சங்கீதமும் மொழியும் (நாமக்கல் கவிஞர்)

(நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை எழுதிய சங்கீதமும் மொழியும் (நாமக்கல் கவிஞர்) என்னும் கட்டுரை, இது இசைத்தமிழ் என்ற நூலில் காணப்படுகிறது)

'பாட்டு எந்தப் பாஷையில் இருந்தால் என்ன, இந்த பாஷைத் தகராறை ஏன் சங்கீத த்திற்கு கொண்டு வந்து போட வேண்டும்?' என்று கேட்கிறார்கள். சொல்லில்லாத சங்கீதம் வெறும் சப்த ஜாலந்தான். ராகத்தையும்,ஸ்வரங்களையும் தாளங்களையும் எவ்வளவு சாமர்த்தியமாகக் கலந்தாலும் அது வெறும் ஓசைதான். வெகு சிரமப்பட்டு ஸ்வரங்களைப் பாடம் பண்ணியிருக்கிறதை வேண்டுமானால் மெச்சலாம்.அந்த ஓசையின் உருட்டல்களெல்லாம் நமக்கு வியப்பை உண்டாக்கலாம். அது ஒரு நல்ல வேடிக்கைத்தான். ஆனால் காதில் விழுந்ததெல்லாம் காதோடுதான் நின்றுவிடும். கருத்தில் பாயாது உள்ளத்தை உருக்காது. உணர்ச்சியைக் கிளப்பாது.அறிவையோ ஆன்மாவையோ அசைக்காது.


ஒரு டொம்பன் நடுத்தெருவில் ஓர் உயரமான மூங்கிலை நிறுத்துகிறான். ஒரு சிறு பெண்ணை அதன்மேல் ஏறச் சொல்கிறான். அந்தப் பெண் மூங்கிலின் மேல் ஏறிக்கொண்ட பிறகு டொம்பன் பெண்ணோடு அந்த மூங்கிலைத் தூக்கித் தன் இடுப்பில் நிறுத்திக் கொண்ட பிற்பாடு மரத்தின் அடியிலிருந்த அந்தச் சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக மூங்கில் அதிர்ந்து சாய்ந்துவிடாதபடி உச்சிக்குப்போனது மட்டுமே வெகு வியக்கத் தகுந்த விந்தை. அப்படி உச்சிக்குப்போன அந்தப் பெண் பலவிதமாக வளைந்து வளைந்து நேராகவும் தலைகீழாவும் பல வித அப்பியாசங்களைக் காட்டு கிறாள். நமக்குப் பயமாகக் கூட இருக்கிறது. இத்தனை நேரமும் மூங்கில் சாய்ந்துவிடாமல் அண்ணாந்தபடியே அந்த டொம்பன் தாங்கி நிற்பதும் மிகவும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. கடைசியாக அந்தப் பெண் தன் அடிவயிற்றை மூங்கிலின் உச்சியில் வைத்துக் கொண்டுவேறு பிடிப்பில்லாமல் கைகளையும், கால்களையும் மூங்கிலுக்கு இருபுறத்திலும் நீட்டி ஒரு குச்சிபோல் விறைத்துக் காட்டுகிறாள்.'ஐயோ அந்தப் பெண் விழுந்துவிட்டால் என்ன கதியாவாள்! நல்ல வெய்யிலில்! நடுத்தெருவில்! ஜல்லிபோட்ட கெட்டித் தரையில்!' என்று நம்முடைய மனம் இரக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெண் ஒரு கையால் மூங்கிலைத் தொட்டு என்னமோ செய்து கொஞ்சங் கொஞ்சமாக வயிற்றை மூங்கிலின்மேல் வைத்தபடியே சுழல ஆரம்பிக்கிறாள். சிறிதுநேரத்தில் அந்த ஒரு கையையுங்கூட எடுத்து விட்டுக் கரகரவென்று அந்தரத்தில் சுழலுகின்றாள். அதைக்கண்டு நம்முடைய கண்ணும் மனமுங்கூடக் கரகரவென்று சுழன்று விவரிக்கமுடியாத வியப்புண்டாகிறது. சிறிது நேரத்தில் சுழல்வது ஓய்கிறது. டொம்பன் திடீரென்று மூங்கிலைத் தூக்கிப் பெண்ணை ஆகாசத்தில் உந்தி விடுகிறான். நமக்கு அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டினதுபோல் உணர்ச்சி உண்டாகிறது. தேகம் நடுங்குகிறது. ஆகாயத்தில் வீசப்பட்ட பெண் கீழே விழுமுன் டொம்பன் மூங்கிலை விட்டுவிடுகிறான். மூங்கில் தரையில் விழுகிறது. அந்தப் பெண் டொம்பன் நீட்டிய இரண்டு கைகளின் மத்தியில் விழுகிறாள். 'கிரிக்கெட்' பந்தைப்பிடப்பதுபோல் அவளை அலுங்காமல் ஏந்திக்கொள்கிறான். பூமியிற் குதிக்கிறாள். புன்னகை புரிந்து சலாம் போடுகிறாள். நமக்கும் போன பிராணன் திரும்பி வருகின்றது. கைத்தட்டிக் களிக்கிறோம். அந்தச் சமயம் பார்த்து, டொம்பன் வெகுமதிக்குக் கையேந்துகின்றான். காலணாவோ, அரையணாவோ அதிகமாகவோ கொடுக்கிறோம். இல்லாவிட்டால் காசுக்காக டொம்பன் கையை நீட்டுமுன் நாம் கம்பிநீட்டி விடுகிறோம்.

இந்த வேடிக்கை எவ்வளவு வியக்கத்தக்கது! அந்தச் சிறுபெண் எவ்வளவு காலம் எவ்வளவு சிரமப்பட்டு அந்த பழக்கத்தைப் பண்ணியிருக்க வேண்டும்! எல்லாம் அதிசயந்தான். இருந்தாலும் அவ்வளவு அப்பியாஸம் செய்து நமக்குச் செய்துகாட்டிய அந்த வித்தையை நாம் வீடு சேருவதற்குள் மறந்து விடுகிறோம். ஏனென்றால் அது வெறும் வேடிக்கைதான்.

இதே வியப்பும் வேடிக்கையுந்தான், வெகுகாலம் அப்பியாஸம் செய்து வெறும் ஸ்வரங்களையும் சங்கீத சங்கதிகளையும் திருப்பித் திருப்பி வெவ்வேறு விதமாகப் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு உண்டாகிறது. அந்த வெறும் சங்கீதம் நின்ற பிற்பாடு நம்முடைய மனதில் நிற்பதற்கு அதில் ஒன்றுமில்லை. இதற்காகவா சங்கீதக் கச்சேரி? இதற்காகவா வாய்ப்பாட்டு? இதற்காகவா கீர்த்தனை? அல்லவே அல்ல. பக்தியோ, வீரமோ, கருணையோ - உயர்ந்த உணர்ச்சிகளை உண்டாக்க வல்லவா வாய்ப்பாட்டு? அதற்காகவல்லவா சாகித்தியம்? அதையெண்ணி யல்லவா குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பிட்ட இடங்களில் கவிஞன் கருதி வைத்தான்? அந்தக் குறிப்பிட்ட சொற்கள் நமக்கு விளங்காவிட்டால் அந்தப் பாட்டைக் கேட்பதால் என்ன பலன்? நமக்குத் தெரிந்த பாஷையில் இல்லாவிட்டால் அந்த சொற்கள் நமக்கு எப்படி விளங்கும்? இதுதான் பிரச்னை.