கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 12

12


ந்தக் கூட்டம் இவர்களுடைய அமாவாசைக் கூட்டம் போல் இல்லை. இதுவும் தான்வா பண்ணை மகளிர் கூட்டம் என்றுதான் சாந்தி கூறினாள். இவர்கள் வட்டத்துக்குள் இல்லை. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் மாமண்டூர் சரகத்தில் நடக்கிறது. காலையிலேயே சாந்தி, பிரேமா, செவந்தி மூவரும் பஸ் ஏறி வந்திருக்கிறார்கள்.

விவசாயத் துறை அலுவலர், பெண்கள் முதலில் பேசினார்கள். பிறகு மதியம் அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தம் அநுபவங்களைச் சொல்கிறார்கள். செவந்தியையும் பேசச் சொன்னார்கள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. “சாந்தி நீ என்னைக் காட்டி வுடாதே. நீ பேசு...” என்றாள் கண்டிப்பாக.

அலுவலர் அம்மா ஒவ்வொருவர் பேரையும் சொல்லிக் கூப்பிடுகிறார். “பாப்பாம்மா... பாப்பாம்மாள் வந்து பேசுவார்...” என்ற அறிவிப்பு வருகிறது.

பாப்பம்மாவுக்கு இளம் வயசுதான். வெள்ளைச் சேலை உடுத்தி, நெற்றியில் துளி திருநீறு வைத்திருக்கிறாள். புருசன் இல்லாதவள் என்பதை அந்தக் கோலம் பறையடித்துத் தெரிவிக்கிறது.

“இந்தப் பாப்பம்மா அனுபவத்தைக் கேளுங்கள். அவ்வளவுக்கு மனசைத் தொடும்” என்று சாந்தி காதில் கிசுகிசுத்தாள்.

“வணக்கமுங்க... எனக்குப் பேசெல்லாம் தெரியாதுங்க. நாலாவது வரைதான் படிச்சேன். பொம்புளப்புள்ள எதுக்குப் படிக்கணும்னு நிறுத்திட்டாங்க. எங்கூட்டுக்காரர் லாரி ஓட்டிட்டிருந்தாருங்க. லாரி கவுந்து இறந்து போய்ட்டாருங்க. எனக்கு ரெண்டு புள்ளிங்க. ரெண்டு பொண்ணு. ஒண்ணுக்கு நாலு வயசு. மத்தது ரெண்டு வயசு, லாரியக் குடிச்சிட்டு ஓட்னாருன்னு மொதலாளி நட்ட ஈடெல்லாம் ஒண்ணு மில்லன்னுட்டாங்க. சரக்கு ஏத்திப் போயிட்டுத் திரும்பி வாரப்ப விபத்தாயிட்டது. பங்காளிங்க, எங்க பங்குக்கு பிரிச்சித் தந்தது ரெண்டேக்கர். மானாவாரி. எப்பனாலும் மழ பெஞ்சிச்சின்னா பயிரு வைக்கலாம். எங்கூட்டுக்காரருக்கு முதலே பயிரு வேல பழக்கமில்ல. சின்னப்பவே லாரி கிளீனராப் போயிட்டாராம்.

“எங்க மாமியாதா அவ மருமகன் கூட முன்னெப்பவோ ஏரித் தண்ணி வந்தப்ப, பயிரு வைச்சாங்களாம். எள்ளு தூவி வைப்பாங்க. கேவுரு போடுவாங்க. அதும்கூட சரியாக் காவல் இல்லன்னா யாரும் பூந்து அறுத்திட்டுப் போயிடுவாங்க. ஆம்புள உரப்பா காவல் இல்லன்னு தெரிஞ்சா ஆடுமாடக்கூட இஷ்டத்துக்கு மேயவுடுவாங்க".

“அப்படி ஒரு ஞாபகம் இது. எங்க மாமியாளும் சீக்கு வந்து செத்துப் போச்சி. நா ரெண்டு புள்ளங்களக் காப்பாத்திப் பிழைக்கணுமே? கூலி வேலைக்குப் போவே. சாணி கொண்டாந்து ஒரு மூட்டை தட்டி விப்பே. நடவு, களையெடுப்புன்னு கும்பலா போறவங்க கூடப் போவே.. தனியாப் போனாலே எப்பிடி எப்பிடியோ பேசுவாங்க. பொம்புளயாப் பொறந்தாலே கஷ்டந்தாங்க."

“பெறகு இந்தத் தான்வா திட்டம் வந்திச்சி. இந்தம்மாமாருங்க காரப் போட்டுகிட்டு வந்தாங்க".

“நா அப்ப கூளம் கொண்டாந்து எருமுட்ட தட்டிட்டிருந்தே. இவங்க வாரதப் பாத்துப் பயந்து உள்ள ஒடிக் கதவப்போட்டுகிட்டே."

“ந்தாம்மா...? ஆரு, ஆரு உள்ள கதவத் தெறங்க!”

“இங்க ஆம்புள யாரும் இல்லிங்க. எங்கூட்டுக்காரு செத்திட்டாருன்னே. அழுக வந்திச்சி. 'நாங்களும் பொம்புளதாம்மா. நீங்க பயப்பட வேணாம். வெளில வாங்க'ன்னாங்க. கதவத் தெறந்தே. எனக்கு லாரிக்கார நட்டஈடு குடுப்பாங்கற ஆச அப்பவே போயிடிச்சி. அவன் குட்சிட்டுக் கொண்டு போய் மோதிட்டா, அவனால லாரியும் நட்டமாச்சி, சரக்கும் போச்சின்னு சொல்லிட்டாங்க. இப்ப லாரிக்காரங்க, நா நட்ட ஈடு குடுக்கணுமின்னு பொம்புள ஆபீஸரை வுட்டுருப்பாங்களோன்னு பயம் புடிச்சிக்கிச்சி. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. என்னிய வுட்டுடுங்க. ரெண்டு பொம்புளப் புள்ளியா வச்சிட்டு நா எப்படியோ பிழைக்கிறேங்கன்னு அழுவற..

அவுங்க ஏங்கிட்ட “ஏம்மா பயப்புடுறீங்க. உங்களுக்கு உதவி செய்யணுமின்னுதா வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் போல் விவசாயப் பெண்களுக்கு, நிலத்தில் இறங்கி வேலை செய்யும் பெண்களுக்கு, நல்லபடியாகப் பயிர் செய்து விளைச்சல் காண உதவி பண்ணனும்னு வந்திருக்கிறோம். உங்களுக்கு இந்த ஊருதான?"

“ஆமாங்கம்மா, எங்கூட்டுக்காரருக்கோ, எனக்கோ சொந்தமா நெலமில்லீங்க. பங்காளிங்க பிரிச்சிட்டாங்க...”

"நிசமாவா?"ன்னு கேட்டாங்க.

எங்கூட்டுக்காரர் பண்ண தப்புக்காக, அந்தத் தரிசு நெலத்தயும் புடுங்கிட்டுப் போகத்தா இப்பிடிச் சூழ்ச்சி பண்றாங்கன்னு நினைச்சிட்டு, 'நீங்க போங்க இங்க நிலமும் இல்ல ஒண்ணுமில்ல’ ன்னு கதவச்சாத்திட்ட...

ஆனா அவுங்க வுடல. மறு நாளைக்கி, இந்தப் பாலாமணி அம்மாளக் கூட்டிட்டு வந்தாங்க. பாலாமணிகூட நா நடவுக்குப் போயிருக்கிற, அவுங்களுக்கு என்னியப் பத்தி நல்லாத் தெரியும். அவங்க தான்வா பயிற்சி வாங்குனதும் இப்பிடி இந்த கிராமத்துலன்னு துப்பு சொல்லியிருக்காங்க. அவங்க எல்லாம் எடுத்துச் சொன்னாங்க.

“பொம்பிளைன்னு ஏன் நம்மையே தாழ்வா நெனச்சுக்கணும்? இப்ப மத்தவங்க வயல்ல போயி, நடவு பண்ணுற, களை எடுக்கிற, அறுவடைக்கும் போறீங்க. இத்தையே நம்ம சொந்தமா இருக்கிற அறுபது சென்டிலோ, ஒரு ஏகரிலோ ஏன் செய்யக் கூடாது?"ன்னாங்க.

“அது என்னால முடியுங்களா? நா ஒரே ஆளு.”

“நீ ஒரே ஆளுதா. செய்யணும்னு நினைச்சா முடியும். நீ நினைக்கணும். உனக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு யாருமே இல்ல. அட, ஒரு உறவு கூடவா இரக்கமா இல்ல? நீங்க எல்லாத்தையும் நடக்காதுன்னுற கண்ணுல பார்க்காம, நடக்கும்னு பாருங்க. நாம்ப பொம்பளைங்க ரொம்பப் பேர் யோசிக்கறதே இல்ல. வாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. தாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. சரிதானா? யோசிச்சுப் பாருங்க... ?”

அவங்க புட்டுப்புட்டுச் சொன்ன பிறகுதான் யோசிக்கணும்னு தோணிச்சி. வூட்டுக்காரரு லாரில லோடு கொண்டு போயிட்டு வாரப்ப, பூவு, பழம், துணி, மணின்னு கொண்ட்டு வருவாங்க. ஆசையா புள்ளைங்களுக்கும் குடுப்பாரு. அவரு குடிக்கிறாரா, குடிச்சிட்டு வண்டி ஒட்டுறாரா, எங்க சாப்புடறாரு, எதுனாலும் கேட்டனா, இல்ல. ஆம்புளங்க வெளில போவாங்க. பவுரானவங்க அவங்கதா எல்லாம்னு இருந்த பெறகு ஒரேடியாப் போனதும் நம்மால ஒண்னும் ஆகாதுன்னு ஓஞ்சு போன நிலை மாறும். அவர் குடிச்சிட்டுத்தா வண்டி ஓட்டுனாரா, அவரு மேலத் தப்பான்னு கேக்கத் தோணல... எம் மேலியே எனக்கு நம்பிக்கையே இல்ல.

“இவங்க வந்து சொன்ன பிறகு யோசிச்சே.”

“எம் மாமியா, மருமகனத் துணையா, ஒரு ஆதரவா வச்சிட்டுக் கழனி வேலை செஞ்சாங்க. இப்ப நாத்தனாளுக்கு ரெண்டு மகன் இருக்கிறான். படிக்கவும் படிக்கிறா, கழனிக்கும் வாறான். நான் போயி ஏன் கேக்கக் கூடாதுன்னு தோணிச்சி.”

"மின்ன இந்த ரோசனையை யாருன்னாலும் சொன்னா ஊருல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க. நாத்துனாரே, ஆரு குடியடி கெடுக்க வாரேன்னு பேசுமோன்னு பயந்தே.”

“இப்படியெல்லாம் சொல்லிட்டு, பயிற்சி கிளாசுக்கு என் பேரை எழுதிக்கிட்டாங்க. அஞ்சு நாளாக்கிப் புள்ளங்கள அக்கம் பக்கத்துல விட்டுப் போட்டுப் போனே. அங்கதா மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புறதிலேந்து, விதையைத் தேர்வு பண்ணி, திரம் மருந்து போட்டு வச்சு நாத்தங்கால் பயிர் பண்ணுவதெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எப்படி வேப்பம் புண்ணாக்கு உரமா போடுவது... கடலப் பயிருக்கு எப்படி செய் நேர்த்தி பண்ணுவது, புழுதி உழவு பண்ணுறப்பவே பூச்சி பாத்து அழிப்பதுன்னெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க... எல்லாம் கத்திட்டு வந்த பெறகு பூமிய வச்சிட்டு நா ஏ சோத்துக்குத் திண்டாடணும்னு தோணிச்சி.

‘நாத்தனா வூடு பட்டாபிராம் பக்கத்துல... புருசன் செத்திட்டாரு. ஒரு மக கலியாணம் கட்டிருக்கு, ஒரு பய்யன் பி.ஏ. படிச்சிட்டு கழனி வேல செய்யிறா. இன்னொருத்தன் ப்ளஸ் டு படிக்கிறான்னாங்க."

“என்னப் பார்த்ததும் அவங்களே, மக ‘தான்வா' பயிற்சிக்குப் போய் வந்து கடல போட்டு நல்ல விளைச்சல் எடுத்ததைச் சொன்னாங்க. அவங்க பையன் கருவமே இல்ல. விவசாயப் படிப்புப் படிக்கப் போறேன்னிச்சி. கூட்டியாந்தேன். பூமியப் பார்த்தோம். மண் பரிசோதனை முடிச்சி பத்து வண்டி ஏரி வண்டல் அடிச்சோம். ஆதிச்சப்புரம் கூட்டுறவு வேளாண் வங்கிக்குக் கூட்டிப் போச்சி. அவங்க ரொம்ப உதவி செஞ்சாங்க. நா நெல்லுப் போடலான்னு பார்த்தேன். அந்தப் புள்ள, நெல்லுக்குத் தண்ணி சவுரியம் இல்ல. மானாவாரி கடல பயிர் பண்ணலாம்னிச்சி."

"ஜி.ஆர்.ஐ. கடலை வித்து வாங்கி வந்தம். திரம் மருந்து கலந்து பாலதின் பையில் போட்டுக் குறுக்கி வச்சிட்டம். நெல்லு போல இதுல தண்ணி வுடக்கூடாது. பூமில ஈரம் பக்குவமா இருக்கணும். உழவோட்டிட்டே வாரப்ப ஒண்ணொன்னா விதைக்கணும். பிறகு எம்.என். மிக்ஸ்கர் ஒரு கிலோவை ஒரு சட்டி மணலில் கலந்து தூவினோம். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் நடுவுல ஒரு சாண் வுடணும். அப்பப்ப மழை பெஞ்சிச்சி. ஈரம் காயாம இருந்திச்சி. பதினைஞ்சு நா கழிச்சி களையெடுத்தோம். அப்பல்லாம் அது படிக்கப் போயிட்டது. எனக்குத் தயிரியம் வந்திட்டது. ஆள வச்சிட்டுக் களையெடுத்தேன். நாப்பத்தஞ்சி நாள் ஆனதும் ஜிப்சம் ஒரு இருபது கிலோ வாங்கி, ஒவ்வொரு செடிக்கும் மண்போட்டு அணைச்சி விட்டோம். நூறு நாள்ள கடலை மண்ணுக்குள் தூர் இறங்கிச்சி. அப்ப ஒண்ணைப் புடுங்கிப் பாத்தம். கடலை புடிச்சிருந்திச்சி. ஒரே ஒரு தண்ணி மட்டும் ஏரிக்காவாயில கிடைச்சிச்சி. பிறகு பே மழைதான். எட்டு மூட்டை வேர்க்கடலை கிடைச்சிச்சி. பிறகு சொன்னாங்க. ஊடு பயிரா பயிறு உளுந்து போடலாமின்னு...

இப்ப எங்க நாத்துனா குடும்பம் எனக்கு ரொம்ப ஒட்டிப் போச்சுங்க. அந்தப் பைய, கோயமுத்துார் விவசாய காலேஜில படிக்கிறா. படிச்சாலும் ஆம்புளயோ, பொம்புளயோ நாம சேத்தில கால வச்சாத்தா, ஊரே சோத்துல கை வைக்கனும்னு புரிய வைக்கணும். அச்சப்படக் கூடாதுங்க....”

கூட்டம் மாநாடு முடிந்து திரும்புகையில் செவந்திக்கு ஏதோ ஊட்டச்சத்து ‘டானிக்’ சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. கால் காணியில்லை, ஒரு ஏகரும் அறுபது சென்ட்டும் உள்ள முழு இடத்திலும் பயிர் பண்ண அப்பன் கடன் வாங்கித் தருவார். சின்னம்மாவின் கொல்லை மேட்டில், நாமும் ஏன் பாப்பம்மா சொன்ன கடலை பயிரிடக் கூடாது? அந்த பூமி ரங்கன் பெயரில் இருக்கிறது. இப்போது கணவர் சற்றே திருந்தி வருவது போல் நினைக்கிறாள். எனவே, அவர் மனசு வைத்துக் கடன்வாங்கித்தந்தால்... அதில் கடலையும், இதில் நெல்லும் பயிரிடலாமே...? இந்தத் தடவை முதலிலிருந்து எல்லாம் பாடம் படித்தபடி செய்துவிட வேண்டும்.

இரவெல்லாம் கிளர்ச்சியாக இருக்கிறது. அதிகாலையில் அயர்ந்து தூங்கி இருக்கிறாள்.

பொழுது விடிந்து, காலை வேலைகள் முடித்து, கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். வாசலில் பேச்சுக் குரல் கேட்கிறது. அண்ணன்... அண்ணனும் அவள் புருசனும் பேசிக் கொண்டேபடி ஏறி வருகிறார்கள்.

ஓ, பெண்சாதியையும் குழந்தைகளையும் விட்டு விட்டுத் தனியாக வந்திருக்கிறானா? என்ன விசயம் இருக்கும்? முதலிலேயே சந்தேகம்தான் தோன்றுகிறது. அப்பா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். காறிக் காறிச் செம்பு நீரை வாயில் விட்டுக் கொப்புளிக்கிறார். அண்ணன் குரல் கேட்ட வெறுப்பா? அம்மா கொண்டாடிக் கொண்டாலும் அப்பா உள்ளூரச் சங்கடமடைந்திருக்கிறார் என்பதை அவள் அறிவாள். அந்தக் காறி உமியும் கொப்பளிப்பு வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.

“அப்பா, நீங்க தப்பா நெனச்சிடக் கூடாது. பேபிக்கு டாக்டர் பிரைம்ரி காம்ப்ளக்ஸ்னு சொல்லி மருந்து குடுத்திட்டு வாரோம். இங்க ஹைஜினிக்கா இல்ல. சளியும் காய்ச்சலும் வரக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. சின்னப் புள்ள, எல்லாரையும் போல, கேணித் தண்ணிய மொண்டு குடிக்கும். அத்தோட சுகந்தாவுக்கு 'மென்ஸஸ் டைம்’ வசதி இல்லாத இடத்தில இருந்து பழக்கமில்ல. அப்பா இங்க ஒரு பாம்பே டைப் கக்கூஸ் கட்டிடுங்க. அதனாலேயே இங்க வரச் சங்கடப்பட வேண்டி இருக்கு...” என்று அப்பாவிடம் எதற்கோ குழை அடிக்கிறான்.

“கட்டவேணான்னு நான் சொல்றனா? வந்து லீவு ரெண்டு மாசமும் இரு. எப்படிவூட்டக் கட்டணுமோ அப்படிச் செலவு பண்ணிக் கட்டு!”

செவந்தி பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்த கையோடு அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்க அந்த வாயிலிலேயே நிற்கிறாள்.

“செவந்தி ஏன் நிக்கிறே? நாங்க காபி ஒண்ணும் குடிக்கல. காபி கொண்டா...”

“காபிக்கு வைக்கிற...” என்று சொல்லிவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்பதிலேயே அவள் தீவிரமாக இருக்கிறாள்.

“எனக்கு ரெண்டு மாசம் இங்க எப்படி இருக்க முடியும் அப்பா? தவிர இங்க டச் வுட்டுப் போயி ரொம்ப நாளாச்சி. மாப்பிள்ளதா இருக்காரு. வூட்ட இடிச்சிச் சவுரியமா கட்டிக்க வேண்டியதுதான்?”

“ஒரு லட்சம் பணத்தை அனுப்பி வையி. மாடி போட்டு, குழா கக்குசெல்லாம் போட்டு நல்லா கட்டிடறோம். இந்த வெள்ளாமய நம்பி, வூடு கட்ட முடியாதப்பா இப்பதா செவந்தி ஏதோ போட்டு வெள்ளாம எடுத்தது ரொம்ப சிரமம். எனக்கும் வயிசாயிப் போச்சு. முடில. ஒழவு கூலி எழுபது எம்பதுங்கறா. அஞ்சேரு, ஆறேரு வச்சிப் பயிர் பண்ணி, வெள்ளாம எடுக்கறதப்பத்தி நெனக்கவே பயமா இருக்கு. அதுக்கும் ஆள் கிடைக்கல.” அப்பா பரவாயில்லையே என்று செவந்தி நினைத்துக் கொள்கிறாள்.

“இதையேதான் நானும் மாப்பிள்ளையிடம் சொல்லிக் கிட்டிருந்தேன். வெள்ளாமை பண்ணமுடியலைன்னா வித்துக் காசாக்க வேண்டியதுதான? நானே ஒரு விசயம் கேள்விப் பட்டேன். இப்ப கடலூர் புவனகிரி எல்லாம் தோண்டி எண்ணெய் இருக்குன்னு கண்டுபிடிச்சி நிலமெல்லாம். ஏதோ ஒரு வெலக்கி சர்க்கார் ஆர்ச்சிதம் பண்ணிருக்கு. ஏரிக் கரைய சுத்தி இருக்கிற சின்னச் சின்ன கிராமம், குடிசை தரிசெல்லாம் ஒரு சாடிலைட் டவுன்ஷிப்பாக்கிடறதா பிளான் இருக்கிறதா கேள்விப்பட்டேன். இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்னு வேற சொல்லிட்டாங்க. அந்த இடம் வெலைக்கு வந்தா வித்துடறது நல்லது. அம்பதாயிரம் கண்டிப்பா கிடைக்கும். வித்துட்டு வீட்ட நல்லாக் கட்டுங்க. நாங்களும் வந்து இருக்கலாம்...”

பூமி நழுவுவது போல் செவந்தி அதிர்ச்சி அடைகிறாள்.

தோலக் கடிச்சி, துருத்தியக் கடிச்சி, ஆட்டக் கடிச்சி, மாட்டக்கடிச்சி மனிசனையே பதம் பாக்குறீங்களா?

“இத பாருங்க நா அந்தப் பூமில பயிர் வைக்கப் போற! அதெல்லாம் விக்கிய முடியாது! சின்னம்மா பூமி. என் சங்கிலிய சின்னம்மாக்குக் குடுத்தேன். நான் பயிர் வைப்பேன்".

இப்படி ஒர் இடையீட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்பா மவுனமாக இருக்கிறார்.

அண்ணன்தான் அதிகாரக் குரலில் அதட்டுகிறான்.

“இதபாரு செவந்தீ உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. வீடு என் உரிமை. அந்த நிலமும் உன் புருசன் பேரில இருக்கு. அதுனால கம்முனு இரு".

செவந்திக்கு ஒர் அரக்கனைக் கட்டிப் போட்டாற் போல் இருக்கிறது.

“என்ன அநியாயம்? சின்னம்மாவுக்கு மூவாயிரம் தேறாதுன்னு வித்திங்க. எழுதி வாங்கிட்டீங்க. இப்ப எனக்கு ஒண்ணுமே உரிமையில்லைன்னு சொல்றீங்க? ஏங்க, கேட்டுட்டுச் சும்மா உக்காந்திருக்கிறீங்க?”

குரல் கக்கலும் கரைசலுமாகப் பீரி வருகிறது.

“இத பாரு செவந்தி, நீ எதுக்கு முந்திரிக் கொட்டை போலத் தலையிடுற? எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். நீ பேசாம இரு.”

“அந்தப் பூமில என்னத்த வெளயும்? ஏரில தண்ணி இல்லை. ஒரு பக்கம் அரசியல்வாதிகளின் ஆளுங்க குட்ச போட்டுட்டு உட்கார்ந்திருக்காங்க. நம்ம நிலத்திலும் ஒண்ணும் பண்ண முடியாதபடி எவங்கிட்டன்னாலும் பத்துப் பத்துன்னு பணம் வாங்கிட்டு முப்பது பேரைக் கொண்டாந்து வைப்பானுவ. இப்படித்தான் மட்ராஸ் பூர நடக்குது. பேசாம மில்லுகாரர் வாங்கிக்கிறார்னா குடுத்திட்டு ரொக்கம் வாங்க. வூட்ட நல்லபடியாக் கட்டலாம். இல்லாட்டி என் கடைய ஆட்டோ ஷாப்பாக்க வசதியாக இருக்கும்...”

“அதெல்லாமில்ல. எனக்கு லோன் வாங்கித் தருவீங்க. நா மணிலாக் கொட்டைப் பயிர் வைப்பேன்...”

“இத பாரு செவந்தி, நீ வீண் கனவு காணாத, லோன்லாம் எடுக்க நா வரமாட்டே...”

‘நான் பயிர் பண்ணுவே பாருங்க!’ மனசுக்குள் சபதம் செய்து கொள்கிறாள் செவந்தி.