குழந்தை இலக்கியம்/விலங்குகள்

விலங்குகள்

24. யானை

...49

25. பூனை

...51

26. மாட்டை அடிக்காதே!

...53

27. எருமை

...54

28. கன்றுக் குட்டி

...57

29. ஆடு

...59


24


யானை வந்தது பின்னே!-மணி
ஓசை வந்தது முன்னே!

முறத்தைப் போலக் காதை ஆட்டி,
முன்னும் பின்னும் கையை நீட்டி
அறுத்த துண்டு பனைக்கால் தூக்கி,
அசைந்த சைந்தே நடையைக் காட்டி- யானை

யானை நீண்ட கொம்பு வாழைத் தண்டு!
நெற்றி மேடு பொரியற் சட்டி!
நீண்ட பையைப் போன்ற கையை
நிமிர்த்தித் தூக்கி முன்சு ருட்டி- யானை


அடுத்த டுத்துக் கையைத் தூக்கி,
ஆளும் பாகன் பேச்சை நோக்கி,
கொடுத்த காசைக் கையில் வாங்கி,
கொடுத்த சைந்து நடந்து காட்டி — யானை

தட்டில் அரிசி எடுத்துத் தின்று,
தந்த தேங்காய் மிதித்துத் தின்று,
முட்டி இட்டுப் படுத்துக் குழந்தை
முதுகில் ஏற ஏற்றிக் கொண்டு — யானை


25

குட்டி போட்டது பூனை!
உடைந்தது சட்டி பானை!
எட்டி எழுந்தால் நீரும்
இல்லை இலையிற் சோறும்!1

தட்டில் வாயை வைக்கும்!
தடியை எடுத்தால் சீறும்!
கட்டி வெண்ணெய் மோரும்
கண்டால் வந்து சேரும்!2

‘மீ! ‘மீ! என்றே நக்கும்!
விரலை வாயால் சப்பும்!
‘சீச்சீ’ என்றால் சீறித்
திண்ணை வந்து கற்றும்!3

பாலைக் கண்டாற் கூவும்!
படுக்கப் பக்கம் மேவும்!
காலைக் கண்டால் வந்தே
காலு ராய்ந்து சுற்றும்!4

உடலை ஒடுக்கிக் குந்தி,
ஒற்றன் போலத் தூங்கிப்
படரும் இருட்டில் தாவும்
வெருண்ட எலிகள் கூவும்!5

கண்கள் இரண்டும் வேலாம்!
கால்கள் நான்கும் வாளாம்!
உண்ணும் எலிமேற் பாய்ந்தே
கெளவி ஓடும் விரைந்தே!6

எங்கோ சுவரில் உறங்கும்!
பார்ப்பார் எவர்க்கும் இரக்கம்!
மங்கிய இராஎலி வேட்டை!
மாற்றார் அகழிக் கோட்டை!7

துடுக்குப் பூனைக் கொட்டம்
எலியின் தொல்லை மட்டம்!
அடுக்குப் பானை உருட்டும்!
அங்கும் எலியை வெருட்டும்!8

கண்ணைச் சிறிது மூடிக்
காதை மெல்லத் தூக்கி
வண்ணப் பகலில் எல்லாம்
வால்ம டக்கித் தூங்கும்!9

பூனை இல்லா இல்லம்
எலியின் புரட்சி வெள்ளம்!
பூனை செய்வது கொட்டம்!
பொறுத்தால் என்ன நட்டம்?10



26

மாட்டை அடிக்காதே!— பசு
மாட்டை அடிக்காதே!

வீட்டின் செல்வம் மாடு!—நெல்
விளைவின் செல்வம் மாடு!
ஊட்டக் கொடுப்பது மாடு — பால்
உண்ணக் கொடுப்பது மாடு!

பசுவின் கன்று முட்டும்!—பால்
மடிசு ரந்து கொட்டும்!
பசுவின் கன்று துள்ளும்!—மனம்
பார்க்க ஆசை கொள்ளும்!

பசுவின் கன்று காளை!—கட்டை
வண்டி இழுக்கும் நாளை!
பசுவைப் பேணி வளர்த்தால்— காசு
பணத்தை வாங்கலாம் முறத்தால்!


27

ருமை கருமை மாடே!
என்றும் பொறுமை மாடே!
அருமை மிக்க மாடே!
அரக்கி நடக்கும் மாடே!

சேற்றில் புரளும் எருமை!
சிறுகுட்டை புரளும் எருமை!
ஆற்றின் ஓரம் மேய்ந்தே
அசையும் போடும் எருமை!

கொம்பு வேலுக் கம்பு!
குட்டை வாலும் சம்பு!
தம்பி கண்ணி ரண்டும்
தண்ட வாளக் குண்டு!

பூத்த குளத்தை அழிக்கும்!
வயலில் புகுந்து மிதிக்கும்!
வாய்த்த கயிற்றை அறுக்கும்
வாழைச் செடியை முறிக்கும்!

காலை மாலை கறக்கும்!
பாலைச் செம்பில் நிறைக்கும்!
ஆலைச் சத்தம் போலக்
கத்தும் கன்றை முறைக்கும்! 5

கள்ளிச் சாற்றைப் போலக்
கறக்கும் எருமைப் பாலைச்
சுள்ளி எரித்துக் காய்ச்சித்
துளிமோர் விட்டால் போச்சு! 6

எருமைத் தயிரோ கட்டி!
எடுக்கும் வெண்ணெய் கெட்டி!
உருகும் நெய்யைக் கொட்டி உண்ண வயதும் கெட்டி! 7

கொம்பை ஆட்டித் தட்டும்!
ஒன்றோ டொன்று முட்டும்!
வம்புக் குப்போ காது!
வந்த தைவி டாது! 8

தொட்டி நீரில் மூழ்கித்
துறுத்துத் துறுத்துக் குடிக்கும்!
கட்டிப் பிண்ணாக் கோடு
கலந்த தவிடும் குடிக்கும் 9

காய்ந்த வைக்கோல் தின்னும்!
கழனிப் புல்லும் தின்னும்!
காய்ந்த சோளத் தட்டும்
கம்பந் தட்டும் தின்னும்! 10




28

காலைத் தூக்கி வாலை உயர்த்திக்
கன்றுக் குட்டி துள்ளி ஓடும்;
பாலைக் குடிக்கும்; மடியை முட்டும்;
பாய்ந்து துள்ளி ஆடிக் களிக்கும்!1

தெருவில் ஓடிப் ‘பாரி’ அடிக்கும்,
சிறுவர் மடக்கத் தாண்டிக் குதிக்கும்;
அறுகம் புல்லை முனையிற் கடிக்கும்;
‘அம்மா’ என்று கத்தி அழைக்கும்! 2

கட்டிப் போட்டால் கதறிக் கிடக்கும்;
கட்டை அவிழ்த்தால் முட்டிக் குதிக்கும்;
கொட்டில், தோட்டம் சுற்றித் திரியும்;
குடிநீர்ப் பானை உருட்டிக் கவிழ்க்கும்! 3

கன்றைப் போல ஓடி ஆடிக்
கருத்தாய்ப் படிக்க வேண்டும் பாப்பா!
என்றும் இதுவே பெண்ணின் அடிமை
இன்னல் தவிர்க்கும் நல்வழி ஆமே!


29

டு! வெள்ளாடு — பல
ஆடு நுழைந்தால் அழிந்து போகும் காடு!
ஆடு! செம்மறி ஆடு!-பல —
ஆடு நுழைந்தால் அழிந்து போகும் காடு! 1

ஓடி ஓடி மேயும்! — முன்கால்
உயர்த்தித் தூக்கிக் குதித்து வந்தே பாயும்!
காடு மலையும் தாவும்! — ஓநாய்
கண்டாற் போதும் காதவழியும் கத்தும்! 2

குட்டி போடும் ஆடு!— பெண்
குட்டி வளர்ந்தால் நிறைந்து போகும் வீடு!
தட்டிக் கட்டி வளர்ப்பார் — அந்தப்
பட்டிக்குக் காவல் நெட்டை நாயும் வளர்ப்பார்! 3

ஆட்டை மேய்ப்போர் இடையர்-இடை
அறிந்து பாலைக் கறந்துபயன் அடைவார்!
கூட்ட ஆடு மந்தை!-விலை
கூறி ஒட்டி விற்றுவருவார் சந்தை! 4