குமரியின் மூக்குத்தி/அவள் குறை



அவள் குறை

1

"உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால் கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!” என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி.

"ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. ஏதோ நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப் படலாமே என்றுதான். நாய்க்குட்டி மாதிரி உழைக்கிறான். இந்தக் காலத்தில் எசமான விசுவாசத்தோடு வேலை செய்கிறவன் எவன் இருக்கிறான்?” என்றார் ராஜாராமன்.

வேலுவுக்குக் கோடம்பாக்கத்திலே கல்யாணம். அது நன்றாக முடியவேண்டுமே என்று அவருக்குக் கவலை. சென்னையில் ஒரு கண்ணாடிக் கடை வைத்திருந்தார் அவர். மயிலாப்பூரில் அவருக்கு வீடு இருந்தது. வியாபாரி என்றாலும் அவர் தாராள மனசு உடையவர்.

வீட்டில் இருந்தபடியே டெலிபோன் மூலம் கடையைக் கவனித்துக் கொள்வார். அங்கே நிர்வாகம் செய்யும் ஊழியரோ, மற்றவர்களோ யாரானாலும் அவரிடத்தில் அன்போடு பழகினர்கள். மொத்த வியாபாரி. நல்ல முகராசி உள்ளவர். வருகிற வாடிக்கைக்காரர்களிடத்திலும் வேலைக் காரர்களிடத்திலும் அன்பு காட்டி உபசாரம் செய்வார்.

ஒருகணம் சும்மா இருக்க மாட்டார். எதாவது செய்து கொண்டே இருப்பார். எதையும் திருத்தமாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும்.

வீட்டில் தச்சன் வந்து ஏதோ சில்லறை வேலை செய்தான். அடுத்த மாதம் தச்சு வேலைக்குரிய சாமான்களை வாங்கிவிட்டார். தாமே மரவேலையைச் செய்யலானார். கண்ணினால் கண்டதைக் கையினால் செய்துவிடுவார்.

அவர் வீட்டில் தினமும் விருந்துதான். அவர் முருக பக்தர். 'முருகா' என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடுவார். அந்தப் பஜனை, இந்தச் சபை, இந்தக் கோயில் என்று தினந்தோறும் அவரிடம் வந்து நோட்டை நீட்டுகிறவர்களுக்கு இல்லை எண்ணாமல் ஐந்தோ பத்தோ கொடுத்து அனுப்புவார்.

அவர் வீட்டில் அடைவாகச் சமையற்காரன் யாரும் நிலைப்பதில்லை. மற்ற வேலைக்காரர்களிடம் அன்பாகப் பழகும் அவரிடம் சமையற்காரன் நிலைக்கும் ராசிமாத்திரம் இல்லை. அதற்கு இரண்டு காரணம்: ஒன்று அவர் வீட்டுக்கு யார் எப்போது வருவார் என்று தெரியாது. ராத்திரி ஒன்பது மணிக்கு ஒரு சாமியார் வருவார். அவருடன் நாலு அடியார்கள் வருவார்கள். எல்லோரும் சேர்ந்து பன்னிரண்டு மணிவரையில் திருப்புகழ் பாடுவார்கள். அதற்கு மேல் அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கவேண்டும். பிரசாதம் என்றால் சுண்டல் அல்ல. புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ததியோதனம் எல்லாம் வக்கணையாக இருக்கவேண்டும்.

மற்றொன்று : சாப்பாட்டு விஷயத்தில் நொட்டைச் சொல் சொல்வதற்குத் துரை அஞ்சமாட்டார். "இதில் உப்பு இல்லை; இதில் காரம் இல்லை; உங்கள் தாத்தா வீட்டுச் சரக்கோ? இன்னும் கொஞ்சம் தாராளமாக நெய் விடக்கூடாது?" என்று இரைவார். இந்த இரண்டு காரணங்களாலும் சமையற்காரன் சலித்துப்போய், நாலுமாசம் இருந்துவிட்டுப் போய்விடுவான்.

போனால் என்ன? அவரே சமையல் செய்வார். அவருக்குத் தெரியாத தொழிலே இல்லே! எங்தத் தொழிலும் அவருக்கு அகெளரவமானது அன்று. அவரிடம் வேலு பதினைந்து பிராயத்தில் வந்து சேர்ந்தான். அவன் பேரைக் கேட்டபோதே அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. முருக பக்தர் அல்லவா? முதலில் தோட்ட வேலை செய்தான். அவர் வீடு சின்னதும் அல்ல: பெரியதும் அல்ல. சுற்றிப் பூச்செடிகளும் காய்கறியும் போட்டிருந்தார். வேலு கொத்துவான்; தண்ணீர் பாய்ச்சுவான்; குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடுவான். எந்தச் சில்லறை வேலையையும் செய்வான்.

கடையிலிருந்து வரும் கடிதங்களை ஒழுங்குபடுத்தி வைப்பான். மேஜையைத் துடைத்துச் சுத்தமாக வைப்பான். நாளடைவில் டெலிபோனில் கூப்பிடுபவர்களுக்குப் பதில் சொல்லவும் கற்றுக்கொண்டான். அவனுக்கு இரண்டு வேளைச் சாப்பாடு கிடைக்கும்; 'காப்பித் தண்ணி' யும் உண்டு; சம்பளத்தில் பாதி கையில் கிடைக்கும்; பாக்கிப் பாதியை அவன்பேரில் பாங்கியில் போட்டிருந்தார் ராஜாராம். அவனுக்கு நன்றாக எழுதப் படிக்கத் தெரியும்; ஏழாவது வகுப்பு வரையில் வாசித்தவனாம்.

வீட்டுப் பிள்ளையைப் போல இருந்து வந்தான் வேலு. எப்போதும் நிழல் போலத் தொடர்வான். எங்கே போனாலும் ராஜாராமுக்கு அவன் மெய்காப்பாளனைப் போல இருப்பான்.

ராஜாராம் ஒரு கார் வாங்கினார். வேலுவைக் கார் ஒட்டப் பழகிக்கொள்ளச் சொன்னார். அவனையே கார் ஒட்டியாக வைத்துக்கொண்டார். இப்போது வேலுவுக்கு வயசு இருபத்தைந்து. அவரிடம் வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. காரை நன்றாக ஒட்டத் தெரிந்துகொண்டிருக்கிறான். சில்லறை ரிபேர்களைக்கூடச் செய்வான்.

"வேலு இப்போது பெரிய டிரைவர் ஆகிவிட்டான். ஏதாவது கம்பெனியில் வேலைக்குப் போனானானால் இரு நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும்" என்பார் ராஜாராம். அவன் சிரித்துக்கொள்வான்.

"உனக்கு வேறு வேலை கிடைத்தால் தாராளமாகப் போகலாம். நான் தடையாக நிற்க மாட்டேன்" என்பார்.

"போங்கள், எசமான்" என்று போலிக் கோபம் காட்டுவான். அவன்.

அவனுக்கு இப்போது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் ராஜாராம். அவன் பேரில் இருந்த பணத்தில் கொஞ்சம் வாங்கச் சொல்லித் தாம் பாக்கிப் பணத்தைக் கொடுத்துக் கல்யாணத்தைப் பண்ணி வைத்தார். அவன் மாமனர் மாமியார் கோடம்பாக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் வீட்டோடே அவன் இருக்கட்டும் என்பது ராஜாராம் அபிப்பிராயம். தினமும் சைக்கிளில் வீட்டுக்குப் போகலாம் என்று திட்டம்.

இப்போதெல்லாம் வேலு தோட்ட வேலை செய்கிறதில்லை. அதற்கு வேறு ஆள் வைத்தாகிவிட்டது. கார் வாங்கினதற்காக வேலை மிகுதியாயிற்றோ, வேலை மிகுதியானமையால் கார் வாங்கினரோ தெரியாது; எப்போதும் சுற்றுவதுதான் வேலை. அந்தக் கம்பெனி, இந்த ஆபீஸ் என்று தினம் காரில் ராஜாராம் சுற்றுவார். மனைவி மக்களுடன் வாரத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது கோயிலுக்குப் போய் வருவார். இன்ன நேரம் வெளியில் போவார் என்ற திட்டம் இல்லை. இருபத்துநாலு மணி நேரமும் காத்திருக்க வேண்டும். வேலு கார் ஓட்டத் தொடங்கியது. முதல் சம்பளம் உயர்ந்தது. கல்யாணம் பண்ணிக்கொண்ட பிறகு பின்னும் உயர்ந்தது. ஆனால்?

2

"'எல்லாம் தெரிந்தவர்களுக்கு முக்கியமான காரியங்கள் தெரிகிறதில்லை' என்று பேச்சை ஆரம்பித்தாள் ராஜாராமின் மனைவி.

"இன்றைக்கு எந்த விஷயத்தில் எனக்கு முட்டாள். பட்டம் கட்டப் போகிறாய்?" என்று கேட்டார் ராஜாராம்.

"வேலு விஷயத்தில்தான்."

"வேலு விஷயமா? அவனுக்கு இப்போதுதானே செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்தேன்? சம்பளமும் கூடப் போட்டிருக்கிறேன். அவனுக்கு என்ன குறை”

"அவனுக்கு அல்ல; அவளுக்கு!"

"அது யார் அவள்?"

"அவனைக் கட்டிக்கொண்டாளே, அந்தப் பெண் தான்.”

ராஜாராம் தம் மனைவியைக் கூர்ந்து பார்த்தார்.

"சொல்லுவதைத் தெளிவாகச் சொல்” என்றார்.

"நேற்று அந்த பெண் இங்கே வந்திருந்தாள். நவராத்திரிக் கொலுவைப் பார்க்க வந்தேன் என்றாள். பிறகு, யோகஷேமம் விசாரித்தேன்; அவள் மனசுக்குள் இருக்கிறது குறிப்பாக எனக்குத் தெரிந்தது."

"வேறு எங்கேயாவது கணவன் வேலைக்குப் போக வேண்டும் என்று இருக்கிறதோ, அவளுக்கு?’ என்று ராஜாராம் கேட்டார்.

"அவசரப்படாமல் கேளுங்கள்; சொல்கிறேன். 'அம்மா, எனக்கு உங்கள் வீட்டோடே ஒரு குடிசை போட்டுத் தந்து விடுங்கள்; நான் இங்கே வந்து விடுகிறேன். உங்கள் வீட்டில் ஏதாவது வேலை செய்கிறேன்" என்றாள். அவள் தகப்பன் ஏதாவது சொன்னானா என்று கேட்டேன். அவள் பேச்சில் உண்மையை வெளிவிட வில்லை. நானும் பெண்தானே? தெரிந்து கொண்டேன்."

"தெரிந்ததைச் சட்டென்று சொல்” என்றார் ராஜாராம்.

"வேலுவுக்குக் கல்யாணம் செய்து வைத்தீர்கள். அது நல்ல காரியந்தான். கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால் அவன் ராத்திரியும் பகலும் இங்கேயே கிடந்தான். அப்போதெல்லாம் அப்படி இருந்தது சரிதான். இப்போது: அவனுக்கு ஒரு பெண்டாட்டி வந்துவிட்டாள். நீங்கள் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணி, ஒரு மணி என்று ராத்திரியில் அவனை வீட்டுக்கு அனுப்புகிறீர்கள். ஆறி அவலாய்ப் போன சாப்பாட்டை அவனுக்குப் போட வேண்டியிருக்கிறதாம்...... " இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். தொடர்ந்து, "அவன் சில நாள் இங்கேயே தங்கி விடுகிறான். அங்கே சோறு வீணாகி விடுகிறதாம்” என்றாள். இப்போது ராஜாராமும் புன்னகை பூத்தார்.

இரண்டு நாள் சென்றன. ராஜாராம் வேலுவிடம், "வேலு, நானும் கார் ஒட்டக் கற்றுக்கொள்ளப் போகிறேன்" என்றார்,

"கற்றுக்கொள்ளுங்கள், எசமான். உங்களுக்கு எது தான் வராது?" என்றான் வேலு.

"அன்றைக்கு வந்தானே, சின்னசாமி, அவனைத் தினமும் ராத்திரி வரச் சொல்லியிருக்கிறேன். அவன் கற்றுத் தருவான். கொஞ்சம் பழகினால் பகல் நேரத்தில் உன்னிடம் கற்றுக்கொள்கிறேன்.”

"ஏன், நானே கற்றுத் தருகிறேனே!” என்றான் வேலு.

"பகலெல்லாம் உழைத்துவிட்டு ராத்திரியும் அகாலத்தில் உனக்கு வேலை வைக்கலாமா?"

மறுநாள் முதல் ராஜாராம் கார் ஒட்டக் கற்றுக் கொள்ளலானர். விரைவிலே கற்றுக்கொண்டார். இப்போது அவரே நன்றாக விடலானார்.

வேலுவை அருகில் வைத்துக்கொண்டு காரை அவரே ஒட்டினார். குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போய் விடுவது, அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவது.இப்படியான காரியங்களுக்கு வேலு காரை விட்டுக்கொண்டு போய் வருவான். ராஜாராமுடன் போகும்போதெல்லாம் பெரும்பாலும் காரை அவரே ஒட்டுவார்.  அதோடு அவர் மற்றொரு காரியமும் செய்தார். சரியாக மணி ஏழு அடித்ததானால், 'நி வீட்டுக்குப் போ" என்று சொல்லிவிடுவார். அதற்குள் என்ன அவசரம்? நான் இருந்துவிட்டுப் போகிறேன்' என்பான். 'இல்லை, எங்கேயாவது போனால் நானே போய் வருகிறேன். எனக்குத்தான் நன்றாக ஒட்டத் தெரிந்துவிட்டதே' என்பார்.

இப்போதெல்லாம் பகலில்கூட ராஜாராம் வண்டியைத் தனியே எடுத்துக்கொண்டு சென்றார். வேலு அவர் வீட்டில் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருப்பான். மாலே ஏழு மணி அடித்தால் வீட்டுக்குப் போய்விட வேண்டுமென்று அவனுக்குக் கண்டிப்பான உத்தரவு.

வேலுவின் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டு ராஜாராம் மனைவிக்கு அளவற்ற மகிழ்ச்சி. 'ஜாக்கிரதையாக இருக்கச் சொல். யாராவது டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டு' என்பாள்.

"எங்க மாமியாரைவிடப் பெரிய டாக்டர் யாரும் இல்லை, அம்மா' என்பான் அவன். .

சில நாளாகவே வேலுவுக்கு முகத்தில் பொலிவு: இல்லை. உள்ளுற அவனை ஏதோ வேதனே அரித்துக்கொண்டிருந்தது. ராத்திரியும் பகலும் ராஜாராமுடன் நிழலேப் போல் இருந்த வேலு, சில சமயங்களில்தான் அவரோடு சென்றான். மாலை ஏழு அடித்ததும் வீட்டுக்குப் போனான்.

3

கருவுற்றிருந்த வேலுவின் மனைவி ஒரு நாள் ராஜா ராம் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனாள். அன்று இரவு ராஜாராமிடம் அவர் மனைவி பேசினாள். -

கொஞ்சநாளாகவே வேலு உற்சாகம் இல்லாமல் இருக்கிறானே; நீங்கள் கவனித்தீர்களோ?" -

'இன்று என்ன புதிய வழக்குத் தொடுக்கப் போகிறாய்?' என்று கேட்டார் ராஜாராம். . 

"மனிதர்களுடைய மனசை நினைக்கிறபோது விசித்திரமாக இருக்கிறது!’ என்றாள் அவர் மனைவி,

"என்ன விசித்திரத்தைக் கண்டுவிட்டாய்?" 'நீங்கள் வேலுவை வேலையை விட்டு நீக்கப் போகிறீர்களாமே?” -

ராஜாராம் நிமிர்ந்து உட்கார்ந்து அவளை விழித்துப் பார்த்தார். "என்ன உளறுகிறாய்?" என்று கேட்டார்; அதில் கோபத்தின் நிழல் இருந்தது.

"இன்று அந்தப் பெண் வந்திருந்தாள். அவள் ஒரு பாட்டம் என்னிடம் அழுதாள். அவளைத் தேற்றி அனுப்பினேன்."

'என்ன விஷயம்?" -

"நீங்கள் கார் ஒட்டக் கற்றுக்கொண்டு விட்டீர் களாம். வேலுவின் உதவி உங்களுக்குத் தேவை இல்ல யாம். அவனை வேறே எங்காவது வேலைக்குப் போகும்படி முன்பே சொன்னிர்களாம். இப்போது அ வ னு க் கு வேலையே கொடுக்காமல் தண்டத்துக்குச் சம்பளம் தருகிறீர்களாம் என்றைக்காவது ஒரு நாள், இங்கே உனக்கு வேலை இல்லை. எங்காவது போ' என்று சொல்லப் போகிறீர்களாம். இதை நினைத்து நினைத்து அவன் வேதனைப் பட்டுச் சாகிறாளாம். இந்தப் பிள்ளை வயிற்றில் வந்ததிலிருந்து ஒன்றும் சுகம் இல்லையம்மா. பழையபடி தோட்ட வேலை செய்துகொண்டாவது இருப்பேனே என்று அவர் அழுகிறார். நீங்கள்தான் ஐயாவிடம் சொல்லிக் காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள். அவனை அனுப்பிவிட வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் உண்டா?'

நான் அவனுடைய நன்மைக்காகத்தான் கார் ஒட்டப் பழகிக்கொண்டேன். ஏழு மணிக்கு வீட்டுக்குப் போடா என்று சொன்னேன். அவன் எப்போதும் கார் ஒட்டினபோது அவள் வந்து அழுதாள். அவனுக்குச் செளகரியமாக அதிக வேலை கொடுக்காமல் கான் கார்

ஓட்டும் போதும் அவள் அழுகிறாள். அவன் நம் வீட்டுப் பிள்ளை. அவனை அனுப்புகிறதாவது!" என்றார் சிரித்தவாறு.

4

.

ஒரு வாரம் கழித்து ராஜாராம் வேலுவுக்கு ஒரு புது உத்தரவு போட்டார். 'பகல் முழுவதும் நீதான் கார் ஒட்டவேண்டும்; எனக்கு அலுத்துவிட்டது. வழியிலே குறுக்கே போகிற கிழவியையும் எதிரே வருகிற வண்டியையும் முன்னே போகிற லாரியையும் சபித்துக்கொண்டே கார் ஒட்ட வேண்டியிருக்கிறது. போதும், இந்த வேலை. இனிமேல் கார் உண்டு, நீயுண்டு. நீ எங்காவது ஒட்டிக் கொண்டு போனால் நான் வருகிறேன்!"

'எசமான்' வேலுவுக்குப் பேச்சு வரவில்லை. "ஆலுைம் எனக்குப் பழக்கம் விட்டுப் போகக்கூடாது பார். ராத்திரி எங்கேயாவது அவசரமாகப் போகவேனு மானால நானே ஒட்டிக்கொள்கிறேன். அப்போது மாத்திரம் காரை என்னிடம் கொடுக்க வேண்டும். என்ன, உனக்குச் சம்மதமா?” -

எசமான்' அவன் கண்ணில் நீர் துளித்தது. அவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டான்.

வேலுவின் மனைவிக்கு ஆசுபத்திரியில் குழந்தை பிறந்தது. ராஜாராமும் அவர் மனைவியும் போய்ப் பார்த்தார்கள். - -

'அம்மா, நீங்கள் இட்ட பிச்சை!” என்று நன்றியறிவுடன் வேலுவின் மனைவி அவளுக்குக் குழக்தையை எடுத்துக் காட்டினாள்.

'என்ன பேர் வைக்கப்போகிறாய்?' என்று கேட்டாள் எசமான் மனைவி.

"அது-அவங்க-ஐயா பேரைத்தான் வைக்க வேணுமென்று சொல்றாங்க!' என்று நாணிக்கொண்டாள் அப்பெண். - "அந்தப் பேரைச் சொல்லி நான் கூப்பிட முடியாதே!" என்றாள் அம்மாள்.

"நாங்கள் மாத்திரம் கூப்பிடுவோமா? பள்ளிக்கூடத்துப் பேர் அது; கூப்பிட வேறு பேர் நாங்கள் முடிவு பண்ணிவிட்டோம்: முருகா என்று கூப்பிடுவோம்” என்றாள் அந்தப் பெண்.

இவ்வளவு நேரம் சும்மா இருந்த ராஜாராம், பேஷ்!” என்று குதூகலத்தோடு சொன்னார். அவர் முருகபக்தர் அல்லவா?