குழந்தைச் செல்வம்/பாண்டியாடுதல்

16. பாண்டியாடுதல்

பாங்கி தோழி பங்கஜம்!
     பாண்டியாட வாராயோ?
பாட்டி எனக்குப் பரிசளித்த
     பல்லாங் குழியைப் பாரிதோ! 1

மாமா நேற்று வாங்கித் தந்த
     மாணிக்கத்தைப் பாரிதோ!
அத்தை தந்த கட்டிமுத்தின்
     அழகை வந்து பாரிதோ! 2

சேரருக்கு மங்களங்கள்
     செப்பிவிளை யாடலாம்;
சோழருக்குச் சோபனங்கள்
     சொல்லி விளை யாடலாம். 3

பாண்டியர்க்குப் பல்லாண்டு
     பாடி விளை யாடலாம்;
உண்ணும் பாண்டி யாடலாம்;
     ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம். 4

கட்டும் பாண்டி யாடலாம்;
      களைத்து விட்டால் நிறுத்தலாம்;
எய்யாப் பாண்டி யாடலாம்;
      எய்த்துவிட்டால் நிறுத்தலாம். 5
பசும் பாண்டி யாடலாம்;
      பசித்தவுடன் நிறுத்தலாம்;
பாங்கி தோழி பங்கஜம்!
      பாண்டியாட வாராயோ? 6