கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 10
“மாடு கட்டிப் போரடிச்சா மாளாதுன்னா” சொல்லி, “டிராக்டர் கட்டிப் போரடிக்கும் அழகான கரும்பாக்கம்...”
கன்னியப்பனுக்கு ஒரே சந்தோசம். ஏதேதோ சினிமாப் பாட்டுக்கள். அவன் குரலில் மீறி வருகின்றன.
எப்போதும் வரும் முத்தய்யா, வேல்ச்சாமி, கன்னியப்பனின் ஆயா என்று பெண்கள்...
சாவடியை அடுத்த முற்றம் போல் பரந்த மேட்டில் கதிர்களைப் பரப்பிப் போடுகிறார்கள். பண்ணை வீட்டு டிராக்டர் பத்து ரவுண்டு வந்தால் போதும். நெல்மணிகள் கலகலக்கும். அப்பா வந்திருக்கிறார். சரோ படிப்புக்குப் போய் விட்டாள். சரவணன் டிராக்டரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ரங்கன் எப்போதுமே களத்து மேட்டுக்கு வந்ததில்லை. அம்மாவும் கூட அதிசயமாகச் சாவடிப் பக்கம் நெல் தூற்ற முறத்துடன் வந்திருக்கிறாள். அம்முவும் நெல் தூற்றுகிறாள்.
எவ்வளவு மூட்டை காணுமோ?
வங்கிக் கடனை அடைத்து, தோடு ஜிமிக்கியை மீட்க வேண்டும். சாந்தி ஓடி வருகிறாள்.
“கையை குடுங்கக்கா” கையில் கதிர்க் கற்றையுடன் பற்றிக் குலுக் குலுக்கென்று குலுக்குகிறாள்.
ஒரே சந்தோசம். வெயிலில் உழைப்பு மணிகள் முகத்தில் மின்னுகின்றன.
“விடு. விடு சாந்தி அருவா...”
அப்போதுதான் பார்க்கிறாள். நீலச்சட்டையும் ஒட்டு மீசையும் காமிராவுமாக அவள் புருசன் படம் பிடிப்பதை.
“ஐயோ இதென்ன சாந்தி?”
“வெற்றிச்சந்தோசம். அதுக்கு இது ரிகார்டு.”
சரவணனுக்கு வாயெல்லாம் பல்.
“அம்மா, அப்பவே படம் எடுத்திருக்காங்க. நாடிராக்டர்ல உக்காந்து எடுத்திருக்காங்க!”
“அப்படியா? நீயாவது வந்து நிக்கிறியே, சந்தோசம்டா...”
“ஏங்க எங்க இரண்டு பேரையும், எங்களுக்குத் தெரியாமயே எடுக்கணுமின்னே எடுத்தீங்களா? தெரிஞ்சு போஸ் குடுத்தா அது நல்லா இருக்காதே...”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ கையப் புடிச்சிக் குலுக்கினப்ப கதிர்க்கட்டு, இடுப்பு அரிவா எல்லாம் கச்சிதமா வுழுந்திருக்கு.”
செவந்தி குரலை இறக்கிக் கோபித்துக் கொள்கிறாள்.
“என்ன சாந்தி இது? எங்கூட்டுக்காருக்கு.. இதெல்லாம் ரசிக்காது. இப்பவே ரொம்பப் பேசறதில்ல. உன்னிடம் சொல்றதுக்கென்ன, அன்னிக்கு ரேடியோவப் போட்டு உடச்சிட்டாரு...”
“அதெல்லாம் சரியாப் போயிடும் அக்கா! நான் சொல்றன் பாருங்க! நம்ம செட்ல, நீங்கதா உடனே போட்டு, பலன் எடுத்திருக்கிறீங்க. படம் நல்லா வந்தா இவுங்க போட்டிக்கு அந்தப்படத்த அனுப்பப் போறதாச் சொல்லிருக்காரு...”
செவந்தி ஏதோ ஒரு புதிய உலகில் நிற்பது போல் உணருகிறாள்.
பொன்னின் கதிர்கள்.
பொன்னின் மணிகள்.
வியாபாரி, ரத்தின முதலியார் வந்திருக்கிறார்.
எல்லாக்கதிர்களும் பகல் ஒரு மணிக்குள் அறுவடையாகி வந்து விட்டன. டிராக்டர் தன் பணியைச் செய்துவிட்டுப் போகிறது.
செவந்தி குவிந்த நெல்மணிகளைப் பார்த்து ஊமையான உணர்வுகளுடன் நிற்கிறாள். ஒரு பதர் இல்லை. ஒரு சாவி இல்லை. பொன்னின் மணிகளே.
நெற்குவியலுக்கு முன் கர்ப்பூரம் காட்டிக் கும்பிடுகிறாள்.
பொரி கடலைப் பழம் படைக்கிறாள்.
அப்பா ஒரு பக்கம் சுந்தரியும் கன்னியப்பனும் தூற்றிவிட்ட நெல்லைச் சாக்கில் அள்ளுகிறார்.
“அப்பா நெல்லு நெடி. நீங்க போங்க... இருமல் வந்திடப் போவுது வேணி.. வந்து சாக்கப் புடிச்சிக்கம்மா..”
“இருக்கட்டும்மா, புது நெல்லு, ஒண்னும் ஆவாது. இந்த நெடிதா நமக்கு உள் மூச்சு. எம் பொண்ணு நின்னுக்கிட்டா, நா உசந்துடுவே..”
“எல்லாம் அந்த ஆபீசர் அம்மாக்குச் சொல்லுங்க.”
“ஆமாம்மா. மகாலட்சுமிங்க போல அவங்க வந்தாங்க, நாங்கூட இவங்க என்ன புதுசாச் செய்யப் போறாங்க. எத்தினி யூரியா போட்டும் ஒண்ணும் வெளங்கல. பூச்சி புகையான் வந்து போவுது. ஏதோ போடணுமேன்னு போட்டுச் சாப்புடறோம். செலவுக்கும் வரவுக்கும் சரிக்கட்டிப்போவுது. உழுதவங் கணக்குப் பாத்தா உழக்கு மிஞ்சம்பாங்க. அதும்கூட செரமமாயிருக்குன்னுதாம்மா நெனச்சே.”
மூட்டைகளைக் குலுக்கி எடுக்கிறார். செலவு போக, ஏறக்குறைய ஒன்பது மூட்டைகள் கண்டிருக்கின்றன.
எப்போதும் வரும் ஆண் பெண் சுற்றார்கள் கூலி பெறுபவர்கள். சுந்தரி காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.
மூட்டைகளைத் தட்டு வண்டியில் போட்டுக் கொண்டு முதலியார் போகிறார். மூன்று மூட்டைகளைச் செலவுக்கு வைத்திருக்கிறாள்.
ஆறு மூட்டைகள்... ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய், சுளையாகக் கைகளில்...
அப்பா செவந்தியின் கைகளில் கொடுக்கிறார்.
வாங்கிக் கொண்டு களத்து மேட்டிலேயே அப்பன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறாள். “இருக்கட்டுங்கப்பா. நீங்க வச்சிக்குங்க. வங்கிப் பணத்தைக் கட்டிருவம். பொங்கலுக்கு மின்ன புது நெல்லு வந்திட்டது. அதுதான் சந்தோசம். நா நினைச்சே, பொங்கக் கழிச்சித்தா அறுப்போமின்னு..”
“கதிர் முத்திப் பழுத்துப் போச்சி. உதுர ஆரம்பிச்சிடுமில்ல... நீ முன்னாடியே நாத்து நடவு பண்ணிட்டல்ல.. ?”
“அப்பா தொடர்ந்து, கொல்ல மேடுல சாகுபடி பண்ணனும். இது முழு ஏகராவும் பயிர் பண்ணனும்.”
ஆங்காங்கு வைக்கோல் இழைகள். நிலம், பிள்ளை பெற்று மஞ்சட் குளித்து நிற்கும் தாய்போல் தோன்றுகிறது.
வைக்கோல் அங்கேயே காயட்டும் என்று போட்டிருக்கிறார்கள்.
வீட்டில் சுந்தரிதான் அடுப்பைப் பார்த்துக் கொண்டு, ஆட்களுக்குக் காபியும், பொங்கலும் வைத்துக் கொண்டு வந்தாள். அதிகாலையிலேயே ஆட்கள் வந்துவிட்டார்கள்.
அவளுக்கு.. அந்தப் பெரியம்மா பிள்ளை சாவு. பெரிய அதிர்ச்சி. ஒரு இளம் பெண் புருசனை இழந்து சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுவதைப் போன்ற கொடுமை ஒன்றும் கிடையாது. அந்தச் சாவுக்குப் போய் வந்ததாலோ என்னமோ, அவள் கணவனும் சரியாகவே இல்லை. அம்மாதான் அந்தக் கடைசி ஊர்வலப் பெருமையை, ஏதோ கல்யாண வைபவம் கண்டவள் போல் சொன்னாள். பெரிய பெரிய அமைச்சர்கள் வந்தார்களாம். பூமாலைகளே வந்து குவிந்ததாம். நடிகர் ஜயக்குமார் வந்து கண்ணிர்விட்டு அழுதானாம். லட்ச ரூபாய் செலவழித்தானாம், அந்தக் கடைசி ஊர்வலத்துக்கு..!
அம்மா இந்தப் பெருமையைச் சொன்னது ரங்கனுக்கே பிடிக்கவில்லையோ? "ஆமாம், குடிச்சிப் புட்டு ஆடினானுவ. வாணவேடிக்கை, இதெல்லாமா? செத்தவனுக்கு, ஒரு சாமி பேரு, கோவிந்தான்னு சொல்லல்ல. மட்றாசு விவஸ்தை இல்லாம ஆயிட்டது. பூமாலை மேலுக்கு மேல் போட அமைச்சர் வாரார். வட்டத் தலைவர், செயலாளர், டி.வின்னு பெருமைதாம் பெரிசு. அந்தப் புள்ள பொஞ்சாதிதா உள்ள அழுதிட்டிருந்திச்சி. அதுக்காகத்தான் கருமாதியன்னிக்குப் போன. அவ அண்ணன் கூட்டிட்டுப் போயிடுவா. பாவம், அஞ்சு வருசம் வாழ்ந்து ரெண்டு புள்ளையத் தந்தா. குடி... குடிக்கறதோட, சாமி இல்லேன்னு திரிஞ்சானுவ. அதுதா அடிச்சிடுத்து..” என்று வருந்தினாள்.
செவந்திக்கு ஆறுதலாக இருந்தது. “இந்தப் புள்ளிங்க இல்லன்னா, வேற கலியாணம் கூடக் கட்டலாம். ஆம்புளங்க கட்டுவாங்க, புள்ளிங்களை வளர்க்கன்னு. பொம்புள, இந்தப் பிஞ்சுகளுக்கு ஓராண் காவல் வேணும், அப்பன் ஸ்தானத்திலன்னு கல்யாணம் கட்டலாமா? கூடாது. அத்தோட விட்டதா? சொந்தக்காரங்க, கூடப் பெறந்தவங்க கூட நடத்த சரியில்லன்னு கரியத்தித்தும். இவங்க புருசன் பொஞ்சாதி இணைபிரியாம, சீவிச்சிங்காரிச்சி மினுக்குவாங்க. அட, வூட்டில படுவெட்டா, புருசனில்லாம ஒரு பொம்புள இருக்காளேன்னு நினைப்பாங்களா?” என்று யாருக்கோ கல்லிலே மருந்திழைப்பது போல் உரசி விட்டாள்.
பொங்கலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அறுவடை செய்திருக்கிறார்கள். பச்சை நெல்லை முற்றத்தில் காய வைத்திருக்கிறாள். ஒரு மூட்டையைப் புழுக்கி வைக்க வேண்டும்.
ஓய்ந்தாற்போல் குறட்டில் உட்காருகிறாள்.
வெந்நீர் வைத்து உடம்புக்கு ஊற்றிக் கொள்ளவேண்டும். வயிறு பசிக்கிறது.
“பொங்க இருக்குதா சுந்தரி?”
“இருக்கக்கா... குழம்பூத்தித் தாரேன். சாப்பிடுங்க. நீங்க சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டீங்க...”
“உனக்குத்தா ரொம்ப வேல சுந்தரி..”
“நமக்குள்ள இதெல்லாம் எதுக்கக்கா பொங்கலுக்கு முருகண்ணா அண்ணி எல்லாம் வராங்களாம். மதியம் அத்தான் சாப்புட வந்தப்ப லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க.”
“லெட்டரா? நாளப் பொங்கலுக்கா வராங்க? விசேசந்தா...”
“நா முதல்ல அறுப்பு வச்சது நல்லாப் போச்சு. புதுநெல்லு போட்டுப் பொங்கி, வாராத அண்ணனும் அண்ணன் பொஞ்சாதியும் வாராங்கன்னா விசேசந்தா.” பொங்கலுக்கு எப்படியும் துணி வாங்குவது வழக்கம். காஞ்சிபுரம் போய்க் குழந்தைகளுக்கும், அப்பாவுக்கும், வாங்க வேண்டும் என்றிருந்தாள். கோ - ஆப்டெக்ஸ் கடையில், ஒரு வாயில் சேலை எடுத்தால், சரோவை உடுத்தச்சொல்லலாம். அவர்கள் அப்பா அவளுக்கும், சரவணனுக்கும் வேண்டியதை எடுப்பார். அவள் தலையிட மாட்டாள். அவளுக்கும் ஏதோ ஒரு சேலை வரும். பொங்கல் தீபாவளி என்றால், முருகன் இருநூறு இருநூற்றைம்பது என்று பணம் அனுப்பி வைப்பான். இல்லையேல், அவன் மட்டும் பேப்பர் திருத்த, அது இதென்று பட்டணம் வரும்போது சுங்கடிப் புடவையோ, வேட்டியோ வாங்கி வந்து கொடுப்பான். அதற்கே அம்மா அகமகிழ்ந்து போவாள்.
பொங்கல் சந்தை அல்லவா? கோ - ஆப்டெக்ஸ் துணிக்கடையில் கூட்டம் அலை மோதுகிறது. செவந்தி கன்னியப்பனையும் கூட்டி வந்திருக்கிறாள். ஒரு சோடி வேட்டி நாற்பது நாற்பது ரூபாயில் இரண்டு சட்டைகள், ஒரு வாயில் சேலை, நான்கு ரவிக்கைத் துணிகள் என்று துணி எடுக்கிறாள். புதுப்பானை, நான்கு கருப்பந்தடிகள், வாழைப்பழம், ஒரு சிறு பறங்கிக் கொட்டை, பூசணிக்காய், கத்தரிக்காய், மொச்சைக் கொட்டை என்று வாங்கிக் கொள்கிறாள். சேவு அரைக் கிலோ, இனிப்பு கேக், ஒரு பெட்டி என்று பணத்தைச் செலவு செய்கிறாள்.
கன்னியப்பன் உடன் வர விடுவிடென்று நடந்து வீட்டுக்குள் நுழைகையில் வீடு கலகலவென்றிருக்கிறது. ரங்கன் மட்டும் வந்திருக்கவில்லை. அண்ணன் முருகன், அண்ணி, இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். கயிற்றுக் கட்டிலில் பிள்ளைகளுடன் அண்ணன் இருக்கிறார். அண்ணி கருப்புத்தான். ஆனால் படித்த களை, பணக்களை.
“வாங்கண்ணா, அண்ணி நல்லாருக்கிறீங்களா?”
“ம். பொங்கச்சந்தையா?”
“ஆமா. நேத்துத்தா காகிதம் வந்திச்சின்னு சொன்னாங்க. நா காலம வரீங்களோ, ராத்திரியோன்னு நினைச்சே. பஸ்ஸுல வந்தீங்களா?”
“நாங்க மெட்ராசிலிருந்து வரோம். மாப்பிள்ளைகிட்டச் சொன்னனே? கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு? புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே? நல்ல வெள்ளாமைன்னு அப்பா சொன்னாங்க...”
“ஆமாம் காக்காணிக்கு ஒம்பது மூட்டை, ஒரு கருக்காய் பதர் இல்ல..” என்று ஆற வைத்துக் குந்தாணியில் குத்துப்பட்ட நெல்லை - அரிசியைக் கொண்டு வந்து காட்டுகிறாள்.
“இருக்கட்டும் நமக்கு இதெல்லாம் சரிவராது. மாப்புள்ள போல...”
"அண்ணி, நின்னிட்டே இருக்காங்க, நீங்க பாட்டுல உக்காருங்க..”
“அதான்பாய விரிச்சி வச்சேன்..” என்று கூறும் சுந்தரி காபி கொண்டு வருகிறாள். சாமி மேடைக்கு முன் ஒரு தாம்பாளத்தில், ஸ்வீட் பாக்கெட், கதம்பம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய வரிசைகள் இருக்கின்றன. நீலத்தில் கருப்புக் கரையிட்டு இரு சரிகைக் கோடுகள் ஒடிய சுங்கடிச் சேலை, ஒரு உயர் ரக வேட்டி, மேல் வேட்டி, எல்லாம் இருக்கின்றன. அண்ணியின் கழுத்தில், புதிய தங்கச் செயின் டாலருடன் பளபளக்கிறது. இரண்டு அன்னங்களாய்க் கல்லிழைத்த டாலர். உள்ளங்கழுத்தில் அட்டிகைப்போல் ஒரு நகை. தங்கமாக ஒரு மீன் இரண்டு முனைகளையும் இணைக்கிறது. மீனின் சிவப்புக்கல் கண் மிக அழகாக இருக்கிறது. செவிகளில் சிவப்புக்கல் கிளாவர் ஜொலிக்கும் காதணியில் முத்துக்கட்டி இருக்கிறது. நதியா குத்தோ, நகுமா குத்தோ, குத்தி அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் சொலிக்கிறது. கைகளில் மும்மூன்று தங்க வளையல்கள், ஒரு சிவப்பும் முத்துமான வளையல். மூக்கில் முத்துக்கட்டிய மூக்குத்தி, விரலில் வங்கி நெளி மோதிரம். முடியைத் தளர்த்தியாகப் பின்னி காதோரம் தூக்கிய ஊசிகளுடன் பேஷனாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த இடத்துக்கே பொருந்தாமல், இரண்டு விரல்கடை சரிகை போட்ட, மினுமினுக்கும் பட்டில் பூப்போட்ட சேலை.... இளநீலமும் ரோசுமான கலர். அதே இள நீலத்தில் ரவிக்கை... குழந்தைகளில் பெரியவன் ஆண். எட்டு வயசாகிறது. ஆனால் நருங்கலாக இருக்கிறான். புசுபுசுவென்று ஒரு முழுக்கால் சட்டை கழுத்து மூடிய பூப்போட்ட பனியன் போன்ற மேல் சட்டை. அவன் கழுத்தில் ஒரு போட்டோ பிடிக்கும் காமிரா. பொம்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெண் சிறியவள். அடுக்கடுக்காக ஜாலர் வைத்த பம்பென்ற லேசு வைத்த கவுன் போட்டிருக்கிறது. காதுகளில் சிறு தங்க வளையல்கள். கழுத்தில் இருக்கிறதோ இல்லையோ என்ற மெல்லிய இழைச்சங்கிலி. நட்சத்திர டாலர்.
கன்னியப்பன் அந்தச் சட்டையை சிறு குழந்தைக்குரிய ஆவலுடன் தொட்டுப் பார்க்கிறான். அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கையில் கிள்ளி உதட்டில் வைத்துக் கொள்கிறான்.
உடனே அந்தக் குழந்தை முகத்தைச் சுருங்கிக் கொண்டு அம்மாவைப் போய் ஒட்டிக் கொள்கிறாள்.
“அவ... அழுக்குக் கையோடு தொடுறா..”
“ந்தா. அப்படில்லாம் சொல்லக் கூடாது திவ்யா” என்று முருகன் சிறு குரலில் அதட்டுகிறான். உடனே, அவள் தொட்டாற் சுருங்கியாக அழத் தொடங்குகிறாள்.
செவந்திக்கு அப்போதே கவலை பற்றிக் கொள்கிறது. இரவு இவர்கள் எங்கே தங்கி, எப்படிப் படுத்துக் கொள்வார்கள்? முன்பு அவர்கள் வந்த போது கழிப்பறை கூடக் கிடையாது என்று குறைப்பட்டு, போய் விட்டாள். இப்போது, படலை ஓரமாக ஒரு கழிப்பறை கட்டி இருக்கிறார்கள். அது சரோ மட்டுமே உபயோகிக்கிறாள். சுத்தம் செய்ய என்று ஆள் பிடிப்பது சிரமம். அதனாலேயே அதை உபயோகிப்பவள் அவள் மட்டுமே.
இதெல்லாம் நினைவுக்கு வந்து அழுத்துகிறது.
திராபையான கந்தலை இழுத்துப் பிடிக்கும் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அப்பா இருமினாலும் கொண்டாலும் இருக்கட்டும் என்று சுந்தரி வீட்டுக்குப் படுக்க அனுப்புகிறாள். சரோவுடன் கூடத்து அறையில் அண்ணி, குழந்தைகள், கட்டிலில் அண்ணன். கீழே அம்மா.. விடிந்தால் போகி..
கவலைகளின் கனமும் அலுப்பும் உடலை அயர்த்தி விடுகிறது. வாசலில் சட்பட்டென்று சாணம் தெளிக்கப்படும் ஓசையில் அலறிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.
இருள் பிரியவில்லை.