கொங்கு மங்கலவாழ்த்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து

கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது


காப்பு வெண்பா

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

அகவல்பா


அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்           10

மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்
பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
பேழை வயிற்றுப் பெருமதக் களிறே
அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
நினைத்த தெல்லாம் நீயே முடித்து
மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!           20

மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
என்குரு நாதன் இணையடி போற்றி
கிரேதா திரேதா துவாபர கலியுகம்
செம்பொன் மகுடம் சேரன் சோழன்
பாரமா முடியும் பாண்டியன் என்னும்
மூன்று ராஜாக்களும் ராஜ்யம் ஆளுகையில்
கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
சிறந்த மானிடம் தாயது சுத்தம்
வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்
இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்           30

பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
சோதிடனை அழைத்துச் சாஸ்த்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
கையில் ஓடிய கைரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம்           40

தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு
மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று
வெண்கல முரசம் வீதியில் கொட்டத்
தங்க நகரி தானலங் கரித்து
முத்துக்கள் தன்னை முசம்பரக் கொட்டி
சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி
உரியவர் வந்தாரிங்கு உன்மகளுக் கென்று சொல்லி           50

பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந்து உண்டு
பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
தேம்பனை யோலை சிறக்கவே வாரித்
திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்
கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்
          60

பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
வாழை கமுகு மகமேருடனே
சோலை இலையால் தோரணங் கட்டி
மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
பார்க்குமிடம் எங்கும் பால்களைத் தெளித்துப்
பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை           70

சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்
முறைமை யதாகவே முக்காலி மேல்வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
போன மச்சம் மகமது துடைத்து
எழிலான கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துமே
ஏழு தீர்த்தம் இன்பமுடன் இட்டு           80

மேள முடனே விளாவியே வார்த்துச்
செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
வண்ணப் பட்டாடை வஸ்திரந் தன்னை
அன்ன முப்பழமும் ஆவின் பாலும்
நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
மன்னவர் முன்னே வந்தவ ருடனே
வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்
சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்
கணபதி ஒன்றை கருத்துடன் நாட்டி
அருகது சூடி அருள்பொழிந் திடவே
நிரம்பி யதாக நிறைநாழி வைத்து           90

வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
அலைகடல் அமிர்தம் அவனியில் நீரும்
குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
களரியோர் மெச்சிட காப்பதுகட்டி
குப்பாரி கொட்டிக் குலதேவதைத் தான் அழைத்துச்
செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து
சாந்து சந்தனம் தான் பன்னீரும்
சேர்த்து கலக்கி சிறக்கவே பூசிக்
கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி           100

முல்லை இருவாட்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்
மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புஷ்பங்களும்
புன்னை கொன்னை பூக்கள் எல்லாம் கொண்டு வந்து
தண்டை மாலை கொண்டை மாலை சோபன மாலை சுடர்மாலை
ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து
திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனுக்கு           110

நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்
திருஷ்டி கழித்துச் சிவசூரி யனை கைதொழுது
அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி
இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்
சந்தனம் புனுகு சவ்வாது மிகப்பூசி
மந்தாரை மல்லிகை மரிக்கொழுந்து மாலையிட்டு
ஆடை ஆபரணம் அழகு பெறத் தான்பூண்டு
கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும்
பேழைமூடி தான்சுமந்து பிறந்தவரைச் சுற்றிவந்து           120

பேழையை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைச்சேலைத் ஒருதலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து
அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை
அரிசியில் பதித்துவைத்து ஐங்கரனைப் பூசித்து
மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்
செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்
குடிமகன் மங்கள வாழி கூறி முடித்தவுடன்
வேழ முகத்து விநாயகனின் தாள்பணிந்து
சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு           130

அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்
பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி
இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்
பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று
மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்
போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்
தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப்           140

பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
தமையன் ஆனவர் யானையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
கைத்தாளம் பம்பை கனக தப்பட்டை தான்முழங்கச்           150

துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
சேகண்டி சங்கு திமிர்தாளம் பம்பையுமே
வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
உருமேளம் பறமேளம் உரம்பை திடும்படிக்கப்
பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை           160

சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர
நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்
பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க
அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்
பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து
மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க
உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப்           170

வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும் என்று           180

நாழி யரிசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலியற்கு
நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
அஷ்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
அன்ன நடையாரும் அருமைப் பெரியவரும்           190

பொன் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
நாட்டில் உள்ள சீர் சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம் என்று
கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
கண்டு மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
பூட்டினார் தோடெடுத்துப் பொன்னார் திருக்காதில்
தங்கக் சங்கிலி தன்னைத்தான் கழுத்தில் இட்டார்கள்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்
சாந்து பொட்டிட்டு சவ்வாது மிகப்பூசி
ஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
தாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து
சந்தானம் மிகப்பூசி சரிகைவேஷ்டி தான்கொடுக்க
பொட்டிட்டு பொன்முடி பேடை மயிலியற்கு
பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
ஆரணங்கு பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வழமைதாய்வந்து நலமதாய் நின்று
          200

ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து
சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்
பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்
பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
ஆணிப் பெண்ணவளை அலங்கரித்துக் குளம் கோதி
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வலமதாய் வந்து நலமதாய் நின்று           210

செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
நிறைநாழி சுற்றியே நீக்கித் திருஷ்டிகழித்து
அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து
அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
பஞ்சவர்ண நிறச்சேலை பவளவர்ணக் கண்டாங்கி
மாந்துளிர்சேர் பூங்கொத்து வர்ணமுள்ள பட்டாடை
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டி
கட்டியே இருக்கும் கனம்பொருந்திய வாசலிலே
அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச்           220

சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
வீரலட்சுமியவள் விளங்கிடும் வாசலிலே
விருதுகள் வழங்கிடும் விசேஷ வாசலிலே
தரணியில் அன்னக்கொடி கட்டியிருக்கும் வாசலிலே
பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்
சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
அம்மி வலமாக அரசாணி முன்னாக           230

ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
பத்தியுடன் இத்தனையும் பாரித்தார் மணவறையில்
மணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி
அழகுள்ள பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து
மகிழ்ச்சியது மீதூற வலப்புறம் தானிருத்திக்
குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
ராமன் இவரோ! லட்சுமணன் இவரோ!
கண்ணன், இந்திரன், காமன் இவரோ!           240

அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
முத்து ரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்
கணபதி தெய்வமுன் கட்டும்மங் கிலியம்வைத்து
அருமைப் பெரியவர் அன்புடன் பூஜைசெய்து
மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று சப்திக்க
மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடூரியம்போல் திருப்பூட்டி
ஆரம்தன்னைச் சூட்டி அமர்ந்தபின் மணவறையில்           250

மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்
சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே
கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரையை
மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்
பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்
கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்
தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து           260

உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
சாப்பாடு போஜனம் சந்தோசஷ மாய்ப்போட
உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்
மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து
கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து           270

கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
பணமது பார்த்துக் குணமது கழித்து
கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்கப்
பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து           280

முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
பந்தல் கவுளி பாக்கியம் உரைக்க
மைத்துனன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்
சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்
சந்தோ ஷமாகித் தங்கமுடி மன்னவர்கள்
பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட
நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
சகாயம் என்ற பேர்களுக்குத் தனிப்பணம் தான்கொடுத்து           290

வாழிப் புலவர்களுக்கு வரிசைதனைக் கொடுத்துத்
திட் டமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
அரிசி அளந்தார்கள் அனைவரும் தானறிய
கரஹம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்
புடவைதனைக் கொடுத்து பின்னும் தலைமுழுகிச்
சட்டுவச் சாதம் பெண் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு
சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்
பண்ணையத்து மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு
காலும் விளங்கக் கன்னிகையைத் தானழைத்து           300

மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து
மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்
மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளவர்ணப் பட்டாடை
அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
இந்திர வவர்ணப்பட்டு ஏகாந்த நீலவவர்ணம்
முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை           310

கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணியும்
வட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும்
காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!
          321

வாழ்த்துரை

       ஆதி கணேசன் அன்புடன் வாழி!
       வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
       எம்பெரு மானின் இணையடி வாழி!
       மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
       திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
       முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
       நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
       வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
       பாரத தேசம் பண்புடன் வாழி!
       கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
       காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
       வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
       மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
       வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
       என்குரு கம்பர் இணையடி வாழி!
       வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
       வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
       இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!
       ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,

       மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!

[மின்பதிப்பாசிரியர் குறிப்பு: கொங்கு வேளாளர் கலியாணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். "இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்" என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் 'கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து' எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. பதிப்பாதாரங்கள்: (அ) தி. அ. முத்துசாமிக்கோனார், கவிச்சக்கிரவர்த்தியாகிய கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து, வாழி. விவேகதிவாகரன் அச்சுக்கூடம், சேலம், 1913 (ஆ) எஸ். ஏ. ஆர். சின்னுசாமி கவுண்டர், கொங்கு வேளாளர் புராண வரலாறு, தமிழன் அச்சகம், ஈரோடு, 1963.           ~ முனைவர் நா. கணேசன்]

"https://ta.wikisource.org/w/index.php?title=கொங்கு_மங்கலவாழ்த்து&oldid=1404868" இலிருந்து மீள்விக்கப்பட்டது