குழந்தைச் செல்வம்/ஆகாய விமானம்
30. ஆகாய விமானம்
கப்பல் என்றுமே - மெல்லக்
கடலில் நீந்துவதாம்;
தப்பித் தப்பியே - ரயிலும்
தரையில் ஊருவதாம்.
1
வானமீ தெழுவேன் - அங்கே
வட்டம் சுற்றிடுவேன்;
கானம் மலையெல்லாம் - யான் ஓர்
கணத்தில் தாண்டிடுவேன்.
2
இடைவிடாது தபால் - உலகில்
எங்கும் கொண்டுசெல்வேன்;
சடைவி லாமலே - பலரைத்
தாங்கியும் போவேன்.
3
நன்மை செய்ய வந்தேன் - அதை
நன்குண ராமல்,
வன்மைப் போரில்எனை - இழுத்து
மாட்டி விட்டார், ஐயோ!
4
தீவினை செய்ய - என்னைத்
தினமும் ஏவுகிறார்;
பூவுலக மெல்லாம் - சுட்டுப்
பொசுக்கச் சொல்லுகிறார்.
5
அன்பைக் கொன்றுவிட்டார்; - மனிதர்
அரக்கர் ஆகிவிட்டார்;
துன்பம் செய்திடவே - இன்று
துணிந் திறங்கிவிட்டார்.
ஆசைப் பேயெங்கும் - தலைவிரித்து
ஆடு கின்றதையோ !
நாச காலம் ஐயோ!-புவியும்
நரக மாகுதையோ!
7
காட்டில் ஓநாயும் - நரியும்
கடுவாயும் புலியும்
நாட்டு நாகரிகம் - கண்டு
நகைக்க லாச்சுதையோ!
8
சாந்த மூர்த்தியின்[1] - அகிம்சா
தருமம் மேற்கொண்டு
மாந்தர் இவ்வுலகில் - நன்றாய்
வாழ்வ தெந்நாளோ?
9
- ↑ 9. சாந்த மூர்த்தி - காந்தி யடிகள்.