குறட்செல்வம்/இரப்பாரும் ஈவாரும்

27. இரப்பாரும் ஈவாரும்


உயிர்கள் குறைகளினின்று விடுதலை பெற்று நிறைவைப் பெறவே மனித வாழ்க்கை தரப்பெற்றது. இந்த நிறைவைப் பெறும் சாதனங்களிற் சிறந்தது கிளர்ந்தெழும் அன்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வது. அவ்வாறு செய்யும்போது உயிரின் தன்மை வளர்கிறது, சிறப்படைகிறது. அப்பொழுதே உயிருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக உயிர், உயிர்த் துடிப்போடு வாழ்கிறது.

ஒர் உயிர் நலம்பெற்ற உயிரோட்டத்தோடு கூடிவாழ வேண்டுமானால் அதற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தேவை. அந்த வாய்ப்புகள் இல்லையானால், உயிரின் இயல்புகளும் ஆற்றல்களும் வெளிப்படுதற்கு வழியில்லாமற் போகும். அதனாலேயே திருவள்ளுவர், இரப்பாரே இல்லாத உலகம் உயிரற்ற பாவை சென்று வந்தாற் போன்றது என்றார்.

மனித உணர்வின் வெளிப்பாடுகள் துன்பம் கண்ட போது அழுதலும், இன்பம் கண்டபோது மகிழ்தலும் ஆகும். இத்தகு பண்பு தன்னளவினதாக இருக்கும்பொழுது பெரிதும் பயன்தராதது மட்டுமின்றி ஆக்கமில்லாமலும் போய்விடுகிறது. பிறர் துன்பம் கண்டு நோதலும், பிறர் இன்பம் கண்டு மகிழ்தலும் பண்பாட்டின் விளைவு; உயிர் வாழ்வதற்குரிய வழி.

இக் குறிப்பிலேயே திருவள்ளுவர் இரப்பாரும் இவ்வுலகில் இருத்தல் வேண்டும் என்று பேசுகின்றார். இரப்பார் ஏழ்மையின் காரணமாக இரக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறரின் அன்பு உணர்ச்சியைத் தூண்டி உயிர்பெற்று வாழவும் உய்தி பெறவுமேயாகும். இப் பார்வையோடு இரப்பாரைப் பார்த்தால் ஏழ்மையின் துன்பமும் ஏளனமும் தோன்றாது. இடுவோர் இயல்பு, இரப்பாரின் துன்பம் மாற்றுவதாக இல்லாமற்போனால் இரப்போர் வாழ்க்கை கொடுமையானது.

ஈத்துவக்கும் இன்பம் பெற விழைவோர்க்கு இரப்பார் இல்லையானால் அவ் வின்பத்தைப் பெற முடியாமல் அன்றோ போய்விடும்! வைத்துடைமை வன்கணாளர் வாழும் நாட்டிலே இரப்பார் இருத்தலைவிட இறத்தலே நன்று என்று வள்ளுவரே வகுத்துப் பேசுகின்றார்.

ஆனால், வள்ளுவர் காலச் சூழல் வேறு. நாம் வாழும் சூழல் வேறு. வள்ளுவர் காலத்தில் பிறர் துன்பம் மாற்ற முடியாதபோது — பிறருக்கு உதவி செய்ய முடியாத இயல்பு வந்துற்றபோது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்ட காலம். இன்றோ பொருள் பெரிதாகி, ஈர நெஞ்சின்றி இவறிக் கூட்டிப் பொருள் சேர்க்கும் காலம். இந்தக் காலத்தில் இரப்போர் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது. முழங்கால் கடுக்க முயன்று ஏறி “முதலாளி” என்றாலும் காசு தராமல் “உடம்பு சரியில்லையா?” என்று கேட்கும் காலம். ஆதலின் இரப்போர் தொகை குறைவதே நல்லது. எனினும் உதவி, சேவைகளின் மூலம்தான் மனித உயிர்கள் வளர்ச்சியடைய முடியும்.

ஆதலால், இரப்பார் நிலையில் உள்ளார் இரக்காமலேயே வலியச் சென்று கொடுப்பது-அல்லது வாழ்விப்பது நலம் தரும். அத்தகு சமுதாயப் பணிமனைகள் நாடு முழுவதும் பெருக் வேண்டும். இக் கருத்திலேயும் வள்ளுவர் கூறி உள்ளார்.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.

என்ற குறள் இக் குறிப்பினதே யாகும்.