கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 15
“அப்பா, நீங்க வந்து கைவச்சதே பெரிய சந்தோசம். பாருங்க வேத்து வுடுது. போயி உக்காந்துக்குங்க. வேல்ச்சாமி, ஏரப் புடியப்பா...” என்று அப்பா கையை விடுவித்துக் கரைக்குக் கூட்டிச் செல்கிறாள் செவந்தி. புடவைத் தலைப்பால் அவர் நெற்றியைத் துடைத்து விசிறுகிறாள். செம்பில் இருந்து கஞ்சித் தண்ணீரை எடுத்துக் கொடுக்கிறாள்.
கடலை விதைப்பு நடக்கிறது. அப்பா தானும் ஒர் ஏர்பூட்டி உழுவேன் என்று பிடிவாதமாக வந்தது அவளுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், முழு பூமியிலும் விதைப்பு. கன்னியப்பன் ஒர் ஏர்; வேல்ச்சாமி ஓர் ஏர். பூமி உள்ளே ஈரமாக, விதைக்கப் பதமாக இருக்கிறது. முன்பே கன்னியப்பன் ஒருவனே நான்கைந்து நாட்களாய் விதை நிலத்தைப் பதமாக்கி இருக்கிறான். உழுமுனை நிலத்தில் பதிந்து செல்கையில் திரம் மருந்து போட்டுக் குலுக்கி வைத்திருந்த கடலை வித்துக்களை ஒன்றொன்றாகச் செவந்தி விடுகிறாள். பின்னால் அடுத்த ஏர் அந்தக் கடலை மீதும் மண்ணைத் தள்ளி மூடுகிறது. எண்ணி ஐந்து வரிசைக்கு ஒன்றாக, ரைஸோபியம் போட்டு ஊட்டமேற்றிய பயிறு வித்தையும் விதைக்கிறாள்.
முழுதும் விதைத்து முடிய மாலை வரையாகிறது. இடையில் பசியாற ஒர் அரை மணி நேரம் தான் ஒதுக்கல்.
அப்பன் நிறைந்த மனசுடன் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பணத்தை எண்ணிப் பையில் வைத்து அவரிடம் தான் கொடுத்திருக்கிறாள்.
நட்டு முடிந்ததும் தயாராக வைத்திருந்த பாண்டு சட்டியில் மணலையும் எம்.என். மிக்ஸ்சரையும் கலந்து நெடுகவும் தூவுகிறாள்.
கரையேறி மாடுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள்.
வேல்ச்சாமி ஏர் மாடு இரண்டும் அவனே கொண்டு வந்தான்.
அவனிடம் எண்பது ரூபாய் கூலியை அப்பா எண்ணிக் கொடுக்கிறார்.
“கன்னிப்பா... இந்தா!" கத்தையாக நோட்டுக்களைக் கொடுக்கிறார்.
“இருக்கட்டும் மாமா, வூட்டுல மாட்டை ஏரைக் கொண்டு கட்டிப்போட்டு தண்ணி ஊத்திட்டு வந்து வாங்கிக்கறேன்!” ஒரு பெரிய மலையேறி நிற்பதுபோல் அழகாக உழுமுனை பதிந்து நடவு முடித்த நிலத்தைச் செவந்தி பார்க்கிறாள்.
இதற்கு முன் மணிலாப் பயிர் அவள் செய்ததில்லை. நெல் நாற்று நடவு, களை பறிப்பு, அண்டை வெட்டுதல் செய்திருக்கிறாள். இப்படிப் புழுதி உழவு செய்து ஈரமாக மட்டும் வைத்து நடும் சூட்சுமம் இப்போதுதான் கண்டிருக்கிறாள். கொல்லை மூட்டில் சின்னம்மா கடலைப் பயிர் செய்து வீட்டுக்கு வந்து எடுத்து வந்ததும், உருண்டை பிடித்ததும் வேக வைத்துத் தின்றதும் நினைவுகள்தாம்.
இப்போது இங்கே தண்ணிர் காணும் பூமியில் வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறாள்... ஒன்னரை ஏக்கருக்கு மேல்...
கர்ப்பூரம் கொளுத்திக் கும்பிட்டு விட்டு இருட்டுக் கவ்வு முன் வீடு திரும்புகிறாள்.
மாடுகளைக் கால்வாயில் கழுவிவிட்டுத் தானும் சுத்தமானவளாக ஏர் சுமந்தபடி பின்னே வரும் கன்னியப்பனைப் பார்க்கிறாள்.
அப்பா இவனுக்கு அறுபது ரூபாய்தான் கொடுப்பாரோ? ஏனெனில் ஏரும் மாடும் இந்த வீட்டுக்குரியவைதானே?
“இரு... வாறேன்...”
அப்பன் முற்றத்துக் குறட்டில் புதிய ரேடியோவைப் பார்த்து மகிழ்கிறார். குழந்தைகளும், அவர்கள் தந்தையும் ஒட்டல் பகோடாவும் பஜ்ஜியும் தின்று கொண்டிருக்கிறார்கள். சினிமாப்பாட்டு கேசட்டில் ஒடிக் கொண்டிருக்கிறது.
“அப்பா... கன்னிப்பனுக்கு ரூபா கொடுங்க..”
அப்பா தயாராக வேட்டி மடிப்பில் வைத்திருக்கிறார். அதே கற்றையைக் கொடுக்கிறார்.
செவந்தி எண்ணுகிறாள். அறுபது ரூபாய்... “அப்பா வேல்ச்சாமிக்கு எட்டுக் குடுதீங்க. இன்னொரு இருபது குடுங்க.”
அப்பன் நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு பதில் சொல்லாமல் உள்ளே எழுந்து செல்கிறார். பெட்டியைத் திறந்து இன்னும் இருபது ரூபாயைக் கொண்டு வருகிறார்.
பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு வாய் துடிதுடிப்பதைச் செவந்தி ரசிக்கிறாள்.
கன்னியப்பன் முற்றத்தில் நின்று ‘அஞ்சலி ... அஞ்சலி’ பாட்டை மகிழ்ந்து ரசிக்கிறான்.
“அஞ்சலி சினிமாவுல வருது...”
"நீ அந்த சினிமா பாத்தியா?” என்று சரோ கேட்கிறாள்.
"இல்ல. அது காஞ்சிவரம் கொட்டாயில ஒடிச்சி....”
“இதபாரு கன்னிப்பா, பேசாம ஒரு கலர் டி.வி. டெக்கு வாங்கி வச்சிக்க. படம் ஒரு நாளக்கி மூணு வாடகைக்கு எடுக்கலாம். காஞ்சிவரத்துக்குப் போகவேணாம். வேலூருக்குப் போக வேணாம். வூட்டிலேந்து படுத்திட்டே பார்க்கலாம்..”
கன்னியப்பன் வெள்ளையாகச் சிரிக்கிறான். “நீ வாங்கி வையி, சரோ நான் நெதியும் பாக்கறேன்.”
பாட்டிக்குக் கொள்ளாமல் கோபம் வருகிறது.
“த... வேல முடிஞ்சிச்சா, கூலிய அங்கேயே வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே? உள்ளாற வந்து, என்ன சிரிப்பு, பேச்சு? ஏ. சரோ, உள்ள உன் ரூம்புக்குப் போ கூலிக்காரங்கிட்ட என்னவெ கண்டப் பேச்சு?”
கன்னியப்பன் முகம் ஊசி குத்தினாற் போல் சுருங்கி விடுகிறது. அவன் மேற்கொண்டு இருபது ரூபாயை வாங்கிக் கொள்ளாமலே போகிறான். கையில் அந்தப் பணத்துடன் "கன்னீப்பா... கன்னீப்பா..” என்று ஒடுகிறாள். இல்லை. அவன் பரவி வரும் இருளில் மறைந்து போகிறான்.
இவள் கோபம், சரோவின் மீது திரும்புகிறது. கோபம் புருசனின் மீதுதான். இப்போது, ஆயிரத்தைந்நூறு கொடுத்து இது வாங்க வேண்டியது அவசியமா? பயிர்வைக்க அவள் பிறர் கையை எதிர்ப்பார்க்கிறாள்.
“பரிட்சைக்குப் படிக்க இது அவசியமில்ல? நா இங்க ஒரு வா கஞ்சி குடிக்க கணக்குப் பாத்துக்கிட்டு லோலுப்படுற. நெதியும் ஒட்டல் சாமான்... பாட்டு.. சமீன்தார் வூடு கணக்கா... இது இப்பத் தேவையா? பூமில போட்டா சோறு குடுக்கும். இந்தப் பாட்டக் கேட்டுப் பரிட்சை எழுதி, பாஸ் பண்ணி பொம்புளப் புள்ள சம்பாதிச்சிக் குடுக்கப் போவுது! நாளெல்லாம் அந்தப்புள்ள ஒழச்சிருக்கு. ஆனா இருபது ரூபா கணக்கு பாக்குற...” கண்ணில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு ஆற்றாமையை விழுங்குகிறாள்.
“நீதா இப்ப கச்சி கட்டுற செவந்தி. ஏ நீயுந்தா கேளேன்? இது ஸோனி... ஆயிரத்து நூறுக்கு வந்திச்சி. ரெண்டு மாசமாத் தாரேன்னு வாங்கிட்டு வந்தே. மத்தவங்க சந்தோசப்படுறதே பாத்தா உனக்கு ஏம் பொறுக்கல?”
அவள் பேசவில்லை. பட்டாளத்துக்காரர் வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்லி இருக்கிறார். அவள் செய்து காட்ட வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலையில், வீடு மெழுகுகிறாள். நிலைப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும்போது, கணைப்பு குரல் கேட்கிறது.
“நீங்க உக்காருங்கையா, செவந்திம்மா வேர்க்கடல போட்டிருக்காங்க. பாத்தேன். நாமும் பயிர் பண்ணணும்னுதா வந்திருக்கிற. எனக்குப் பழக்கம் இல்ல. பட்டாளத்திலேந்து வந்த பெறகு வடக்க ஆஸ்பத்தரி ஒண்ணுல செக்யூரிட்டியா வேல பாத்தேன். சம்சாரம் சீக்காளி. ஒரு மகளக் கட்டிக் குடுத்து அது பங்களூரில் இருக்கு. சம்சாரம் போய்ச் சேர்ந்திச்சி. ஊரோடு வருவம்னு வந்திட்ட...” அவள் கை வேலையை விட்டு விட்டு மனம் துள்ள வாயிலுக்கு வருகிறாள்.
“வாங்கையா. வணக்கம். வாங்கையா, உள்ளாற வாங்க திண்ணையில் உக்காந்துட்டீங்க...” என்று அகமும் முகமும் பூப்பூவாய் சொரிய வரவேற்கிறாள்.
"ம்... இருக்கட்டும்மா. இதுதா சவுரியமா இருக்கு... இவங்க ஊக்கமாப் பாடு படுறதப் பாக்கவே சந்தோசமா இருக்கையா... நான் படையில் இருந்தவன். எங்கோ பாலைவனப் பிரதேசத்தில் உள் நாட்டுச் சண்டைகளைச் சமாளித்து நிறுத்தும் அமைதிப் படைக்குப் போனவன். சண்டையெல்லாம் ஏன் வருது? சாப்பாடு, தண்ணி, காத்து, மானம் மறைக்கத்துணி, இடம் இதெல்லாம் எல்லோருக்கும் சரியாக இல்ல. ஒருத்தன மத்தவன் வஞ்சிக்கிறான். சுரண்டுறான். சனங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையில்லை. பொம்பளங்க, கர்ப்பிணிங்க, பச்சபுள்ளங்களுக்குக் குடுக்கப்பட்ட தருமப் பால் ரொட்டியக் கொள்ளயடிச்சு விக்கிற மகா பாவம் பாத்தேன்... மனசு தவிச்சி என்ன புண்ணியம்? ஒரே மகன். தங்கச்சி மகளுக்குக் கட்டிக் கொடுத்தேன். நமக்குத்தா ரொம்ப படிக்க வசதியில்ல. பையன் நல்லா பி.ஏ., எம்.ஏ.,ன்னு படிக்கணும்னு ஆசப்பட்டேன். அவன் படிக்கிறத வுட, அரசியல் அக்கப் போர், சினிமா நடிகர் விசிறிகள் சங்கம்னு தலையக் குடுத்திட்டு... பாவிப் பய, தலைவருக்காக தீக்குளிச்சிச் செத்தான். கலியாணம் கட்டி வேற வச்சேன். அந்தப் பொண்ணு பாவத்தைக் கொட்டிக்கிட்டான்..” தலையைக் குனிந்து கொள்கிறார்.
இவளுக்கு நெஞ்சு சில்லிட்டாற் போல் இருக்கிறது.
சிறிது நேரம் ஒலியே சிலும்பவில்லை.
லச்சுமி... பச்சை பால் மணம் மாறாத முகம். அதற்கு ஒரு குழந்தை. அதற்குள்...
“அரசியல் தலைவருக்காக, இவனுவ ஏ நெருப்புக் குளிக்கிறானுவ... பயித்தியம்தான் புடிச்சிருச்சி. அவனுவ ஒட்டு வாங்க என்னமோ புரட்டு பித்தலாட்டம் பேசுறானுவ. இந்த இளவட்டம் எல்லாம் அந்த மயக்குல போயி விழுந்துடுதுங்க. அதும் இந்த சினிமாதா ஊரக் கெடுக்குதுங்க. ஆம்புள், பொம்புள எல்லாம் போயி, வயித்துக்குச் சோறு இருக்கோ இல்லியோ போயி வுழுவுதுங்க...”
“எனக்கு இந்தப் பயிர்த் தொழில வுட மேன்மையானது ஒண்ணில்லன்னு நிச்சயமாருக்கு. எங்கப்பாரு காலத்திலோ, பாட்டன் காலத்திலோ, இந்தப் பூமி சர்க்கார் குடுத்திருந்திச்சாம். ஆனா, மேச்சாதிக்காரங்க, குடிமகன் வெள்ளாம பண்ணக் கூடாதுன்னு தடுத்தாங்களாம். நான் அந்தக் காலத்துல, குடியாத்தத்துல ஸ்கூல் படிச்சேன். பட்டாளத்துக்குப் போன. இந்தப் பூமிய எழுதிவுட்டு, மீட்டுக்கிட்டேன். எக்ஸ் சர்வீஸ் மேன்னு ஒரு பக்கம்... நாலு ஏகரா... சம்சாரம் சீக்குக்காரி. அதுக்காக மங்களுரில் இருந்திட்டிருந்தேன். அவ போன பெறகு, வந்திட்டே. செவந்தியம்மாளப் பாத்ததும், இவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இவங்களுக்கு மட்டுமில்ல, சபிக்கப்பட்டதா நெனச்சிட்டிருக்கமே, பொம்புளப் புள்ளங்களுக்கே நல்ல காலம்னு தோணிச்சி...”
மனம் குதிபோட காபித் துளை ஏனத்தில் போட்டுப் பொங்கு நீரை ஊற்றுகிறாள். இதற்குள் வெளியே பல்குச்சியுடன் சென்றிருந்த புருசன் கிணற்றடியில் முகம் கழுவுவது புரிகிறது. பளபளவென்று தேய்த்த தவலைச் செம்பில் காபியை ஊற்றுகிறாள். இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள்.
“குடு. நான் கொண்டுட்டுப் போறே...”
முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். சீப்பால் முடியைத் தள்ளிக் கொள்கிறான். தேங்காய்ப் பூத்துவாலையைப் போட்டுக் கொண்டு காபியுடன் செல்கிறான்.
உள்ளுக்குள் இருக்கும் சிறுமை உணர்வை, மரியாதைப்பட்டவர் முன்னிலையில் காட்டமாட்டான். சாந்தி புருசன் முன் மிக மரியாதையாக நடப்பான். ஆனால் அவர்கள் அகன்ற பின் குத்தலாக ஏதேனும் மொழிவான். அவனுடைய சிறுமை உணர்வுகள் ஆழத்தில் பதிந்தவை. அவை அவளைக் கண்டதும் ஏதோ ஒர் உருவில் வெடிக்கும். "நீங்கல்லாம் சாப்பிடுங்க. நான் காபியே குடிக்கிறதில்ல. என் தங்கச்சி குடிக்கிது. தங்கச்சிப் புள்ளயும் குடிக்கிது. இல்லாட்டி தல நோவுதுங்க. வடக்கேல்லாம் போறப்ப, தேத்தண்ணி குடிப்பம். மனசு இளகல, மறக்க பீர் குடிப்பம். இங்க எண்ணத்துக்கு? மனசு தெளிஞ்சி உறுதியாயிடிச்சி. பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கிற உலகத்துல வாழணும் பாருங்க” __
"கேணி எடுக்கறப்ப, சில்லும் களியும் கரம்பையும் எல்லாம் வந்திச்சி. பாறை இல்ல. தண்ணி அந்தச்சில்லிங்களா வர்றப்ப குபுகுபுன்னு வந்திச்சி. தெளுவா. இப்ப குழப்பம் இல்ல. காலம எந்திரிச்சி நீராகாரம்தா குடிப்ப ஆச்சி. எனக்கு அறுபதாகப் போவுது. காலம கழனி வேல, அஞ்சாறு கிலோ மீட்டர் நடை, எல்லாம் நல்லாருக்கு...”
“இருக்கட்டும் நீங்க ஒரு டம்ளர் குடியுங்க. நம்மூட்ல கறந்த பாலு...”
அவர் எடுத்துக் கொள்கிறார்.
புருசன் முன்பு பணம் தருவது பற்றிப் பேசப்போகிறாரோ என்று செவுந்தி அஞ்சுகிறாள்.
ஆனால் அது நடக்கவில்லை.
அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு, “ஐயா, கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க உட்கார்ந்து பேசிட்டிருங்க...” என்று நடையில் உள்ள சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்புகிறான்.
அவன் சென்ற பிறகு அவர் செவந்தியைக் கூப்பிடுகிறார்.
ஒரு கவரை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டுகிறார்.
“செவந்திம்மா, இதுல ஆயிரத்தைந்நூறு இருக்கு. நீங்க எவ்வளவு பயிர் வைக்க முடியுமோ, அவ்வளவுக்கு வையுங்க.. பிடியுங்க..”
அவளுக்குக் கண்கள் நிறைகின்றன.
“ஐயா, இதுக்கு ஒரு பத்திரம் எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீங்க நம்ம ராமசாமிக் கிட்டச் சொல்லி ஒரு பத்திரம் எழுதிட்டு வாங்க...”
“எதுக்கம்மா? எனக்கு உம் பேரில நம்பிக்கை இருக்கு. நீ என்னை நம்பு. நீ பயிர் வைக்கணும். நல்லா வரணும். நாமெல்லாரும் சிநேகமா இருக்கணும். கஷ்ட நஷ்டம் பகிர்ந்துக்கணும்... இதுல பணம் குறுக்க வரக் கூடாது. அது ஒரு கருவி. ஒரு சாதனம். அது வாழ்க்கை இல்லம்மா... நா வரட்டுமா?”
அவர் மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறார்.
அப்பனும் எழுந்திருக்கிறார்.
செவந்தி கையெடுத்துக் கும்பிடுகிறாள்.
குரலே எழும்பவில்லை.