கோயில் மணி/மங்க்-கீ!
மங்க்—கீ !
“மங்க்-கீ!”-அவனுடைய குரல் வாசல் நிலையைக் கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. டார்ஸான் தன் அருமை மகனைக் கூப்பிடுவது போலக் கூப்பிட்டான் அவன். குழந்தை சுந்தரி உள்ளேயிருந்து ஓடிவந்தாள். குரலோ உள்ளே போய் லலிதாவினுடைய குடலைக் குழப்பியது.
அவன் முகத்தில் சிரிப்பு; குழந்தைக்கு அப்பாவைக் கண்டு ஆனந்தம். அந்தச் சொல்லுக்கு இன்ன அர்த்தம் என்று அதற்குத் தெரியுமா, என்ன? ஆனால் பெற்ற தாய் கண்ணிலோ நீர்த்துளி ததும்பும். இது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல; தினந்தோறும் நடக்கும் காட்சி; கேலிச் சித்திரக்காரன் ‘பராய்’ வீட்டில் நடைபெறும் காட்சி.
‘பராய்’ என்ற பெயரைக் கொண்டு அவனை மங்களூர்க்காரனோ, அஸ்ஸாம்காரனே என்று எண்ணி விட வேண்டாம். அவன் சுத்தத் தமிழன். சுப்பராயன் என்ற திருநாமத்தையே அப்படிக் கோணலாகக் குறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்.
யார் வீட்டிலாவது குழந்தை பிறந்திருக்கும். அந்தச் செய்தியைத் தன் பாணியில் அவன் சொல்வான்; “அந்த வீட்டில் ஒரு புதிய அழுகை புறப்பட்டிருக்கிறது” என்று. “இது பராயின் வக்கணை” என்பான். பெண் குழந்தை பிறந்தால், “ஊருக்குப் பிறந்திருக்கிறது” என்பான். ஆணாக இருந்தாலோ, “கொள்ளி வைக்கப் பிறந்திருக்கிறது” என்பான். எதற்கும் கோணலான பேச்சு.
அவன் தன் முறையில் எதற்கும் பேர் வைப்பதில் புலி. அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. வெடவெடவென்று ஒல்லியாய் ஆழகாய் மின்னல் கொடிபோல லலிதா மனைவியாக வந்தாள். அவளை இந்தக் கோமாளி எப்படி அழைக்கிறான் தெரியுமோ? ‘ச்சிவிங்கீ’! என்று முதல் எழுத்தை அழுத்தந் திருத்தமாக உச்சரித்து அழைப்பான். அவள் ஒட்டைச்சிவிங்கி மாதிரி உயரமாக இருக்கிறாளாம்!
அவனுடைய கிண்டலும் கோமாளித்தனமும் அவளுக்குப் பிடிக்கிறதே இல்லை. “எதற்கெடுத்தாலும் இந்தக் கோமாளித்தனந்தானா?” என்று கேட்பாள்,
“வாழ்க்கையில் எப்போதும் சிரிப்பும் கொம்மாளமுமாகத்தான் இருக்க வேண்டும்” என்பான்.
யாராவது நண்பர், “உங்கள் சித்திரத்தோடு கேலியையும் கிண்டலையும் வைத்துக் கொள்ளுங்கள் எதற்காக வாழ்க்கையிலும் இந்தக் கிண்டல்?” என்றால், “கேலிச் சித்திரம் கலையானால் என் வாழ்க்கையையும் கலையாகவே ஆக்கி வாழ ஆசைப்படுகிறேன்” என்பான்.
“நல்ல கலை ஐயா. இது! கேலியும் கிண்டலுமா?”
“பின்னே அழுகையும் ஒப்பாரியுமாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?”
அவன் ஒரு சிறிய வீடு கட்டிக்கொண்டான். அதற்கு ஒரு விலாசம் வேண்டாமா? ‘பராய்’ முத்திரையோடு ஒரு பெயரைச் சூட்டினான். “மண் கல் மாளிகை” என்ற பெயர் தாங்கியது அந்த வீடு.
“இதென்ன ஐயா பெயர்? மண்ணைக் கொண்டா கட்டினீர்?”-ஒருவர் கேட்டார்.“மண் அல்ல; மண் கல்; அதாவது மண்ணால் உண்டான செங்கல்லால் கட்டின வீடு இது. நான் என்ன கடவுளா, கருங்கல்லால் வீடு கட்டிக்கொள்ள?” என்று விளக்கம் கூறனான்.
இதிலே ஒரு வேடிக்கை திகழ்ந்தது. தன் வீட்டுப் பெயரை ஆங்கிலத்தில் கடிதத் தாளில் அச்சிட்டிருந்தான். அதை யாரோ வெளியூர்க்காரர் படித்துப் பார்த்திருக்கிறார். மண்கால் மாளிகை, மாண் கல் மளிகை, மங்கால் மாளிகை என்றெல்லாம் தட்டுத் தடுமாறிக் கடைசியில் மங்கல் மாளிகை என்று தீர்மானம் செய்து கொண்டார். ஒரு கடிதத்தில் தெளிவாகத் தமிழில் மங்கல மாளிகை என்றே விலாசமிட்டுக் கடிதம் எழுதினார். மண்கல் மாளிகை மங்கல மாளிகை ஆனது சுப்பராயனுக்கே வியப்பாக இருந்தது. தன்னுடைய நாமகரணக் கலையின் பெருமையை உணராத அந்த அன்பரை எண்ணி இரங்கினான். கடிதத் தாளை அடுத்த தடவையிலிருந்து தமிழிலே அச்சடித்து வைத்துக் கொண்டான்.
சுப்பராயன் தன் வீட்டில் பேசும் பேச்சே அலாதி. எல்லாம் குழூஉக்குறி. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “சமுத்திரம்” என்பான்; எதற்கோ உப்பு வேண்டும் என்று அர்த்தம்! “சீப்பைக் கொண்டா, சீப்பைக் கொண்டா” என்பான். சாப்பிடும்போது எதற்குச் சீப்பு என்று நாம் யோசிப்போம். உணவில் ஏதோ ரோமம் இருக்கும்; அதைக் குறிப்பிக்கும் பரிபாஷை அது!
★
அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவன் மாமனார் சுந்தரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு ஏற்ற குழந்தை. அதனிடம் அவனும் அவன் மனைவியும் உயிராக இருந்தார்கள். அந்தக் குழந்தைக்கு அவன் ஒரு செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டான். வெளியிலே யிருந்து வரும்போதெல்லாம் அந்தப் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டே வருவான். “மங்க்-கீ!” என்று அவன் அழைக்கும்போது குழந்தை ஒரு கபடும் தெரியாமல் அப்பாவை எதிர்நோக்கி ஓடும். அம்மாவோ, “ஐயோ! இந்தச் சுபாவம் போகாதா” என்று உள்ளம் குமுறுவாள்.
“இப்படிக் கூப்பிடாதீர்களேன்; எனக்கு அவமானமாக இருக்கிறது!” என்று அவள் அழுவாள்.
“என்னடி அவமானம்? குழந்தை அழகி என்று நாமே விளம்பரம் பண்ணவேணுமோ? இதெல்லாம் ஒரு வேடிக்கை; வாழ்க்கையைக் குஷியாகக் கழிக்கிற வழி!” என்பான்.
“என்ன குஷியோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!”
★
பிள்ளைப் பேற்றுக்காகச் சுப்பராயன் மனைவி தன் தகப்பனார் ஊருக்குப் போயிருந்தாள். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றலாகும். இப்போது ஒரு புது ஊருக்குப் போயிருந்தார். அங்கே எல்லா வசதிகளும் இருந்ததனால் தம் பெண்னைப் பிரசவத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
ஊருக்குப் போனவள் இரண்டு கடிதம் போட்டாள். பிறகு கடிதமே வரவில்லை. பின்பு மாமனார் சுபச் செய்தியை எழுதி அனுப்பியிருந்தார். ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் செளக்கியமாக இருப்பதாகவும் எழுதினார். சுப்பராயனுக்கு ஆண் குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சிதான். வேலை மிகுதியாக இருந்ததால் புண்ணியாகவாசனத்துக்கு அவனால் போக முடியவில்லை.குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. சுப்பராயன் இன்னும் போய்க் குழந்தையைப் பார்க்கவில்லை. வேலை மிகுதி காரணம் அன்று. லலிதாவிடமிருந்து கடிதமே வரவில்லை. அவள் இப்படி மெளனம் சாதிப்பதற்குக் காரணம் என்ன? அவனுடைய கிண்டல் பேச்சினால் உண்டான கோபமா? என்றும் உள்ள கிண்டல்தானே அது?
“அவள் கடிதம் எழுதட்டும்; போகலாம்” என்று இருந்துவிட்டான். அவள் எழுதவே இல்லை. இரண்டு மாதங்கள் ஆயின. ஆண் குழந்தையாகப் பிறந்திருக்கும் போது போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆசை தோன்றாதா?
“குழந்தை என் மாதிரி இருக்கிறதா, உன் மாதிரி இருக்கிறதா? ஏன் நீ கடிதமே எழுதவில்லை? என்னுடைய பரிகாசப் பேச்சுக்களால் உனக்குக் கோபமா? அல்லது ஏதாவது மனக்குறையா?” என்று இரண்டு மூன்று கடிதங்கள் எழுதினான். பதில் இல்லை.
“நீ வா என்றால் வருகிறேன்; இல்லாவிட்டால் வரவில்லை. உன் மகனை நீயே கொஞ்சிக் கொண்டிரு” என்று கோபமாகக் கூட எழுதினான். அப்பொழுதும் கடிதம் வரவில்லை.
இரண்டரை மாதம் கழித்துத் திடீரென்று ஒரு நாள் அவன் மாமனார் ஊரை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். தன் வரவை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. திடுதிப்பென்று தன் மனைவியின் முன் போய் நிற்க வேண்டுமென்றே அப்படிப் புறப்பட்டான்.
அந்த ஊர் சென்று மாமனார் வீட்டை விசாரித்துக் கொண்டு போனான் போய்க்கொண் டிருந்தபோது, அவன் காதில் தன் மாமனார் பேர் விழுந்தது. “அந்த வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையைப் பார்த்தாயோ? அதற்கு என்ன அப்படி—” அதற்கு மேல் ஒன்றும் விழவில்லை. அதிலிருந்து குழந்தைக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று ஊகித்துக்கொண்டான். ‘அடி பைத்தியமே! இதை எனக்கு எழுதக் கூடாதோ?’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.
வீட்டை அடைந்தான். மாமனார் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார், “என்ன இது? வருவதாகவே எழுதவில்லையே!” என்றார்.
“அப்படியானால் திரும்பிப் போகட்டுமா?” என்று தன் சுபாவம் போகாமல் கேட்டான் சுப்பராயன்.
“வாருங்கள் உள்ளே” என்று அழைத்துச் சென்றார் மாமனார்.
லலிதா தலையை நீட்டவில்லை. அவன் பொறுமை தாங்காமல் அவள் இருந்த அறைக்குப் போனான். அவள் குழந்தையைக் கீழே படுக்க வைத்திருந்தாள். “என்ன?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான். அவள் பேசவில்லை. கையினால் குழந்தையைக் காட்டினாள். அவன் கண்கள் குழந்தையின் மேல் விழுந்தன. அவ்வளவுதான்! அவன் காதுகளில் ஆயிரம் குரல்கள், “மங்க்-கீ மங்க்-கீ மங்க்-கீ!” என்று அலைமோதி ஆரவாரித்துப் புயலின் பேரிரைச்சலாகக் கிளம்பின.
குழந்தை கண்குழிந்து, மூக்கு இருக்கும் இடமே தெரியாமல் ஒட்டி, டார்வின் நியாயத்தை நிரூபிப்பதாய்க் கொழுகொழுவென்று கிடந்தது.
ஐந்து நிமிஷம் அவன் அசந்துபோய் நின்று விட்டான். பேச்சு வரவில்லை. பேசாமல் வெளியிலே நழுவினான்.
அந்தக் கணத்திலிருந்து அவனுடைய கிண்டலும் கோமாளித்தனமும் இருந்த இடம் தெரியாமல் கால் வாங்கி ஓடிவிட்டன!