குழந்தைச் செல்வம்/தேசக் கொடி

52. தேசக் கொடி

பாரில் உயர்ந்தமலை இமயமலை - அன்னை
     பாரத தேவி பராட்டுமலை;
சீரில் உயர்ந்திடுநம் தேசக்கொடி - அதன்
     சிகரம் அணிந்தின்று பறக்குதுபார்! 1

வீரர் துணிந்தேறி நட்டகொடி - இது
     வெற்றி விருதா யெடுத்தகொடி.
யாரும் இறைஞ்சி வணங்கும் கொடி-நமக்கு
     என்றும் சுதந்திரம் ஈட்டும் கொடி. 2

மின்னல் இடிக்கும் அஞ்சா துயருங்கொடி - விண்ணில்
     வீரர் திலகர்தொழும் விருதுக்கொடி
தன்னை மிதித்தெறிந்த சூரர்களெல்லாம் - இன்று
     தாழ்ந்து தலைவணங்கக் காணும்கொடி. 3

சத்தியம் தவறாது காக்கும்கொடி - சாதிச்
     சமயச் சழக்குகளைப் போக்கும்கொடி,
உத்தம வீரர்களும் பத்தினிகளும் - தத்தம்
     உயிருக் குயிராகப் போற்றும் கொடி 4

கலியுகக் கண்ணன் கருணாகரன் - அந்தக்
     காந்தி மகான்வாழ்த்தி யெடுத்தகொடி,
புலியொடு பசுவுஞ்சென் றோர்துறையில் - மனம்
     பொருந்திநீர் அருந்திடச் செய்யும்கொடி. 5

ஊக்கத்தை உள்ளத்தில் ஊட்டும்கொடி - தேச
     ஊழியம் செய்திடத் தூண்டும்கொடி,
ஆக்கமெலாந் தேடிச் சேர்க்கும்கொடி - நம்மை
     ஆண்சிங்க மாகவே ஆக்கும்கொடி. 6

நாடுநமதாகக் கண்டகொடி - அதை
     நாமே அரசாள வைத்தகொடி.
வீடு நமதென்று வீரம்பேசி - இன்று
     வெற்றி முரசறையச் செய்தகொடி. 7

மட்டுக் குடிசையின்மீ தாடும் கொடி - உயர்ந்து
    ஓங்கிய மேடையின்மீ தேறும்கொடி,
சட்டசபைகளிலே தழையும் கொடி-அங்கே
    தங்கும் பெரியோர்மேல் பட ரும்கொடி. 8

மானம் உருவாக வந்தகொடி - இதை
    மாசுறச் செய்வது பாவம்,பாவம்;
ஊனில் உயிருள்ள காலமெல்லாம் - மிக
    ஊக்கமாய் நின்றுநாம் காத்திடுவோம். 9