சங்ககாலத் தமிழ் மக்கள்-3/ஆடவர் நிலை


III
ஆடவர் நிலை

எத்தகைய செயலையும் தலைமை தாங்கிச் செய்து முடிக்கும் இயல்பு ஆண்மைத் தன்மையாகும். இவ்வியல்பு ஆடவர் பெண்டிர் இருபாலாருள் ஆடவருக்கே சிறப்பாக உரியதாம். தொடங்கிய வினைகளை இடையே நெகிழவிடாது செய்து முடிக்கும் வினையாண்மையுடையார் ஆடவர் என வழங்கப் பெற்றனர். வினைத்திறத்தில் வெற்றி பெற்று விளங்குதல் ஆண்மைத் தன்மையை மேலும் மேலும் வளர்ப்பதாகும். வாழ்க்கையில் நேரும் இடையூறுகளை எதிர்த்து நின்று வெற்றி காணுதலே ஆடவர்களின் குறிக்கோளாக அமைதல் வேண்டும்.

வலிய தொழில்களைச் செய்தற்கேற்ற உடலமைப்பும் உள்ளத்திண்மையும் பெற்றவர் ஆடவராவர். அவர்களாற் செய்தற்குரிய கடிய தொழில்களை மெல்லியலாராகிய பெண்டிர் செய்தற்குரியரல்லர். தீங்குதரும் உயிர்களை நோக்கி அஞ்சாமை ஆடவர் இயல்பு; அஞ்சியொதுங்குதல் பெண்மையின் இயல்பாகும். அஞ்சும் இயல்புடைய பெண்ணினத்தை அச்சமின்றிக் காத்தற்கு உதவுவது ஆண்மையின் ஆற்றலேயாகும். இவ்வாற்றலால் மனை வாழ்க்கைக்குரிய மகளிரை ஆதரித்து, அவர்கள் அச்சமின்றி வாழத் துணைசெய்தல் ஆடவர்களின் கடமையாகக் கருதப்பெற்றது.

பெருமையும் உரனும் ஆடவர்களின் பண்புகளாம். ஒருவன் தன் வாழ்க்கையில் எல்லாரைக்காட்டிலும் தன்னை உயர்நிலையில் நிறுத்தல் பெருமையாகும். கல்விப் பயிற்சியினால் உண்டாகும் நல்லறிவினாலும், எத்தகைய

இடையூறுகளையும் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரத்தினாலும், பலரும் தன்னைப் பாராட்ட வாழும் புகழினாலும், தானீட்டிய பொருளை இரவலர்க்கு வரையாது வழங்கும் வண்மையினாலும், ஒருவன் தன் வாழ்நாளில் எல்லாரையும் விட மேன்மேல் உயர்ந்து விளங்கும் பெருமையினைப் பெறுகின்றான். இவ்வுலகியலில் நேரும் பலவகை இடையூறுகளையும் தடுத்து நின்று உலகில் அமைதி நிலவப்பாடுபடும் உணர்வுமிக்க அவனது உள்ளத்திண்மையே 'உரன்' எனக் குறிக்கப்படுவதாம். தான் கொண்ட கொள்கையினை நெகிழ விடாத உறுதியும், மனத்தினை நன்னெறிக் கண் நிறுத்தும் கட்டுப்பாடும், எந்த வினையையும் மயங்காது எண்ணித் துணியும் துணிபும், திண்ணிய அறிவாகிய உரனுடைமையின் திறங்களாகும். மலையே வந்து வீழ்ந்தாலும் நிலைகலங்காத உள்ளத்திண்மையுடையவனே 'உரவோன்' எனப் போற்றப் பெறுபவனாவன்.

உரவோர் வாழும் நாடே உரிமை வாழ்வு உடையதாகும். தான் செம்மையாக வாழ்தற்கும், தன்னாட்டு அரசியல் செம்மையுறுதற்கும் உரனுடையாளனது உழைப்பே இன்றியமையாததாகும். சங்க காலத்தில் வாழ்ந்த ஆடவர்கள் அரசியல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தலைவர்களாய் நின்று வினைசெய்தற்குரிய பெருமையும் உரனும் பெற்றிருந்தார்கள். மக்கள் பிற்காலத்தில் அடையும் பெருமைகளுக்கெல்லாம் அரண்செய்வன அவர்கள் இளமையிற் பழகும் விளையாட்டுக்களேயாம்.

தமிழிளைஞர்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியினை விளைக்கும் விளையாட்டினை மேற்கொண்டிருந்தார்கள். நீர்நிலையிலும் பேராறுகளிலும் கடலிலும் குதித்து நீந்துதலும், விற்போர் மற்போர் முதலிய போர்த் துறையில்

பயிலுதலும் தமிழிளேஞர்களின் பண்டைக்கால விளையாட்டுக்களாய் அமைந்தன. ஆழமான நீர்நிலையின் அருகே ஓங்கி வளர்ந்த மரத்தின்மேல் எறிநின்று, கரையிலே நின்றவர் வியப்படையும்படி அந்நீர் நிலையிலே திடீரெனக் குதித்து, அதன் அடியிலேயுள்ள மண்ணைக் கையால் அள்ளிக்காட்டி விளையாடுதல், தமிழ் இளைஞர்களின் விளையாட்டுக்களுள் ஒன்றாகும். தளர்ந்த நடையினராய்த் தண்டூன்றிச் செல்லும் முதுமைப் பருவத்தினராகிய புலவர் ஒருவர், கண்டார் வியக்கும்படி நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து அதன் அடியிலுள்ள மண்ணைக் கையால் எடுத்துக் காட்டிய தம் இளமைப் பருவச் செயலைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் மிகவும் சுவைபட எடுத்துக் கூறி, ‘அவ்விளமை இப்பொழுது இல்லையே!’ என இரங்குகின்றார்.

‘இளமையிற் சிறந்த வளமையில்லை’, (நற்றிணை) என்றார் ஒரு புலவர். ஒருவனது வளர்ச்சிக்குரிய பருவம் இளமையேயாதலின், அவ்விளமைப் பருவத்தை ஒருவன் நிலைபெறப் போற்றிக்கொள்வதைக் காட்டிலும் அவன் பெறுதற்குரிய செல்வம் வேறு ஒன்றுமில்லை என்பது அப்புலவர் கருத்தாகும். இளமைப் பருவத்திற்குப் பொலிவினைத் தருவது பொருட் செல்வமாகும். பொருளில்லாதவனது இளமைப் பருவம் பொலிவிழந்த நிலையினதாம். பொருளீட்டுதற்குரியார் வினைசெய்தற்கண் ஊககமுடையவராய் இருப்பர். மக்களால் பொருளென மதிக்கப்படும் உண்மையான செல்வம் உள்ளக் கிளர்ச்சியாகிய ஊக்கமுடைமையேயாகும். வினைசெய்தற்கண் தோன்றும் உள்ளக் கிளர்ச்சி ஆடவர்களுக்குச் சிறப்பாக உரித்தாகும். வினைசெய்தலில் உள்ள ஊக்கம் ஒருவன் உள்ளத்து



நிலைப்பெற்றிருக்குமானால், அவனுக்கு உணவு முதலிய வளங்கள் குறைந்தாலும், அவன் உடம்பு திண்மையும் அழகும் பெற்றத் திகழும். வினைத்திறமாகிய ஊக்கமுடையானொருவன், அற்ப உணவை உண்பானாயினும், அவனுடல் திண்மையாற் பொலிவு பெறும் என்பர். "என் தலைவன் புல்லிய உணவினையுண்டும், மலையென வளர்ந்த பெரிய தோள்களை உடையவனாய் விளங்குகின்றான்", எனத் தலைவி தன் தலைவனைப் பாராட்டுகின்றாள். ஆகவே, உடம்பின் வளர்ச்சிக்கு உணவு முதலிய புறச் செல்வங்களைவிட வினை செய்தற்கண் தோன்றும் அகமகிழ்ச்சியாகிய ஊக்கமே சிறந்த காரணமாகும் என்பது புலனாம். வினைத்திறமே ஆடவர்களுக்கு உயிராகும். 'வினையே ஆடவர்க்குயிரே' என்றார் ஒரு புலவர். உயிராற்றலாகிய இவ்வினத் திறத்தைப் பெறுதற்கேற்ற வன்மையுடையதாகத் தம்முடம்பினை வளர்த்தல் தமிழிளைஞர் கடனாயிற்று.

தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்வாழ்க்கையினை ஒரு பொருளாக மதியாது, எத்தகைய பகையினையும் எதிர்த்து நிற்குந் திண்மை பெற்றிருந்தார்கள். மெலியாரிடத்தே அவரினும் மென்மையுடையராகப் பணிந்தொழுகுதலும், வலியாரிடத்தே அவரினும் வன்மையுடையராகத் தலைநிமிர்ந்து நடத்தலும் ஆடவர்க்குரிய தலைமைப் பண்புகளாகும் எனத் தமிழ்மக்கள் எண்ணினார்கள். திண்மை இல்லாத ஆடவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை பெறுதலியலாது. தங்களேயே காப்பாற்றிக் கொள்ளுங் திறமை பெறாத இவர்கள், தங்கள் குடும்பத்தினரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளமுடியும்?

இடையூறுகளையெல்லாம் எதிர்த்து நின்று தங்கள் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஆண் மக்களுக்கே

உரியதாகும். துன்பத்தால் தளர்ந்து சாயுங் தங்கள் குடியினைத்தளராமல் தாங்கிநிற்கும் ஆண்மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றியமையாதவர்களாகக் கருதப்பட்டார்கள்.

இளைஞர்களைப் போர்த் துறையில் பழக்கும் பயிற்சிக் கூடங்கள் தமிழ் நாட்டிற் சிற்றூர்தோறும் நிறுவப்பெற்றிருந்தன. ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போரிற் பழக்கும் அப்பயிற்சிக் கூடங்கள் 'போரவை' எனவும், 'முரண் களரி' எனவும் வழங்கப் பெற்றன. போரவையிற் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையினை உணர்தல்கருதி ஆண்டுதோறும் ஊர்மக்கள் போர்விழா நடத்தி வந்தார்கள். அவ்விழாவிற் கலந்து கொண்ட இளைஞர்கள் விற்போரிலும் மற்போரிலும் தாங்கள் பெற்ற திறமையினைப் போர் விளையாட்டிற் புலப்படுத்தினர்கள். இங்ஙனம் கொண்டாடப்படும் போர்விழா, 'பூந்தொடை விழா' என வழங்கப் பெற்றது. இந்நாளிற் கல்லூரியிற்பயிலும் மாணவர்களுக்குப் போர்ப்பயிற்சி தருதல் இன்றியமையாதது என அரசியலறிஞர்கள் பல முறையிலும் வற்புறுத்திப் பேசக் கேட்கின்றோம். இப்பயிற்சியின் இன்றியமையாமையை முன்னரே உணர்ந்த தமிழ்மக்கள், இளைஞர்கள் கல்வி பயிலும் பொழுது அவர்களுக்குப் பருவமறிந்து போர்த்தொழிலையும் கற்பித்தற்குரிய வாய்ப்பினை அளித்தார்கள்.

சோழர்குடித் தோன்றலாகிய பெருநற்கிள்ளி என்பான், தன்னாட்டிலுள்ள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி தருதல் கருதிப் போரவையினை நிறுவி, அவ்வவையில் இளைஞர்களைக் கூட்டிப் போர்த்துறையிற் பழக்கினான். போரவைக்குத் தலைவனாய் விளங்கியது கருதிப் 'போரவைக்



கோப்பெருநற்கிள்ளி’ என்னும் பெயரால் அவன் வழங்கப் பெற்றான். அவனால் நடத்தப்பட்ட போர்ப்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்களுக்கு மற்போரும் விற்போரும் பயிற்றப்பட்டன. அங்குப் பயிலும் இளைஞர்கள் வெளியூர்களுக்குச் சென்று ஆங்காங்கே பயிலும் போர்வீரர்களுடன் போர்த்துறையில் போட்டியிடுவதனைத் தங்கள் விளையாட்டாகக் கொண்டார்கள்.

பெருநற்கிள்ளி இளைஞனாய் இருந்தபொழுது சோழ நாட்டின் புறத்தேயுள்ள ஒரூரிற் போர்விழா நிகழ்ந்தது. பெருநற்கிள்ளி அவ்விழாவிற் கலந்துகொண்டு தனது போர்த்திறத்தைப் புலப்படுத்தி, மக்களுக்கு அத்துறையில் ஆர்வமுண்டாக்க எண்ணினான்; தானும் போர் விழாவிற் கலந்துகொள்ள வருவதாக அவ்வூர் மக்களுக்கறிவித்தான். ஊர்மக்கள் அவனது வருகையைப் பெரும் பேறாகக் கருதி, அன்புடன் வரவேற்றார்கள். அவ்வூரில் 'பெருங்கோழி நாய்கன்' என்னும் வணிகன் மகளாராகிய ' நக்கண்ணையார்' என்னும் இளநங்கையார், கன்னிமைப் பருவத்திலேயே தமிழிற் பெரும்புலமை பெற்று விளங்கினார். நல்லிசைப் புலமை நிரம்பிய அங்நங்கையார், போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் பேராற்றலைக் கேள்வியுற்று அவன்பால் அன்பு மீதூரப் பெற்றவராதலின், தம்மூரில் நிகழும் போர்விழாவில் தம் வீட்டின் முன்றிலின் ஒருபால் ஒதுங்கி நின்று, விளையாட வந்த பெருநற்கிள்ளியைக் கண்டு மகிழ்ந்தார்.

நக்கண்ணையார் வாழும் வீட்டின் எதிரேயுள்ள அகன்ற மணல்வெளியிலேதான் போர்விழா நிகழ்தற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உரிய காலத்தே இளைஞர்களும் பொதுமக்களும் திரளாகக் கூடியிருந்தார்கள்.

பெருநற்கிள்ளியின் தோழர்களாகிய வீரர்கள் ஒருபுறமும் அவ்வூரில் வாழும் போர்வீரர்கள் மற்றொரு புறமும் அவ்வூரில் வாழும் போர்வீரர்கள் ம்ற்றொரு புறமும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றார்கள். இரு திறத்து வீரர்களும் தாங்கள் கற்று வல்ல போர்த்திறங்களை மேன் மேலும் விளங்கக் காட்டினார்கள். அவர்கள் எல்லாரைக் காட்டிலும் பெருநற்கிள்ளியே தன் போர்த்தொழிற்றிறனை மிகுதிப்படுத்தி விளையாடினான். அதனைக் கண்டு மகிழ்ந்த சான்றோர்,' பெருநற்கிள்ளியே வென்றான் !’ எனப் பெருக ஆரவாரம் செய்தனர். எந்தவூரிலும் உண்மையை மறைத்துப் பேசும் மக்கள் இருப்பது இயல்புதானே? அத்தகைய மக்கள் அப்போர்விழாக் கூட்டத்திலும் இருந்தார்கள். வெளியூரினின்று வந்த பெருநற்கிள்ளியின் வெற்றியை வெளியிடாது மறைத்தல் வேண்டுமென்பது அவர்களது விருப்பம். அவ்விருப்பத்தால், 'பெருநற்கிள்ளி வென்றானல்லன்' என அன்னார் ஆரவாரஞ் செய்வாராயினர். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட நிகழும் ஆரவாரத்தைக் கேட்ட நக்கண்ணையார், காலிலணிந்த சிலம்புகளார்ப்ப வீட்டினின்றும் வெளிவந்து, தம் வீட்டு முகப்பிலே நின்ற பனையின் தூரிலே ஏறி நின்று, போர்விழா நிகழ்ச்சியை எட்டிப் பார்த்தார். தம்மால் அன்பு செய்யப்படும் பெரு நற்கிள்ளியே வென்றதை நேரிற்கண்டு தெளிந்தார். இம்மகிழ்ச்சியின் விளைவாகப் போரவைக் கோப்பெருநற்கிள்ளியை அவர் வியந்து போற்றிய பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது (புறம். 85).

கடற்கரையிலே வாழும் பரதவர்கள் தங்கள் உடல் வலியினைப் பெருக்கிக் கொள்ளக் கருதிப் போர்ப்பயிற்சிக்குரிய முரண்களரியினை அமைத்துக்கொண்டார்கள். அதன்கண் பழகிய வீரர்கள், மணல் பரந்த வெளியிலே



நின்று, ஒருவர்க்கொருவர் முதுகு தொடாமல், கையாற் குத்தியும், படைக் கலங்களாலே வெட்டியும், ஒருவர் உடம்புடன் ஒருவருடம்பு தாக்கும்படி கலந்து பொருதார்கள் என்னும் செய்தி பட்டினப்பாலையிற் கூறப்பட்டுள்ள்து.

இவ்வாறு இளமைப் பருவத்திலேயே கல்விப்பயிற்சியும் போர்ப்பயிற்சியும் வாய்க்கப் பெற்ற குடும்பமானது எத்தகைய இன்னல்களாலும் சிதையாது வளரும் சிறப்புடையதாகும். குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய நல்ல ஆண்மக்களைப் 'பொன்போற்புதல்வர்' எனச் சான்றோர் பாராட்டுவர். அதனால், புதல்வர்களைப் பெறாதவர் நாட்டுக்குச் செய்யவேண்டிய கடமையினைச் செய்யாதவராகவே கருதப்பட்டனர். புதல்வரைப் பெறாதவருடன் வீரர்கள் போர்செய்வது கூடாதென்பது தமிழ் நாட்டுப் போரறமாகும். தம் முன்னோர் தொடங்கிய நற்செய்கைகளைத் தமக்குப் பின்னும் தொடர்ந்து செய்தற்குரியவர்கள் தம் புதல்வர்களும், அவர்கள் வழிப் பிறக்கும் பேரர் முதலியவருமாவர். ஆண் மக்களைப் பெற்றவர்களே தங்கள் முன்னோர்க்குரிய விருப்பத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றியவர்களாவார்கள். புதல்வர்ப் பேறு வாய்க்கப் பெறாதார், தமக்குப் பின் முன்னோர் வினைகளைத் தொடர்ந்து முடித்தற்குரிய சந்ததி இல்லாமையால், தம் கடமையினை நிறைவேற்றாதவராகவே கருதப்பட்டனர்.

தம் குடும்பத்தையும் நாட்டையும் காத்தற்பொருட்டுத் தம்முயிர் கொடுத்துச் செய்தற்குரிய ஆண்மைத் திறத்தைத் தம் வழியினர் பெறுதல் வேண்டுமென்பது தமிழ்க்குடியிற்றோன்றி மறைந்த முன்னோர்களின் விருப்பமாகும். முன்னோர் விரும்பிய இவ்விருப்பத்தினை

நிறைவேற்றுதல் கருதி ஆடவர்களைப் பெற்றுக்கொடுத்தல் பின்னுள்ளார்க்குரிய கடமையாய் அமைந்தது (பதிற்றுப்பத்து.70).

தமிழ்நாட்டின் தென்பகுதி கடலாற்கொள்ளப்பட்டமையால், அங்கிருந்து புகழுடம்பினை நிலைநிறுத்தி மறைந்த தம் முன்னோர்களைத் தென்புலத்தார் (தென்றிசையில் வாழ்வார்) எனத் தமிழர் வழிபடுவாராயினர். 'தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்' (புறம்.9) எனப் புலவரொருவர் ஆண்மக்களைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றார்.

மணஞ்செய்துகொள்வதற்கு முற்பட்ட பருவம் காளைப்பருவம் ஆகும். இவ்விளம்பருவ வீரர்கள் தங்கள் நாட்டின் கலங்கருதிப் போர்க்களத்தில் பகைவர் படைகளை எதிர்த்துநின்று, உயிர்வழங்கும் திறம் பெற்றிருந்தார்கள். இவ்வாறு ஆண்மை மிக்க வீரர் பலரும் போர்த்துறையில் ஈடுபட்டு இறந்தமையால், ஆள்வினைக்குரிய ஆடவர் தொகை மிகவும் குறைவதாயிற்று; தம்மைத்தாமே காத்துக்கொள்ளுதற்குரிய உடல் வலி பெறாத மெல்லியலாராகிய மகளிர் தொகை மிகுவதாயிற்று. அதனால், ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலாருள் ஆண் மக்களைப் பெறுதலே நற்பேறாகக் கருதும் வழக்கம் நாட்டில் நிலைபெறுவதாயிற்று. மணம் செய்துகொண்டாருள் புதல்வர்ப் பேறுடையார் தம் முன்னோர்க்குரிய அரிய கடமையினைச் செய்துமுடித்து, வாழ்க்கை இன்பங்களை நுகர்ந்து முதிர்ந்தவராதலால், அவரைப் போரிற்கொல்லுதல் பழியுடைய செயலாகக் கருதப்படவில்லை.

கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பு மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்விடக் கருதியபொழுது,

அவனுடைய உயிர் நண்பராகிய பொத்தியார் என்னும் புலவர் தம் மனைவி பிள்ளைப்பேறடையும் நிலையிலிருந்தும் தாமும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட முயன்றார். அதனை உணர்ந்த கோப்பெருஞ்சோழன் புலவரை நோக்கி, “புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா,” எனப் பணித்துப் பொத்தியாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் என்பதும், அரசன் பணியினை மேற்கொண்டு வீடு சென்ற புலவர் தம் மனைவி புதல்வனைப் பெற்று உடல் நலம் பெற்ற பின்னர்த் திரும்பிச் சென்று வடக்கிருந்து நடுகல்லாகிய கோப்பெருஞ்சோழனையடைந்து, 'இடங்தருக’ என வேண்டிப் பெற்று, உண்ணாது வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் பொத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடலால் இனிது விளங்கும். இவ்வரலாற்றைச் சிறிது ஊன்றி ஆராய்ந்தால், தம் நாட்டில் மக்கள் தொகை பெருகுதல் வேண்டும் என்பதில் தமிழ்மன்னர் பேரார்வம் கொண்டிருந்தமை நன்கு புலனாகும்.

ஆண்மையும் ஆற்றலும் உடைய புதல்வர்களைப் பெற்று வளர்த்தலைத் தாய் தன் கடமையாக எண்ணினாள். தன் புதல்வர்களுக்கு நிறைந்த கல்வியைப் பயிற்றி அவைக்கண் எல்லாரினும் முந்தியிருக்கச் செய்தலையும் அவர்களைப் போர்த்துறையில் பயிற்சி நிரம்பிய அமைதி உடைய வீரராக்கித் தன் நாட்டிற்கு உழைக்கச் செய்தலையும் தந்தை தன் கடமையாக எண்ணினான். போர்த்துறையிற்சிறந்த அவ்வீரர் பகைவரை வென்று மேம்படுதற்குரிய வேலும் வாளும் முதலிய படைக்கலங்களையும் பிறவற்றையும் செய்துகொடுத்து நாட்டின் படைத்திறனைப் பெருக்குதலையே கொல்லர் முதலிய தொழிலாளர் தம் கடமையாகக் கொண்டிருந்தனர். அவ்வீரர்களுக்கு அரசியல்

வழியொழுகும் ஒழுங்குமுறையினை அறிவுறுத்தி நிலமும் பொருளுந் தந்து ஆதரித்தலைத் தமிழ் வேந்தர் தம்முடைய கடமையாக மேற்கொண்டனர். வீரவாழ்வு வாழ்தற்குரிய சூழ்நிலையினையுடைய தமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்த மறவர்கள், போர்க்களத்திலே பகைவர் சேனைகளை அறவே சிதைத்து, யானைப் படையைக் கொன்று, வெற்றியுடன் மேம்படுதலையே தங்கள் கடமையாகக் கருதினார்கள்.

புதல்வர்களுக்குரிய கடமையாகச் சொல்லப்பட்ட போர்த்துறையில் தமிழ்நாட்டிற்பிறந்த எல்லா இளைஞர்களும் கலந்து பயின்றார்கள். இளைஞர்கள் தங்கள் நாட்டின் கலங்கருதிப் பகைவரை எதிர்த்தல் கடன் என்பது தமிழ்மக்களாற் கருதப்பெற்றது. ஆடவர் ஒவ்வொருவரும் தத்தம் இளமைப் பருவத்தில் போர்ப்பயிற்சி பெற்றுத் தமிழ்ப்படை வீரராய் விளங்கினர். அவர் எல்லாரும் அமைதியான காலத்தில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்துவர்; போர்க் காலங்களிற் படையிற்சேர்ந்து பணியாற்றுவர்; தம் போர்த் திறமையொன்றே கருதி நாட்டு மக்களிடம் தவறாக நடந்துகொள்ளாமல், யாவரிடத்தும் பணிவாக நடந்து கொள்வர்.

பகைவேந்தரைப் போரிற் கொல்லும் பேராற்றல் பெற்ற வீரன் ஒருவன், போரில்லாத அமைதிக் காலத்தில் உழுது பயிர்செய்யுந் தொழிலை மேற்கொண்டிருந்தான். இத்தொழிலைச் செய்யுங்காலத்துத் தன் குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய உணவில்லாமையால், தன்னுார் மக்களிடம் உணவுக்குரிய தானியங்களைக் கடனாகப் பெற்றிருந்தான். அவனுடைய வயலில் வரகு முற்றி விளைந்தது.

வரகினை அறுத்த அரிதாள் குறைவாய் இருந்தபடியால், எருதுகளைக்கொண்டு மிதிக்கவிடாமல், இளைஞர்கள் தங்கள் கைகளாலே அரிதாள்களை அடித்து வரகினைக் குவித்தார்கள். தன் நிலத்தில் விளைந்த வரகிற் பெரும்பகுதியினை அவ்வீரன் தன் கடன்காரர்களுக்குக் கொடுத்து விட்டு, எஞ்சியதனைப் பசிமிக்க பாணர்களுக்குக் கொடுத்தனுப்பினான், தன் குடும்பத்தார் பசியினை நீக்குதற்குச் சிறிதுகூட விளைபொருள் இல்லாமையால், மீண்டும் பிறர்பாற்சென்று வரகினைக் கடனாகப் பெற முயன்றான். இவ்வாறு உலக நடையினை உணர்ந்து நடந்துகொண்ட தமிழ் மறவனது பண்புடைமையினைப் புலவரொருவர் புறப் பாடலொன்றில் (327) சுவை மிக எடுத்துரைக்கின்றார். இதனால், அரசரை வெல்லும் பெருவன்மையுடைய வீரர்களும், தங்கள் மனம் போனபடி வரம்பு கடந்து ஒழுகாமல், உலகியல் வரம்புக்கு உட்பட்டு, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து, அறத்தின் வழியொழுகினார்கள் என்பது பெறப்படும்.

ஆடவர் தமக்கு எதிரில்லாதபடி தமது ஆண்மைத் தன்மையை மேன்மேலும் போர்க்களத்திற் புலப்படுத்துதலையே தம்முடைய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். காவற்பெண்டு எனக் குறிக்கப் பெற்ற பெண்பாற் புலவருடைய மகனொருவன், பெருவீரனாய் விளங்கினன். அவன் எப்பொழுதும் போர்செய்தலையே பொழுது போக்காகக் கொள்ளும் ஆண்மை மிக்கவனாவன். அவனைக் காணச் சென்ற நண்பனொருவன், அவன் தாயினைப் பார்த்து, 'நின் மகன் எங்கேயுள்ளான்?' என வினவி நின்றான், அதுகேட்ட அவ்வீரனுடைய தாய், அவனை நோக்கி, ' “நின் மகன் எங்கேயுள்ளான் என்று என்னைக்

கேட்கின்றாய். அவன் எவ்விடத்திருந்தாலும் அவனை அறியேன். புலி தங்கியிருந்து வெளியே சென்ற குகையினைப் போல, அவனைப் பெற்ற வயிறோ, இதுவாகும். அவன் போர்க்களத்தின்கண்ணே வெற்றியாற் பொலிவு பெற்றுத் தோன்றுவான். அங்கே போய்ப் பார்ப்பாயாக,”(புறம்.36) எனக் கூறியனுப்புகின்றாள். 'புலியிருந்து போனமையால் வெறுவிதாகிய குகைக்கும் வெளிச்சென்ற புலிக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமைபோல, எனக்கும் என் வயிற்றிற் பிறந்த மகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.' எனத் காவற்பெண்டு, அறிவுறுத்தினமை ஆடவர்களது வீர வாழ்க்கையின் இயல்பினை இனிது விளக்குவதாம்.

ஒரு நாளிலே எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தச்சனொருவன் ஒரு மாதம் முயன்று செய்த தேர்க்கால், விரைவும் திண்மையும் உடையதாதல்போலப் போர்த் தொழிலில் விரைவும் திண்மையும் உடைய வீரர் பலர் இத்தமிழகத்திலே வாழ்ந்தனர். திடீரெனப் போர் ஏற்படும்பொழுது ஊர்மக்கள் எல்லாரையும் முரசறைந்து அழைத்தற்காக ஊர் மன்றத்திலே முரசு தொங்கவிடப்பட்டிருத்தல் மரபு. அம்முரசு பிறரால் அடிக்கப்படாது பெருங்காற்றின் மோதுதலால் அதன்கண் சிறிய ஒசை தோன்றுமானாலும், அதனைக் கேட்டுப் போர்ப்பறையென்று கருதிப் போருக்குப் புறப்படும் விரைவு உணர்ச்சி தமிழ் வீரர்கள்பால் விளங்கியது. 'ஏறு தழுவுதல்' என்னும் முறை அக்கால ஆண்மக்களது உடல் வலியையும் உள்ளத்திண்மையையும் நன்கு விளக்குவதாகும். இங்ஙனம் செய்தற்கரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்ற ஆடவர், தம்மை அன்பினால் காதலித்த உளமொத்த மங்கையரையே

மணந்து கொண்டனர். தம்மை விரும்பாத மகளிரைக் கூடுதல் தம்முடைய ஆண்மைத் தன்மைக்கு இழுக்காகுமென்பது அவர்தம் கருத்து. தனது உடல் வன்மையொன்றனையே பற்றுக்கோடாகக் கொண்டு மெல்லியலாராகிய பெண்டிரது உள்ளத்து உணர்ச்சியினை மதியாது உணர்வு கடந்து ஒழுகுபவன் ஆடவர்க்குரிய உரன் என்னும் திண்ணிய அறிவினைப் பெறாதவன் என இகழப்படுவான். விரும்பாத மகளிரை விரும்பி நிற்பவன் உரனில்லாதவன் என எல்லாராலும் இகழப்படுதல் உறுதி. “என்னை இகழ்ந்த அறிவில்லாதவனை யானையின் காலில் அகப்பட்ட மூங்கில் முளையைப்போல வருந்தப் பொருதிலேனாயின், தீதிலாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத மகளிரது புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக!” எனச் சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுகின்றான். விருப்பமில்லாத மகளிரைக் கூடுதலை நல்லாண்மைமிக்க ஆடவர் அருவருப்பாகக் கருதுவர் என்பது மேற்கூறிய நலங்கிள்ளியின் வஞ்சினத்தால் நன்கு புலனாம்.

தன்னை அன்பினால் காதலித்த மெல்லியலாளாகிய மகளிடத்து அவளைக்காட்டிலும் மென்மையாளனாய்ப் பணிந்தொழுகுதலும், வீரத்தின் வன்மையால் தன்னையொத்த ஆடவர்களிடத்தில் அவர்களைக் காட்டிலும் பேராண்மை படைத்தவனாய் நின்று அவர்களை அடக்கி ஆளுதலும் நல்லாண்மை மிக்க வீரனுக்குரிய பண்புகளாகப் பண்டைத் தமிழர்கள் விளக்கியுள்ளார்கள். ஆடவர் தமக்கொத்த அன்புடைய மகளிரை நாடித் திருமணம் செய்துகொண்ட பின்னர், மனையில் இருந்து இல்லறம் நிகழ்த்தும் உரிமையினை வாழ்க்கைத் துணைவியராகிய மனைவியர்க்கு வழங்கினர்.



மனைவியுடன் மகிழ்ந்து இல்லிருந்து நல்லறம் செய்தற்கேற்ற பொருளை ஈட்டுதல் ஆடவர்களின் கடமையாகும். வறுமையின் கொடுமையால் பசி நீங்க வாழ முடியாக இரவலர்களுக்கு வேண்டும் பொருளைக்கொடுத்து ஆதரித்து அறம் செய்தலும், தமக்கடங்காத பகைவரை வென்றடக்குதலும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் நுகர்தலும் ஆகிய உலகியலில் நிகழும் எல்லாச் செயல்களும் பொருளால் நிகழ்தற்குரியனவே. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’, என்ருர் திருவள்ளுவர். ஆகவே, தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளைத் தேடுதல் ஆடவரின் கடமையாயிற்று. தன் முயற்சியால் வந்த பொருளைக்கொண்டே ஒருவன் தன் வாழ்க்கையினை நிகழ்த்துகல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. ஒரு தொழிலும் செய்யாது தன் முன்னோர் தேடி வைத்த பொருளைக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவன் உயிருடையவனாகக் கருதப்படுவதில்லை. மணங்கொள்ளுமுன் பெற்றோரது ஆதரவின் கீழ் வாழ்ந்த மகன், உரிய பருவம் வந்ததும் தன் மனத்திற்கினிய மங்கையை மணந்து வாழ விரும்புகின்றான். அவன் தான் விரும்பிய மங்கையை மணம் செய்துகொள்ளுதற்குரிய பொருளைப் பெற்றோரிடம் வேண்டிப் பெறுவதில்லை. தனது திருமணத்தை முன்னிட்டுப் பொருளீட்டக் கருதியாவன் வேற்று நாடு செல்வது வழக்கம். இதனை ‘வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிதல்’ என்பர். தலைவன் மணந்து கொண்ட பின்னரும் பொருளீட்டுதற்கென மனைவியைப் பிரிந்து செல்லுதல் உண்டு. ‘இரப்பார்க்கு இல்லையென்று. சொல்வதைவிட இறத்தலே மேல்’, என்பது தமிழர்களது எண்ணமாகும். அறம்புரி நெஞ்சத்தவராய்த் தமிழ் நாட்டு ஆடவர் வாழ்ந்தனர். மனைக்கண்

மனைவியுடனிருந்து வாழ்வதன் நோக்கம், விருந்தினர்க்களித்து, வறுமையாளர் எல்லார்க்கும் நல்லாற்றின் நின்ற துணையாய் உதவி செய்தலே என்பது அவர்தம் கொள்கையாய் அமைந்தது. ஆண்மையுடையார் வீடுகள், இரவலர்க்கும் பிறர்க்கும் அடையா வாயிலையுடையனவாய் விளங்கின.மனைவியுடன் வாழ்க்கை நடத்துங்கால் ஆடவர் தம் நாட்டிற்கு வரும் இடையூறுகளை நீக்குதல் கருதி, அரசனுக்குத் துணையாய்ப் போர் செய்யப் பிரிந்து செல்லுதல் உண்டு.

‘போர்க்களத்திலே வீரத்திற்குத் தானே எல்லையாய் விளங்கும் வீரனொருவன், மனைக்கு விளக்கந்தரும் தன் மனைவியொடு கூடி வாழ்ந்து, நாட்டுக் குடிகளுள் ஒருவனாய் விளங்குகின்றான். அவனே பகைவர் தன் நாட்டிற் படையொடு புகுத்து தீங்கு செய்தவிடத்து, அவர்தம் சேனை வெள்ளத்தைத் தடுக்கும் அணையாகவும் விளங்குகின்றான்’, எனப் புலவர் ஒருவர் தமிழ்நாட்டு ஆடவரது இயல்பினைப் புறப்பாடல் ஒன்றில் 3814) எடுத்துரைக்கின்றார். இதனால், தமிழ் நாட்டிலுள்ள ஆடவர்கள் இந்நாட்டின் குடி மக்களாய் விளங்கியதுடன், சமயம் நேர்ந்தபொழுது போர் செய்து நாட்டினைக் காக்க வல்ல படை வீரர்களாகவும் தொண்டு செய்தார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

ஆண் மக்கள் தாங்கள் வாழும் நிலப் பகுதியை எல்லாப் பொருள்களும் விளைவதற்குரிய நிலையில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வளமுடையதாக்கினார்கள். அவர்களுடைய இடைவிடாத உழைப்பினால் நீரில்லாத பாலையும் வளமுடையதாய் மாறிற்று. எல்லா வளங்களும் ஒருங்கு அமைந்த நாடாயினும், அந் நிலத்தில் வாழும்

ஆடவர்கள் உழைப்பின்றிச் சோம்பி இருப்பார்களானால், அந்நாடு ஒரு பயனும் தருதலில்லை. ஆகவே, நிலத்தைப் பற்றிய முறையில் அதனை வளமுடையதாகவும் வளமற்றதாகவும் பிரித்துப் பேசுதல் பொருந்தாதெனவும், நல்ல நினைவும் நல்ல உழைப்புமுடைய ஆடவர்கள் எந்த நிலத்தில் வாழ்கின்றார்களோ, அந்த நிலமே நற்பயன் தருமெனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உய்த்துணர்ந்தனர். நிலமானது, நீர் வளமுடைய நாடு, மரஞ்செறிந்த காடு, மேடு, பள்ளம் எனப் பல்வேறு இயல்புகளை உடையதாதல் கருதி அந்நிலப் பகுதியினை ‘நன்னிலம்’ எனப் பாராட்டியும், ‘புன்னிலம்’ எனப் பழித்தும் பொது மக்கள் பேசுவார்கள். வளமில்லாத நிலமாயிருந்தாலும், நல்ல நினைவும் உழைப்பும் உடைய ஆடவர்கள் வாழ்ந்தால், நல்ல பயன்களைத் தருமெனவும், வளமார்ந்த நன்னிலமாயினும், தீய நினைவும் சோம்பலுமுடைய தீயவர் வாழ்ந்தால், ஒரு சிறிதும் பயன்படாதெனவும் உய்த்துணர்ந்த ஒளவையார், “நிலமே, நீ நாடாய் இருந்தாலும், காடாய் இருந்தாலும், மேடாய் இருந்தாலும், பள்ளமாய் இருந்தாலும், நினக்கு என நன்மை தீமையினை உடையை அல்லை. நின்பால் வாழும் ஆடவர்கள் எங்கெங்கே நல்ல எண்ணமும் உழைப்பும் உடையவர்களாய் விளங்குகின்றார்களோ, அவ்வவ்விடங்களில் நீயும் நல்ல பயனைத் தருகின்றாய். ஆதலால், நீ இனிது வாழ்வாயாக!” என ஒரு புறப்பாடலால் (187) நிலத்தை வாழ்த்துகின்றார். இவ்வாழ்த்து ஆடவர்களின் நன்முயற்சியால் நில இயல்பு வளம் பெறும் உண்மையினை நன்கு விளக்குதல் காணலாம்.

நல்ல வளமுடைய நாடாயினும், மனநலமில்லாது அறமல்லாதன செய்யும் ஆடவர்களைப்

பெற்றிருக்குமானால், அது தன் வளம் கெட்டுச் சிதையுமென்பர். ஆற்றிலே நீந்தி விளையாடிய இளநங்கை ஒருத்தி கை தளர்ந்து வெள்ளத்தின் வழியே செல்ல, அது கண்ட இளைஞன் ஒருவன் துடுமென ஆற்றிற்குதித்து அவளைக் கரையேற்றிக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய ஆடவனையே தான் மணந்துகொள்ள வேண்டுமென்பது அந்நங்கையின் விருப்பம். அவ்விருப்பத்தை உணர்ந்துகொள்ளாத தந்தையும் தமையன்மாரும் அவளை வேறொருவர்க்கு மணஞ் செய்யக் கருதினர். தலைமகளது அன்புக்கு மாறாக அறம் அல்லன செய்யத் துணியும் அவர்கள் செயல் நாட்டின் இயற்கை வளத்தைச் சிதைத்துவிடும் என உணர்ந்த தோழி, “இம்மலையில் வாழ்வார் தம் மகளை அன்பினால் காப்பாற்றிய தலைவனுக்குக் கொடுக்க நினையாது அயலான் ஒருவனுக்குக் கொடுக்க நினைந்து அறத்துக்கு மாறாக நடந்துகொள்ளுவதால், இனி இம்மலை நிலத்தில் வள்ளிக் கிழங்கும் நன்றாக விளையா; மலைமேல் தேனடைகளும் தொடுக்கப்பட மாட்டா ; புனங்களில் தினைகளும் நிறைந்த கதிர்களை ஈனாவாம்!” எனச் செவிலித் தாயிடம் கூறி வருந்துகின்றாள் [1]. நிலத்தில் வாழும் நல்ல ஆடவர்களின் நினைவும் செயலும் பற்றியே அந்நிலம் வளம் பெறுதல் கூடுமெனப் பண்டைச் தமிழ் மக்கள் எண்ணினமை தோழியின் கூற்றால் நன்கு புலனாம்.

‘எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்ல வாழிய நிலனே !


  1. கலி. 39. புறம். 189,