குறட்செல்வம்/எச்சத்தாற் காணப்படும்

15. எச்சத்தாற் காணப்படும்


மனித குலத்தின் விழுமிய சிறப்புக்களுள் ஒன்று தன்னை அவ்வப்பொழுது நினைந்தும், நினைவுறுத்தியும் ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்வதாகும். இவ்வாறு ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு இன்றியமையாத் தேவை பகுத்தறிவு. இங்கு பகுத்தறிவு என்பது நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்தலும், அறிதலும் ஆகும்.

அங்ஙனம் ஆராய்ந்தறிகின்ற போழ்து, சார்பின்றி ஆராய்தல் வேண்டும். செய்திக்கு உரியாரிடத்திலும், அச் செய்தியால் விளையக்கூடிய பலாபலன்களிலும் பற்றுதல் இருக்குமானால் பகுத்தறிவுத் தரத்துடன் செயல் பட முடியாது. ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து நின்று ஆராய்வதற்குப் பகுத்தறிவு என்று பெயரில்லை.

எந்தவிதமான சார்பும் பற்றுக்கோடும் விருப்பும் வேறுப்பும் இன்றிச் செய்தியைச் செய்தி அளவிலேயே ஆராய்ந்து அறிதலும், அவற்றை வலியுறுத்தலும் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்துதலும் போற்றுதலுக்குரிய பண்பாடாகும். இப் பண்பாட்டையே "நடுவு நிலைமை" என்று அறநூல்களும் ஒழுக்க நூல்களும் வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர் நடுவு நிலைமை என்றே ஒரு அதிகாரம் வைத்தார். நடுவு நிலைமைக் கொள்கையை மேற்கொண்டொழுகுதலை “தவம்” என்று கூடச் சொல்லலாம். நடுவு நிலைமைக் கொள்கையை ஏற்றுக்கோடலில் வருகிற இடுக்கண்களைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலிலே பேராசிரியர் விளக்குகின்றார்.

செஞ்சாந் திரியினும் ஏத்தினும் போத்தினும்
நெஞ்சோர்ந் தோடா நிலைமை.

என்று காட்டி “அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது” என்றும் பேசுகின்றார்.

நடுவு நிலைமைக் கொள்கையுடையோர் விருப்பு வெறுப்புக்களினின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். இறைவனும் “வேண்டுதல் வேண்டாமை இலான்” அன்றோ? அவ் இறைவனை வாழ்த்தி வணங்குகிறவர்களுக்கும், இக் குணவியல்பு இன்றியமையாததுதானே!

நடுவு நிலைமைக் குணம் இல்லார், நல்லவர்களாக இல்லாததோடு மட்டுமின்றித் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தீயவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்களையும் கெடுத்து அறமில்லாத வழிகளில் செலுத்துவார்கள்.

அரசு அமைச்சின் வழி. அமைச்சு கெட அரசு கெடும். கெட்ட அரசு—கொடுங்கோல் அரசு. கதிரவன் சுடுகிக் காய்கின்ற காய்ச்சல் பயிர்களைச் சுடுதல்போன்று மக்களைச் சுடும். ஆதலால், அமைச்சர் நடுவு நிலைமை உடையோராயிருத்தல் வேண்டும். இக்கருத்தினையே பாலைக் கலி,


"நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதூர்ந்த மன்னவன் கோல்போல் ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினந் தெரிதலின் "

என்று பேசுகிறது.

நியாயம், நியாயமின்மை ஆகியவற்றிற்குக் கருவி, நடுவு நிலைமையுணர்வேயாகும். செல்வர்க்கும், வறியர்க்கும் ஒப்ப நியாயம் வழங்குவதே வாழ்வியல் முறை. இதனை,

"முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறை தெரியா நேரொக்கல் வேண்டும் "

என்று பழமொழி பேசுகிறது. ஆனால் உலகியலில் இன்று செய்தியை ஆராய்வதற்குப் பதிலாகச் செய்தி யாரால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பெறுகிறது. மேலும் “செய்தியைச் சொல்லுகிறவர்கள் செய்தும் காட்ட வேண்டும்—அப்பொழுதுதான் சொல்லலாம்” என்றும் சொல்லப்படுகிறது.

தீமையின் அனுபவத்தின் விளைவில்தான் நன்மை அரும்புகிறது. ஆனாலும், அந்த நன்மையைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்த அந்தத் தீய அனுபவத்தில் எப்படி நன்மையைக் காண முடியும்? அதனால் ஆராய்வு செய்தி பற்றியதாகவே இருத்தல் வேண்டும்.

நடுவு நிலைமைக் கொள்கை பண்படாத சமுதாயத்தில்—நட்புலகின் தொடக்கத்தில் இன்பம் இருக்காது. மாறாகத் துன்பம் தரும். நண்பர்களும் பகைவர்களாவர். எனினும், தொடர்ந்து நடுவு நிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித் தொழுகின் இறுதியில் இன்பம் வந்தெய்தும். ஆகவே தன்னுடைய வாழ்க்கை—தன்னலம் ஆகியவற்றை விடக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும்.

அங்ஙனம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காரணமாகவே இறந்து பட்டாலும்கூட உலகத்து மக்கள் அக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அந்தக் கொள்கைகள் தங்கி நின்று விளக்கம்பெற வாய்ப்பில்லாது போயிற்றே என்று உலகத்து மக்கள் இரக்கமுறுதலின் மூலம் புகழ் சேர்ப்பர். நடுவு நிலைமையை “நன்னர் நடுவு” என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. அதாவது, “நன்மையை உடைய நடுவு நிலைமை” என்கிறது. திருவள்ளுவர்,

தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

என்கிறார். இக் குறட்பாவுக்கு உரை கண்ட பரிமேலழகர் எச்சத்தை நன்மக்கள் மீதேற்றினார். அதோடு இயற்கைக்கு மாறாக—உடற்கூற்றுக்கு முரண்பாடாக மக்கட்பேறு உண்டாதலையும் இல்லாமற் போதலையும் உள்ளடக்கியும் உரை கண்டுள்ளார்.

நன்மக்கள் என்ற உரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது. பின்னையது ஏற்றற்கில்லை. மணக்குடவர் ஆரவாரத் தொழிலின் மீதேற்றினார். காளிங்கர் ஒழுக்கத்தின்பாற் படுத்தினார். மேற்கண்ட உரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குரியனவாகவே தோன்றுகின்றன. திருவள்ளுவரின் திருவுள்ளத்தைக் கண்ட அமைதி, தோன்றவில்லை. மேலும், உரையாசிரியர்கள் தத்தம் காலத்தே வழக்கில் இருந்த செய்திகளின் சார்பிலேயே உரை எழுதியிருக்கின்றனர்.

இலக்கண மரபுப்படி எஞ்சுதல் எச்சம் ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு அவனுடையதாக இந்த உலகில் எஞ்சுவது அவனுடைய புகழ் அல்லது பழியேயாகும். தடுவு நிலைமை கொண்டோழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி நிற்கும்.

வரலாற்றுப் போக்கிலும் இவ்விரண்டு காட்சிகளையும் பார்க்கிறோம். பாரியின் புகழ் எஞ்சி இன்றும் உலவுகிறது. அழுக்காற்றின் காரணமாக நடுவிகந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தரின் இகழ்ச்சியும்—பழியும் இன்றும் எஞ்சி நிற்கிறது. ஆதலால்,

தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

என்ற குறட்பாவுக்கு—எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கின்ற புகழ் அல்லது பழி இவையே அவர்களின் நடுவு நிலைமைச் சிறப்பைக் காட்டும் என்று பொருள் காண்பதே சிறப்பாகத் தெரிகிறது.