குறட்செல்வம்/ஊழா? முயற்சியா?



47. ஊழா? முயற்சியா?



'ஊழ் சர்வ சக்தி படைத்தது; அதை எதிர்த்து மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது; மனித ஆற்றலை விட ஊழின் ஆற்றலே வலிமை படைத்தது’ என்றெல்லாம் கருத்துக்கள் நிலவிய காலத்தில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

பொதுவாக நம்முடைய மக்களிடத்தே இன்றுவரை விவாதத்திற்குரியதாக இருப்பது ஊழ் பெரியதா? உலையா முயற்சி பெரிதா? என்பதுதான். ஊழ் வலிமையானது என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் கீழ்க்கண்ட சான்றுகளைக் காட்டுவார்கள்.

"கல்பொருங் திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தனம்." —புறம்

ஆற்று வெள்ளத்தில் போகும் படகு, வெள்ளத்துடனேயே அடித்துச் செல்லப்படும் என்பது உவமை. படகு ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுதலில் என்ன வியப்பு? அது சடப் பொருள்தானே? படகுக்கு ஏது பகுத்தறிவு? படகுக்கு ஏது சிந்தனை? ஏது அறிவு? ஏது செயல் திறன்?

மனிதனோ சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். அறிவும் செயல் திறனும் உடையவன். இவன் வெள்ளம் போகிற போக்கிலேயே இழுத்துச் செல்லப் பெறுவானானால் மதியிலி — நீந்தத் தெரியாதவன் — ஆற்றல் இல்லாத சோம்பேறி என்றுதான் கொள்ளவேண்டும். சக்தி படைத்த — மதியுடைய — நீந்தத் தெரிந்த மனிதன் படகில் இருந்தால் ஆற்றுப்போக்கை எதிர்த்து அல்லவா செல்லுவான்?

திருவள்ளுவர் பெருமகனாரின் நூலிலுள்ள 'ஊழிற் பெருவலி யாவுள?’ என்ற வினாவை எழுப்புவர் சிலர். ஆனாலும் அவர் எடுத்துக்கொண்ட ஒரு பொருளை எப்படி முடிக்கிறார்? கருத்துக்கு எப்படி ஊட்டங் கொடுக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அந்தக் குறளையே முடிக்கும்பொழுது 'ஊழ் முந்துறும்’ என்கிறார்.

ஊழ், உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடைய முயற்சியை முந்திக்கொண்டு வந்து நிற்கும் என்கிறார். எனினும் ஊழ் வெற்றி பெற்றதாக அவர் சொல்லவில்லை.

நீண்ட ஒட்டப் பந்தயத்தில் முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஒடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போக தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு.

அதுபோலவே 'ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின்தள்ளப்படுவதற்கு உரியது—பின்தள்ள முடியும். அந்த ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும் போது,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

என்று குறிப்பிடுகிறார்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டு அவர்க்கு.

என்ற குறட்பாக்கள் முயற்சியின்பேராற்றலை வலியுறுத்து கின்றனவேயன்றி ஊழே வெற்றி காணும் என்று அறுதியிட்டு உணர்த்தவில்லையே.

புராண வழி பார்த்தாலும், ஊழின் வழி ஏற்பட்ட மரணத்தை முயற்சி வழி, பெற்ற நோன்பின் பயனாக வென்ற மார்க்கண்டேயன் வரலாற்றை நாம் பார்க்கிறோம்.

நிலத்தினுடைய இழுப்பாற்றல் விண்ணோக்கிச் செல்லும் பொருளை இழுத்துத் தள்ளும் வலிமை உடையதே ஆயினும், அதையும் தடுத்து நிறுத்தி வானத்தே மனிதன் மிதக்கவில்லையா?

ஆதலால், ஊழின் வலியையைவிட, நமது முயற்சியே வலிமையுடையது என்று கருதி முயற்சியுடைய வாழ்க்கையில் ஈடுபடுவோமாக!

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நால்கள்

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
எங்கே போகிறோம்?
வாழ்க்கை கலம்
சிக்தனைச் சோலை
சிலம்பு நெறி
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
சைவ சித்தாக்தமும் சமுதாய மேம்பாடும்
சமுதாய மறுமலர்ச்சி
திருவாசகத் தேன்
Tirukkural a world Literature

பிற புதிய வெளியீடுகள்

வானொலியில் இன்று ஒரு தகவல் — 14 பாகங்கள்

— தென்கச்சி கோ. சுவாமிநாதன்

எல்லா நோய்களுக்கும் இயற்கை மருத்துவம்

— டாக்டர் இரத்தின சண்முகனார்

இனிய குடும்பத்திற்கு பெண்களுக்கு பயனுள்ள யோசனைகள்

— ராமதிலகம், அரசு. மகாலெட்சுமி


நினைப்பதை நிறைவேற்றும் மந்திரங்களும், யந்திரங்களும்

— சுவாமி சாந்தலிங்கனார்