கொங்குக் குமரி பிள்ளைத் தமிழ்

கொங்குக் குமரி பிள்ளைத்தமிழ்

ஆசிரியர்: செங்கைப் பொதுவன்

வெளியீடு
காந்தி பதிப்பகம்
மோகனூர்
சேலம் மாவட்டம்

பதிப்பு 1969

நூல் முகக் காப்பு

தொகு

அன்பினில் உலகெலாம் அமைந்துயிர் வாழ்ந்திட

அருளிடும் மூத்த பிள்ளாய்
ஆண்டிடும் ஒருகையை அழகிய ஓங்கார
மாய்க்கொளும் அன்பின் ஊற்றே

உன்பணி போலவே உலகெலாம் இன்புற

உதவிடும் ஆசைமிக்கேன்
உந்தையும் வந்திருந் துவந்துடன் பயின்றதோர்
ஒண்டமிழ் பாடு மளவில்

அன்பனேன் இல்லையே யாயினும் நீஎன

தருகிருந் துதவி வந்தாய்
அம்மையே இன்றுநூன் ஆசையால் பாடுகேன்
அப்புறம் போதலுண்டோ

இன்பனே நண்பனே ஏந்தலே முன்பினாய் (1)

இன்பநல் வினைக்கடவுளே
என்னகம் தென்னகம் நின்னக மாய்க்கொண்ட
எம்மிறை(2) காத்தி நன்றே
  1. வலியோய், முன்னோனும் பின்னோனுமாம்
  2. இறைவன் ,குற்றமுமாம்

1 காப்புப் பருவம்

தொகு

தமிழ்த்தாய்

தொகு

அம்மையாய் உலகமொழி அத்துணைக் கும்மாகி

ஆரியப் பிள்ளை பெற்றாய்
அழிந்தவெங் குமரியில் ஆண்டிருந் திலத்தீனம்
அரபியம் கிரேக்க மானாய்

இம்மையாய் நீயெமக் கென்றுமென் றேத்தலால்

இசையேத்து நர்க்கன்றியே
இயலிசை நாடக மாகவி ளங்கிடும்
என்றமித் தாய் உயர்தனிச்

செம்மொழி தனக்கொரு சிறப்புண்டு கொல்லென்று

தேடுவார் கண்டி லாத
தென்றமிழ் வண்டமிழ் செந்தமிழ் பண்டமிழ்
தெய்வத் தமிழ்க்குமரி யே

அம்மையை மோகனூர்க் கொங்குக் குமரியை (1)

அன்பினால் கொண்டணைத்தே
அணிபெற நடந்துநீ அகநிலம் இசைபெற
அருளுடன் காத்தி நன்றே 1
  1. கொங்குக்குமரி – மோகனூர்க் குமரித் தீர்த்தம்

மாரி

தொகு

வெயிலெனு மரக்கனும் விண்ணெனும் தேவரும்

வேலையி லெடுத்த அமிழ்தை
வெங்காற்று மாயவன் விண்ணினுக் கூட்டுமோர்
வெங்கொடுமை யைப்போக்கவே

பயினட மாடியும் பளிச்சென மின்னியும்

படுவொலி யால்மருட்டியும்
பண்ணையும் மண்ணையும் பயன்தப் புதுமைசெய்
பயன்மாரி யைப்போற்று தும்

செயல்விளை கின்றதோர் செவ்வாழைக் (1) கன்னியும்

(2) திரிவாளைக் கண்ணி யாரும்
திருமக ளும்வாடும் (3) திமிர்வாலைக் கன்னியும்
(4) செழுவாலைக் கண்ணியாரும்

மயல்வர உலவிடும் வளநகர் மோகனூர்

வாழ்தெய்வ தக்கன்னியை
மாட்சிமை தங்கிய கொங்குக் குமரியை
வந்துகாத் திடுக வெனவே 1
  1. கனி
  2. வாளை மீன்
  3. திமிர்வால் அழகிய
  4. வாலிபம்

நீத்தார்

தொகு

நன்னெறி தழையவும் நலமெலாம் பெருகவும்

நாடுமுன் னேற்றம் பெறவும்
நற்றமிழ் வளரவும் நானிலம் மகிழவும்
நாளெலாம் தொண்டு செயதே

மன்னிய அருளொடும் மாண்பொடும் பொறையொடும்

மனம்வாக்கு செயல்நீரொடும்
வாழ்ந்திடும் சான்றோரை மாநிலக் கடவுளரை
வணங்கியே வாழ்த்தி நிற்பாம்

பொன்னியின் கீழ்கரை பொலிவுறும் மாண்பினால்

பொன்னியற் குமரிஎன்றே
பொருள்தரு மாறுயர் (1) கொங்குக் குமரியாய்ப்
போற்றிடும் பேர்ச்செல்வியை

முன்னிய முடிக்கவும் முத்தமிழ் முழங்கவும்

முறைபல கலைவளரவும்
முன்னின் றுதவிடும் கொங்குக் குமரியை
முன்வந்து காக்கவெனவே 3
  1. கொங்கு = பொன்

கலைமகள்

தொகு

வெண்டா மரையென விளங்கிடும் மூளையில்

வீற்றிருக் குஞ்செல்வியை
வெள்ளைமீ தெந்நிறமும் வெளிபடும் என்றெணி
வெண்மேனி கொண்டமகளை

எண்டிசை மயங்கவே இசைதரு பண்ணிலும்

எண்ணெண் கலைதன்னிலும்
இயலிலும் கூத்திலும் என்றும் இருந்திடும்
எண்கலைத் தாய்போற்றுவாம்

மண்டிய சருக்கரை வழங்கிடும் ஆலைகொள்

மாமோக னூர்ச்செல்வியை
மாயவன் சின்னமொடு வாயில்கொள் கோயிலில்
வாழ்ந்திடும் எம்மரசியை

பெண்டிரோ டாடவர் பேணித் தொழுதிடப்

பிறவி தராக் கொடியளை
பெருகுநீர்க் காவிரியில் பாலோட நீராடும்
(1) பெருமாட்டி யைக்காக்கவே 4
  1. பெருமாட்டி = கொங்குக் குமரி எனும் மத்கரவேணி

சிவபெருமான்

தொகு

சான்றாண்மை கற்கவும் தண்டமிழ் பேசவும்

தமிழ்ப்புலவ ரோடமர்ந்த
சங்கொருகை கொண்டதால் சங்கரன் என்றிடத்
தாய்தந்தை ஆகிநின்ற

தோன்றாமை அழியாமை சுருங்காமை விரியாமை

துலங்காமை கரவாமையும்
தொன்மையும் (1) விருந்துமாய்ச் சொற்கடங் காமுக்கட்
சுடர்க்கடவு ளைப்போற்றுதும்

ஈன்றவர் போலவே எல்லோரை யுந்தாங்கி

ஏற்றமு றச்செய்திடும்
இயல்புடைய ஏந்தலர் எண்ணிலா வாழ்ந்திடும்
எழிலுடை மோகனூரில்

ஆன்றமர்ந் தோங்கிடும் தேன்குழல் பேர்கொண்ட

அம்மைகொங் குக்குமரியை
அந்தமி ழாற்சொலி அழைக்கிறேன் அவளையும்
அருகிருந் துக்காக்க வே 5
  1. புதுமை

திருமால்

தொகு

பைந்தமிழ் பின்சென்ற பாங்கினால் தன்மேனி

பசுமையாய் நின்ற மணியைப்
(1) பாவையாம் பாடல்கொள் பாங்கினால் தன்னுளம்
பாவலர்க் குதவு மரசை

நைந்தவர்க் காக்கவே நாடியே வந்திடும்

நாரா யணனொரு வனை
நாண்மலர்ச் செல்வியை நகையென மார்பணி
நற்றிரு மாற்போற்றுதும்

மைந்தர்கள் மண்தொட மங்கையர் மணிகொளும்

வளமலி மோக னூரில்
வாழையும் கன்னலும் மஞ்சளும் தென்னையும்
மாப் பலா மயங்கு சாரில்

உயர்ந்தவர் தொழுதிட ஓலக்கம் கொண்டதோர்

உமையவள் குமரி என்றே
ஒண்டமிழ் போற்றிட நின்றனள் அவடனை
உவந்துகாத் திடுக வெனவே 6
  1. திருப்பாவை

முருகன்

தொகு

(1) அறுநின் முகத்தினை (2) அறுமுக மாக்கினார்

(3) ஆறுபடை (4) அஃதாக்கினார்
ஆழ்கடல் கொண்டதென் (5) குமரியின் அண்ணலை
(6) ஆரியக் குமரன் என்றார்

ஏறுநின் (7) மையிலையோர் ஏறுமயி லாக்கினார்

எல்லார்க்கும் (8) கந்தாகினாய்
இன்னருள் (9) வேளன்மேல் (10) எல்வேல் சுமத்தினார்
எடுத்துக்காத் திடவில்லையோ

தேறுநின் (11) வள்ளியைச் சீர்கொடைச் செல்வியைத்

(12) தேர்குழிப் படுத்துநின்றார்
தென்னகம் ஆண்டவுனைத் தெருவாண்டி ஆக்கினார்
சினவாது காக்க விலையோ

கூறுநின் தாயினைக் கொங்குக் குமரியைக்

கோமோக னூர்ச்செல்வியைக்
கூப்பிட் டுனைவேண்டிக் கூறினேன் முருகவேள்
கூடிக்காத் திடுகவெனவே 7
  1. வினைத்தொகை
  2. ஆறு என்னும் எண்
  3. நெறியைத் தோற்றுவித்தல்
  4. அறுபடை
  5. குமரி நாடு
  6. குமாரன் – வடசொல் என்பர்
  7. மேக வீடு – காலையில் தோன்றும் கதிரொளியே முருகு என்பர் திரு. வி. க. வும், மறைமலை அடிகளாரும்
  8. துணை
  9. அருளை உதவுவோன்
  10. ஒளி
  11. வள்ளல் என்பதன் பெண்பால்
  12. வள்ளிக் கிழங்கு தேடும் குழி

புத்தர் பெருமான்

தொகு

கண்ணிறை மனைவியைக் கனிவுடைப் பால்மகனைக்

கண்ணிய அரசுப் பேற்றைக்
கருதாது கங்குலில் கால்வழி நடந்துபோய்க்
(1) களைகணொன் றில்லா மலே

எண்ணாது கடவுளை இன்னலை நீக்கிட

ஏற்றதோர் வழி வகுத்த
இறைவனார் புத்தரை இன்றமி ழாற்போற்றி
எண்ணத் திருத்தி வைப்பாம்

கண்ணகிக் குச்சிலை கண்டதோர் காவலனைக்

களங்கண்ட (2) பழையனன்று
காவல் புரிந்திட்ட மோகூர் பழம்பதிக்
கண்வாங்கல் எதிர்கரையினில்

வெண்ணீ ரணிந்ததோர் வெள்ளேற்றுக் காரியை

மேனியிற் கரந்த மகளை
மேலவர் போற்றிடும் கொங்குக் குமரியை
விழைந்துகாத் திடுகவெனவே 8
  1. பற்றுக்கோடு
  2. பதிற்றுப் பத்து 44 – ஆம் பாடலில் கண்ட வரலாறு

அருக தேவன்

தொகு

தொல்காப் பியர்திரு வள்ளுவர் தம்மொடு

சொற்சி லம்பின் னிளங் கோ
தோலா மொழித்தேவர் நன்னூல் தருமுனி
தொகுத்துத் தமிழ்ப் புலவரை

நல்காப் பளித்துயர் நாலாம் தமிழ்ச்சங்கம்

நாட்டிய வச்சிர நம்பி
நல்லவர் இவர்போல்வர் நாடித் தொழுந்தெய்வம்
நம்மரு கனைப்போற்றுவாம்

ஒல்காப் பெரும்புகழ் ஊர்நாவ லடிக்கடவுள்

உடன்வளர் செல்லியாயி
ஒண்காந்த மலைமுருகன் ஊர்காளி அம்மையொடு
உற்றபாஞ் சாலிகோயில்

பல்காப் பளித்திடும் பதமுடை மோகனூர்ப்

பாவைகொங் குக்குமரியைப்
பைந்தமிழ் போலவே பக்கிருந் தெந்நாளும்
பாதுகாத் திடுக வெனவே 9

இயேசு \ நபிகள் \ பிற மதக் கடவுளர்

தொகு

செங்குருதி பாயவே சிலுவையில் அறைகின்ற

தெவ்வருக் கும் அருளி
தெய்வத் திருவடியில் சேர்ப்பித்து மகிழ்கின்ற
செல்வனை இயேசு தேவை

தங்குறுதி சான்றதோர் தனிப்புகழ் மெக்காவில்

தான்தோன்றி மெதினாவிலே
சான்றவர் அல்லாவை உலகுக்குக் காட்டிய
தனிநபி நாயகத்தை

பொங்குறுதி யோடுபிற போற்றித் தொழுதிடும்

புதுப்பழங் கடவு ளாரைப்
பூந்தமிழ் நெறியினார் ஒன்றெனப் புகல்தலால்
போற்றியே வணங்கி நிற்பாம்

பங்குறுதி யாக்கியே பாவில் நடந்திடும்

பாவைகொங் குக்குமரியைப்
பாடுபிள் ளைத்தமிழின் பாலிருந் தென்னாளைப்
பாதுகாத் திடுக வெனவே 10

2 செங்கீரைப் பருவம்

தொகு

தமிழ்த்தாயின் மகள்

தொகு

அன்னையாய்த் தந்தையாய் அனைத்துயிர்க் கும்மாகி

அருட்பால் அருத்தும் உன்னை
ஆரியச் செல்வனாய் ஆண்டதோர் தக்கனின்
அருமக ளாகவைத்தார்

பிள்ளையாய் முன்னையாய் பெருநில மனைத்தையும்

பெற்றுக்காத் தமிக்கும்உன்னைப்
(1) பெட்பினால் மேருமலை யின்திரு மகளெனப்
பெரியவர் பேசுகின்றார்

மன்னிய கோளெலாம் மணியென விளையாடும்

மாபெரும் தாய்உன்றனை
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியாய்
வைத்தனர் அவைபோலவே

(2) தென்னெறி யால்தமிழ்ச் சேயெனப் பாடுகேன்

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யும்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 11
  1. ஆசை
  2. தெய்வத்தைக் கள்ளங் கபடமற்ற குழந்தையாய் எண்ணிப் பாடுவதுதமிழ்நெறி. தமிழ் தென்னாட்டு மொழி எனவே தென்னெறி தமிழ்நெறி. தமிழ்நெறியால் தமிழின் மகள் என்பதும், தமிழர் தொழுவதால் தமிழின் மகள் என்பதும் அறிவுக்குப் பொருந்துமாகையால் இவ்வாறு கொண்டது ஆரியர்களின் புனைகதைகளை ஏற்க விரும்பாமையே.

செந்தமிழ் பழகச் செங்கீரை ஆடு

தொகு

முப்பா லருந்திடும் மூரலின் திருவாயில்

முலைப்பால்முன் தேக்கெறித லால்
முத்துமணிக் காழ்வடம் முறைமலர் மாலைகள்
முழுதும் நனைந்தொழுகிடும்

அப்பால் அமிழ்தூறல் ஆறாய்ப் பெருகியே

அருகோடக் காவிரித்தாய்
அலைக்கைகள் ஏந்தியே ஆரப் பருகிடும்
அருமருந் தன்ன மகளே

தப்பாமல் செந்தமிழ் தன்னைப் பழகிடத்

தமிழ்மக ளாகவந்தாய்
தமிழவை தன்னிலுன் தலைவன் பயின்றதால்
தானே அமைந்து விடுமோ!

செப்பாமல் நீயிருந் தாலது வாராது

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யும்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 12

செந்தமிழ் பேசிட ஆசை

தொகு

வெண்மலை நெற்றியாய் வீழ்கங்கை சிந்தாறு

வேணருள் தருங்கண்க ளாய்
விந்தமும் தென்மேடும் கதுப்பொடு மூக்கென
விளங்கிடச் செவ்வி காட்டிப்

பெண்மலை மகளெனப் பேசிட நின்றனை

பெருகுவாய் பொன்னி யூறல்
பிறங்கிடச் செந்தமிழ் பேசிட ஆசைகள்
பெரிதுநிற் குண்டு கண்டேன்

கண்மணி பெண்மணி பொன்மணி நன்மணி

காமணி யான தாயே
கார்மணி சீர்மணி ஏர்மணி தேர்மணி
கவிமணி யான செல்வி

தென்மணி மொழிவாயிற் தேறலினி தாதலால்

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யும்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 13

நெற்றி – இமயமலை
வலக்கண் – (சிவனுடையது). சிந்து யாறு
இடக்கண் (அம்மையுடையது) – கங்கை ஆறு
கன்னத்தின் முகடாகிய கதுப்புகள் – விந்திய மலைகள்
மூக்கு – தெக்கண மேடு
வாய் –பொன்னி (வடமொழிக்கு வாய் இல்லை)

கனியாய் நிற்கும் கோலம்

தொகு

தேம்பழு செவ்வாழை சிறுபிறை நுதலாகத்

தேன்களா கண்க ளாகச்
செழுங்கருந் திராட்சைகள் திரள்சுருள் கூந்தலாச்
சீர்கோவைக் கனிமூக்கதா

மாம்பழம் கன்னமா மணிமுந்தி ரிக்காது

வண்ணா ரஞ்சுதாவாய்
வாயூறும் (1) ஆப்பிளே மலர்தரு இதழ்களா
மாதுளைச் செவ்வாயினில்

தாம்பழு வேர்ப்பலா தன்சுவை நாவினால்

தவளமுத் தரும்பிவரவே
தண்டமிழ் பழகிடத் தண்டாத ஆவலுடை
சான்ற நறுஞ்சுவைக்கனி(2)

தீம்பழ மறைவாயில் தெளிவுறச் செந்தமிழ்ச்

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யுங்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 14
  1. வெளித் தோற்றத்தால் வாயின் இதழ்களையும் உள் தோற்றத்தால் செங்கீரை யாடுகையில் தோன்று நுரையோடு கூடிய வெண்மையான இதழ்களையும் ஒக்கும்.
  2. கன்னியுமாம்

அணிகள்

தொகு

கார்குழல் முடித்தனர் (1) கான்மலர் சூட்டினர்

(2) கம்மியச் சுட்டிவைத்தார்
கண்மையுந் தீட்டினர் (3) கண்ணிய நெற்றியில்
கருவேங்கைப் பொட்டு மிட்டார்

4 வார்குழை(4) காதினில் வாங்கினர் மூக்கினில்

மாட்டினர் மூக்குத்தியும்
மலரிதழ் பூசினர் மழமழ கன்னத்தில்
வைத்தார்கண் ணேறுபுள்ளி

நீர்குழை வாயினில் நேர்ந்ததுண் டோஅணி

நீணிலத் தெங்காகிலும்
நேராத தாலதற் கணியில்லை என்பதோ
நெஞ்சொடு கலந்த இன்சொல்

சீர்குழை யாதமிற் காதலால் தேறநீ

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யுங்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 15
  1. மணம், காடு
  2. கலை நுணுக்க முள்ள
  3. பெருந்தன்மை யுள்ள
  4. நீண்ட குழையை

செங்கீரை ஆட்டம்

தொகு

சிலம்பொடு கிண்கிணி சேர்ந்தொரு பண்ணிடச்

சேவடி ஒன்றூக்கித்
திருவடி மற்றது செங்கிடை(1) யாகிடச்
செம்மலர்க் கையூன்றிப்

புலம்படு(2) மெய்யொடு பொன்முகம் பூத்திடப்

பூந்தலை விண்தூக்கிப்
புரிவொடு நாற்றிசை போக்கி முனும்பினும்
பொற்புற ஆட்டுஞ்சேய்(3)

நலம்படு ஆட்டினை நற்றவர் கண்ணுற

ஞாலம தேபோற்ற
நலந்திக ழத்திரு நாடிடு பொற்கொடி
நாடொறுங் காவேரி

அலம்பிடு மதுகர வேணிய ணங்கினி

தாடுக செங்கீரை
அலையமிழ் தத்தமிழ் ஊறல்வ ழிந்திட
ஆடுக செங்கீரை 16
  1. கீழே கிடக்கும்நிலை
  2. நிலம்
  3. செங்கீரை ஆடல் என்பதற்குச் செவ்விய சொல்லாடுதல் என்றும் இப்பாட்டில் கண்டவாறு ஆடுதல் என்றும் கூறுவர்.
  • செங்கீரை ஒருகாலை மடக்கி ஒருகாலை நீட்டி இருகைகளையும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு தலைநிமிர்ந்து முகமசைய ஆடுதல் சூடாமணி நிகண்டு - உரை
  • முன்பொருள் முன்னைந்து பாடலிலும் பின்பொருள் பின்னைந்திலும் கொண்டு இப்பருவம் அமைக்கப்பட்டுள்ளது.

இயலாயினாள் இசையும் கூத்தும் பயில

தொகு

முத்தமி ழில்லிய(1) லாகினை ஆதலின்

மூன்றொடு நாற்பண்ணை
முன்னவர் பாடிய வாறுப யின்றிட
முன்படி செங்கீரை

பித்துடை கண்ணுதல் பேணிநன் காடிய

பேர்தமிழ் நற்கூத்தைப்
பீடுட னாடிடப் பெட்டனை ஆதலின்
பிள்ளையி லேயேநீ

முத்துடை ஆரமு ரிந்திடி னுந்தலை

முன்னணி சாய்ந்தாலும்
மூக்குநி லம்பட லாயினு மஞ்சுதல்
முற்றிலு மில்லாமே

(2) அத்தளி மதுகர வேணிய ணங்கினி

தாடுக செங்கீரை
ஆரமிழ் தத்தமிழ் ஊறல்வ ழிந்திட
ஆடுக செங்கீரை 17
  1. தமிழில் இயல் – விரித்தல்
  2. அம்தளி – வலித்தல்

என்னை அளித்தவள்

தொகு

அளவொடு குனிசிலை அடிபடு கயல்விழி

யாலே உண்டாயே
அழகிய குழைமணி அடிபடு பழுகனம்(1)
அன்பால் ஈந்தாயே

(2)தளவொடு குறுநகை தருகையில் விழுகுழி

தாங்காய் சேந்தாயே(3)
தளதள வழகிதழ் தருதமிழ் மழைநறை
தாழா நின்றாயே

நெளிவொடு புரிகுழல் முகிலிடை நிலவொளி

நேரா நின்றாயே
நிறைமணி நிரல்படு கடிகைக ணிலம்படு
நெஞ்சால் ஊர்ந்தாயே

தெளிவொடு மறைபடி திரிசுரும் பிருகுழல்(4)

செங்கோ(5) செங்கீரை
திருமகள் தொழுமடி அருள்தரு செழுமலர்
செங்கோ செங்கீரை 18
  1. கன்னம்
  2. செம்முல்லை
  3. சிவந்தாய்
  4. மதுகர வேணி என்னும் வடசொல்லின் தமிழ் வடிவம்
  5. சிங்கென ஆடுக – இலேசாக ஆடுக

தோற்றமும் செயலும்

தொகு

அரைமணி யொலியெழ அடிசிலம் பொலிசெய

மங்கால் செம்பூவே
அடிவயி றதுதரை படிதர நிமிர்தலை
அஞ்சா தாள்வானே

விரைமண நிறைதரு விரிகையி லொலிவளை

மின்னா நின்மானே
மிறையறு புரையுடன் மெலவொசிந் தசைவுறில்
வென்றே வாழ்வாயே

நரைமழ விடைமிசை நடமிட வருமொரு

நங்காய் நின்மீது
நவையறு மனமுடை யடியவர் தொழுதிட
நன்றே தந்தாயே

திரைமறி (1)பொனிதொழுந் திரிசுரும் பிருகுழல்

செங்கோ செங்கீரை
திருமக டொழுமடி அருடரு செழுமலர்
செங்கோ செங்கீரை 19
  1. பொன்னி – காவிரி

வளமும் மகிழ்வோசைகளும்

தொகு

(1)வளைபட வளைபட மடைபட வயல்படு

மண்ணே பொன்மேவு
மறிதரு சுரிபுனல் வரவர நலமுறு
(2)மண்ணீ ருண்ணீராம்

துளைபட விரிசெவி (3)தொறுவய லுழுநரின்

சொற்பா பண்ணாகும்
துணைவரை உணவிடு சொகுசொடு (4)மனைதொடுந்
துன்பே இன்றாகும்

(5)அளைபடு சிறைபடு உயிரின (6)மலமரு

மன்பே முன்தோன்று
மரகர வெனுசொழி முருகெழு மலைவரு
மம்மோ கன்பேரூர்

திளைபடு மணமலர் திரிசுரும் பிருகுழல்

செங்கோ செங்கீரை
திருமகள் தொழுமடி யருடரு செழுமலர்
செங்கோ செங்கீரை 20
  1. சங்கு
  2. குளிக்கும் நீர்
  3. ஆட்டுக்கிடை அடித்தவயல் – விரித்தொகை \ தொறுத்த வயல் – பதிற்றுப் பத்து
  4. மனைவி
  5. அவளை (நிலத்தில் தோண்டிய பொந்து)
  6. சுழலும்

3 தாலப் பருவம்

தொகு

முத்தமிழாய் நிற்கும் கோலம்

தொகு

கண்ணற் தமிழ்க்கூத் தாடி வரக்

காதில் தமிழ்ப்பண் ஊறிவரக்
கனிவாய் தமிழ்ச்சொல் ஆடுவதால்
கன்னம் தமிழாய்ப் பழுக்காதே!

வண்ணக் கடிகை கூத்தாட

மணிகள் அரையில் பண்பாட
மனது தமிழ்ப்பா தேடுவதால்
மார்பே தமிழாய்க் கொழுக்காதே

நண்ணுங் கால்கள் நடங்கொள்ள

நாடுங் கையாழ் பண்கொள்ள
நாட்டம் தமிழ்ப்பால் ஆனதனால்
நாவே தமிழாய் இனிக்காதோ?

கண்ணும் மகனூர் வளர்கின்ற

கருத்தே (1) தாலோ தாலேலோ
கன்னித் தமிழ்த்தாய் பெற்றநறுங்
கனியே தாலோ தாலேலோ 21

1 தால் – நா ஆகுபெயராய் குழந்தையைத் தொட்டிலில் ஆட்டுங்கால் தாய்மார் எழுப்பும் நாவின் இசையை உணர்த்தியது.
தாலோ – இதோ என் தாலின் இசை
ஒப்பு நோக்குக ‘பொங்கலோ பொங்கல்‘
தாலேலோ – என் தாலின் இசையை ஏற்றருள்க
தால் + ஏல் + ஓ = தாலேலோ.
ஒப்பு நோக்குக ‘இரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய் ‘ ஔவை

தண்டலையாய் நிற்கும் கோலம்

தொகு

தென்னம் பாளை நின்முத்தம்

தேங்கா யானால் நின்தலையாம்
தேமா தளிர்ப்போ நின்மேனி
செம்மா துளைக்கோ நின்வாய்கள்

அன்னா சிக்குள் நின்னருள்தேன்

அணிவா ழைப்பூ வில்விரல்கள்
ஆடும் பனைக்கோ நின்னணிகள்
அகத்திப் பூவோ நின்னுதலாம்

பன்னார் வாழை நின்னுடைகள்

பாக்கு மரமோ நின்கழுத்து
பழுத்த கொய்யா நின்கன்னம்
பலவின் சுளையோ நின்னிதழ்கள்

துன்னும் மகனூர் நின்தோற்றம்

தோழி தாலோ தாலேலோ
தொன்மைத் தமிழ்த்தாய் பெற்றதொரு
தோகாய் தாலோ தாலேலோ 22

ஓசையும் உருவுமாய் நின்ற கோலம்

தொகு

அம்மா என்றே ஆனிரையும்

அஞ்ஞே என்றே எருமைகளும்
அம்மே என்றே ஆடுகளும்
அன்பால் கத்தி உனையழைக்கும்

எம்மைக் காகா எனும்காக்கை

இன்பம் காவா எனும்வாத்து
எடுத்துக் கொடுகொடு எனும்புறவு
எல்லாம் உனையே வேண்டிடுமால்

செம்மண் நிறமே சிவனிறமாம்

திரைநீர் வெயிலால் திருநீரும்
செழும்பைங் கூழோ நின்னிறமாம்
சேர்ந்தே நின்னூர் பொன்னிறமாம்

எம்மைக் காத்த மகனூரின்

இன்பே தாலோ தாலேலோ
ஈடில் தமிழ்த்தாய் பெற்றெடுத்த
எந்தாய் தலோ தாலேலோ 23

தாயைத் தேற்றியது

தொகு

தம்பி என்போன் உறிதிருடிச்

சாடப்பட்டான் ஆய்ச்சியரால்
தனையற் கீந்தாய் பழமென்றே
சலித்துப் போனான் இளையமகன்

தும்பிக் கையன் மூத்தமகன்

தொப்பை வயிறன் சப்பாணி
துணையாய் வாய்த்த சிவபெருமான்
தொழும்பர் தொண்டன் கூத்தாடி

நம்பி இவரோ டெவ்வாறு

நட்டோர் எள்ளல் இல்லாமல்
நலமாய் வாழ்வோம் என்றெண்ணி
நலியல் நல்லோர் பலருண்டு

தெம்பாய் மகனூர் சீரேற்றும்

செல்வி தாலோ தாலேலோ
தென்னந் தமிழ்த்தாய் பெற்றநறுந்
தேனே தாலோ தாலேலோ 24

தொட்டில் அமைதி

தொகு

இன்பம் பொருளோ டறமிவைகள்

ஈனும் வீடாம் நாற்கயிற்றால்
(1) எண்ணாம் தொல்காப் பியமரத்தில்
எழுத்தாம் சிலம்பு முதனூல்கள்

நன்பா வோட்டிப் பின்னியதோர்

(2) ஞாலும் தொட்டில் மீதினிலே
நல்ல உரைநூல் பஞ்சணையில்
(3) நற்றூ சாக இக்காலத்

தின்பா உரைகள் இட்டுன்னை

ஏற்றி வைத்தோம் ஆசையினால்
(4) எல்லே எழிலே இளங்குருத்தே
எண்ணே பாவே இசைவடிவே

அன்பே மகனூர் வளர்கின்ற

அருளே தாலோ தாலேலோ
(5) அன்னைத் தமிழ்த்தாய் பெற்றவுயிர்க்
கன்னாய் தாலோ தாலேலோ 25
  1. இலக்கணம்
  2. தொங்கும்
  3. நல்ல விரிப்பு ஆடை
  4. ஒளியே
  5. திணை விரவுப் பெயராய் நிற்றலின் ஒற்று மிகப் பணர்ந்தது. பிறாண்டும் ஏற்ற பெற்றி, கொள்க

இன்னின்ன உண்டு உண்டாகும் எனல்

தொகு

நீரும் உண்டாம் நிழலும் உண்டாம் தாலோ தாலேலோ

நெஞ்ச முண்டாம் நேர்தல் உண்டாம் தாலோ தாலேலோ
நேர்த்தி உண்டாம் கீர்த்தி உண்டாம் தாலோ தாலேலோ
நீயும் உண்டாம் நானும் உண்டாம் தாலோ தாலேலோ

ஊரும் உண்டாம் உறவும் உண்டாம் தாலோ தாலேலோ

ஊக்கம் உண்டாம் ஆக்கம் உண்டாம் தாலோ தாலேலோ
உதவி உண்டாம் பதவி உண்டாம் தாலோ தாலேலோ
ஒட்பம் உண்டாம் திட்பம் உண்டாம் தாலோ தாலேலோ

பேரும் உண்டாம் பெட்பும் உண்டாம் தாலோ தாலேலோ

பேணல் உண்டாம் மாணல் உண்டாம் தாலோ தாலேலோ
பெற்றி உண்டாம் வெற்றி உண்டாம் தாலோ தாலேலோ
பீடும் உண்டாம் வீடும் உண்டாம் தாலோ தாலேலோ

காரும் உண்டாம் கழனி உண்டாம் தாலோ தாலேலோ

கண்ணி யஞ்சால் மோக னூராள் தாலோ தாலேலோ
கன்னி உண்டாம் பொன்னி உண்டாம் தாலோ தாலேலோ
காக்கும் அன்னைத் தமிழின் செல்வி தாலோ தாலேலோ 26

இன்னின்ன உடனாடும் எனல்

தொகு

பாலும் ஆடும் பழமும் ஆடும் தாலோ தாலேலோ

`பண்பும் ஆடும் நண்பும் ஆடும் தாலோ தாலேலோ
பச்சை ஆடும் விச்சை ஆடும் தாலோ தாலேலோ
பாவும் ஆடும் காவும் ஆடும் தாலோ தாலேலோ

காலும் ஆடும் கையும் ஆடும் தாலோ தாலேலோ

கன்னல் ஆடும் செந்நெல் ஆடும் தாலோ தாலேலோ
காப்பும் ஆடும் தோப்பும் ஆடும் தாலோ தாலேலோ
கற்பும் ஆடும் பொற்பும் ஆடும் தாலோ தாலேலோ

சேலும் ஆடும் சிலையும் ஆடும் தாலோ தாலேலோ

தென்னை ஆடும் புன்னை ஆடும் தாலோ தாலேலோ
தேனும் ஆடும் மானும் ஆடும் தாலோ தாலேலோ
தேக்கும் ஆடும் பாக்கும் ஆடும் தாலோ தாலேலோ

சூலும் ஆடும் தோகை ஆடும் தாலோ தாலேலோ

தொன்மை யானாள் மோக னூராள் தாலோ தாலேலோ
துறவி ஆடும் அறவி ஆடும் தாலோ தாலேலோ
சொக்கின் அன்னைத் தமிழின் செல்வி தாலோ தாலேலோ 27

இன்னின்ன ஓடும் எனல்

தொகு

அச்சம் ஓட அவமும் ஓடத் தாலோ தாலேலோ

அற்பம் ஓடத் தெவ்வும் ஓடத் தாலோ தாலேலோ
அல்ல லோடச் செல்ல லோடத் தாலோ தாலேலோ
அழுக்கு மோட இழுக்கு மோடத் தாலோ தாலேலோ

இச்சை ஓட இழப்பும் ஓடத் தாலோ தாலேலோ

இரவு மோடக் கரவு மோடத் தாலோ தாலேலோ
இன்ன லோடப் பின்னலோடத் தாலோ தாலேலோ
இழுக்க லோட வழுக்க லோடத் தாலோ தாலேலோ

கச்சை ஓடக் காழ்ப்பும் ஓடத் தாலோ தாலேலோ

கடுப்பு மோடக் கெடுப்பு மோடத் தாலோ தாலேலோ
காவி யோடப் பாவி யோடத் தாலோ தாலேலோ
கண்ணா ரோடத் துன்னா ரோடத் தாலோ தாலேலோ

பொச்சாப் போடப் பொல்லாங் கோடத் தாலோ தாலேலோ

பண்ணி யஞ்சால் மோக னூராள் தாலோ தாலேலோ
போலி ஓடக் காலி ஓடத் தாலோ தாலேலோ
பொங்கு மன்னைத் தமிழின் செல்வி தாலோ தாலேலோ 28

இன்னின்ன கொண்டவள் என்பது

தொகு

ஆடு கொண்டாய் ஏடு கொண்டாய் அன்னாய் தாலோ தாலேலோ

ஆற்றல் கொண்டாய் ஏற்றம் கொண்டாய் அன்பே தாலோ தாலேலோ
ஆட்டம் கொண்டாய் நாட்டம் கொண்டாய் அறிவே தாலோ தாலேலோ
அரவும் கொண்டாய் நறவும் கொண்டாய் அமிழ்தே தாலோ தாலேலோ

நாடு கொண்டாய் வீடு கொண்டாய் நங்காய் தாலோ தாலேலோ

நகையும் கொண்டாய் தகவும் கொண்டாய் நல்லோய் தாலோ தாலேலோ
நன்சொல் கொண்டாய் வென்சொல் கொண்டாய் நாரே தாலோ தாலேலோ
நல்லேர் கொண்டாய் சொல்லேர் கொண்டாய் நலமே தாலோ தாலேலோ

பீடு கொண்டாய் காடு கொண்டாய் பெண்ணே தாலோ தாலேலோ

பெற்றி கொண்டாய் வெற்றி கொண்டாய் பேதாய் தாலோ தாலேலோ
பெட்புக் கொண்டாய் நட்புக் கொண்டாய் பிள்ளாய் தாலோ தாலேலோ
பேருங் கொண்டாய் சீருங் கொண்டாய் பிணையே தாலோ தாலேலோ

மாடு கொண்டாய் தேடு கொண்டாய் மணியே தாலோ தாலேலோ

வண்மை கொண்ட மோக னூரின் வாழ்வே தாலோ தாலேலோ
மாலை கொண்டாய் சோலை கொண்டாய் வடிவே தாலோ தாலேலோ
மன்னுங் கன்னித் தமிழ்த்தாய் பெற்ற மாண்பே தாலோ தாலேலோ 29

தந்ததை கூறித் தராததை வேண்டுதல்

தொகு

நெஞ்சைத் தந்தாய் நினைவைத் தந்தாய் நேர்மை தாராய் தாலேலோ

நெல்லைத் தந்தாய் நீரைத் தந்தாய் நேர்தல் தாராய் தாலேலோ
நீட்சி தந்தாய் ஆட்சி தந்தாய் நிலையைத் தாராய் தாலேலோ
நேற்று தந்தாய் இன்று தந்தாய் நாளை தாராய் தாலேலோ

பஞ்சைத் தந்தாய் பனுவல் தந்தாய் பணபைத் தாராய் தாலேலோ

பாவைத் தந்தாய் நாவைத் தந்தாய் பணிவைத் தாராய் தாலேலோ
பாலும் தந்தாய் தேனும் தந்தாய் பழமும் தாராய் தாலேலோ
பண்ணைத் தந்தாய் கண்ணைத் தந்தாய் பழகத் தாராய் தாலேலோ

மஞ்சைத் தந்தாய் மழையைத் தந்தாய் வழங்கல் தாராய் தாலேலோ

மாடு தந்தாய் வீடு தந்தாய் வானைத் தாராய் தாலேலோ
(1) மல்லல் தந்தாய் (2) வளனைத் தந்தாய் (3) வண்மை தாராய் தாலேலோ
வண்ணம் தந்தாய் எண்ணம் தந்தாய் வாக்கைத் தாராய் தாலேலோ

தஞ்சம் தந்தாய் மஞ்சம் தந்தாய் சால்பைத் தாராய் தாலேலோ

தங்கும் இன்ப மோக னூராள் தமிழைத் தாராய் தாலேலோ
தண்ணங் குமரி கொங்குக் குமரி தாலோ தாலோ தாலேலோ
தங்கும் கன்னித் தமிழின் செல்வி தாலோ தாலோ தாலேலோ 30
  1. நிலவளம்
  2. வளத்தால் வந்த செல்வம்
  3. கொடைத்தன்மை

4 சப்பாணிப் பருவம்

தொகு

குன்றுடையான் வழிபாடு

தொகு

(1) வீறுலாக் கொண்டிடும் விழுமிய வளநாட்டு

வேந்தனாய் வீற்றிருந்து
(2)விரவலர் தாயாதி வேத்துரிமை கைக்கொள
வேற்றுப் புலம்போந்ததோர்

நீறுலாம் நெற்றியன் குன்றுடை யானென்று

நீணிலம் போற்று மண்ணல்
நெடுந்தமிழ்த் தாயூறி நேர்ந்தூட்டும் அமுதெலாம்
நீயுண மாட்டாமலே

ஆறுலாக் கொள்ளநின் ஆகத் தொழுகிடும்

அடைகரை அலைமோதிடும்
அந்துறை மூழ்கவே பொன்னர்சங் கர்தந்தே
அரசுரிமை மீட்டளித்தாய்

(3) சாறுலாக் கொண்டிடும் (4) தாழ் சுரும் பார்குழலி

சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ் பெற்றபுகழ் தங்குகொங் குக்குமரி
சப்பாணி கொட்டி யருளே 31
  1. பெருமை
  2. பகைவர்
  3. திருவிழா
  4. மதுகரவேணி ஒப்பு நோக்கு பாடல் 19 – இன் குறிப்பு

ஆனைக்குந்தி வேங்கடத்தம்மை

தொகு

மாரியின் வளத்தினால் மாதிர மனைத்தையும்

வழங்கிநல மாக்கிவைக்கும்
மாநலம் பெற்றவர் வாழ்ந்திடு மோர்பதி
வாளவந் திப் பகுதியைக்

(1) காரியின் பிள்ளையாம் கண்ணிய ஆனைபேர்

கடைவரும் குந்தி சேர்த்து
காப்பாகி நின்றவூர்க் காரியாம் காரிகை
கற்பின்வேங் கடத்தம்மைநின்

நீருய மூழ்கவே நீண்மலட் டைப்போக்கி

நேர்ந்தனை பிள்ளை என்பார்
நெடுமடை திறந்தோடு நின்னருள் பெருக்கதன்
நீர்மைசொற் கடங்குமாமோ

தாரியல் பாயணி தாழ்சுரும் பார்குழலி

சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ் பெற்றபுகழ் தங்குகொங் குக்குமரி
சப்பாணி கொட்டி யருளே 32
  1. நஞ்சு அதனை உண்ட சிவபெருமானுக்கு ஆகுபெயர்

சேந்தமங்கலம் இராமச்சந்திர நாயக்கன்

தொகு

அமைச்சரோ டந்தணர் ஆளும் படைத்தலைவர்

அறிதூது சாரணர் என
(1) ஐம்பெருங் குழுவொடும் ஆய்ந்தெண்ணி நலம்பெற
அரசோச்சி நின்றகாலை

இமையொத்த கரணத்தின் இயலவர் கருமவிதி

ஏர்கனகச் சுற்றமோடு
ஏங்கடை காப்பாளர் எணுநகர மாந்தரொடு
இவுளி படை யானைவீரர்

நமைநனி (2) காக்குமெண் பேராயம் தன்னொடு

நற்சேந்த மங்கலஞ்சேர்
நாடாளி ராமச்சந் திரநாய்க்கன் என்பவன்
நாடிநின் நீராடவே

சமனடி அருளினாய் தாழ்சுரும் பார்குழலி

சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ் பெற்றபுகழ் தங்குகொங் குக்குமரி
சப்பாணி கொட்டி யருளே 33
  1. ஐம்பெருங்குழு – அமைச்சர், அந்தணர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்.
  2. எண்பேராயம் – கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் – தலைவர், யானைவீரர், இவுளி மறவர்.

நாக வேந்தன்

தொகு

நாகமாம் பணிபூண்டு நன்னீர் தலைச்சூடி

ஞாலமெல் லாமுய்யவே
நஞ்சுண்டு சாம்பலை நன்மேனி பூசியே
நற்றமிழ்க் கூத்தாடுமோர்

பாகமா நிற்கொண்ட பான்மையன் ஆனாலும்

படநாக வேந்தன் ஓர்நாள்
பகர்ந்திட லொண்ணாத பனிமலை மறையினைப்
(1) பாரித்த தைப்பொறுப்பான்

(2) ஏகமா என்றனன் எரிச்சலால் சாடினன்

எடுத்தோடி வந்த நாகன்
ஈரநெஞ் சானவுன் ஈர்ந்தண் புனலாட
இன்னலைப் போக்கி நின்றாய்

தாகமேல் தமிழுணும் தாழ்சுரும் பார்குழலி

சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ் பெற்றபுகழ் தங்குகொங் குக்குமரி
சப்பாணி கொட்டி யருளே 34
  1. விரித்துரைத்தல்
  2. செல்லக் கடவை

பிள்ளையார் அருள் பெற்றது

தொகு

கெட்டவர் நல்லவர் கேளினர் பகையினர்

கிழவரொடு பிள்ளை யேனும்
(1) கிஞ்சித்து மிளகாது கேளா துயிர்வாங்கும்
கேளிலா (2) மறலி யோர்நாள்

கட்டிய கருப்புவிற் கணைபட்ட தால்வளர்

காமமீக் கூர நின்ற
காலையில் விந்துவிழக் கனலுமன லாசூரன்
கருவாகி வெளியானதால்

சுட்டதைப் போக்கவே (3) தொழுகைம்மா அண்ணலார்

தொந்திக்குள் இரையாக்கினார்
தோன்றிடும் வெப்பினால் துன்புற்று நின்துறையுள்
சூழ்ந்தாடி நோய் நீங்கினார்

(4) தட்டையார் மலரடி தாழ்சுரும் பார்குழலி

சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ் பெற்றபுகழ் தங்குகொங் குக்குமரி
சப்பாணி கொட்டி யருளே 35
  1. சிறிதும்
  2. ஏமன்
  3. பிள்ளையார்
  4. தண்டை {வலித்தல் விகாரம் }

வைகறைப் பொழுது

தொகு

ஓமென (1) ஓவிற ஓடிடு பூம்புன

லோதைய துங்கூடு
மொண்டொடி யர்தயிர் நெய்கடை யும்பொழு
தோசைய துஞ்சீறும்

தாமென ஊர்தர ஏர்தலை நின்றவர்

தாளிரு ளிற்றாவும்
தம்மவர் தண்ணளி கொண்டவர் தம்மனம்
தாக்கிடுங் கூஞ்சேவல்

தோமறு புள்ளினம் தூங்குவி லங்கினம்

சும்மையெ ழச்செய்யும்
சொக்குறு கீழ்த்திசை வைகறை வேளையில்
தூங்கிட மாட்டாயால்

கோமரு வுந்திரு கூர்மக னூர்மகள்

கொட்டுக சப்பாணி
கோமக ளாய்வளர் தோமறு தீந்தமிழ்
கொட்டுக சப்பாணி 36
  1. ஓய்வின்றி

காலைப்பொழுது

தொகு

பள்ளிகள் பிள்ளைகள் பாடிசை யைத்தரப்

பண்ணைகள் புள்ளோம்பப்
பள்ளரின் பிள்ளைகள் பண்ணிசை யைத்தரப்
பாவையர் சோறூட்ட

உள்ளம கிழ்ச்சியில் ஊறிய காளையர்

ஊக்கிநல் லேரோட்ட
ஒண்டொடி யாரவ ரோடிணை யாகவே
ஊன்றிட நெல்நாற்றைத்

துள்ளிம கிழ்ச்சியி றூவிந னைத்திணை

தூக்கிடப் பெட்டைப்புள்
சொக்கெழு காலையில் தூமடி பஞ்சனை
சோம்பியி ருப்பாயோ

கொள்ளரு செந்திரு கூர்மக னூர்மகள்

கொட்டுக சப்பாணி
கோமக ளாய்வளர் தோமறு தீந்தமிழ்
கொட்டுக சப்பாணி 37

நண்பகல்

தொகு

(1) செய்படு கின்றவர் சேறுணு மேனியில்

சென்றிடும் வேராறு
(2) செய்யலர் மேனியும் தின்றுகொ ழுக்கையில்
சிந்திடும் வேர்முத்தம்

நெய்பட உண்டவர் நீண்மணி மாளிகை

நின்றிடு வார்நேர்ந்தார் (3)
நீணிழற் கும்வழி யின்றிவ தங்குவர்
(4) நீருண வேயூணாம்

(5) மெய்படு வெம்மையில் வேட்கையில் நீர்நிலை

மேவியெ லாம்ஒடும்
வெங்கொடு நண்பகல் வேளையை நன்மகள்
வீண்செய மாட்டா யால்

(6) கொய்படு சேர்திரு கூர்மக னூர்மகள்

கொட்டுக சப்பாணி
கோமக ளாய்வளர் தோமறு தீந்தமிழ்
கொட்டுக சப்பாணி 38
  1. வயலில் பாடுபடுகின்றவர், பாடுகின்றவர், எனவும் கொள்க
  2. வேலை செய்யாதவர்
  3. நெய்யுடை அடிசில் உண்ண நேர்ந்தவர்
  4. காடிநீர் { நீராகாரம் }
  5. உடலைத் துன்புறுத்தும்
  6. குறைத்தல்

ஏற்பாடு

தொகு

நற்றவர் போலவிஞ் ஞாலம டங்கிடும்

நச்சிய லுப்போடு
நங்கையர் தங்கண வர்வர வையெணி
நாடுவர் முன்வாயில்

விற்றுவ யிற்றைவ ளர்ப்பவன் தன்பொருள்

மெல்லப ரப்புங்காண்
வீரச்சி றார்திட லில்விளை யாடிட
மேவிப்ப ரப்பார்காண்

இற்றவ வாழ்வினர் ஏய்ப்பவிஞ் ஞாயிறி

ளங்கதிர் வீசுங்காண்
(1) என்றுகு றைந்திடு மேற்படு வேளையில்
எய்த்திருப் பாயோதான்

கொற்றமி ருந்திரு கூர்மக னூர்மகள்

கொட்டுக சப்பாணி
கோமக ளாய்வளர் தோமறு தீந்தமிழ்
கொட்டுக சப்பாணி 39

1 வெயில்

மாலை

தொகு

மன்றினி லின்னிய (1) மன்றமு ழங்கிடும்

மங்கைமி ழற்றோசை
மன்னிய காதலை வாழ்ந்திட ஊக்கிடும்
மாடெரு மைமேயா

கன்றினை நாடிடும் காளைகள் மோதிடும்

காளையர் பின்போவார்
கண்ணிய முல்லைவி ரிந்தும ணந்திடும்
கன்னியர் கார்மேலே

தென்றலு மூர்தரும் நீஞ்சுடர் இல்தொறும்

சேயிழை மின்பூக்கும்
செவ்விய றிந்தனை தேடிய மாலையில்
செங்கையும் ஓய்வாயோ

குன்றென நீள்தரு கூர்மக னூர்மகள்

கொட்டுக சப்பாணி
கோமக ளாய்வளர் தோமறு தீந்தமிழ்
கொட்டுக சப்பாணி 40

1 பொருந்த

5 முத்தப் பருவம்

தொகு

முத்தம் பிறக்குமிடங்கள்

தொகு

மாரி தருநல் முத்துண்டால்

வயலில் விளைநெல் முத்துண்டால்
மடைவாய் கிளிஞ்சல் முத்துண்டால்
மாண்ட தந்த முத்துண்டால்

ஆரல் தருஞ்சீர் முத்துண்டால்

அணிநா கத்தின் முத்துண்டால்
ஆட கத்தின் முத்துண்டால்
அன்புக் கண்ணீர் முத்துண்டால்

வாரிக் கொள்வேன் உன்றனுக்கும்

வழங்கத் தருவேன் என்றாலும்
மன்னும் தமிழ்த்தாய் பெற்றெடுத்து
மகளாய் நீயும் வந்ததனால்

மூரல் வாயில் தமிழூறும்

முப்பால் முத்தம் தாருகவே
மோக னூராள் முத்தமிழ்வாய்
முற்ற முத்தம் தாருகவே 41

1 தருகவே – நீட்டல்

முத்தியான முறை

தொகு

காவி ரித்தாய் கீழ்கரையில்

கண்ணின் முத்தம் நீஆனாய்
காரி உண்டான் இடக்கண்ணாய்
கலைநி லாவின் முத்தானாய்

பாவி ரித்தாள் செந்தமிழின்

பாவை முத்தம் நீஆனாய்
பார்த்த முத்து நீஆனால்
பகரா ரோநீ (1) முத்தியென

மூவா முத்தே முதிர்முத்தே

முத்த மிழ்சொல் நன்முத்தே
முக்கண் ணான்கொள் பசுமுத்தே
முத்தம் தந்தால் குறைவுண்டோ

மோவாய் வழியும் தமிழூரல்

முப்பால் முத்தம் தாருகவே
மோக னூராள் முத்தமிழ்வாய்
முற்ற முத்தம் தாருகவே 42

1 முத்தன் என்பதன் பெண்பாற் பெயர். வீடுபேறு

முத்தம் கொடுத்தால் குறையுண்டோ?

தொகு

பாடு படுநல் ஆடவரின்

பாலை மாரின் மேனிகளில்
பாயும் ஆறு வயல்களிலே
பனிக்கும் வியர்வை நீர்முத்தம்

ஏடு சூடும் பாவையர்கள்

ஏத மில்லாக் கணவருடன்
ஏதோ ஊடிக் கூடுகையில்
இழியும் நெற்றிப் பொன்முத்தம்

கூடி நீரோ டும்பொன்னி

கொட்டும் முத்தம் நின்மேனி
குதித்து வீழச் செய்வனவுள்
கொடுத்தால் ஒன்று குறையுண்டோ?

மூடி யேனும் தமிழூரல்

முப்பால் முத்தம் தாருகவே
மோக னூராள் முத்தமிழ்வாய்
முற்ற முத்தம் தாருகவே 43

1 பூவிதழ்

ஒன்று தந்தால் பல தருவேன்

தொகு

கண்ணே கண்ணின் கருமணியே

கனியின் சாறே கற்கண்டே
கரும்பே தேனே தெள்ளமுதே
காதல் கிளியே ஆடிவரும்

வண்ண மயிலே மருண்டோடும்

மானே என்றும் இணைந்திருக்கும்
(1) மாதர் புறவே மாங்குயிலே
வளரு கின்ற ஆசையினால்

எண்ணம் சோர்ந்தேன் நின்வாயின்

எச்சில் ஊறி என்கன்னம்
இளகு மாறு ஒன்றீந்தால்
எண்ணில் லாத நான்தருவேன்

பெண்ணே மோக னூராளும்

பேதாய் முத்தம் தாருகவே
பேணும் தமிழின் கண்ணாட்டி
பேறே முத்தம் தாருகவே 44

1 காதல்

என் சிறுமை உனக்குப் பெருமையா

தொகு

தேவா ரத்தின் செழுங்கொடியே

திருவா சகத்தின் தேன்மலரே
திருமந் திரத்தின் செஞ்சுடரே
திருவள் ளுவர்வாய் செல்மணியே

பாவாய் என்னுள் இருப்பவளே

பண்ணாய் என்பா நடப்பவளே
பரவும் கூத்தாய் நடிப்பவளே
பரவைக் கெல்லாம் ஒருதாயே

தேவாய் என்னைக் கொண்டாலும்

தேடா துன்னை விட்டாலும்
சிறுமைக் குன்சேய் ஆளானால்
சேரும் பெருமை உனக்குண்டோ

கோவாய் மோக னூராளும்

கோதாய் முத்தம் தாருகவே
கூறும் தமிழின் கண்ணாட்டி
கொஞ்சும் முத்தம் தாருகவே 45

உன் முத்தத்தின் பயன்

தொகு

(1) கலையைத் திறந்ததும் கசிகின்ற பாற்குடம்

கண்டுநான் ஆவலாக
களித்தருந் துங்காலைக் கடித்தனன் ஆதலால்
கடுகுதாய் சுண்டுபட்டும்

விலைமதிக் கல்லாத வேற்றவர் பொருள்களை

வீட்டிற் கெடுத்துவந்தே
விளையாடக் கண்டெந்தை உரியார்க் களித்துவர
விட்டதோர் அறைவாங்கியும்

இலைமறை காய்போல இன்றமிழ் கொண்டபொருள்

ஏதும்நான் அறியாமலே
இயம்பினேன் மேம்பொருளை என்னவென் ஆசிரியர்
இழுத்ததோர் கிள்ளுபட்டும்

உலைகின்ற என்கன்னம் உன்வாய் மருந்தினால்

உவப்புறும் முத்த மருளே
ஒண்டமிழ் பெற்றுவளர் ஒண்மோக னூர்ச்செல்வி
ஓர்முத்த மேனும் அருளே 46

1 ஆடை

கூசுவது ஏன்?

தொகு

பொன்மலர் தளதளெனப் பூத்துவந் தாற்போல

பூசுபொடி யால்மினுக்கும்
பொல்லாத என்கன்னம் பொல்லெனக் கன்றியே
போய்விடும் என்றெண்ணியோ

நன்மலர் அமுதூறி நகைமுல்லை உள்தோன்ற

நறுமணம் வீசினாற்போல்
நலந்திகழ் வாய்முத்தம் நல்கினால் வாடுமென
நாடாது நீஎண்ணியோ

கொன்மலர் கன்னத்தில் கொவ்வைக் கனிவாயைக்

கூட்டவும் கூசுகின்றாய்
குறையொன்றும் வாராது மாறாக வேபுகழ்
கூடிடும் உனக்காதலால்

மன்மல ரானவுன் வண்டமிழ் வாயினால்

வந்ததொரு முத்த மருளே
மாத்தமிழ் பெற்றுவளர் மதிமோக னூர்ச்செல்வி
வந்ததொரு முத்த மருளே 47

அணிமுத்தம் வேண்டேன்

தொகு

வாக்காடு தொய்யகம் வலம்புரிச் சங்கம்தென்

வடபல்லி பூரப்பாளை
வள்ளளக சூடமும் மறையவே சூடிடும்
மணிமுடி கவித்து நின்றாய்

நோக்காடு செவிப்பூவும் நுழைந்தாடு குதம்பையும்

நோன்சவடி காறை மேவும்
நுண்பணி முத்தாரம் வாகுமா லைமணிகள்
மாறுதோள் மறச் சங்கிலி

சோக்காடு வளைவாளைப் பகுவாய் மின்பரியகம்

சூடகம் விரிசிகை போல்
துன்னிய நின்அணி முத்தங்கள் பற்பல
தொழுகுவன் வேண்டேனவை

பூக்காடு கொண்டவள் பூந்தமிழ் வாயினால்

புரிந்தொரு முத்த மருளே
பொன்றமிழ் பெற்றுவளர் புரிமோக னூர்ச்செல்வி
பூரித்து முத்த மருளே 48

திருமகள் அருள் பெற்றது

தொகு

செந்தாமரை தன்காதலின் செஞ்ஞாயிறு நோக்கும்

செஞ்ஞாயிறு காய்ச்சும்கொடு வெயில்முத்திட மகிழும்

அந்தாமரை மீதேறிய அணங்காளது போல

அம்மைஉன தருள்முத்துடன் அமையும்மெனச் சொல்வர்

கந்தாமழைக் கண்ணீருடன் காதல்கொடு சாவேன்

கண்ணேஉன தருளூறிடும் கன்னித்தமிழ் வாயால்

முந்தாவரு ஆசைக்கொரு முத்தந்தனை அருளே

மோகூர்தனை யாள்வாளொரு முத்தந்தனை அருளே 49

முத்தம் தரவில்லையாயின் பித்தாவேன்

தொகு

அருகில்வர வில்லையெனின் ஆம்பல்நில வெண்ணி

ஆசையெழுந் தெதிர்நோக்கிட அலராதிருக் கும்மோ

உருகும்கரு வானுக்கிடு ஒளிமுத்தினைக் கண்டும்

ஓரச்செயல் நிலவுக்கது ஊடாதிருக் காதோ

பெருகுங்கனி உன்மேலொரு பித்தாயிருக் கின்றேன்

பேதாயுன தருளூறியுள் பெருகும்தமிழ் வாயில்

முருகின்திரு மூரல்வர முத்தந்தனை அருளே

மோகூர்தனை ஆள்வாளொரு முத்தந்தனை அருளே 50

6 வருகைப் பருவம்

தொகு

ஐவண்ணமே நமசிவாய

தொகு

நீலமாய் (1) வளமையாய் மஞ்சளா (2) யம்மையாய்

நின்றநால் வண்ணமேறி
நின்னொடு நின்றெனின் நெஞ்சினில் நிலைத்தவன்
நேர்ந்தது செம்மையன்றோ

கோலமாய் அவன்பெயர் கூறுவான் வேண்டியே

கொண்டதோர் வண்ணமெல்லாம்
குழைந்தவன் நின்றதால் கூட்டிய மெய்ம்முறை
குழம்பியே நின்ற தம்மா

ஆலமாய் அமிழ்தமாய் அனைத்துக்கும் ஆனானை

அகரவுயி ரோடுகூட்டி
(3) அறிநிறக் (4) கண்மைச்சுட்டு டேற்றினேன் ஆர்க்கையில்
அம்மையே நமசிவாய

கோலமாய் மந்திர மானது குலக்கொடி

5 கூறுபட் டாய்வருகவே
கொங்குக் குமரியாய்த் தங்குமது கரவேணி
கோலமே முன்வருகவே 51

1 பசுமை
2 பழுப்பு
3 சிவனது தெறிந்த நிறம் சிவப்பு
4 அண்மைச் சுட்டு
5 என்னால் கூறுதல் சிவனொடு

நமசிவாயத்தின் பொருள்

தொகு

எம்மையுங் கண்ணோடி ஏற்றணைக் கின்றதோர்

ஈடிலாச் சிவக்கொழுந்தை
எண்ணினேன் அடியவர் இணைமலர் போற்றினேன்
எம்மையும் அறியாமலே

நம்முடை யனவெலாம் சிவாய மேயென

நாவெழ (1) நமசிவாய
நடந்தது பயின்றது நறையதா மறைமொழி
நாளெலா மினிக்க நின்றே

உம்முடைய ஒருகூறு ஓடிவந் தாள்வதை

ஒருத்திநீ கண்டதிலையோ
ஒருகைறு என்னிடம் ஒருகூறு உன்னிடம்
உருப்படி ஆகுமோ தான்

கொம்மையே கோலமே கூடுவோம் நன்றூக்கக்

கொஞ்சிடு வோம்வருகவே
கொங்குக் குமரியாய்த் தங்குமது கரவேணி
கோலமே முன்வருகவே 52

1 நம+சிவ+ஆயம் = நம்முடையன சிவனது ஆயங்கள் நம – ஒப்புநோக்குக எனகைகள் ஆயம் – ஆயத்தவர்

உன் பழிச்செயல்கள்

தொகு

ஆனேறி நிற்பதோர் அவச்செய லல்லவோ

அடுக்குமோ நல்ல வர்க்கே
ஆனையைத் தோலுரித் தாடையாக் கட்டுதல்
ஆணவச் செயலல்லவோ

வானேறி நிற்பினும் மாபாவம் போகுமோ

மாதுநீ அறியாததோ
வல்வினை அவனுக்கு வாய்ந்ததேல் உன்றனை
மட்டும் விட் டேகிவிடுமோ

தானேறி வந்ததுன் சப்பாணிப் பிள்ளையின்

தலைஆனை ஆக்க விலையோ
தலைவன்என் நெஞ்சுளான் தவறிட எனைவிடில்
சார்ந்திடும் பழி யுனக்கும்

கோனேறி நிற்கின்ற கோலமே எனைக்காக்கக்

கோரினேன் முன்வருகவே
கொங்குக் குமரியாய்த் தங்குமது கரவேணி
கோலமே முன்வருகவே 53

ஆண்டியர் உறவு

தொகு

ஓட்டாண்டியாகிய ஊர்சுற்று கணவனை

ஓட்டிநீ விட்டதுண்டோ
உனைப்பெற்ற வன்வெள்ளைக் கோட்டாண்டி என்றதால்
ஒருவிநீ சென்றதுண்டோ

கோட்டாண்டி என்றாலும் படைகொண்ட குமரனைக்

கூட்டிக்கொள் ளாததுண்டோ
கூறுமுன் பிள்ளையொரு கோட்டாண்டி என்றெனிக்
கொழுங்கனி தரவில்லையோ

பாட்டாண்டி யாகிநான் பாடிடும் போதினில்

பண்ணாய் நடப்பதின்றிப்
பழகாது மருவாது படர்ந்திடல் ஒல்லுமோ
பண்பினாய் மேரு வெள்ளைக்

கோட்டாண்டி தேவியே கூடிவிளை யாடுவோம்

குலவியே முன்வருகவே
கொங்குக் குமரியாய்த் தங்குமது கரவேணி
கோலமே முன்வருகவே 54

ஓர வஞ்சக்காரி

தொகு

சாம்பலைப் பூசியே தண்ணீர் சுமந்ததும்

தானிரந் தளித்த பாங்கும்
சார்புடை இடவயின் தாங்கியே நின்றதும்
சற்றுமே எண்ணாமலே

தேம்பலைக் கொண்டுநீ விட்டோடித் தக்கனைச்

சேர்ந்த பொல்லாக் (1) கொடிச்சி
செல்லாமாய் வளர்த்தவிரு கண்மணிகள் தம்முளே
தேம்பழு கனிஒன்றனை

ஒம்பலை ஒருவனுக் கூட்டியே நின்றனை

(2)ஓரவஞ்சகக் காரிநீ
உண்மையாய் இக்கதை இருக்குமே ஆயினும்
உனையன்றி ஏது துணைகான்

(3) கூம்பலை மோகனூர் கூடிவிளை யாடிவரும்

கோற்றொடி முன்வருகவே
கொங்குக் குமரியாய்த் தங்குமது கரவேணி
கோலமே முன்வருகவே 55

1 கொடியவள். குறிஞ்சி நிலப்பெண்
2 ஓர + அஞ்சு + அகக்காரி = எண்ணிப் பார்க்க அஞ்சுகின்ற மனமுடையவள்
3 ஊக்கம் குறையாதே

செவிக்குணவு

தொகு

கொஞ்சும் குயிற்சொல் கேளவா

கிளியின் மொழியைக் கேளவா
கிளத்தும் மறையைக் கேளவா
(1) கிளவி பூவைக் கேளவா

கொஞ்சும் மழலை கேளவா

கோதை ஊடல் கேளவா
கொண்கன் கெஞ்சல் கேளவா
கூடிப் பன்னல் கேளவா

விஞ்சும் யாழைக் கேளவா

வேயின் குழலைக் கேளவா
மிடற்றும் பண்ணைக் கேளவா
வெற்றி ஆர்ப்பைக் கேளவா

மிஞ்சும் யாவும் ஓம் என்றே

விரவிமோக னூர்தன்னில்
மேவி ஆரும் தேன் குமரி
விரும்பிக் கேள வாவா வா 56

1 பூவைக் கிளவி – பூவையின் சொல்

வாயினுக் குணவு

தொகு

பழுத்த பழங்கள் தின்ன வா

பாகைக் கூட்டிச் சுவைக்க வா
பயறு வகைகள் கொறிக்க வா
பாலை நன்றாய்ப் பருகவா

உளுத்தந் தோசை ஆர வா

உண்டைப் பொறிமா கடிக்கவா
ஊடே சோறு அயினவா
உண்டு கன்னல் நக்கவா

கொழுத்த கூட்டு துற்ற வா

கொம்மைத் தேங்காய் மெல்லவா
குழையும் நுங்கு விழுங்க வா
கொவ்வைக் கடைக்காய் குதப்பவா

செழித்த இவைபோல் வேண வெலாம்

சேரும் மோக னூர்தன்னில்
தேட வேண்டா தென்குமரி
சேர்ந்தே உண்ண வாவாவா 57

மூக்கிற் குணவு

தொகு

முல்லை அல்லி முகரவா

(1) முளரி மகிழை முகரவா
(2) முதையில் (3) தளவம் முகரவா
முருகின் முகிழம் முகரவா

கொல்லைப் புனுகு முகரவா

கூர்சவ்வாது முகரவா
கொளுத்தும் அகிலை முகரவா
கும்மென் சாந்தம் முகரவா

வெல்லப் பாகை முகரவா

(4) மிதவை (5) ஆனேய் முகரவா
(6) வெறியின் மணத்த பாவையர்
வீடு மணப்பர் முகரவா

சொல்ல முடியா நறுமணம்

துளைக்கும் மூக்கை மோகனூர்த்
தோகாய் வருக தேன்குமரி
சொக்கி முகர வாவாவா 58

1 தாமரை, உரோசா
2 கொல்லை
3 செம்முல்லை
4 சோறு
5 பசுநெய்
6 மணம்

மெய்யினுக் குணவு

தொகு

பொன்னி ஆற்றங் கரை மீதே

பொழுது சாயும் போழ்தத்தே
பொங்கு நிலவின் ஒளிவீசப்
பூக்கும் தென்றல் ஊறாய் வா

(1) கன்னிச் சோலைத் திளைப்பாய் வா

கையிலேறித் திளைப்பாய் வா
காம்பந் தோளில் திளைப்பாய் வா
கட்டித் தழுவித் திளைப்பாய் வா

அன்னத் தூவி அணை மூடும்

ஆவி போன்ற விரிப்பின்மேல்
அனிச்சம் பரப்பிப் பாயலுடன்
அமைத்த கட்டில் திளைப்பாய்வா

என்ன வேண்டும் திளைத்திடவே

ஏன்ற மோக னூரினிலே
இன்பம் ஊறும் தேன்குமரி
எம்மே திளைக்க வாவாவா 59

1 அழியாமை

கண்ணுக் குணவு

தொகு

ஓங்கும் மாடம் காண்பாய் வா

உவகை மனைகள் காண்டாய் வா
உலவும் மாந்தர் காண்பாய் வா
உன்னைப் போற்றல் காண்பாய் வா

தாங்கும் மன்றம் காண்பாய் வா

சான்றோர் நீர்மை காண்பாய் வா
தாக் கணங்கைக் காண்பாய் வா
தங்கும் அழகைக் காண்பாய் வா

வாங்கும் புனலைக் காண்பாய் வா

வாவி சோலை காண்பாய் வா
வளரும் விளையுள் காண்பாய் வா
மண்ணைப் பொன்னாய்க் காண்பாய் வா

பாங்காய் இவைபோல் பல்லழகு

படைத்த மோக னூர்தன்னில்
பரவ நின்ற தேன் குமரி
பார்ப்பாய் நாடி வாவாவா 60

7 அம்புலிப் பருவம்

தொகு

கொங்குக் குமரியும் அம்புலியும் 1

தொகு

வானத் திருத்தலால் வையத்தை நோக்கலால்

வளைகோட்டத் துள்ளிருந்தும்
மறுகறை கொள்வதால் வளர்கலை ஆவதால்
மண்ணுகா விரிதருகு வான்

தேனொத்த பால்நிலா தலைஇய நின்றலான்

செழுமுகிற் குழல் வந்திடும்
சீர்மின் னிடை நொந்து திருமுகம் காட்டலான்
தென்னகத் தண்ணலான

பானத்து வெண்ணீறு மேனியன் தான்கொண்ட

பான்மையினாலும் நீயும்
பைந்தமிழ் பெற்றுவளர் பழமோக னூராளும்
பகருவேன் ஒன்று கண்டாய்

ஆனவர்க் காகிலார்க் கருள்தரு வாளுடன்

அம்புலி ஆடவாவே
அருமறைகள் கொண்டதமிழ் தருமழலைச் செல்வமுடன்
அம்புலி ஆடவாவே 61

கொங்குக் குமரியும் அம்புலியும் 2

தொகு

விண்ணிலை கொண்டதால் மேலாம்பல் ஒளிதந்து

விரிந்திட நீ வருதலால்
வெய்யவன் சிவக்கொழுந் தென்றுமே செம்பாதி
மேனிபட வே நிற்றலான்

மண்ணிலை கொண்டதால் வளர்மதி ஆனதால்

வாலையாய் மன்னி வரலால்
வாய்களில் மறைபாடு கொண்டதால் வீழ்ந்தவர்
வளர்காதலைக் கூட்டலால்

எண்ணிலை கொண்டதால் இன்னிலை கொண்டதால்

ஏணிலை யுங் கொண்டதால்
என்றமிழ் பெற்றுவளர் ஏர்மோக னூராளுக்
கிணையென உன்னை வைத்தேன்

அண்ணலந் தண்மையால் அருள்தரு வாளுடன்

அம்புலி ஆடவாவே

அருமறைகள் கொண்டதமிழ் தருமழலைச் செல்வமுடன்

அம்புலி ஆடவாவே 62

அம்புலியினும் சிறந்தவள் 1

தொகு

வெள்ளொளி நீதரின் விரிந்திடும் குவளைஎனில்

மேந்தாமரை விரியுமோ
மின்னிவள் பார்வையால் இடவலக் கையிலவை
ஒஇரிகின்ற தைக் காண்பையால்

துள்ளலை யால்கடல் தூண்டிட வல்லையெனச்

சொல்லுதல் ஆகு மேனும்
தொல்தமிழ் முனியினால் துளியாக்கி இவள்போலச்
சுண்டிடச் செயவல்லையோ

உள்ளொளி ஊறவே உவகையை ஊட்டிடும்

உயர்கலைச் செல்வியாகி
ஒண்டமிழ் பெற்றுவளர் ஓர்மோக னூராளும்
உனை அழைக் கின்றாளரோ

அள்ளூர வேநனி அருள்தரு வாளுடன்

அம்புலி ஆடவாவே
அருமறைகள் கொண்டதமிழ் தருமழலைச் செல்வமுடன்
அம்புலி ஆடவாவே 63

அம்புலியினும் சிறந்தவள் 2

தொகு

இன்பமாய் வெண்ணிலா ஈகுநல் உன்கொடைக்

கிரந்தனை கதிர்ச்செல்வனை
எரிகதிர்ச் செல்வனோ இவளருள் கிட்டாமல்
இவளிறை தொட்டு பெற்றான்

(1) முன்பொடு வீசியே முயலினும் நின்னொளி

மூடிருளே போக்கிடும்
மூதறி வானவிவள் முன்னத் திருளெலாம்
முற்றவே போக்கு மிதனால்

என்போ டுயிரியைந் தன்னமற் றன்னயான்

இவளோ டியைந்த தொடர்பே
ஈர்ந்தமிழ் பெற்றுவளர் 2ஏ(ம்)மோக னூராளும்
(3) ஏன்றழைக் கின்றாளுனை

அன்போடு வாழ்வாருக் கருள்தரு வாளுடன்

அம்புலி ஆடவாவே
அருமறைகள் கொண்டதமிழ் தருமழலைச் செல்வமுடன்
அம்புலி ஆடவாவே 64

1 வலிமையோடு
2 ஏமம்
3 ஏற்று

அம்புலியினும் சிறந்தவள் 3

தொகு

உடுக்குலப் படைவரிசை உதவிட அழைத்துநீ

உலவினும் கார் மறைக்கும்
ஒருகோடி கார்வந்து மூடினும் இவள்தரும்
ஒளியருள் மங்காதுகாண்

துடைக்கினும் நின்முகம் துன்னிய கறைசிறிதும்

துலங்கிவர வில்லை இவளின்
தூயநல் முகங்கறை தேய்க்கினும் அக்கறை
துள்ளியும் ஒட்டாதுகாண்

கடைக்கணால் நோக்கினும் காரிகை இவளது

காதலின் பம்ஊறுமால்
கனித்தமிழ் பெற்றுவளர் கைம்மோக னூராளும்
கடிதழைக் கின்றாளுனை

அடைக்கலம் தருநருக் கருள்தரு வாளுடன்

அம்புலி ஆடவாவே
அருமறைகள் கொண்டதமிழ் தருமழலைச் செல்வமுடன்
அம்புலி ஆடவாவே 65

அருட்கொடை 1

தொகு

நெஞ்சிலூறும் இவள்பா உண்டால் வெண்ணிலாவே

நீயே ஒளியை வீசக்கூடும் வெண்ணிலாவே

மிஞ்சிப் பாய்பால் பொன்னிமேவும் வெண்ணிலாவே

மேனிபட்டால் கறையைப் போக்கும் வெண்ணிலாவே

வஞ்சி தாள்கீழ் வந்துநின்றால் வெண்ணிலாவே

வாழ்த்தி உன்னைப் பாடிவைப்பேன் வெண்ணிலாவே

கொஞ்சிஆடும் கொங்குச் செல்வி வெண்ணிலாவே

கூப்பிடுங்கால் ஆடவாராய் வெண்ணிலாவே 66

அருட்கொடை 2

தொகு

அடிய ருண்டால் அன்ப ருண்டால் வெண்ணிலாவே

ஆசை கொண்டு வந்தால் உண்டு வெண்ணிலாவே

தொடியருண்டு வீரருண்டு வெண்ணிலாவே

தொழுது வந்தால் காப்ப துண்டு வெண்ணிலாவே

துடியருண்டு கூத்தருண்டு வெண்ணிலாவே

சொல்லித் தருவர் தமிழை எல்லாம் வெண்ணிலாவே

கொடிய ளான கொங்குச் செல்வி வெண்ணிலாவே

கூப்பிடுங்கால் ஆடவாராய் வெண்ணிலாவே 67

ஒறுப்பு – 1

தொகு

வெற்றி கொண்ட தெய்வம் உன்னை வெண்ணிலாவே

வேண்டு கின்றாள் வந்து சேர்க வெண்ணிலாவே

செற்றம் கொள்ளு வாளி வள்தான் வெண்ணிலாவே

தீராப் பகை மூண்டி டுங்காண் வெண்ணிலாவே

அற்ற முனக் காகு மையோ வெண்ணிலாவே

அன்பி னாலு ரைத்தே னிஃதை வெண்ணிலாவே

கொற்றி யான கொங்குச் செல்வி வெண்ணிலாவே

கூப்பி டுங்கால் ஆட வாராய் வெண்ணிலாவே 68

ஒறுப்பு -2

தொகு

தன்னடக்கத் தாளி வள்தான் வெண்ணிலாவே

தன்மை யாயழைக்கி றாள்காண் வெண்ணிலாவே

பொன்னடக்கத் தாள் அழுமேல் வெண்ணிலாவே

பூங்கண் வெந்து காட்டிடுங்காண் வெண்ணிலாவே

என்னடக்கம் மீறிடுங்காண் வெண்ணிலாவே

ஏதம் செய்யக் கூச மாட்டேன் வெண்ணிலாவே

கொன்னி றைந்த கொங்குச் செல்வி வெண்ணிலாவே

கூப்பிடுங்கால் ஆடவாராய் வெண்ணிலாவே 69

ஒறுப்பு – 3

தொகு

தழைக்கு முள்ளத் தோ டழைத்தாள் வெண்ணிலாவே

தயங்காமல் நீ வந்துசேர்க வெண்ணிலாவே

மழைக்கண் ணாகிச் சேக்குமுன்னம் வெண்ணிலாவே

மறுக்கா தேநீ வந்துசேர்க வெண்ணிலாவே

அழைக்கும் போது வாராவிட்டால் வெண்ணிலாவே

அமெரிக்காவை ஏவி ஆள்வான் வெண்ணிலாவே

குழக்குழந்தை கொங்குச் செல்வி வெண்ணிலாவே

கூப்பிடுங்கால் ஆடவாராய் வெண்ணிலாவே 70

8 அம்மானைப் பருவம்

தொகு

அம்மானைக் காய்கள்

தொகு

பண்ணனன் றீந்தநல் பால்சோற் றுருண்டைபோல்

பன்மடங் காக்கி ஊட்டும்
படைமடம் போலவே கொடைமடம் பட்டவரின்
பாளிதம் என்னுமாறும்

விண்ணலைந் தெங்கணும் வெயிலெறி கின்றதோர்

வெய்யவன் என்னுமாறும்
மேனில வெறிந்துலகு மேவிருள் நீக்கவரு
வெண்மதி என்னுமாறும்

வண்ணமெல் விரல்பட்டு மணிமுத்து பசுவென

மாறியே கூடிவரவே
வளைக்கை இசைதர பல்லாங் குழியெனும்
மணையண்டை நீயிருந்தே

அண்ணலந் தேன்மலர் 1 ஆடா விளக்கம்மை

அம்மானை ஆடியருளே
அள்ளுதோ றுஞ்சுவை ஆம்தமிழ்ச் செல்வமே
அம்மானை ஆடியருளே 71

1 அசலதீபேசுவரி என்பதன் தமிழ்வடிவம் ஆடா விளக்கம்மை

அம்மானை ஆட்டம்

தொகு

சந்தனக் குறட்டையோர் தகைபெறு மீனாக்கித்

தாவாய் வரப் பிளந்தே
தகவுற ஒவ்வொன்றும் ஏழுகுழி தாங்கிடத்
தச்சனின் கை வண்மையால்

தந்தமணைக் குழிதொறும் ஐந்தைந்து மேனியே

தந்துகாய் கூடிவரவே
தன்பக்க ஓர்குழிக் காய்கொண்டொவ் வொன்றாகத்
தந்தாடி வரும் போதினில்

வந்தகுழி காயின்றி ருக்குமேல் அடுத்ததை

வாரியே கூட்டிக் கொள்ளும்
வளர்பசு வுஞ்சேர்க்கும் வழக்கமோ டிடையிடை
வண்டமிழ் பாடியாடும்

அந்தண்மை கொண்டமலர் ஆடா விளக்கம்மை

அம்மானை ஆடியருளே
அள்ளுதோ றுஞ்சுவை ஆம்தமிழ்ச் செல்வமே
அம்மானை ஆடியருளே 72

குமரியின் பன்னிறம்

தொகு

காற்றுக்கு நிறமில்லை காணினும் வானிலம்

கண்ணிருள் கரணியம் காண்
கசிநீர்க்கு மஃதிலை ஆதலால் எண்ணியுன்
கண்ணவன் தீ யாகினான்

பேற்றுக்கு வந்தநீ பெருநில வளனிறம்

பெற்றனை பச்சை யானாய்
பெருகுபால் மார்பிலும் பெயலகங் காயிலும்
பெற்றனை வெள்ளை செம்மை

சேற்றுக் குகந்தமலர் திருவிழிக் கறுப்பெழச்

சேர்பொனணி மஞ்சள் வீசும்
செம்மணி அம்மானை செல்குழி சொல்நிறம்
சேர்ந்தழகாய் மின்னிடும்

ஆற்றுக் குகந்தமலர் ஆடா விளக்கம்மை

அம்மானை ஆடியருளே
அள்ளுதோ றுஞ்சுவை ஆம்தமிழ்ச் செல்வமே
அம்மானை ஆடியருளே 73

காய் ஒளிபட்டுக் கலங்குவன

தொகு

பிஞ்சான நின்மலர்க் காந்தளஞ் செவ்விரல்

பிரிந்திடும் காய் ஒளியினால்
பிறைசூடி யானதோர் பெம்மானின் மூன்றுகண்
பேராது கூட ஓடும்

நஞ்சான கட்செவி நாகமணி ஈனவும்

நாணியே கூசி நோக்கும்
நன்மான் மருண்டோடும் நாட்டத்த தாகியே
நாலுகால் பாய்ச்ச லாகும்

(1) தஞ்சான சென்னிநீர் தனக்குளும் நின்ஆட்டம்

தான்தோன்ற லால் நடுங்கி
தளும்பியே ஆடிடும் சார்ந்தாடு மிவைபோலச்
சாய்ந்தாடும் அண்டமெல்லாம்

அஞ்சாத பெண்மலர் ஆடா விளக்கம்மை

அம்மானை ஆடியருளே
அள்ளுதோ றுஞ்சுவை ந்தமிழ்ச் செல்வமே
அம்மானை ஆடியருளே 74

1 தஞ்சம் + ஆன

புரவலன்

தொகு

இல்வழி நின்றறம் என்றுமே செய்திடும்

ஏந்தலாய் வாழ்ந்துன்றனை
எண்ணியே வாழ்க்கையில் இனியமகன் ஓங்கார
யானையை விட்டெடுத்தே

நல்வழி இயக்கமது நாடவும் கூடவும்

நடத்தவும் ஆக்கிவிட்ட
நம்பிமா பெரியசா மிச்செட்டி யார்எனும்
நல்லோனை ஏவிவிட்டே

கல்வியாங் கடலிடை மூழ்காது நீந்தியதன்

கரைசேறு மாறென்றனைக்
கைக்கொடுத் தென்னையும் கண்ணுத லொடுகொண்டு
கட்டியணைக் கின்றதேவி

அல்வழி நீக்குமலர் ஆடா விளக்கம்மை

அம்மானை ஆடியருளே
அள்ளுதோ றுஞ்சுவை ஆம்தமிழ்ச் செல்வமே
அம்மானை ஆடியருளே 75

அம்மானை, உட்பொருள் – 1

தொகு

ஏழு பிறவி ஏழ்குழியா

எல்லா உயிரும் அதன் காயா
இட்டு நீயும் ஆடுகையில்
இன்பம் இல்லை என்றெண்ணி

வாழு முயிர்க்கெல் லாந்தலைவன்

மணியின் மிடறன் உனை உடையான்
வைத்த குழிக்கும் நீ தந்து
மகிழ்ந் தெடுத்தா டுங்காலை

வீழும் அன்பைப் பசுவென்றே

விழைந் தெடுத்தே மடியேற்றி
வேண சேர்ப்பாய் ன்னன்பே
வேரே செடிபூ காய்கனியே

தாழும் என்றன் தலைக்குன்றன்

தாளீந் தாடாய் அம்மானை
தமிழைக் காக்க வந்ததொரு
தாயே ஆடாய் அம்மானை 76

அம்மானை உட்பொருள் – 2

தொகு

தோண்டி வைத்த ஈரேழு

சொக்குக் குழிகள் ஈரேழாய்ச்
சொல்லும் உலகம் என்றிடவும்
சுற்றி நிற்கும் அதன் உயிர்கள்

மாண்டு தோன்றி மாறுவதால்

வளர்ந்து ஒவ்வொன் றாய்ப்பிரிந்து
வரும்பல் காய்கள் என்றிடவும்
மன்னி எங்கும் ஓம் என்றே

ஆண்டு நின்ற உன்பாடல்

ஆடுங் காலைக் கடவிறையாய்
அமைந்த பாடல் என்றிடவும்
ஆன்ற தமிழர் விளையாட்டு

தாண்ட வந்துன் தாளிணைஎன்

தலைக்கீந் தாடாய் அம்மானை
தமிழைக் காக்க வந்தவொரு
தாயே ஆடாய் அம்மானை 77

அம்மானை உட்பொருள் – 3

தொகு

மெய்யும் வாயும் கண்மூக்கும்

விரிந்த செவியும் ஆகிநலம்
வேட்டு நிற்கும் ஐம்பொறியை
வேய்ந்தோர் பிறவிக் குறியிட்டு

வையாய் மீண்டும் எடுத்தவற்றை

மாற்றி ஒவ்வொன் றாய்ப்பிரித்தே
வழங்கி மற்றைக் குழியேற்றி
வாரிக் கலைத்தே வைத்திடுவாய்

வைய மெல்லாம் கொண்டாடும்

மறையின் கொழுந்தே நின்விரலால்
வளர்ந்த பசுவாய் நானுன்றன்
மடியில் வளர விழைகின்றேன்

தையல் என்றன் தாளேனும்

தலைக்கீந் தாடாய் அம்மானை
தமிழைக் காக்க வந்தவொரு
தாயே ஆடாய் அம்மானை 78

உலகம் உதவ விரும்புதல்

தொகு

கலையெல்லாம் உருவான கன்னி தானும்

கற்கின்றாள் கற்கின்றாள் நின்னாட் டத்தை
கண்ணிறைந்த அழகல்லாம் உருவாய்க் கொண்ட
காரிகையும் நிற்றொழுது காண்பான் நின்றாள்

சிலையெல்லாம் நின்கைக்காய் ஆகவேண்டிச்

செம்மாந்து நின்னோக்கித் தேடா நிற்கும்
செடியினமும் உயிரினமும் நின்னாட் டத்தில்
சேரிடம் தேடியசைந் தாடா நிற்கும்

அலையெல்லாம் வீசிகடல் தன்னை நின்றன்

ஆடுகுழி யாக்கொள்ள ஆடிக்கேட்கும்
அத்தனையும் நீமறுத்தால் அந்தோ நின்னை
அவமாக்கிப் பாவியொடு கூட்டும் வேண்டாம்

தலையெல்லாம் நின்தாளை வேட்டு நிற்கும்

தாயேநீ அம்மானை ஆடாய் ஆடாய்
தண்டமிழை உள்ளுதொறும் உணர்வாய் ஊறும்
சான்றோளே அம்மானை ஆடாய் ஆடாய் 79

கூடி யாடும் கோற்றொடியர்

தொகு

மணியரிகொள் சிலம்பாலே அரசை வென்ற

மறக்கற்பின் வானாடன் செல்வி தானும்
வளவன்முன் நடமாடி வணிக வேந்தின்
மனங்கொண்டு வாழ்ந்திருந்த மாண்பினாளும்

இணையரிலை என்றேத்தக் கசவ னோடே

இன்னுயிரைத் தந்தபெருந் தேவிதானும்
இன்றமிழைக் கூழுக்கும் என்றும் பாடி
இருந்தமிழைக் காத்தபல ஔவை மாரும்

புணையாகத் தமிழ்க்கடலை நீந்துதற்கோர்

புலன்தந்த காக்கைபா டினியார் தாமும்
புரிந்துன்றன் முன்னிருந்தம் மானை ஆட
புகன்றோடி வந்தார்கள் போக்கப் போமோ

தணவாதுன் தாளிணைஎன் தலையில் வைத்து

தாயேநீ அம்மானை ஆடாய் ஆடாய்
தண்டமிழை உள்ளுதொறும் உணர்வாய் ஊறும்
சான்றோளே அம்மானை ஆடாய் ஆடாய் 80

9 நீராடற் பருவம்

தொகு

திருக் கையின் கோலம்

தொகு

பாவிகள் மூழ்கியே பாவங்கள் போக்கவே

படிந்தவை போக்க வேண்டி
பனிமலை விட்டெமது குடமலை தோன்றியே
பாய்ந்தோடி வந்துனது சீர்

ஓவிய மார்பினில் ஒழுகிடும் அமுதினை

உண்டதால் பாவ மெல்லாம்
ஓடிய தென்பரால் உண்மையேல் நீயவட்
கோர்முறை தமக்கையன்றோ

காவியங் கண்ணருள் காட்டிட நின்வலக்

கையினால் தஞ்ச மருளி
கண்ணிய இடக்கையால் தாள்நிழல் காட்டினாய்
காவிரித் தங்கை கூடி

பூவியல் மேனியில் புதுநீறு பூசுவை

பொன்னிநீ ராடியருளே
பூந்தமிழ்க் குமரிநன் மோகன புரமகள்
பொன்னிநீ ராடி யருளே 81

பொன்னியின் நன்றி

தொகு

அன்றொரு நாள்தன தன்னையைத் தந்தையை

அழைத்திட எண்ணினா னாய்
அம்மையைப் பாலென்று வாய்விட் டழுதானை
அணைத்தறி வமுதூட்டினாய்

நன்றொரு மகன்மட்டு மோஉனது நகிலுண

நானிலத் துயிர்க ளெல்லாம்
நன்மக்கள் அல்லவோ எனவினவித் திட்டிட
நாவெழும் என்றெண்ணியே

இன்னொரு நகிலொழு கின்னமுதம் மிழிய

இமிழலை யோடு கூட்டி
எல்லோர்க்கும் ஊட்டுவாள் அவள்நன்றி கொல்வையோ
ஏற்றணைப் பாய் போலவே

பொன்றிகழ் மேனியில் புதுநீறு பூசுவை

பொன்னி நீ ராடியருளே
பூந்தமிழ்க் குமரிநன் மோகன புரமகள்
பொன்னி நீ ராடியருளே 82

காண்டா விலங்குப் பால்

தொகு

சினத்துடன் துரத்திய காண்டா விலங்கதன்

செம்மடிப் பால் வேண்டியே
சேயிழை பாஞ்சாலிக் குதவுவான் வீமனும்
செலவது பாய வரவே

பனித்துடல் ஓடியே வந்தவம் மல்லனைப்

பாய்மா துரத்தி வரவே
பாவைநின் அடிவிழுந் தாலெனப் பால்படு
பனிநீர் முகந்து சென்றே

இனித்த நீர்ச் சென்னியனை (1) இராசராசன்தொழும்

எழில் மணற் பள்ளியானை
இட்டேத்தக் கண்டதும் எக்காள மாபாலை
ஈந்ததாம் கரணியம் யார்

புனிற்றிள மேனியில் புதுநீறு பூசுவை

பொன்னி நீ ராடியருளே
பூந்தமிழ்க் குமரிநன் மோகன புரிமகள்
பொன்னி நீ ராடியருளே 83

1 மணற்பள்ளி வீமனேசுவரமுடையார் முதலாம் இராசராசன் காலத்தில் பெற்ற சிறப்புப்பற்றி அக்கோயில் கல்வெட்டால் அறியலாம்

பொன்னித் தாம்பாலம்

தொகு

தெங்குடன் நையப் பழுத்ததால் செவ்வாழைத்

தீங்கனி நீர் வீழ்தரச்
செழுமலர்கள் நின்னடி சேருவான் வேண்டியே
சென்னீர் மிசை வீழ்தர

அங்குலைப் பாக்கொடு அழிபடு வெற்றிலை

அசைநீர் மிசை வீழ்தர
ஆற்றினில் கூடலால் அலைக்கையில் ஏந்தியுன்
அடியினைக் கீழ் வைத்தது

கொங்கிரு குழலாளின் கோவை செஞ்சீரடி

கொங்குணல் முறை யென்றெணி
(1) கொங்குநீ ரானவள் (2) கொங்குபேர் கொண்டவள்
குலவிட எண்ணி யன்றோ

பொங்கிள மேனியில்புதுநீறு பூசுவை

பொன்னி நீ ராடியருளே
பூந்தமிழ்க் குமரிநன் மோகன புரிமகள்
பொன்னி நீ ராடியருளே 84

1 பொன், தேன்
2 பொன்னி

அன்னபூரணி குளம்

தொகு

இன்முகம் ஈரமனம் இயைந்தெழு கின்றதோர்

இன்சொலின் பெரிய சாமி
எல்லார்க்கும் நல்வழி ஈந்தவன் இந்நூலை
எழுதிடச் செய்த்தைப் போல்

தன்மனம் வேண்டிய சான்றநல் லறஞ்செயும்

தகைய ணங்கான செல்வி
தாங்கினள் பெயரன்ன பூரணி அன்னவள்
தாராளக் கொடை நல்கியே

நன்மலர் பூத்திடும் இன்னீர்க் குளந்தொட்டு

நாற்புறம் கல்லுகட்டி
நல்கிய தெற்றுக்கு நான்மறை வாய்பூசி
நாளும் விளை யாடவலவோ

பொனமலர் மேனியில் புதுநீறு பூசுவை

பொன்னி நீ ராடியருளே
பூந்தமிழ்க் குமரிநன் மோகன புரிமகள்
பொன்னி நீராடி யருளே 85

1 காசி அன்னபூரணியின் பெயரால் எவரோ தொட்ட குளம் என்பவரும் உள்ளனர்

நீராடும் கோலம்

தொகு

காரேறிய குழலையலைகளிலே விரித்தாட

கண்ணேரிய கயலும் பிறழ்ந்தூடாடிடும் காணாய்

நீரேறிய தலையன்மெயும் நின்னோடுறழ் தரலால்

நெஞ்சூறிய இருவீரையும் நேரே புணர்ந்தளிப்பான்

தாரேறிய நகிலைவரு தண்ணீரிடை தந்தால்

தானூறிடு பாலால்பனி மலையாடல் மாணும்

ஆரேறிய தமிழால் வளர் மோகூர்ப் பதியாளே

அலைமோதிடும் பொன்னிப்புனல் ஆடித்திளைத் தருளே 86

நீராட உடனாடுவன

தொகு

ஏடாடிட திரையாடிட இசைந்தாடிடும் பொன்னி

இலையாடிட முன்னாடிடும் எண்ணக்கலைக் கன்னி

ஊடாடிட ஊழாடிடும் உள்ளும் மனத்துன்னை

உய்த்தாடிட நானாடுவல் உதவாய் என தன்னை

தோடாடிட உலகாடிடும் தோகாய் உனதருளே

சுமந்தாடிட இன்பாடிடும் துணையா யிருந்தவளே

ஆடாடிடு தமிழால் வளர் மோகூர்ப் பதியாளே

அலைமோதிடும் பொன்னிப்புனல் ஆடித்திளைத் தருளே 87

கன்னியும் பொன்னியும் ஒன்று

தொகு

செல்லலை தந்திடு சீரறல் நீரினில்

தெய்யக லைந்தாடும்
செல்வரி வண்டுகள் சீர்குழை தாவிடும்
செல்கயல் சேர்ந்தோடும்

பல்லலை முத்தென முல்லைய ரும்பெனப்

பைய நி லாவீசும்
பாவடி நீரளை பட்டிடு மேவிய
செந்நிறம் பாலாகும்

கல்லலை மோதிடும் கைம்மலர் வெண்ணிறம்

கண்டிடு மே தாலே
கன்னியும் பொன்னியும் மொன்றெனக் கூட்டியே
காட்டிடு கின்றேன் நான்

பொல்லலள மேனியில் பூம்பொடி பூசுவை

பொன்னியில் நீரா டாய்
பொங்கிட வண்டமிழ் பொன்மக னூர்த்துறை
பொன்னியில் நீரா டாய் 88

ஐயமிழ்த மாடல்

தொகு

ஊறிடு சந்தன முன்னுட லம்மெனில்

உய்த்திடு வாள் பொன்னி
ஓடிடு பாலமு துன்னுட லம்மெனில்
உண்டிடு வாள் பொன்னி

நீறிடு தேனமு துன்னுட லம்மெனில்

நல்கிடு வாள் பொன்னி
நாடுகற் கண்டதுநின்னுட லம்மெனில்
நன்றள்ப் பாள் பொன்னி

சோறிடு வாழைய துன்னுட லம்மெனில்

தூக்கிடு வாள் பொன்னி
சொல்லிய வைந்தமிழ் தாடிடு வாயெனில்
சொல்லினென் சேர் பொன்னி

(1) போறையம் மேனியில் பூம்பொடி பூசுவை

பொன்னியில் நீரா டாய்
பொங்கிட வண்டமிழ் பொன்மக னூர்த்துறை
பொன்னியில் நீரா டாய் 89

1 பஞ்சாமிர்தம்
2 நீட்டலுமாம்

புனலாடித்தை

தொகு

(1) ஏமரு காலையில் இன்னருள் கொண்டனை

இன்புன லாடித்தை
(2) என்றுவ ளர்தரு முன்னமெ ழுந்தனை
ஈர்ம்புன லாடித்தை

(3) தேமரு கூடிய செம்மலர் சூடுவை

தீம்புன லாடித்தை
செவ்வரி கண்களை மையெழு தும்படி
செம்புன லாடித்தை

(4) காமரு கண்ணீத லோடும ணந்தனை

கான்புன லாடித்தை
கான்மலர் கைம்மலர் கண்மலர் சேர்ந்திடும்
கண்புன லாடித்தை

பூமரு மேனியில் பூம்பொடி பூசுவை

பொன்னியில் நீரா டாய்
பொங்கிட வண்டமிழ் பொன்மக னூர்த்துறை
பொன்னியில் நீரா டாய் 90

1 ஏமம்
2 வெயில்
3 தே+மரு தேனும் மணமும்
4 காம மணம்

10 ஊசற் பருவம்

தொகு

ஊசல் அமைதி

தொகு

வைத்த பளிங்குச் சுவரின் மேல்

வண்ணப் பவளக் குறுக்கிட்டு
மாற்றில் உயர்ந்த செம்பொன்னில்
மணியைப் பதித்துத் தொடர்மாட்டிப்

பொய்த்த கைம்மாத் தந்தமுடன்

புரையில் வைரம் குயிற்றியதோர்
பூவார் பலகை யதுசேர்த்துப்
புலவர் உன்னை அதிலேற்றக்

கைத்த லத்தால் தொடர்பற்றிக்

கண்ணே நீயும் ஆடுகையில்
கண்ணால் உண்ண எல்லோரும்
கடிதே வந்து நெறிகின்றார்

பொய்த்தல் இல்லா மோகூரில்

பொன்னின் ஊசல் ஆடுகவே
பொன்னந் தமிழின் திருமகளே
பொன்னின் ஊசல் ஆடுகவே 91

ஊசலாடும் காட்சி

தொகு

முன்னும் பின்னும் நீயாட

மோதித் தென்றல் தோன்றியதோ
முத்தம் தோன்றும் புன்னகையின்
முளைவெண் ணிலவாய்த் தோன்றியதோ

பின்னி மருங்கோ டுங்கண்கள்

பெய்யும் ஒளியே கதிரொளியோ
பேதை வெகுளின் நன்னுதலில்
பிறங்கும் முத்தே உடுக்குலமோ

என்னும் படியே நீயிருந்தாய்

ஏரே நீரே இளமானே
இன்பே அன்பே என்னறிவே
எண்ணே கண்ணே இன்னிசையே

பொன்னே மின்னே மோகூரில்

பொன்னின் ஊசல் ஆடுகவே
பொன்னந் தமிழின் திருமகளே
பொன்னின் ஊசல் ஆடுகவே 92

பொன்னி யூசல்

தொகு

மலரொழுகு கண்ணீரை மடுத்தார்க்கு மதுவூட்டும்

மாபாவம் போக்க உன்றன்
மார்பொழுகு பால்வாங்கி மாபுனித நீராகி
வழிந்தோடு பொன்னி நீரே

கலையழகு செய்தாடக் கட்டுமொரு பலகையா

(1) கழுநீர்கள் மணிகளாக
(2) கார்க்கால்கள் கயிறதா கரைமரமும் அதுவாக
கண்மரை கன்னியாக

இலையழகு மேனியா இதழ்எழில் முகமதா

இறைதேனும் அருளதாக
எண்ணிடும்வபொருளெலாம் இப்படி யேயாகி
இருந்தூசல் ஆடுகின்றாய்

புலவர்க்கும் புல்லர்க்கும் மோகூரில் அருண்மலர்

பொன்னூசல் ஆடி யருளே
பொங்கிடும் தமிழமிழ்தம் உண்டூட்ட வந்தமகள்
பொன்னூசல் ஆடி யருளே 93

1 செங்கழு நீர் மலர்கள்
2 மழைக்கால்

மகளிரின் தமிழ்ப் பண்பு

தொகு

தனலாகி நிற்பனேல் தானெரி வானென்று

தண்ணீரை நீ யணைத்தியோ
தன்புனல் பனியாகில் இயங்காது என்றவன்
தான்உனை அணைத்ததாமோ

தனல்வெல்லு மோவன்றிப் புனல்வெல்லு (1) மோஇறை

சாற்றிடப் போகுமாமோ
(2) தமிழ் சொலும் ஊடலில் தோற்றவர் வென்றவர்
தழுவிடக் காண்பர் என்றே

தனல்வெல்ல விட்டுப்பின் தழுவலில் நீவெல்ல

தமிழ்மகள் ஆதலாலே
தனல்மிகக் கூடுவான் தனலவன் வலங்கொண்டு
தானூசல் ஆடும் தாயே

புனலுமாய் அனலுமாய் மோகூரில் அருண்மலர்

பொன்னூசல் ஆடியருளே
பொங்கிடும் தமிழமுதம் உண்டூட்ட வந்தமகள்
பொன்னூசல் ஆடியருளே 94

1 விடை
2 ஊடலில் தோற்றவர் வென்றவர் அதுமன்னும்
கூடலிற் காணப்படும் – (குறள்)

மலர்ச் சோலைக் கோலம்

தொகு

(1) தாமரை கெண்டைநல் வாழையு டுக்கையின்

தண்ணமு தூறிளநீர்
சார்தழை பைங்கழை காந்தளில் அல்லியும்
தாமரை யாம்விரிய

காமுகம் நாங்கிய வெண்ணிறத் தாமரை

கவ்வுப 2லாசுமுத்தம்
கன்னிய மாங்கனி வள்ளைகு மிழ்மிசை
காதலின் செங்கழுநீர்

ஏமனை வென்றவி ளம்பிறை கார்முகில்

இத்தனை யும் கொண்டே
என்னையும் கொண்டிடபொன்னிவ ளர்த்திடும்
ஈரமலர்ச் சோலை

ஓமென நின்றவள் மோகன மாம்புரி

ஊசலி லாடுகவே
ஒண்டமிழ் பெற்றதோர் (3) கொங்குக் குமாரிபொன்
னூசலில் ஆடுகவே 95

1 தாமரை – அடி. கெண்டை – கெண்டைக்கால் ஏனையவும் இவ்வாறே உறுப்புகளாகக் கொள்க
2 முருக்கமலர் – வாய் \ ஈரப் பலா என்று பொருள்கொண்டு இதழ் என்றலுமாம்
3 கொங்குக் குமாரி என்றலுமாம் மாரி (மழை)

பூண்கள்

தொகு

பீலிநன் மோதிரம் நூபுகம் பாடகம்

பீடுகு றங்கு செறி
பெய்கலை மேகலை முத்தரை பொன்திரு
பின்னிடை தூசுமடி

தாலிமுன் காறைமின் காழ்பவ ளம்மணி

தாழ்வடம் தோள்வளையம்
சங்கொடு ஆடகம் ஆழிம லர்த்தொடை
(1) தாலிடு பில்லாக்கு

கோலகு தம்பைகு ழைசெவி முன்மலர்

கொன்மணி மூக்குத்தி
(2) குந்தளம் (3) தொய்யகம் (4) புல்லகம் (5) பாளைவ
லம்புரி கொண்டவளே

ஓலம றையெனை ஆண்டிட ஈந்தவள்

ஊசலில் ஆடுகவே
ஒண்டமிழ் பெற்றதோர் கொஙுகுக்கு மாரிபொன்
னூசலில் ஆடுகவே 96

1 நா
2 கொண்டைவலை
3 மைய வாக்கினை மூடிக்கொண்டு நெற்றியில் தொங்கும் பொன்னணி
4 வடமல்லி தென்மல்லி
5 பூரப்பாளை – தொய்யகத்திற்கு இருபுறமும் உச்சியிலிருந்து முன்னோக்கித் தொங்கும் கோப்பு அணி
6 உச்சிப்பூ போன்றது

ஊசலாட்ட வந்தவர்

தொகு

வானோர்முத லாமிந்திரன் மனையாட்டியும் செய்ய

மலர்மேவிய வன்நாமிசை வாழுங்கலை மாதும்

தேனார்மலர் மீதேறிய சீரார்திரு மாதும்

தெய்வத்திரு மனமுங்கவர் தேவக்கொடி யாரும்

கானீர்ம்மலர் தொழுதேஎழில் காதன்மலர் பலரும்

கண்ணின்மணி உனையாட்டிடும் கருத்தாலிவண் வந்தார்

தானோர்முத லாகிச்செழு மோகூர்தழை தாயே

தங்கத்திரு ஊசல்மிசை தமிழாயிருந் தாடாய் 97

காண வந்தவர்

தொகு

அமெரிக்கர்கள் மாற்கோவினர் செருமானியர் கிரேக்கர்

ஆப்கானியர் எபிரேயமக் கள்ளாங்கிலர் சீனர்

இமிழ்நீர் சுழல் சப்பானியர் பர்மாமலை யத்தார்

ஈழத்தவர் உரோமானியர் இவர்போல்பிற நாட்டார்

இமையாதவர் இமையாடிட இம்மாநிலம் வந்தார்

இறைவர்க்கொரு கண்ணானவள் ஏறூசலைக் காண்பான்

தமிழின்முத லாகிச்செழு மோகூர்தழை தாயே

தங்கத்திரு ஊசல்மிசை தமிழாயிருந் தாடாய் 98

நலம் வாழ ஆடுக

தொகு

வல்லாங்கு நலம்வாழ ஆடாய் ஊசல்

மாநிலமே இன்பமுற ஆடாய் ஊசல்

கல்லாமை நீங்கிடவே ஆடாய் ஊசல்

காதலர்கள் மணந்திடவே ஆடாய் ஊசல்

இல்லாமை நீங்கிடவே ஆடாய் ஊசல்

இன்னலெலாம் தீர்ந்திடவே ஆடாய் ஊசல்

பொல்லாங்கில் லாமோகூர் தமிழின் முத்தே

பொன்னூசல் ஆடிடுவாய் அமிழ்தின் முத்தே 99

பாட ஆடாய்

தொகு

பாவலர்கள் பாடிடவே ஆடாய் ஊசல்

பண்புடையார் போற்றிடவே ஆடாய் ஊசல்

நாவலர்கள் வாழ்ந்திடவே ஆடாய் ஊசல்

நல்லவர்கள் புகழ்மொழிய ஆடாய் ஊசல்

காவலர்கள் காத்திடவே ஆடாய் ஊசல்

கற்புடையார் தொழுதிடவே ஆடாய் ஊசல்

பூவலரும் மோகூர்வாழ் தமிழின் முத்தே

பொன்னூசல் ஆடிடுவாய் அமிழ்தின் முத்தே 100




கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ் முற்றிற்று.