கோயில் மணி/பழைய குருடி
பழைய குருடி
குவளைவித்தை என்று கேட்டிருக்கிறீர்களா ? செப்பிடுவித்தை என்று கேட்டிருப்பீர்கள். அதை விடப் பெரிய வித்தை இது. இதைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் தயைசெய்து சென்னைக்கு வந்து யாராவது ஒரு பால்காரரிடம் சில காலம் குருகுல வாசம் செய்யுங்கள். அந்த வித்தையில் பயிற்சி பெறலாம். அந்த வித்தையில் தண்ணீர் பாலாக மாறும்!
நான் ஏதோ கற்பனை செய்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஏதோ மாயவித்தைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். காசு கொடுத்துப் போய்ப் பார்க்கிறார்கள். சென்னையில் வீட்டு வாசலில் வந்து பால்கறக்கும் மாயா ஜாலக்காரர்களிடம் இல்லாத வித்தை அங்கே என்ன இருக்கிறது ?
விடியற்காலையில் நான்கு மணிக்கு எங்கள் வீட்டுப் பால்காரர், “பால் அம்மா!” என்ற திருப்பள்ளியெழுச்சியுடன் வந்து குரல் கொடுப்பார். அதைக் கேட்டவுடன் என் மனைவி பரபரவென்று படுக்கையிலிருந்து எழுந்து சென்று, அந்த மங்கலான ஒளியில் வாசலில் நிற்கும் எருமை மாட்டின் முகத்தில் விழிப்பாள். எருமை மாடு என்றால் வசவுக்குப் பேர்போன சொல்; புராணத்தை நம்புகிறவர்களுக்கு எமனுடைய வாகனம். அதன் முகத்தில் காலையில் விழிப்பதைப் பற்றி என் மனைவி கவலைப்படுவதில்லை. காபி குடிப்பவர்களுக்கு எருமைப் பால்தான் அந்த அமுதத்தைத் கெட்டியாக்குவது என்று தெரியும்.“இந்தா, பார் அம்மா!” என்று பால்காரர் குவளையை ஒரு சுழற்றுச் சுழற்றுவார். அதில் தண்ணீரே இல்லை என்று சாதிப்பதற்காகச் செய்யும் காரியம் அது. பந்தாட்டக்காரர்கள் நெளிவு சுளுவுகளுடன் மட்டையைச் சுழற்றி அடிப்பார்களாம். அதைப்பற்றிப் பிரமாதப்படுத்திப் பத்திரிகையில் படம் போடுகிறார்கள். இந்தப் பால்காரர் குவளையைச் சுழற்றுவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு சாமர்த்தியம் அதில் உண்டா? நாட்டியத்தில்கூட இப்படிச் செய்பவர் மிகவும் அரியர்.
குவளை ஒருமுறை மேல் போய் கீழ் வரும். அதன் வாய்கூடக் கீழே இருக்கும்படி ஒரு நிலை உண்டு. தண்ணீர் உள்ளே இருந்தால், குவளை தலைகீழாக வரும்போது விழாதா என்று என் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்தக் கலைஞர் - பால்காரரைத்தான் சொல்கிறேன் - கண் முன்னால் குவளையைத் தலைகீழாக ஒருகணம் வரும்படி செய்து தண்ணீரைக் குவளையிலிருந்து விழாதபடி செய்து விடுகிறார். என்ன மாயமோ! மந்திரமோ!
சில சமயங்களில் பால்காரருடைய உதவியாள் பால் கறக்க வருவான். அவனுக்குக் குவளை வித்தையில் முழுத்திறமை இராது. ஒரு குவளையை நன்றாகக் கவிழ்த்துக் காட்டிவிட்டுப் போவான். மாட்டுக்கு அருகில் மறைவாக வைத்திருக்கும் வேறு குவளையை எடுத்துக் கறப்பான். அதில் தண்ணீர் இருக்கும். இதை என் மனைவி ஒருநாள் கண்டு பிடித்து விட்டாள். அவன் குவளையைக் காட்டாமல் கறந்து கொண்டே இருந்தான். “இன்றைக்குப் பால் வேண்டாம், போ” என்று மறுத்து விட்டாள். அவன் போய்விட்டான்.
காலையில் உரிய நேரத்தில் காபி அருந்தாவிட்டால் யாருக்குத்தான் வேலை ஓடும்? பால்காரர் வீட்டுக்குப் பையனை அனுப்பிக் கெஞ்சி அவர் கொடுத்த பாலை வாங்கிக் கொண்டு வந்து காபி போட்டுக் குடித்தோம்.
பாலில் தண்ணீர் கலக்கும் மாயத்தைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் சுத்தப் பால் அல்ல என்று மட்டும் எப்படியோ தெரிந்து விடுகிறது. சில நாள் நல்ல பாலே கிடைத்து விடுகிறது. அதைப் பார்த்தால் பலநாள் மாதத்துக்கு இருபத்தைந்து நாட்கள், தண்ணீர்ப் பாலையே குடிக்கிறோம் என்று தெளிவாகத் தெரிகிறது.
பால்காரர் வந்து கறக்காமல் ஆள்காரனை விட்ட போதெல்லாம் வீட்டு வாசலில் கத்தல், சண்டை, இரைச்சல்தான். விடியற்கால வேளையில் மனிதன் சுகமாகத் தூங்கும்போது, இந்த இரைச்சலைக் கேட்டு எரிச்சல் வருமா, வராதா, சொல்லுங்கள்.
ஆனாலும் என்ன பண்ணுவது? காபிக்கு அடிமையாகிப் போனவர்களுக்கு வேறு கதி ஏது? அரசியலார் பத்திரிகையில் தாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பாற் பண்ணைகளைப் பற்றிப் புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்கள். அந்தப் புள்ளிக் கணக்கு எங்கள் வீட்டுக் காபிக்கு உதவுவதில்லை. அந்தப் பண்ணையைப் பற்றித் தெரிந்து கொண்டு சீட்டு வாங்கிப் பால் வாங்குவதற்குள் புலிப்பாலையே கொண்டு வந்து விடலாம்.
ஒரு நாள் பால்காரர் சண்டை கடுமையாகப் போய் விட்டது. நான் இன்துயிலை விட்டு எழுந்து வந்து கடாபுடா என்று ஏதோ பேசிவிட்டேன். அன்று பால்காரர் சத்தியாக்கிரகம் செய்து விட்டார். நாங்கள் கடையிலிருந்து காபி வாங்கி வந்து சாப்பிட்டோம். அப்படி நாள்தோறும் செய்தால் குடித்தனம் உருப்படுமா?
மறுநாள் பால்காரருக்கு நூறு ரூபாய் முன்பணம் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டோம். அவர் அந்தத் தர்மபுத்திரரே நேரில் வந்து பேசுவது போலப் பேசினர்; “என்ன ஐயா, உங்களை ஒருநாள் இரண்டு நாளாகவா தெரியும்? எத்தனை காலம் நான் பால் ஊற்றுகிறேன்! உங்களுக்குத் துரோகம் செய்வேனா? வீணாக உங்களுக்கு ஏன் சந்தேகம்? ஒவ்வோரிடத்தில் படி இரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள். நான் உங்கள் முகத்துக்காக ஒரு ரூபாய் பன்னிரண்டணாவுக்கு ஊற்றுகிறேன். இப்போது மாட்டுத்தீவனம் எல்லாம் என்ன விலை விற்கிறது தெரியுமா? சில நாள் மாடு உதைத்து விடுகிறது. போலீஸ்காரன் மாட்டைப் பவுண்டில் அடைத்து விடுகிறான் நோய் வந்து விடுகிறது. இந்தப் பாழும் மழையில் வைக்கோல் தங்கம்மாதிரி விலை ஏறிப்போன சமாசாரம் உங்களுக்குத் தெரியுமா?”
அவரைப் பேசவிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றியிருப்பார். “சரி, சரி, இனிமேல் சரியாகப் பால் கறந்து கொடு” என்று சொல்லி உள்ளே வந்து விட்டேன். நூறு ரூபாய் பணத்தோடு அவர் வீடு சென்றார். அடுத்த இரண்டு நாள் நாங்கள் சுமாரான பாலைப் பார்த்தோம்.
என் மனைவிக்குப் பால்காரர் சொன்ன பரிதாப வருணனைகளில் மனம் பாகாய் உருகிவிட்டது; “அவன் சொல்வது நியாமாகத்தான் இருக்கிறது. பாவம்! அவனுக்கு இன்னும்கூட நூறு ரூபாய் தரலாம் என்று படுகிறது” என்றாள்.
எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை? அவள் தான் ஒவ்வொரு நாளும் அவரோடு சண்டை பிடிப்பது. இப்போது அவளுக்குப் பரிவு பொங்கி வழிகிறது!
கொடுத்த முன்பணத்தில் மாசந்தோறும் பத்து ரூபாய் கழிப்பதென்று பேச்சு. அதன்படி இரண்டு மூன்று மாதங்கள் நடந்தது. பிறகு இன்னும் நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார் பால்காரர். “பணம் கொடுக்காவிட்டால் படிக்கு இரண்டணா ஏற்றித் தாருங்கள்” என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்றி அந்தப் பணத்தையும் கொடுத்துத் தொலைத்தேன். பால்காரர் பால் கறப்பதிலும் கெட்டிக்காரர், பணம் கறப்பதிலும் கெட்டிக்காரர் என்று தெரிந்து கொண்டேன்.
நாள்தோறும் இந்தத் தண்ணீர்ப் பால் வாங்கிப் போதவில்லை. அளவை அதிகப்படுத்தினால் நமக்குக் கிடைக்கும் தண்ணீரும் அளவில் அதிகமாகிறது. சண்டை, முன்பணம், தண்ணீர்ப்பால்—இந்தச் சங்கடத்தினின்றும் மீள வழி தெரியாமல் விழித்தேன்.
★
அன்று என் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். மாலை நேரம் அது. பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பால்கொண்டு வந்து தரச்சொன்னர் அவர். அதை உண்டபோது அமிர்தம் போல இருந்தது. எங்கள் வீட்டில் எருமைப் பாலைக்கொண்டு வந்து கறப்பதாக நாடகமாடுகிறார் பால்காரர். பசும் பாலோ அவர் வீட்டிலிருந்துதான் வருகிறது. இரவு பால் சாப்பிடுவதாகப் பாவனை பண்ணுகிறோம். ஏலக்காயையும் குங்குமப்பூவையும் போட்டு ஈடு கட்டுகிறோம். “கறக்காமல் எப்படி யம்மா பால் கிடைக்கும்? எல்லாம் கறந்த பால்தான்” என்பார் பால்காரர். அவருக்குக்கூட நகைச்சுவை தெரியும்!
வெளுத்ததெல்லாம் பாலாக எண்ணி வாழும் எனக்கு அந்த நண்பர் வீட்டுப்பாலின் மனமே தனியாக இருந்தது. நீங்கள் எங்கே பால் வாங்குகிறீர்கள்?“ என்று கேட்டேன்.
“பால் வாங்குகிறதா? அதைப் போல முட்டாள் தனம் வேறு இல்லை” என்று ஒரு போடு போட்டார்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“நானே மாடு வைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான பால் எனக்குக் கிடைக்கிறது” என்றார்,
நான் பாலுக்காகப் படும் தொல்லைகளை அவரிடம் விரித்துரைத்தேன். அவர் எப்படி மாடு வளர்க்க முடிகிறது என்று கேட்டேன். அவர் அது மிகவும் எளிய காரியம் என்று சொல்லித் தம்முடைய அநுபவத்தைக் கதை போலச் சொன்னார். அவர் கொடுத்த பாலைவிட அது சுவையாக இருந்தது.
“இருநூறு ரூபாய்க்கு மாடு கிடைத்தது. தினமும் ஒன்றரைப் படி பால் கிடைக்கிறது. என் மனைவியோ மாட்டைப் பாதுகாத்துக் கறக்கிறாள். அதற்குத் தீனி வாங்குவதில் கஷ்டம் இல்லை. தனிக் கடையே இருக்கிறது. நல்ல பசும் பால் குடிப்பதனால் குழந்தைகளுக்கு நோயே இல்லை.”
நான் நடுநடுவே கேள்விகளைக் கேட்டேன். அவர் விடை சொன்னார்.
“எங்கள் வீட்டுக்கு அதிகமாகப் பால் வேண்டுமே!” என்றேன்.
“பெரிய மாடு வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்.”
“எருமைப் பால்தானே காபிக்கு வேண்டியிருக்கிறது?”
“அது எதற்கு ஆபாச விலங்கு? நல்ல பசு மாட்டுப் பால் மணமாகவும் இருக்கும்; உடம்புக்கும் நல்லது.”
“எங்கள் வீட்டில் கறக்க யாருக்கும் தெரியாதே”
“ஓர் ஆளைப் போட்டுக் கொள்ளுங்கள். இருபது, இருபத்தைந்து கொடுத்தால் உங்கள் வீட்டுத் தோட்ட வேலையையும் பார்ப்பான்.”
எனக்கு அவர் செய்த உபதேசம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வீட்டுக்கு வந்து மனைவியிடம் எல்லாம் சொன்னேன். “நாம் இப்போது மாதம் இருபது ரூபாய் தோட்டக்காரனுக்குத் தருகிறோம். இன்னும் ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒருவனைப் பால் கறந்து கொடுத்துத் தோட்ட வேலையையும் செய்யச் சொல்லலாம். வீட்டுக்குப் பின்னே ஒரு சிறு கொட்டகை போட்டுக் கொள்ளலாம். நாள் தோறும் பசு மாட்டின் முகத்தில், விழித்தாலும் புண்ணியம் உண்டு” என்று என் திட்டத்தையும் சொன்னேன். அவள் ஒப்புக் கொண்டாள்.
என் நண்பர் சொன்ன ஒருவருடைய உதவியால் நானூறு ரூபாய்க்கு ஒரு மாடு வாங்கினேன். முந்நூறு ரூபாய் செலவு செய்து வீட்டின் பின் புறத்தில் ஒரு மூலையில் ஒரு கொட்டகை கட்டினேன். எங்கள் வீட்டுத் தோட்டக்காரனே மாட்டைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். அவனுக்கே ஐந்து ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தேன்.
முதல் நாள் பாலைக் காபி போட்டு உண்டபோது நாங்கள் அமிர்தம் உண்ட தேவர்களே ஆகிவிட்டோம். “இனிமேல் நம் வீட்டுக்கு வாங்கும் சர்க்கரையில் இரண்டு வீசை குறைத்து விடுங்கள்” என்றாள் எள் மனைவி.
“ஏன்?”
“இந்தப் பால் எவ்வளவு ருசியாக இருக்கிறது! நாம் இதுவரையில் வெள்ளைத் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டிப் பால் என்று குடித்துக் கொண்டிருந்தோம். இப்போது பாலுக்குத் தித்திப்பு இருக்கிறது என்ற அதிசயத்தைக் கண்டு கொண்டோம்” என்று குதூகலத்தோடு பேசினாள்.
இரண்டு மூன்று மாதங்கள் உண்மையிலே நல்ல காபியும் நல்ல பாலும் குடித்தோம். அப்புறம் மழைக் காலம் வந்து விட்டது. அதற்கு முன்பே மாட்டுக் கொட்டகைப் பக்கம் கொஞ்சம் சகதியிருந்தது. ஆள்காரன் அதைச் சுத்தம் பண்ணவில்லை. வேறு ஓர் ஆளை விட்டுச் சுத்தம் பண்ணி மணல் போடச் சொன்னேன்.
மழை வந்தவுடன் மாட்டுக் கொட்டகைப் பக்கம் ஒரே சேறாகி விட்டது. போதாக் குறைக்குக் கொசுத் தொல்லை வேறு உண்டாயிற்று. ஆள்காரன் முப்பது ரூபாய் தந்தால்தான் வேலை செய்ய முடியும் என்றான். அப்படியே கொடுத்தேன். ஆனாலும் அவன் மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்யமாட்டேன் என்று சொல்லி விட்டான். அதனால் பின்பக்கம் போனால் ஒரே நாற்றம்; கொசுத்தொல்லை. வீட்டில் கொசுக்கடி பொறுக்க முடியவில்லை.
நாலு நாள் ஆள்காரன் வரவில்லை. என் மனைவிக்கு மாட்டுக்குப் பக்கத்தில் போகப் பயம். பழைய பால்காரரைக் கூப்பிட்டுக் கறக்கச் சொன்னாள். அவர் வந்து மாட்டையும் கொட்டகையையும் பார்த்தார். “ஒரே கையால் கறக்க வேண்டும். மாற்றுக் கைபட்டால் புண் வந்துவிடும்” என்று சொல்லிப் போய்விட்டார். போகும் போதே, “பால் மிஞ்சினால் கொடுங்கள்! நான் விற்றுத் தருகிறேன்!” என்று கிண்டலாக வேறு சொல்லிப் போனார்.
இப்போது மாடு முன் போலப் பால் தரவில்லை. அளவு குறைந்து விட்டது. “பால் மறுக்கிற காலம். இனிமேல் இதைச் சினைக்கு விட வேண்டியதுதான்” என்றான் ஆள்காரன்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று நான் கற்பனை கூடச் செய்யவில்லை. மாட்டைப் பற்றிப் பிரசாரம் செய்த நண்பரிடம் போய், “இந்தச் சங்கடத்துக்கு என்ன செய்வது?” என்று கேட்டேன்.
அவர் சிரித்தார். “உங்களுக்கு இயற்கையின் போக்கே தெரியாதா? இது எங்கும் நடக்கிறது தானே? இதற்காகக் கலவரப்படலாமா?” என்று அமைதியாகப் பேசினார்.
“பால் கறக்கா விட்டால் பால் வேண்டுமே! அந்த மாட்டுக்குத் தீனி போடவேண்டுமே! அது வீண் செலவு அல்லவா? மறுபடியும் அது பால் கறக்கும்படி செய்ய என்ன செய்வது?”
அட பைத்தியக்கார மனிதரே! மறுபடியும் மாடு கன்று போட்டால் பால் கறக்கும். எனக்குத் தெரிந்த ஆள் ஒருவன் இருக்கிறான். அவனிடம் மாட்டையும் கன்றுக்குட்டியையும் விட்டு விடுங்கள், அவன் மாட்டைச் சினையாக்கிக் காப்பாற்றிக் கன்று போட்ட பிறகு கொண்டுவந்து விடுவான். கன்றுக் குட்டியையும் வளர்த்து விற்றுத் தருவான்.”
“அவன் மாட்டுக்குத் தீனி போட வேண்டாமா?”
“அவன் திருவான்மியூரில் மேய்ச்சல் தரையில் மாடுகளை மேய்த்துக் கொள்வான். மாதம் இருபது ரூபாய் கொடுத்தால் போதும்” என்றார்.
அவர் மூலமாகவே மாட்டை அந்த ஆளிடம் அனுப்பினேன். மாதம் இருபது ரூபாய் செலவாயிற்று. மறுபடியும் பழைய பால்காரரிடம் பால் வாங்க வேண்டி வந்தது. அவர் இப்போது ஒரு வகையான உபதேசம் செய்ய ஆரம்பித்தார். “மாடு வாங்கி வளர்ப்பதென்றால் எளிய காரியமா? இந்தத் தொழில் எல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வராது. நீங்கள் ஆள்காரன், தீனி, கொட்டகை என்று செலவு பண்ணினீர்களே! அதற்குப் பதில் ஒரு மாட்டின் விலையை என்னிடம் கொடுத்திருந்தால் உங்கள் பேரால் ஒரு மாட்டை வாங்கிக் கட்டியிருப்பேன். முதல் வேலையாக உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, நீங்களே கறந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பேன். அது மட்டுமா? மாட்டு விலையை அந்தப் பால் விலையில் கழித்துக் கொள்வேன். என்னிடம் யோசனை கேட்காமல் இப்போது தொல்லைப் படுகிறீர்களே!” என்றார்,
அவர் சொன்னது என் மனைவிக்கு நியாயமாகப் பட்டது. அவள் என்னிடம் ஏதோ யோசனையைச் சொன்னாள். “பார்க்கலாம்” என்றேன்.
எங்கள் மாடு புதுக்கன்றுக் குட்டியுடன் வந்து சேர்ந்தது. ஆனால் அது இளைத்துத் துரும்பாக இருந்தது. இருபது ருபாயில் அது யானையாகவா மாறும் என்று சமாதானம் செய்து கொண்டோம். மறுபடியும் எங்கள் வீட்டுப் பாலைச் சாப்பிட்டோம். பழைய அளவு அது கறக்கவில்லை.
நடுவிலே அதற்கு வியாதி வேறு வந்து விட்டது. அதற்கு யாரோ வந்து வைத்தியம் செய்தார்கள். அதற்கும் செலவு செய்தேன்.
வீட்டுப் புறக்கடைப் பக்கம் போகச் சகிக்கவில்லை. ஒரே சாணி நாற்றம். ஆள்காரன் மக்கர் பண்ணினான்; முப்பது ரூபாய் போதாது என்றான். தீவனத்தின் விலையும் ஏறிவிட்டது.
அந்தச் சமயம் பார்த்து என் மனைவி தன் யோசனையை வற்புறுத்தினாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.
மறுநாள் பால்காரரைக் கூப்பிட்டேன்; “நீர் அன்றைக்குச் சொன்னீரே. அந்தப்படி செய்யலாம் என்று தினைக்கிறேன்” என்றேன்.
“என்ன சொன்னேன்?” என்று ஒன்றும் தெரியாதவரைப் போல நடித்தார்.
“மாட்டை வாங்கித் தந்தால் நீரே வைத்துக் காப்பாற்றுவதாகச் சொன்னீரே!”
“அதுவா? ஒரு பேச்சுக்குச் சொன்னேன்: இப்போது அதைப்பற்றி என்ன?”
“எங்கள் பசுமாட்டை உம்மிடமே விட்டு விடுகிறேன். நீரே அதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும்” என்றேன்.
“இந்தக் கிழட்டு மாட்டையா?”
“என்ன அப்படிச் சொல்கிறீர்? ”
“அப்போதே உங்களிடம் சொல்ல எண்ணினேன். நமக்கு எதற்கு இந்த வம்பு என்று இருந்து விட்டேன். மாடு சுழி சுத்தம் இல்லை. வயசான மாடு” என்றார்.
“சரி, இதை நீர் வைத்துக் கொண்டு பால் கறந்து கொடுப்பீரா, இல்லையா?”
“மாட்டுக்கு ஆகிற செலவையெல்லாம் நீங்கள் தந்துவிடுகிறீர்களா?”
“செலவா! மாடு உம்மிடமே இருக்கட்டும். வீட்டுக்குப் பால் கறந்து கொடும். ஏதோ ஒரு மதிப்புப் போட்டுப் பால் விலையைக் கணக்குப் பண்ணிக் கொள்ளலாம்.”
“இந்தத் தொந்தரவெல்லாம் எனக்கு வேண்டாம். இது இனி மேல் அடிமாட்டுக்குத்தான் சரி. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பிகு செய்தார்.
“சரி, வேறு யாரையாவது கேட்கிறேன்.”
“தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் படுகிற தொல்லையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒன்று வேண்டுமானால் செய்கிறேன்” என்று என்மேல் இரக்கப்படுபவர் போலப் பேசினார்.
“என்ன அது?”
“மாட்டை எனக்கே விலைக்கு விற்றுவிடுங்கள். ஒரு விலை பேசிக் கொடுத்து விடுங்கள். நான் என்னால் இயன்றவரையில் அதை உருப்படியாக்கப் பார்க்கிறேன். மாதம் மாதம் பால்பணத்தில் பத்து ரூபாய் கழித்துக் கொள்ளுங்கள். ”
“சரி, என்ன விலை: நான் நானூறு ரூபாய்க்கு வாங்கினேன்.”
“நீங்கள் தெரியாமல் வாங்கினால் அதற்கு நான் பிணையா? இப்போது நூறு ரூபாய் பெறாது. உங்களுக்காக நூற்றைம்பது ரூபாய் தருகிறேன்.”
“அடபடுபாவி!” என்று மனத்துக்குள் வைதேன். வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? “சரி, நாளைக்குச் சொல்கிறேன்” என்று அவரை அனுப்பி விட்டேன்.
அன்று மனைவியும் நானும் யோசித்தோம்.
“அந்த நண்பரிடம் போய்க் கேட்கட்டுமா?” என்றேன்.
என் மனைவிக்குக் கோபம் வந்தது.
“ஆமாம், அந்த மனிதரால் தானே இந்தச் சங்கடம் வந்தது?” என்று சீறினாள்.
கடைசியில் இருநூறு ரூபாய்க்கு விற்பது என்ற முடிவுக்கு வந்தோம். பால்காரரிடம் சொல்லிச் சம்மதிக்கச் செய்வதற்குள் பெரும் பாடாகப் போய் விட்டது. “ஐம்பது ரூபாய் பணம் கொடுத்துக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதற்குக் கொஞ்சம் வைத்தியம் பண்ண வேண்டும்” என்றார். கடவுளே என்று அந்தப் பணத்தைக் கொடுத்துப் பசு மாட்டையும் ஓட்டிக் கொண்டு போகச் சொன்னேன்.
இப்போது வீட்டுக்குப் பின்புறம் சுத்தமாக இருக்கிறது. கொசுத் தொல்லை இல்லை. ஆனால் பழைய படி தண்ணீர்ப் பாலைத்தான் வாங்குகிறோம். பழைய சண்டைதான், கூச்சல்தான். நாங்கள் விற்ற மாடு மிகவும். நன்றாக இருக்கிறது என்று யாரோ சொன்னர்கள். அதை ஒரு நாள் கூடப் பால்காரர் எங்கள் கண்ணிலே காட்டவில்லை.
பழையபடி அவருடைய குவளை வித்தையைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!