கோவூர் கிழார்/கிள்ளி வளவன் புகழ் பாடல்
கிள்ளிவளவன் புகழ் பாடல்
காரியின் குழந்தைகளைக் கொலையுண்ணாமல் மீட்ட பிறகு கிள்ளிவளவனுக்கும் கோவூர் கிழாருக்கும் நெருக்கம் மிகுதியாயிற்று. “தங்களைப் போன்ற சான்றோர்கள் அடிக்கடி நல்லுரை கூறி வழிப்படுத்தாவிட்டால் என்னைப் போன்றவர்கள் தவறான செயல்களைச் செய்ய நேர்கிறது. தாங்கள் எனக்கு அடிக்கடி உடனிருந்து அறிவுரை கூற வேண்டும்” என்று சோழன் கேட்டுக்கொண்டான். அவன் கூறியதில் உண்மை இருந்தது. ஆதலால் கோவூர் கிழார் அதற்கு இணங்கினார்.
சோழன் செய்ய இருந்த தீய செயல் நினைந்து புலவர்கள் அவனை அணுக விரும்பவில்லை. ஆயினும் கோவூர் கிழார் இப்போது அவனுக்கு உசாத் துணைவராக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். கிள்ளி வளவனைப் பாராமல் இருந்தாலும் இருக்கலாம்; கோவூர் கிழாரைப் பாராமல் அவர்களால் இருக்க முடியாதே!
கிள்ளி வளவன் புலவர்களைப் போற்றி வாழத் தலைப்பட்டான். புலவர்களும் அவன் புகழைப் பாடினர். கோவூர் கிழார் தம்முடைய பாவினால் அவனுடைய புகழை நிலைநிறுத்தினார்.
அவன் மேலும் பாணாற்றுப்படை பாடினார். அதில் அவனுடைய மாளிகையை, வேற்றூரார் வந்து எவ்வளவு நாள் இருந்து உண்டாலும் கொண்டு சென்றாலும் குறையாத உணவுப் பொருளையுடையது என்று பாடினார். அவனுடைய நாட்டில் அங்கங்கே விருந்தினரை ஊட்டுவதற்காகச் சமையல் செய்யும் தீயைத் தவிர, பகைவர் ஊர் சுடு தீயே தெரியாதாம். அவன் மக்களுடைய பசி, தாகம் என்னும் இரண்டு நோய்களுக்கும் மருந்தாகிய சோற்றையும் நீரையும் உண்டாக்குபவன்.
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்;
அடுதி அல்லது சுடுதீ அறியாது
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன்.[1]
-புறநானூறு, 70.
கிள்ளிவளவனிடம் பல புலவர்கள் வந்து பரிசில் பெற்றுச் சென்றார்கள். “மலையிலிருந்து பூமியிலே இறங்கிக் கடலை நோக்கி வரும் பல ஆறுகளைப் போல, புலவர் கட்டமெல்லாம் நின்னை நோக்கினர்” என்று இடைக்காடனார் பாடினார்.
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே
- புறநானூறு, 42.
ஒரு பொருநன் கிள்ளி வளவனிடம் வந்து இனிய விருந்து உண்டு அந்த மகிழ்ச்சியினால் பாடும் முறையில் கோவூர் கிழார் ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். சோழ நாட்டின் வளப்பத்தை அது மிக அழகாகச் சொல்லுகிறது. முதலில் பொருநன் தான் பெற்ற விருந்தைப்பற்றிச் சொல்லுகிறான். “சுடசுடப் பலவகை உணவுகளைத் தந்தான். வெப்பமான உணவை உண்டமையால் எங்களுக்கு வியர்த்ததேயன்றி வேலை செய்ததனால் வியர்த்தறியோம். சும்மா உட்கார்ந்து கொண்டு விருந்து அருந்தினோம். அப்படி அவன் எங்களுக்கு மதிப்பும் விருந்தும் தந்தான். அதனால் அவனுக்குப் புகழ் பரவுகிறது” என்கிறான்.
வெய்துஉண்ட வியர்ப்பல்லது
செய்தொழிலான் வியர்ப்பறியாமை
ஈத்தோன் எந்தை, இசைதன தாக.
-புறநானூறு, 386.
அவனுடைய நாட்டு வளப்பத்தைச் சொல்கிறான் ; அவன் நாட்டில் மருத நிலமும் முல்லை நிலமும் நெய்தல் நிலமும் வளம்செறிந்து விளங்குகின்றன. வயல்களில் எங்கே பார்த்தாலும் நெல்லும் கரும்பும். கரும்பின் பாத்திகளில் வெட்டும் பருவத்தைக் காட்டும் பூவோடு அவை நிற்கின்றன. முல்லை நிலத்தில் பசும் புல்லை அருந்தும் பசு நிரைகள் இருக்கின்றன. அவற்றிற்குக் காவலாக விற்படையையுடையோர் தங்கும் சிறிய அரண்கள் அங்கங்கே உள்ளன. கடற்கரையில் புன்னை மரத்தின்மேல் ஏறி அதன் கிளையில் உட்கார்ந்துகொண்டு அந்நிலத்து வாழ்வார் காற்றினால் தள்ளப்பெற்று வரும் கப்பல்களை எண்ணுகிறார்கள். கழிப் பக்கத்தில் உப்பை விளைவித்து அதைக் குவியல் குவியலாகக் குவித்து எடுத்துச் சென்று மலையுள்ள பகுதிகளில் மக்கள் விற்கிறார்கள்.
சோழ நாட்டுச் சிறப்பை இப்படி வருணித்தார் புலவர்பிரான் கோவூர் கிழார். கிள்ளிவளவனுடைய வீரச் சிறப்பையும் சில பாடல்களில் எடுத்துரைத்தார். இந்தப் பாடல்கள் அவனுடைய பெயரை இலக்கியத்தில் பதித்து அவனுடைய புகழை இன்றளவும் தாங்கி நிற்கின்றன.
இவ்வாறு பல காலம் சோழ மன்னர்களுக்கு உசாத் துணைவராகவும் அவைக்களப் புலவராகவும் வாழ்ந்த கோவூர் கிழார் தமக்கும் தம் நாட்டுக்கும் தம்மைச் சார்ந்தாருக்கும் நன்மையை உண்டாக்கினார். பகைத்த மன்னரைப் பகை நீங்கி ஒன்றுபடச் செய்தார். தவறு செய்பவன் வேந்தனாயினும் கண்டிக்கும் முறையறிந்து கண்டித்துச் சொல்லும் சொல்லுடையவராக வாழ்ந்தார். கவிதை, படித்தும் கேட்டும் இன்பம் பெறுவதற்காக மட்டும் அமைந்ததன்று, வாழ்க்கையைச் சீர்திருத்தவும் அது உதவும் என்பதை அவர் பாட்டுக்கள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் புலவர்களுக்கும் இருந்த பெருமதிப்பும், புரவலர்களும் அஞ்சி வழிபடும் தலைமை அவர்களுக்கு இருந்ததும் கோவூர் கிழாரின் வரலாற்றிலிருந்து புலனாகின்றன.
கோவூர் கிழார் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கினார்; புகழ் வழங்கினார். மக்களுக்குத் தீங்கு நேராமல் காத்தார். நமக்கு இனிய கவிச் செல்வத்தை வழங்கியிருக்கிறார். அந்தக் கவிகளில் அவர் இன்னும் வாழ்கிறார். கீழ்வரும் ஒவ்வொரு தலைப்பையும்பற்றி இரண்டு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
1. சோழ மன்னர்களில் நலங்கிள்ளியின் சிறப்பும் முதுகண்ணன் சாத்தனார் அதற்குக் காரணமாக இருந்தமையும்.
2. கோவூர் கிழாரின் பெருமையை உறையூர் மக்கள் உணர்ந்தது.
3. ஏழெயிற் போர் விவரம்.
4. ஆவூர்க்கோட்டை முற்றுகைக்குரிய காரணமும் அதன் முடிவும்.
5. இளந்தத்தனார் வரலாறும் கோவூர் கிழாரின் அருமுயற்சியும்.
6. கிள்ளிவளவனும் கோவூர் கிழாரும்.
- ↑ கூழ்-உணவு. வியல்நகர்-விரிவான மாளிகை. அடுதீ-சோறு சமைக்கும் நெருப்பு. சுடுதீ-ஊரைச் சுடும் நெருப்பு. இருமருந்து-நீரும் சோறும். பொருநன்-வீரன்.