கைதி எண் 6342/பதிப்புரை

பதிப்புரை

தாய்ப்பாசத்தைப் போன்றதே தாய்மொழியின் பாசமும். அது தானாகவே பொங்கிச் சுரப்பது. பெரிய பெரிய இன்னல்களையும் எதிரேற்று. மகிழ்வுடன், உறுதியுடன், தாய் மொழியைக் காக்கும் கடமையாற்றத் தூண்டுவது.

பெற்று வளர்த்துப் பேணிக்காத்த தாயைப்போலவே, தாய்மொழியும் உணர்வுடன் கலந்து மனத்தையும் வாழ்வையும் வளப்படுத்துவதனால், தாய்மொழிக்கு ஓர் இன்னல் என்றால், கற்றவரும் மற்றவரும் துடித்தெழுந்து போராட்டக் களம் புகுவதற்கு முந்துகின்றனர்.

இந்தத் தாய்மொழிப் பாசத்தினாலேதான், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழ்மக்கள் தொடர்ந்து உறுதியுடன் போராடி வருகின்றார்கள். இந்தி எதிர்ப்பு அறப்போரின் ஒரு கட்டமே கடந்த 1963 இறுதியில், அறிஞர் அண்ணாவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நடத்திய, அரசியல் சட்டத்திலுள்ள மொழிப்பிரிவின் 17-வது விதியைப் பொது இடத்தில் கொளுத்தும் போராட்டம் ஆகும்.

இந்தப் போராட்டத்திலே கலந்து கொள்வதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சியிலிருந்து திரு.டி.எம்.பார்த்தசாரதி, திரு.டி.கே.பொன்னுவேலு, திரு.வி.வெங்கா, திரு.கே.பி.சுந்தரம் ஆகிய நால்வருடன் காரில் வந்து கொண்டிருந்தபோது, கைது செய்யப் பெற்றார்கள். டிசம்பர் 16 ஆம் நாள், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார்கள்.

அண்ணாவைக் கைது செய்ததன்மூலம் போராட்டத்தைத் தடுக்க முயன்றது அன்றைய அரசு. எனினும், போராட்டம் மேலும் வளர்ந்ததேதவிர, அதனால் தளர்ந்து விடவில்லை.

சிறையிலே இருந்த காலத்திலே அண்ணாவும் பிறரும் பெற்ற அநுபவங்களும், அங்கே அண்ணாவின் இதயத்திலே நாள்தோறும் எழுந்த சிந்தனைகளும் கவலைகளும் மிகவும் உருக்கமானவை. அவற்றை, அறிஞர் அண்ணா அவர்களே தொடர்பாகக் 'காஞ்சி' வார இதழில் கடிதங்களாக எழுதி வந்தார்கள். அந்தக் கடிதங்களே இப்போது நூல் வடிவிலே வருகின்றன.

அன்பினாலே கனிந்து கனிந்து பாசத்தோடு தம்பியர்களை நடத்திச் சென்ற அண்ணாவின் உள்ளம், அந்தச் சிறை வாழ்விலே எவ்வளவு சோகங்களையும் கவலைகளையும் சிந்தித்து வெதும்பியது என்பது இந்தக் கடிதங்களால் விளங்கும்.

அன்பும் பண்பும், அறிவும் தெளிவும், சொல்லாற்றலும் பேச்சாற்றலும், எளிமையும் இனிமையும் ஓருருக் கொண்டாற் போல விளங்கிய அண்ணாவின் கடிதங்களிலே, செழுந்தமிழும், சிந்தனையலைகளும், கொள்கை விளக்கங்களும், குமுறல்களும், கவலைகளும், எள்ளல்களும் அணியணியாக நிறைந்து, அந்த உணர்வுகளை அனைவரிடமும் தோற்றுவிக்கின்றன. கடித இலக்கியத்திலே, அண்ணாவின் கடிதங்கள் தனிச்சிறப்பு உடையவை, உரிமையோடும் பாசத்தோடும் கூடிய உள்ளத்தின் பிரதிபலிப்பாக விளங்குபவை. அவற்றை நூல் வடிவிலே தருவதற்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெரிதும் மகிழ்கின்றோம்.

ஒவ்வொரு வாரமும் காஞ்சியில் வந்த கடிதங்களுக்குத் தலைப்பு மட்டும் தந்துள்ளோம், படிப்பதற்கு வசதியாக.

தமிழ் அன்பர்கள் விரும்பி வரவேற்பார்கள் என்பதுடன், அண்ணாவின் நினைவோடு கலந்து தமிழ் உணர்வு பெறுவார்கள் என்றும் நம்புகின்றோம்.

பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=கைதி_எண்_6342/பதிப்புரை&oldid=1651473" இலிருந்து மீள்விக்கப்பட்டது