கோமளத்தின் கோபம்/கொக்கரகோ

(கொக்கரகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
5
‘கொக்கரகோ’

ரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே!

“வைஸ்ராயைப் பார்த்தாயோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

“இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?” என்று நான் வினவினேன்.

“அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போன வாரத்தில் கூட, ‘வீரர் வில்லிங்டன்’ என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?” என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால், பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்னபோது, கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை.

“தலையங்கம் யார் எழுதினது?” என்று நான் வினவினேன்.

“அரெரே! சமாசாரமே தெரியாதா?” என்று பீடிகை போட்டுக்கொண்டு, சுந்தரம் தன் சுய சரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறிமுகமான ஒரு பேர்வழி அவ்வழியே போக, நான் அவருக்கு ஒரு சலாம் போட்டுக் கொஞ்சம் பற்களை வெளியே காட்டினேன்.

“யார் அந்த ஆசாமி?” என்று கேட்டான் சுந்தரம்.

“கரன்சி ஆபீசில் 600 ரூபாய் சம்பளத்தில் இருக்கிறார். அவர் பெரிய பேர்வழி” என்றேன்.

“உஷ்! இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை” என்று கூறிக் கொண்டே, அந்த உத்தியோகஸ்தர் போன திக்கை நோக்கிச் சுந்தரம் காறி உமிழ்ந்தான்.

“கொடுத்துவைத்த ஆசாமிகள்! அந்தக் காலத்திலே சுலபமாக அகப்பட்ட வேலையின் பயனாக இன்று கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்தக் காலத்திலே வேலை ஏது? வெட்டி ஏது? இருக்கும் பணத்தையும் படிப்பிற்கு அர்ப்பணம் செய்துவிட்டு, வறட்டு நிலம், முரட்டு மனைவியுடன் காலக்ஷேபம் செய்வது எவ்விதம் என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. வெகு நேரம் வேதனைப் பட்டுக் கடைசியில் பத்திரிகாசிரியர் ஆகலாம் என்று தீர்மானித்தேன்.”

சுந்தரம் இந்த இடத்தில் தன் சரிதத்தைச் சற்று நிறுத்திவிட்டுக் கொஞ்சம் பொடி போட்டுக் கொண்டான். அவன் திடீரென்று எப்படி மேதாவியானான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மறுபடி ஆரம்பித்தான் கதையை.

“எவ்வளவோ பத்திரிகைகள்! எங்கே திரும்பினாலும் பத்திரிகைகள்! இருந்தாலும், என் பத்திரிகையின் பெயரைக் கேட்டாலுமே போதும், உன்னால் அதை வாங்காமலிருக்க முடியாது. நல்ல சுப தினமாகப் பார்த்து அதை ஆரம்பித்தேன். தாளின் தலையிலே ஒரு சேவல்! அதன் வாயின்றும் வருகிறது ‘கொக்கரகோ’ என்னும் சப்தம். அதுவே பத்திரிகைக்கும் பெயர். சப்தச்சுவை ஒரு பக்கம் கிடக்கட்டும். அதில் வெளியாகும் விஷயங்களின் பொருட்சுவையின் நயத்தை என்னால் சொல்ல முடியாது.”

“சுந்தரம், ஒரு கேள்வி. அது என்ன, மாதப் பத்திரிகையா, வாரப் பத்திரிகையா அல்லது தினசரியா?” என்று நான் கேட்டேன்.

“அதை நான் ஏன் கூற வேண்டும்? விஷயம் முழுவதையும் கேட்டு விட்டுப் பிறகு நீயே சொல்லு! மற்ற பத்திரிகை ஆசாமிகளைப் போல ரிசர்வ் பாங்கி மசோதா, வெள்ளைக் காகிதத் திட்டம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சாஸ்திரியார் சாசனம் என்றெல்லாம் நான் எழுதுவது கிடையாது. ‘கொக்கரகோ’வில் வெளிவரும் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் திடுக்கிடும் சம்பவங்கள், ஆவேசத்தைத் தரக்கூடிய ஆச்சர்ய மர்மங்கள், விநோத விசித்திரங்கள்தாம். ஆனால், ஓரொரு சமயம் பல சிக்கலான பிரச்னைகளைப் பற்றிக் கூட நான் விவாதிப்பதுண்டு.

“உதாரணமாக ‘மனிதனுக்கு ஒரு தலை போதுமா?’ என்ற தலைப்பின் கீழ் ஒரு ரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையைத் தெரிந்துகொண்டு பாமரருக்குக் கூறவேண்டும் என்றும் ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதிவிட்டேன். அவ்வளவுதான், அந்த வாரம் பூராவும் அதைப்பற்றி விருத்தி உரைகளும் வியாக்கியானங்களும் ஆராய்ச்சிகளும் ‘கொக்கரகோ’வில் வெளிவந்தன. பிறகு…”

“ஆமாம் சுந்தரம், ராம்சிமித் யார்?” என்று நான் கேட்டேன்.

சுந்தரம் கதை சொல்லும் உற்சாகத்தில், என் கேள்வியைக் கவனிக்கவேயில்லை. மேலே சொல்லிக்கொண்டே போனான்.

“மறுவாரம் ‘மன்னிக்கவும்’ என்ற தலைப்பின் கீழ், “ராம்சிமித் மனிதனுக்கு ஒரு தலை போதுமா?” என்ற பிரச்னையைக் கிளப்பவே இல்லையென்றும், ‘மனிதனுக்கு இருக்கும் ஒரு தலையே போதும், இதை அறிவுள்ளோர் கவனித்துப் பொதுமக்களுக்குக் கூறுவது நலம்’ என்று மட்டுமே அவர் கூறினதாகவும் வெளியிட்டு, தப்பாகச் செய்தி அனுப்பின நிருபரை வேலையை விட்டு விலக்கிவிட்டதாகக் ‘கொக்கரகோ’வில் பிரசுரம் செய்தேன்.”

எனக்குச் சிரிப்புப் பொங்கிற்று. சுந்தரம் அவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

“பேஷ்! பேஷ்!” என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். “தட்டுவது பிறகு ஆகட்டும், சங்கரா! விஷயத்தைக் கேள்” என்று சுந்தரம் கதையை மேலே சொல்லத் தொடங்கினான்.

“தத்தி விளையாடி, குழந்தைப் பருவத்தைக் கடந்து, ‘கொக்கரகோ’ வாலிபப் பருவத்தை அடைந்தது. பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் ‘கொக்கரகோ’வைப் பார்க்காமல் தூங்குவதில்லை. நானும் விநோத விஷயங்களை வெளியிட்டவண்ணமாகவே இருந்தேன். அதற்காக நான் செய்த யுத்திகள் எவ்வளவு! ஒரு தினம் விந்தையான விஷயம் ஒன்றும் அகப்படவில்லை. ஒரு பக்கம் கூட அச்சாகவில்லை. மணியோ மூன்று, நான்கு என்று வளர்ந்து கொண்டே சென்றது. ஐந்து மணிக்கெல்லாம் பத்திரிகை அச்சடித்தாக வேண்டும். என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று சுந்தரம் கேட்டான். ஆனால், நல்ல காலமாக என் பதில் வருமுன்னமேயே தன் சரிதத்தை ஓட்டினான்.

“கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை. ‘ஹிட்லர் பட்லரானால்?’ என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். மறுதினம், எனது சித்திரக்காரரைக் கொண்டு ஹிட்லருக்குப் பட்லர் வேஷம் போட்டு, அவர் ஐரோப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது போலவும், சாப்பாட்டுப் பண்டங்கள் துப்பாக்கி, பாம், புகை முதலியவைகளாகவும் ஒரு படம் பிரசுரம் செய்தேன்.

விற்பனை பலத்தது. 32 பி. ஏக்களை நிருபர்களாகவும், பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக் கொண்டேன். நீயும் வருவதானால் 33 பி. ஏக்களுக்கு நான் தலைவனாவேன். என் மனைவி மரகதம், பெண்கள் பகுதியை வெகு திறமையாக நடத்திக் கொண்டு வந்தாள். ஓர் அழகிய, சிறிய பங்களாவை விலைக்கு வாங்கி அதில் குடியேறினேன். அடுத்த பங்களாவில் கார்த்திகேயன் அடியார் கூட்டத் தலைவரும், கங்காணிகள் சங்கத்துப் பொக்கிஷதாரருமான ஸ்ரீமான் கருணைப்பிள்ளை, தம் மனைவி கமலாம்பிகையுடன் கூடி வசித்து வந்தார். பலமுறை நான் அவரை அணுகி, ‘என் பத்திரிகையைப் பற்றி உம் அபிப்பிராயம் என்ன? அதற்கு ஏதாவது விஷயம் தரக்கூடாதோ?’ என்று கேட்டுக்கேட்டு, என் பாடு போதுமென்றாகிவிட்டது. எத்தனையோ பெரிய ஆசாமிகள் விஷயதானம் செய்திருக்கிறார்கள். இந்தக் கருணைப்பிள்ளைக்கு மட்டும் ஏன் கடுகளவு கருணையாவது இருக்கக்கூடாதென்று எண்ணி ஏங்கினேன். ஆனால், விட்டேனா ஆசாமியை! மரகதமும் நானும் கலந்து யோசித்து, அவரைத் தண்டிக்க ஓர் ஏற்பாடு செய்தோம்.

ஏற்பாட்டின்படி, கமலாம்பிகையை என் மனைவி சிநேகம் செய்துகொண்டாள். ஒரு தினம் இருவரும் வழக்கம் போல் சந்தித்து வம்பளத்து கொண்டிருந்தனர். இருந்தாற்போலிருந்து மரகதம் விழுந்து விழுந்து சிரித்தாள். கமலாம்பிகையின் முகத்தில் அசடு தட்டிற்று. ‘ஏன் சிரிக்கிறாய்? காரணத்தைச் சொல்லிவிட்டுச் சிரிக்கக்கூடாதோ?’ என்று கெஞ்சினாள். மரகதம் சிரிப்பை நிறுத்திவிட்டு, ‘ஒன்றுமில்லை, என் வீட்டுக்காரர் என்னிடம் அதிக அன்புள்ளவர். நான் சொல்வதைத் தட்டுவதே கிடையாது. நேற்று நான் வேண்டுமென்றே அவருடைய அன்பைச் சோதிக்க எண்ணி ஒரு பாவாடையைக் கட்டிக் கொண்டு நடனம் செய்யச் சொன்னேன். அவரும் தடை சொல்லாது ஆடினார். ரொம்பத் தமாஷாக இருந்தது. அதை நினைத்துக் கொண்டுதான் சிரிக்கிறேன்’ என்று கூறினாள்.

“அன்று மாலை, நான் ஆபீசிற்குச் செல்லாது கருணைப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் காமிராவுடன் ஒளிந்து கொண்டிருந்தேன். அவரும் அவர் மனைவியும் தோட்டத்திற்கு வந்தனர்.

”இது என்ன முட்டாள்தனம்! ஆசையிருந்தால் ஆடவேண்டுமா?” என்று பிள்ளை கேட்டார். கமலாம்பிகை கண்களைப் பிசைந்து கொண்டே, ‘ஆமாம், ஆடு என்றால் ஆடத்தான் வேண்டும்; பாடு என்றால் பாடத்தான் வேண்டும். பக்கத்து வீட்டு ஆசிரியர் முட்டாளா? அவருடைய மனைவி அவரை ஆடச் சொன்னாள். அவர் ஆடினார். கொடுத்து வைத்த புண்ணியவதிகளுக்கு மனங்கோணாது நடக்கும் புருஷர்கள் வாய்க்கிறார்கள்’ என்று கூறிக்கொண்டே, விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

”சரி” என்று சொல்லி கருணைப்பிள்ளை ஒரு பாவாடை தரித்து வந்து நடனம் செய்தார்.

”நடனம் மிக அற்புதமாக இருந்தது. கறுத்துப் பெருத்த உருவம், உருண்டைத் தொந்தி, மொட்டைத் தலை… நடனம் நன்றாகத்தானே இருந்திருக்கும்! நான் மறைந்திருந்து அவர் ஆடியதைப் போட்டோ பிடித்துக் கொண்டு, பிறகு அவர் எதிரில் திடீரென்று வந்தேன்.

”பரத நாட்டியத்தைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று நான் கேட்டேன். ஆள் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். அன்றைய ‘கொக்கரகோ’வில்…

கருணைப்பிள்ளை நர்த்தனம்
பரதநாட்டியம் ஒரு பழங்கலை

என்று தலைப்பு போட்டு, கருணைப்பிள்ளையின் போட்டோவையும் பிரசுரம் செய்தேன். அன்று என்னமோ எனக்கு ஒரு விந்தையான ஆசை ஏற்பட்டது. நமது பத்திரிகையை நாமே விற்க வேண்டுமென்று தோன்றிற்று.

உடனே, மாறுவேடம் பூண்டு, பிராட்வே முனையில் நின்று கொண்டு, ‘கொக்கரகோ – காலணா’ என்று கூவிக் கூவி விற்றேன்…”

“சுந்தரம்! நிறுத்து, நிறுத்து! உன் சரிதம் கிடக்கட்டும். அந்த மாதிரிப் பத்திரிகையை நான் பார்த்ததே இல்லையே; கேள்விப்பட்டது கூட இல்லையே” என்று நான் கேட்டேன்.

“நீ எப்படி பார்த்திருக்கமுடியும்? இந்த ஊரில் போட்டால்தானே உனக்குத் தெரியப் போகிறது?” என்றான் சுந்தரம்.

“இந்த ஊரில் போடவில்லையா? எந்த ஊரில் போடுகிறாய்?” என்று நான் வினவினேன்.

“உங்களுக்குத் தெரியாதா கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியரை?” என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு போலீஸ்காரன் என் நண்பன் கரத்தைப் பற்றிக் கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனான்.

“சங்கர்! வைஸ்ராய் ஏதோ பேச வேண்டுமென்று கூப்பிட்டனுப்பி இருக்கிறார். நான் போய்விட்டு, நாளை மாலை உன்னைப் பார்க்கிறேன். இன்றைய ‘கொக்கரகோ’வை அவசியம் படி” என்று கூறினான் சுந்தரம்.

பரிதாபம்! என் நண்பன் சுந்தரம் இரண்டு தரம், வார மும்முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறை பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் எனக்கும் பிறகே தெரியவந்தது.