குயிற் பாட்டு/நூலாசிரியர் வரலாறு

(குயில் பாட்டு/2. குயிலின் பாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நூலாசிரியர் வரலாறு

'குயிற் பாட்டு' என்னும் இச்சிறு நூலை இயற்றிய ஆசிரியர் தேசிய கவி சி. சுப்பிரமணிய பாரதியார் ஆவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டையபுரம் என்னும் ஊரில் பார்ப்பனர் குலத்தில் தோன்றியவர். இவருடைய பெற்றோர் சின்னச்சாமி ஐயர், இலக்குமியம்மாள் என்போர் ஆவர். இவர் கி.பி. 1882 ஆம் ஆண்டு, திசம்பர் 11 ஆம் நாள் (கார்த்திகைத் திங்கள் மூல நாள்) பிறந்தார். இவர் தயது ஐந்தாம் வயதில் தாயை இழந்தார் அதனால் இவர் தந்தையார் 1889 இல் வள்ளியம்மாள் என்னும் வனிதையரை மறுமணம் புரிந்துகொண்டார். இந்த அம்மையாரே பாரதியாரைச் சீருடன் போற்றி வளர்த்த செவிலித்தாய் ஆவர். பாரதியாருக்குக் 'பாகீரதி' என்னும் ஒரு சகோதரியும் இருந்தார்.

தந்தையாராகிய சினனச்சாமி ஐயர் சிறந்த தமிழ்ப் புலமை யுடையவராதலின் பாதியார் அவரிடமே ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் தமது இளம்பருவந் தொட்டே இனிய செய்யுட்களை இயற்றி வந்தார். ஆதலின் இவரது பத்தாண்டுப் பருவத்தில் எட்டையபுர மன்னர், புலவர் பலர் கூடிய தமது அரசவையில் இவருக்குப் 'பாரதி' என்ற பட்டத்தைச் சூட்டிப் பாராட்டினார் '1894 இல் திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் கல்வி பயிலத் தொடங்கிய பாரதியார் அங்கு ஐந்தாம் படிவம் வரை (ஒன்பதாம் வகுப்பு) வரையில் பயின்றார். இவர் திருநெல்வேலியில் கல்வி கற்கும் காலத்திலேயே 1897 சூன் 15 ஆம் நாளில் கடையம் செல்லப்பா ஐயரின் மகளார் செல்லம்மாளைத் திருமணம் புரிந்து கொண்டார்.

1898 சூன் மாதம் தந்தையார் காலமான காரணதுதால் பாரதியார், காசியில் வாழ்ந்து வந்த தம் அத்தையார் குப்பம்மாளின் ஆதரவில் 1898 இல் காசி இந்துக் கலாசாலையில் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் அலகபாத்துப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வில் முதல்வராகத் தேறினார். 1902 இல் எட்டையபுர மன்னரின் அழைப்பை அன்புடன் ஏற்று ஆங்கு வந்து சேர்ந்தார். ஆங்கு அரசவைக் கவிஞராகப் பணியேற்று அணிபெற்று விளங்கினார். ஆங்குத் தம் மனைவியுடன் இனிய இல்லறத்தை நடத்தினார். அடுத்த ஆண்டிலேயே அரசவைப் புலவர் பணியினின்று நீங்கி, மதுரைச் சேதுபதி கலாசாலையில் தமிழாசிரியராய்ப் பணியேற்றார். 1904 இல் சென்னை சென்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழுக்குத் துணையாசிரியராய் பணியேற்றார். இந்நாளில்தான் பாரதியாருக்குத் தங்கம்மாள் என்னும் மூத்த மகள் தோன்றினார்.

1967—எப்பிரல் திங்களில் பாரதியார் ‘இந்தியா‘ என்ற செய்தித்தாளின் ஆசிரியரானார். அப்போது ‘பாலபாரதம்‘ என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். 1909 இல் தாம் பாடிய சுதேச கீதங்களை வெளியிட்டார். இந்நாளில் பாரதியார் இந்திய விடுதலைக் கிளர்ச்சியின் காரணமாக நாடு கடத்தப்பட்டுப் புதுச்சேரியில் சென்று வாழலானார். அவர் மனைவி செல்லம்மாளும் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இங்கு வாழ்ந்த காலத்தில்தால் கண்ணன் பாட்டு, ‘குயிற் பாட்டு‘, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் பாரதியார் பாடி வெளியிட்டார். 1918 திசம்பரில் புதுச்சேரியை விட்டுப்புறப்பட்ட பாரதியாரைக் கடலூரில் அரசினர் கைது செய்தனர். அவர் நண்பர்கள் முயற்சியால் விடுதலை பெற்றார்; சில காலம் கடையத்தில் சென்று வாழ்ந்தார். 1920 இல் மீண்டும் ‘சுதேசமித்திரன்‘ துணையாசிரியராய்ச் சென்னை சென்று சேர்ந்தார். 1921 இல் காந்தியடிகளைக் கண்டு அளவளாவி இன்புற்றார்.

பாரதியார் சென்னையில் வாழ்ந்து வந்த பின்னாளில் ஒருநாள் கோவில் யானையொன்றற்குக் கரும்பருந்துங்கால் அதனால் தூக்கி யெறியப்பட்டார். அந்த அதிர்ச்சியால் 1921 செம்டம்பர் 11ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பை நிலைநாட்டினார். அவரது அழியாத நினைவுச் சின்னமாக அவர் தோன்றிய எட்டயபுரத்தில் 1948 ஆம் ஆண்டில் பாரதி மண்டபம் எழுப்பப் பெற்றது. ஆதனை அந்நாளில் மேற்கு வங்க ஆளுநராக விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரியார் அவர்கள் திறந்து வைத்தனர்.