குழந்தைச் செல்வம்/கடிகாரம்

காட்சி இன்பம்


28. கடிகாரம்

[கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்ட தன் மகளிடம் ஏழையான ஒரு தாய், "மகளே, நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே அநேக லக்ஷ்யங்களிருக்க நமக்கு வேறு கடிகாரமும் வேண்டுமா?" எனக் கூறுகிறாள்.]

சேவற் கோழியுண்டு காகமுண்டு - வானம்
     செக்கச் சிவந்து தெரிவதுண்டு;
மேவு பொன்னே ! அதி காலை தெரிந்திட
     வேறும் கடிகாரம் வேண்டுமோடி? 1

செங்கதிர் பொங்கி வருவதுண்டு - நல்ல
     செந்தா மரைகள் மலர்வதுண்டு;
மங்கையே! காலைப் பொழுதை யுணர்ந்திட
     மற்றும் கடிகாரம் வேண்டுமோடி? 2

தன்னிழல் தன்னடி யாவதுண்டு - சுடர்
     தானுந் தலைநேர் எழுவதுண்டு;
ன்னமுதே ! பகல் உச்சியி தென்றிட
     ஏதும் கடிகாரம் வேண்டுமோடி? 3

விண்மணி ஆழியில் வீழ்வதுண்டு - வாசம்
     வீசும் மந்தாரை மலர்வதுண்டு;
கண்மணியே ! மாலைக் காலம் குறித்திடக்
     கையில் கடிகாரம் வேண்டுமோடி? 4

முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின்
     மொட்டுகள் மெல்ல அவிழ்வதுண்டு;
மெல்லியலே ! மாலை வேளை யறிந்திட
     வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி? 5

அம்புலி நட்சத் திரங்களுண்டு - கணக்கு
     ஆக்கி யறிய வழிகளுண்டு;
இன்பமே! நேரம் இரவில் அறிந்திட
     இன்னும் கடிகாரம் வேண்டுமோடி? 6

கம்மென வாசம் கமழ்பாகி சாதம் - இக்
     காவில் மலர்ந்து சொரிவதுண்டு;
அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட
     ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி? 7

காலை மாலை எந்த வேளையும் - சூரிய
     காந்தி மலர்தானே காட்டிடாதோ?
வேலை யெழுந்த திருவே! உனக்கினி
     மேலும் கடிகாரம் வேண்டுமோடி? 8

சுற்றுப் பொருளெல்லாம் உற்று நோக்கி - அவை
     சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோர்க்குப்
     பின்னும் கடிகாரம் வேண்டுமோடி? 9