கோயில் மணி/கோயில் மணி

கோயில் மணி

ங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம். ஐப்பசி அடைமழை என்பது சரியாக இருக்கிறது. வீதியில் நடந்து செல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. ஈசுவரன் கோயிலுக்குப் போகும் கூட்டம் குறைவு. ஆனால், முருக முதலியார் சரியாகச் சந்தியா காலத்துக்குப் போகாமல் இருக்க மாட்டார். சூரியன் மலைவாயில் விழும் நேரத்தில் தரிசனம் செய்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டு என்று யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

ஊரில் இரண்டு கோயில்கள் உண்டு: ஒன்று சுப்பிரமணிய சுவாமி கோயில்; மற்றொன்று சிவன் கோயில். சிவன் கோயில் பெரிது; சுப்பிரமணிய சுவாமி கோயில் அவ்வளவு பெரிதன்று. ஊரின் எல்லையில் இருக்கிறது முருகன் கோயில். ஊரைச் சார்ந்து இருக்கிறது சிவன் கோயில். முருகன் கோயிலுக்குப் போகிறவர்களுக்குப் பக்தி அதிகம் என்று தான் சொல்லவேண்டும். மழையானாலும், வெயிலானாலும் அத்தனை தூரம் நடந்து செல்வதற்கு எல்லோருக்கும் சுறுசுறுப்பு வருமா?

முருக முதலியார் இரண்டு கோயில்களுக்கும் போகிறவர். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கார்த்திகைகளில் முருகன் கோயிலுக்குப் போவார். மற்ற நாட்களில் சிவன் கோயிலுக்குப் போவார். எங்கே போனாலும் சாயங்காலப் பூசைக்குத்தான் போவார்.

கோடைக்காலத்தில் வானம் மாசு மறுவின்றி இருக்கும். சூரியன் மலைவாயில் விழும் நேரம் நன்றாகத் தெரியும். அந்தச் சமயத்துக்குச் சுவாமிக்குத் தீபாராதனை செய்ய வேண்டுமென்று முதலியார் குருக்களை வற்புறுத்துவார். அவர் சிவன் கோயிலுக்குப் பரம்பரைத் தருமகர்த்தர். கூடிய வரையில் குருக்கள் அப்படியே செய்வார். சூரியன் தெரியாமல் மந்தாரமாக இருந்தாலும் மழை பெய்தாலும் அஸ்தமன நேரம் குருக்களுக்குத் தெரியாது. ஏதோ ஒரு மதிப்பாக ஆறேகால் மணி, ஆறரை மணிக்குத் தீபாராதனை செய்வார்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அப்படி அன்று. அங்குள்ள முத்துசாமி குருக்கள் சாயங்கால தீபாராதனை செய்தாரானால் நிச்சயமாகச் சூரியன் அந்தக் கணத்தில் மலை வாயில் விழத்தான் வேண்டும். ஒரு நிமிஷம் இந்தண்டை அந்தண்டை இருக்காது. முன்பே அபிஷேகம் செய்து அலங்காரம் பண்ணி நைவேத்தியமும் பண்ணி விடுவார். மணியடித்ததுபோல் டாண் என்று சூரியாஸ்தமனவேளையில் கர்ப்பூர ஆரத்தி காட்டுவார். சூரியன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவர் தீபாராதனை செய்யும் நேரத்தில் அவன் மறைவான் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை.

இது எப்படி அவரால் முடிந்தது என்று வியப்படையலாம். இது ஒன்றும் பிரமாதமான காரியம் அன்று. முத்துசாமி குருக்களுக்குச் சோதிடம் வரும். ஜாதகம் எழுதித் தருவார். கணிதமும் தெரியும். இன்ன அட்சாம்சத்தில் உள்ள ஊரில் இன்ன நாளில் அகஸ்–அதாவது பகல்நேரம்-இவ்வளவு, இது உதய காலம், இது அஸ்தமன காலம் என்ற கணக்கெல்லாம் அவருக்குத் தெரியும். முன்கூட்டியே அவர் இதை ஒரு வாரத்துக்குத் தெரிந்து எழுதிவைத்துக் கொள்வார். கோயிலில் கடிகாரம் இருக்கிறது. அஸ்தமனத்துக்குரிய நேரத்தில் கணக்காகக் கர்ப்பூர தீபம் காட்டும்படி பூசையை ஒழுங்கு பண்ணிக்கொள்வார்.

சிவன் கோயில் சாமிநாத குருக்களுக்கு இது தெரியாது. முத்துசாமி குருக்களிடம் இந்தக் கணக்கைத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றவில்லை.

முருக முதலியார் அடிக்கடி அவரிடம் குறை கூறுவார்; “அந்தக் கோயிலில் டாண் என்று அஸ்தமன சமயத்துச்குச் சாயங்கால பூசை நடக்கிறது. நீர் நிதானமாக இருட்டின பிறகு செய்கிறீரே சிவன் கோயிலில் பிரதோஷ காலம் மிகவும் முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தப் பூசைக்கு எவ்வளவு மகத்துவம் நீர் இதையெல்லாம் கவனிக்கிறதே இல்லை” என்று கடிந்துகொள்வார்.

அந்தக் குருக்கள் என்ன செய்வார் சூரியன் தெரியாத காலங்களில் ஆறேகாலுக்குப் பூசை செய்வார். முருக முதலியாருக்கு அகஸ்கணக்கு என்று ஒன்று இருப்பதே தெரியாது. வானம் மூடியிருக்கும்போது எப்படித் தெரிந்து கொள்ள முடியும் என்றும் யோசிக்க வில்லை. அவருக்கு ஒரே குருட்டு எண்ணம்; “அந்தக் குருக்கள் செய்யும்போது இவர் ஏன் செய்யக்கூடாது?” என்பதுதான். அதை வாய் விட்டுப் பலமுறை சொல்லி விட்டார்.

அன்று சோமவாரம். விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. வெறும் சோமவாரம் அன்று; கார்த்திகைச் சோமவாரம். கார்த்திகை முதல் தேதியே சோம வாரமாக வந்துவிட்டது. ஐப்பசி மழை இன்னும் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. முருக முதலியார் கோயிலுக்குப் போனார். அப்போதுதான் சாமிநாத குருக்கள் அபிஷேகம் தொடங்கியிருந்தார். “ஏன் ஐயா, இதற்குள் அபிஷேகம் முடிந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்? மணி ஆறரை ஆகிறதே!” என்றார்,

“நான் என்ன செய்வேன்! ஆறேகாலுக்கே தீபாராதனை ஆகிவிடும். ஆனால் இந்தக் கடிகாரம் ஓடவில்லையே” என்று கோயிலில் இருந்த ஜாம்பவான் கடிகாரத்தைக் காட்டினர். முதலியாருக்குக் கோபம்வந்து விட்டது. அசுவமேத யாகபலன் கிடைக்காமல் போய் விட்டதல்லவா? ஏதோ கடபுடா என்று பேசி விட்டுப் போய்விட்டார். அந்தக் கோபத்தில் நேரே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குப் போனார், அங்கே பூசையெல்லாம் உரிய காலத்தில் ஆகியிருந்தது.

சாமிநாத குருக்களுக்கு அன்று மனசு சரியாகவே இல்லை. தர்மகர்த்தா கோபித்துக்கொண்டு போனது அவர் மனசை உறுத்திக்கொண்டே இருந்தது. ‘எல்லாம் ஈசுவரன் செயல்’ என்று எண்ணிக்கொண்டு அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.


2

சாமிநாத குருக்கள் கோயிலுக்கு ஆராய்ச்சி மணி வாங்கிக் கட்டவேண்டும் என்று முயற்சி செய்கிற செய்தி ஊரே பரவியிருந்தது. முருக முதலியார், “இவர் ஒழுங்காகப் பூசை செய்வது தட்டுக்கெட்டுப் போகிறது! இதற்கு மணி வேறு” என்று அலுத்துக்கொண்டார். குருக்களோ தீட்சை வளர்க்கத்தொடங்கினார். “எதற்குத் தீட்சை?” என்றால், “ஆராய்ச்சி மணி கட்டவேண்டும்; அது கட்டின பிறகுதான் தீட்சை எடுப்பேன்” என்று செரல்லிக் கோயிலில் ஓர் உண்டியலே வைத்துவிட்டார். தினமும் ஒருவேளை சாப்பாடு என்ற நியமத்தை வேறு மேற்கொண்டார். ஊரில் உள்ளவர்கள் பல வெண்கலப் பாத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். பலர் அவருடைய உண்மையான விரதத்துக்கு மனம் உருகிப் பணம் கொடுத்தார்கள்.

மணியின் விலை 8000 ரூபாய். இரண்டரை அடி உயரம். அடித்தால் நாலு மைல் கேட்கும். எண்ணாயிரம் ரூபாய் மணிக்குக் கட்டிடம் முதலியன நாலாயிரம். எல்லாம் பதின் மூவாயிரத்துக்குத் திட்டம் போட்டாகி விட்டது. பணம் வரவேண்டுமே!

தீட்சையோடு அவர் கொண்ட விரதங்களில் மற்றொன்று, அம்பிகைக்கு அர்ச்சனை செய்வதில் வரும் வரும்படியை மணிக்குப் போட்டு விடவேண்டும் என்பது. அந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்கு உள்ளுர்ச் செட்டியாருடைய மைத்துனர் ஒருவர், பெரிய பணக்காரர், கோயம்புத்தூரிலிருந்து வந்திருந்தார். அவர் குருக்களுடைய விரதத்தை அறிந்து ஆயிர ரூபாய் கொடுத்தார். அதிலிருந்து குருக்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. வருகிறவர்கள் எல்லாம் நூறு, இருநூறு என்று கொடுக்கலானார்கள். “அயலூரான் அருமை அறிந்து ஆயிரம் கொடுக்கும்போது நாம் நூறாவது கொடுக்காமல் இருக்கலாமா?” என்று கொடுத்தார்கள்.

முதலில் குருக்களுடைய விரதத்தைக் கேட்டுப் பரிகசித்தவர்கள் இப்போது வியப்படைந்தார்கள். அவர் விரதத்தை நிறைவேற்றத் தாங்களும் துணை செய்ய முன் வந்தார்கள். பக்கத்து ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் கோயிலில் பெரிய மணி கட்டும் முயற்சியை எடுத்துச் சொன்னார்கள். எப்படியோ பதினாயிர ரூபாய் சேர்ந்து விட்டது. குருக்கள் நன்றாக விசாரித்துக் கும்பகோணத்தில் கோயில் மணி செய்து பழக்கப்பட்ட இடத்தில் மணி வார்க்க ஏற்பாடு செய்து விட்டார்.

சில மாதங்களில் மணியும் வந்தது; மேற்கொண்டு பணமும் வந்து விட்டது. கோயிலில் மணியை வைக்க உயரமான கட்டிடம் கட்டவேண்டும், ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். முருகமுதலியார் ஓரிடத்தைக் குறிப்பிட்டார். அவருக்கு இப்போது குருக்களிடம் ஒரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. ஆனாலும் சுப்பிரமணியசுவாமி கோயில் குருக்கள் சாயங்கால பூசை செய்வது போல இவரால் செய்யமுடியாது என்ற எண்ணத்தை மட்டும் விடவில்லை.

மணியை வைக்க எங்கே கட்டிடம் கட்டுவது என்பது நிச்சயமாகவில்லை. மணி வந்தாயிற்று. அதை அம்பிகையின் சந்நிதியில் வைத்துப் பூசை கூடச் செய்தாகி விட்டது. கட்டிடம் கட்டும் விஷயத்தில் பெரிய மனிதர்கள் ஆளுக்கு ஓர் இடம் சொன்னார்கள். முருக முதலியார், “சிரமப்பட்டுப் பணம் சேர்த்தவர் எப்படிச் சொல்கிறாரோ, அப்படிச் செய்யலாம்” என்று சொன்னார். இதுவரைக்கும் குருக்கள் தம்முடைய கருத்தைச் சொல்லவே இல்லை.

“நீங்கள் எங்கே கட்டிடம் கட்டலாம் என்று எண்ணுகிறீர்கள்?“ என்று கேட்டார் ஒரு பிரமுகர்.

“என் செயலால் பணம் வரவில்லை. ஈசுவரன் திருவருளால்தான் கிடைத்தது. அவன் திருவுள்ளம் எதுவோ அதன்படிதான் நடக்க வேண்டும்” என்றார், குருக்கள்.

“அவன் திருவுள்ளத்தை எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேள்வி கேட்டார் ஒருவர்.

“இவ்வளவு செய்தவன் அதையும் தெரிவிப்பான் என்றே நினைக்கிறேன். ஒரு வாரம் பொறுங்கள்” என்றார் சாமிநாத குருக்கள்.


3

ன்று சாமிநாத குருக்கள் தர்மகர்த்தாக்களை யெல்லாம் வரச்சொன்னார். ஊரில் பெரிய மனிதர்களுக்கு ஆள்விட்டு அழைக்கச் சொன்னார். சுப்பிரமணியசுவாமி கோயில் பூசகராகிய முத்துசாமி குருக்களையும் வரும்படி சொல்லியனுப்பினார். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். குருக்கள் கண்களில் நீர் வரப் பேசலானார். “நாம் ஒன்று நினைக்கப் பரமசிவன் ஒன்று நினைத்திருக்கிறான். இந்தக் கோயிலில் மணியைக் கட்டவேண்டு மென்று எல்லோரும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். சிவபெருமான் வேறு வகையாக உத்தரவு பண்ணியிருக்கிறான்.”

“என்ன, என்ன?” என்று பல குரல்கள் ஒருங்கே எழும்பின.

“ஆண்டவன் தனக்கு அந்த மணி வேண்டாம் என்றும் கலியுக தெய்வமாகிய தன் குமரன் திருக்கோயிலில் அதைக் கட்டவேண்டுமென்றும் என் கனவில் நேற்று வந்து கட்டளையிட்டான். அவன் திருவுள்ளம் அப்படி இருக்கும்போது நாம் என்ன செய்வது?”

முருக முதலியார் இப்போது பழைய குரலில் பேசினார்; “சந்தியாகால பூசையைச் சரியாகச் செய்யும் இடத்துக்கு ஆண்டவன் பரிசை அனுப்புகிறான். கிருஷ்ணன் பாரிசாத மரத்தைச் சத்தியபாமா வீட்டில் நட, அது ருக்மிணி வீட்டில் பூத்தது மாதிரி ஆயிற்றுக் கதை” என்றார்.

சுப்பிரமணியர் கோயில் அர்ச்சகர்ஒன்றும் அறியாமல் விழித்தார்: “என்ன மாமா, இப்படிச் சொல்கிறீர்கள்? சுவாமி கனவிலே எப்படி வந்து சொன்னார்?” என்றார்.

“இது முதல் தடவை அல்ல. அவன் அடிக்கடி கனவில் வந்து உற்சாகம் மூட்டினான். அந்த அடையாளம் எனக்குத் தெரியாதா?”

“இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு இல்லாமல் போவதா?” என்று ஒரு செட்டியார் கேட்டார்.

“நான் அல்லவா அதைச் சொல்ல வேண்டும்? எனக்காவது, உனக்காவது! இது பகவானுக்காக வந்தது. இதை அவன் சொல்கிற இடத்தில் கட்டவேண்டியதுதான் நியாயம். சுப்பிரமணிய சுவாமி மட்டும் நமக்குச் சொந்தம் இல்லையா? அவர் கோயிலும் இந்த ஊரில் தானே இருக்கிறது?” குருக்கள் குழப்பம் இல்லாமல் பேசினார்.

“சொத்துக்கு உடையவரே கொடுப்பதற்குத் தடை சொல்லாதபோது நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்று நாலு பேர் சொன்னார்கள்.

கடைசியில் அந்த மணியை முருகன் கோயிலில் கட்டிடம் கட்டி வைத்துவிட்டார்கள். முத்துசாமி குருக்களுக்குச் சாமிநாத குருக்களிடம் உண்டான மதிப்புக்கு அளவே இல்லை; “மாமா, நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்கள்!” என்று தனியே அவரிடம் சொன்னார்; கண்ணில் நீர் ததும்பச் சொன்னார்.

“உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும். சாயரட்சை அபிஷேகம் ஆரம்பிக்கும்போது இந்த மணியை அடிக்கச் சொல்லு. தீபாராதனை ஆகும்போது வழக்கமாக அடிக்கட்டும். அபிஷேகம் ஆரம்பிக்கும்போது தவறாமல் அடிக்கச் சொல்ல வேண்டும்.”

“நீங்கள் சொல்வதெல்லாம் சுவாமி சொல்வதாகவே நான் எண்ணுகிறேன் ; நீங்கள் கட்டளையிடுவது போலவே செய்கிறேன்” என்றார் முத்துசாமி குருக்கள்.

அன்று முதல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாயரட்சை அபிஷேகம் தொடங்கும்போது மணி அடிக்கும். அது சாமிநாத குருக்கள் காதில் விழும். சிவன் கோயிலிலும் அபிஷேகம் தொடங்குவார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அங்கே கர்ப்பூர ஆரத்திமணி அடிக்கிறபோது கணக்காக இங்கும் தீபாராதனை செய்வார்.

முருக முதலியார் குறை இப்போது தீர்ந்துவிட்டது. இரண்டு கோயில்களிலும் சந்தியா காலத்தில் தவறாமல் பூசை நிகழ்ந்தது. ஒருநாள் கோயிலுக்கு வந்தவர் சிரித்துக்கொண்டே, “கடிகாரம் ஒடினாலும் ஓடா விட்டாலும் சந்தியா கால பூசை இப்போதெல்லாம் கணக்காக நடந்து வருகிறதே!” என்றார்.

“ஆமாம்! தெரியாமலா சுவாமி மணியை அந்தக் கோயிலில் கட்டச்சொன்னார்?” என்று சாமிநாத குருக்கள் சொன்னார்.

“நீங்கள் செய்த தியாகம் அது” என்று சொல்ல முதலியாருக்கு வாய் வரவில்லை. ரோசம் தாங்காமல், ஆதிமுதலே அந்தக் கோயிலில் மணிகட்ட வேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டு, அதைச் சிவபெருமான் கட்டளையாகச் சொல்லித் தம் காரியத்தைச் சாமிநாத குருக்கள் முடித்துக்கொண்டதை முதலியார் அறிந்தால், குருக்களுடைய தியாகத்தை மெச்சியிருப்பாரோ என்னவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=கோயில்_மணி/கோயில்_மணி&oldid=1382658" இலிருந்து மீள்விக்கப்பட்டது