குருகுலப் போராட்டம்/காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

காங்கிரஸ் செயற்குழுவில்
கருத்துப் போராட்டம்

1925ஆம் ஆண்டு சனவரி மாதம் 17ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இந்தச் செயற்குழுவில், குருகுலத்தில் சாதிப்பிரிவினை பற்றி ஆராய மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழுவினர்

கணபதி சாஸ்திரி

வி. தியாகராசச் செட்டியார்

கே.எம். தங்க பெருமாள் பிள்ளை

ஆகியோர் ஆவர்.

இவர்கள் குருகுலம் சென்று நேரில் விசாரனை செய்து அறிக்கை கொடுத்தனர்.

குருகுலத்தில் சாதிவேறுபாடு நிலவுவது உண்மை தான் என்றும், அதை நடத்தி வரும் வ.வே. சு. ஐயரே இரண்டு பிராமணப் பையன்களுக்கு தனியாக உணவருந்த ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும், இதை யொட்டிப் பார்ப்பனர்களுக்கு தனிப் பந்தி என்றும் மற்றவர்களுக்குத் தனிப்பந்தி என்றும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

ஒரு தேசிய நிறுவனமான குருகுலத்தில் சமபந்தி உணவு தான் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால், குருகுலம், காங்கிரஸ் கட்சியின் நிறுவனம் அல்ல வென்றும், அதற்கு, தான் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை என்றும் ஐயர் கூறி விட்டார்.

இதை யறிந்ததும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவும், செயலாளர் பெரியார் ஈவேராவும் கூடி ஏற்கனவே கொடுத்த ஐயாயிரம் ரூபாய் தவிர, மறுபடியும் காங்கிரஸ் நிதியிலிருந்து கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்த மீதி ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். இந்த முடிவை யறிந்த மறுநாளே ஐயர், மற்றொரு செயலாளரான கே. சந்தானம் அவர்களிடமிருந்து மீதி ஐயாயிரம் ரூபாய்க்கான செக்கை இரகசியமாக வாங்கிக் கொண்டுவிட்டார்.

ஏற்கனவே குருகுலத்துக்கு நன்கொடையளிப்பதாக வாக்களித்திருந்த பெருமக்களை ஐயர் அணுகிய போது, சாதி வேற்றுமையை உருவாக்கும் நிறுவனத்துக்குத் தாங்கள் உதவத் தயாராக இல்லை என்று கைவிரித்து விட்டனர்.

மலேயா, சிங்கப்பூர்வாழ் தமிழ் வணிகப் பெரு மக்களும், தாங்கள் வாக்களித்தபடி பணம் தருவதற்கில்லை என்று கூறிவிட்டனர்.

குருகுல நடைமுறைகளில் தலையிட காங்கிரசுக்கு உரிமை கிடையாது என்று ஐயர் தெரிவித்ததை யொட்டி, டாக்டர் வரதராசுலு நாயுடு, குருகுலத்திற்கு நன்கொடை யளித்த பெருமக்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

நன்கொடையாளர் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு தீர்மானம் நிறைவேறியது.

“பார்ப்பனர்களுக்குத் தனிச் சாப்பாடு, மற்றவர்களுக்குத் தனிச் சாப்பாடு என்ற வேறுபாட்டைக் குருகுல நிர்வாகிகள் உடனடியாக நிறுத்தி, சமபந்தி உணவு அளிக்க முன்வரவேண்டும். அப்படியில்லா விட்டால், சத்தியாக்கிரகம் செய்து குருகுலம் கைப் பற்றப்படும்” என்று தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தமிழ்த்தென்றல் திரு வி.க நடுநிலையான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

குருகுலத்துக்கு நன்கொடை யளித்த இரண்டு பார்ப்பனர்களின் சிறுவர்களுக்கு தனியுணவு வசதி செய்வதாக வாக்களித்து நன்கொடை வாங்கியதாக ஐயர் கூறுகிறார். வாக்களித்துவிட்டபடியால் - இந்த ஆண்டு படிப்பு முடியும் வரை தனி யுணவு பரிமாறும் முறையை வைத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு முதல் சமபந்தி உணவு தான் அமுலில் இருக்கும் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து சாதி வேற்றுமை பாராமல் நிறுவனத்தை நடத்த ஐயர் முன் வரவேண்டும். தமிழ் மக்களும் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

வ.வே.சு. அய்யர் இந்த நடுநிலையான கருத்துக்கு ஒத்துப் போவதற்குப் பதிலாக, திரு.வி.க. சாதித் துவேஷ சக்திகளின் கைப்பாவை ஆகிவிட்டார் என்று கூறிவிட்டார்.

சாதிவேற்றுமை காட்டக்கூடாது என்று சொல்வது - பார்ப்பனர்களின் பார்வையில் சாதித் துவேஷம்!

ஒரே நிறுவனத்தில் உள்ள சிறுவர்களிடையே, பாகுபாட்டைப் புகுத்தக் கூடாது என்று சொல்வது சாதித் துவேஷம்!

இந்தச் சாதித் துவேஷம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு - பார்ப்பனர்களுக்குப் பிடிக்காத தலைவர்கள் தொண்டர்களுக்கெல்லாம் அவர்கள் துவேஷ முத்திரை குத்தினார்கள்.

மிக வசதியாக வாழ்ந்த தமிழர்கள் சிலரும் அவர்களுக்குப் பக்கவாத்தியமானார்கள்.

காங்கிரஸ் செயற்குழு திருச்சியில் 1925 ஏப்ரல் 27ம் நாள் மீண்டும் கூடியது.

கூட்டத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடு தலைமை யேற்றார். அவர் தமது தலைமை உரையில் குருகுலம் தொடர் பான அன்றைய நிலையை விளக்கிப் பேசினார்.

அது ஒரு தேசிய நிறுவனம் என்ற நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை யளித்தது. காங்கிரஸ் கொள்கைப்படி ஒரு பொது நிறுவனத்தில் சாதி வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வையும் வளர்க்கும் முறையில் எந்தச் செயலும் நிகழக் கூடாது. அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கரை கொண்டுதான் காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் தீர்மானித்தது. அது தனிப்பட்டவருடைய நிறுவனம்; அதில் காங்கிரஸ் தலையிடக் கூடாது என்று கூறுவது பொருத்த மில்லை.

‘நன்கொடை கொடுத்த ஒவ்வொருவருக்கும் அதன் நடைமுறையில் அக்கறை யுண்டு. எனவே குருகுலத்தில் இனிமேல் சமபந்தி யுணவுதான் வழங்கப்பட வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்’ என்று கூறினார்.

வ.வே.சு ஐயர் அவ்வாறு வாக்குறுதி தந்திருந்தால் தீர்மானம் தேவையில்லையே என்று சிலர் கருத்துரைத்தார்கள். ஐயர் அப்படி வாக்குறுதி தர வில்லை என்றும், பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்துள்ள அறிக்கைகளின் மூலம் அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் பலர் எடுத்துக் கூறினார்கள்.

பெரியார் குறுக்கிட்டு இரண்டாவது முறையாகத் தர வேண்டிய ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கக் கூடாதென்று செயற்குழு உறுப்பினர்கள் முடிவு செய்திருக்க, இணைச் செயலாளரான கே. சந்தானம் தமக்குத் தெரிவிக்காமல் செக் கொடுத்துவிட்டார் என்றும், அது கண்டனத்துக்குரியதென்றும் கூறினார்.

பார்ப்பன உறுப்பினர் ஒருவர் இடைமறித்து, “வ.வே.சு ஐயர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தக் தீர்மானிக்கப்பட்டது. பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வருணப் பாகுபாடும் சாதிப்பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேதவிதி முறைப்படி தானே ஐயர் நடந்து கொண்டிருக்கிறார். இதிலே என்ன தவறு?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் ஈரோட்டுப் பெரியார் சினங் கொண்டார்.

“சாதிப் பாகுபாட்டுக்கும் உயர்வு தாழ்வுக்கும் வேதமும் சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்!” என்றார்.

"ஆரியர்களின் வேதகால காலாச்சாரம் தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிட கலாச்சாரத்தில், சாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்ற வேண்டும்” என்று டாக்டர் வரதராசுலு நாயுடு கூறினார்.

மற்றொரு பார்ப்பன உறுப்பினர் பேசுகையில்: “அரசாங்கப் பள்ளிகள் நடத்தும் பல உணவு விடுதிகளில் வேறு வேறு இடங்களில் தான் உணவு பரிமாறப் படுகிறது. இன்னும், சில தனியார் பள்ளிகளிலும் அவ்வாறு தான் நடக்கிறது. ஐயர் நடத்தும் குருகுலத்தில் மட்டும் இதை நீங்கள் வற்புறுத்துவதன் உள் நோக்கம் என்ன?” என்று கேட்டார்.

“சாதிவேற்றுமை கூடாது என்றும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும் ஐயர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செய்துவிட்ட தவறுக்கு உதாரணங்களை அடுக்குவதால் பயனில்லை. இனிமேல் சமபந்தி நடக்குமா நடக்காதா என்பது தான் பிரச்சினை” என்று நன்கொடையாளர்களில் ஒருவர் கேட்டார்.

“இங்குள்ள பல தலைவர்கள் சாதிவேற்றுமை கூடாதென்றும், இந்திய மக்கள் எல்லோரும் சமம் என்றும் பொதுக் கூட்டங்களிலே பேசியவர்கள், இன்றைக்கு, வேதம், சாஸ்திரம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது” என்றார் ஒருவர்.

“நன்கொடை கொடுக்கும் போது சமபந்தி நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டதா அல்லது வாக்களிக்கப்பட்டதா? பள்ளிக்கூடத்துக்குப் பாடம் நடத்த நன்கொடை கொடுத்தீர்களா? சமபந்திக்கென்று கொடுத்தீர்களா?” என்று ஒரு ஐயர் கோபமாகக் கேட்டார்.

“இனிமேல் சமபந்தி நடத்துவதாக வாக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நன்கொடை களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று ஒரு தமிழர் ஆவேசமாகக் கூறினார்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசப் பேச சூடு ஏறிக் கொண்டே யிருந்தது.

தலைவர் டாக்டர் நாயுடு எல்லாரையும் அமைதிப் படுத்தினார்.

“இப்பொழுது நான் தீர்மானத்தை வாக்களிப்புக்கு விடுகிறேன்.” உங்கள் வாக்களிப்பின் படி ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறித் தீர்மானத்தை வாசித்தார்.

“குருகுல வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுக்க நேர்ந்ததற்கு இச் செயற்குழு வருந்துகிறது”

தீர்மானத்தை டாக்டர் நாயுடு படித்தார்.

செயற்குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

“குருகுலத்தின் நடைமுறை சரியில்லாததால் கொடுத்த தொகையைத் திரும்ப வசூலிக்கத் தீர்மானிக்கிறது” என்று அவர் திருத்தம் கூறினார்.

இன்னொருவர் செயற்குழுவையே குறை கூறி ஒரு திருத்தம் கொண்டு வந்தார். ‘குருகுல நிர்வாகிகளிடம் தெளிவான வாக்குறுதி பெறாமல் நிதி கொடுக்கத் தீர்மானித்ததற்காக இக் கூட்டம் வருந்துகிறது’ என்பது அந்தத் தீர்மானம்.

மூன்றாவதாகச் சேலம் சி. இராசகோபாலாச் சாரியார் (இராசாசி) ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

‘சேரமாதேவி குருகுலம் போன்ற நிறுவனங்களின் நடைமுறையில் பொது மக்கள் தலையிடுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது. வேறுபாடு காட்டாமல் உணவு பரிமாற நடவடிக்கை எடுக்குமாறு குருகுல நிர்வாகிகளுக்கு இச் செயற்குழு ஆலோசனை கூறுகிறது.’

தவறு நடந்ததைக் கண்டிக்க முற்பட்ட செயற் குழுவையே கண்டிப்பதாகக் கூறும் இந்தத் திருத்தத்தை இராசாசி போன்ற ஒரு மூத்த தலைவர் கொண்டு வந்தது குறித்து செயற்குழுவின் பெரும்பாலோர் மறுத்தும், வருத்தம் தெரிவித்தும் பேசினார்கள்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவற்றை நிலைநாட்டுவதற்குப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து கொள்ளுகிறார்கள் என்பதற்கு இந்தத் திருத்தம் நல்ல எடுத்துக் காட்டாகும்.

இந்த மூன்று திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திரு எஸ். இராமநாதன் அவர்கள் நான்காவதாக ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூக வாழ்க்கையில் பாராட்டக் கூடாது என்று இந்தக் குழு கருதுகிறது. இந்தக் கொள்கையை தேசிய இயக்கம் தொடர்பான எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. சேரமாதேவி குருகுலத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவுமாறு இந்தக் குழு

1. தேவகோட்டை வி. தியாகராசச் செட்டியார்

2. எஸ். இராமநாதன்

3. ஈரோடு வே. இராமசாமி

ஆகியவர்களைக் கண்காணிப்புக் குழுவாக நியமனம் செய்கிறது.

திரு எஸ். இராமநாதன் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகு, சி இராசகோபாலாச்சாரியார் மீண்டும் தலையிட்டுப் பேசினார்.

"சேரமாதேவியில் உள்ள குருகுலம் போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவது கடினம்.

“இப்போது அதுஉருவாகியுள்ளது. ஐயர் நல்ல கல்விமான். சிறந்த ஞானி. நாளாவட்டத்தில் அவரே சரிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

“தனிப்பந்திமுறை என்பது எங்கும் நடைமுறையில் உள்ளது தான். பல கல்வி நிறுவனங்களிலும், கோயில்களிலும், பொது விழாக்களிலும் இப்போது தனிப்பந்தி முறைதான் உள்ளது. அப்படியிருக்க சேரமாதேவியில் மட்டும் சமபந்தி வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது.

ஐயர் குருகுலமே தன் வாழ்க்கை என்று அர்ப்பணித்துள்ளார். ஐயரை மனம் வருந்தச் செய்வது அழகல்ல’ என்று கூறினார்.

அவரை யடுத்து டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் பேசினார். “நான் ஐயரிடம் நெருங்கிய நட்புள்ளவன். அவருடைய தியாகம் பெரியது. உழைப்பு மிகப் பெரியது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமபந்தி நடைபெறுவதால் நாடு முன்னேறிவிடப் போவதில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா? என்று தான் பார்க்க வேண்டும். ஒன்றாகச் சாப்பிடா விட்டால் ஒன்றும் கேடு வரப் போவதில்லை. நான் அண்மையில் ஒரு சேரிக்கு நல்வாழ்வுப் பிரசாரத்துக்காகப் போனேன். பார்ப்பான் வந்ததால் சேரிக்குத் தோஷங் கழிப்பதற்காகப் பானைகளைப் போட்டு உடைத்தார்கள். பிராமணர்களோடு ஒன்றாக இருந்து உணவருந்த வேண்டும் என்று போராடுகிறவர்கள், பஞ்சமர்களோடு ஒன்றாக இருந்து சாப்பிடத் துணிவார்களா?” என்று பெரிதாகச் சாதித்துவிட்டது போலப் பேசினார்.

பஞ்சமர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறைதான் சமபந்தி விருந்து முறை என்பதை மறந்துவிட்டுப் பேசினார் ராஜன்.

தொடர்ந்து, “வ.வே.சு. ஐயர் சமபந்தி நடத்துவதாக யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை. யாரும் வாக்குறுதி வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவும் இல்லை. இந்த நிலையில் அவரை சமபந்தி தான் நடத்த வேண்டுமென்று வற்புறுத்துவது சரியில்லை” என்று தெளிவாகப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது போலப் பேசினார்.

ராஜனுக்குப் பிறகு திரு.வி. கலியாணசுந்தரனார் பேசினார்.

நானும் வ.வே.சு ஐயரும் நெருங்கிப் பழகியவர்கள்.

குருகுலம் எப்படி யெப்படி அமைய வேண்டும் என்று பல முறை என்னுடன் கலந்து ஆலோசித்துத்தான் ஐயர் குருகுலத்தை உருவாக்கினார். குருகுலத்தில் தமிழ் இலக்கியப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லையே என்று நான் வருத்தம் தெரிவித்த போது, கூடிய விரைவில் சிறப்புத் தமிழ்ப் பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஐயர் உறுதி கூறியிருக்கிறார்.

மகாத்மா காந்தியவர்கள் குருகுலம் குறித்துப் பேசும் போது, “நடந்தது சரி, இனிமேல் சமபந்தியே நடத்துவதாக வாக்குக் கொடுங்கள். நான் நாயுடு விடமும் நாயக்கரிடமும் பேசி இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.” என்று கூறினார்.

அண்ணல் காந்தியடிகளின் சொல்லையும் ஐயர் ஏற்றுக் கொள்ளவில்லை.

காந்தியடிகள் பேச்சுக்கு ஐயர் மதிப்புக் கொடுத்திருந்தால், பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்றார் திரு.வி.க.

குருகுலத்திற்கு இடம் வாங்க முதன் முதலில் பணம் கொடுத்தவர் வயி.சு. சண்முகனார். அவர் செயற்குழு உறுப்பினரல்லர். இருந்தாலும் சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்தார்.

அவர் கூறினார்; ஐயர் பெரிய சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி. தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார் என்று எதிர்பார்த்தேன்.

இந்த சமபந்தி பிரச்சினை புயலாக எழுந்த பிறகு நான் சேரமாதேவிக்குச் சென்றேன். நட்புரி மையோடு ஐயரிடம் பேசினேன். சமரசமாகப் போக வேண்டும் என்று எடுத்துச் சொன்னேன்.

ஆனால் ஐயர் பிடித்த பிடியை விடவில்லை. குருகுலத்தின் எதிர்காலத்தை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வை அவர் மதிக்கவில்லை. எதற்கும் ஒத்து வரவில்லை.

இந்த நிலையில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றி அவரைக் கண்டிப்பதைவிட வேறு வழியில்லை என்று மிக வருத்தத்துடன் பேசினார்.

ஈரோட்டு இராமசாமிப் பெரியார் பேசும்போது,

இது வெறும் சமபந்தி பற்றியது மட்டுமல்ல. ஒரு ஜாதிக்காரர்கள் இன்னொரு ஜாதியைக் கேவலப் படுத்துகின்ற செயல்.

இது பிராமணர்களும் மற்ற ஜாதிக்காரர்களும் பொருத்த விஷயம் மட்டுமல்ல. பஞ்சமர்களும் நமக்குச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இன்று நாட்டில் அப்படியிருக்கிறது; இப்படி யிருக்கிறது அதன்படி நாமும் இருந்து விடலாம் என்பதல்ல; நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம்.

இந்த நிலையில் நாம் எல்லோரும் டாக்டர் நாயுடுவை ஆதரிக்க வேண்டும். அவருடைய தலைமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். எனவே திரு எஸ். இராமநாதனுடைய திருத்தத்துடன் நாம் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம். என்றார். வந்திருந்த 26 பேரில் 19 பேர் ஆதரித்தார்கள். 7 பேர் எதிர்த்தார்கள்.

கூட்டத்திற்குக் கூட்டம் சாதி வேற்றுமையை ஒழிப்போம் என்று பேசிய பெரும் புள்ளிகள், நான்குபேர், கூட்டம் முடிந்தவுடனே செயற்குழுவிலிந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்கள். நான்குபேரும் பார்ப்பனத் தலைவர்கள்.

1. சி. இராஜகோபாலாச்சாரியார்

2. டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன்

3. கே. சந்தானம்

4. டாக்டர் டி.வி. சுவாமிநாதன்.

இந்த நான்குபேரும் காந்தியடிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், தாங்களே காந்தியின் வாரிசுகள் என்று காட்டிக் கொள்பவர்கள்.

இவர்கள் குருகுலப் பிரச்சினையில் வ.வே.சு. ஐயர் செய்த செயல் தவறு என்று சொல்வதற்குப் பதில் - தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அவரைத் திருத்துவதற்குப் பதில், அவரைத் தாங்கிப் பிடித்தார்கள். அவருடைய தவறே நேரானது என்று வாதிடத் தயங்கவில்லை.

வேதம்

சாஸ்திரம்

வருணாசிரம தர்மம்

இவற்றை நியாயப்படுத்தி வேத கலாச்சாரம் தான் தங்கள் பாரத கலாச்சாரம் என்றும். அதை நிலை நாட்டுவதே தங்கள் கடமை யென்றும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

வ.வே.சு. ஐயரையே நினைத்துப் பார்ப்போமானால் அவர் பெரிய பண்டிதர். பல மொழிகள் அறிந்தவர். நல்ல இலக்கியப் பயிற்சி உள்ளவர். வேதம் உபநிடதம் போன்ற நூல்கள் மட்டுமல்லாமல், வடமொழி இலக்கியங்களும், கம்பராமாயணமும், சங்க நூல்களும், திருக்குறளும் பயின்றவர். கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

ஆங்கில இலக்கியங்களும் இலத்தின் மொழி இலக்கியமும் கற்றவர்.

மகரிஷி என்று பாராட்டப்பட்டவர். மேலை நாடுகளுக்குப் போய் வந்தவர். பல பெரிய மனிதர்களோடு பழகியவர். அவரே ஒரு பெரிய மனிதராக மதிக்கப்பட்டவர்.

பழந்தமிழர்களின் நாகரிகச் சிறப்பை நன்கு தெரிந்தவர்.

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யுடையவர் சாதிப்பாகுபாடுகளை நிலை நாட்டும் செயலைச் செய்தார் என்றால் அதன் பொருள் என்ன?

கற்றும் அறிந்தும் பிறர்க்குரைத்தும்
தான் அடங்காப்
பேதையிற்
பேதையார் இல்

என்ற பொன்மொழிக்கிணங்க அவர் எந்த நிலையிலும் யார் பேச்சும் கேட்காமல் செயல்பட்டார். இது ஒரு பேதைமை என்று நாம் அலட்சியமாக எண்ணிவிடுவதற்கில்லை.

இவரைச் சார்ந்தவர்கள்; இவர் போக்கை ஆதரித்தவர்கள்; அதற்காக வாதாடியவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களும் மிகப் பெரிய மேதைகளே! பேதைகள் அல்லர்!

மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய மேதையை அளவிட்டுச் சொல்வதற்கில்லை.

கே. சந்தானம், மிகப் பெரிய அரசியல் தத்துவ வல்லுநர்.

டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் மூதறிஞர் ராஜாஜியின் நிழல் போன்றவர் டாக்டர் சுவாமிநாதன் பெரிய இலக்கிய மேதை!

இவர்களெல்லாம் வ.வே.சு ஐயர் செய்த ஒரு மோசமான செயலை ஆதரிக்கிறார்கள் என்றால் அதன் பின்னணி என்ன?

நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேதம்

உபநிடதங்கள்

பாரதம்

இராமாயணம்

18 புராணங்கள்

மனுநீதி

கீதை

இப்படிப்பட்ட நூல்களை இவர்கள் போற்றுவார்கள்.

உலகத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஏற்பட்டாலும் இந்த அடிப்படை யிலிருந்து சிறிதும் நழுவிப் போகக்கூடாதென்ற எண்ணமுடையவர்கள்.

இதன் கருத்து என்ன?

வேதம் முதலான நூல்களெல்லாம் பார்ப்பனர்கள்தான் வாழப் பிறந்தவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தான் உயர்ந்த நிலைக்கு ஏறப் பிறந்தவர்கள்

இவர்களுடைய ஆதிக்கத்தின் கீழேதான் இந்த உலகம் இயங்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாந்த நேயத்துக்கு மாறுபட்ட கருத்துக்களை உடையன, இந்தப் பழங்கால இலக்கிய நச்சுக்குப்பிகள்! இவை நிலைத்திருக்க வேண்டும் என்றும், இவற்றின் உதவியால் தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் எல்லாவிதமான வசதிகளோடும் வாழ வேண்டும் என்றும் எண்ணமுள்ளவர்கள். இதற்கு வ.வே.சு ஐயர் விதிவிலக்கல்லர்.

மூதறிஞர் ராஜாஜியும் விலக்கல்லர். கே. சந்தானம், ராஜன், சுவாமிநாதன் போன்றவர்களும் இத்தகையவர்களே!

இவர்களுடைய பிடிக்குள் அகப்பட்டவர்கள் தன்னிச்சையாகச் சிந்திக்க முடியாது.

இதைத் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.