குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/பாரதியும் பாரதிதாசனும்

பாரதியும் பாரதிதாசனும்

பல்லாண்டு பல்லாண்டாய்த் தமிழர் நாட்டில்
      பாவானம் வெறும்வெளியாய் நீலம் பூத்தே
இல்லாமை நிலையெய்திக் கிடந்த போதில்
      எழுகதிர்போல் பாரதியார் தோன்றி வந்தார்.
சொல்லாண்டு நாட்டுமக்கள் நெஞ்சை யாண்டு
      சுடர்க்கவிகள் பலப்பலவாய்த் தோற்று வித்து
வல்லாண்மை யுணர்வெழுப்பி உரிமை வேட்கை
      வளர்த்திந்தத் திருநாட்டை உயரச் செய்தார்.

வேதாந்தம் பாடுகின்ற புலவர்; தெய்வ
      விளையாடல் பாடுகின்ற புலவர்; மாதர்
பாதாதி கேசங்கள், புகழ்ச்சி மாலை
      பல்விளித்துப் பாடுகின்ற புலவர், கற்றோர்
மூதேவி வளர்ப்பானார் என்று நெஞ்சம்
      முறிந்திருக்கும் புலவர்பரம் பரையில் நாட்டு
மாதாவைப் பாடுகின்ற; சக்தி யாக

      மாவீரர் பாரதியார் தோன்றி வந்தார்.

வித்தகனாம் பாரதியின் வழியில் வந்தோர்
      விதவிதமாய்ப் புதுப்பாக்கள் குவிக்க லானார்
கத்தியின்றி ரத்தமின்றி என்ற நாமக்
      கல்லாரும் கவிமணியும் பாடு வோரின்
சித்தத்தில் இடம்பிடிக்கும் யோகி யாரும்
      சிதம்பரனார் பொதுவுடமை ஜீவா னந்தம்
இத்தனைபேர் மத்தியிலும் சுப்பு ரத்னம்
      இணையற்ற புரட்சிப்பா வேந்த ரானார்.

சீறுபுலி யனையதொரு தோற்றங் கொண்டோன்
      சினமுழக்கம் செய்தானேல் பகை நடுங்கும்
வீறுமிகு சொற்களினால் புரட்சிப் போரை
      விளைவிக்கும் ஆற்றலுளான் சுப்பு ரத்னம்
ஏறுபோற் பீடுநடைப் பார திக்கே
      யான் தாசன் யான் தாசன் என்று சொன்னால்
மாறுபடும் கருத்துடையார் அல்லர் என்றே
      மனங்கொண்டே இனங்கண்டு கொள்ள லாகும்.

கண்ணனையும் முருகனையும் காளியையும்
      கனிந்துருகிப் பாடுகின்ற பார திக்கோ
எண்ணத்தில் நாத்திகமே குடிகொண் டுள்ள
      இச்சிங்கம் எவ்வாறு தாசன் ஆனான்?
வண்ணத்துக் கவிபாடத் தெய்வ சக்தி
      வளமிருக்க வேண்டுமெனும் பார திக்கு
விண்ணளவு கற்பனையே நாத்தி கத்தால்

      விரித்துரைக்கும் புலவனொரு தாச னாமோ?

பாரதியார் தெய்வீகம் போற்றி னாலும்
       பழமையிலே வெறுப்புடையார்; நாடு காக்க
வீரர்களே வேண்டுமெனும் புரட்சி நோக்கர்
       வெறும்பஜனைக் கூட்டத்தை வெறுக்கும் சீலர்
தேரெனினும் விரைந்தோட வேண்டு மென்னும்
       சிந்தனையில் ஞானத்தேர் உலாவந் தாராம்
யாரிவரென் றறிந்தேதான் தாச னானார்
       அரட்டுகின்ற பார்வையுள்ள புரட்சி வேந்தர்.

ஏய்த்துத்தான் உயிர்வாழ வேண்டுமென்றே
       எவர்முயன்று வாழ்ந்தாலும் கடிந்து நிற்கும்
காய்த்தெழுந்த நெஞ்சத்தான் பார திக்குக்
       கனகசுப்பு ரத்தினம் தான் தாசனானான்!
வாய்த்துள்ள உயிரிங்கே நாட்டுக் காக
       வழங்கிடலே சிறந்ததென்னும் கருத்தில் இந்தச்
சேய்த்தமிழர் இருவரிலும் வேறு பாடு
       சிறிதுமில்லை! ஐயமில்லை! உண்மை காணீர்!

பாரதத்தை ஆண்டுவந்த வெள்ளைக் காரப்
       பரங்கியரை ஒட்டுதற்குத் துடித்த நெஞ்சும்
சீரதிக முடைய தமிழ் நாட்டில் இங்கே
       சிலர் வாழப் பலர்மாயும் நிகழ்ச்சி கண்டு
நேர்மையுடன் கொதித்ததன் மான நெஞ்சும்
       நிகரில்லை என்றெவரே கூற வல்லார்
பாரதிக்குத் தக்கதொரு தாசன் தானே
       பண்புடைய கனகசுப்பு ரத்னம் காணீர்!

வில்லாளி அருச்சுனனைப் பார திக்கு
     மிகப்பிடிக்கும் உயர்வீரன் என்ப தாலே!
சொல்லாலும் செயலாலும் வாய்மை காத்துத்
     தோற்றாலும் பணியாத நெஞ்சங் கொண்ட
வல்லானாம் இராவணனைப் பாவேந்தர் தம்
     வழிமுதல்வன் எனவீர வணக்கம் செய்வார்!
வல்லாண்மை மிக்க இரு கவிஞர் கட்கும்

     பகைமுடிக்கும் வீரரையே மிகப் பிடிக்கும்!


தலைப்பாகைச் சுடர்விழிகொள் பார திக்குத்
     தமிழ்ப்பெண்ணின் விடுதலையே நோக்க மாகும்!
சிலைபோன்ற பெண்ணுக்குக் கைமை நோன்பு
     சிறைப்படுத்தும் கொடுமையெனத் தாசன் கூறும்!
அலைகின்ற இருநெஞ்சங் காதல் கொண்டே
     அன்பாக அணைகின்ற வாழ்வு தானே
நிலையான இன்பத்தை யளிக்கு மென்று

     நினைப்பவர்கள் இருவருமே ஒருநோக் குள்ளார்.


பக்தியிலே சக்தியுண்டென் றெண்ணி னாலும்
     பழமூடப் பழக்கத்தைச் சாடி நிற்கும்
மிக்கபுதுக் கொள்கையிலே ஊறி நிற்கும்
     மீசையுள்ள பாரதிக்குத் தாசன் எந்தப்
பக்கத்தில் வந்தாலும் மூடப் போக்கைப்
     பாய்ந்தெதிர்க்கும் வெறியுள்ளான் ஆகை யாலே சிக்கென்று பாரதியைக் குருவாய்க் கொண்டான்

     சிங்கத்தைப் பின்பற்றும் சிங்க மானான்!

குயில்பாட்டு பாரதிக்குப் பெருமை சேர்க்கும்
    கோலமிகும் அப்பாட்டுப் போற்ப டைத்த
மயில்ஆடும் சஞ்சீவி பர்வதத்தின்
    மலைச்சாரல் கதைதாசன் பெருமை யாகும்!
மயல்சேர்க்கும் கற்பனையாம் குயிலின் பாட்டு
    மற்றிந்தச் சஞ்சீவி மலைக் கதையோ
துயில்தீர்க்கும் பகுத்தறிவுக் கருத்து மிக்க

    துடிப்பான புத்தெழுச்சிக் கீதம் ஆகும்!


பாஞ்சாலி சபதத்தில் புதுமைப் பெண்ணின்
    பகுத்தறிவு வாதத்தைக் கேட்க லாகும்
நோஞ்சானாம் தர்மர்தனைச் சூதில் விற்கும்
    முறைகேட்டை எதிர்க்கின்ற புலியாகின்றாள்!
வாஞ்சையுடன் தன்மகற்குப் போர்ப் பயிற்சி
    வழங்குகின்ற வீரத்தாய் தாசன் காட்டும்
தேன் சுவையாம் கற்பனையில் காணுகின்றோம்

    திருநாட்டிற் பெண்ணினத்தின் எழுச்சி கண்டோம்


புதுக்கருத்தின் விடிவெள்ளி பார திக்குப்
    பொற்கதிராய்ப் பின்தோன்றும் தாசன் ஆவான்!
எதிர்க்கின்ற வீரத்தால் பழமை சாடி
    எழுச்சிமிகும் உலகத்தைப் படைக்கும் போக்கில்
நதிமூலம் பாரதியாம்; கடலிற் கூடும்
    காவிரியாம் தாசனிவன் என்ன லாகும்!
குதிகொள்ளும் புதுக்கருத்தை ஏற்று நிற்கும்

    கொள்கைக்கிவ் விருவருமே தலைமை யாகும்!

(நாச்சியப்பன் பாடல்கள்-தொகுதி. 2)