சகலகலாவல்லிமாலை
சகலகலாவல்லிமாலை
குமரகுருபர சுவாமிகள்
- வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
- தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
- துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
- கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1
- நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
- பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
- கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
- காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2
- அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
- குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
- தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
- களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3
- தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
- வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
- தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
- காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4
- பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
- நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
- தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
- கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5
- பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
- எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
- விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
- கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6
- பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
- கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
- தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
- காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7
- சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
- நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
- செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
- கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8
- சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
- நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
- நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
- கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9
- மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
- பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
- விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
- கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10