குறட்செல்வம்/சார்புகெடின் நோயில்லை!



41. சார்புகெடின் நோயில்லை!



உலகியற்கையின் அமைப்பு இன்பமேயாம். உலகத்தின் தோற்றம், வைப்பு, நடைமுறை ஆகிய அனைத்தும் உயிரின்பத்தினை மையமாகக் கொண்டதேயாம். ஆக இன்பமே இயற்கை. துன்பமோ செயற்கை.

ஆனால், துன்பத்தின் கர்த்தாக்களாகிய தீய மனிதர்கள் அல்லது அறியா மாந்தர்கள் துன்பமும் இயற்கையென்றே பறைசாற்றுகின்றனர். பலர் நம்பியும் விடுகின்றனர். துன்பத்தின் தொடக்கம் பருப் பொருளிலும் அல்ல; பரந்த உலகத்திலுமல்ல.

துன்பம் மிக நுண்ணிய இடத்தில் — நுண்ணிய அளவிலேயே தோன்றி வளர்கிறது. ஆனால், தோற்றம் நுண்ணிய இடத்திலேயாயினும் அது வளர்ந்து வளர்ந்து பரந்த இடத்தைப் பிடித்து விடுகிறது.

துன்பம் ஒரு மனிதரிடத்துத் தோன்றி பல மனிதரைப் பற்றியதா? அல்லது பல மனிதரிடத்தில் ஒரே நேரத்தில் பற்றியதா? என்று ஆராய்ந்தால் ஒரு மனிதரிடத்தில் தொடங்கித்தான் உலகில் கவிழ்ந்து மூடியது என்று அறியலாம்.

ஒரு வீட்டின் கூரையில்பட்ட நுண்ணணுப் பிரமாணமான ஒரு நெருப்புப் பொறி, பல நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்தழிப்பதைப் போலத் துன்பமும் ஒரு முனையில் தோன்றிக் கவிந்திருக்க வேண்டும். துன்பம் காரியமேயாம், காரணமன்று. உடல், உணர்வு, அறிவு ஆகியவற்றை நிறைநல உழைப்பில் ஈடுபடுத்த மறுப்பவர்கள் காரியங்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். காரணங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குக் காரியம் நடந்தால் சரி. காரணம் வேண்டிய அவசியமில்லை.

இந்த மனப்போக்கு உடையவர்களே உயர்ந்த மாளிகையைக் கட்டியவர்கள், மதிற் சுவர்களைக் கட்டியவர்கள், பூட்டுகளைப் படைத்துத் தந்தவர்கள். களவு, காவல் தத்துவத்தின் படைப்பாளர்கள். இவர்களே நியதியாகிய விதிக்கு இல்லாத வலிமையை உண்டாக்கியவர்கள்.

காரியங்களைப் பற்றிக் கவலைப்படுவது பயனற்றது. ஆனால், காரணங்களைப் பற்றிக் கவலைப்படுதல் வாழ்க்கையின் இன்றியமையாக் கடமை. துன்பத்தின் காரணம் தீமை. துன்பம் சேய்; தீமை தாய். அது என்ன தீது? தன்னையே சுற்றி வட்டமிடும் தீமை.

ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே சுற்றினால் மயக்கம் வராதா? வேடிக்கைக்காக வேண்டுமானால் ஓரிரண்டு தடவை சுற்றலாம். பக்திக்காக வேண்டுமானால் இன்னும் சில தடவை சுற்றலாம். இந்த இரண்டு வகையில் சுற்றுவதற்கும் அடிப்படை உணர்வு உண்டு.

அந்த உணர்வுக் கலப்பின் சிந்தனையை, நிறுத்திச் சுற்றினாலேயே பொருளுண்டு. மயக்கமும் வராது. உணர்வின் ஆற்றல், மயக்கத்தோடு போராடி மயக்கத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். வெறும் சுற்று வெற்றுச் சுற்றேயாம். மயக்கத்தைத் தரும். அஃதென்ன உணர்வு? எல்லா உலகமும் ஒன்று.

எவ்வுயிரும் எமதுயிர் என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டினை—மனிதகுல ஒருமைப்பாட்டுணர்வினை எண்ணி நினைந்து அதற்கேற்ப ஒழுக வேண்டுமென்ற விழுமிய விருப்பத்தைப் பெற்று அதை நிலைநிறுத்திக் கொள்ள, உலகின் சிறுவட்டமாகிய நான்கு திசைகளைத் திருப்பிச் சுற்றுதல் ஒரு பாடம்; ஒரு பயிற்சி முறை. முன்னையது உடற் பயிற்சி; பின்னையது உணர்வுப் பயிற்சி.

இங்ஙனம் காரணங்களை அறிந்து நெறி முறையில் நின்று வாழ்தல் தீமையினின்றும் விடுதலை தரும். துன்பமும் மாறும். தீமைக்கெல்லாம் தீமை தன்னலமேயாம். தனது நலமின்றி மனிதன் வாழ முடியுமா? நியாயமான வினா. நலம் வேறு. தன்னலம் வேறு. எல்லாரும் நலமுடையராகவே வாழவேண்டும். இஃதே இயற்கை. இதுவே பொதுவிதி. இதுவே மனித உலகத்தின் ஒழுக்கமும்கூட.

நலம் இருவகையன. தான் படைத்துக் கொள்ளும் இன்ப நலன், பிறர் படைத்து வழங்கும் இன்ப நலன். தான் படைத்துக்கொள்ளும் நலன்களாவன: அறிவு, அன்பு, ஆள்வினைத் திறன் முதலியனவாம். பிறர் வழங்கும் நலன்களாவன, தான் பேணப்படுதலும் போற்றப்படுதலுமாம். தன்னைத்தானே பேணிக் கொள்வதைவிடப் பேணப்படல் சிறப்பாகும்.

தன்னலம் என்பது பிறருக்கு நலமின்மை விளைத்துத் தனக்கு வருகிற நலனே தன்னலம் என்று கூறப்பெறும். தன்னிடமுள்ள தன்னலச் சார்பினையறிந்து அச்சார்பு கெடவும் பிறர் நலம் பேணும் சார்பு பற்றி நின்று ஒழுகவும் எல்லோரும் முயன்றால் தனிமையிலும் துன்பமில்லை, பொதுவிலும் துன்பமில்லை. எங்கும் இன்பம், எல்லோருக்கும் இன்பம், எப்பொழுதும் இன்பம். இதனை,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

என்று திருக்குறள் கூறுகிறது.