சங்க இலக்கியத் தாவரங்கள்/001-150


 

பாங்கர்—ஓமை
டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

குறிஞ்சிப் பாட்டில் (85) இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஓமை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் பாங்கர் (111) என்பதற்குப் ‘பாங்கர்க்கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்திற்கு ‘ஓமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்துப் பேசப்படுதலின்) உண்டு போலும் என்றும் எண்ண இடமுள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : பாங்கர், ஓமை
தாவரப் பெயர் : டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

பாங்கர்-ஓமை இலக்கியம்

“பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்”–குறிஞ். 85

என்று கபிலர் குறிப்பிடும் ‘பாங்கர்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘ஓமை’ என்று பொருள் கூறியுள்ளார். இதற்கு ‘உவா’ என்று பெயர் எனக் காம்பிள் (Gamble) குறிப்பிடுகின்றார். கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.

ஓமை மரத்தைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலச்சுரத்திலே ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மரத்தைப் ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடையதென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு’ என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப்பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப்போவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகின்றன.

“உவர் எழுகளரி ஓமை அம்காட்டு
 வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ்சுரம்”
—நற். 84:8-9

“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை
 ஊர்பாழ்த்தன்ன ஓமை அம்பெருங்காடு”
—குறுந். 124:1-2

“புன்தாள் ஓமைய சுரன் இறந்தோரே”—குறுந். 260: 7-8

“கானயானை தோல் நயந்து உண்ட
 பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
 அலங்கல் உலவை ஏறி”
—குறுந். 79: 2-4

“.... .... .... .... .... .... .... .... .... .... .... ஐயநாம்
 பணைத்தாள் ஓமைப்படு சினை பயந்த
 பொருந்தாப் புகர் நிழல் இருந்தனமாக”
—நற். 318: 1-3

“உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
 அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறி
 புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து”
—குறுந். 321: 1-3

“சேயின் வரூஉம் மதவலி யாஉயர்ந்து
 ஓமை நீடிய கானிடை அத்தம்”
—நற். 198: 1-2

“அத்தஓமை அம்கவட்டு இருந்த
 இனம் தீர்பருந்தின் புலம்புகொள் தெள்விளி
 சுரம் செல்மாக்கட்கு உயவுத்துணை ஆகும்”
—குறுந். 207: 2-3

“.... .... .... .... .... .... .... .... .... முளி சினை
 ஓமைக்குத்திய உயர்கோட்டு ஒருத்தல்”
—குறுந். 396: 3-4

“பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
 அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்”
—நற். 137: 5-8

“புல்இலை ஓமைய புலிவழங்கு அத்தம்”—நற். 107: 6

“பொருத யானை புல்தாள் ஏய்ப்ப
 பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை”
—நற். 279: 6-7

“உலவை ஓமை ஓங்குநிலை ஒடுங்கி
 சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம்”
—நற். 252: 1-2

இனிப் ‘பாங்கர்’ என்ற பெயரில் ஒரு கொடியும் இருந்தது போலும்.


“.... .... .... .... .... .... .... பாங்கரும்
 முல்லையும் தாய பாட்டங்கால்”
—கலி. 111

(பாட்டங்கால்-தோட்டம்)

என்ற இக்கலித்தொகையடியில் வரும் ‘பாங்கர்’ என்பதற்குப் ‘பாங்கர்க் கொடி’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

“குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
 கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்”
—கலி. 103: 3-4

என்ற இக்கலிப்பாட்டில் கூறப்படும் பாங்கர் என்பதற்கு ‘ஓமை மரம்’ என்று பொருள் கோடலும் கூடும். இதன் மலரைக் குல்லை, குருந்து, கோடல் முதலிய மலைப்புற மலர்களுடன் சேர்த்துக்துக் கட்டி, கண்ணியாக அணிந்து கொள்வர் என்று கூறப்படுகின்றமை காண்க.

பாங்கர்–ஓமை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்–அகவிதழ் தனித்தவை.
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே (Thalamiflorae)
ரானேலீஸ் (Ranales)
தாவரக் குடும்பம் : டில்லினியேசி (Dilleniaceae)
தாவரப் பேரினப் பெயர் : டில்லினியா (Dillenia)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
சங்க இலக்கியப் பெயர் : பாங்கர்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஓமை
தாவர இயல்பு : மிக அழகிய, எப்பொழுதும் தழைத்து உள்ள உயரமான பெருமரம். ஈரமான ஆற்றங்கரைகளிலும், மலைப்பகுதிகளிலும் வளர்கிறது.
இலை : ஓர் அடி நீளமான பெரிய இலை.
மஞ்சரி : இலைகளுடன் கிளை நுனியில் தனியாக மலர் உண்டாகும்.
மலர் : 6 அங்குல அகலமான மிகப் பெரிய வெண்ணிற மலர்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் விரிந்து இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகன்ற அகவிதழ்கள் பிரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : அடியில் தாதிழைகள் இணைந்தும், உட்புறத்துத் தாதிழைகள் வளைந்தும், அகவிதழ் மடல்களுக்கு உள்ளேயும் வெளிப்புறத் தாதிழைகள் வெளியே வளைந்து மடல்களுக்கு மேலேயும் வளரும்.
தாதுப் பை : தாதுப் பைகள் நீளமானவை. நுண் துளைகள் மூலமாகத் தாது வெளிப்படும்.
சூலக வட்டம் : 5–20 சூலக அறைகள் சூலகத் தண்டில் ஒட்டியுள்ளன. பல சூல்கள்.
கனி : உருண்டையானது. சதைப் பற்றான புல்லிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 54 என ஹாபாக்கோ ஹியோநியோவா கணக்கிட்டுள்ளார்.

இம்மரத்தைக் கோயில் தோட்டங்களில் வளர்க்கிறார்கள் என்பார் காம்பிள்.