குருகுலப் போராட்டம்/கோடானு கோடி இந்தியரின் வெற்றி முழக்கம்

கோடானு கோடி
இந்தியரின் வெற்றி முழக்கம்

குருகுலப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே பெரியார் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதி வேண்டும் என்று போராடி வந்தார்.

குருகுலப் போராட்டம் அவருடைய போராட்டத்தைத் தீவிரமாக்க உதவியது என்றுதான் கூற வேண்டும்.

வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கை பார்ப்பனரல்லாதாருக்காகப் பாடுபட்டு வந்த நீதிக் கட்சியினரால்தான் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.

நீதிக் கட்சியின் முக்கிய கொள்கையாகவே இது அமைந்திருக்கிறது.

காங்கிரசில் இருந்த பெரியார் இந்தக் கொள்கையின் நியாயத்தை அப்போதே உணர்ந்திருந்தார்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் என்ற இந்தக் கொள்கையை காங்கிரசும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கருதினார். இதற்காக, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று 1920ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டு வந்தார்.

1920-ல் இந்தத் தீர்மானத்தைப் பெரியார் கொண்டுவந்தார். திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு எஸ்.சீனிவாச ஐயர் அவகள் தலைமையில் நடந்தது, தலைவர் இந்தத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார்.

1921-ல் இராசகோபாலாச்சாரியார் தலைமை யில் தஞ்சாவூரில் நடந்த காங்கிரஸ் மாகாண மாநாட்டில் பெரியார் மீண்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தலைவர் இந்தத் தீர்மானத்தைத் தந்திரமாகப் பேசித் தடுத்துவிட்டார்.

1922-ல் திருப்பூரில் காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அதன் தலைவர் விஜயராகவாச் சாரியார். அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

1923-ல் தீர்மானம் மாநாட்டில் முன் மொழியப் பட்டது. ஆனால் எதிர்ப்பு ஏற்பட்டு அது கலவரமாக மாக மாறும் நிலையில் கைவிடப்பட்டது.

1924-ல் திருவண்ணாமலை காங்கிரஸ் மாநில மாநாடு பெரியார் தலைமையில் நடந்தது. அதில் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்திருந்தார் பெரியார். ஆனால், எஸ் சீனிவாச ஐயங்கார், இந்தத் தீர்மானத்தை முன்மொழியவிடாமல் தடுப்பதற்காக ஏராளமான ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து கூச்சலிட்டுக் குழப்பம் செய்து முன்மொழிய, விடாமல் தடுத்துவிட்டார்.

1925-ன் தொடக்கத்தில்தான் குருகுலப் போராட்டம் நடந்தது. 1925 இறுதியில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவர முயன்றார் பெரியார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க அவரும் தீர்மானத்தை முன்மொழிய அனுமதிக்கவில்லை.

காங்கிரசால் தமிழர்கள் முன்னேற வழியே யில்லை. இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறிய பெரியார், மாநாட்டிலிருந்து வெளியேறினார். காங்கிரசிலிருந்து முற்ற முழுக்க விலகி விட்டார்.

காங்கிரசில் உறுப்பினராக இருந்த பல தமிழன்பர்கள் பெரியாரைப் பின்பற்றிக் காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகி பெரியார் அணியில் சேர்ந்து கொண்டார்கள்

பெரியார் அன்று முதல் சமூகநீதியை நிலை நாட்டுவதற்காக தன்மான இயக்கத்தைத் தோற்று வித்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார்.

அவருடைய உழைப்பின் பலன் இன்று கனியத் தொடங்கியிருக்கிறது.

தோற்றபோதெல்லாம் துவளாமல் அடுத்தடுத்து அவர் இடைவிடாது முயன்று வந்த காரணத்தால், இன்று நாம் வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்கி யிருக்கிறோம்.

பெரியாருடைய இடைவிடாத முயற்சியால் இன்று நாம் - தமிழ் மக்கள் உயர்ந்து வருகின்றோம்.

இந்த வெற்றி நடை. நம்மை முழு வெற்றி யிருக்கும் திசை நோக்கிச் செல்லப் பயன்படுகிறது.

சமூகநீதிக் குரல் இந்தியாவெங்கிலும் ஒலிக்கின்றது.

பெரியார் எழுப்பிய அந்தக் குரல் இன்று வெற்றிக் குரலாய் எங்கும் மக்கள் வாழ்வில் சமத்துவம் மலர வழிவகுக்கும் விடுதலை முழக்கமாய் ஒலிக் கின்றது.

கோடானு கோடி இந்திய மக்களின் எழுச்சிக் குரலாய் இன்று ஒலிக்கும் இந்த முழக்கம் அன்று பெரியார் எழுப்பிய முழக்கம்.

எனவே இந்திய மக்களாகிய நாம் பெரியாரை என்றும் நன்றியுடன் நினைப்போம்!

அவருடைய தன்மானக் கொள்கை - பகுத்தறிவுக் கொள்கை - நாடெங்கும் பரவ உழைப்பதாக உறுதி எடுத்துக் கொள்வோம்.

பயன்பட்ட நூல்கள்

தமிழர் தலைவர்-திரு. சாமி சிதம்பரனார்

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு

புரட்சியாளர் பெரியார்-நெ. து. சுந்தரவடிவேலு

வ. வே. ஸு. அய்யர்-ரா. அ. பத்மநாபன்

Self Respect Movement in Tamilnadu 1920-1949–By N. K. Mangala Murugesan.

Thanthai Periar Prior to 1930 By EM. Rajagopalan.


கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள்

1. கீதை காட்டும் பாதை

கீதையின் குழப்பங்கள்-சூழ்ச்சிகள்-மாந்தர் இனத்தைக் கூறு கூறாக்கும் ஏற்பாடுகள் யாவற்றையும் கீதை சுலோகங்களைக் கொண்டே விளக்குகின்றார் ஆசிரியர். சமூகநீதிக்குப் பகையான கருத்துக்களையே கீதை கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறார்.

2. மதங்கள்-ஒரு ஞானப்பார்வை

வாழ்வில் முன்னேறவும், மறுமலர்ச்சியடையவும் சமுதாயத்தில் அன்பு தவழவும் மதங்கள் எவ்வாறெல்லாம் இடையூறாக உள்ளன என்பதைப் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விளக்கங்கள் இந்நூல் முழுவதிலும் தரப்பட்டுள்ளன. நூலில் தரப்பட்டுள்ள செய்திகள் சிந்தனைக்குரியவையாக அமைந்துள்ளன. - வள்ளுவர் வழி