கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...

18. அரசியல் விந்தைகள்....
பண்டித நேரு காலமானார்...

(கடிதம் 18. காஞ்சி—14-3-65)

தம்பி!

கதையில், இதுபோல ஒருவருக்குப் பல ஓட்டுகள்—மொத்தத்தில் ஏழு அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இதிலே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவிலே உள்ளதாகக் கற்பனையாகக் கூறப்படும் ஏழு ஓட்டு முறையில், ஒருவர் அந்த ஏழு ஓட்டுகளையும் ஒரேநேரத்தில் பொதுத் தேர்தலின் போது, உபயோகப் படுத்துகிறார்—இங்கு மூன்று ஓட்டுகளை வைத்திருப்பவர், மூன்று ஓட்டுகளையும், தனித்தனியாக, மூன்று கட்டங்களில் பயன்படுத்துகிறார்.

இங்கு மூன்று ஓட்டு உள்ளவர், மூன்று வெவ்வேறு தேர்தல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உரிமையும் பெறுகிறார். கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ஓட்டு முறையில், ஒரே தேர்தலில் ஏழு ஓட்டுகளை அவைகளைப் பெற்றிருப்பவர் உபயோகித்து, ஒரே ஓட்டுப் பெற்றுள்ள—வாக்காளரைவிட, ஏழு மடங்கு வலிவுபெற்றவர் தான் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

சொல்வதில்லையே தவிர, சொல்ல நினைத்தால், இங்கு ஒரு பட்டதாரி ஆசிரியர், சாதாரண வாக்காளரைப் பார்த்து, "உன்னைப்போல நான் என்று எண்ணிக் கொள்ளாதே; பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க மட்டுமே உனக்கு ஓட்டு உண்டு; அந்த ஓட்டு எனக்கும் உண்டு; ஆனால் பட்டதாரிகள் தொகுதியிலேயும், ஆசிரியர்கள் தொகுதியிலேயும் உனக்கு ஓட்டு இல்லை; எனக்கு உண்டு; நான் உன்னைவிட மும்மடங்கு; தெரிந்துகொள் என்று சொல்லலாம்—வேடிக்கையாக. ஆஸ்திரேலியாவிலேயே ஒரே பொதுத் தேர்தலின்போது ஒருவர் மற்றொருவரை விட, இருமடங்கிலிருந்து ஏழு மடங்குவரை வலிவு காட்டக் கூடியவராகிறார்.

தகுதிகள், தனித்திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகள் கொண்டவர்கள் மட்டுமேதான், ஆட்சி அமைப்புக் காரியத்தில் ஈடுபடவேண்டும் என்று கூறுவது, ஜனநாயகம் ஆகாது. ஆனால் ஐனநாயகம் என்பதற்காக தகுதிகள், திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகளுக்குப் பொருளும் பயனும் இல்லாமலே போய்விடவேண்டும் என்று கூறுவதும் சரியாகாது. ஆகவேதான், ஜனநாயக அடிப்படையையும் அழிக்காமல், தனித்தன்மைகளுக்கும் வாய்ப்புத்தர,ஏழு ஓட்டு முறை ஏற்பட்டது என்று கதையில் விளக்கம் தரப்படுகிறது.

இதுபோன்ற முறை தேவையா அல்லவா என்பதற்காக அல்ல, ஜனநாயகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்து இன்று பலரைப் பலவிதமான புது ஏற்பாடுகள் பற்றி எண்ணிப்பார்த்திட வைக்கிறது என்பதற்காக, இந்தக் கதையிலே காணப்படும் விந்தை முறை பற்றி குறிப்பிட்டுக் காட்டினேன். நெடுநேரம் அன்பழகனும் நானும், இது குறித்தும் இதன் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஆசிரியர் தொகுதியில் வெற்றி பெற்றவரல்லவா?

22—5—64

வெங்காவும் பொன்னுவேலுவும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்—பொழுது விடிந்ததும் விடுதலை. என் வலப்பக்கத்து அறையிலுள்ள பார்த்தசாரதிக்கும் இடப்பக்க அறையிலுள்ள சுந்திரத்திற்கும் கூடத்தான். இன்று இரவோடு, அந்த நால்வருடன் ஒன்றாகக் கழித்து வந்த சிறைவாழ்க்கை முடிவுடைகிறது. அவர்கள் வெளியே செல்கிறார்கள். நான் இன்னும் ஓர் இருபத்தியொரு நாட்கள் இங்கு இருக்கவேண்டும். இன்றோடு 19, நாட்கள் ஆகியுள்ளன என்று பொன்னுவேல் கணக்குக் கொடுத்தார். இவர்களுடன் வெளியேயும் நெருங்கிப் பழகுபவன் தான் நான் என்றாலும், இந்த ஆறுதிங்களாக இருபத்திநாலு மணி நேரமும் ஒரே இடத்தில் இருந்து பழகி வந்ததை நினைக்கும்போது, இந்தப் பிரிவு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. என்னிடம் அவர்கள் கொண்டுள்ள அன்பும், என் நலனைக் கருத்தில் கொண்டு, எனக்காகப் பல்வேறு உதவிகளை அவர்கள் செய்வதிலே வெளிப்பட்ட பாசஉணர்ச்சியும் என் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும். பார்த்தசாரதி தவிற மற்ற மூவரும் இளமைப் பருவத்தினர்—குடும்பம் மட்டுமே தரத்தக்க குதூகலத்தை இழந்தது மட்டும் அல்ல—இழந்து இங்கு ஆறு திங்களாக அல்லலை மேற்கொண்டனர். ஒரு தூய காரியத்துக்காகத் தொண்டாற்றுகிறோம் என்ற உணர்ச்சியும் எழுச்சியும் தவிர, இந்த நிலையை இலட்ச இலட்சமாகக் கொட்டிக் கொடுப்பதாகச் சொன்னாலும் ஏற்படுத்த முடியுமா? தூங்கட்டும், பாவம்! நாளையத்தினம் பெற்றோர் மகிழ உற்றார் உசாவிட, நண்பர்கள் நலன் விசாரிக்க, இல்லத்தரசி இன்முகம் காட்ட, மகிழ்ச்சி அடையப் போகிறார்கள். அவர்களெல்லாம் அதுபோல இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் என் எண்ணம்; என்றாலும் கன்னல் தமிழ்மொழி காத்திடும் கடமை எழும்போது, எத்தகைய இன்ப நுகர்ச்சியையும் விட்டுக்கொடுத்துவிட்டு, வீறுகொண்டு எழவேண்டும் என்பது என் முறையீடு. என் குரல் கேட்டு, மதிப்பளித்து, இன்ப நிலைமையை இழந்திடும் துணிவுகொண்டு, இங்குவந்தவர்கள் இந்த நண்பர்கள். நாளையத்தினம், நாட்டினரைக் காணச்செல்கிறார்கள். நாளை மாலை, வெங்காவின் கிராமமான சீதாபுரத்தில், பாராட்டுக் கூட்டமாம். அறப்போரில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்; நாடு அவர்களைப் பாராட்டத்தான் செய்யும். சென்று வருவீர்! சிறையிலே மேலும் பலர் இன்னமும் அடைபட்டுக்கிடக்கிறார்கள் என்ற செய்தியை மக்களிடம் எடுத்துக் கூறிவருவீர்! என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று காலை, கருணாநிதி வந்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது—பார்த்து இரண்டு மூன்று திங்களாகிவிட்டன. கருணாநிதியுடன் கருணாநந்தமும் வந்திருந்தார். தோழர்களின் நலன் குறித்துக் கேட்டறிந்து மகிழ்ச்சி பெற்றேன். கருணாநிதியின் வழக்கு அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெறும் என்று அறிந்து கொண்டேன். கூட்ட நிகழ்ச்சிகள், உண்டி திரட்டியது ஆகியவைபற்றிக் கூறிடக்கேட்டு இன்புற்றேன். "அண்ணா, 13-ந் தேதி நிச்சயமாக விடுதலை தானே? காலையிலே எத்தனை மணிக்கு அனுப்பிவைப்பீர்கள்?" என்று ஆவலுடன் கேட்ட கருணாநிதியின் கேள்விக்கு, அதிகாரி அழகான ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தார்.

இன்று மாலை என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்ததாகவும், காலையிலேயே பார்க்கும் முறை தீர்ந்துவிட்டதால் இன்று பார்ப்பதற்கு இல்லை என்றும் கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

பார்த்தசாரதி, இத்தனை நாட்களாகப் பார்த்துவந்த சமையல் நிர்வாகத்தை எப்படிச் செம்மையாகச் செய்வது என்ற நுணுக்கங்களை, புதிய நிர்வாகி காஞ்சிபுரம் தோழர் சம்பந்தத்திடம் விளக்கிக்கொண்டிருந்தார். சம்பந்தத்துக்கு இது புதிதுமல்ல, பிரமாதமுமல்ல. இங்கு 16 பேர்தானே, செங்கற்பட்டுச் சிறையில் அவருடைய நிர்வாகத்தில் 55 பேர் இருந்துவந்தார்கள் என்று, காஞ்சிபுரம் தோழர்கள் பூரிப்புடனும் பெருமையுடனும் பேசினார்கள்.

23—5—64

இன்று, பார்த்தசாரதி, சுந்தரம், பொன்னுவேல், வெங்கா ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். காலை 5-30க்கே நான் எழுந்துவிட்டேன், நண்பர்களை வழி அனுப்பி வைக்க. நால்வரும், இங்குள்ள நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு 6-30 சுமாருக்குச் சென்றனர். சிறை உடைகளைக் களைந்துவிட்டு, அவர்கள் தங்கள் சொந்த உடை அணிந்துகொண்டு, எங்களிடம் விடைபெற எதிரே நின்றபோது, ஒரு புதிய பொலிவு அவர்கள் முகத்திலே மலர்ந்தது. வெளியே செல்கிறோம், அறப்போரில் ஈடுபடச் சிறை சென்றவர்கள் இதோ விடுதலை பெற்று வந்திருக்கிறார்கள் என்று ஆயிரமாயிரம் தோழர்கள் சுட்டிக்காட்டி மகிழப் போகிறார்கள். அறப்போரின் அருமை பெருமையினை அறிந்தவர்கள் பெருமிதம் கொள்ளப் போகிறார்கள். பெற்றோரும் இல்லத்தின் மற்றவர்களும், சிறை சென்றுள்ளனரே நமது செல்வங்கள், எப்படி அவர்களைப் பிரிந்திருப்பது, உடல் நலம் கெடாமல் இருக்கவேண்டுமே, என்றெல்லாம் கொண்டிருந்த கவலை நீங்கப்பெற்று, வந்துவிட்டனர் எமது செல்வங்கள், பொலிவளிக்கும் புன்னகை தவழும் முகத்துடன் வந்துவிட்டனர் என்று கூறி, மகிழச்சிபெறப் போகிறார்கள் என்ற எண்ணம், விடுதலைபெற்ற நால்வருக்கும், புதிய தெம்பையும், நடையிலே ஒரு மிடுக்கையும் தானாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர்களை அந்த நேரத்தில் காண்பவர்களின் கண்களில் இவர்கள் சற்று முன்புவரை கைதிகளாக இருந்தவர்கள் என்று எண்ணிடக்கூடத் தோன்றாது; அத்தகைய ஒரு புதுப் பொலிவு பெற்றனர். அவர்களை அனுப்பி வைத்து விட்ட பிறகு, அன்று முழுவதும் எனக்கு, அடிக்கடி அவர்கள் பற்றிய நினைவாகவே இருந்தது. அதிலும், எதற்கெடுத்தாலும், வேடிக்கையாக சுந்தரத்தைக் கூவிக் கூவி அழைப்பது இந்த ஆறு திங்களாக எனக்குப் பழக்கமாகி விட்டிருந்ததால், அந்த நினைவு மேலோங்கியபடி இருந்துவந்தது. சுந்தரம்! சுந்தரமூர்த்தி! சுந்தரமூர்த்திநாயனார்!—என்று இப்படி மாறி மாறிக்கூப்பிட்டபடி இருப்பேன்—அவர்கள் வெளியே சென்று விட்ட பிறகு, அந்த அறைகள் வெறிச்சிட்டுப் போய்க்கிடந்தன.

வெளியே நல்ல கூட்டம்—வரவேற்பு என்று காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்—விவரங்கள் கூறுவாரில்லை. நாங்களாக, இப்படி இருந்திருக்கும், இன்னின்னார் வந்திருப்பார்கள். இப்படி இப்படிப் பேசி மகிழ்ந்திருப்பார்கள் என்று, இங்கு இருந்தபடி கற்பனை செய்து கொண்டிருந்தோம்—அதிலேயும் ஒரு சுவை கிடைக்கத்தான் செய்தது.

முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி, சமையல் நிர்வாகப் பொறுப்பை காஞ்சிபுரம் சம்பந்தம் மேற்கொண்டார். சுந்தரமூர்த்தி நாயனார் வெளியே சென்றுவிட்டார். இனி சம்பந்தர் துணைதான் நமக்கு என்று வேடிக்கைக்காகக் கூறினேன். எந்தக் காரியத்தையும் பொறுப்பாகவும் அமைதியாகவும், தமது திறமைபற்றி எதுவும் பேசாமலும் பெருமை கூறிக் கொள்ளாமலும் செய்து முடிப்பவர், சம்பந்தம்—அடக்கமான இயல்பு.

இப்போது, எனக்கு வலப்புறமும் இடப்புறமும், பார்த்தசாரதி, சுந்தரம் இருந்த அறைகளில், சம்பந்தமும் மணியும் குடியேறி உள்ளனர். இரவு என் அறையில், மணியும் திருவேங்கிடமும்.

இன்றிரவு நீண்டநேரம் செங்கற்பட்டு மாவட்ட கழக நிலைமைகள் குறித்து, மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய நலனைக் கவனித்துக் கொள்வதிலே மிகுந்த அக்கறை கொண்டுள்ள மணி, சம்பந்தம், திருவேங்கிடம் ஆகியோர், நான் விடுதலை பெற்ற பிறகும், இங்கே இருக்க வேண்டியவர்கள். சுந்தரம், பார்த்தசாரதி ஆகியோர் வெளியே சென்றுவிட்டதால் என் நலனைக் கவனித்துக் கொள்வதில் புதிய பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அன்பழகன் மெத்த உதவிகள் செய்கிறார்.

இன்று மாலை, ராணி, பரிமளம், சரோஜா மூவரும் என்னைக் காண வந்திருக்கிறார்கள்; இன்று அனுமதிக்க முடியாது, திங்கட்கிழமை வரலாம் என்று அதிகாரிகள் கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரியவந்தது. அன்பழகனைக் காணவந்த வெற்றிச் செல்வியையும் அது போலவே திருப்பி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்; அவர்கள் வீடுசென்று, சிறை மேலதிகாரியிடம் தொலை பேசிமூலம் "கேட்டிருக்கிறார்கள், இன்று எனக்கு என் கணவரைப் பார்க்கும் அனுமதி இருந்தும் திருப்பி அனுப்பிவிட்டார்களே, ஏன்?" என்று. அதற்குப் பிறகு, வெற்றிச் செல்விக்கு அனுமதி தரப்பட்டது. அவர்கள் அன்பழகனை வந்து பார்த்து, இந்தத் தகவலையும் ராணியைத் திருப்பி அனுப்பி விட்டதுபற்றியும் கூறி இருக்கிறார்கள். இன்று சர்க்கார் விடுமுறை நாளாம்—ஆகவே சீக்கிரமாகவே பூட்டிவிட வேண்டும் என்று கூறி, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருக்கும்போதே எங்களை அறைகளில் போட்டுவிட்டார்கள். தூக்கம் வருகிறவரையில், ரஷியாவில் புரட்சி வெற்றிபெற்ற காலத்திற்கும் புதிய சமுதாய அமைப்பு பலமடையும் காலத்திற்கும் இடையே இருந்த நிலைமைகளை விளக்கும் பல சிறுகதைகள்—ரஷிய எழுத்தாளர்கள் தீட்டியவை—கொண்ட ஏடு படித்துக் கொண்டிருந்தேன். சிறை வாழ்க்கைபற்றிய ஒரு சிறுகதை, மனதை உருக்கும்விதமாக இருந்தது. அதைப்பற்றிச் சிந்தித்தபடியே கண் அயர்ந்தேன்.

24—5—64

ஞாயிற்றுக்கிழமை—ஓய்வு நாள்—சிறையில் வறட்சி நிரம்பிய நாள். இந்த வறட்சியை நீக்கும் வகையில், இன்று காலை பத்து மணிக்கு மருத்துவ மனை சென்றிருந்த மதியழகன் இங்குவந்து சேர்ந்தார். கடந்த பதினைந்து நாட்களாக, மருத்துவ மனையில் இருந்த விட்டு வருகிறார்—சிறையில் உள்ளவர்களுக்கு, இவ்விதம் வெளியில் இருந்து வருகிறவர்களைக் கண்டதும், ஒரு தனி மகிழ்ச்சி பிறப்பது இயல்பல்லவா—சேதிகள் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பதால். மருத்துவ மனையில் தமக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விவரமாக மதி கூறினார். விடுதலையான வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகியோர் நேற்று மருத்துவமனை வந்து தன்னைப் பார்த்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு, ராஜாராம் எம்.பி., என். வி. நடராசன், எம். எல். சி., அரங்கண்ணல், எம். எல். எ., குத்தூசி குருசாமி, மற்றும் பலர் வந்து நலன் கேட்டுச் சென்றதையும் கூறினார். சென்னைக் கடைவீதி யொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கியவர்களை, மருத்துவ மனையில் பார்த்ததை, மதி கூறிடக் கேட்கும்போது, மிகவும் வேதனையாக இருந்தது. பயங்கரமான விபத்து என்று தெரிகிறது. மிகப் பரிதாபகரமான சாவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தனை உயிர்களைக் காவுகொண்ட, அத்தகைய ஆபத்தான வெடிமருந்துகளை எத்தகைய இடத்தில், எவ்விதமான முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டு திட்டம், முறைகளே இல்லையா? இவ்விதமான பயங்கரமான விபத்து ஏற்படக் கூடிய விதத்திலா நிலைமை இருந்திருக்க வேண்டும் என்பனபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மதியழகன் நேரிலே அந்த விபத்திலே சிக்கிக் கொண்டவர்களைப் பார்த்துவிட்டு வந்த விவரம், கூறக் கேட்டபோது மனம் மிகவும் வேதனைப்பட்டது.

25—5—64

இன்று காலை பத்துமணிக்குமேல், மேயர் கிருஷ்ணமூர்த்தி துணைமேயர் காபாலமூர்த்தியுடன் என்னைக் காண வந்திருந்தார். முன்பு இரண்டொருமுறை முயற்சித்தும் மேயர் என்னைக்காண உரியநேரத்தில் அனுமதி கிடைக்கவில்லை. சில ஆண்டுகளாக என்னிடமும் கழகத் தோழர்களிடமும் நட்புக்கொண்டு பழகிவரும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இனிய இயல்பு படைத்தவர். அவர் மேயராக வேண்டுமென்று கழகம் எடுத்துக்கொண்ட முதல் முயற்சி வெற்றிபெறாமற் போனபோது நான் சங்கடப்பட்டேன்; அப்போதுகூட அவர், வெற்றி கிட்டாததுபற்றிக் கவலை இல்லை, நீண்ட பல ஆண்டுகளாக நான் எந்தக் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறேனோ அந்தக் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கூடிக்கொண்டு எனக்குத் துரோகம் செய்த அதேநேரத்தில் கழகத் தோழர்கள் கட்டுப்பாடாக இருந்து எனக்கு ஆதரவு அளித்த பெருமையும் மகிழ்ச்சியுமே எனக்குப் போதும் என்று கூறினவர்.

மேயர் பொறுப்பிலே ஈடுபட்டதிலே ஏற்பட்ட அனுபவங்கள்பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். துணைமேயருடன், அப்போதுகூட நகரில் பல பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வருவதாகச் சொன்னார்.

எளிய வாழ்க்கையினரான அந்த நண்பருடைய தொண்டு, நகருக்குக் கிடைத்திருப்பது நல்லதோர் வாய்ப்பாகும். அவர் தொடர்புகொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சியின் இன்றைய பிரச்சினைபற்றிச் சில கூற ஆரம்பித்தார்; அந்தப் பேச்சை மேற்கொண்டு விரிவாக்காதபடி நான் வேறு விஷயங்களைப் பேசலானேன்.

மாலையில் ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதி கிடையாது என்பதால், கௌதமன் வெளியிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். அனைவருடைய நலன்பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

இன்று இரவு, காஞ்சிபுரம் அறப்போரில் ஈடுபட்ட கோவிந்தசாமி குழுவினர் வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரம் படித்துக்கொண்டிருந்தேன்.

மாலை அணிவித்தார்கள், கொடிகளைக் கொடுத்தார்கள். சென்றுவருவீர்! வென்றுவருவீர்! என்று முழக்க மிட்டு உற்சாகமூட்டினார்கள். ஆகவே தோழர்கள் சி. வி. எம். அண்ணாமலை, மார்க், சபாபதி, நெல்லிக் குப்பம் தொகுதி வட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி காட்டுமன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், (இ. பி. கோ. 120) சதிக்குற்றம் செய்தவர்களாகிறார்கள் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை—அதற்கான விவரத்தைத் தமது தீர்ப்பிலே கூறியிருந்தார்.

இதேபோன்ற வழக்குத்தான் கருணாநிதி, நடராசன் ஆகியோர்மீது மதுரையில் தொடரப்பட்டது; ஆனால் அங்கு அவர்களுக்கு நீதிமன்றம் ஆறுதிங்கள் கடுங்காவல் தண்டனை என்று அளித்திருக்கிறது.

சி. வி. எம். அண்ணாமலையும் மற்றவர்களும், சட்ட விரோதமான செயலில் ஈடுபடக்கிளம்பிய கோவிந்தசாமி குழுவினருக்கு மாலை அணிவித்தனர். அந்தச் செயல், அவர்களைக் குற்றம் செய்யச் சதி செய்தவர்களாக்குகிறது என்ற போலீஸ் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆறாம் குற்றவாளி (அண்ணாமலை) தமது கட்சித் தோழர்களுக்கு மரியாதை தெரிவிக்க மாலை அணிவித்ததாகக் கூறியுள்ளார்; மாலை அணிவித்ததை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு, மாலை அணிவித்தவர்களும் சதியில் பங்கு கொண்டவர்களாகிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கில்லை. ஒன்றுகூடி கூட்டாக ஒரு குற்றம் செய்வது சதி என்று ஆகிறது. போலீஸ்தரப்பிலே தரப்பட்ட சான்று 17 எண் முதல் ஐந்து குற்றவாளிகள் மட்டுமே அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்று தி. மு.க. தலைவர்கள் பணித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த ஐவரும், அதுபோல் செய்திட ஏற்கனவே முடிவெடுத்துள்ளனர் என்பதும், போலீஸ் தரப்பு தந்த சான்று மூலமே தெரியவருகிறது. ஆகவே முதல் ஐந்து எதிரிகள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தும்படி, சதி செய்யவேண்டிய அவசியம் மற்ற எதிரிகளுக்கு இல்லை.

ஏழாவது குற்றவாளி (சபாபதி) கழகக் கொடிகளை முதல் ஐந்து எதிரிகளிடம் கொண்டுவந்து கொடுத்தார் என்று கூறப்பட்டது. கொடுத்ததாகவே வைத்துக் கொண்டாலும், அதனாலேயே ஏழாவது எதிரி சதி செய்தார், உடந்தையாக இருந்தார் என்று கூறிவிட முடியாது—என்று நீதிபதி தமது தீர்ப்பில் விளக்கம் அளித்திருக்கிறார். சட்டத்தை இன்ன இடத்தில், இன்னின்னார் கொளுத்தப் போகிறார்கள் என்று முன்னதாகவே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்புப்பற்றி மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

26—5—64

இன்று மதியழகன் விடுதலை. அவர் உள்ளிட்ட பதினைந்து தோழர்கள்—மூன்று அணியினர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். விடியற் காலை ஐந்தரை மணிக்கே, அறையைத் திறந்துவிட்டார்கள். எங்கள் அறைகளைத் திறக்கவில்லை. விடுதலை பெற்று வெளியே செல்லும் மதியிடம் அளவளாவக்கூட இயலாது போலிருக்கிறதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு, எங்கள் அறைகளையும் திறந்தார்கள்—அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மதி புறப்பட்டார்; மற்றத் தோழர்களை எந்தப்பக்கமாக அழைத்துக்கொண்டு சென்றார்களோ, தெரியவில்லை; நான் அவர்களைக் காண இயலவில்லை. நாங்கள் உள்ள பகுதியிலிருந்து, வெளிப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். எதிர்ப்புற நெடுஞ்சாலையில் செல்லும் மோட்டார்கள், சிறை அருகே வந்ததும், நகர்ந்து செல்லக்கண்டு தோழர்கள் கூட்டமாக வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டோம். சில கொடிகள் அசைவதுகூடத் தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, வாழ்த்தொலியும் முரசொலியும் கேட்டது. மதியையும் மற்ற தோழர்களையும் வரவேற்க, கழகத்தோழர்கள் மெத்த ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றோம்.

இன்று வழக்கமான பார்வையிடல்—மதி இல்லை.

நண்பர் ஏ. கோவிந்தசாமிக்கு, இரண்டு நாட்கள் பரோலில் செல்லும் அனுமதி கிடைத்தது—காலை பத்து மணிக்கு மேல் அவர் சென்றார்—கடலூரில் தமது உடன் பிறந்த அம்மையாருக்கான இறுதிச் சடங்கிலே கலந்து கொண்டு, மீண்டும் 28ந் தேதி இங்கு வருகிறார். அவரை வழி அனுப்பிவைத்தோம்.

இரண்டு நாட்களாக பத்திரிகைகள் எதுவும் எமக்குத் தரப்படவில்லை. பத்திரிகைகள் தரப்படுவதிலே அடிக்கடி முறைக் குறைவுகள் ஏற்பட்டு வருவதுண்டு என்றாலும், ஒரே அடியாகப் பத்திரிகைகள் தரப்படாதது இந்தத் தடவைதான். பல முறை கேட்டனுப்பிய பிறகு, பிற்பகல் மூன்று மணிக்கு இரண்டு நாட்களுக்கான பத்திரிகைகளையும் மொத்தமாக அதிகாரி கொடுத்தனுப்பினார். நாலைந்து குழந்தைகள் உள்ள வீட்டிலே, பெற்றோர் தின்பண்டம் கொண்டுவந்ததும், அந்தக் குழந்தைகள் ஆவலுடன் ஓடோடிச் சென்று மொய்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்கள் கிடைத்ததும், அல்லவா! பத்திரிகை நாங்கள் எல்லோருமே தின்பண்டம் கண்டதும் மொய்த்துக் கொள்ளும் குழந்தைகளாகி விடுகிறோம்.

ஷேக் அப்துல்லாவின் பாகிஸ்தான் பயணம் பற்றிய செய்தி விரிவாக வெளியிடப்பட்டிருந்தது.

எந்தப் பாகிஸ்தான், காஷ்மீர்மீது பாய்ந்து, பகுதியைத் தன் பிடியில் சிக்கச் செய்துவிட்டதோ, அந்த பாகிஸ்தானில், ஷேக் அப்துல்லாவுக்கு மகத்தான வரவேற்பு.

எந்தப் பாகிஸ்தானுடைய தாக்குதலைச் சமாளிப்பதற்காக இந்திய துருப்புகளின் துணையைத் தேடிப் பெற்றாரோ அந்த அப்துல்லாவுக்கு; தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் வரவேற்பு.

எந்த அப்துல்லா, பாகிஸ்தானுடன் கூடி காஷ்மீர் அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார் என்று குற்றம் சாட்டி 11 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்ததோ, அதே இந்திய துரைத்தனம், அதே ஷேக் அப்துல்லாவை, அதே பாகிஸ்தானுக்கு, 'சென்று வருக! செம்மையான சமரசம் மலர வழி கண்டு கூறுக!' என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறது.

எத்தனை எத்தனை விந்தை நிகழ்ச்சிகள்—என்னென்ன விதமான திடீர் திருப்பங்கள், அரசியலில் என்பதுபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

27—5—64

இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, 'நேரு காலமாகிவிட்டாராம்' என்று கூறினார்.—நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நம்பமுடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது; காலை இதழிலேதான், நேரு டேராடன்னிலிருந்து உற்சாகத்துடன் டில்லி திரும்பினார்; விரைவில், அயூப்கானைச் சந்திப்பார் என்று மகிழ்ச்சி தரும் செய்திகளைப் பார்த்தோம்; பிற்பகல் 3 மணிக்கு, அவருடைய மறைவுபற்றிக் கேள்விப் பட்டால், எப்படி மனம் நிலைகொள்ளும். சரியாக விசாரியுங்கள்—அதிகாரியையே கேளுங்கள் என்று கூவினேன் அரக்கோணம் ராமசாமி சிறை அதிகாரியைக் கண்டு. கேட்டுவிட்டுத் திரும்பினார்; அவருடைய நடையிலே காணப்பட்ட தளர்ச்சியும் முகத்திலே கப்பிக்கொண்டிருந்த துக்கத்தையும் கண்டேன்—நடைபெறக் கூடாதது நடந்துவிட்டது—துளியும் எதிர்பாராதது ஏற்பட்டுவிட்டது என்று உணர்ந்தேன்—சில நிமிடங்கள் கல்லாய்ச் சமைந்து போனேன். எல்லோருமே கண்கலங்கிப் போயினர். நேரு போய்விட்டாரா—ஒளி அணைந்து விட்டதா—உலகமே அதிர்ச்சி அடையத்தக்க இழப்பு ஏற்பட்டு விட்டதா—அய்யய்யோ? எப்படி இதனை நாடு தாங்கிக் கொள்ளப் போகிறது—என்றெல்லாம் எண்ணி வேதனைப் பட்டேன், பண்டித நேரு, ஒரு சகாப்தத்தை நடத்தி வைத்தவர்—வெறும் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் இருந்து வந்தவர் அல்ல. உலகத் தலைவர்களிடையே அவருக்கு இருந்து வந்த நட்பும் தொடர்பும், இங்கு மட்டுமல்ல, உலகிலேயே ஒரு போரற்ற, பூசலற்ற காலத்தை உருவாக்கும் நிலைமையை மலரச் செய்தது. காங்கிரஸ் கட்சியிடமும் ஆட்சிமுறையிடமும் கசப்பும், கொதிப்பான கோபமும் கொண்டபோதெல்லாம்கூட, பண்டித நேருவுடைய சிறப்பு இயல்புகள், அறிவாற்றல், தனித்தகுதி பண்பு ஆகியவைகளை நான் மறந்ததுமில்லை, நமது கூட்டங்களிலேயே எடுத்துச் சொல்லத் தவறியதுமில்லை. அவர் சிறந்த ஜனநாயகவாதி என்பதை உள்ளூர உணர்ந்து, உவகையுடன் கழகத் தோழர்களுக்குக் கூறி வந்திருக்கிறேன். இந்தித் திணிப்பு விஷயத்தில் கூட, தென்னக மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்கத் தவறாதவர் நேரு பண்டிதர். நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலம் 1965-ல், இந்தி பற்றிய புதிய கட்டம் பிறந்திடும்போது, நேருவுடைய மனதிலே, ஒரு நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தி வைக்கலாம் என்று நம்பிக்கை கொண்டேன்; அதனையும் கழகக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். அவரிடம் பேசி அறியாதவன், நான். நான் ராஜ்ய சபையில் பேசியதையும் அவர் இருந்து கேட்கவில்லை. ஆனால் நான் பேசியான மறுநாள், பண்டித நேரு பேசுகையில், இரண்டு மூன்று முறை என் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டி, சிலவற்றை ஒப்புக்கொள்வதாகக் கூறிப்பேசினார். அந்தப் பேச்சின்போது, அவருடைய பார்வை என்மீது பலமுறை வீழ்ந்தது—அந்தக் காட்சி இப்போதும் தெரிவது போலிருக்கிறது.

பாராளுமன்றத்திலே, நான் பார்த்திருக்கிறேன்—வியப்படைந்திருக்கிறேன்—காங்கிரஸ் ஆட்சியாளர் அதனைக் கண்டும் பாடம் பெறவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன்—நேருவின் பேச்சிலே குறுக்கிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபதாபத்துடன், எரிச்சல் ஏளனத்துடன், காரசாரத்துடன் பல பேசுவார்கள்—துளியும் பதறாமல், ஒரு ஐம்பது ஆண்டுக்கால வரலாற்றை உருவாக்கிய அந்தப் பெருந்தலைவர், ஜனநாயகத்திலே இது தவிர்க்க முடியாதது என்று மட்டுமல்ல, இது தேவைப் படுவது, வரவேற்கப்பட வேண்டியது என்ற பண்புணர்ச்சியுடன் பதில் அளிப்பார்—அத்தகைய ஒரு ஜனநாயகச் சீமான் மறைந்துவிட்டார்.

விவரம் தெரியவில்லை. ஏன் எப்போது, எங்கே, காலமானார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. வேதனை அதிகமாக வளர்ந்தது.

என்னைக் காணக் கருணாநிதி வந்திருப்பதாக அழைத்தார்கள்—நடந்து சென்றபோது, எங்கோ காற்றின் மீது நடப்பதுபோல ஒரு உணர்வு. கருணாநிதியும் அரங்கண்ணலும் வந்திருந்தார்கள். சர்க்காரிடம் தனி அனுமதிபெற்று, வேதனை தோய்ந்த என் முகத்தைக் கண்டார்கள்—அவர்களின் கண்கள் கசிவதை நான் பார்த்தேன். விவரம் கேட்டேன்—தெரிவித்தார்கள். அனுதாபச் செய்தி வேண்டும் என்றார்கள்—எழுதும் நிலை இல்லை—மனக் குமுறல் எண்ண ஒட்டத்தையே ஒடித்து விட்டிருந்தது. மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணக் குவியலில், இரண்டொன்றை எழுத்தாக்கிக் கொடுத்தேன். இது, ஒரு கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல—நாட்டுக்கு—ஆகவே, நாட்டவருடன் கழகத்தவர் இந்தத் துக்கத்தில் பங்கேற்றுக் கொள்ளவேண்டும்—கூட்டங்கள், ஊர்வலங்கள் வேண்டாம் என்று கூறி அனுப்பினேன்.

நண்பர்களுடன், நேரு மறைவுபற்றித்தான் பேசிப் பேசி, ஆறுதலைத் தேடிக்கொள்ள முயன்று வருகிறேன்.

28—5—64

வேதனை நிரம்பியநிலை நீடித்தபடி இருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் மனம் செல்லவில்லை.

பரோல் முடிந்து சிறை திரும்பிய நண்பர் கோவிந்த சாமி, ஊரே துக்கத்தின் பிடியிலே சிக்கிக்கிடப்பது பற்றி விவரம் கூறினார். எல்லாக் கட்சிகளையும் கொண்ட மவுன ஊர்வலம் நடப்பதாகத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு—டில்லி நகர் நோக்கி என் எண்ணம் சென்றது. எத்தகைய புகழ்மிக்க ஒரு வரலாறு, தீயிலிடப்படுகிறது! எத்தகைய பொன்னுடலுக்கு எரியூட்டுகிறார்கள்! என்பதை எண்ணி விம்மிக் கிடந்தேன்.

30—5—64

இன்று அரக்கோணம் தோழர் இராமசாமி எம். எல். ஏ. விடுதலையானார். விடியற்காலை ஐந்து மணிக்கே அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். மற்ற எவருடைய அறையையும் திறக்கவில்லை. ஆகவே, அவர் விடுதலையாகி வெளியே செல்லும்போது நண்பர்கள் அவருடன் அளவளாவி விடைதந்தனுப்பும் வாய்ப்பும் பெறவில்லை. நான் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுப்ப முயற்சித்து, பிறகு வேண்டாமென்று விட்டுவிட்டார்களாம்; காரணம் எனக்கு நேற்று இரவெல்லாம் அடிவயிற்றிலும் இடுப்பிலும் வலிகண்டு மெத்தத் தொல்லைப்பட்டேன்; மூன்று மணி சுமாருக்குத்தான் தூக்கம் பிடித்தது; ஆகவே என்னை எழுப்பலாகாது என்று இருந்து விட்டனர். நான் எழுந்த பிறகு இதைக் கூறினார்கள்; வருத்தப்பட்டேன். நண்பர் ராமசாமியிடம் நேற்று மாலை நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். மிகவும் அமைதியான வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ராமசாமி அறப்போரில் ஈடு பட்டுச் சிறை புகுவார் என்று, அவருடைய நெருங்கிய நண்பர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர் சிறை புகுந்தது அரக்கோணம் வட்டாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தக்கோலம் எனும் கிராமத்தில், மதிப்புள்ள ஒரு பெரிய விவசாயக் குடும்பத் தலைவர் ராமசாமி. கழகத்துக்குக் கிராமத்தில் இத்தகையவர்கள் நிரம்பக் கிடைக்க வேண்டும்; கிராமத்திலே குறிப்பிடத் தக்க நிலைபெற்றவர்கள் இதுபோல, பொதுவாழ்வுத் துறையில் ஈடுபடுவதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்பதும், அவர்கள் ஈடுபட்டுள்ள இயக்கத்துக்கு மட்டுமல்ல, மக்களாட்சி முறைக்கே வலியும் பொலிவும் ஏற்படுத்தும் என்பதிலே ஐயமில்லை. அரசியல் என்பதே, பளபளப்பான பட்டணக் கரைகளில் உள்ள பணக்கார்ர் படித்தவர்கள் ஆகியோருக்கென்றே அமைந்துள்ள துறை என்ற எண்ணம் மாறி, கிராமத்தில் குறிப்பிடத்தக்க நிலையிலுள்ளவர்கள் ஈடுபட்டு, செம்மைப்படுத்தி, நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படுத்த முனையவேண்டிய துறை அரசியல் என்ற எண்ணம் வலுப்பெறவேண்டும்.

திகைப்பு, உள்ளக் குமுறல், அதிர்ச்சி ஆகியவை காரணமாக, இரண்டு நாட்களாக எனக்கு உடல் நலிவு ஏற்பட்டுவிட்டது. குனிய நிமிர முடியாதபடி இடுப்பிலே வலி; தைலம் தடவியும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தும் என் நலிவைப்போக்க, மணி—மிக்க அன்புடன் முயன்றுவந்தார். அன்பழகன் இத்தகைய நலிவுகள் போக, மருத்துவ முறைகள் பல அறிந்திருக்கிறார். அவரும் எனக்கு உதவியாக இருக்கிறார்.

நேரு மறைவு, நாட்டிலே எப்படி ஒரு இருளையும் வெறிச்சிட்டுப்போன நிலைமையும் உண்டாக்கி விட்டதோ, அதுபோன்று என்மனதிலேயும் ஒரு வெறிச்சிட்ட நிலையை உண்டாக்கிவிட்டது. வழக்கமாக எழும் அரசியல் பேச்சுகள் இல்லை; படிப்பதற்கும் மனம் இடம் தரவில்லை.

நேருவின் இறுதிப்பற்றி உலகப் பெருந்தலைவர்கள் அனுப்பிய இரங்கற் செய்திகளையும், டில்லியில் அவர் உடலுக்கு எரியூட்டியதுபற்றிய செய்திகளையும் பத்திரிகைகளில் படிக்கப்படிக்க, வேதனையும் உருக்கமும் வளர்ந்துகொண்டு இருந்தது.

இந்த முறை, நான் சிறை புகுந்ததுமுதல், என் மனதுக்கு அதிர்ச்சியும் வேதனையும் மூட்டிவிடத்தக்க இழப்புகள் பல நேரிட்டுவிட்டதை எண்ணிக்கொண்டேன். விரைவாக மனவேதனையை நீக்கிக்கொள்ளக் கூடிய இயல்பும் எனக்குக் கிடையாது. சிறையிலே எனக்கு அமைந்துள்ள வாழ்க்கை முறையால் எனக்குத் தொல்லை அதிகம் இல்லை. என் தேவைகள்மிகவும் குறைவானவை. ஆகவே சிறையில்இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்ற சங்கடமே எழுவதில்லை. ஆனால், உள்ளத்து நெகிழ்ச்சி மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. துக்கமோ, திகைப்போ, உருக்கமோ, அதிர்ச்சியோ இதுபோன்ற எந்தவிதஉணர்ச்சி எழுந்தாலும், அதன் அளவும் மிகுதியாகி விடுகிறது. மிக அதிக நேரமும் அந்த உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டி நேரிட்டுவிடுகிறது.

இந்த நிலை காரணமாக, வழக்கமாகப் படிப்பதிலே தடங்கல் ஏற்பட்டுவிடுகிறது. நேரு மறைவு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எவ்வெவ்விதமாக வடிவம் கொள்ளும் என்பது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்; விரிவான விளக்கமான பதில்கூற இயலவில்லை; கோடிட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது.

25—5—64 தொடர்ச்சி.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று புதுமுறை அமைந்தபோது, அந்தப் புதுமுறையின் முழுப்பொறுப்புகளை உணர்ந்து, தமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்ளும் நிலை சமூகத்திலே ஏற்பட்டுவிடவில்லை—ஏழை எளியோர்க்கு இதம் செய்யும் ஒரு அரசு, பணக்கார ஆதிக்கத்தை அழித்த ஒரு அரசு அமைந்திருக்கிறது என்பதிலே ஒரு மகிழ்ச்சியும் எழுச்சியும் பிறந்தது என்றபோதிலும், பொது உடைமைத் தத்துவம்பற்றிய தெளிவும், அந்தத் தத்துவத்தைச் செயல்படுத்தப் பொது உடமை அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றிய தெளிவும், மக்களில் பெரும்பாலாருக்கு—கம்யூனிஸ்டு கட்சியினர் தவிர—ஏற்படவில்லை. அந்தச் சூழ்நிலையைக் காட்டும் சிறு கதைகளின் தொகுப்பு நூல் படித்து வந்ததில், இரண்டு கதைகள் எனக்கு மிகவும் உருக்கம் நிரம்பியதாகத் தென்பட்டது; ஒன்று ஒரு கிழவியின் கதை; மற்றொன்று ஒரு கைதியின் கதை.

ஒரு கிழவி—வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்துபோன உடல், நைந்துபோன உள்ளம். அவள் தனி. ஒருவரும் உடன் இல்லை. ஏதோ செய்கிறாள். கிடைத்ததை உண்கிறாள்; நடப்பவைற்றைக் காண்கிறாள். ஏதோ நடைபெறுகிறது என்று இருந்து விடுகிறாள். கீழே, விழுவதற்கு முன்புவரை, மரத்திலே ஒட்டிக்கொண்டு, ஆனால் உடன் உள்ள மற்ற இலைகளினின்றும் முற்றிலும் மாறுபட்ட நிலையில், சருகு இல்லையா—அதுபோல, அந்த மூதாட்டி. அவளுக்கு ஒரே ஒரு கவலை—அவளுடைய வீடு—சொந்தக் குடில்—கலனாகிக் கிடந்தது; எந்த நேரத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்ற கவலை, அச்சம் மூதாட்டிக்கு. அவளைவிட அந்தக் குடில் நலிவுற்றுக்கிடந்தது. தான் கண்ணை மூடுவதற்கு முன்பு வீடு, மண்மேடாகி விடக்கூடாது என்பதுதான் அந்தக் கிழவியின் கவலை. ஆண்டவனையும் அடியார்களையும் அவள் இது குறித்துத்தான் வேண்டிக்கொள்வாள். பொது உடைமை அரசு, மக்களின் கஷ்டத்தை மகேசனோ அருளாளர்களோ போக்க மாட்டார்கள், என்ற சித்தாந்தம் கொண்டது. மகேசனைக் காட்டி, மதியிலிகளைச் செல்வர்கள் மயக்கி மிரட்டி, சுரண்டிக்கொழுக்கிறார்கள் என்பது, அந்த அரசு அமைத்த கம்யூனிஸ்டு கட்சியின் சித்தாந்தம்.

மூதாட்டிக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் எழவில்லை. எப்போதும், போல அவளுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிடிருந்தது. பழைய கொடுங்கோலாட்சி வீழ்ந்துவிட்டது. புதிய ஆட்சி எழுந்துவிட்டிருக்கிறது என்பதுபற்றி அவள் காதில் விழுந்தது. கருத்து அது குறித்துச் செல்லவில்லை. அவளுக்கு இருந்த கவலையெல்லாம், தன் வீடு இடிந்து விடக்கூடாது தன் உயிர் உள்ளவரை—அது கொஞ்சக் காலம்தானே—என்பதுதான்.

வீட்டிலுள்ள பூஜா மாடத்தில், ஏசு, கன்னிமேரி, அடியார்கள் படங்கள் இருந்தன; நாள்தோறும் வேளை தவறாமல், 'பிரார்த்தனை' செய்து வந்தாள், "பரம பிதாவே! அன்னை மேரியே! அருளாளர்களே! என் வீடு இடிந்து விழுந்து விடாதபடி பாதுகாத்துக் கொடுங்கள். நான் இருக்கப்போவது சில நாட்கள். இதற்குள் வீடு விழுந்து விட்டால், பழுதுபார்க்கப் பணத்துக்கு எங்கேபோவேன். வீடு மண்மோடாகி விட்டால், தங்க இடமுமின்றித்தத்தளிப்பேன். எனக்குத் துணை எவரும் இல்லை, தேவனே! என் வீடு விழாமலிருப்பது உன் அருளால்தான்; உன்மீது பாரத்தை போட்டுவிட்டு, உழன்று வருகிறேன். அருள் புரிவாய், ஆண்டவனே! என்றெல்லாம் வேண்டிக் கொண்டாள். இவ்விதமான ஏழையின் புலம்பல் பரமண்டலத்திலே புகாது. சீமான் கொட்டும் காணிக்கைப் பொருளின் சத்தம் மட்டுமே தேவன் செவியில் கேட்கும்; ஏனெனில் தேவன் செவி என்று பாமரர் நம்புகிறார்களே தவிர, உண்மையில் கேட்கும் செவி இருப்பது பூஜாரிக்குத்தான், கடவுளின் பெயர் கூறிக் கொழுத்துக் கிடக்கும் தரகனுக்குத்தான் என்று புது அரசு அமைத்த கட்சியினர் பேசினர்; பேசிவருகின்றனர். கிழவிக்குத் தெரியாது: தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்பும் எழவில்லை. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தொழுகையிலே தான் அவளுக்கு நம்பிக்கை. நம்பிக்கைக்குரிய வேறு ஒன்று இருக்க முடியும் என்றுகூட அந்த மூதாட்டி எண்ணிப் பார்த்ததில்லை.

ஒரு இரவு—மழை—கிழவிக்குக் கிலி—வீடு இடிந்து விடுமோ என்று—மழையைத் தாங்கும் வலிவுள்ளதா அந்த வீடு—படுகிழமாயிற்றே! தேவனையும் அடியார்களையும் வேண்டிக்கொண்டபடி இருந்தாள்; யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; பதறினாள். தள்ளாடிக் கொண்டே சென்று கதவைத் திறந்தாள்; ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்; குளிர் நடுக்கத்துடன்.

பரிவுடன் அவனுக்கு ரொட்டி கொடுத்தாள் கிழவி. வீட்டுக்குள்ளே வந்ததால், அவனுக்கு நடுக்கம் குறைந்தது. கிழவிக்கு நன்றி கூறினான்.

பூஜாமாடம் தெரிந்தது. வாலிபன் முகத்திலே ஒரு ஏளனப் புன்னகை பிறந்தது. அந்தப் புன்னகையின் பொருளை உணரத்தக்க முறையில் அவனைக் கூர்ந்துபார்க்கக் கிழவியால் இயலவில்லை; கண்கள் ஒளியை இழந்து விட்டிருந்தன, பெரும்பகுதி.

"இவைகளெல்லாம் என்ன?” -அவன் கேட்கிறான்.

"தேவன் திரு உருவம்—பக்கத்தில் அடியார்கள்—அவர்கள் பெயர்களெல்லாம் எனக்கு முறையாகத் தெரியாது—அடியார்கள் என்று மட்டுமே தெரியும்—இவர்கள் அருளாளர்கள் என்பதை அவர்கள் முகத்தின் பொலிவே காட்டுகிறது"—கிழவி கூறுகிறாள். வாலிபன் சிரித்தான். சத்தமிட்டு. "இவர்கள் உனக்கு என்ன தருகிறார்கள்?— இவர்களை நீ வணங்கி பெறுவது என்ன?”அவன் கேட்கிறான்.

கிழவிக்கு நடுக்கம், இப்படி ஒரு கேள்வி கேட்கிறானே என்று.

அப்பா! நானோ கிழவி! என் வீடு இது. பார் எவ்வளவு கலனாகிக்கிடக்கிறது; இது இடிந்துவிழாமல் பாதுகாத்தருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செலுத்துகிறேன்" என்றாள்.

"பிரார்த்தனைகள்—ஜெபதபங்கள்—காணிக்கைகள் சடங்குகள்— இவைகளால் பிரச்சினைகள் தீராது. கிழவி! மக்களின் பிரச்சினைகளை மகேசன் தீர்க்க மாட்டார். மக்களேதான் தமது உழைப்பால் தீர்த்துக்கொள்ள வேண்டும். பூஜையாம், அருளாம்! வெறும் மனப்பிராந்தி"—என்று பேசலானான் வாலிபன்.

மழை நின்றது. அவன் வெளியே சென்றான். அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதிலே புகவுமில்லை. ஏற்கனவே அவள் மனதில் இருந்துவந்த நம்பிக்கையும் அவளைவிட்டு வெளியேறவில்லை. எப்போதும் போல, "ஏசுவே! மேரியே! அடியார்களே!" என்று தொழுகை நடத்தியபடி இருந்துவந்தாள் மூதாட்டி.

ஒருநாள் பாதிரியார் வந்தார்—பூஜை நடத்திக் கொடுக்க—கிழவி பயபக்தியுடன் தொழுகை நடத்தினாள். காணிக்கை கேட்டார்; பணம் வைத்திருந்தாள். தேடித்தேடிப் பார்க்கிறாள் சிக்கவில்லை; எங்கு வைத்தோம் என்ற நினைவு வரவில்லை; கிழவி தானே!

"நீ தேடிக்கொண்டே பொழுதை ஓட்டுவாய், நான் காத்து கொண்டே கிடப்பதா. எனக்கென்ன வேறு வேலைகளே இல்லையா. இன்னும் பல இடங்கள் போகவேண்டும் பூஜை நடத்தி வைக்க. எனக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள் பலர்—அவர்களின் சாபதத்தைப் பெறுவாய்—எடு எடு பணம் இல்லாவிட்டால், பத்துக் கோழி முட்டை களாவது கொடு" என்று பக்திப் பிரபாவத்தின் பாதுகாவலன் கேட்கிறான். கிழவி முட்டைகளைத் தருகிறாள், பாதிரியார் பெற்றுக்கொண்டு போகிறார்.