கைலாயமாலை
← | கைலாயமாலை எழுதியவர்: முத்துராச கவிராசர் |
→ |
காப்பு
தொகுவெண்பா
- திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு
- பங்கர் கயிலாய மாலைக்குத் -துங்கச்
- சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச்
- சயிலமுகத் தோன்துணைய தரம்.
நூல்
தொகுகலிவெண்பா
பாடல்கள் 01- 10
தொகு- சீர்மேவு மேருகிரித் தென்திசையோர் சம்புமரம்
- பேர் மேவ நின்ற பெருமையினால்-ஏர்மேவு
- நாவலந்தீ வென்னுமொரு நாமமுற அத்தீவிற்
- காவல் மருவுநவ கண்டிகளாய்-மேவதனுள்
- நானா வளங்கெழுசீர் நற்பரத கண்டத்துள்
- வானோர் புகழீழ மண்டலத்தில்- மேல்நாள்
- உதபகுல ராசன் உதயமதி வாசன்
- சிதைவின்மனு ராசவம்ச தீரன்-துதையளிகள்
- பாடுமலர் ஆத்திபுனை பார்த்திவன்தன் சீர்த்திமுற்றும்
- தேடுந் தனிக்கவிதைச் செம்பியர்கோன்- நீடுகரைப்
- பொன்னித் துறைவன் புலிக்கொடியன் பூவில்மன்னர்
- மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி-கன்னிமின்னார்
- தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்துள்
- ஆடிப் பிணிதணிப்பத் தானினைந்து-சேடியர்தஞ்
- சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
- பாவையுறு தீர்த்தம் படிந்ததற்பின்-ஏர்வைபெறு
- கங்குலுற எங்குமிகு காவ லரண்பரப்பிச்
- சங்கையுறு கூடாரந் தானமைத்து-மங்கை
- விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே
- பொருந்துதுயி லாயிருக்கும் போது-வரிந்தசிலை
பாடல்கள் 11- 20
தொகு- வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங்
- காடன் புதல்வன் கதிர்காமன்-ஏடவிழுந்
- தார்க்கடம்பன் பேர்முருகன் தாமோ தரன்மருகன்
- சீர்க்குரவன் தேவர் திரட்கொருவன்- சூர்ப்பகையை
- மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தஅடி யார் துயரை
- ஆற்றுங் குமரன் அருளாலே-போற்றுதவர்
- வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத்
- தாய்ந்த நராகத்(து) அடலேறு-சாய்ந்துகங்குல்
- பேரவதன்முன் ஏகியந்தப் போர்வேந்தன் மாமகள்தன்;
- காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே-ஆவலுடன்
- கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
- வண்டார் குழலை மணம்புணர்ந்(து)-உண்டான
- பூவிலநு போகம் பொருந்திப் புலோமசையுங்
- காவலனும் போலக் கலந்திடுநாள்-தாவில்மணப்
- பூமான் மதிக்கப் புவிமான் மகிழ்ச்சியுறக்
- கோமான் மனுவின் குலம்விளங்க-நாமானும்
- உன்னிமிகும் ஆசி உரைத்துத் திருத்தமிகு
- தன்னிதய சந்தோஷந் தான்பெருக-மன்னுபுவி
- மாந்தர்சுக மேவ மனுநீதி யுண்டாக
- வேந்தர்கள்தம் நெஞ்சம் மிகநடுங்கப்-பூந்தவிசின்
பாடல்கள் 21- 30
தொகு- வேதன்கை நோகவரும் மேலோன் விழிதுயிலப்
- போதன்மணி மேனி புளகரும்பச் சோதிபெறு
- தேவா லயங்கள் செயும்பூ சனைசிறக்க
- மேவுஆலை வில்லி விருதுகட்ட-நாவார்
- மறையோர்கள் வேள்விமல்க மாதவங்க ளோங்கக்
- குறையாது நன்மாரி கொள்ள-நிறைவாகச்
- செந்நெல் விளையச் செகம்செழிக்கச் செல்வமுற
- மன்னன் மகள்தன மணிவயிற்றில்-மன்னு
- கருவாய்ந்(து) அயனமைத்த கட்டளைகள் திட்ட
- உருவாய்ந்து பத்துமதி யொத்துத்-திருவாய்ந்த
- திங்கள் முகத்தழகுஞ் செய்யவடி வாலழகும்
- துங்கமுறும உச்சிச் சுழியழகும்-பொங்குமணிக்
- கண்ணழகும் மூக்கழகுங் காதழகுங் கையழகும்
- மண்ணில நராபோல் வடிவழகும்-நண்ணி
- வரசிங்க ராயன் மகாராச ராசன்
- நரசிங்க ராசனெனும் நாமத்-துரைசிங்கம்
- வந்துபிறந் திந்தவள மண்டலமெல் லாம்மதிக்க
- இந்துவென வேவளரும் ஏல்வையினிற்-பிந்தியொரு
- பெண்பிறந்தாள் அந்தவெழிற் பெண்ணையுமுன் அண்ணலையுங்
- கண்போல் வளர்த்துக் கவின்பெறலும்-நண்பாகத்
பாடல்கள் 31- 40
தொகு- தந்தையர்க்குந் தாயருக்குஞ் சாற்றுமணம் ஆற்றுவித்த
- கந்தனுமை மைந்தன் கருணையினால்-வந்த
- இருவருக்கும் நன்முகூர்த்த மிட்டுமகிழ் பூப்பத்
- தருவிருக்கு மாலைவடஞ் சாத்தித்-திருவிருக்குஞ்
- செய்யமணஞ் செய்து திறல்வேந்தர் போற்றிநிற்பத்
- துய்யநவ ரத்னமுடி சூட்டியபின்-பையரவின்
- உச்சியினின் றாடும் ஒருவனின் ஆகுமென்ன
- மெச்சுக்ர வாளகிரி வெற்புமட்டும்-உச்சிதஞ்சேர்
- தன்னாணை செல்லத் தரியலர்கள் தாள்வணங்கப்
- பொன்னாட் டரசன் புகழ்குறையப்-பன்னாட்
- டரசர் திறையளப்ப அந்தணர்கள் வாழ்த்த
- முரசதிரப் பேரி முழங்க-வரிசையுடன்
- சங்கமெழுந் தார்ப்பத் தமனியப்பொற் காளாஞ்சி
- மங்கையர்க ளேந்தி மருங்கி(ல்)நிற்ப-எங்குமிகு
- கட்டியங்க ளார்ப்பக் கனஅரி யாசனத்தில்
- இட்டமெத்தை மீதில் இனிதிருந்து-திட்டமுடன்
- நங்கோ னிராமன் நடத்தியுல காண்டதுபோற்
- செங்கோ லரசு செலுத்தும்நாள்-மங்காத
- பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன்
- காவலன்தன் மீது கவிதைசொல்லி- நாவலர்முன்
பாடல்கள் 41- 50
தொகு- ஆனகவி யாமின் அமைவுறவா சித்திலும்
- மானபரன் சிந்தை மகிழ்வாகிச்-சோனைக்
- கருமுகில் நேருங் கரன்பரிசி லாக
- வருநகர மொன்றை வழங்கத்-தருநகரம்
- அன்றுமுதல் யாழ்ப்பாணம் ஆன பெரும்பெயராய்
- நின்ற பதியில் நெடுங்காலம்-வென்றிப்
- புவிராசன் போலப் புகழினுட னாண்ட
- கவிராசன் காலங் கழிய-அவிர்கிரண
- சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
- இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை
- கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
- தரையரச னின்றித் தளம்ப-விரைசேருந்
- தாமமணி மார்பன் தபனகுல ராசன்
- சேமநிதி யாளன்திறற் பணியால்-நாமநன்னீர்
- மேவரச ராதிபதி வேலினரை நேர்விறல்கொள்
- மேவலவர் ஆவிகவர் வீரபரன்- பாவின்மொழி
- மாதர்மடல் மீதெழுது மாமதன ரூபன்மதி
- ஆதரவு நீதி அருட்குரிசில்-தீதகலும்
- மாகதர்கள் கோசலர்ம லாடர்கரு நாடர்மிகு
- கேகயர்கள் மாளவர்கள் சேரளர்கள்-வாகைபெறு
பாடல்கள் 51- 60
தொகு- சோனகர்வி ராடர்துளு வாதியர்கள் சூரமிகு
- சீனரொடு சாவகர்கள் சேதியர்கள்-ஆனவெகு
- சேனைபுடை சூழவய மாவின்மிசை சேனையின
- மானமுடன் மேவுமகா ராசதுரை-வானகத்தில்
- தூண்டிடினும் தீயினிடைத் தூண்டிடினும் நீரினிடைத்
- தூண்டிடினும் செல்லுந் துரகத்தான் நீண்ட
- உரகன்முடி நோவ உரசரண நாட்டுங்
- கரடதட கும்பக் களிற்றான்-முரண்இரவி
- இட்டதனி யாழி யிரதமிணை யல்ல வெனும்
- வட்டமுறு மாழி மணித்தேரோன்-முட்டருதாள்
- கஞ்சன் படைகள் களம்வரினுங் காதமெதிர்
- பஞ்செனநீ றாக்கும் பதாதியான் செஞ்சுடரோன்
- ஓங்கு கிரண உலகஅர சைச்செயித்துத்
- தாங்கிநிழல் செய்யுந் தனிக்குடையான்-நீங்காமல்
- அண்டர் உலகம்நிமிர்ந் தாடும் பரிசுடைத்தாய்க்
- கொண்டவிடை காட்டுங் கொடியினான்-ஒண்டிறல்சேர்
- கொண்டல்க ளோர் ஏழும் குரைகடல்ஏ ழுங்குமுறி
- மண்டுவபோல் ஆர்ப்பரிக்கும் வாத்தியத்தான்-புண்டரிகத்(து)
- இந்திரைமுன் எண்மர் இலக்குமியர் தம்பதியாச்
- சந்ததம்நின் றாடுஞ் சமுகத்தான்-சந்த்ரதரன்
பாடல்கள் 61- 70
தொகு- நம்பன் பரசுதரன் நாதன் கயிலாயன்
- செம்பதுமத் தாள்வணங்குஞ் சென்னியான்-அம்பொனிற்செய்
- வென்றிதரும் பட்டமுடன் வெண்திருநீ றுந்துலங்க
- ஒன்ற அணிந்தநுத லோடையான்-துன்றியறை
- விஞ்சுபடி யோர்கள் மெலிவுகுறை பார்த்தருள்செய்
- கஞ்சமலர் அஞ்சுமிரு கண்ணினான்-சஞ்சரிக்கத்
- தேனுலவு பூமணமுஞ் சேர்சந் தனம்பனிநீர்
- நானமண முங்கமழும் நாசியான்-வானுவகுங்
- காசினியும் பாதலமுங் காவல் செயவரினும்
- வாசகந்தப் பாதசத்ய வாய்மையான்-தேசுபெற
- அப்புலவுஞ் செஞ்சடிலத்(து) அண்ணல் பெருமைகளைச்
- செப்பமுடன் கேட்குந் திருச்செவியான்-எப்பொழுதுங்
- காதலொடு காண்போர் கலிபசிதுக் கந்தணிக்குஞ்
- சீதபுண்ட ரீகத் திருமுகத்தான்-மீதுயர்ந்த
- அட்டகிரி அற்பமென அம்புவியைத் தாங்குதற்குத்
- திட்டமுடன் வாய்ந்த திறற்புயத்தான்-கட்டழகன்
- கேசவன்தன் மார்பிற் கிளர்சலசை நேசமுடன்
- வாசமுறச் சேரும் மருமத்தான்-ஓசைப்
- பனகமுடி மீதுவளர் பாரரசர் தங்கள்
- கனகமுடி ஓங்குகழற் காலான்-தனதனிகர்
பாடல்கள் 71- 80
தொகு- மாதனத்தான் மாதிறத்தான் மாதுரத்தான் மால்நிறத்தான்
- ஆதரத்தான் ஆழிவைத்தான் ஆர்வனத்தான்-வேதன் அத்தான்
- போலும் எழிலுடையான் பூவுடையான் பூணுடையான்
- மேலும் வயமுடையான் வீறுடையான்-கோலநகர்ச்
- செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
- மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
- தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
- மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்-தன்னுழையிற்
- பொன்பற்றி யூரனண்டர் போரில் அழல்சூரன்
- மின்பற்று காலின் விலங்குதன்னை-அன்புற்று
- வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில்
- திட்டமுடன் வந்து செனனித்தோன்-மட்டுவுஞ்
- செங்குவளைத் தார்மார்பன் செல்வரா யன்பயந்த
- துங்கமலை யுச்சிச் சுடர்விளக்குக்-கங்கைகுலம்
- கொண்டாடுங் கொண்டல் குடிமைகளோர் ஐவரையுந்
- தொண்டாக வேகொணர்ந்த சூழிச்சியுள்ளான்-மண்டு விடை
- தூண்டும்ஏ ராளன் சுகிர்தன் சுபவசனன்
- பாண்டி மழவன் பரிந்துசென்று-வேண்டிப்
- பெருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய
- வருகுதிநீ யென்று வணங்கத்-திருவரசு
பாடல்கள் 81- 90
தொகு- மாறற்குச் செம்பொன் மகுடமணிந் தோனின்வழி
- காரணிவ னானபெருங் காரணத்தாற்-பேறுதரச்
- சாற்று மிவன்மொழியைத் தன்மனத்தோர்ந்(து) எண்ணிமறு
- மாற்றமுரை யாதுநல்ல வாய்மைசொல்லித்-தோற்றமிகு
- பாண்டவர்கள் தங்கள் பழையநக ரைத்துறந்து
- மீண்(டு)இந் திரப்பிரத்த மேவியபோல்-நீண்டவனும்
- நீடுவட மதுரை நீத்துமக ராலயவாய்
- நாடுந் திருத்துவரை நண்ணியபோற்-சூடுமலர்க்
- கொன்றைச் சடையோன் குளிர்சுவர்க்கம் விட்டிறங்கிச்
- சென்றுதிரு வாரூரிற் சேர்ந்ததுபோல்-துன்றுபுகழ்த்
- தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்து
- மன்னரசு செய்ய மனமகிழ்ந்து-மின்னொளிசேர்
- வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்த
- செங்கமலங் கூம்பத் திசையிருண்டு-கங்குல்வரச்
- சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்தரனெனப்
- பொங்குங் குமுதம் பொதியவிழிப்பப்- பொங்கருறு
- பூவின் மூசநிறை யும்புனலில் வாழ்கயல்கண்
- மேவியவளர் பூக மிடறுடைப்பத் -தாவும்
- மதித்த வளங்கொள் வயல் செறிதல் லூரிற்
- கதித்தமனை செய்யக் கருதி - விதித்ததொரு
பாடல்கள் 91- 100
தொகு- நல்ல முகூர்த்தமிட்டு நாலுமதி லுந்திருத்திச்
- சொல்லுஞ் சுவரியற்றித் தூண்நிரைத்து - நல்ல
- பருமுத் தரம்பரப்பிப் பல்கணியும் நாட்டித்
- திருமச்சு மேல்வீடு சேர்த்துக் - கருமச்
- சிகரந் திருத்தித் திருவாயி லாற்றி
- மிகுசித்ர மெல்லாம் விளக்கி - நிகரற்ற
- சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப்
- பத்திசெறி சிங்கா சனம்பதித்து - ஒத்தபந்தற்
- கோலவி தானமிட்டுக் கொத்துமுத்தின் குச்சணிந்து
- நாலுதிக்கும் சித்ரமடம் நாட்டுவித்துச்-சாலும்
- அணிவீதி தோறும் வளர்கமுகு வாழை
- அணியணியா யங்கே அமைத்துத் - துணிவுபெறுந்
- தோரணங்க ளிட்டுச் சுதாகலச கும்பநிகர்
- பூரண கும்பம் பொருந்தவைத்துக் - காரணமாய்
- எல்லா எழிலும் இயற்றி நிறைந்தபின்பு
- நல்லோர் அருள்முகூர்த்தம் நண்ணுமென்று-சொல்லிடலும்
- மன்னவனுஞ் சீதநதி மஞ்சனமா டிச்செறிந்து
- சென்னியின்நீ ராற்றிச் சிகைதிருத்தித்-துன்னுமெழிற்
- பொன்னினங்கி சாத்திப் புகழ்கனகப் பட்டுடுத்து
- மன்னுதிரு நீறுவடி வாயணிந்து-உண்ணுமொளி
பாடல்கள் 101- 110
தொகு- உத்தரீ கஞ்சாத்தி உயர்ந்தசெம்பொற் பாகைதன்னைச்
- சித்திரம் தாகச் சிரத்தணிந்தே-ஒத்த
- கடுக்கனிட்டுக் கைகளுக்குக் கங்கணமுஞ் சாத்தி
- அடுக்கயிரல் ஆழி யணிந்து-தொடுத்தமைத்த
- கண்டசரத் தோடுவரு காய்கதிரோன் தன்கிரணம்
- மூண்ட பதக்கம் உரத்தணிந்து-கொண்டுடையிற்
- சுற்றியரை ஞாண்பொருத்தித் தோள்வலயஞ் சோதிமணி
- வெற்றிக் கழல்பதத்தின் மீதணிந்து-மற்றுஞ்
- சகலா பரணமிட்டுத் தந்திமுகற் போற்றிப்
- புகழ்பூ சனைகள் புரிந்து - அகலாது
- சிங்கார மாக்கித் திருத்தியழ காயமைத்த
- சிங்கா சனத்திற் சிறந்திருப்பச்-சங்கார்ப்பத்
- தண்ணுமைசல் லாரி தடாரி திமில்முரசு
- நண்ணு முருடு நகுபேரி-எண்ணுகின்ற
- மத்தளங்கைத் தாள மணிக்கா களஞ்சுரிகை
- தித்திமுதல் வாத்தியங்கள் சேர்ந்ததிர-வித்வசனர்
- தம்புருவேய் வீணை சரமண் டலந்தொனித்துச்
- சம்பிரம சங்கீதந்; தாமிசைப்ப-விம்பச்
- சசிநேர் குடைநிழற்றச் சாமரைகள் வீச
- நிசியோட்டு தீவர்த்தி நீட்டச்-சுசியான
பாடல்கள் 111- 120
தொகு- பன்னீர் சிவிறப் பரிமளமெங் குங்கமழ
- நன்னீர்மை யாலத்தி நாட்டமிடச்-சொன்னீர்மை
- ஆசிமறை யோர்புகல ஆரவமுண் டாக்கியிடக்
- காசின்மணித் தீபங் கவின்நிரைப்பப்-பேசுபுகழ்ப்
- பாண்டி மழவன் பழையவழி யின்வழியே
- பூண்டநுதற் பட்டம் புனைந்தருள்-வாண்டிருந்து
- பூதானம் பொற்றானம் போற்றுகன்னி காதானம்
- மாதானம் அன்னம் அருள்தானம்-கோதானம்
- யாவும் மகிழ்ந்துகொடுத் தாரெழிலி;சேர் பேரொளிகள்
- தாவுமணி மண்டபத்திற் சார்ந்திருந்து-மேவுமருள்
- தேன்போல் மொழிபாகர்ச் சிந்தைசெய்து வந்தனையாய்
- ஆன்பால் பழமும் அருந்தியின்-தான்பாரப்
- பொற்கலத்தில் இட்டபசும் புத்தமுதம் என்னநின்ற
- நற்கறிபால் சீனி நறுநெய்யும்-அற்புதமாய்
- ஆனரச மாக்கதலி ஆர்வருக்கைத் தீங்கனிநல்
- தேன்மிகுத்த திவ்யமுள தீஞ்சுவையோ(டு) - ஆன(து)
- அருந்திப் பசியாறி அஞ்சுசுத்தி செய்து
- திருந்துமணிப் பந்தரின்கீழச் சென்று - பொருந்தியசீர்
- மேல்அம் பரத்தரசன் மேவும்அயி ராவதத்தின்
- கோலம் பொருந்துமத குஞ்சரத்தை - ஞாலம்
பாடல்கள் 121- 130
தொகு- புகழக் கொணர்ந்தமைத்த பூஷணங்க ளெல்லாந்
- திகழச் சமைத்துத் திருத்தி - மகிழ்வுபெறச்
- சீமான் செயவீரன் சித்தசன்நே ரொத்தமன்னன்
- கோமா னெனுஞ்சிங்கை யாரியர்கோ - னாமான்மெய்த்
- துங்கக் களிற்றில் துலங்கமகிழ்ந் தேறுதலும்
- மங்கலஞ்சேர் பல்லியங்கள் மற்றதிர - அங்குமுறு
- தந்திரமோர் நான்குஞ் சகலவிர துஞ்சூழ
- இந்த்ரபத வீதியென ஏற்றமிஞ்ச - மைந்துபொலி
- வங்கங் குலுங்க மலாடங் கிடுகிடென்னக்
- கொங்கங் கலங்கிக் குடிவாங்க - வங்கம்
- பயந்துநெரிந் தேங்கிப் பதைபதைக்க யானை
- நயந்தபதம் வாங்கி நடந்து - வியந்ததெரு
- வீதியினில் ஏகநகர் மேவுசனர் யாவர்களும்
- நீதிமன்னர் யாரும் நெறிக்கொண்டே - ஆதிதொட்டு
- இந்நாள் வரைக்கும்நம்பால் எய்துதுயர் எங்காசசோ
- மன்னான உனைக்கண்ட மாத்திரத்தே - இன்னேதான்
- ஈடேறி னோம்மிகவும் இன்பமுற்றோம் எவ்வறுமை
- காடேறி யோடக் கரைகண்டோம் - தோடேறு
- மாலையணி மார்பா வயவீமா வாளபிமா
- மாலைநிகர் மன்னான வருகவென்பார் - வேலையென்னக்
பாடல்கள் 131- 140
தொகு- கோத்தபெருஞ் சேனைக் குலவேந்தா எம்முகத்தைப்
- பார்த்தருளாய் எங்கே பராக்கென்பார் - கீர்த்தியுடன்
- முட்டுவார் போல முடுகுவார் நாலுதிக்குங்
- கிட்டுவார் நல்வசனங் கேட்டிடுவார் - சட்டமுடன்
- பாடுவார் வாசப் பரிமளங்கள் வீசுவார்
- ஆடுவார் ஆர்களிகொண் டார்த்தெழுவார் - சூடுமதிக்
- கங்காள நாதன் கறைக்கண்டன் மாதுமையோர்
- பங்காளன் தன்திருக்கண் பார்வையினால் - மங்காமல்
- ஆண்டிலொரு நூறும் அழியாமை இப்பதியை
- ஆண்டுமிக வாழ்வாய் அரசவென - ஈண்டி
- மலர்மாரி தூவி வருவார்கள் யாரும்
- பலகாலும் பாதம் பணிய - நலமான
- மங்கையர் சூழ் மன்னன் வரவறிந்து வாய்ந்தகுடக்
- கொங்கை குலுங்கக் சூழல்சரியச்-செங்கைவளை
- ஆர்ப்பச் சிலம்புகொஞ்சு அம்புலியைப் போல்வதனம்
- வேர் க்கவிரைந் தோடிமணி வீதிவந்து-பார்க்கிலிவன்
- விண்ணவனோ ஆதி விரிஞ்சனோ செங்கமலக்
- கண்ணானோ பேரளகைக் காவலனோ-மண்ணரசாள்
- வேந்தர்களின் முன்னாம் விசயனோ வீடுமனோ
- ஆய்ந்த ரகுகுலஞ்சேர் ஆரியனோ-போந்தவன்றன்
பாடல்கள் 141- 150
தொகு- சந்தமணி மார்பழுந்தச் சாரா திருந்தனமேல்
- இந்தமுலை யென்னோ வெழுந்ததென்பர்-மந்திரமாய்
- நாமொருதூ தேவி நயந்தியவனை மேவியின்பக்
- காமரசம் உண்போம் கலக்கமென்பார்-பூமியில்யாம்
- கொண்டவிர கந்தீரக் கொங்கையினில் இங்கிவன்கை
- முண்டகந்தொட் டால்அதுவே மோட்சமென்பார்-வண்டு
- செறிந்ததொடை யான்இவனைக் சேராமல் யாமும்
- இறந்ததினால் என்னபய னென்பார்-நிறந்திகழ
- இப்பிறப்பில் இங்கிவனைச் சேராமல் யாமிறந்தால்
- எப்பிறப்பில் துய்பபோம்இவ் வின்பமென்பார்-இப்படியே
- பேதையர்முன் னாய்எழில்சேர் பேரிளம்பெண் ஈறாகக்
- காதலிடை மூழ்கிவிடக் காவலனும் - போத
- நகரி வலம்வந்து நானிலமும் போற்றப்
- புகலுமணி மாளிகையிற் போந்த-இகலரிமாத்
- தாங்குமணி ஆசனத்தில் தண்ணிளியும் மெய்ந்நலனும்
- ஒங்கநனி வீற்றிருந்தங்(கு) உன்னித் - தேங்கமழும்
- புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன்
- எண்டிசையும் ஏத்தும் இராசமந்தரி - கொண்டதொரு
- வேதக் கொடியன் விருதுபல பெற்றதுரை
- கீதப் பிரவுடிகன் கிர்பையுள்ளான - தீதற்ற
பாடல்கள் 151- 160
தொகு- புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான் புவியோர்
- வந்திறைஞ்சும் பாத மகிமையுள்ளான் - முந்(து) அரிபால்
- தோன்றி அகிலாண்ட கோடியெல்லாந் தோற்றமுற
- ஈன்றோன் குலத்தில் எழுகுலத்தான் - சான்றோன்
- புவனேக வாகுவென்னும் போரமைச்சன் தன்னை
- நவமேவு நல்லூரில் நண்ணுவித்துச் - சிவநேச
- ஆகத்தான் தோன்றும் அனிசத்தான் அன்னமருள்
- தாகத்தான் விஞ்சுந் தருமத்தான்-சோகந்தீர்
- பாகீ ரதிகுலத்தான் பைம்பொன்மே ழித்துவசன்
- பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் -வாகாருங்
- கார்காத்து விட்டதென்னக் காமுறுபொன் பற்றியென்னும்
- ஊர்காத்து விட்டுவந்த உச்சிதவான் - பேர்சாற்றில்
- வாசவன்நேர் பாண்டி மழவனையுந் தம்பியையும்
- நேசமுறு மைத்துனமை நேர்ந்ததுரை - பேசுபுகழ்ச்
- சண்பகப்பேர் வாய்ந்த திறன்மழவ னோடும்அவன்
- நண்புபெறு தம்பியையும் நானிலத்திற்-பண்புசெறி
- தக்க பலவளமுஞ் சார்ந்துகல்வி நாகரிகம்
- மிக்கதிரு நெல்வேலி மேவுவித்துத்-தக்கவர்கள்
- எல்லாரு மேத்தும் இரவிகுல மன்னவனார்
- சொல்லும் பெயர்புனைந்த சுத்தபர-நல்லபுகழ்
பாடல்கள் 161- 170
தொகு- சூழுங்கங் காகுலத்துத் துய்யதுளு வக்கூட்டம்
- வாழும் படிக்குவந்த மாசின்மணி-ஏழுகடல்
- சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்
- கற்றவருக் கீயுங் கனகதரு-வெற்றிதரு
- காவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்
- மேவுகலை ஞான வினோததுரை-காவிரியூhச்
- செய்ய நரசிங்க தேவனைநற் சீர்வளங்கள்
- வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து-வையகத்து
- முத்தமிழ்சேர் சித்தன் முகசீ தளவசனன்
- சித்தச ரூபன்மன் திருச்சமுகன் - மெத்தியசீர்
- வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்
- கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு
- செண்பகமாப் பாணனையுஞ் சேர்ந்தகுலத் தில்வந்த
- தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனாம் - பண்புடைய
- மாப்பாண பூபனையும் மாசில்புகழ்க் காயல்நகர்ப்
- பூப்பாணன் என்னவந்த பொன்வசியன் - கோப்பான
- சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனையும்
- பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த்
- தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந்
- தெல்லிப் பழையில் திகழவைத்து - நல்விருதாய்க்
பாடல்கள் 171- 180
தொகு- கோட்டுமே ழித்துவசன் கோவற் பதிவாசன்
- சூட்டு மலர்க்காவித் தொடைவாசன் - நாட்டமுறும்
- ஆதிக்க வேளாளன் ஆயுங் கலையனைத்துஞ்
- சாதிக்க ரூப சவுந்தரியன் - ஆதித்தன்
- ஓரா யிரங்கதிரோ(டு) ஒத்தவொளிப் பொற்பணியோன்
- பேரா யிரவனெனும் பேரரசைச் - சீராருங்
- கன்னல் செறிவாழை கமுகுபுடை சூழ்கழனி
- துன்னும் இணுவில் துலங்கவைத்துப்-பொன்னுலகிற்
- கற்பகநேர் கைத்தலத்தான் கச்சூர் வளம்பதியான்
- மற்பொலியுந் தோட்குவளை மாலையினான்-பொற்பார்
- நதிகுலவெள் ளாமரசன் நானிலத்தின் மேன்மை
- அதிகபுகழ் பெற்ற அழ காளன்-நிதிபதிபோல்
- மன்னன்நிக ரான்மன்னன் மாமுத் திரைகள்பெற்ற
- தன்னிகரில் லாதவிறல் தாட்டிகவான்-இந்நிலத்தில்
- ஆலமுண்ட கண்டன் அடியைமற வாதவள்ளல்
- நீலகண்ட லென்னும் நிருபனையும்-மேலுமவன்
- தம்பியரோர் நால்வரையுந் தான்பச் சிலைப்பளியில்
- உம்பர்தரு வென்ன உகந்துவைத்துச்-செம்பதும்
- மாதுவள ருஞ்சிகரி மாநகர்வெள் ளாமரசன்
- சாதுரியன் காவிமலர்த் தாரழகன் - ஓதுமொழி
பாடல்கள் 181- 190
தொகு- உண்மையுள்ளான் மேலும் யுகப்புள்ளான் ஊக்கமுள்ளான்
- வண்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான் - திண்மைபெறு
- மாரன் கனக மழவனைப்பின் நால்வருடன்
- சேரும் புலோலி திகழவைத்துப் - பேரளகைக்
- காவலன்நேர் செல்வன்மலர்க் காவியணி யும்புயத்தான்
- பாவலருக் கின்பப் பசுமேகம் - பூவில்வரு
- கங்கா குலத்துங்கன் கவின்பெறுமே ழிக்கொடியோன்
- மங்காமல் வைத்த மணிவிளக்குச் - சிங்கார
- கூபகநா டாளன் குணராசன் நற்சமுகன்
- கூபகா ரேந்த்ரக் குரிசிலையுஞ் - சோபமுற
- நண்ணக் குலத்தின் நரங்குதே வப்பெயர்சேர்
- புண்ய மகிபால பூபனையும் - மண்ணினிடைப்
- பல்புரத்தின் நல்வளமு மொவ்வாப் பலவளஞ்சேர்
- தொல்புரத்தின் மேன்மை துலங்கவைத்து - வில்லில்
- விசயன்போர் வீமனுயர் வீறுகொடைக் கன்னன்
- இசையிற் பொறையில் இயல்தருமன் - வசையற்ற
- புல்லூர்த் தலைவன் புகழ்செறிவெள் ளாமரசன்
- எல்லோர்க்கும் மேலாம் இரத்னமுடிச் - செல்வமுறு
- தேவரா சேந்த்ரனெனுஞ் செம்மல்தனை - இந் நிலத்திற்
- கோவிலாக் கண்டி குறித்துவைத்து - நாவிரியும்
பாடல்கள் 191- 200
தொகு- சீர்த்தியுறு செம்மல் செழுந்தொண்டை நாட்டரசன்
- கோத்தமணப் பூந்தார்க் குவளையினான் - ஆர்த்தகவிக்
- கம்ப னுரைத்த கவியோ ரெழுபதுக்குஞ்
- செம்பொன்(ன்)அபி சேகஞ் செயுங்குலத்தான் - பைம்புயல்நேர்
- மண்ணாடு கொண்ட முதலியயெனும் மன்னவனை
- உள்நாட் டிருபாலை ஊரில்வைத்து - விண்ணாட்(டு)
- இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
- நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்
- பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
- நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்
- இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
- தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை
- மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
- பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ்
- வில்லவன்தன் வஞ்சி நகருறைவெள் ளாமரசன்
- பல்லவனோ டிரண்டு பார்த்திவரை - நல்விளைவு
- தாவுங் களனிகளுஞ் சாற்றும் பலவளமும்
- மேவுவெளி நாட்டில் விளங்கவைத்துப் - பூவில்
- தலையாரி சேவகரில் தக்கவர்கள் தம்மை
- நிலையாக நாட்ட நினைத்துச் - சிலைதரித்த
பாடல்கள் 201- 210
தொகு- வல்லியமா தாக்கனென்னு மரசூர வீரினைச்
- சொல்லியமேற் பற்றுத் துலங்கவைத்து - நல்ல
- இமையாண மாதாக்க னென்னும் இகலோனை
- அமைவாம் வடபற்றி லாக்கி - இமயமறி
- செண்பகமா தாக்கனெனுஞ் சீர்விறலோன் தன்னையிரு
- கண்போலக் கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும்
- வெற்றிமா தாக்கனெனும் வெய்யதிற லோனைமிக
- உற்றிடுதென் பற்றி லுகந்துவைத்துச் - செற்றவரை
- வென்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத்
- தன்திருச்சே னைக்குத் தலைமைசெய்து - துன்றிவரும்
- ஆனை குதிரை யமரு மிடங்கடல்போற்
- சேனை மனிதர் செறியிடமோ(டு) - ஆனவெல்லாம்
- அங்கங்கே சேர்வித் தருள்தார காகணத்துள்
- திங்க ளிருந்தரசு செய்வதுபோல் - துங்கமுறு
- பூபாலர் வேந்தன் புதியநக ராதிபதி
- சாபாலங் காரந் தருராமன் - மாபா
- ரதமாற்று மாயவன்போ லெய்துபகை மாற்றும்
- மிதமாய்ந்த வீரர் விநோதன் - பதுமமலர்ப்
- புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த
- சங்கச் சமூகத் தமிழாழன் - பொங்குந்
பாடல்கள் 211- 220
தொகு- தரைராசன் அம்புவியைத் தாங்குமகா ராசன்
- துரைராசன் தூயபுவி ராசன் - வரமார்
- செயசிங்க ஆரியனாம் செய்யகுல ராசன்
- நயந்துபுவி ஆண்டிருக்கு நாளில் - வியந்த
- மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி
- இதயத் திரவுபக லெய்தி - விதனமுறும்
- அக்கவின்சேர் கோவி லமைத்துப்ர திட்டைசெய்து
- சொக்கலிங்க மென்றுபெயர் சூட்டுமென்ன - மிக்க
- மனநினைவின் மன்னன் மதித்துமஞ்ச மீதிற்
- புனைதுயிலாய் மேவியிடும் போது - புனிதமிகு
- மாயனுக்கும் வேதனுக்கும் மாமறைக்கும் எட்டாத
- தூயபெரு ஞானச் சுடர்ப்பிழம்பு - காய்கதிரோ(டு)
- ஒத்ததிரு மேனி உருவமொழித் துப்புவியில்
- வைத்த மனிதர் வடிவாகிச் - சித்ரமிகு
- காதிற் கடுக்கனிட்டுக் கைக்கங் கணமணிந்து
- சோதித் திருவலயந் தோளிலிட்டுப் - பாதத்தில்
- வீரக் கழலணிந்து மிக்கசெம்பொற் பட்டுடுத்துச்
- சாரு மகுடந் தலையிலிட்டுப் - பாரச்
- சகல பணியுமிட்டுத் தன்மனையென் றோர்பெண்
- புகலுஞ் சருவாங்க பூஷணியாய் - மிகவெழில்சேர்
பாடல்கள் 221- 230
தொகு- வம்பார் குழுலியொடு மல்குகன வின்கண்நின்று
- நம்பேர் கயிலாய நாதனென்ன - நம்பி
- விழித்தெழுந்து மன்னன் விடையேறு நாதன்
- ஒளித்துநின்(று)ஆட் கொண்டானென்(று) உன்னிக்-களித்துமனப்
- பூரணம தாகிப் புனிதா லயமியற்றக்
- காரணமாய் நன்முகூர்த்தங் காட்டுவித்து - ஆரணத்திற்
- சொன்னமுறை தப்பாமற் சுற்றிச் சுவரியற்றி
- மன்னுசபை மூன்றும் வகுத்தமைத்து - உன்னி
- அதிசயிப்ப ஈசனுறை ஆலயமாற் றிப்பார்ப்
- பதிகோவில் பாங்கருறப் பண்ணி - விதியாற்
- பரிவார தேவர் பதியாக சாலை
- உரிதாம் இடங்களில் டாக்கி - அரிதான
- உக்ராண வீடு(ம்)அமைத் தோதுதிரு மஞ்சனத்து
- மிக்கதிரு வாலியுடன் வெட்டுவித்து - முக்யமுறு
- மாமறையோர் வாழு மணிஆல யங்கள்செய்து
- ஓமமுறை செய்யுமிடம் உண்டாக்கிச் - சாமநிதம்
- ஓதுவிக்கும் ஆலயம்செய் துண்டுபசி தீர்த்துவைக
- ஒதனத்தா னப்பதியும் உண்டாக்கிச் - சோதியுறை
- தேரோடும் வீதி திருத்திமட மும்சமைத்துக்
- காரோடும் பொங்கர்களும் காரணித்துச் - சீரான
பாடல்கள் 231- 240
தொகு- செம்பதும ஓடைகளும் செய்யமணி மேடைகளும்
- உம்பர்பதி என்னமகிழ்ந்(து) உண்டாக்கி - அம்புவியுட்
- கேதாரந் தன்னிற் கிளர்மதன்அர்ச் சித்துவைத்த
- ஆதார லிங்கம் அழைத்தருளி - மீதாக
- வந்தபிர திட்டை மகிழ்வோடு செய்தருள
- அந்தணருள் ஆய்ந்திங்கு அனுப்புமெனச் - செந்திருவார்
- சேதுபதிக்குச் செழும்பா சுரமனுப்பி
- ஆதிமறை யோர்கள்புகழ் ஆசிரியன் - வேதமுணர்
- கங்கா தரனெனும்பேர்க் காசிநக ரோனைஇனி(து)
- இங்கே யவனனுப்ப எய்தியபின் - செங்கனிவாய்ச்
- சீதை கொழுநன் திகழ்ராம நாதனைஅப்
- போதுபிர திட்டை புரிந்ததுபோல் - ஓதுவன்னச்
- சந்தனக்கால் நாட்டிச் சலாகைநிரைத் துப்பரவிச்
- சுந்தரப்பொற் பந்தல் துலங்கவிட்டு - அந்தரத்தில்
- ஆடுகொடி கட்டி அதுமுதலாய் செய்தமைத்து
- நீடு விதானம் நிறைவேற்றிக் - கோடிவன்னக்
- கச்சால் அலங்கரித்துக் கற்றைமுத்தின் குச்சணிந்து
- பச்சைகறுப் புச்சிவப்புப் பத்தியிட்டு - இச்சையுடன்
- துப்புக் குவைபிணித்துச் சுத்திதனக் கொத்திசைத்துக்
- குப்பைக் கனகக் குசைபரப்பி - ஒப்பமுறப்
பாடல்கள் 241- 250
தொகு- பாக்குக் குலைகதலிப் பைங்குலைதா ழங்குலையுந்
- தூக்கியணிந் தெங்குந் துலங்கவிட்டு - வீக்குஞ்
- சிலைபோல் வலயமிட்டுச் சித்திரங்க ளாகக்
- கலையாற் குடம்பரப்பிக் கட்டி - நிலையான
- கன்னலொடு பச்சைக் கமுகுகத லித்தொகைகள்
- துன்னுமணி வீதியிட்டுத் தோரணித்துப் - பொன்நகர்போற்
- சோடித்த தன்பின்எயில் சூழ்ந்தமணி ஆலயத்தை
- நாடுற்ற சந்தனத்தி னால்மெழுகி - நீடுமொளி
- மாணிக்கம் நீலக் வைடூ ரியம்வயிரம்
- ஆணித் தரளத்(து) அமைத்தழுத்திப் - பாணித்துப்
- பத்துத் திசையும் பரந்துதயங் குங்கிரண
- சித்ரமுறு சிங்கா சனம்திருத்தி - வைத்தபின்பு
- மாசின்மறை யோர்குரவன் மஞ்சனமா டித்திரும்பிப்
- பேசுரட்சா பந்தனமும் பேணியிட்டு - ஓசைவிடை
- கோட்டித் திசைகளெட்டுங் கொண்டசுத்த தண்டிலத்தை
- போட்டுக் கமலதளம் போற்பரப்பி - நாட்டமிட்டுப்
- பஞ்சவன்னந் தூவியிட்டுப் பச்சைக் குசைபரப்பி
- விஞ்சுபொற் கும்பகல மீதுவைத்து - அஞ்சலியாய்க்
- கோலமலர் தூவிக் குளிர்ந்த செம்பொற் பட்டுடுத்திப்
- பாலிகைகள் சுற்றிப் பரப்பிவைத்து - மூலபரன்
பாடல்கள் 251- 260
தொகு- ஆகமத்தால் அவ்வகை ஆகஅமைத் துச்சந்த்ர
- சேகரனை ஆகமத்திற் சேர்த்துவைத்துப் - பாகமுற
- முப்பத் திரண்டறமும் முற்றவளர்த் திட்டவருட்
- செப்புற்ற சொர்க்கச் சிவையைவைத்தே - ஒப்பற்ற
- ஆபரண வாசி அழகுறுபொற் பட்டுடைகள்
- சோபனம தாகத் துலங்கணிந்து - தூபமிட்டுச்
- சாதிகர வீரமொடு சண்பகஞ்செங் காந்தள்பிச்சி
- சீத வனசம் திருக்கடுக்கை - ஆதியவாம்
- மாமலர்கள் வாரி மலர்ப்பதத்தின் மீச்சொரிந்து
- தாமவட மும்துலங்கச் சாத்தியிட்டுத் - தூய்மையுறு
- சம்பா அடிசில் சகலவித மாச்சமைத்து
- விம்பவட மேருவென்ன வேகுவித்துச் - சம்பிரமாய்
- மாங்கனியோ(டு) ஆரும் வருக்கைக் கனிகதலித்
- தீங்கனியும் மந்தரம்போற் சேர்த்துவைத்துப் - பாங்கரினிற்
- பச்சிளநீர் நெய்தேன் பலகாரம் பால்முதலா
- உச்சிதம தாக உவந்துவைத்து - வச்ரமணி
- அள்ளி அழுத்தி அழகுறுகா ளாஞ்சிதனில்
- வெள்ளிலையும் பாகும் விளங்கவைத்துத் - தௌ;ளியசீர்த்
- தாமத் தரளத் தவளக் குடைநிழற்றக்
- காமருறும் ஆலவட்டங் கைப்பிடிக்கச் - சேமமடற்
பாடல்கள் 261- 270
தொகு- சல்லரி பொற்பேரி தவில்முரசு தண்ணுமைமற்
- றெல்லா முரசு மெழுந்தொலிப்பச் - சொல்லரிய
- மங்களங்க ளார்ப்ப வனிதையர்பல் லாண்டிசைப்பப்
- பொங்குங் கவரி புடையிரட்டப் - பங்கமுடன்
- நாடகத்தின் மாதர் நடிக்கத் தொனியெழும்பச்
- சோடசபூ சாவிதங்கள் தோற்றமிட்டு - ஆடு
- மயில்போல் உமாபதிக்கு வாய்த்த திருநாமங்
- கயிலாய நாதனெனக் காட்டி - வெயிலிமைக்குஞ்
- செக்கர்த் திருவுருவிற் சீரபிடேகம் புரிய
- அக்கினியின் ஓமகன்மம் ஆற்றியபின் - பக்கமுறு
- கும்பமுறு மஞ்சனத்தைக் கொண்டமலர்க் கையினெடுத்(து)
- அம்பொன்மணி மேனியினில் ஆக்குதலும் - உம்பருக்குந்
- தூயமுனி வோர்க்கும் துறவியர்க்கும் எட்டாத
- மாயமல கன்மற்ற மாசில்பரன் - வாய்மையிடில்
- வாக்கு மனவிகற்ப மாமறைக்கும் எட்டாமற்
- போக்குவரத் தில்லாப் புனிதபரன் - நோக்கியிடிற்
- புண்டரிகத் தோற்கும் புருடோத் தமற்குமெட்டா
- அண்டரண்டம் எங்கும்நிறை ஆதிபரன் - கொண்டமைந்த
- ஒத்த அருவுருவாய் ஒப்புவமை ஒன்றுமில்லாச்
- சுத்தசித்த சந்தான சூட்சபரன் - சித்தமுற
பாடல்கள் 271- 280
தொகு- ஆதிநாடு ஈறும் அடிமுடியும் நாடரிதாய்ச்
- சோதிமய மாகிநின்ற சுத்தபரன் - நீதியினிற்
- சேருந் திரிபுரமும் தீப்படுத்தச் சிந்தைசெய்து
- மேருச் சிலைவளைத்த வீரபரன் - பாரமுறும்
- ஓங்காரத் துள்ளொளியாய் உற்றதொகை அட்சரத்து
- நீங்காம லேநிறைந்த நித்தபரன் - வாங்காது
- புக்க இருவனையாய்ப் போதமுமாய் உட்பொருளாய்த்
- துக்கசுகம் இல்லாத தூயபரன் - அக்கினியாய்
- மண்ணாய்ப் பரந்துலவு மாருதமாய் வார்புனலாய்;
- விண்ணாகி நின்ற விமலபரன் - எண்ணுகின்ற
- ஒன்றாய்ப் பலவாய் உள்ளதுமாய் இல்லதுமாய்
- நன்றுதீ தற்றிருக்கும் ஞானபரன் - அன்றியுமே
- தோன்றுபதி னாலுலகில் தோற்றுமுயிர் வர்க்கமெலாம்
- ஈன்றவளை வாமத் திருத்துபரன் - ஊன்றுமனப்
- பத்தியுள் ளோர்கட்குப் பரவரிய சாயுச்ய
- முத்திகொடுக் குங்கருணை மூர்த்தபரன் - சித்தசன்முன்
- கூறுமலர் அம்புதொடக் கோலநுதல் தீவிழியால்
- நீறுபட அன்றெரித்த நித்தபரன் - பூருவத்தில்
- தந்தி முகவனையும் தம்பிமுரு கேசனையும்
- மைந்தரெனத் தந்தருளும் மாயபரன் - சுந்தரன்தன்
பாடல்கள் 281- 290
தொகு- தூதாய்ப் பரவையெனுந் தோகையிடத் தேஇரவின்
- மீதே நடந்த விமலபரன் - பாதமலர்
- சன்றச்சிலம்பு கொஞ்சக் கங்கைஉட லம்பதற
- மன்றுள்நட மாடும் வரதபரன் - என்றுமுள
- போதசிவ ஞான புராணமய மாய்முதிய
- வேதவடி வாகி விளங்குபரன் - ஓதுமுறை
- கைதொழுவோர் தங்கள் கருத்தொருமை - ஓர்ந்துருகு
- மெய்யுருவாய் நின்று விளங்குபரன் - வையகத்திற்
- சிந்தித்(து) ஒருகால் சிவாவென் றுரைக்கி(ல்) அதற்(கு)
- அந்தரமாய் நின்றங்(கு) அருள்செய்பரன் - மந்தரத்தைப்
- பாற்கடலி லேகடையப் பண்பொடெழுந்(து) அண்டரஞ்ச
- ஆர்க்குமுழு நஞ்சையுண்ட வாதிபரன் - போர்க்கெழுந்த
- மத்தகெசம் உட்கி மறுகிவரத் தோலையுரித்(து)
- உத்தரிய மாக உவந்தபரன் - அத்தனார்
- இந்தவித மெல்லாம் இதயத் துணர்ந்தருளி
- நந்தி திருமூகத்தில் நாட்டமிட்டு - நந்தமிர்தச்
- சித்திரகை லாசமொடு தென்கயிலை இவ்விரண்டு
- நித்தமுளம் ஓர்ந்துறையும் நேயபத்தி - அத்துடனே
- முக்கைலை யாகநல்லை மூதூரின் நன்றமைந்த(து)
- அக்கைலை மீதின் அமர்ந்துறைய - இக்கணமே
பாடல்கள் 291- 300
தொகு- உன்கணமும் நீயும் உளமகிழ்ச்சி யோடெழுந்தெம்
- முன்பு வருகென்று மொழிவழங்கிப் - பொன்புரையும்
- மிக்கதிரு மேனியிடை வெண்ணீ றணிதுலங்க
- அக்கமணி மாலை யழகெறிப்பக் - கொக்கிறகும்
- திங்கட் பருதி செறிந்து துலக்கமுறக்
- கங்கை மறுகிக் கரைபுரளக் - கங்குலினுஞ்
- சங்கக் குழைதலங்கச் சர்ப்பா பரணமின்னத்
- துங்கக் கடுக்கைத் தொடைதுலங்க - வெங்கயத்தின்
- போர்வை தயங்கப் புலியின் அதள்வயங்கக்
- கோவை தலைமாலைக் கோப்பிலங்கப் - பேர்வதிந்த
- அத்தியுடல் மத்தம் அழகெறிப்ப ஐயிரண்டு
- கைத்தலத்தின் ஒன்றிற் கனல்துலங்க ஒத்திருக்கும்
- ஒன்பது கைத்தலத்தும் ஓங்குமணி சூலபயம்
- மின்பொலியும் வச்சிரம்வாள் வெங்கயிறு - அன்புபெறும்
- அங்குசம்வெம் போகி அரிமான் இவைதயங்கப்
- பங்குடையான் மேனி பளபளென்ன - அங்கண்ன்ஊர்
- மால்விடையின் மீது மகிழ்வொடுவந் தேறுதலும்
- நாலுமறை யுங்குமிறி நாவிசைப்பக் - கோலமலர்ப்
- பங்கயனும் மாலும்இரு பக்கமணி யாகவரப்
- புங்கவர்க ளெல்லோரும் பூச்சொரிய - மங்குலுறை
பாடல்கள் 301- 310
தொகு- தேவன் சிவசிவென்னச் சித்தர்வித்தி யாதரர்கள்
- கூவியரன் நாமமெல்லாங் கூறிவர - மேவியயுறு
- தும்புருவும் நாரதனும் தூயமணி யாழிசைப்பக்
- கிம்புருடா கின்னரர்கள் கீர்த்திசொல்லி - அம்பருறை
- மாமுனிகள் அட்ட வசுக்கள்சப் தரிஷிகள்
- ஆமுறையில் யாரும் அரகரென்னச் - சேமமுள்ள
- அட்டதிக்குப் பாலகர்கள் ஆரும்அரு காகவந்து
- கட்டியங்கள் கூறிக் களித்துவரத் - திட்டமுடன்
- நந்திகணஞ் சூழ்ந்துவர நாகர்பதி மேவுபல
துந்துபி கள்ஆர்த்துத் தொனியெழுப்ப - எந்தைபிரான்
- எல்லாரும் போற்ற எழிலினுட னேயமைத்த
- நல்லூர்க் கயிலைதனில் நாடிவந்து - சொல்லரிய
- கர்ப்பூர தீபங் கனகமடல் மீதெடுப்பச்
- சிற்பரன் ஈதெல்லாஞ் சிறந்(து)உவந்து - பொற்பினொடு
- செப்புமலங் காரமிட்ட தேரில் எழுந்தருளி
- அப்பரிசே யாரும் அணிந்துவர - ஒப்பரிய
- வீதிவல மாகவந்து மேவுமணி ஆலயம்புக்(கு)
- ஆதிபர னங்கே யமர்ந்துறைந்து - நீதியுறு
- மன்னவருஞ் சீரும் மனிதர்களும் வாழ்ந்திருக்க
- உன்னியருள் செய்தான் உகந்து.
நூலாசிரியர்
தொகுநேரிசை வெண்பா
- கற்றோர் புகழக் கயிலாய மாலைதன்னை
- நற்றமிழி னாற்றொடுத்து நாட்டினான் - சுற்றுறையூர்ச்
- செந்தியப்பன் தந்தசிறு வன்முத்து ராசனென
- வந்தகவி ராசமகு டம்.