குருகுலப் போராட்டம்/கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

கலாச்சாரத்தைக் காக்க
ஒரு குருகுலம்

திருச்சிராப்பளிள்ளியின் ஒரு பகுதி வரகனேரி.

வரகனேரியில் வேங்கேடச ஐயர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இவருடைய தொழில் வட்டித் தொழில். செட்டியார்கள் செய்ய வேண்டிய வட்டித் தொழிலை வேங்கடேச ஐயர் திறமையாகச் செய்து நல்ல பலன் கண்டார்.

சாஸ்த்திரப்படி பார்ப்பனர்கள் செய்யக் கூடாத தொழில்தான்! அதைப் பார்த்தால் முடியுமா?

வேங்கடேச ஐயருக்கு இந்து மதத்தில் தீவிர மான பற்று இருந்தது. திருச்சி வட்டாரத்தில் பாதிரிமார்கள் செய்த மத மாற்றங்களைக் கண்டு இவர் மனம் கொதித்தார். பல படித்த பார்ப்பனர்களே மதம்மாறியது பெரும் வருத்தமளித்தது. மத மாற்றம் செய்து கொண்ட ஆட்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாறும்படி அவர் வற்புறுத்தினார். அவர்கள் மீண்டு வர ஒப்புக் கொண்டாலும், திருச்சியில் இருந்த பார்ப்பன சாஸ்திரிகள் அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவிலலை. ஒருமுறை மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துக்களாக விதியில்லை என்று கூறிவிட்டார்கள். வேங்கடேச ஐயர் நேரே காஞ்சிபுரம் சென்றார்.

காமகோடி பீடத்தின் தலைவராகிய அன்றைய சங்கராச்சாரியாரைச் சந்தித்தார். மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திலே சேர்த்துக் கொள்ள காமகோடி பீடம் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். சங்கராச்சாரியார் ஒப்புக் கொள்ள வில்லை. புனர் உபநயனம் செய்ய சாஸ்திரத்தில் இடமில்லை என்று மறுத்துவிட்டார்.

வேங்கடேச ஐயர் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். சங்கராச்சாரி யாரைக் காட்டிலும் தீவிர இந்து மதப் பற்றாளரான வேங்கடேச ஐயரின் மகன் தான் சுப்பிரமணிய ஐயர்.

சுப்பிரமணிய ஐயர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துத் தேர்ந்தார். ஆங்கிலேயர் ஒருவருக்குத் துணையாளராக இரங்கூன் சென்று, அங்கிருந்து, மேற்படிப்புக்கு இலண்டன் சென்றார்.

இலண்டனில் பாரிஸ்டர் படிப்புக்காகச் சென்ற சுப்பிரமணிய ஐயர், சைவ உணவுக்காக இந்தியா விடுதிக்குச் சென்று அங்குள்ள தீவிரவாதிகள் அணியில் சேர்ந்தார். தசராப் பண்டிகை விழாவுக்கு காந்தியடிகளைத் தலைமை தாங்க அழைத்த போது, கரந்தியடிகளைத் தீவிரவாதியாக மாற்ற முடியும் என்று எண்ணிய சுப்பிரமணிய ஐயர், பிற்காலத்தில் காந்தியடிகளின் அஹிம்சை வழியே சிறந்த தென்ற முடிவுக்கு வந்தார். காந்தியடிகள்தான் அவரைத் தன் வழிக்கு மாற்றினார்.

சுப்பிரமணிய ஐயர் பாரிஸ்டர் ஆகவில்லை. அவருடைய இலட்சியமெல்லாம், புரட்சிக்காரராக மாற வேண்டும் என்பதே. காந்தியடிகளால் மன மாற்றம் பெற்ற பின் - அகிம்சாவாதியான பிறகு அவர் அமைதியாகத் தொண்டு புரியத் தொடங்கினார்.

ஐயர், வேதம் உபநிடதம் ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர். திருக்குறளை ஐயம் திரிபறக் கற்றவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கம்பனின் கவித்திறம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் நூலும் ஒப்பற்றன.

ஆங்கிலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நூல் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த நூலாகும். பல மொழிகளில் பயிற்சி பெற்றவர்.

தம் இறுதிக் காலத்தில், பாரத கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘குருகுலம்’ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டார்.

காந்திய வாதியான ஐயர், தமிழகத்துச் சான்றோர்களிலே ஒருவராக மதிக்கப்பட்டார். சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கருத்துரைத்து வந்தார். அரவிந்தர் பாரதியார் போன்றவர்கள் போற்றும்படியான நிலையில் இருந்தார்.

நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்ட ஐயர் ஆங்கிலம், தமிழ், வடமொழி, இலத்தின் ஆகிய பண்டைய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஐயர் நாட்டிற்காகப் பல இன்னல்களை ஏற்றுக் கொண்ட ஐயர்.

இந்த நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் ஒரு குருகுலம் காண வேண்டும் என்று முனைந்தபோது, அதைத் தமிழகத்தில் உள்ள எல்லாத் தலைவர் களுமே வரவேற்றனர். அதற்கு நல்ல ஆதரவும் தர முன் வந்தனர்.

ஆனால் ஐயர் தொடங்கிய குருகுலம் ஒரு போராட்டத்திற்குக் காரணமாய் அமைந்துவிட்டது. வரகனேரி சுப்பிரமணிய ஐயர் என்ற பெயரைச் சுருக்கி வ.வே. சு. ஐயர் என்றுதான் பலரும் குறிப்பிடுவார்கள்.

ஐயர் காந்திய வாதியாக இருந்து பல புரட்சிக் கருத்துக்களைப் பேசுவார். சாதிவேற்றுமை கூடா தென்பார். ஆதிதிராவிடர்களுக்கும் வேதம் சொல்லிக் கொடுத்து பூனூல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கி விட்டால் வேற்றுமை ஒழிந்து விடும் என்பார். வான்மீகியை விட கம்பன் உயர்ந்த புலவன் என்று கட்டுரைகள் வரைவார். இருந்தாலும் ஆசாரங்களைக் கைவிடாமல் ஒரு ரிஷி போல வாழ்ந்து வந்தார். அதனால் அவரோடு நெருங்கிப் பழகிய வர்கள் மகரிஷி வ.வே.சு. ஐயர் என்று பெருமையாகக் குறிப்பிடுவார்கள்.

ஐயர் சொற்பொழிவாற்றும் போது தாம் ஒரு குருகுலம் அமைக்க விரும்புவதாகக் குறிப்பிடுவார். இதற்கு எல்லாரும் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.

ஐயர் ஒரு முறை கல்லிடைக் குறிச்சிக்குப் போயிருந்தார். அங்கே யிருந்த ஆசிரியர்கள் ஐயரைச் சந்தித்தார்கள்.

அவர்கள் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள். அதனால் கல்லிடைக்குறிச்சி தாலுக்கா போர்டு பள்ளியிலிருந்து வேலையை விட்டு விலகி விட்டார்கள்.

விலகிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறு பள்ளிக்கூடம் தொடங்கினார்கள்.

அதற்கு “திலகர் வித்தியாலயம்” என்று பெயரிட்டார்கள். அய்யர் கல்லிடைக் குறிச்சி சென்ற போது, குருகுலம் நடத்த வேண்டும் என்ற அவருடைய ஆசையை அறிந்த ஆசிரியர்கள், தங்களால் தொடர்ந்து நடத்த முடியாத “திலகர் வித்தியாலயத்தை” ஐயரை எடுத்து நடத்துமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.

பெரிய அளவில் திட்டம் போட்டிருந்த ஐயர், அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார்.

திலகர் வித்தியாலயத்து மாணவர்கள், தினந்தோறும் காலையில் தெருவில் பாட்டுப் பாடிக் கொண்டு வீடு வீடாகச் சென்று அரிசி வாங்கி வருவார்கள். சில இடங்களில் காய்கறியும் கிடைக்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சோறுகிடைத்து விடும். வசதியுள்ள மாணவர்கள் கொடுக்கும் பள்ளிக் கூடச் சம்பளம் ஆசிரியர்களின் சம்பளத்துக்குப் பயன்படும்.

அக்காலத்தில் பல ஊர்களில், பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் நடந்தன.

படிக்க வரும் பிள்ளைகள் அவரவர் வீட்டிலிந்து ஒவ்வொரு பிடி அரிசி கொண்டு வந்து ஆசிரியருக்குக் கொடுப்பார்கள்.

அவற்றைப் பிடி அரிசிப் பள்ளிக்கூடம் என்று சொல்லுவார்கள்.

திலகர் வித்தியாலயத்தை நடத்திக் கொண்டே ஐயர், பல ஊர்களில் குருகுலம் கட்டுவதற்குப் பெரிய இடம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

திருநெல்வேலியை அடுத்த சேரமாதேவியில் ஒருவர் தமது முப்பது ஏக்கர் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஐயர் அந்த நிலத்தைப் போய்ப் பார்த்தார். முப்பது ஏக்கருக்கும் ரூபாய் மூவாயிரம் விலை சொன்னார்கள்.

ஐயர் அந்த முப்பது ஏக்கர் நிலத்தை எப்படி யாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.

பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தான் என்ற ஊரில் வயி. சு. சண்முகனார் என்ற இலட்சிய வாதி ஒருவர் இருந்தார். அவர் காந்தியடிகளிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்.

காந்தியடிகள் தென்னாடு வந்த போது தம்முடைய இன்ப மாளிகை என்ற பெரிய பங்களாவில், காந்தியடிகளையும், அவருடன் வந்தவர்களையும் அழைத்து வந்து ஒரு வாரம் வரை தம் விருந்தினராக உபசரித்து மகிழ்ந்தவர்.

காந்தியடிகள் அவருடைய பொது நல ஈடுபாட்டைக் கண்டு, தம்முடன் சேர்ந்து தொண்டாற்றுமாறு அன்புடன் அழைத்தார்.

சண்முகனார் அடிகளின் அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாதபடி சில நீதிமன்ற வழக்குகள் தடுத்தன. காந்தியடிகள் அவற்றை யெல்லாம் உதறித் தள்ளி விட்டுத் தம்முடன் வந்து பொதுப் பணி செய்யுமாறு அழைத்தார்.

முழுநேர உழைப்பை நல்கா விட்டாலும் நாட்டு விடுதலைக்காக சண்முகனார் தம்மால் இயன்ற மட்டும் உழைத்தார்.

பிற்காலத்தில் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி யிருப்பதைக் கண்டும், காந்தியடிகள் அதிலிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய காலத்தில், சண்முகனாரும் வெளியேறினார். பின்னால் சண்முகனார், பெரியாரின் தொண்டராகி தன்மான இயக்கத்தை நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

பாரதியார், பாரதிதாசன் ஆகிய கவிஞர் பெரு மக்களுக்குச் சண்முகனார் பல முறை ஆதரித்து உதவியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சண்முகனாரின் கண்களில் ஐயரின் அறிவிப்பு வேண்டுகோள் தெரியவந்தது.

காந்தியவாதியான ஐயர், காந்தியடிகளின் நெறி முறையில் குருகுலம் நடத்துவார் என்று எண்ணிய சண்முகனார், சற்றும் காலம் தாழ்த்தாது குருகுலம் அமைக்க நிலம் வாங்குவதற்கு வேண்டிய தொகை மூவாயிரத்தையும் உடனடியாகக் கொடுத்து உதவினார்.

நிலம் வாங்கிய உடனே கட்டிடங்கள் கட்டுவதற்கும், பிற செலவுகளுக்கும் ஆயிரமும் நூறுமாகப் பல தமிழ்ப் பெருமக்கள் கொடுத்து உதவினார்கள்.

மளமள வென்று குருகுல வேலைகள் நடந்தன. கல்லிடைக் குறிச்சிப் பள்ளிக்கூடமும் குருகுலத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய மாணவர்கள் பலர் சேர்ந்தனர்.

குருகுலம் ஒரு இலட்சியப் பள்ளிக்கூடம். ஓர் இலட்சியவாதியான வ.வே.சு ஐயர் தலைமையில் இயங்குகிறது. எனவே தேசீய வாதிகள் பெரிய எதிர் பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளைக் குருகுலத்தில் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

ருருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் இலட்சியத் தலைவர்களாகப் பரிமளிப்பார்கள் என்ற எண்ணம் நாடெங்கும் உள்ள தேசீய வாதிகளின் உள்ளங்களில் ஒரு புதிய கனவைத் தோற்றுவித்தது.

சாதிபேத மற்ற, சமத்துவ மனப்பான்மையுள்ள, ஒன்றுபட்ட குடிமக்களை உருவாக்கும் ஓர் அமைப்பு உருவாகி விட்டதென்ற களிப்பில் நாட்டுத் தலை வர்கள் இருந்தார்கள்.

வ.வே.சு.ஐயர் நாட்டுக் காங்கிரஸ் செயற் குழுவுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். தேசீயக் குருகுலத்துக்கு நிதி உதவி செய்யுமாறு அந்த விண்ணப்பம் கேட்டுக் கொண்டது.

அடுத்துக் கூடிய செயற்குழுவில் இவ் விண்ணப்பம் ஆலோசனைக்கு வைக்கப்பட்டது.

1925ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவராக வரதராசுலு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். அதற்கு முந்திய இரண்டு ஆண்டு தலைவராக இருந்த பெரியார் அந்த ஆண்டு செயலாளராக இருந்தார். மற்றொரு செயலாளராக இருந்தவர் கே. சந்தானம். செயற்குழு உறுப்பினராக இருந்தவர்கள்

திரு விக

எஸ். இராமநாதன்

இரத்தினசாமிக் கவுண்டர்

இராமச்சந்திரன் செட்டியார்

சிங்காரவேலுச் செட்டியார்

தங்கப் பெருமாள்

ஆதிநாராயணன் செட்டியார்

ஒ. பி. இராமசாமி ரெட்டியார்

இராசகோபாலாச்சாரி

சாமிநாத சாஸ்திரி

டி.எஸ்.எஸ். ராஜன்

ஹாலாஸ்யம் ஐயர்

என்.எஸ். வரதாச்சாரி

அப்பாராவ்

வி. கிருஷ்ணமாச்சாரி

குருகுலம் ஒரு தேசீய நிறுவனம். எனவே அதன் வளர்ச்சிக்கு காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்குவதென்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. முதல் பகுதியாக ரூபாய் ஐயாயிரம் வழங்குவதாகவும், சிறிது காலங்கழித்து ஐயாயிரம் கொடுப்பதாகவும் செயலாளர் பெரியார் அறிவித்தார். உடனடியாகக் காங்கிரஸ் பணத்திலிருந்து ரூபாய் ஐயாயிரத்துக்கு செக் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில் மலேயா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக் குறைய முப்பதாயிரம் ரூபாய் வசூலித்துக் கொடுப்ப தென்றும் தெரிவிக்கப்பட்டது. தீர்மானித்தபடி பெரியார் உடனடியாக ஐயாயிரம் ரூபாய்க்குச் செக் கொடுத்துவிட்டார்.

குருகுல வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியது. காங்கிரசே பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறது என்றவுடன் நாட்டுணர்வு படைத்த பல செல்வர்கள் நிதிஉதவி வழங்கினார்கள்.

ஆனால், மிகக் குறுகிய காலத்தில் வ.வே.சு ஐயர், மக்கள் நல்லெண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டார்.

பாரத அன்னையின் அடிமை விலங்கை யொடித்தெறியப் பாடுபட்ட இளந் தொண்டர்கள் ‘நவபாரதம்’ எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்களோ, அந்தக் கனவை யெல்லாம் குலைப்பதாக இருந்தது. குருகுலத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில், அதுதான் சரியென்று வாதிட்டார் அய்யர்.

அய்யர் செய்தது சரியென்று வாதிட்டார்கள். இராசாசி போன்ற அன்றைய பார்ப்பனத் தலைவர்கள்.