குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்/முன்னுரை
முன்னுரை செந்தமிழ் நாடெனும் சின்னஞ்சிறு வயதிலே செவியில் பட்ட இந்தப்பாட்டு இன்றைக்குப் படித்தாலும் இன்பக் கிளர்ச்சி யூட்டுவதாக இருக்கிறது; வீர உணர்வும்; நாட்டுப் பற்றும் ஊட்டுவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட தேனான பாக்கள் பலவற்றைப் பாடிய பாரதியாரை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் ஒர் உரிமையுணர்வு நெஞ்சுக்குள்ளே பூத்துக் குலுங்குகிறது. விட்டு விடுதலை பாரதியாரின் தேசியப் பாடல்கள் இளம் நெஞ்சங்களிலெல்லாம் விடுதலை யுணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்த காலம். வந்தே மாதரம்' எனற முழக்கம் இளைஞர்களின் எழுச்சி முழக்கமாக விளங்கிய அந்த நாட்களிலே, காந்தியடிகளைப் போலே, நேதாஜியைப் போலே, நேருவைப் போலே, பாரதியாரும் தமிழ்நாட்டு இளைஞர்களின் நெஞ்சில் நிலைத்த குடி கொண்ட சான்றோராக விளங்கினார். |
வயது ஏறஏற, படிக்கும் வகுப்புகளின் எண்கள் கூடக்கூட இலக்கிய உணர்வுகள் கூடிவந்தன.
பாரதியாரின் தேசீயப் பாடல்களிலே வசமாகி நின்ற நெஞ்சு பிடி கழன்று இலக்கியப் பாடல்களுக்குத் தாவியது.
பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, கண்ணன் பாட்டு போன்ற இலக்கியப் பாடல்கள் புதுச்சுவை தருவனவாக விளங்கின.
எங்கள் தமிழாசிரியர் பாரதியாரின் பாடல்களிலேயே மிகச் சிறந்தவை கண்ணன் பாட்டும், குயிலும் தான் என்று அழுத்தமாகக் கூறினார். அவர் கூறிய பிறகு, சற்று ஆவலோடு அப்பாடல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கும்போதே ஒரு புதிய உலகுக்குள்–இன்பமயமான ஒரு விந்தை யுலகுக்குள் புகுந்த உணர்வு தோன்றியது. அத்தனை நேர்த்தியாகப் படைத்திருந்தார் பாரதியார்.
இளமைப் பருவமும், இலக்கிய ஆர்வமும், தமிழ்க் காதலும் ஒன்று சேர்ந்து-பாரதியின் இலக்கியப் படைப்பில் இன்பங் காணும் உணர்வைத் தோற்றுவித்தன என்றால் தவறில்லை.
குயில் பாட்டு படிக்கப் படிக்கச் சுவை கூட்டும் சிறு காவியமாக விளங்கியது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்பொருள் புதுநயம் பொலிந்து விளங்கியது. அத்தனை மேன்மையாகப் படைத்திருந்தார் பாரதியார்.
பாரதியாரின் பாடல்களில் ஈடுபட்டுப் பழகிய நெஞ்சுக்குப் புதிதாகப் பாரதிதாசன் அறிமுகமானார். குடும்ப விளக்கின் மூலம் புதுமதிப்பைப் பெற்று அறிமுகமான பாவேந்தர், பாரதிதாசன் கவிதைகள் மூலம் நெஞ்சரங்கில் இடம் பிடித்துக் கொண்டார்.
பாரதியார் தொட்டுக் காட்டிய பலதுறைகளை விரித்து விளக்கிப் பேசும் விரிவுரையாளராக விளங்கினார் பாவேந்தர்.
குயில் பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத்திருந்த எனக்கு பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பாட்டு கவர்ச்சி ஏற்படுத்தியது.
அச்சடையாளம் குயில்பாட்டுப் போலவே அமைந்திருந்த இந்த நெடும்பாட்டு முதலில் ஏதோ குயில்பாட்டை அப்படியே (காப்பியடித்து) நகலெடுத்தது போன்ற எண்ணத்தையே தோற்றுவித்தது. ஆனால் தொடர்ந்து வரிவரியாய் அடியடியாய்ப் படிக்கத் தொடங்கியபோதுதான், புதுச் சுவையும் புதுப்போக்கும், புதுக்கருத்தும் இதில் பலப்பலவாய் விரிந்து கிடப்பதையுணர முடிந்தது.
இக்காலத்தில் புதுக் கவிதை எழுதப்புகும் இளைஞர்கள் எதையும் ஆழ்ந்து படிக்காமல், சும்மா புரட்டிப்பார்த்து விட்டு, பாரதி, பாரதிதாசன், பாரதிதாசன் பரம்பரை யெல்லாம் ஒரே விருத்தம்! ஒரே ஸ்டிரியோ டைப்! என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, ‘மரபுக் கவிதை செத்துப் போய் விட்டது’ என்று புதிய கண்டு பிடிப்புச் செய்து வெளிப்படுத்துவதுபோல் பேசிக் கொண்டு, பயனுள்ள பல இலக்கியங்களைத் தொட்டுப் பாராமலே, உணர்வுப் பூர்வமான ஓர் இலக்கியத்தைப் படைப்பதாக நடித்துக் கொண்டு, குப்பைகளையும், கூளங்களையும், சதைப் பிண்டங்களையும், குறைப் பிரசவப்படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. உள்ள குப்பைகளையே அள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஊழல் மாநகராட்சிகள் இந்தப் புதுக்குப்பைகளை என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை, கூவத்தில் தான் கொட்டவேண்டும். கங்கையே கூவமாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் கூவம் கெட்டு விடும் என்று அஞ்சத் தேவையில்லை
நிற்க,
குயிலும், சஞ்சீவி மலைச் சாரலும் மிகச் சுவையான இரண்டு இலக்கியங்கள்! இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்புத் தோன்றுவதில்லை. மாறாக மீண்டும் சுவைக்கத் தோன்றும் மாயசக்தி பெற்றவையாக உள்ளன.
இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்ததன் விளைவாக இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஒப்பாய்வு முறையில் நான் இதைச் செய்யவில்லை; எலும்புக்கூடுகளை எண்ணிப் பார்ப்பதில் நயமும் இல்லை. பயனும் இல்லை! துப்பறிவோர் மட்டுமே செய்ய வேண்டிய வேலையில் நான் தலையிட விரும்பவில்லை.
சுவை, உணர்வு, கருத்து என்ற அடிப்படையிலேயே இந்த ஒப்பீடு அமைந்துள்ளது.
பாரதியிலிருந்து பாரதிதாசன் எவ்வாறு மேம்படுகிறார் என்று நான் பார்க்கவில்லை. எவ்வாறு வேறுபடுகிறார் என்றே நோக்குகின்றேன். அந்த வேறுபாடு மேம்பாட்டை உண்டாக்குகிறதா இல்லையா என்பதை உங்கள் ஆய்வுக்கு விடும் தூண்டுகோலாக நான் இருக்கிறேன்.
நாரா நாச்சியப்பன்