குறட்செல்வம்/யாக்கை பொறுத்த நிலம்

29. யாக்கை பொறுத்த நிலம்


“நாடென்ப நாடா வுளத்தன” என்பது திருவள்ளுவர் வாக்கு. ஒரு நாடு பல்வளமும் கெழுமிய நாடாக சில அமைந்து விடுவதுண்டு.

நீர்வளமும், நிலவளமும் உள்ள நாடுகள் மட்டும் வளமுடையவனவாக இருப்பதில்லை. அந் நாட்டில் வாழும் மக்களுக்கும் வளத்திற்கும் தொடர்புண்டு. அதனாலன்றோ புறநானூற்றுப் புலவர், நாடு நாடாக இருந்தாலென்ன? காடாக இருந்தாலென்ன? கவலை இல்லை. அந் நாட்டில் வாழும் ஆடவர்கள் மட்டும் நல்லவர்களாக — உழைப்பாளிகளாக — உத்தமர்களாக இருப்பின் காடும் நாடாகும் — பள்ளமும் மேடாகும் என்றார்.

ஒரு நாட்டின் வளத்திற்கும், வறுமைக்கும், எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அந் நாட்டு மக்களின் மனநிலையே அடிப்படையாக அமைகின்றது. கற்றோர் போற்றும் கலித்தொகையிலும் கூட மலைவாழ் மக்கள் அல்லன செய்து வாழ்தலின் மலைபடு வளம் சுருங்குகிறது என்று கூறப்பெறுகிறது.

ஒரு தாய், தான் பெற்றெடுத்து வளர்த்த அருமையான பிள்ளை புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறாள். அந் நோக்கத்தோடு வளர்க்கிறாள். ஆனால், அவன் தவறுகள் பல செய்து தண்டனைக்கு ஆளானான் என்ற செய்தியை அந்தத் தாய் கேட்டால், அவள் நிலை என்னாகும்?

துன்பத்தால் துடிதுடிப்பாள் — உணர்விழந்து ஊக்கமிழப்பாள். அவள் உள்ளமும் உடலும் கொதிகலனாக மாறும். இந்த நிலையில் அவளிடத்தில் எப்படி ஆக்க பூர்வமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்?

அதுபோல, நிலமகளும் ஓர் அன்னை. அவளுடைய மணிவயிற்றில் கோடானு கோடி மக்கன் தோன்றி வளர்கிறார்கள் — வாழ்கிறார்கள். இனிய பல நறுஞ்சுவை உணவுகளை ஊட்டி வளர்க்கிற நிலமகளாகிய அன்னை. தன்னுடைய மக்கள் அன்போடும், பண்போடும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே நிலமகளின் விருப்பம்.

அதற்கு மாறாக, இவர்கள் தம்முள் மோதிப் பகை வளர்த்துச் கொண்டு, தம்முடைய வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதைக் கண்டும் கேட்டும் கலங்குகிறாள் — கவலை கொள்கிறாள். நிலவளம் வெப்பத்தன்மை அடைகிறது!

ஆறாத் துயரத்தில் நிலமகள் அழுந்துகின்றமையின் காரணமாக, நிலமகளின் வளம் குன்றும் என்பது திருவள்ளுவரின் கருத்து. “குற்றமற்ற நிலையில் குறை விலாது வளம் சுருங்கும், புகழற்ற உடம்புகளை நில மகள் தாங்கும்பொழுது” என்று குறிப்பிடுகிறார்.

இசையிலா யாக்கை என்று குறிப்பிட்டது, சிந்தனைக்குரிய செய்தி. உயிருடைய ஒருவன் அன்பு காட்டுவான்; அறஞ் செய்வான். புகழ்பட வாழ்வான். அஃதில்லையானால், உயிரற்றவன் என்பது தெளிவு. இக்குறிப்பினை ‘இசையிலா யாக்கை’ என்ற குறிப்பின் மூலம் உணர்த்துகிறார்.

உயிருள்ள மனிதனால் நிலத்திற்குப் பயனுண்டு. உயிரற்ற பிணத்தைத் தாங்குதலால், நிலத்திற்குப் பயனில்லை என்பதைக் குறிக்க, 'பொறுத்த நிலம்’ என்று குதிப்பிட்டார். ஆக, மனிதர்கள் நல்வாழ்க்கையின் மூலம் தான் நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைய முடியும், இக் கருத்தினை,

வகையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

என்ற குறட்பாவின் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.