சங்க இலக்கியத் தாவரங்கள்/முன்னுரை


 
சங்க இலக்கியத்
தாவரங்கள்


முன்னுரை


சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிப்பிடும். என்னையெனில் ஒரே தாவரத்திற்கு வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கூறியுள்ளமையின் என்க. இப்பெயர்களும் இந்நாளில் வழக்கொழிந்தமையானும் ஒரு சில பெயர்கள் திரிந்து மருவியுள்ளமையானும், ஒரு சில தாவரங்களைத் தேடி அலைந்து காண்கிலமாகலானும் ஒரு சில தாவரங்களுக்குப் பிற்கால நிகண்டுகளும், இலக்கியங்களும், உரையாசிரியர்களும், அகரமுதலிகளும், பல்வேறு பெயர்களைக் கூறுகின்றமையானும் இவற்றின் உண்மையான தாவரப் பெயர்களைக் கண்டு துணிதல் அரும்பெரும் ஆய்வுப் பணியாகி விட்டது. ஒரு சில தாவரங்களின் தாவரப் பெயர்கள் ஐயப்பாடு உடையன என்றும், ஒரு சிலவற்றின் தாவரப் பெயர்களை அறிய முடியவில்லை என்றும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.

சங்கப் புலவர்கள் பெரிதும் இத்தாவரங்களின் மலர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றனர். ஆயினும் இவற்றின் இயல்பு, தண்டு, இலை முதலியவற்றைக் கூறும் புலவர்களும் இல்லாமலில்லை. இவர்களுள் கோடல், கொன்றை பற்றிக் கணிமேதாவியாரும், புன்னை பற்றி உலோச்சனாரும், வரகு பற்றிக் கபிலரும் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளனர். நெய்தல், குளவி, பாலை முதலிய தாவரங்களின் தாவரப் பெயர்களைக் கண்டு பிடித்தற்கும், அவற்றை உறுதிப்படுத்தற்கும் சங்கத் தமிழ்ச் சான்றோர் கூற்றுத்தான் துணை செய்தது.

சங்க இலக்கியங்களில் ஒரு தாவரத்தைப் பற்றிப் புலவர்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துச் செய்திகளையும், தாவரவியல் முறையில் அவற்றின் வேர் முதல் விதை வரையில் ஒழுங்குபடுத்தி, தொகுத்து அவர் தம் பாடற்பகுதிகளை ஆங்காங்கே பாடல் எண், வரிகளின் எண்கள் முதலியவற்றுடன் சேர்த்து, புலவர்களின் உளப்பாங்கு சிறிதும் சிதையாது வெளிப்படுத்தும் வகையில் இலக்கிய விளக்க உரை எழுதப்பட்டுள்ளது. இதற்குக் கவிஞர் கோவை. இளஞ்சேரனாரின் ‘இலக்கியம் ஒரு பூக்காடு’ என்ற பெருநூல் பெரிதும் துணை நின்றது.

 இத்தாவரங்களைப் பற்றிச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் உண்மைகள் இந்நாளைய தாவரவியல் நூல்களின் கருத்துக்களுக்கு எந்த அளவில் ஒத்தும், உறழ்ந்தும், சிறந்தும் விளங்குகின்றன என்பதைச் சற்று நீடு நினைந்து, அவை தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. தாவரவியலார் கூறும் பேருண்மைகளைப் புலவர் பெருமக்கள் அந்நாளிலேயே கூறியுள்ள அருமந்த சிறப்பினை முருங்கை, ஆம்பல், நெல் முதலியவற்றை விளக்கும். தலைப்புகளிலும், தாவரவியலார் இது காறும் கண்டு சொல்லாத நுண்ணியதோர் சிறப்பியல்பினை நெருஞ்சியிலும் கண்டு மகிழலாம்.

ஒவ்வொரு தாவரத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் தாவர இயல் வகை, தாவரத் தொகுதி, தாவரக் குடும்பப் பெயர், தாவரப் பேரினப் பெயர், தாவரச் சிற்றினப் பெயர், சங்க இலக்கியப் பெயர், சங்க இலக்கியத்தில் வேறு பெயர், ஆங்கிலப் பெயர், உலக வழக்குப் பெயர், தாவர இயல்பு முதலியனவும், இத்தாவரத்தின் தண்டு, இலை, இணர், மலர், மலர்ப் பகுதிகளான புல்லி, அல்லி, மகரந்த, சூலக வட்டங்கள், கனி, விதை, கரு, முளை முதலியவற்றின் அக, புற இயல்புகளும், இத்தாவரத்தில் இது காறும் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளும், இவற்றின் ‘குரோமோசோம்’ எண்ணிக்கையை எவரெவர் எவ்வெப்போது கண்டறிந்து கூறியுள்ளனர் என்ற குறிப்புகளும், இத்தாவரங்களின் தோற்றம், தொடர்பு, பல்வேறு பயன் பற்றிய செய்திகளும் தாவர அறிவியல் முறைப்படி ஆங்காங்குத் தனித் தனியாக எழுதப்பட்டுள்ளன.

ஆகவே, ஒவ்வொரு தாவரத்திற்கும் முதற்கண் அதன தன் சங்க இலக்கியப் பெயரும், தாவர இரட்டைப் பெயரும், தமிழிலும்,. ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. அடுத்து, பெரும்பாலான தாவரங்களின் விளக்கவுரையின் சுருக்க வரைவு எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் தாவரத்தின் இலக்கிய விளக்கமும், அதற்கடுத்து அதனுடைய தாவர அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் கையாளப்பட்டுள்ள அனைத்துலகத் தாவர வகைப் பாட்டியல் முறை தமிழில் தரப்பட்டுள்ளது.

மேலும், சங்க இலக்கியத் தாவரங்களின் 210 பெயர்களும் 150 மரஞ்செடி, கொடிகளைக் குறிக்கின்றமையின், இந்நூலில் 150 விளக்க உரைக் கட்டுரைகளே எழுதப்பட்டுள்ளன.

 ஒரு மரத்திற்கு–எடுத்துக்காட்டாக ‘அசோகு’ மரத்திற்குப் ‘பிண்டி’ ‘செயலை’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவையனைத்தும் சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.) என்ற தாவரப் பெயரின் அடிப்படையில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. எனினும் ‘பிண்டி’ ‘செயலை’ என்ற பெயர்களும் சங்க இலக்கியத்தில் பிற பெயர்கள் என்று கூறப்பட்டுள்ளன. இத்தாவரங்களின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி அவற்றின் தாவரப் பெயர்களைச் சேர்த்து, ஒரு பட்டியல் பக்க எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அன்றியும், இந்த 150 மரம், செடி, கொடிகள் அனைத்துலகத் தாவரப் பாகுபாட்டியல் முறைகளில் ஒன்றான பெந்தம்–ஹூக்கரின் பரிணாம முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இரு வித்திலைத் தாவரங்கள் 48 தாவரக் குடும்பங்களிலும், அகவிதழில்லாத இரு வித்திலைத் தாவரங்கள் 7 குடும்பங்களிலும், ஒருவித்திலைத் தாவரங்கள் 9 குடும்பங்களிலும் அடங்கும். ஆதலின், இத்தாவரக் குடும்பங்களையும், இத்தாவரங்களின் பேரினப் பெயர்களையும் குறிப்பிடும் இவர் தம் பாகுபாட்டு இயல் நெறிப் பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. இங்ஙனம் பரிணாம முறையில் பாகுபடுத்துங்கால் முதற்கண் ‘பாங்கர்’ எனப்படும் ‘ஓமை’ மரம் இடம் பெறுகின்றது. இத்தாவரங்களில் பெரும்பாலானவை, தாவரவியல் வலலுநர்களால் தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்டு, உலர் படிவங்களாக மத்திய அரசின் தாவர மதிப்பீட்டுக் கோவை மையத்திலும், ‘ஹெர்பேரியம் காலேஜியைப் பிரிசிடென்டியே மெட்ராசென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சென்னை மாநிலக் கல்லூரியிலும் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நிழற் படங்களை எடுத்து வந்து, இத்தாவர விளக்கங்களுக்கிடையே அவை அமைக்கப் பெற்று உள்ளன.

இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ளுமாறு பணித்த தமிழ்ப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர் முதுமுனைவர் வ. அய். கப்பிரமணியம் அவர்கட்கும், இவ்வாய்வு நிகழும் போதெல்லாம் ஆக்கமும், ஊக்கமும் உவந்தருளிய இப்பல்கலைக்கழகப் பெரும் பேராசிரியர்கள் அனைவருக்கும், இடையிடையே ஐயம் எழுந்த போது இலக்கிய விளக்கம் நல்கிய முதுபெரும் புலவர் கோவை. இளஞ்சேரனார் அவர்கட்கும், ஒரு சில தாவரங்களின் உலர் படிவங்களைப் படமெடுத்துக் கொள்வதற்கு அனுமதி தந்ததல்லாமல், அதற்கு உறுதுணை செய்த கோவை தாவர மதிப்பீட்டு மையத்தாருக்கும், சென்னை மாநிலக் கல்லூரியின் தாவரவியல்  துறைத் தலைவர் முதலியோர்க்கும், இப்படங்களை அழகாக உருப் பெருக்கித் தந்த இப்பல்கலைக்கழகக் கணிப்பொறி மையத்தாருக்கும் எமது நன்றி உரியதாகும்.

இந்நூலைப் பிழையின்றி, தட்டச்சு செய்து தந்த தட்டச்சருக்கும், இதனை வரிவரியாக ஒப்பு நோக்கித் தாவர வகைப் பாட்டியலுக்கேற்ப ஒழுங்குபடுத்தியும், கூடிய மட்டில் அச்சுப் பிழையின்றி வெளியாதற்கும் பெருந்துணை புரிந்த முனைவர் செல்வி ச. பரிமளா அவர்கட்கும் எமது நன்றி என்றும் உரியதாகும். இந்நூல் இத்துணைச் சிறப்புடன் வெளிவருதற்குப் பெருந் துணையாயிருந்த தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத் துறைத் துணை இயக்குநர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனார் அவர்கட்கும் அச்சுப் பிழை திருத்தி உதவிய புலவர் திரு வேல். சம்பந்தமூர்த்தி, திரு மா. பாலகிருட்டிணன் எம்.ஏ.,பி.எட்., அவர்கட்கும் நன்றி நவிலுதல் எமது கடப்பாடாகும்.


தஞ்சாவூர் இங்ஙனம்

1–11–86 கு. சீநிவாசன்