கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 3

3


செவந்தி வீடு மெழுகித் துடைத்து, வாயிற்படி நிலைகளில் மஞ்சட் குங்குமம் வைக்கிறாள். கோலம் போடுகிறாள். கூடத்துச் சுவரில் மஞ்சளால் வட்டமிட்டு, புள்ளி வைக்கிறாள். நடவு நட்டுப் பதினேழு நாட்களாகி விட்டன. பதினைந்தாம் நாள் இரவே வேப்பம் புண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைத்து மறுநாள் பொட்டாஷூம் சேர்த்து உரமிட்டிருக்கிறாள். பயிர் அழகாக வளர்ந்து தனியாகத் தெரிகிறது.

மனசுக்கு நிறைவாக இருக்கிறது. இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. கோயில் சாமி ஊருக்கு வந்திருக்கிறாராம்.

இந்த ஊர் கரும்பாயி அம்மன் கோயில் தானாக வளர்ந்த ஒரு கரும்பு சோலையில் இருந்ததாம். இப்போது கரும்பு இல்லை. ஏன், அவளுக்கு நினைவு தெரிந்தே அங்கு கரும்பு பயிரிட்டிருக்கவில்லை. சுற்றிலும் முள் மரங்கள் இருந்தன. சடாமுடியுடன் இந்தச் சாமி அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் அரளியும், நந்தியாவட்டையும் பயிர் பண்ணி நந்தவனம் அமைத்தார். கிணறும் அப்போது ராஜம் கிருஷ்ணன் 29

தான். கிணற்று நீர் கரும்பாக இனிக்கும். அவர் அங்கேயே பல நாட்கள் யோகத்தில் அமர்ந்திருப்பார். என்றேனும் ஊருக்குள் வந்து பிச்சை கேட்பார். உள்ளே அழைத்தால் பெரும்பாலும் வரமாட்டார். நோய் நொடிக்குப் பச்சிலை மருந்து தருவார். பச்சிலைகள் அவருக்குத் தெரியும். ஏதேதோ செடிகள் அந்த நந்தவனத்தில் வளர்ந்திருந்தன. மக்கள் குறை கேட்பார். ஆறுதல் சொல்வார்.

அவர் இருக்கிறார் என்றால் கோயில் வளைவில் மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். பாம்புக் கடி, தேள் கடி என்றால் வேறு ஊர்களில் இருந்தும் கூட இரவோ, பகலோ, சிகிச்சைக்கு ஆட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால், அவர் காசைக் கையால் தொட்டதில்லை. அதிகம் பேசவும் மாட்டார். அவர் ஊரில் இருக்கிறார் என்றால் ஊருக்கே பொலிவு இருப்பது போல் நம்பிக்கை இருந்தது. ரங்கனுக்கு இந்தக் கோயில் சாமியிடம் மிகுந்த ஈடுபாடு. அவர் அப்போது ஊரில் இருக்கக் கூடாதா என்று நினைப்பான். அந்த ஈடுபாட்டினால் அவன் கவிச்சி, இறைச்சி எதுவும் தொடமாட்டான். கள், சாராயம் எந்தப் பழக்கமும் கிடையாது. அவர் திடீரென்று ஊரை விட்டுப் போய்விடுவார். திடும்மென்று ஒரு நாள் வந்திருப்பார். அவர் யோகசாதனையினாலேயே அப்படி மறைந்து போகிறார். பிறகு வருகிறார் என்று ரங்கன் சொல்வான். அந்தச் சாமி, ஊரை விட்டுப் போய் வெகு நாட்களாகிவிட்டன. சரவணன் ஐந்து வயசாகவும், சரோ எட்டு வயசாகவும் இருந்த போது அவர் வந்திருந்தார். ஏறக்குறைய பத்து வருசம் இருக்கும். அவ்வளவு இடைவெளி இதற்கு முன் இருந்ததில்லை. அவர் இமயமலையில் சமாதி ஆகிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். அம்மா ஏதேனும் ஒன்றென்றால் அவரிடம் சென்று திருநீறு வாங்கிக் கொள்வாள்.

சின்னம்மாள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர், ஒரு நாள் அம்மாசாமியிடம் திருநீறு வாங்கச்சென்றாள். அவர் அவளை உறுத்துப் பார்த்தார். திருநீறு கொடுக்கவில்லை.

“இந்தச் சாமி பாக்கற பார்வை சரியில்லை. ஏன் திருநீறு குடுக்கல?” என்று வீட்டுக்கு வந்து பொருமினாள். அப்பா மெதுவாகச் சொன்னார். “நீ அபாண்டமா ராசாத்திய அடிச்சி வெரட்டிட்டே... எந்த சாமியும் மன்னிக்காது.”

“ஆமா, மன்னிக்காது! நீரு இத்தச் சொல்றீரு! அவ ரோக்கியமானவளா இருந்தா, அவள ஏன் வெரட்டணும்? சோத்துல பங்கு கொடுக்கலாம். எங்குடியில் பங்கு கொடுக்க மாட்டேன்".

“செங்கோலு அநாவசியமாப் பேசாத நாக்குப்புழுக்கும்!” என்று அப்பன் கத்துவார்.

“பாவி இன்னோவோ செய்திட்டுப் போயிட்டா...” என்று கையை நெறிப்பாள். புருசனுக்கு இளைப்போ இருமலோ வந்தால், உடனே யாரேனும் மந்திர தந்திரக்காரனிடம் போக வேண்டும் என்றுதான் அவள் நினைப்பாள். அம்சு மாமியார், இவளுக்கு எப்போதும் உடன்பாடானவள். இரண்டு பேருமாக, மந்திரக்காரர்களைத் தேடிப் போவதுமுண்டு. நூறு இரு நூறு செலவழித்துக் கழிப்பும் செய்திருக்கிறாள். அந்தப் பணத்துக்கு வீட்டில் சண்டை வரும்.

உறவுகள் விடுவதுமில்லை. இழைவதுமில்லை. இது இந்த வீட்டுக்குள், தெருவுக்குள் முண்டி முரண்டி சேர்ந்து இழையும். ஆனால் சின்னம்மாளைப் பொறுத்த வரையிலும் இந்த மண் அவளுக்குக் கசந்து விட்டது. உறவு அறுந்து போன மாதிரியே இருக்கிறது. அறுத்து விட்டார்கள். குற்றவாளி யார்?

"சாமி வந்திருக்கிறார். வீட்டுக்குக் கூட்டி வாரேன். வருவாரு...” என்று கூறிவிட்டு ரங்கன் சென்றிருக்கிறான்.

சாமி அப்படிக் கூப்பிட்டு வருபவர் இல்லை...

என்றாலும் தலைமுழுகி, சோறாக்கி, ஒரு காய் குழம்பு, பொரியல் செய்திருக்கிறாள். அரிசியும் வெல்லமும் பாலும் சேர்த்துப் பாயாசம் செய்திருக்கிறாள். பழம், வெற்றிலை, பூ, தேங்காய் எல்லாம் தயார்.

முற்றத்தில் இறங்கி வெயில் சுவருக்குப் போயாயிற்று.

இந்த சாமி ஒரு டாக்சியில் வந்து இறங்குகிறார்.

“வாங்க... வாங்க...” இவரா சாமி நம்ம கோயிலுக்கா வந்திருக்கிறார்.

கருகருவென்று தாடி இழைகிறது. மினுமினுக்கும் பட்டுச் சட்டையில் ருத்திராட்சங்கள், துளசி மணிமாலைகள்.. கையில் பெரிய ரிஸ்ட் வாட்ச்... கருப்புத்தான். மூக்குக் கண்ணாடி போட்டிருக்கிறார்.

“தாயே.. ஜகதாம்பா!” என்று சொல்லிக் கொண்டு குனிந்து வருகிறார்.

பலகையில் உட்காருகிறார். அவர் மட்டுமே தான் வந்திருக்கிறார். இவள் புருசன், மாட்டாசுபத்திரி கம்பவுண்டரின் மச்சான் ஒரு பையன், சிவலிங்கம், வேலு...

“சாமி”.. என்று பணிவுடன் பலகையைப் போட்டு உபசரிக்கிறான். -

“பூசைக்கு எல்லாம் வச்சிருக்கிறல்ல.. இன்னைக்கி காலலேர்ந்து மூணு எடத்துல பூசை. நா நம்ம வீட்டுக்கு வந்தாகணும்னு கூட்டியாந்தேன்..” என்று செவந்தியிடம் ஒரமாக வந்து கணவன் தெரிவிக்கிறான். அவளோ, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, “நா, நம்ம கோயில் சாமின்னு நினைச்சே. இவரு வேற யாரோ போலல்லே இருக்கு” என்று தன் ஒவ்வாமையைக் கோடி காட்டுகிறாள்.

“அவுரு ஜலசமாதியாயிட்டாராம். இமாலயக் குகையில் இவரு சிஷ்யரா இருந்தாராம். இவரும் ரொம்பப் பேசுறதில்ல. அவுரு சொல்லித்தா நம்ம கோயிலுக்கே வரணும்னு வந்திருக்காரு...”

அவள் பேசவில்லை.

பலகையில் உட்கார்ந்து மஞ்சளைப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறார். அப்பனை எதிரே உட்கார்த்தி வைக்கிறார். திருநூறு தடவுகிறார்.

“இவருக்கு.. மனசில ஒரு கறுப்பு, கவலை உறுத்துது. இது உடம்பு சீக்கில்ல. என்ன மருந்து சாப்பிட்டாலும் போகாது. அது சிரமப்படுத்திட்டே இருக்கும்...”

கொல்லென்று அமைதி படிகிறது.

அப்பாவின் இழுப்பு ஒலி மட்டுமே துருப்பிடித்த கதவுக்கீல் மாதிரி, இருட்டில் ஒலிக்கும் சில்வண்டு போல் வலிமையாகக் கேட்கிறது.

“சாமி, அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு சொல்லுங்க. எதுன்னாலும் செய்யலாம்” என்று அம்மா முன்வந்து கும்பிடுகிறாள்.

அப்பனுக்குப் பொறுக்கவில்லை.

“சாமி, என் மச்சினிச்சிதா. இவப்ப, என் மாமனுக்குப் புள்ளக் கெடயாது. ரெண்டு பொம்புளப் புள்ள. அதும் சின்னதிலியே பெத்தவ போயி, ரெண்டையும் மறுகலியாணம் கட்டாம வளர்த்தாரு. அவ தோசம், கடன் ஆறுமாசத்துல புருசன் போயிட்டா. பெறகு அவ இங்கிருக்கக் கூடாதுன்னு ஒரு கலமசம் வந்துட்டது. உடம் பெறந்தவளே விசமாயி வெரட்டிட்டா. இருவது வருசமாயிடிச்சி. இப்ப கொஞ்ச காலமா எதும் சரியில்ல. பெரிய பைய... அவனுக்கு முத மூணு புள்ள தங்கல. அவனும் எங்கள வுட்டுப்போயிட்டா. நிலம் நீரு சுகமில்ல. ஒண்னும் விருத்திக்கு வர இல்ல. போன வருசம் திடீர்னு ஒழவு மாடு சீக்கு வந்து செத்துப் போச்சி... இவளுக்கும் எப்பவும் சீக்குதா...”

சாமி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தாடியை உருவுகிறார்.

“உங்க மனசில் குற்றம் இருக்குதோ இல்லையோ, குற்றம் பண்ண உணர்வு இருக்குது. அதுதான் உங்களை சிரமப்படுத்துது..” என்று சொல்லி விட்டு எல்லோரையும் பார்க்கிறார்.

“அந்தப் பொம்புள ஏதேனும் வச்சிருக்கிறாளா, சாமி?” என்று அம்மா கேட்கிறாள்.“ம்..ம்..” என்று தாடியை உருவிக் கொள்ளும் சாமி தலை நிமிராமல் யோசிக்கிறார்.

“அத்த எடுக்க முடியாதா சாமி ராத்திரி முழுக்க இப்படி சாயங்காலமானா ரொம்ப சாஸ்தியாவுது. ஆசுபத்திரி டாக்டர்ட்ட மாத்திரை வாங்கிக் குடுக்கிறோம். சம்சாரி வூடு. இத்த எப்படீன்னாலும் எடுத்திடுங்க சாமி...”

“இதுக்கு ஒரு தாயத்து மந்திரிச்சித் தாரேன்... ஒரு நூத்தம்பது ஆகும். அதைக் கையிலோ கழுத்திலேயோ கோத்துக் கட்டிக்குங்க. வீரியமில்லாம போயிடும்.”

சாமி வந்திருக்கிறார் என்ற செய்தியில், அந்த வீட்டில் தெருவே கூடி விட்டது.

நீலவேனியின் புருசன், “சாமி, புதுசா தொழில் செய்யிறது பத்திச் சொல்லணும்...” என்று ஐம்பது ரூபாய் நோட்டை வைத்துவிட்டுக் கேட்கிறான்.

“தாராளமாகச் செய்யலாம். முயற்சி செய், முன்னுக்கு வருவாய்...”

“சாமி முன்னே துணி- எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணி நஷ்டமாயிட்டது. இப்பவும் அதுபோல் செய்ய முதல் தேறல...”

சாமி சிரிக்கிறார். “முயற்சி செய்! முதல் வரும்...”

கன்னியப்பனின் ஆயாவும் கூட வருகிறார்.

“சாமி கன்னியப்ப கலியாணம் கட்டுன்னா வாணாங்கிறான். ஒரே பேரப் பய. அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சி, அது வயித்தில ஒரு குஞ்சப் பாத்துட்டுக் கண்ண மூடனும்..”

“ஆகும். ஆகும். அவனுக்கு நல்ல இடத்தில் பெண் வரும்...”

பாட்டி பதினைந்து ரூபாய் காணிக்கை வைக்கிறாள். காலனியில் இருந்து சாந்தியும், புருசனும் கூட எட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சாமி சாப்பிடவில்லை.

“என்னைச் சுற்றி ஏழைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஆக்கி வைத்தது வீணாக வேண்டாம் தாயே... இந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொடுங்கள்..”

கையோடு கொண்டு வந்த தூக்குகளில் சோறு, குழம்பு, எல்லாம் போட்டுக் கொண்டு போகிறார்.

ரங்கனும், சாமியுடன் வண்டியில் ஏறிக் கொண்டு போகிறான்.

சரோவும், சரவணனும் பள்ளிக் கூடத்தில் இருந்து வந்து விட்டார்கள்.

“ஹை! பூசையாம்மா! வடை பாயசமா போடும்மா... பசிக்கிது.”

“வா சாந்தி, உங்கூட்டுக்காரரா? வாங்க உக்காருங்க! சுந்தரி, இவுங்களுக்குச் சோறு வையி...” என்று அனுப்புகிறாள். சாந்தியும், புருசனும் வாசல் திண்ணையில் உட்காருகிறார்கள்.

“நீங்க இந்தச்சாமியெல்லாம் நம்புவீங்களாக்கா?”

“அதென்னமோ. எங்கம்மா அப்பாக்கெல்லாம் இதுல நம்பிக்கை இருக்கு. எங்க வீட்டுக்காரர் கோயிலுக்குப் போவாங்க. இத, காஞ்சிபுரம் புரட்டாசி சனிக்கிழமைன்னாப் போவாங்க. ஆடிக் கிருத்திகை திருத்தணி போயிடுவாங்க. மச்சமாமிசம் ஏதும் ஊட்ல சமைக்கிறதில்ல. எங்க ஓப்படியா சுந்தரி இல்ல, அவ செய்வா. கவிச்சி கறி எதுனாலும் கொண்டிட்டு வருவா. அதும் எம் பொண்ணு சரோசா தொடாது...”

“அதுக்குச் சொல்லல. நாம சாமி கும்பிடணும். ஆனா, இப்படி தாடி வச்சிட்டுக் காருல வந்து அம்பது நூறுன்னு சனங்க மூடநம்பிக்கைய வளர்க்கிறவங்ககிட்ட சாக்கிரதையா இருக்கணும்க்கா. ஒருத்தர், எங்க நாத்தனார் வூட்டுப் பக்கம் இப்படித்தான் பூசை போடுறேன் தங்க நகை எதுனாலும் வையுங்கன்னு சொன்னாரு. கண்ணு முன்ன பூசை போட்டாங்க. அப்படியே எந்திரிச்சி போயிட்டாரு. ஆனா அடுத்த நா பூசை போட்ட எடத்துல வெறும் சின்ன சின்னக் கல்லுதா இருந்திச்சி. வளையலும் இல்ல, மோதரமும் இல்ல?”

“ஐயையோ!”

“அதா. வூட்டுக்கு வந்து நம்ம உள்மாந்தரம் எல்லாம் தெரிஞ்சிக்கிடுவாங்க ரொம்ப சாக்கிரதையா இருக்கணும். .”

செவந்திக்கு அநியாயமாகப் புருசன் இன்று ஐநூறு ரூபாய் போல் பணம் செலவழித்திருப்பதை நினைத்து எரிச்சல் வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

“இப்ப எதுக்கு நா வந்தேன் சொல்லட்டுமாக்கா? எங்க நாத்தானா நிலம் இருக்குன்னு சொன்னேன்ல்ல? அதுல பயிர் வைக்கிறன். அரைகாணி முறையா நாத்தங்கால் வுட்டு, அதும் திரம் மருந்து போட்டு விதை செய் நேர்த்தி பண்ணி, எல்லாம் போட்டு பயிர் வைக்கலான்னிருக்கே. வர புதங்கிழமையன்னிக்கு காலம வந்தீங்கன்னா, வூட்ல வெத செய் நேர்த்தி பண்ணுறப்ப சேந்து செய்யலான்னு... அப்படியே இவங்களும் உங்கூட்டுக்காரரப் பாத்திட்டு போகாலான்னு வந்தாம்.”

“வாரேன். நமுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கணுந்தான? இருங்க முதமுதல்ல வந்திருக்கிறீங்க. உள்ள வாங்க. கொஞ்சம் பாயசம் சாப்பிடலாம்.”

உள்ளே வருகிறார்கள். பூசை இடத்தில் விளக்கு எரிகிறது. சாந்தி பார்க்க டீச்சர் போல் இருக்கிறாள். புருசன் சராய் சட்டை போட்டு கடிகாரம் கட்டிக் கொண்டிருக்கிறான்.

யாரோ ஆபிசர் என்றுதான் அம்மா நினைத்திருக்க வேண்டும்.

அந்தக் கயிற்றுக் கட்டிலைக் காட்டி “உக்காருங்க” என்று உபசரிக்கிறாள்.

சிறு தம்ளர்களில் அவள் கொடுத்த பாயாசத்தைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் விடை பெறுகிறார்கள்.