குறிஞ்சிக்கலி- 57 முதல் 65 முடிய

  1. குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்<br /> வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக<big><small>பெரிய எழுத்துக்கள்</small></big>

57 வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி - ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக் கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின் கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு - இகத்தந்தாய்! கேள் இனி;

பூம் தண் தார்ப் புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல் தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண் ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? - சின் மொழி!

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள், கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலைப் பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? - கனம் குழாய்!

வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல், தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் - தக்கதோ? காழ் கொண்ட இள முலை!

என ஆங்கு, இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி, நினையுபு, நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே, துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே!

58 வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், பேர் எழில் மலர் உண் கண், பிணை எழில் மான் நோக்கின், கார் எதிர் தளிர் மேனிக், கவின் பெறு சுடர் நுதல், கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய், நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை, ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்;

உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக, இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம் வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய் மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம் உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்கு ஆகி அடரும் நோய் சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும், ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம் செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்;

என ஆங்கு, ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான், மற்று இந் நோய் பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின், பொலம் குழாய்! மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி, நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே!

59 தளை நெகிழ், பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட, அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி;

'மருளி, யான் மருள் உற இவன் உற்றது எவன்?' என்னும் 'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கா, வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

உருள் இழாய்! 'ஒளி வாட, இவன் உள் நோய் யாது' என்னும் 'அருள் இலை இவட்கு' என அயலார் நின் பழிக்கும்கால், பொய்தல மகளையாய்ப், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?

ஆய் தொடி! 'ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?' என்னும் 'நோய் இலை இவட்கு' என நொதுமலர் பழிக்கும்கால், சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து, நீ நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?

என ஆங்கு, அனையவை - உளையவும், யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாய் ஆயின், சே இழாய்! செய்ததன் பயம் பற்று விடாது; நயம் பற்று விடின் - இல்லை - நசைஇயோர் திறத்தே.

60 சுணங்கு அணி வன முலைச், சுடர் கொண்ட நறு நுதல், மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல், நுணங்கு எழில் ஒள் தித்தி, நுழை நொசி மட மருங்குல், வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!

'கண் ஆர்ந்த நலத்தாரைக், கதுமெனக், கண்டவர்க்கு, உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல் பெண் அன்று, புனை இழாய்!' எனக் கூறி தொழூஉம்; தொழுதே கண்ணும் நீர் ஆக நடுங்கினன்; இன் நகாய்! என் செய்தான் கொல்லோ! இ·து ஒத்தன் தன் கண் பொரு களிறு அன்ன தகை சாம்பி, உள் உள் உருகுவான் போலும், உடைந்து?

தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில, நீ நின் மேல் கொள்வது, எவன்?

அலர் முலை, ஆய் இழை நல்லாய்! கதுமெனப் பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்; மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண் தொடீ!

'நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்; நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்து இழாய்! என் செய்வாம் கொல், இனி நாம்?

பொன் செய்வாம்; ஆறு விலங்கித் தெருவின் கண் நின்று ஒருவன் கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 'தேறல் எளிது' என்பாம் நாம்; 'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம் மற்று; சிறிது, ஆங்கே - மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என, நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி, பூண் ஆகம் நோக்கி, இமையான், நயந்து நம் கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று, நாண் அடப், பெயர்த்தல் நயவரவு இன்றே.

61 எல்லா! இ·து ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்; செல்வம் கடைகொளச், சாஅய்ச், சான்றவர் அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போலப் பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின் மெல்ல இறைஞ்சும் தலை;

எல்லா! நீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை; நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்! என் நீ பெறாதது? ஈது என்?

சொல்லின், மறாது ஈவாள் மன்னோ, இவள்? செறாஅது, ஈதல் இரந்தார்க்கு, ஒன்று ஆற்றாது வாழ்தலின், சாதலும் கூடுமாம் மற்று;

இவள் தந்தை, காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள்; யாது நீ வேண்டியது;

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ மருளி மட நோக்கின் நின் தோழி என்னை அருளீயல் வேண்டுவல், யான்;

'அன்னையோ!' மண்டு அமர் அட்ட களிறு அன்னான், தன்னை ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன் கொலோ?

ஒண் தொடீ! நாண் இலன் மன்ற; இவன்; ஆயின், ஏஎ!

'பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி, மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறு நுதல் நல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வான் - நாம் எள்ளி நகினும் வரூஉம்; இடை இடைக் கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன் உள்ளம் குறைபடா ஆறு.

62 ஏஎ! இ·து ஒத்தன், நாண் இலன் - தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்; மேவினும், மேவாக்கடையும் அ·து எல்லாம் நீ அறிதி; யான் அ·து அறிகல்லேன்; பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் புல் இனிது ஆகலின், புல்லினென்; - எல்லா! தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ மற்று?

சுடர் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றக் கேள் வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று உண்பவோ, நீர் உண்பவர்?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ - ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? 'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று;

அறனும் அது கண்டற்று ஆயின், திறன் இன்றிக் கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?

63 நோக்கும்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார் தூக்கு இலி; தூற்றும் பழி என கை கவித்துப் போக்கும்கால், போக்கு நினைந்திருக்கும்; மற்று நாம் காக்கும் இடம் அன்று, இனி; எல்லா! எவன் செய்வாம்?

பூங் குழாய்! செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள் மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக இருந்தாயோ?' என்று ஆங்கு இற;

அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் மருந்து நீ ஆகுதலான்;

இன்னும், கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை, 'உடம்பட்டாள்' என்னாமை என் மெய் தொடு;

இ·தோ அடங்கக் கேள்;

நின்னொடு சூழும்கால், நீயும் நிலம் கிளையா, என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன் தன்னொடு நின்று விடு.

64 அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும் மணி முகம்; மா மழை, நின் பின் ஒப்ப, பின்னின் கண் விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி அரவுக் கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப, அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும் விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை! எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு;

ஏஎ! எல்லா, மொழிவது கண்டை, இ·து ஒத்தன்; தொய்யில் எழுதி இறுத்த பெரு பொன் படுகம்? உழுவது உடையமோ, யாம்?;

உழுதாய்; சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின் திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இ·தோ, கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த குவளையும், நின் உழவு அன்றோ? இகலி முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல, என் உழுவாய் நீ, மற்று இனி?

எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு; முற்று எழில் நீல மலர் என உற்ற, இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம், பெரும் பொன் உண்டு என்பாய்! இனி;

நல்லாய்! இகுளை! கேள்; ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின், வேந்து கொண்டன்ன பல;

ஆங்கு ஆக! அத்திறம் அல்லாக்கால், வேங்கை வீ முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம் உத்தி எறிந்துவிடற்கு.

65 திருந்து இழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும் பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது; ஒரு நிலையே மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல், அம் துகில் போர்வை அணிபெற தைஇ, நம் இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத் - தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும் காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத், தோழி! நீ போற்றுதி என்றி - அவன் ஆங்கே, பாராக், குறழாப், பணியாப், 'பொழுது அன்றி யார் இவண் நின்றீர்?' எனக் கூறிப், பையென வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, 'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன் பக்கு அழித்துக், 'கொண்டீ' எனத் தரலும் - யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்பக் - கடிது அகன்று கைமாறிக் 'கைப்படுக்கப்பட்டாய் சிறுமி! நீ மற்று, யான் ஏனை பிசாசு, அருள் என்னை நலிதரின், இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்' எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப - முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே, ஒடுங்கா வயத்தின், கொடும் கேழ்க், கடுங்கண் இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டற்றால்; காதலன் காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கைப் பெரும் கரும் கூத்து.

தொகு