குழந்தைச் செல்வம்/பொம்மைக் கலியாணம்

13. பொம்மைக் கலியாணம்

பொம்மைக்கும் பொம்மைக்கும் கலியாணம்,
பூலோக மெல்லாம் கொண்டாட்டம்;
பாவைக்கும் பாவைக்கும் கலியாணம்,
பகலும் இரவும் வேலையாம்.
கொட்டகை போடுது, சிலந்தி;
குறடு கட்டுது, கறையான்;
கோலம் போடுது, நண்டு.

கண்ணுக்கு மை, காக்கை கூட்டுது;
கழுத்துக்காரம், தத்தை கட்டுது;
கொண்டைக்குப்பூ, கோழி வளர்க்குது.

குயில்கள் இனிய குரலிற் பாடும்;
மயில்கள் நல்ல நடனம் ஆடும்.

வண்டினம் எல்லாம் வந்துகூடி,
வாய்க்கினிய அமுதம் வைக்கும்.

ஊராரே! நீர் வாரீரோ?
வந்து மணமும் காணீரோ?
கண்டு வாழ்த்திப் போகீரோ?