இருக்கையில், குழந்தைவேலர் குறுக்கிட்டு, "நம் சொத்தைப் பாழாக்கிக் கோயில் கட்டி, குலம் ஜாதி பேசி சமூகத்தைக் குலைத்துவரும் வைதிகர்களிடம் சொடுப்பதா?" என்று கோபத்துடன் கேட்டார். குழந்தைவேலர், சுயமரியாதை இயக்க வக்கீலானது கண்டு, பழனி களித்தான்.

"ஆலயம் கட்டவேண்டியதுதான் அப்பா. ஆனால் அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரக்கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடகிவிட்டது, அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி. முடிந்தபிறகு, அதனை வௌவால் வாழுமிட மாக்கிவிடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கிவிடலாம். நாகா, வேறு பள்ளிக்கூடம் தேடவேண்டியதில்லை. பிராகாரம், சிறு சிறு விடுதிகளாட்டும், பட்டாளிமக்கள் குடிஇருக்க, குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும். இங்கு அபிஷேகமும் உற்சவமும் நடப்பதற்குப் பதில் அன்பும் அறிவும் பரப்பும் பிரசார ஸ்தாபனம் அமைப்போம். அப்பா! தாங்கள் குமாரக்கோட்டம் கட்ட ஆரம்பித்தீர்கள். அது குமரிக்கோட்டமாக மாறி விட்டது. ஜாதிபேதம் ஒழிந்த இடமாக, காதல் வாழ்க்கைக் கூடமாக, மாறுகிறது. இதுதான் இனி, இந்த மாவட்ட சுயமரியாதைச் சங்க கட்டடம்; நமது 'பிரசார இலாக்கா' என்றான்.

"பேஷ்! பழனி! அற்புதமான யோசனை. ஆலயம் அமைத்து அதிலே, வைதிகர்கள் ஊர்ச் சொத்தை விரயம் செய்வதற்கு வழிசெய்யும் வழக்கத்தை நாம் ஒழித்து விடுவோம், முதலில். இது அறிவாலயமாக, அன்பு ஆலயமாக மாறிவிட்டது என்று செட்டியார் சந்தோஷத்துடன் கூறினார்.

"குமரக்கோட்டம் அமைத்தால், இங்கு கொட்டு முழக்கம், குருக்களின் தர்பாரும், இருந்திருக்குமே யொழியப் பலன் ஏதும் இராது. குமரியின் அன்புக்கு கட்டுப்பட்டு, ஜாதியை குலத்தைத் தள்ளிவிட்ட தாங்கள், இப்போது குமரிக்கோட்டம் அமைத்து விட்டீர். நமது குலத்தவர் இதுவரை எத்தனையோ கோட்டங்கள் அமைத்தனர். ஒருவரேனும், இதுபோன்ற குமரிக் கோட்டம் கட்டினதில்லை. அந்தப் பெருமை தங்களுக்கே கிடைத்தது" என்றான் பழனி. "பழனி ! என் கண்களைத் திறத்தவன் நீ," என்று கனிவுடன் கூறினார் செட்டியார்.

வேறொர் புறத்திலே, நாகவல்லி குமரியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே "பலே பேர்வழி நீ குமரி. உன்பெயரால் கோயிலே கட்டுகிறார்கள் பாரடி" என்று கேலிசெய்து கொண்டிருந்தாள்.

"அவர்கள் சொல்வது தவறு அம்மா! இதற்குப் பெயர் பழனி ஆண்டவர் கோயில் என்று இருக்க வேண்டும்" என்று சாமர்த்தியமாகப் பதிலுரைத்தாள் குமரி.

"அப்படிப் பார்க்கப்போனால், அதுகூடப் பொருந்தாது, 'லேகிய மண்டபம்'; என்ற பெயர்தான் ரொம்பப் பொருத்தம்" என்று கூறிவிட்டு ஓடினாள் நாகவல்லி. அவளைத் துரத்திக்கொண்டு குமரி ஓடினாள். தந்தையும் மகனும் அந்தக் காட்சியைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்தனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=குமரிக்கோட்டம்/3&oldid=1637000" இலிருந்து மீள்விக்கப்பட்டது