கேரக்டர்/‘புள்ளி’ சுப்புடு
‘புள்ளி’ சுப்புடு
ஆந்திரா நெய் வியாபாரியைப்போல் சட்டைப்பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம், அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள், ஒன்றில் சிவப்பு மசி, இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய டெலிபோன் நம்பர்கள். விலாசங்கள்-இன்னும் என்னென்னவோ புள்ளி விவரங்களெல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் அடங்கியிருக்கும்.
அந்தக் கணக்கு நோட்டுக்குரியவர் யார் தெரியுமா? சர்க்கார் ஸ்டாடிஸ்டிகல் டிபார்ட்மெண்டில், கடந்த முப்பது வருட காலம் உத்தியோகம் பார்த்து ரிடையராகியுள்ள திருவாளர் 'புள்ளி' சுப்புடுதான்.
புள்ளி சுப்புடு தெருவில் நடக்கும்போது சும்மாப் போக மாட்டார். ஏதாவது ஒரு கணக்கை விரல் விட்டு எண்ணிக் கொண்டேதான் போவார்!
சுபாஷ் போஸ் மாயமாக மறைந்த தேதி, வைஸ்ராய் வேவலின் சிராத்த தினம், நைல் நதியின் நீளம், இமயமலையின் உயரம்; பரங்கிமலையின் சுற்றளவு; குதிரைப் பந்தயத்தில் டிரிபிள் ஈவெண்டில் முதலாவதாக வந்த குதிரைகளின் நாமதேயங்கள்; அஸ்வான் அணைக்கட்டுக்கு ஆகும் செலவு: முதன்முதலாக வெளிவந்த தமிழ் டாக்கியின் நீளம், கோட்டைக்கு அருகில் ஜப்பான்காரன் குண்டு போட்ட தேதி—
இவ்வளவையும் அவர் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருப்பார்.
புள்ளி சுப்புடு யாருடனாவது பேச ஆரம்பித்துவிட்டாலோ புள்ளி விவரங்கள் அலைமோதிக்கொண்டு வரும். அவர் தெருவில் போகும்போது, தெரிந்தவர்கள் யாராவது எதிரே வந்துவிட்டால், போதும்; "யாருடா நீ? சுப்பிரமணி மருமானாடா? உன் பேரு வேதாசலம் இல்லையோ? இனிஷியல் கே.எஸ்.தானேடா? 1943 ஏப்ரல் பதினேழிலே நீ பிறந்தே! அப்ப மெட்ராஸிலே ஒரே வெள்ளம்! ஏண்டா, உங்கப்பா ஓர் ஆஸ்டின் கார் வெச்சிண்டிருந்தாரே! அதாண்டா எம்.எஸ்.பி.4147. நைன்டீன் தர்ட்டி மாடல்! இப்போ அதை வித்துட்டாரா? காந்திநகர் ஸிக்ஸ்த் கிராஸ் ரோட்லே தானேடா உங்க வீடு? நூற்றுமுப்பத்தெட்டுங் கீழே மூணு இல்லே நம்பர்?
"ஏண்டா, வேலூர் மிஷன் ஆஸ்பத்திரியில் 1952 ஜூன் இருபதாம் தேதி உங்க அத்திம்பேருக்கு அபெண்டிஸிடிஸ் ஆபரேஷன் ஆச்சே? இப்ப பரவாயில்லையா? இப்ப என்னடா செய்யறார் அவர்? அவருக்கு இப்ப வயசு நாற்பத்து நாலு இருக்குமே? 1916ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் பதினாலாம் தேதி பிறந்தார்.
"ஏண்டா, அவருடைய சித்தப்பாபிள்ளை, அதாண்டா கோதண்டராமன் எஸ். எஸ். எல். ஸி. படிச்சிண்டிருந்தானே, இப்ப அவன் என்ன பண்றான்? படிப்பை அதோட நிறுத்திட்டானா? இல்லே, மேலே படிக்கிறானா? 6792 தானேடா எஸ்.எஸ்.எல்.ஸியில் அவன் பரீட்சை நம்பர்? சரி; இப்ப எங்கடா போறே?"
"கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸிலே என் சிநேகிதர் ஒருத்தர் வரார். அவருக்கு மகாபலிபுரம் பார்க்கணுமாம். அவரைக் கூட்டிண்டு வர ஸ்டேஷனுக்குப் போறேன்."
"கிராண்ட் டிரங்கா? அது இன்னைக்கு நாலு மணி இருபது நிமிஷம் லேட்டாம். நான் சென்ட்ரல்லேருந்துதான் வரேன்.ஏண்டா, உன் சிநேகிதரை எப்படி மகாபலிபுரம் அழைச்சுண்டு போகப்போறே? திருப்போரூர் வழியாப் போடா; ஆறு மைல் ஸேவ் ஆகும். திருக்கழுக்குன்றம் வழியாப்போனால் நாற்பத் திரண்டு மைல் ஆறது. வீணாச் சுத்தாதே!" என்று தமக்குத் தெரிந்த புள்ளி விவரங்களையெல்லாம் சொல்லி ஆளைத் திணற அடித்துவிடுவார்.
புள்ளி சுப்புடு வெளியில் போகாத நேரங்களில் வீட்டுக்குள் உட்கார்ந்து ஏதேனும் ஜாதக ஆராய்ச்சியிலோ, வேறு கணக்கு ஆராய்ச்சியிலோ தீவிரமாக ஈடுபட்டிருப்பார். அவருக்கு எதிரில் ஜாதகங்கள், குறிப்புகள், ரயில்வே கைடு, பஞ்சாங்கம், சிலேட்டு, பலப்பம் இத்தனையும் இருக்கும்.
கடந்த அறுபது வருடங்களில் நிகழ்ந்த சந்திர கிரகணங்கள் எத்தனை? ஒவ்வொன்றும் எத்தனை மணி, எத்தனை நிமிஷ நேரம் நீடித்தது?——இப்படி எத்தனை எத்தனையோ கணக்குகள், ஆராய்ச்சிகள்!
"யாருடா, சாமிநாதனா?...வாடா,வா. இப்ப எங்கேடா உத்தியோகம்? எல்.ஐ.சி.யிலா? அந்தப் பதிமூணு அடுக்கு மாடியிலா? நீ எத்தனாவது மாடி? ஏண்டா அந்தக் கட்டடத்துக்கு ஒரு கோடியே சொச்சம் ரூபாய் செலவுன்னு சுணக்குச் சொல்றாளே, பிகர் கரெக்டாயிருக்குமோ? எண்பத்தெட்டு லட்சத்து எழுபத்தேழாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு ரூபாய் அறுபத்தேழு பைசான்னு எனக்கு ஞாபகம் போகட்டும்; நமக்கென்ன?
"நீ இன்னிக்குப் பேப்பரைப் பார்த்தயோ? மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே விவசாயத்துக்கு எண்ணூறு கோடி ரூபாய் சாங்ஷன் செய்யணும்னு திட்டக்கமிஷனைக் கேட்டிருக்காளாம். அதுவே போதாதாம்! ஆமாம்; அது எப்படிப் போதும்? பாபுலேஷன் நாளுக்கு நாள் அதிகமாயிண்டு இருக்கோன்னோ?
"நல்லவேளை! இந்தச் சங்கடத்துக்கெல்லாம் இல்லாமல் நான் தப்பிச்சு வந்துட்டேன்.
"என்னை இன்னும் இரண்டு வருஷம் உத்தியோகம் பார்க்கச் சொல்லி எங்க ஆபீசர் கெஞ்சினான். நான் கண்டிப்பா முடியாதுன்னுட்டேன். கூட்டல்கூடச் சரியாப் போடத் தெரியாதவன்களையெல்லாம் ஸீனியர் ஆபீசராகக் கொண்டுவந்து போட்டுட்டு நம்ப கழுத்தை அறுக்கிறான்க! யார் இவனோடெல்லாம் மாரடிக்கிறது? எனக்கென்ன? இருக்கிறது ஒரு பெண்ணு; ஒரு பிள்ளை. பெண்ணுக்கு இருபத்திரண்டு வயசு; கலியாணம் ஆயிடுத்து. பத்தாயிரம் வரைக்கும் செலவு செய்தேன். மாப்பிள்ளைக்கு மூவாயிரம் வரதட்சணை கொடுத்தேன். அப்ப பவுன் விலை இப்படியா இருந்தது? அறுபத்தேழு ரூபாய்! ஒசந்தால் அறுபத்தெட்டு ரூபாய்! அவ்வளவுதானே?
"பிள்ளைக்கு இருபது வயசு ஆறது; பி.காம். படிக்கிறான். அடுத்த வருஷத்தோடு அவன் படிப்பு முடிஞ்சுடறது. மாப்பிள்ளைதான் ஹைகோர்ட்டிலே பெஞ்ச் கிளார்க்காயிருக்கான். உனக்குத் தெரியுமோ, ஹைகோர்ட்டுக்கு எப்ப அஸ்திவாரம் போட்டான்னு? எய்ட்டீன் ஸெவன்டி ஒன். இப்பவும் கட்டடம் எப்படி இருக்கு, பார்த்தாயா? ஒவ்வொரு செங்கல்லும் எண்ணிக்கோ எண்ணிக்கோங்கறது!
"உங்க எல்.ஐ.சி யும் இருக்கே? ஏண்டா, அது என்னடா அது? கட்டடம் பூராவும் ஒரே கண்ணாடி ஜன்னலா வெச்சுட்டான்? மொத்தம் இருநூற்று ஐம்பத்தாறு ஜன்னலோ என்னவோ இருக்குடா. அவ்வளவும் பெல்ஜியம் கிளாஸாத் தான் இருக்கணும். கண்ணாடிக்கே அறுபத்தேழாயிரத்து எழு நூற்று..."
இப்போது சுப்புடு வானத்து நட்சத்திரங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் மொத்த நட்சத்திரங்கள் எத்தனை என்பதைச் சொல்லி விடுவார்!