கேரக்டர்/அட்டெண்டர் ஆறுமுகம்

அட்டெண்டர் ஆறுமுகம்

"என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப்போடச் சொல்லுங்க, சார்!" என்பான் அட்டெண்டர் ஆறுமுகம்.

"போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?" என்பார் ஹெட்கிளார்க்.

"அட, நீங்க ஒண்ணு. எனக்குச் சொல்லலே, சார்! உங்களுக்குத்தான் சொன்னேன்; ஏதோ குழந்தை குட்டிங்களை வெச்சுகிட்டுப் பத்து வருசமா இப்படியே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கீங்களேன்னு சொன்னா..."

"ஆமாம், நீ பெரிய குபேரன்; உனக்கு இந்த அட்டெண்டர் வேலையே போதும்."

"எனக்கெதுக்கு சார்? ஓட்டலுக்குப் பால் சப்ளை பண்றேன். விடியக்காலம் மூணு மணிக்கே எழுந்துபோய் மாட்டைக் கறக்கணும். அதான் கொஞ்சம் தொந்தரவு.சரியாத் தூங்க முடியலே.தூக்கம் கெட்டுப்போவுது."

அதான் ஆபீசுலே வந்து நிம்மதியாத் தூங்கறயேடா சோம்பேறி!"

"சரி சார், இப்ப எதுக்குக் கூப்பிட்டீங்க?"

"திருவல்லிக்கேணியிலே ஒரு வீடு காலியாயிருக்காம். கொஞ்சம் போய் அதை விசாரிச்சுட்டு வறயா?"

"அந்த வீட்டுக்காரர் இல்லாட்டி...?"

"திரும்பி வந்துடு."

"அதுக்கு ஏன் சார், போவணும்?"

அந்த ஆபீசில் மானேஜர்முதல், சின்ன குமாஸ்தா வரை எல்லோருக்கும் ஆறுமுகந்தான் அட்டெண்டர்.காலையில் பத்தரை மணிக்கு ஆபீசுக்கு வருவான். அவனுக்கென்று ஓர் இருட்டறை உண்டு. அங்கே ஆபீஸ் பைல்களெல்லாம் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த பைல் கட்டுகளுக்கிடையில் ஒரு ஸ்டூலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவான். யார் மணி அடித்தாலும் வரமாட்டான்.

"ஆறுமுகம், உன்னை எத்தனை தடவை கூப்பிடறது?"

"எதுக்கு சார், கூப்பிட்டீங்க?"

"உடனே போய் திருச்சிக்கு ஒரு பஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டு வா, போ!" என்பார் ஹெட்கிளார்க்.

"ஆபீஸ் விஷயமாப் போறீங்களா, சார்?"

"உனக்கெதுக்குடா இந்த அக்கப்போரெல்லாம்? நீ போய் டிக்கெட் வாங்கிட்டு வாயேன்."

"அதுக்குக் கேக்கலே, சார்! உங்க நன்மைக்குத்தான் கேட்டேன். சொந்த டிரிப்பாயிருந்தால் எதுக்கு அவ்வளவு பணம் செலவழிக்கிறீங்க? குழந்தை குட்டிக்காரராச்சே!"

"உன் 'அட்வைஸ்' எனக்கு வேண்டாம். முதல்லே நீ போய் டிக்கெட்டை வாங்கிட்டு வரப்போறயா, இல்லையா?"

"அதான் சொல்லிட்டீங்களே, செஞ்சுடப்போறேனே?"

"பின்னே என் நிக்கறே?"

"இல்லே, பயணத்தை அடுத்த மாசம் தள்ளிப்போடக் கூடாதான்னு தெரிஞ்சுக்கத்தான்!"

ஏன் அடுத்த மாசம் போறதிலே உனக்கென்ன லாபம்?"

"அடுத்த மாசம் நான் பதினைஞ்சு நாள் லீவு எடுத்துக்கப் போறேன். அந்தச் சமயத்திலே நீங்களும் லீவு எடுத்துக்கலாமேன்னு சொன்னேன். ஆபீசிலே நான் இல்லாட்டா உங்களுக்குக் கை ஓடிஞ்ச மாதிரி இருக்குமே...!"

"இவர் பெரிய இவரு! கூப்பிட்ட குரலுக்கு வந்துடுவாரு பாரு. சரித்தான் போடா!"

"ஏன் சார், இன்னைக்கே போகப் போறீங்களா?"

"ஆமாம்; எதுக்குடா?"

"எனக்குத் தெரிந்த லாரி ஒண்ணு நாளைக்கு ராத்திரி புறப்படுது. தாம்பரம் டேசனாண்டே வந்து நில்லு,சார்! நான் அந்த லாரியிலேயே வந்து உங்களை ஏத்தி விட்டுடறேன். லாரி டிரைவர்கிட்டே அஞ்சு ரூபா கொடுத்தாப் போதும் சார்! ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன். கேட்டாக் கேளுங்க; விட்டா விடுங்க!"

"போடா, உன் அட்வைஸும் நீயும், அதிகப் பிரசங்கி!"

"ஏன் சார், திருப்பி வரப்போ தஞ்சாவூர் வழியாத்தானே வருவீங்க?"

"எதுக்குடா?"

"தஞ்சாவூர்லே குடமுளகா சீப்பு, சார்! ஒரு மணங்கு புடிச்சிகிட்டு வாங்களேன். மோர் முளகாப் போட்டு வெச்சா ஒரு வருசத்துக்கு ஒதைச்சுக்கிட்டிருக்கும். ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன்!"

யார் எந்த வேலை சொன்னாலும் ஆறுமுகம் உடனே புறப்பட்டுவிட மாட்டான். 'அது அவசியந்தானா? அவசரந்தானா?

என்று குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்டு வேலை சொல்பவர்களைத் திணற அடிப்பான். காலையில் தண்டையார்ப் பேட்டைக்குப் போய்வர வேண்டும் என்று யாராவது சொன்னால் மாலையில்தான் கிளம்புவான். ஆபீசில் உள்ள அத்தனை பேர்களிடமும் போய், "அக்கௌண்டண்ட் ஒரு வேலையா என்னைத் தண்டையார்ப்பேட்டைக்கு அனுப்பறாரு. இன்னும் யாருக்காவது தண்டையார்ப்பேட்டையில் வேலை இருந்தால் சொல்லுங்கள்; ஒரே அடியா முடிச்சுக்கிட்டு வந்துடறேன்" என்று தண்டோரா போடுவான்.

கடைசியில் மாலையிலும் போகமாட்டான். கேட்டால் சைக்கிள் பஞ்ச்சர்; பஸ் ஸ்டிரைக்" என்று ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு, பைல் அறையில் போய் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பான்.

"ஏண்டா,ஆறுமுகம்! உன்னை எங்கேடா நாலு நாளாய்க் காணோம்?" என்பார் அக்கௌண்டண்ட்.

"லீவு போட்டிருந்தேனே, சார்! தெரியாது உங்களுக்கு?"

"லீவு போட்டால் சொல்லிட்டுப் போறதில்லையா?"

"உங்களை வந்து பார்த்தேன், சார்! நீங்க மேஜைமேலே சாஞ்சபடியே லேசாத் தூங்கிக்கிட்டிருந்தீங்க. சரிதான் அப்படின்னுட்டு 'பெல்'லை மட்டும் எடுத்துப் பூட்டி வச்சுட்டுப் போயிட்டேன், சார்! நான் இல்லாதப்போ அது எதுக்கு சார், இங்கே? பெல் இல்லாததுலேருந்தே நான் லீவிலே இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டிருக்கலாமே. நீங்க!"