குயிற் பாட்டு/முன்னுரை
முன்னுரை
‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையாற் பாராட்டப்பெற்ற கவிஞர் பாரதியார் தம் வாழ்நாளில் ஒரு பகுதியைப் புதுச்சேரியிற் கழித்தார். அந்நாளில் அவர் தமிழ் உலகிற்கு ஆக்கியுதவிய அருங்கவிதைகள் பல, அவற்றுள்ளே ஒன்று தான் ’குயிற் பாட்டு’ என்னும் இனிய கவியோவியம். இச்சிறு நூல் எழுநூற்று நாற்பத்தைந்து (745) அடிகளைக் கொண்ட துள்ளலோசையுடைய தெள்ளிய தமிழ்ப்பாட்டான் இயன்றது. குயில் பாடும் இசைப்பாட்டாக இடையில் அமைந்து பத்துக் கண்ணிகளைத்தவிர, மற்றைப் பகுதிகள் அனைத்தும் கலிவெண்பாவுக்குரிய இலக்கண அமைதி பெற்று இலகுவதொன்றாகும்.
அறிஞர்கள் இலக்கியத்தை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவையாவன: [1]1. தனிமனிதனின் சொந்த அனுபவத்தைப் பற்றியது. 2. மக்களின் பொதுவான அனுபவும் பற்றியது. 3. சமுதாயத்தைப் பற்றியது. 4. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றியது. 5. மனிதனுடைய சொந்த முயற்சியில் - கற்பனையில் முகிழ்த்த புதுமை பற்றியது. இவ்வைந்து வகையுள் இறுதியிற் கூறப்பெற்ற இலக்கிய வகையைச் சார்ந்தது பாரதியாரின் குயிற் பாட்டு. அக்கவிஞரின் சொந்தக் கற்பனையில் தோன்றிய முதல் நூலாகச் செந்தமிழ்ப் படைப்பாகத் திகழும் திறம் வாய்ந்தது குயில் பாட்டு. உயர்ந்தகருத்தை எளிய முறையில், இனிய நடையில் தெளிவுற விளக்கும் தீந்தமிழ்ப் பனுவலாகத் திகழ்வது குயிற் பாட்டு. பாரதியாரின் கற்பனைச் சிகரமாகவும் கவிதைக் கலையின் முடிமணியாகவும் ஒளிரும் உயர்வுடையது குயிற் பாட்டு. தன்னுணர்ச்சியின் திரட்சி வடிவாய்த் திகழும் இப்பாட்டு, தன்னுணர்ச்சிக் கவிதைக்கே (Lyric) ஒரு சிறந்த எடுத்துக் காட்டு எனலாம். கடவுளரையும் காவலரையும் கன்னியரையும் கதைப்பொருளாகக் கொண்டு, பண்டைப் புலவரெல்லாம் பைந்தமிழ்க் காவியம் படைத்திருக்கவும், சிறியதொரு பறவையாகிய குயிலைக் கதைப் பொருளாகக் கொண்டு, இலக்கியம் படைத்தளித்த பெருமை கவிஞர் பாரதியாருக்கே உரிமையாகும் !
கீதம் பாடும் குயிலின் குரல் நாத இன்ப வெள்ளத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞராகிய பாரதியார், அக்குயிலே முன்னேப் பிறவியில் வேடர் குல வேந்தன் மகளாகப் பிறந்து, சேர வேந்தன் செல்வ மைந்தனாகத் தோன்றியிருந்த தம்மைக் காதல் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய திறத்தைக் குயிலின் வாயிலாகவே பொதிய மலை முனிவர் புகன்ற வரலாறென்று எடுத்துரைத்து, எல்லோரையும் காதல் இன்ப வெள்ளத்தில் மூழ்குமாறு செய்யும் அவரது கவித்திறம் படித்துப் படித்துச் சுவைத்து இன்புறத்தக்கதாகும். -
கவிஞர் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த நாளில் அந்நகரின் மேற்பால் அமைந்த மாஞ்சோலேக்கு மாலை நேரத்தில் உலாப்போதல் சாலப் பெருகிய வழக்கம் போலும். அச்சோலைக்கண் பல்வேறு பறவையினங்களும் கூடியிருந்து பேரொலி யெழுப்பும். அவற்றிடையே குயிற் பறவைகள் இன்னிசை பாடி, வருவோர்க்குப் பெருமகிழ்வூட்டும். அந்த இன்பத்தை நாள்தோறும் நன்கு துய்த்த பாரதியார் ஒரு நாள் மாலை வேளையில் வழக்கம் போல் சோலை புகாது, வீட்டிலிருந்து தமிழாய்ந்து கொண்டிருந்தவர் களைப்பு மிகுதியால் தம் விழிகளைத் துயில் தழுவ உறங்கிவிட்டார். அத்துயிலிடையே கண்ட கனவையே குயிலின் பாட்டாகக் கொழி தமிழ்த் தேனில் குழைத்துக் கவிதைச் சுவையூட்டி, இன்னிசைத் தெள்ளமுதாக ஆக்கித் தந்துள்ளார்.குயிலின் இசைப்பாட்டில் கவிஞன் காட்டியுள்ள கருத்துக்கள் உயர்ந்த தத்துவ உண்மைகளாகும். ”காதல் போயிற் சாதல், அருளொளி ஆவியுமாயின் இருள், இன்பத்திற்கு எல்லை கண்டால் அது துன்பம், நாதத்திற்கு நலிவேற்பட்டால் சேதம், தாளத்திற்குத் தடையுண்டானல் இசை ஒரு கூளம், பண்ணிற்குப் பழுதுண்டாயின் அது மண், புகழுக்குப் புரையுண்டாயின் இகழ், உறுதிக்கு உடைவுண்டாயின் இறுதி, கூடிய குமரன் பிரிந்தால் குலைவுதரும் வாட்டம், இசை தரும் குழல் உடைந்தால் அது வீணே !” இவ்வாறு ‘ஒன்றைப் பற்றி ஒன்று நிற்றலே வாழ்வில் இன்பந் தருவது; பிரிவு பெருந்துன்பத்தை விளப்பது’ என்னும் உண்மையை வலியுறுத்தி நிற்பதாகக் குயிலின் பாட்டு அமைந்திருப்பது கொள்ளையின்பம் விளைப்பதாகும்.
குயில் தனது காதற் கதையை ஓதத் தொடங்கி, அஃது இயற்கை இசை வெள்ளத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த திறத்தை விளக்குவது வியத்தற்குரியது. பறவைகளின் ஒலி, மரங்களிடையே காற்றெழுப்பும் ஓசை, ஆற்றுவெள்ளத்தில் எழும் அரிய ஓசை, அருவியின் இனிய ஒலி, நீலக்கடலில் அலைகள் இடையறாது எழுப்பும் ஓசை, மங்கையர் பாடும் பண்ணமைந்த கீத நாதம், ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டுக்களின் தெள்ளமுத ஓசை, சுண்ணம் இடிப்பாரின் வண்ண இசை, பள்ளர் பாடும் பண்ணமைந்த பள்ளுப்பாட்டின் ஓசை, கும்மிப் பாடலின் குளிர்ந்த இசை, குழலிசை, வீணையின் நாதம் இவற்றையெல்லாம் அனுபவித்த நலத்தைக் குயில் எடுத்துரைக்கின்றது.
குயில் தனது பழம்பிறப்பின் வரலாறு பற்றிப் பொதிய மலைக்கண் வாழ்ந்த முனிபுங்கவரை வழிபட்டு அறிந்த வாற்றை மொழிந்துருகும் திறம் படித்து இன்புறற்குரியது. கவிஞர் அக்குயிலின் பாற் கொண்ட ஐயத்தையெல்லாம் அகற்றுமாறு திறம்படவும் நயம்படவும் எடுத்துரைக்கின்றது."வேடர்குலத் தலைவனாய வீரமுருகன் என்பானின் சீரிய மகளாகப் பிறந்து வளர்ந்து பருவமெய்திய சின்னக்குயிலியை அவளது உற்ற மாமன் மகனாகிய மாடன் மணஞ்செய்து கொள்ள மனங்கொண்டான். தேன்மலைக்குத் தலைவனாகிய மொட்டைப் புலியன் தன் மைந்தனாகிய நெட்டைக் குரங்கனுக்கு அவளைப் பெண் வேண்டினான். வீரமுருகனோ தன் மகளை நெட்டைக்குரங்கனுக்கே கட்டிக்கொடுக்க இசைந்தான். இச்செய்தி அறிந்த மாடன் மனம் புகைந்தான். அவனுக்குச் சின்னக்குயிலி ஆறுதல் கூறியகன்றாள்.
மணநாளுக்கு முன்னர் ஒருநாள் சின்னக்குயிலி, தன்னையொத்த தோழியருடன் மாலை வேளையிற் சோலை யொன்றிற் புகுந்து விளையாடிக கொண்டிருந்தாள். அப்போது மான் வேட்டை யாடிவந்து சேரமான் மைந்தனாகிய இளவரசன் சின்னக்குயிலியைக் கண்டு காதல் கொண்டான். அவளும் முன்னவன் மகனைக் கண்டு மாமோகம் கொண்டு நின்றாள்.
‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல’
என்பது உண்மையன்றோ! அவர்கள் ஓருடல் ஓருபிராயினர். தேனில் விழும் வண்டைப்போல, காந்தமிசை வீழும் காரிரும்பைப் போல, ஆவலுடன் அவளை அரகுமாரன் ஆரத்தழுவி இன்புற்றான். இவர்கள் கூடியிருக்கும் இன்பக் காட்சியை மாடனும் குங்கனும் ஓடி வந்து பார்த்து உள்ளங் கொதித்தனர். இருவரும் கோப வெறி கொண்டனர். இந்நிலையைக் கவிஞர் குறிப்பிடும் நயம் வியப்பிற்குரியது.
‘ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு’
மன்னவன் மகனைக் கொல்லுதற்கு மாடனும் குரங்கனும் வாளோங்கி வந்தனர். வேந்தன் முதுகில் இருவரும் வாளைப் பாய்ச்சினர். சட்டெனத் திரும்பிய மன்னன் தன் வாளையுருவி வீச்சிரண்டில் அவர்கள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான். வெட்டுண்ட வேந்தனும் சிறு போழ்தில் மாய்ந்திட்டான். அவன் இறக்கும்போது,
“இன்னும்பிறவியுண்டு, மாதரசே! இன்பமுமுண்டு
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே”
என்று சொல்லிக் கண்மூடி உயிர்நீத்தான்.
சின்னக் குயிலியின் மாமன் மகனாகிய மாடன் செய்த மாயச் செயலால் அவள் மறுமையில் பறவையுருக் கொண்டு பதை பதைக்கின்றாள். மன்னவனோ மறுமையில் தொண்டை நாட்டுப் புதுவைப் பட்டினத்தில் தண்டமிழ்க் கவிஞனாகத் தோன்றி வாழ்கின்றான். புவிமன்னன் மகன் கவிமன்னன் ஆயினான். முன்னைப் பிறப்பில் சின்னக்குயிலியை மணம் புரிய விரும்பிய மாடனும் குரங்கனும் பேய் வடிவு கொண்டு அக்குயிலையே பின்தொடர்கின்றனர். முன்னைப் பிறப்பன் தொடர்பால் கவிஞன் குயிலைக் கண்டு, அதன் குரலிசையில் மனமறுகி நிற்கும் வேளையில் மாடும் குரங்கும் அவனுக்கு ஐயத்தையும் வெறுப்பையும் அடங்காத சினத்தையும் விளைத்து நிற்கின்றன.”
இந்த உண்மையெல்லாம் குயில் எடுத்துரைத்துக் கவிஞன் கரத்தில் வீழ்ந்தது. அவன் அதனை ஆவலுடன் எடுத்து இன்பமீதூர முத்தமிட்டான். அவ்வளவுதான், அவன் கரம்பட்டவுடன் குயில் கெள்ளையின்பந் தரும் தெள்ளமுதத் தெய்வீகப் பாவையாக மாறியது. அப்பெண்ணின் நல்லாள் வைத்த கண் மாற்றாது கவிஞனை நோக்கினாள்.
”சற்றே தலைகுனிந்தாள், சாமி ! இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்”
என்று கூறிப் பெண்ணின் பேரெழில் நலத்தை வியந்து
பேசும் கவிஞரின் கற்பனைத்திறம் அற்புதமானது !“சுற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கனிபிழிந்த
காற்றினிலே,பண்கூத்(து) எனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமன்என்பேன்”
என்று கூறிக் களிக்கும் சுவிஞரின் கவிநயம் படித்துச் சுவைத்தற்குரியதாகும்.
இப்பாட்டை முடிக்கும் பாரதியார் இறுதியில், இது கனவிற் கண்ட கற்பனையே யானாலும்,
‘வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?’
என்று ஆன்ற தமிழ்ப் புலவர்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்குயிற்பாட்டு ஒரு காதற் கதை போன்று தோன்றினாலும் தத்துவக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் தண்டமிழ்ப் பனுவலாக விளங்குகிறது. “கருத்தொருமித்த காதலர் இருவர் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து இன்புறுவதோடு, அடுத்து வரும் பிறப்புக்களிலும் சிறப்புறக் கூடி வாழும் பீடு பெறுவர்” என்ற உன்மையைத் திண்மையுறக் காட்டி நிற்பது இப்பாட்டு.
இக்கதையில் பொதிய மலை முனிவர், கவிஞர், குயில் முதலிய பாத்திரங்கள் பயின்று வருகின்றன. முற்பிறப்பில் குயில், வேடர் குலத் தலைவன் மகள் சின்னக் குயிலியாகச் சிறந்து விளங்கிற்று, அப்போது அவளை மாடன், கெட்டைக் குங்கன், சேரநாட்டு இளவரசன் ஆகிய மூவரும் விரும்பினர். ஆனால் குயிலியோ வேந்தன் மகனையே விரும்பினாள். அவள் காதலுக்குத் தடையாக மாடனும் குரங்கனும் இடை நின்றனர். இப் பிறப்பில் சின்னக் குயிலி கன்னங் கரிய குயிலாகப் பிறந்தாள். அக் குயிலோ கவிஞன்பால் உண்மைக் காதல் கொண்டு உழன்றது. அதற்குத் தடையாகக் குரக்கனும் மாடனும் முறையே குரங்காகவும் மாடாகவும் பொய்த் தோற்றம் காட்டிப் புன்மைப் பேய்களாகத் திரிகின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சித்தாந்த உண்மைகளாகிய பதி—பசு—பாச இலக்கணத்தைக் கவிஞர் பொருத்திக் காட்டுவதாகக் கருத்தூன்றிக் காணலாம்.
ஆணவம், கன்மை, மாயை என்னும் பாசங்களோடு கட்டுண்டுழலும் உயிராகிய பசு, அக் கட்டுக்களினின்று விடுபட்டு, இறைவனாகிய பதியை அடைய வேண்டும். இதுவே சமயத் தத்துவமாகிய கித்தாந்த உண்மை. முற்பிறப்பில் சின்னக்குயிலியாகிய பசு, சோமன்னன் மகனாகிய பதியை அடைய விழையும்போது, மாடனும் குரங்கனும் பாரமாக நின்று தடைசெய்கின்றனர். மாடன்பால் காட்டும் அன்பும் பெற்றோர்மீது கொள்ளும் பற்றும் ஆங்கு மாயையாக நின்று தடுக்கின்றன. இப் பிறப்பில் குயிலாகிய பசு, கவிஞாகிய பதியை நாடுகிறது. ஆனால் பேய்களாகிய குரங்கும் மாடும் ஆணவகன்ம மலங்களாகவும் காதல் மாயையாகவும் நின்று தடுக்கின்றன. எனவே, மும்மலங்களிற் சிக்குண்டு உழலும் ஆன்மா, பதியாகிய இறைவனையடைந்து அந்தமில் இன்பத்தைத் தூய்த்தற்கு எத்துணை முயன்றாலும் காதலாம் மாயையின் கட்டினால் ஆணவம், கன்மம் இவற்றினின் விடுபட முடியால் பெரிதும் இடர்ப்படும் எனத் தெளியலாம்.
‘அவா என்ப(து) எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து’
ஆசையோ பிறப்பிற்கு வித்தாவது என்றும்,
‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்
காமம் கெடக்கெடும் நோய்’
அவ்வாசை யொழியவே பிறவித்துன்பம் அற்றொழியும் என்றும் இக் குயிற்பாட்டால் கவிஞர் பாரதியார் பாருலக
மக்கட்குச் சீரிய வேதாந்த உண்மையினை விளக்குப் போந்தார்.
- ↑ 'Personal experience of an individual as an individual. 2. Experience of a man as a man. 3. Relations of the individual with his fellows. 4. External world of nature and our relations.5.Man's own effort to create and cxpress'- W. H. Hudson.