கோமளத்தின் கோபம்/முன்னுரை

முன்னுரை

‘எந்த நோய்க்கும் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து மருந்து கொடுத்தால்தான் குணமடையும், குணப்படுத்துமுன் வைத்தியன் செய்ய வேண்டியதும் அதுதான். நோயின் மூலத்தையறிந்து மருந்து தரும் வைத்தியனைப் போன்றுதான் நாமும் நாட்டு மக்களின் அவதிக்கும் அல்லலுக்கும் எது மூலக்காரணம்? எவை அடிப்படைக் கோளாறுகள் என முதலில் கண்டறிந்து அவற்றைப் போக்கி நல்ல சமூதாயத்தினை அமைத்து வருகிறோம். இந்த முயற்சியில் எங்களைத் தவிர, திராவிட இயக்கத்தவரும் சுயமரியாதைக்காரர்களுமாகிய எங்களைத் தவிர, இதுவரை ஈடுபட்டவர் வேறு யாருமே கிடையாது’ (அண்ணா—ஒளி விளக்கு).

தமிழ்ச் சமுதாய அமைப்பிலே காணப்படும் சீர்கேடுகள், சீரழிக்கும் மூடநம்பிக்கைகள், சாதி வேற்றுமை, பார்ப்பனீயம் விதைத்துள்ள நச்சுக் கருத்துக்கள், பொருளாதார ஏற்ற தாழ்வுகள், கடவுள் பெயரால் நடைபெறும் கருத்துக்கும்—அறிவுக்கும் பொருந்தா சடங்குகள், விழாக்கள் தமிழ் மக்களை வாட்டி வதைத்து அவர்தம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக அமைந்து அணுஅணுவாக உயிர் குடித்து வரும் நோய்கள் என்பதனைக் கண்டு, அவற்றை ஒழித்துச் சமுதாயம் நலம் பெற அண்ணா செய்த மருத்துவ முறைகளில் ஒன்று கதைவழி கருத்தூட்டல், ‘தமிழ்நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழிய வேண்டுமாயின் “நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்” என்று வள்ளுவர் வகுத்த மருத்துவ முறையைத் தயங்காது தமிழர் கையாளுதல் வேண்டும் என்பது அண்ணாவின் கொள்கை’ என்று சொல்லின் செல்வர், பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை குறிப்பிடும் கருத்து எண்ணத்தக்கது. உயர்ந்த ஒப்பற்ற தமிழ்ப் பண்பாடு உணர்த்தும், தமிழ்ப் பற்றூட்டும், நாட்டுப் பற்றளிக்கும், இனப்பற்றை இதயத்தில் தேக்கும் கருத்துக்களைக் கதை வழி, நாடக வழி தரும் போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்வர் என்று அவர் வழங்கிய இலக்கியச் செல்வங்கள் எண்ணில அவற்றுள், அவர் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகளின் தொகுப்பாக அமைவது இவ்வேடு. அண்ணா எழுதிய முதல் சிறுகதை கொக்கரகோவும், முதல் குறும்புதினம் கோமளத்தின் கோபமும் முதன்முதலாக நூல்வடிவில் கொண்டுவரப்பட்டுத் தமிழறிந்தோர்க்கு விருந்தளிப்பது இந் நூலின் தனிச் சிறப்பாகும்.

கொக்கரகோ. (11.2.1934). சௌமியன் என்னும் புனைப்பெயரில் அண்ணா கல்லூரிப் பருவத்தில் எழுதிய முதற்படைப்பு. ஆனந்த விகடன் இதழில் (மாலை: 9 மணி 6. பக். 55–59) வெளியிடப் பெற்றது.

பரிதாபம்!... வாரமும் முறைப் பத்திரிகை நடத்தித்
தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறைப் பத்திரிகை
போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்கார
னாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் பிறகே
தெரிய வந்தது. (பக். 59), என்று முடிவது கதை.

இதழ் நடத்த வேண்டும் என்னும் அரிப்புக்கு உட்பட்டு, இன்னல்களை ஏற்று, இருந்த கைப்பொருளையும் இழந்து, இறுதியில் அறிவு நிலை கலங்கிச் சமுதாயத்துக்குக் கருத்தூட்ட வந்தவன் கதியற்ற பைத்தியமானவன் ஓவியம் கொக்கரகோ. இக்கதை வெளிவந்த காலத்தில் இதில் கையாளப்பட்டுள்ள இலக்கியத் திறன் எவரும் கையாளாத ஒன்று. பைத்தியம் தன் நண்பனுடன் உரையாடுவது, காவலர் இறுதியில் அழைத்துச் செல்வது; அதன்வழி அவன் நிலையினைக் கதையிறுதியில் கூறிப் படிப்பவரை வியப்பில் ஆழ்த்துவதாகும். இக்கதையின் உயிர்ப்பான பகுதி இறுதிப் பத்தி என்பதை எவரும் உணர முடியும். அண்ணாவின் மறைவிற்குப் பின் ஆனந்தவிகடன், இறுதி இரு பத்திகளை நீக்கி வெளியிட்டது. அந்த அமைப்பிலேயே கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழோசையும் பதிப்பித்தது. 1979இல் தமிழ்நாடு அரசு செய்தித் துறை நடத்தும் தமிழரசு இதழும் அவ்வாறே வெளியிட்டுள்ள குறைபாட்டினைக் களைந்து இக்கதை 1934இல் வெளியிடப் பெற்ற வடிவில் தரப்படுகிறது என்பதனைக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கிறேன்.

கோமளத்தின் கோபம்: 'பரதன்' என்னும் புனைபெயரில் குடி அரசு இதழில் 16.7.39 முதல் 6.8.39 முடிய தொடர் ஓவியமாக வந்த 'கற்பனைச் சித்திரம்'. இது 16.3.75 முதல் 4.6.75 முடிய காஞ்சி இதழில் மறுபதிப்பாக மலர்ந்தது. எனினும் நூல் வடிவில் இதுநாள் வரை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அக்குறை போக்கப்படுகிறது.

பார்ப்பனீயத்தில் கைப்பொருள் இழந்து, கைகட்டிப் பணியாற்றும் கூலியாகி, கோமளம் எனும் பார்ப்பனத்தியின் மோக வலையில் சிக்கி, கொலைகாரனாகிக் கொடுஞ்சிறை சென்று விடுதலை பெற்று வந்த லிங்கத்தைச் சமுதாயம் தற்கொலை செய்து கொள்ளத் துரத்துகிறது. சிங்கப்பூரில் அவன் உடன் பிறந்தாள் விட்டுச் சென்ற ஒரு கோடி செல்வம், லிங்கத்தை வாழ வைக்கிறது. தன்னைப் பழித்த பழிகாரி கோமளத்தை லிங்கம் பழிக்குப் பழி வாங்க, அவள் செல்வம், மதிப்பு இழந்து, விலைமகளாகிவிடும் முடிபினைக் காட்டுவது இக்கதை, பொருளையும் போகத்தையும் பெற்றுத் துய்ப்பதற்காகப் பார்ப்பனீயம் செய்யும். சூழ்ச்சிகள் படம் பிடித்துக் காட்டப் பயன்படுவது இக் கருத்தோவியம்.

லிங்கம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் காட்சியில் அவன் பேசும் தனிமொழியின் நாடகப் பண்பு மனித உள்ளத்தினை எழுத்தில் வடித்துத்தரும் அண்ணாவின் படைப்புத் திறனை விளக்குவதாகும். ‘தற்கொலை செய்து கொள்வதே நல்லது, நான் ஏன் இருக்க வேண்டும், பொருள் இழந்தேன், பொன் இழந்தேன், பெற்றோரை இழந்தேன், கொலை செய்தேன், சிறை புகுந்தேன், இன்று சீந்துவாரில்லை. மண் தின்று வாழ்வதா? பிச்சை எடுத்துப் பிழைப்பதா? என் செய்வது, அவையில் அகப்பட்ட சிறு குழந்தை, நெருப்பில் விழுந்த புழு, ஆடிக் காற்றில் சிக்கிய பஞ்சு போலவன்றோ எனது நிலை இருக்கிறது. ஏன் நான் வாழ வேண்டும்? இறப்பதே நல்லது. இன்றிரவே, இந்தச் சாவடியே சரியான இடம். இதோ இக்கயிறே போதும், என் வகையற்ற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர’.

அவன் உள்ளத்தில் பொங்கி வரும் இன்னலின் கொடுமையினைத் தெளிவுபடுத்த, உவமைகளை அடுக்கித்தரும் அண்ணாவின் ஆற்றல் தமிழுக்குப் புதுவரவு. இக் குறும்புதினத்தைப் புதினம் என்று மயங்குவர் திரு. மெய்கண்டான்.

கபோதிபுரக் காதல் : ‘பரதன்’ என்ற புனைபெயரில் குடிஅரசு இதழில் 12.11.39 முதல் 3.3.40 முடிய தொடர் ஓவியமாக வந்த குறும்புதினம். இளமை நலமும் மணமும் கமழும் எழிலரசியைச் சருகாகிவிட்ட பழுத்த கிழத்துக்கு மணமுடித்து, அவள் காதலைக் கருக்குவதோடு, விபசாரி ஆக்கிடும் புண்ணுற்ற சமுதாயத்தைக் கருத்துக் கண்ணுள்ளோர் காணச்செய்வது இக்கதை. கண்ணிழந்த பின்னமும் காதல் ஒளி வீச, கற்பிழந்தாளெனினும் காதலிக்கு வாழ்வு தரும் புரட்சிப்பொறி வீசும், கருத்துக்கதிர் பரப்பும் பரந்தாமன் வாழ்க்கைப் பாதையை வரைகின்றது இக் குறும்புதினம்.

தங்கத்தின் காதலன் : 9.7.39. குடி அரசு இதழில் வரையப்பெற்ற சிறுகதை, கருத்தொருமித்த காதலன் போலக் கன்னியரைக் கைப்பிடித்து, பொருளாசை கொண்டு, கைப்பிடித்த பெண்ணைக் கடுந்துயரில் மூழ்கவிட்டு, கையில் குழந்தையுடன் காப்பாற்ற துணையின்றிப் பொய்யே துணையாக மெய்வேடம் போடும் போலி உலகத்தைக் கண்டு கலங்கும் நிலையில்விட்டு, செல்வர் மகளைச் சேர்ந்து, உண்மைக் காதலுக்கு கொள்ளி வைக்கும் கொடிய நஞ்சுள்ளம் கொண்டவரை நாடறியச் செய்வது இது.

‘இன்னொருவர் அமைத்துத் தரும் பாதையிலேயே நடந்து நடந்து நாம் பழக்கப்பட்டுப் போயிருக்கிறோம். காதல் பாதை என்பது, அவரவர்களின் சொந்த அமைப்பாக இராமல் பெற்றோர் குறித்தது, சோதிடர் கணித்தது என்பனபோன்று ஏற்பட்டு விடுவதாலேயே, வாழ்க்கைச் சிக்கல் ஏற்படுகிறது. சிலர் ‘சகிப்புத் தன்மை’ என்ற கொள்கையின் பேரில் பாரத்தைப் போட்டு விடுவர். சிலர், ‘அவன் விட்ட வழி’ என்று கூறிவிடுவர். சிலர் மட்டுமே, என் வாழ்க்கை சிக்கலற்றதாகவும், சுவையுள்ளதாகவும் இருக்கும் விதமாக அமைத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு என்று கூறிடுவர் — காரியமுமாற்றுவர். அவர்கள் குற்றவாளிகளா, அல்லவா,— தீர்ப்பளிப்பது உங்கள் உரிமை’ (அண்ணா — காதல் பாதையில்) மோகனா, ஏமலதா, சரசா மூவரும் காதல் பாதை தேடினவர்கள் — காதல் பாதை அமைத்துக்கொண்டவர்கள். அவர்களை இனங்காட்டிப் பெண்ணடிமை போக்க முயல்வன வாலிப விருந்து, புரோகிதரின் புலம்பல், அவள் மிகப் பொல்லாதவள் என்னும் சிறுகதைகள்.

அறிஞர் அண்ணா எந்த நோய்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாள்தோறும் எழுதியும் பேசியும் வந்தாரே அந்த நோய்கள் மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிடும் கொடுமை தெரிகிறது. எனவே அந் நோய்களைப் போக்க இந்நூல் மருந்தூட்டும் என்ற நம்பிக்கையில் தொகுத்தளிக்கபடுகிறது. கருத்துக் கோப்பை உங்கள் கையில்!

அண்ணாவின் இவ்வரிய படைப்புகளைத் தொகுத்து முன்னுரையும் வழங்கும் வாய்ப்பினை நல்கிய பூம்புகார் பிரசுர நிறுவனத்தார்க்கு என் அன்பு கலந்த நன்றி.

சென்னை–28.

ப. ஆறுமுகம்
தொகுப்பாசிரியர்