சங்ககாலத் தமிழ் மக்கள்-3/தமிழகம்

தமிழகம்

மக்களாற் பேசப்படும் மொழிவழக்கினைத் துணையாகக் கொண்டுதான் ஒரு நாட்டின் எல்லை வரையறுக்கப்படும். அவ்வாறே நம் தமிழ்நாடும் தமிழ் வழங்கும் நிலத்தை வரம்பாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட எல்லையினையுடையதாகும். தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர் ‘தமிழர்’ என வழங்கப்பெறுவர். தமிழர் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் நிலப்பரப்புத் ‘தமிழகம்’ எனப்படும். தொல்காப்பியனார் காலத்தில் வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே குமரியாறும், மேற்கும் கிழக்கும் கடலும் தமிழ் நாட்டின் எல்லையாய் விளங்கின. இவ்வெல்லைகளே வரையறுக்கும் வேலியாய் அமைந்தது, தமிழர்களாற்பேசப்பெற்றுவரும் தமிழ் மொழியே யாகும்.

தமிழ்மக்கள் பண்டைநாளில் நாவலந்தீவு முழுவதிலும், உலகில் வெளியிடங்களிலும் பரவி வாழ்ந்தார்கள். ஆயினும், அவர்தம் தமிழ்மொழி சிதையாது வளர்ந்து சிறத்தற்கு நிலைக்களமாய் விளங்கும் இடம், வடக்கே வேங்கடமலைத் தொடரையும் தெற்கே குமரியாற்றையும் எல்லையாகவுடைய தமிழகமேயாகும். வேங்கடத்தின் வடக்கேயுள்ள நிலப்பகுதிகளில் ஆங்காங்கே தமிழ்மொழி பேசப்பட்டதெனினும், அவ்விடங்களில் வழங்குங் தமிழ் சிதைந்து மாறுபட்டதனால், அந்நாடுகளைத் தமிழ் கூறும் நல்லுலகமாகத் தமிழ்ச் சான்றோர் கருதவில்லை. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட நிலப்பகுதியே தொன்று தொட்டுத் தமிழகம் என வழங்கப்பெறுவதாகும். நிலத்தின் இயற்கைக்கு ஏற்பத் தமிழ்மொழி வளர்ந்து

சிறத்தற்கு இக்காடு நிலைக்களமாதலால், ‘செந்தமிழியற்கை சிவணிய நிலம்’ எனப் புலவர்களாற் பாராட்டப் பெறுவதாயிற்று.

‘நாட்டின் அமைதிக்கேற்ப அக்காட்டில் தோன்றி வழங்கும் தாய் மொழியின் சொல் வழக்குகள் உருப்பெறுவன’, என்பர். தமிழர் நான்கு திசைகளையும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வழங்கினர். கீழ், கிழக்கு எனப் பள்ளத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு தோன்றும் திசைக்கும்; மேல், மேற்கு என மேட்டு நிலத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு மறையுங் கிசைக்கும் வழங்குதல் தமிழ் வழக்காகும். இச்சொல் வழக்கினை நோக்கினால், தமிழ் மக்களின் தொன்மைப் பிறப்பிடம் கிழக்குப் பகுதி பள்ளமாகவும் மேற்குப் பகுதி மேடாகவும் அமைந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இம்முறையில் அமைந்த நாடு இத்தென்னாடேயென்பதனை நிலநூல் வல்லார் ஏற்றுக்கொள்வர். ஆதலால், தமிழ் மக்களின் தாய்நாடு இத்தென்னாடே என்பதும், தமிழர் இத்தமிழ் நாட்டின் பழங்குடி மக்களே என்பதும் நன்கு துணியப்படும்.

தமிழ் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பகுத்து, நானிலம் என்ற பெயரால் பண்டைத் தமிழாசிரியர்கள் வழங்கினார்கள். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். இந்நிலப்பகுதியிற் குறிஞ்சிச் செடி மிகுதியாகக் காணப்படுதல் பற்றி இதற்குக் குறிஞ்சியென்று பெயரிட்டனர். காடடர்ந்த நிலம் முல்லையாகும். முல்லைக் கொடி பெருகவுளதாதல் பற்றி இந்நிலம் முல்லையென வழங்கப்பெற்றது. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகும். மருதமென்னும் மரம் இங்கிலத்திற்பெருக வளர்தல் பற்றி இதனை மருதம்



என வழங்கினார்கள். கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தலாகும். நெய்தல் என்னும் கொடி நிறையவுளதாதல் பற்றி இந்நிலப்பகுதிக்கு நெய்தல் என்னும் பெயர் வழங்குவதாயிற்று

மலைகளில் விலங்குகளை வேட்டையாடித் தினை முதலியன விதைத்து வாழ்ந்தவர்கள் குறிஞ்சி நில மக்கள். இவர்கள் குறவர் என வழங்கப்பெறுவார்கள். காடு அடர்ந்த நிலப்பகுதிகளிற் பசுநிரைகளை மேய்த்து வரகு முதலிய புன்புலப் பயிர் செய்து வாழ்ந்தவர்கள் முல்லை நிலமக்கள். இவர்களை ஆயர் என வழங்குதல் மரபு. காடு கெடுத்து நாடாக்கிக் குளத்தொட்டு வளம் பெருக்கி நிலந்திருத்தி நீர் பாய்ச்சி நெல் முதலிய நன்செய்ப்பயிர்களை விளைவித்து, அரசியலமைத்து வாழ்ந்தவர்கள் மருத நிலமக்கள். இவர்கள் உழவர் என வழங்கப்பெறுவார்கள். கடலோரத்திலே குடிலமைத்துக்கொண்டு கடலிற் படகுகளைச் செலுத்தி வலை வீசி மீன் பிடித்து, உப்பு விளைவித்து விலைப்படுத்தி வாழ்தலையே தொழிலாகக் கொண்டவர்கள் நெய்தல் நிலமக்கள். இவர்கள் பரதவர் என வழங்கப்பெறுவார்கள்

மேற்கூறிய நான்கு நிலங்களின் வேறாகப் பேசப்படும் நிலப்பகுதி, நீரும் நிழலும் அற்ற பாலையாகும். எல்லாப் பருவத்திலும் பாலையாகவே விளங்கும் நிலப் பகுதி தமிழகத்தில் இல்லை. ஆதலால், பாலை நிலம் எனத் தனியே ஒரு பிரிவினைப் பண்டைத் தமிழர் வகுத்துக் கொள்ளவில்லை. வேனிற்காலத்து நண்பகற்பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் ஒருவரும் நடத்தற்கியலாதபடி காய்ந்து வெதும்பிய வழியே ‘சுரம்' என்னும் பெயரால் தமிழிலக்கியங்களில் வழங்கப்படுகின்றது. தமிழ்மக்கள் 

இதனைத் தனி நிலமாக எண்ணுவதில்லை. நீரும் நிழலுமில்லாது வெதும்பிய சுரத்தில் எந்த உணவும் விளைவதில்லை. இங்கு வாழ்பவர் உழவு முதலிய தொழில்களுள் ஒன்றையும் செய்தற்கு வசதியில்லாமையால், வழிப் போவாரைத் துன்புறுத்திப் பொருள் பறிக்கும் கொடுங் தொழிலை மேற்கொள்வாராயினர்.

நானிலமக்கள் தங்கள் ஊர்தோறும் தங்களுக்கேற்ற தலைவனொருவனது காவலின்கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். குறிஞ்சி நிலக் தலைவனை வெற்பன் என்றும், முல்லை நிலத் தலைவனைக் குறும்போறை நாடன் என்றும், மருதநிலத் தலைவனை ஊரன் என்றும், நெய்தல் நிலத்தலைவனைத் துறைவன் என்றும் வழங்குதல் மரபு. இத்தலைமக்களால் ஆளப்படும் சிற்றூராட்சியே முதன்முதல் தோன்றியது. ஒவ்வொரு சிற்றூர் மக்களும், தங்களால் நன்கு மதிக்கப்படும் அறிவும் ஆற்றலும் உடைய தலைமகன் ஒருவனது சொல்லுக்கு அடங்கி, அவனது காவலில் அச்சமின்றி வாழ விரும்பினார்கள். இவ்விருப்பம் நாளடைவில் வளர்ச்சி அடையத் தொடங்கியது.

இயற்கையில் விளந்த உணவுப் பொருளைக்கொண்டு விலங்கு முதலியவற்றை வேட்டையாடி வாழ்ந்த வாழ்வு,மலைவாணர் வாழ்வாகும். உணவுக்குரிய விதைகளைப் புன்புலங்களில் விதைத்து, ஆடுமாடுகளை வளர்த்து, அவற்றாற் கிடைக்கும் பால் முதலிய பயன்களைப் பெற்று வாழும் வாழ்வு முல்லைநில வாழ்வாகும். காடுகளை அழித்து நாடாக்கிப் புன்புலன்களைத் திருத்தி நன்செய்களாக மாற்றி, எருது முதலிய விலங்குகளைத் தொழில்களிற் பழக்கி, உழவினால் உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவற்றை விளைவித்த செயல் மருதநில

நாகரிகமாகும். கடற்பரப்பிலே கட்டு மரங்களையும் படகுகளையும் செலுத்திச் சென்று மீன்களைப் பிடித்து அவற்றை உணவாகப் பயன்படுத்தி, உப்பினை விளைவித்துக் கடல் கடந்து பண்டமாற்றும் வாணிகத் தொழிலை வளர்த்தது நெய்தல் நிலவாழ்வாகும்.

மருதநிலத்தார் கண்ட உழவு முதலிய தொழில்களும், நெய்தல் நிலத்தார் கண்ட கடல்வழி வாணிகமும் பெருகப் பெருக, அவர்தம் சிற்றார்களும் பேரூர்களாய் விரியத் தொடங்கின. அதனால், சிற்றார்த் தலைவர் பலர்க்கும் பெருந்தலைவனாகப் பேரூர் மன்னனொருவனைத் தேர்ந்து அமைத்துக்கொள்ளும் பொறுப்புச் சிறப்பாக மருதநிலத்தார்க்கு உரியதாயிற்று. உழவர்களால் தங்களுக்குரிய பேரூர்த் தலைவனாகத் தேர்ந்துகொள்ளப் பெற்றவனே வேந்தன் என வழங்கப் பெற்றான். உழவர்களுடைய முயற்சியால் நிலத்தில் விளையும் பொருள்களில் ஒரு பகுதியைக் கடமையாகக் கொண்டு சிற்றூர் பலவற்றையும் புரப்பது அவ்வேந்தனது இன்றியமையாக் கடமையாகக் கருதப் பெற்றது. நாளடைவில் கடலிற் கப்பல்களைச் செலுத்தி வாணிகம் செய்வதனைக் கண்காணிக்கும் பொறுப்பும் மன்னனுக்கு உரியதாய் அமைந்தது. உழவுக்கும் வாணிகம் முதலிய பிற தொழிலுக்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். நிலை பெறுதல் என்னும் பொருளுடைய ‘மன்னுதல்’ என்பதன் அடியாகப் பிறந்த பெயரே ‘மன்னன்’ என்பதாகும். மக்களுடைய வாழ்வு நிலைபெற அவர்கள் நாட்டினை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட பேரூர்த் தலைவன், மக்களால் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப் பெறுவானாயினன்.



அதனால், அவனுடைய குடும்பமும் படைப்புக் காலந்தொட்டு வழிவழியாக அழியாது நிலை பெற்று வருவதாயிற்று. வரையறுக்க முடியாக தொன்மைக் காலத்திலேயே தங்கள் நாட்டைப் பாதுகாத்தற்குரிய வேந்தர்களைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தார்கள்.

தமிழகம் பண்டைநாளில் மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மூன்று பகுதிகளையும் முறையே சேரர், சோழர், பாண்டியர் என்றமூன்றுகுடும்பத்தவர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். தமிழகத்தின் மேலைக் கடற்கரையில் அமைந்த மலைகாட்டுப் பகுதியினை ஆண்டவர் சேரமன்னர். வடக்கே வேங்கடமலையினையும் தெற்கே திருச்சிராப்பள்ளி வளநாட்டையும் உள்ளிட்ட சிலப்பகுதியினை யாண்டவர் சோழமன்னர். இங்காட்டின் தென்பால் அமைந்த நிலப் பகுதி முழுவதனையும் ஆண்டவர் பாண்டிய மன்னர். இம்மூவேந்தரும் படைப்புக் காலந்தொட்டு இத்தமிழகத்தை ஆட்சி புரிந்த பழங்குடியினர் எனப்படுவர். கொடையும் ஆற்றலும் நிரம்பிப் புகழால் மேம்பட்ட இவ்வேந்தர் மூவரையும் ‘வண்புகழ் மூவர்’ என ஆசிரியர் தொல்காப்பியனார் பாராட்டிப் போற்றுகின்றார். சேர மன்னர்க்குப் பனை மாலையும், சோழர்க்கு ஆத்தி மாலையும், பாண்டியர்க்கு வேப்பமாலையும் அடையாள மாலைகளாகக் கொள்ளப் பெற்றன. இவ்வடையாள மாலைகளை அணிந்த படை வீரர்களை மூவேந்தரும் பெற்றிருந்தனர் என்பது,

“போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்”

என்ற தொல்காப்பியத் தொடரால் நன்கு விளங்கும். சேர மன்னர்கள் வானளாவிய மலைகளில் வாழ்ந்தமையால், அங்குள்ள கொடிய விலங்குகளைத் தங்கள் வலிய வில் வேட்டையினாற்கொன்று போக்கினார்கள். வில்லாற் போர் செய்து வீரத்தை விளைவித்த இவ்வேந்தர்கள், வில் எழுதிய கொடியினைத் தங்களுக்கு அடையாளமாகக் கொண்டார்கள். பாண்டியர்கள் கடல் சார்ந்த நாட்டினை ஆண்டு வந்தமையால், அவ்வப்போது தங்கள் நாட்டிற்குக் கடல் கோளால் நேர்ந்த இடையூறுகளை எதிர் நோக்கி நின்று, தங்கள் குடிமக்களைக் கண்ணிமையாது காக்கும் உணர்வு மிகுதியுடையவர்களானர்கள். மீன் தன் கண்களால் நோக்கித் தன் குஞ்சுகளை வளர்க்குமாறு போலத் தம் குடிகளைக் கண்ணிமையாது நோக்கி நின்று கடல் கோளிற் காப்பாற்றிய பாண்டியர்க்குக் கயல் மீன் எழுதிய கொடி அடையாளமாயிற்று. சோழர்கள் ஆண்ட நிலப் பகுதி முன்னாளிற் காடாய் இருந்தமையால், அங்குள்ள புலி முதலிய விலங்குகளை வேட்டையாற்கொன்று போக்கிக் காடு கெடுத்து நாடாக்கினார்கள். வலி மிக்க புலிகளை வென்று மக்களுக்கு நலஞ் செய்த சோழர்களின் வெற்றி வன்மைக்கு அறிகுறியாகப் புலி எழுதிய கொடி அவ்வேந்தர்க்கு அடையாளமாயிற்று.

இம்மூவேந்தருடைய ஆட்சி, இன்ன நாளில் தமிழகத்தில் தோன்றியது என வரையறுத்துக் கூற முடியாத அத்துணைப் பழைமையானதாகும். தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வரும் பெரிய குடும்பத்திலே பிறந்தவர்களது தன்மையினை விளக்கக் கருதிய பரிமேலழகர், தொன்று தொட்டு வருதல்-சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருதல்’, என இம்மூவேந்தர் குடும்பத்தின் பழைமையினை விரித்துரைக்கின்றார்.

சேர மன்னர்களின் வில்லாற்றலும், பாண்டியர்களின் கல்வித் திறனும், சோழர்களின் உணவால் விளைந்த அறத்தின் வழிப்பட்ட பெருஞ்செல்வமும் ஒன்று சேர்ந்து துணை செய்தமையால், தமிழ் மக்களது அரசியல் வாழ்வு திறம்பெற மேம்படுவதாயிற்று. தமிழ் வேந்தர்கள் தமிழகமாகிய உடம்புக்கு உயிர்போன்று இன்றியமையாதவர்களாய் வினையாற்றி விளங்கினார்கள். அதனல், தமிழகம் இம்மூவர்க்கும் ஒப்ப உரியதாயிற்று. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என இத்தமிழகத்தை மூவேந்தர்க்கும் பொதுவாகத் தொல்காப்பியனார் உரிமை செய்து கூறுவர்.

மக்களை ஒரு நெறிமுறையில் வாழச் செய்யும் அரசியலமைதியே ஒரு நாட்டிற்கு முதற்கண் வேண்டப்படுவதாகும். இவ்வமைதி பெறாத காடு, வாழ்க்கை வளங்கள் எல்லாம் குறைவறப் பெற்றிருப்பினும், நாடாக சிலைபெறுதல் இயலாது. இந்நுட்பத்தினைப் பண்டைத் தமிழர் நன்குணர்ந்திருக்தனர்.

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.”

என்றார் தெய்வப்புலவர். “உடம்பை வளர்க்கும் உணவுப் பொருளாகிய நெல் முதலிய தானியங்களோ, அவை விளைதற்குக் காரணமாகிய நீரோ, இவ்வுலக வாழ்க்கையை நிலைபெறச் செய்வன அல்ல. மக்களை ஒருநெறிப்படுத்தி வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே இவ்வுலகிற்கு உயிர் ஆவான். ஆதலால், ‘இவ்வுலகிற்கு உயிர் யானே’, என உணர்ந்து முறை செய்தல் வேந்தனது கடமையாகும்,” என மோசி கீரனார் என்னும் புலவர்

கூறுகின்றார்[1] . இக்கூற்றுக்கு இலக்கியமாகத் தமிழ் வேந்தர் மூவரும் தத்தம் கடமையினை உணர்ந்து செயலாற்றினர்.

தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்துான்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கிருந்து நிகழ்த்தினர். தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப் பெற்றுச் செல்வது வழக்கம் [2]. தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்று கூடி அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு. இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், தமிழ் மக்களுடைய உள்ளத்திற்கு அளவில்லாத மகிழ்ச்சியை விளைவித்தது. பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒருங்கு நிகழ்த்தி வழியிடையே தங்கியிருக்கின்றான், இங்கே யாழினிடத்தே தோன்றும் இன்னிசையும் அதற்கியையப் பாடும் மிடற்றுப் பாடலும்

ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார் [3]. இவ்வுவமையால் தமிழரசர் மூவரும் தம்முள் ஒற்றுமையுடையவராய் அரசியலை நன்கு நிகழ்த்தித் தமிழ் மக்களை மகிழ்வித்தனரென்பது நன்கு புலனாகும்.

இங்ஙனம் தமிழ் வேந்தரிடையே காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடி புகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத்தவராய் வாழ்ந்த அம் மூவரையும் பேதித்துப் பிரித்து வைக்குங் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அதனால், மூவேந்தரும் தொன்று தொட்டு வரும் தம் உறவினை மறந்து, தமக்குள் பகைமை பாராட்டுவாராயினர்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விருவருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர்

நேரிற்கண்டு மகிழ்ந்தார் ; தாம் பெற்ற மகிழ்ச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைபெற்றிருக்க வேண்டும் என விரும்பினார். அவ்விருப்பத்தால் தம் நாட்டுத் தலைவனாகிய சோழ மன்னனை நோக்கிக் கூறியதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் (புறம் 58) படிப்பார் உள்ளத்தை உருக்கும் நீர்மையதாம்;

“வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன். நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேருராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண் அரசு வீற்றிருக்கும் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன். நீவிர் இருவீரும் கண்ணன், பலதேவன் என்னும் இரண்டு பெருந்தெய்வங்களும் கூடி நின்றாற்போலப் பகைவர்க்கு அச்சக்தரும் தோற்றத்துடன் நண்பு செய்து ஒழுகுகின்றீர். ஆதலால், இந்த நட்பைக்காட்டிலும் தமிழகத்திற்கு இனிமை தருஞ் செயல்கள் எவையேனும் உளவோ? இவ்வாறே ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து ஒழுகுவீராக! இப்பொழுதுள்ள நட்பினின்றும் வேறுபடாதிருப்பீரானால், கடல் சூழ்ந்த இவ்வுலகவுரிமை முழுவதும் உமது கையகத்தது ஆகும். உங்கள் ஒற்றுமைத் திறத்தைக்கண்டு பொறாமையுற்ற அயலார் சிலர், உங்களைத் தனித்தனியே அணுகி, நன்மை தருவன போலவும், நீதியொடு பொருத்தின போலவும், நும் முன்னோருடைய பழைய ஒழுக்கத்தை விரித்துரைப்பன போலவும் அமைந்த சொற்களை வஞ்சனையாகச் சொல்லி, உங்களை வேறுபடுத்தி, இகல் விளைத்தற்குச் சமயம் பார்த்துத் திரிகின்றார்கள். ஆதலால்,

அவர்களுடைய பொறாமை விளைக்கும் தீயசொற்களைக் கேளாது இன்றே போல என்றும் நண்பினாற் கூடி வாழ்வீராக!. நும்முடைய வேல் போர்க்களத்தின்கண் வென்று மேம்படுக நுமக்குப் பகையாயினருடைய குன்றுகள் புலியும் கயலும் ஆகிய அடையாளங்களைச் சேரப் பொறிக்கப் பெற்ற சிகரங்களையுடையன ஆகுக !” என்பது, அப்பாடலால் புலவர் கூறிய அறிவுரையாகும்.

இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்று பட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வறிவுரை பெரிதும் பயன் தருவதாகும்.

பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்றவரல்லர்; தொன்று தொட்டு நாட்டினையாளும் வேந்தரது பழங்குடியிற்பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந்நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப் பிறப்பின் பயனாகத் தொடர்ந்து வரும் அறிவு திரு ஆற்றல்களினாலும், தம்மால் பயிற்றப்பெற்ற படை வீரர்களின் போர்த்திறத்தினாலும், மக்களது விருப்பத்திற்கேற்பத் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சேனைத்தலைவர் முதலிய உடன் கூட்டத்து அதிகாரிகளின் வினைத்திட்பத்தினாலும் தமிழ் வேந்தர் தமக்குரிய எல்லையினை அறநெறி பிறழாது ஆண்டு வருவாராயினர். இவ்வாட்சி முடியாட்சியே. நாட்டு மக்களைத் தன் குடும்பத்தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை

முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலேபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம் கீழ் வாழும் குடிமக்களின் கவலைகளையெல்லாம் தம் உள்ளத்தடக்கி ஊணுறக்கமின்றி உழைக்கும் பொறுப்பு, தமிழ் நாட்டு முடிவேந்தர்க்கு உரியதாயிருந்தது. நாட்டில் உரிய காலத்தில் மழை பெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப்பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி குடிமக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக்கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்றும் நல்ல அரச குடும்பத்திலே பிறப்பதனை மகிழ்ச்சிக்குரிய செயலாகத் தமிழ் வேந்தர் எண்ணினாரல்லர்.

“மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்!
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்!
குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்.”

-சிலப். காட்சி. 100-104

எனச் சேரர் பெருமான் செங்குட்டுவன் கூறியதாக அமைந்த அனுபவமொழி, முடிவேந்தர்கள் ‘குடி தழிஇக் கோலோச்சும்’ முறையின் அருமையையும், அதனால் அரசர்க்குண்டாகும் கவலைகளையும் நன்கு விளக்குவதாம்.

நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் கனவிலுந் தெரியாததொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும்,தம்உள்ளக்கருத்தினைஅஞ்சாது

எடுத்துரைக்கும் பேச்சுரிமையும், தாம் விரும்பிய முறையில் கடவுள் வழிபாட்டினை அமைத்துக்கொள்ளும் சமய உரிமையும், விரும்பிய இடங்களுக்குத் தடையின்றிச் செல்லும் போக்குவரத்துரிமையும், தமக்கு இயன்ற தொழில்களைச் செய்து பொருளீட்டுதற்குரிய தொழிலுரிமையும் ஆகிய இவையெல்லாம் குடிமக்களின் கிழமைகளாகவே கருதப்பட்டு, அக்காலத் தமிழ் வேந்தர்களாற் காக்கப் பெற்றன. நுணுகி நோக்குங்கால், அக்காலத் தமிழர் அரசியல், ‘முடியாட்சி' என்ற பெயரால் நடைபெற்ற குடியாட்சியாகவே விளங்கினமை இனிது புலனாம்.

நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சேனை. அரசியல் வரம்புக்கு உட்பட்ட மக்களாகத் தங்களைக் கருதிக்கொண்டு, அவ்வரம்பில் அடங்கி வாழுந்திறம் நாட்டு மக்கள் உள்ளத்தில் நிலைபெறுதல் வேண்டும். தங்கள் கடமை உணர்ந்து நடக்கும் இயல்புடையவர்களே உரிமை பெற்ற குடிமக்களாகக் கருதப்படுவார்கள். அரசியல் வேலியின் துணை கொண்டு ஒரு நாட்டில் முதற்கண் விளைவித்துக்கொள்ள வேண்டிய பொருள், அமைதி வழி நின்று உழைக்கும் உழைப்பே ஆகும். ஏனைய உணவு முதலாகவுள்ள நுகர்பொருள்கள் யாவும் இவ்வுழைப்பின் பயனாகத் தாமே உளவாவனவாம். நாட்டிற்கிடைக்கும் பொருள்களை மக்கள் பகிர்ந்து உண்டு வாழ்தற்கு அமைந்த நெறி முறைகளை வகுத்து நாளுங் கண்காணிக்குகந் திறமுடையானே அமைச்சனாவான். தமக்குரிய நிலப்பகுதியை ஆளும் மன்னர், பிற நாட்டு அரசியலின் உதவியைப் பெறுதல் கருதி நண்பு செய்தொழுகுதல் தமது அரசியலை வளர்த்தற்குரிய வழியாகும். உலக வாழ்வின் பொது அமைதியைக் கருதாது ஒரு

நாட்டின்மேற் போர் தொடங்குவார் யாவரேயாயினும், அவரை அஞ்சாது எதிர்த்து நின்று பொருது வெல்லுதற்குப் பொருத்தமான இடமும் சார்பும் ஆகிய காவலைத் தேடி உருவாக்கும் நிலையே ‘அரண்’ எனப்படும். மேற்கூறிய அரசியல் உறுப்புக்கள் ஆறனையும் குறைவறப்பெற்றவனே அரசர்களுட்சிறந்தவன் ஆவன். அரசியல் அங்கங்களாகிய படை, குடி, பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்னும் இவற்றின் இயல்புகள் யாவும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் பொருட்பாலில் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. திருவள்ளுவர் கூறும் அரசியல் நுட்பங்களெல்லாம் சங்ககாலத் தமிழ் வேந்தர் ஆட்சி முறையிலிருந்து நேரிற்கண்டுணர்ந்து வெளியிட்ட அனுபவ உண்மைகளேயாகும்.

தமிழரசர்கள் அரசியல் முறையிற்பிழையாது, அறனல்லாதன தங்கள் நாட்டின்கண் நிகழவொட்டாமல் தடுத்து, வீரத்தின் வழுவாத மேன்மையுடையவர்களாய் விளங்கினார்கள். மன்னனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது, அவனுடைய படை வன்மையன்று ; யாரிடத்தும் விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையில் நடந்துகொள்ளும் அரசியல் முறையேயாம்.

“வேலன்று வென்றி தருவது; மன்னவன்
கோல்;அதூஉம் கோடா தெனின்.”

என வரும் வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாம். மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை நோக்கி, அறத்தின் வழிப்பட்ட அரசியல் முறையினை ஒரு புறப்பாடலால் (புறம். 55) அறிவுறுத்துகின்றார்;

“வேந்தர் பெருமானே, யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகளாலும் மன்னர்களது சேனை சிறப்புற்றிருந்தாலும், அறநெறியை அடிப்படையாகக் கொண்டதே அரசர் பெறும் வெற்றியாகும். அதனால், ‘இவர் நமக்கு வேண்டியவர்’, எனக் கருதித் தம்மவர் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக்கொள்ளாமலும், ‘இவர் நமக்கு அயலார்’, எனக் கருதிப் பிறருடைய நற்குணங்களைப் போற்றாமலும், ஞாயிற்றை ஒத்து வெம்மை மிக்குத் தீயாரைக் கொல்லும் வீரமும், திங்களையொத்து உளங்குளிர்ந்து நல்லாரைப் போற்றும் அருளுடைமையும், மழையைப்போன்று எல்லார்க்கும் வரையாது வழங்கும் வண்மையும் என இம்மூன்று குணங்களையும் உடையவனாகி, வறுமையுற்றார் நின்னாட்டில் இல்லையாக, நீ நெடுங்காலம் வாழ்வாயாக” என மருதன் இளநாகனார் நன்மாறனுக்கு அரசியல் முறையினை அறிவுறுத்தினமை கருதத் தகுவதாம்.

அறத்தினை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றதே தமிழ் வேந்தரது அரசியல் நெறியாகும் [4] . அக்காலத் தமிழ் மன்னர் மேற்கொண்ட போர் முறையும் அறத்தின் வழியமைந்ததேயாகும் [5] . ஒரு நாட்டின்மேற் போர் தொடங்குதற்கு முன் அந்நாட்டிலுள்ள பசுக்களையும், பசுப்போன்று தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலற்றராகிய பார்ப்பார், பெண்டிர், பிணியாளர், மூத்தோர், குழந்தைகள், பிள்ளைப்பேறில்லாத ஆடவர் என்னும்

இவர்களையும் இடர் நேராமற்போற்றிக் காத்துப் படை வீரர்களுடன் மட்டும் போர் செய்யும் முறை பண்டைத் தமிழ் மக்களின் பேரறமாகக் கருதப்பட்டது [6]."

அறத்தின் வழியினைப் புலப்படுத்திப் பெரியார் சென்ற நெறிமுறையிலே தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வதாயிற்று. அதனால், தமிழர் எத்தகைய இடையூறுமின்றி இனிது வாழ்ந்தனர். ‘தொண்டைமான் இளந்திரையனால் ஆளப்பெற்ற நிலப்பகுதியிலே வழிப் போவாரைக் கதறும் படி தாக்கி அவர்கள் கையிலுள்ள பொருள்களைப் பறித்துக்கொண்டு களவு செய்வார் இல்லை; அந்நாட்டில் இடியும் வீழ்வதில்லை ; பாம்பும் தீண்டி வருத்துவதில்லை; காட்டின்கண்ணுள்ள புலி முதலிய விலங்குகளும் பிறர்க்குத் துன்பஞ் செய்வதில்லை’, எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் தொண்டைமானது செங்கோன்மையைப் பாராட்டுகின்றார் [7]

அரசனுக்குப் படைவீரர் உடம்பாகக் கருதி வளர்க்கப் பெற்றனர். ‘நின்னுடன் பழையதாய் முதிர்ந்த உயிரினும் அவ்வுயிருடனே கூடி முதிர்ந்த நின் உடம்பை யொத்த வாட்படை வீரர்’ எனப் பாண்டியனை நோக்கி,அவனுடைய படை மறவர்களைப் புலவரொருவர்



பாராட்டிப் போற்றுகின்றார் [8] . ‘அரசர் பெருமானது திருமேனியாய் விளங்கும் சேனாமுகம் வாழ்க!’ எனப் பறையறைவோன் செங்குட்டுவனையும் அவனுக்கு உடம்பாய் விளங்கிய சேனையையும் வாழ்த்தியதாக இளங்கோவடிகள் கூறுவர் [9]. மன்னனது உடம்பாய் விளங்கிய தமிழ்ப்படை வீரர்கள் கூற்றுவனே வெகுண்டு போருக்கு வந்தாலும் மனம் விரும்பி எதிர் நின்று பொருது வெல்லும் ஆற்றலுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள் [10]. இத்தகைய தறுகண்மை மிக்க தமிழ் வீரர்களாற்சூழப்பெற்ற மன்னர் தாம் எண்ணியது முடிக்குங் திண்மை பெற்று விளங்கினர். தம் முன்னேற்றத்திற்கு இயற்கையே தடையாய் நின்றாலும், அதனை மாற்றித் தாம் நினைத்தது முடிக்கும் ஆற்றல் தமிழ் வேந்தர்பால் நிலைபெற்றிருந்தது. சங்ககாலத்தில் வாழ்ந்த கரிகால் வளவன் எண்ணியது முடிக்குந் திண்ணியனாய் விளங்கிய திறத்தைப் பட்டினப்பாலைப் பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது :

“மலைஅகழ்க் குவனே! கடல்தூர்க் குவனே !
வான்வீழ்க் குவனே !! வளிமாற் றுவன்!'எனத்
தான்முன் னிய துறை ”

போயினான் கரிகால் வளவன் என்றும், அவ்வாற்றலாற் குறுகிலமன்னர்களையும் பெருநில வேந்தர்களையும் வென்றடக்கினான் என்றும், காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கினான் என்றும், தன் தலைநகராகிய உறையூரைப் பெருக்கிக் கோயிலொடு குடிகளே நிலைபெற அமைத்தான் என்றும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகாலனது நினைத்தது முடிக்குந் திறத்தை வியந்து போற்றுகின்றார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவரை நோக்கி, ‘நீவிர் எம்மால் ஆளப்படும் நாட்டிலிருந்தும் எம்மை நினைப்பதில்லையே!' என அன்பினால் விணாவினான். அது கேட்ட புலவர், “பரந்த சேனைகளையுடைய அரசே, நீ சினந்து நோக்கும் பகைவர் நாடுகள் தீயாற்சுடப்பட்டு அழிகின்றன. நீ அருளுடன் நோக்கும் நண்பர் நாடுகள் பொன் விளையும் புது, வளம் பெறுகின்றன. நீயோ, வெம்மை மிக்க ஞாயிற்றினால் நிலவை உண்டாக்கிக்கொள்ள விரும்பினாலும், குளிர்ச்சி மிக்க சந்திரனால் வெயிலைப் பெற வேண்டினாலும் நீ விரும்பியதைச் செயற்கையினால் விளைவித்துக்கொள்ளும் எண்ணறிவுடையவனாய் விளங்குகின்றாய் ஆதலால், பரிசிலர் பலர் வெளி நாட்டிலிருந்தும் நின்னையே நினைக்கின்றனர், நாங்களோ, நின்னாற் பாதுகாக்கப்பெறும் இச்சோழநாட்டிற்பிறந்தமையால், என்றும் நினது அருள் நிழற்கண்ணே வளரும் இயல்புடையோம் இவ்வாறு நினது காவலில் வாழும் நாங்கள் நின்பால் வைத்த விருப்பத்தை வெளியிட்டுச் சொல்லவும் வேண்டுமோ [11].!” என அன்பினால் உளமுருகிக் கூறிய

மறுமொழி அக்காலத் தமிழ் வேந்தர்களது செயற்கரிய செய்யுந்திறனை நன்கு தெளிவிப்பதாகும்.

இவ்வாறே இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனது போர்த் திறத்தை உணர்ந்து மகிழ்ந்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்,

"கூற்றுவெகுண்டு வரினும் மாற்றும்ஆற் றலையே.”

என அவ்வேந்தர் பெருமானை வியந்து போற்றுகின்றார்.

"நட்டவர் குடியுயர்க்குவை;
 செற்றவர் அரசு பெயர்க்குவை."

எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய னை மாங்குடி மருதனார் பாராட்டிப் போற்றுகின்றார்.

இங்ஙனம் பேராற்றல் பெற்ற தமிழ் வேந்தர்கள், போர்க்களத்தின்கண்ணே படை வீரர்களுக்குக் கவசம் போலப் பகைவர் சேனையை எதிர்த்து நிற்கும் இயல்புடையவர்களாய் இருந்தார்கள். அதனால், அவர்களைச் 'சான்றோர் மெய்ம்மறை' (வீரர்க்குக் கவசம்) எனப் புலவர் பெருமக்கள் புகழ்ந்து போற்றினார்கள் [12] ."


பகைவேந்தர் ஆட்சியுட்பட்டுக் கலங்கித் தளர்ந்து கெட்ட குடிகளை அச்சமின்றிப் போர் புரியும் வீரர்களாகப் பழக்கி உரிமையுடன் வெற்றி பெற உதவி செய்யுந் திறம் தமிழ் வேந்தர் கொண்டொழுகிய நாகரிக நிலையாகும். இம்முறையாற் பெறும் அரசியல் வெற்றியைத்

"துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” (பதிற். 37)

எனவும்,

“பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்றம்” (பதிற். 69)

எனவும் புலவர் பெருமக்கள் சிறப்பித்துள்ளார்கள். இவ்வாறு நாட்டு மக்களின் விருப்பத்தை நன்குணர்ந்து, அவர்களுக்கு வேண்டும் அறிவும் ஆற்றலும் படைப்பயிற்சியுந் தந்து ஆட்சி புரியும் செவ்விய முறை பண்டைத் தமிழ் மன்னர் பால் நிலைபெற்றிருந்ததனால், மக்கள் அவ்வேந்தர்களது ஆணையின்கீழ் அடங்கி வாழ்தலையே தங்களுக்குரிய பெரும்பேறாகக் கருதி மகிழ்ந்தார்கள்.

“குடிதழி இக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.”

என வருந் திருவள்ளுவர் வாய் மொழி தமிழ் நாட்டு அர சியலில் நிலைபெற்ற நற்பயனை விளக்குவதாயிற்று.

வடபுலத்தில் வாழ்ந்த ஆரிய மன்னர், தமிழ் வேந்தர்களின் பேராற்றலையும், போரென்றால் விரும்பிச் செல்லும் தமிழ் வீரர்களின் ஊக்கத்தினையுங் கண்டு, தமிழர் சேனை தம் நாட்டின்மேல் வருதலும் கூடும் எனக்கருதி உறக்கமின்றி வருந்துவாராயினர் [13].

வட நாட்டில் நிகழ்ந்த திருமண விருந்தொன்றிற் கலந்துகொண்ட கனகன், விசயன் என்னும் ஆரிய மன்னர் இருவரும் இமயம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி கொண்ட தமிழ் மூவேந்தர்களின் வன்மையினை

இகழ்ந்து பேசினரெனவும், அச்செய்தியை முனிவர் சிலர் சொல்லக் கேட்டுச் சினந்தெழுந்த செங்குட்டுவன், வடநாட்டின்மேற்படையெடுத்துச் சென்று, கனக விசயர் இருவரையும் போரிற்பிடித்துக் கண்ணகியார் திருவுருவத்திற்குரிய கல்லினை அவர்தம் தலையில் ஏற்றிக் கொணர்ந்தானெனவும் வரும் வரலாறு இளங்கோவடிகளால் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் விரித்துரைக்கப் பெறுகின்றது. தனது சேனை வடநாட்டின்மேற் செல்லுதற்குரிய நோக்கத்தினைக் கூறக் கருதிய செங்குட்டுவன்,

"காவா நாவிற் கனகனும் விசயனும்
விருத்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்திலர் ஆங்கெனச்
சீற்றங் கொண்டு, இச் சேனை செல்வது"

எனக் காரணங் கூறும் பகுதி, அக்காலத் தமிழ் வேந்தர்களின் தமிழுணர்ச்சியையும் அதன் வழித் தோன்றிய நாட்டுப் பற்றினையும் நன்கு புலப்படுத்துவதாகும்.

சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் தமிழ்க்குலத்தாரது வளர்ச்சியைக் கருதி ஒற்றுமை உணர்ச்சியுடன் தமிழகத்தின் அரசியலை நிகழ்த்தினார்கள். அதனால், தமிழகம் ‘பூசல் அறியா எம் நன்னாடாய்த்’ திகழ்வதாயிற்று. தமிழ் நாட்டில் அமைதியாய் வாழ்ந்த தமிழ் மக்கள், எப்பொருளையும் தடையின்றி எண்ணியறியவும், உள்ளக் கருத்துக்களை உரிமையுடன் வெளியிட்டுரைக்கவும், எத்தொழில்களையும் தடையின்றிச் செய்து முடிக்கவும் வேண்டிய உரிமை உணர்வுடன் புகழ் பெற்று விளங்கினர்கள்.


  1. நெல்லும் உயிரன்றே ; நீரும் உயிரன்றே;
      மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் ;
      அதனால், ‘யான் உயிர்’ என்ப தறிகை
      வேன் மிகு தானை வேந்தற்குக் கடனே.
    -புறம். 186.

  2. ‘வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
      தென்றமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
      மண்தலை யேற்ற வரைக ஈங்கென.’
    -சிலப். காட்சி. 170-72.

  3. ‘பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்றாள்
       முரசமுழங்கு தானை மூவருங் கூடி
       அரசவை யிருந்த தோற்றம் போலப்
       பாடல் பற்றிய பயனுடை யெழாஅல்
       கோடியர் தலைவ!’
    -பொருநராற்றுப்படை

  4. ‘அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்’
    -பொருநராற்றுப்படை

  5. ‘அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்’
    -புறம். 62.

  6. புறம். 9
  7. ‘அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
      கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
      கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம் ;
      உருமும் உரறாது ; அரவுந் தப்பாது ;
      காட்டு மாவும் உறுகண் செய்யா..?’

    -பெரும்பாணாற்றுப்படை, 39-48.

    .
  8. ‘நின்னொடு தொன்று மூத்த வுயிரினும் உயிரொடு
    நின்று மூத்த யாக்கை யன்னநின்
    வாளின் வாழ்கர் ’
    –புறம். 242 .

  9. ‘தாழ்கழல் மன்னன் தன் திரு மேனி
    வாழ்க சேனா முகமென வாழ்த்தி......
    அறைபறை யெழுந்ததால் அணிநகர் மருங்கென்.'

    -சிலப். காட்சி. 191-94

  10. கூற்றுடன்று மேல்வரினும் கூடி யெதிர்கிற்கும்
    ஆற்ற லதுவே படை."
    -குறள் 765.

  11. புறம் 38
  12. 'கோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை';

        -பதிற். 14.

    'ஏக்தெழி லாகத்துச் சான்ருேர் மெய்ம்மறை';

      -பதிற். 58.

  13. ........................ ‘அலம் வந்து
    நெஞ்சம்நடுங்கு அவலம் பாயத்
    துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.’
    -புறம், 31.