சங்க இலக்கியத் தாவரங்கள்/004-150

 

ஆம்பல்
நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens, willd.)

ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்” என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 62). இவ்வடியில் பயிலப்படும் ‘ஆம்பல்’ என்பதற்கு ‘ஆம்பற்பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். ‘ஆம்பல்’ என்பது ‘அல்லி’, ‘குமுதம்’ என வழங்கும். ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீல நிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்புழி, சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன. இதனை முதன் முதலில் நிம்பேயா ஆல்பா என்று பெயரிட்டார் லின்னேயஸ். இப்போது இதற்கு நிம்பேயா பூபெசென்ஸ் என்று பெயர். நீல ஆம்பலும் அரக்காம்பலும் (செவ்வல்லி) வெள்ளாம்பலைப் பெரிதும் ஒத்தவை. ஈண்டு வெள்ளாம்பலைப் பற்றிப் புலவர்கள் கூறியனவற்றைச் சிறிது காண்போம்.

சங்க இலக்கியப் பெயர் : ஆம்பல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அல்லி
உலக வழக்குப் பெயர் : அல்லி, குமுதம்
தாவரப் பெயர் : நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens,Willd.)

ஆம்பல் இலக்கியம்

ஆம்பல் என்பது அல்லி, குமுதம் என வழங்கப்படுகின்ற நீரில் வாழும் தாவரமாகும். நெய்தல் எனப்படும் கருங்குவளையும், கழுநீர் எனப்படும் செங்குவளையும் ஆம்பல் இனத்தைச் சார்ந்தவை. ஆம்பல் இனத்தில் செவ்விய அரக்காம்பலும், மஞ்சள் நிறமுள்ள ஆம்பல் மலரும் உண்டு. எனினும், ஆம்பல் என்பதை வெள்ளாம்பல் என்றே இலக்கியங்கள் கூறுகின்றன.

 

அல்லி
(Nymphaea pubescens)

ஆம்பல், குவளை முதலான நீர்க்கொடிகள், ‘நிம்பேயா’ (Nymphaea) என்ற தாவரப் பேரினத்தில் அடங்கும். இதில் 32 சிற்றினங்கள் வெப்பநாடுகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இப்பேரினத்தைச் சார்ந்த இரண்டு சிற்றினங்களை மட்டும் காம்பிள் என்பவர் குறிப்பிடுகின்றார். அவற்றுள் ஒன்று குவளை; மற்றொன்று ஆம்பல். இப்பேரினத்தின் பெயர், அடிப்படையிலேயே நிம்பயேசீ (Nymphaeaceae) என்ற தாவரக் குடும்பப் பெயராக அமைந்துள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த நிலம்பியம் (Nelumbium) என்ற தாமரையும் நமது நாட்டில் இயல்பாக வளர்கின்றது.

இத்தாவரக் குடும்பம் மூன்று சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் 8 பேரினங்களும் 100 சிற்றினங்களும் உள்ளன. ‘கேபம்பாய்டியே’ என்னும் இதன் சிறு குடும்பம், பெரிதும் அமெரிக்க நாட்டின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றது. ‘நிலம்போனாய்டியே’ (Nelumbonoideae) என்ற மற்றொரு சிறு குடும்பத்தின் சிற்றினங்கள். வட அமெரிக்கப் பகுதிகளில் வளர்கின்றன. இவற்றுள் ‘நிலம்போ லூட்டியா’ (Nelumbo lutea) என்ற மஞ்சள் நிற மலர்ச் செடி நமது தாமரையை ஒத்தது. இதனை மஞ்சள் தாமரை என்று சொல்லலாம். தாமரைக் கொடி நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbo speciosum) எனப்படும். இதனை முன்னர், நிலம்போ நூசிபெரா (Nelumbo nucifera) எனவும், நிம்பேயா நிலம்போ (Nymphaea nelumbo) எனவும் வழங்கினர். இதன் விரிவைத் ‘தாமரை’ என்ற தலைப்பில் காணலாம்.

நிம்பயாய்டியே என்னும் துணைக் குடும்பத்தை நிம்பயே (Nymphaeae) என்னும் துணைப்பிரிவாக (Sub-Order) ஹுக்கர் கூறுவார். இதில் 5 பேரினங்கள் உள்ளன. விக்டோரியா என்ற பேரினம், அமெரிக்காவில் அமேசான் மாவட்டத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ரீஜியா (Victoria regia) என்ற பெருந்தாமரைக் கொடி மிகவும் புகழ் வாய்ந்தது. இதன் வட்ட வடிவான இலைகள் ஆறு முதல் ஏழு அடி வரை அகலமானவை. இதன் மலர் ஓரடிக்கு மேற்பட்ட அகலமுடையது. இச்செடியை பம்பாயில் அழகுச் செடியாக வளர்த்து வருகின்றனர். தாவர உலகில் மிகப் பெரிய இலையை உடையது இச்செடிதான்.

நிம்பேயா என்னும் மற்றொரு பேரினத்தைச் சார்ந்தவைதான் ஆம்பல், குவளை முதலியன. ‘நிலம்பியம்’ (Nelumbium) என்பது இன்னொரு பேரினம். நமது நாட்டில் புகழ் பெற்ற ‘திருவளர் தாமரை’ இப்பேரினத்தைச் சார்ந்தது. அதனால், தாமரைக்கு நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbium Speciosum) என்று பெயர். நிம்பேயா, நிலம்பியம் என்னும் இவ்விரு பேரினங்களைச் சார்ந்த மலர்கள் நம் தமிழ்நாட்டில் வளர்வதால் காம்பிள் (Gamble) என்பவர் தமது நூலில், இத் தாவரக் குடும்பத்தில் பன்னிரு பேரினங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் நிம்பேயா என்ற பேரினத்தில் நிம்பேயா பூபெசென்ஸ் (Nymphaea pubescens) எனப்படும் ஆம்பல் விவரிக்கப்பட்டுள்ளது.

“ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்”
என்பர் கபிலர்

-குறிஞ். 62
ஆம்பல் என்னுஞ்சொல் ஆம்பல் மலரையன்றி, ஆம்பற்பண்ணையும் ஆம்பற் குழலையும், பேரெண்ணையும் குறிக்கும்.

“ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற”-குறிஞ். 222
“ஆம்பற் குழலால் பயிர்பயிர்”-கலி. 108:62

என வரும் அடிகட்கு ‘ஆம்பல் என்னும் பண்ணையுடைய குழலாலே’ என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“பையுள் செய்யாம்பலும்”[1]

என்பதற்கு, ஆம்பற் பண்ணையுடைய குழல் என்றும்

“உயிர் மேல் ஆம்பல் உலாய்”[2]

என்னுமிடத்து, ‘ஆம்பல் என்னும் பண் சுற்றிலேயுலாவி’ என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறினார்.

“ஆம்பலந் தீங்குழல் கேளாமோ”

என்றவிடத்து அரும் பதவுரையாசிரியர் ‘ஆம்பல் முதலானவை சில கருவி:ஆம்பல் பண்ணுமாம்: மொழியாம்பல், வாயாம்பல், முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு’ என்றார்: அடியார்க்கு நல்லார், ‘ஆம்பற்பண் என்பாரை மறுத்து வெண் கலத்தால் குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த குழல்’ என்று கூறா நிற்பர்.

“ஆம்பலங் குழலின் ஏங்கி”-நற். 113

என்பதற்குப் பின்னத்துரார். அடியார்க்கு நல்லாரைப் பின்பற்றி வெண்கலததால் ஆம்பற் பூ வடிவாக அணைசு பண்ணி நுனியில் வைக்கப்பட்ட ‘புல்லாங்குழல்’ என உரை கண்டார். ஆகவே, ஆம்பல் என்பது ஒரு பண்ணென்பதும், ஒரு வகைக் குழல் என்பதும் பெற்றாம்.

இக்குழலில் இசைக்கப்படுவது ஆம்பற்பண் என்பதையும். இக்குழல் இசையைக் கோவலர் பலகாலும் மாலையில் எழுப்புவர் என்பதையும் காணலாம்.

“.... .... .... பல்வயின் கோவலர்[3]
ஆம்பலந் தீங்குழல் தெள்விளிபயிற்ற”
–குறிஞ். 221-222

என்ற இக்கபிலரின் கூற்றுக்கு, ‘இடையர் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்து தெளிந்த ஓசையைப் பலகாலும் எழுப்ப’ என்று நச்சினார்க்கினியார் விளக்குவர். இவ்விசை வண்டின் ஒலி போன்றது; இனிமை உடையது; இரங்கி ஒலிப்பது; போரில் புண்பட்டுப் படுக்கையில் துன்புறும் வீரற்கு அமைதியைத் தருவது என்பர் இளங்கீரனார;

“இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பல் குழலின் ஏங்கி”
–நற். 113: 10-11

மேலும் இங்ஙனம் போரில் புண்பட்டுக் கிடந்தவனை ஓம்பும் சுற்றம் இல்லாவிடத்துப் பேய் சுவைக்கச் சுற்றும் என்ற நம்பிக்கையைப் ‘பேய் ஓம்பிய பேய்ப்பக்கம்’ என்பார் ஆசிரியர் தொல்காப்பியர் (புறத்திணை: 19:6). அப்புண்ணோனைப் பேயினின்றும் காக்க அவனுடைய மனைவி கிட்டுதலைக் கூறுவதைத் தொடாக் காஞ்சி என்பர். இதனை விளக்கும் ஒரு புறப்பாடலை இளம்பூரணர் இந்நூற்பாவிற்கு மேற்கோளாகக் காட்டுவார். இப்பாடலைப் பேய்க் காஞ்சி என்னும் துறையில் அரிசில்கிழார் பாடுவர்.

கணவன் புண்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். அவனைப் பேய் அணுகாமல் காப்பதற்குப் புறப்படும் அவனது மனையாள், தோழியைக் கூப்பிடுகிறாள். ‘வம்மோ காதலந் தோழி!’ ஐயவி தெளித்து (வெண்கடுகு), ஆம்பல் குழலை ஊதி, இசைக்கும் மணியை ஆட்டி, காஞ்சிப்பண்ணைப் பாடி, நறும்புகை எடுத்து, யாழொடு பலப்பல இசைக்கருவிகள் ஒலிக்க எமது கழற்கால் நெடுந்தகையின் விழுப்புண் காக்கம்!’ என்பாளாயினள்.

(புறநா: 281)

கூத்து இலக்கணத்தில் பதினொரு வகை அகக்கூத்து உண்டு. அவற்றுள் ‘அல்லிக்கூத்து’ என்பதும் ஒன்று. அல்லிப் பெயர், நாடகத் தமிழிலும் காணப்படும். மேலும், ஆம்பல் என்னுஞ் சொல்லே பேரெண்ணையும் குறிக்கும். எட்டு விந்தங் கொண்டது ஓர் ஆம்பல்; அதாவது 1028672 ஆண்டுகள். இதன் விரிவை நெய்தல் மலர் பற்றிய தலைப்பில் காணலாம். ஆம்பல் என்பதைப் பிற்காலத்தில் குமுதம் என்றும் அழைத்தனர். அதனால், குமுதம் பேரெண்ணையும் குறிக்கும் சொல்லாயிற்று.

ஆம்பற் கொடி கடற்பரப்பிற்கு மூவாயிரம் அடி உயரத்திற்குள்ளான நன்னீர் நிரம்பிய குளங்குட்டைகளில் வளரும். இதன் கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். முட்டை அல்லது வட்ட வடிவினதாகிய இவ்விலையின் அடியில் நீண்ட பிளவு ஒன்றுண்டு. இப்பிளவு இலை விளிம்பிலிருந்து இலைக்காம்பு வரை நீண்டிருக்கும். இலையின் நடுவில் இதன் இலைக்காம்பு இணைந்திருக்கும். இக்காம்பு மிக நீளமானது. நீரளவிற்கு நீண்டு கொடுக்கும் இயல்பு (Elongation) இக்காம்பிற்கு உண்டு. குளங்குட்டைகளில் திடீரென நீர் நிரம்பி விடுமாயின், இவ்வியல்பினால் இலைக்காம்பு ஓரிரு நாள்களில் நீண்டு கொடுத்து இலையை நீர்ப்பரப்பின் மேல் நிலைக்கச் செய்யும். இவ்வியல்பு இதன் பூக்காம்பிற்கும் உண்டு. இலையின் கணுக் குருத்து வளர்ந்து பூவாகுமெனினும், இலைக்காம்பிற்கும், பூக்காம்பிற்கும் உள்ளமைப்பில் ஒரே ஒரு வேறுபாடு காணப்படும். இலைக்காம்பில் இரண்டு பெரிய துளைகள் நடுவில் இருக்கின்றன. பூக்காம்பில் ஐந்து பெருந்துளைகள் நடுவில் அமைந்துள்ளன. இத்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக் கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.

“அயிரை பரந்த அம்தண் பழனத்து
 ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள் கால்
 ஆம்பல் குறுநர்...”
-குறுந் 178 : 1-3

“பொய்கைபூத்த புழைக் காலாம்பல்”-ஐங். 34 : 2

“புழற்கால் ஆம்பல் அகல் அடை”-புறநா. 266 : 3

என்பனவற்றால் தமிழர் ஆம்பலின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள தூம்புதனை அறிந்திருந்தனர் என்பது புலனாகும்.

அல்லியின் இலைக்காம்பிலும், பூக்காம்பிலும் உள்ள புறணி எனப்படும் நாரை உரித்துப் பார்த்தால், புறணிக்கடியில் மிக அழகிய துண்ணிய நீலங்கலந்த செம்புள்ளிகள் காணப்படும். நார் உரித்த இக்காம்புகளின் புறத்துள்ள சில செல்களில் (உயிரணுக்களில்) ஆந்தோசையனின் (Anthocyanin) என்ற வேதிப்பொருள் உயிரணுச்சாற்றில் (Cell-sap) கரைந்திருத்தலின் இந்நிறம் பெற்றுத் திகழும். கண் கவரும் இந்நிறத்தை மங்கல மகளிர்க்கு இயற்கையில் உண்டாகும் பருவ கால அழகிற்கு உவமிப்பர். இதனை மாமை எனவும் மாமைக்கவின் எனவுங் கூறுவர். மாமை என்பதற்கு இள மாந்தளிர் போன்ற நிறமென்பாரும், ஈங்கைத் தளிர் போன்ற நிறமென்பாரும், அசோகின் தளிர் போன்ற நிறமென்பாரும் உளர்.

“நீர்வளர் ஆம்பல் தூம்பிடைத் திரள்கால்
 நார் உரித்தன்ன மதனில் மாமை”

-நற். 6: 1-2

“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
 பொய்கை ஆம்பல் நார் உரிமென்கால்
 நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
 இனிப்பசந்தன்று என் மாமைக்கவினே”

-ஐங். 35

இந்த ஐங்குறுநூற்றுப் பாடலைச் சற்று விரித்து உரைப்பது ஒக்கும்.

தலைமகனுக்காக வாயில் வேண்டித் தலைவியிடம் புகுந்தார். தலைவனது குணம் கூறுவாராயினர். அவர் அவனுக்கு இல்லாத குணங்களைக் கூறுவதைக் கேட்ட தலைவி, தன் தோழியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடல்.

‘அம்ம தோழி வாழி! நம்மூர்ப் பொய்கையில் வளரும் ஆம்பலின் மெல்லிய காம்பிலே நார் உரித்தால் காணப்படும் அச்செவ்விய அழகு நிறத்தைக் கண்டிருக்கிறாயன்றோ?அந்நிறத்தைக் காட்டிலும் அழகாக நிழற்றும் என் மாமைக் கவினையுங் காண்டி! அங்ஙனம் திருவுடைய என் மேனி இனிக் கவின் அழியப் பசந்தது’ என்கிறாள்

மேனி பசத்தலாவது மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாகும் வேறுபாடான பொன் நிறமாம் என்பர். இதனைப் ‘பசலைப் படர்தல்’ என்றும் ‘பசப்பு ஊர்தல்’ என்றும், ‘பசலை உண்ணுதல்’ என்றும் கூறுவதுண்டு (நற். 304; கலி. 15). இதனால் மகளிர்க்கு இளநலத்தால் ஓங்கும் வளமிகு கவின் அழிந்தொழியும் (குறுந். 368). மேலும், பிரிவிடை ஆற்றாத தலைவி நொந்துரைக்கிறாள், ‘எனது மாமையாகிய பேரழகை, எனக்கு அழகு தந்து நிற்கவொட்டாமலும், என் தலைவனுக்குக் காட்சியின்பம் பயக்கவொட்டாமலும், பசலையானது, தான் உண்ண விரும்புகின்றதே!’ என்று.

“எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என்மாமைக் கவினே”
-குறு. 27:3-5

(திதலை - தேமல்; சுணங்கெனவும் படும். அல்குல் - மகளின் உந்திக்கும். குறிக்கும் இடைப்பட்ட பகுதி).

ஆம்பலின் பூக்காம்பை ஒடித்து மணிமாலை போலாக்கி மகளிர் வளையலாக அணிவர்.

“ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்”

-புறநா: 63:12, 352: 5

ஆம்பற் பூவில் நான்கு புறவிதழ்களும், பத்துப் பதினைந்து அகவிதழ்களும் உள்ளன. புறவிதழ்களின் வெளிப்புறம், பசுமையானது. மாலையில் கூம்பிய ஆம்பலின் மலருக்குக் கொக்கின் பசிய புறம் உவமிக்கப்படுகின்றது.

“பைங்காற் கொக்கின் புன்புறத்தன்ன
 குண்டுநீராம்பலும் கூம்பின”
-குறுந்: 122:1-2

“ஆம்பற்பூவின் சாம்பலன்ன
 கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ”
-குறுந்: 46:1-2

ஆம்பலில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளாம்பல் (நற். 290) மற்றொன்று செவ்வாம்பல். இது அரக்காம்பல் எனவுங் கூறப்படும். வெள்ளாம்பற்பூவில் உள்ள புறவிதழின் உட்பாகம் வெண்மையாகவும், செவ்வாம்பலில் சிவப்பாகவும் இருக்கும். ஆம்பலில் பொதுவாகப் புறவிதழும், அகவிதழும் இணைந்து, ஒன்றாக இருக்குமாயின் இவ்விதழ்த் தொகுதியைத் தாவர நூலில் அல்லி (Perianth) என்பர்.

‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91:1) என்ற அடிக்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘அழகிய நீரில் அலர்ந்த அல்லியை உடைய நீலப்பூ, அனிச்சம்பூ’ என்று உரை கூறுகின்றார். இதனை ஒட்டியே,

“அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்”-(பரிபா. 12 : 78)

என்ற அடிக்கு ‘அல்லி’யை உடைய கழுநீர், அரவிந்தம், ‘ஆம்பல்’ எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அல்லாவழி அல்லி வேறு, ஆம்பல் வேறு போலும் என மயங்க நேரும். மேலும், கழுநீர் முதலாகிய மூன்று மலர்களுக்கும் சாம்பல் நிறமான அல்லி (Perianth) எனும் புறவிதழ் உண்டு. அன்றியும், ஆம்பற் காயக்கும் ‘அல்லி’ என்ற பெயருண்டு. ஆம்பற்பூவின் காயாகிய அல்லியில் வெள்ளிய, சிறு கடுகு போன்ற விதைகள் உண்டாகும். இதனை ‘அல்லியரிசி’ என்பர்.

“ஆம்பல் அல்லியும் உணங்கும்”[4]

என்புழி ‘ஆம்பல் அல்லி’ இருபெயரொட்டு எனவும், அல்லி என்பதற்கு ‘அல்லி அரிசி’ எனவும் உரை கூறுவர் இந்த ‘ஆம்பல் அரிசி’யைக் கணவனையிழந்த கழிகல மகளிர் உண்ணும் ஒரு வழக்கம் உண்டு.

“சிறு வெள்ளாம்பம் அல்லி உண்ணும்
 கழிகல மகளிர் போல”
-புறநா. 280 : 13-14

வீரத் தலைவர்கள் போரில் பட்டு இறந்தால், அவர் தம் நகரம் பொலிவிழந்திருப்பதைத் தாயங் கண்ணியார் பாடுகின்றார்:

“கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
 அல்லி உணவின் மனைவியோ டினியே
 புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்”
-புறநா. 250 : 4-6

வள்ளல் பாரியின் பறம்பு நாடு மூவேந்தரால் முற்றுகையிடப்பட்டது உள்ளே அகப்பட்ட மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு நேர்ந்தது. கபிலர் வெளியிலிருந்து கிளிகளின் வாயிலாக நெற்கதிரைக் கொண்டு வரச் செய்து, அதன் அரிசியுடன் ஆம்பல் மலரை அளித்து உணவூட்டினார் என்பர் நக்கீரனார்:

“செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு
 தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி”
-அகநா. 78 : 17-18

ஆம்பற் கொடியின் வேர்த் தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப:

“யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
 தேனாறு ஆம்பற் கிழங்கொடு பெறூஉம்”

-புறநா. 176 : 4-5

ஆம்பலின் இலைகளைக் கொய்து தழையணி கூட்டுவர் மகளிர்.

‘நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறுபடக் கூடிய நெறியுடைய தழையுடையானது தேமலை உடைய துடையின் கண்ணே மாறி மாறி அசைய, சேயிழையுடைய பரத்தை அவ்விடத்தே வருமே’ என்று அஞ்சுகிறாள் ஒரு தலைவி :

“அய வெள்ளாம்பல் அம்பகை நெறித்தழை
 தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
 வருமே சேயிழை அந்தில்”

-குறுந். 293 : 5-7

“ஆம்பல் அணித்தழை ஆரத் துயல்வரும்
 தீம்புன லூரன் மகள்[5]

“அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
 இளைய மாகத் தழையா வினவே
 இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
 இன்னா வைகல் உண்ணும்
 அல்லிப் படூஉம் புல்லா யினவே”

(புல்லாயின-புல்லரிசியாய் உதவின.)
- புறநா. 248

ஆம்பல் மலர் ஆடவர் சூடவும், அணியவும் பயன்பட்டது.

“வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்”

- பதிற். 62 : 16-17

நீலம், அல்லி, அனிச்சம், முல்லை முதலியவற்றைக் கண்ணியாகப் புனைந்து சூட்டிக் கொள்வர். (கலி. 91 : 1)

ஆம்பல் மலரை மகளிர் வாய்க்கு உவமிப்பர்.

“முகம் தாமரை, முறுவல் ஆம்பல், கண்நீலம்”[6]

“வாவிதொறும் வண்கமலம் முகங்காட்ட
 செங்குமுதம் வாய்கள் காட்ட”
[7]

பசந்த கண்ணிற்கு ஆம்பல் உவமிக்கப்படும்.

“பொய்கை பூத்த புழைக்கால் ஆம்பல்
 தாதேர் வண்ணங் கொண்டன
 எதிலார்க்குப் பசந்த என் கண்ணே”
-ஐங். 34

வெள்ளாம்பல் திங்களைக் கண்டு மலருமென்ப.

“மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி, 72:6


“ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
 பூங்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
 அந்தி அந்தணர் அயர”
-குறிஞ். 223-225

இன்னும் ஆம்பற்கொடி, கொட்டி, நெய்தல் முதலிய நீர்வாழ் தாவாங்களுடன் வளரும் என்பதை ‘அற்ற குளத்தில் அருநீர்ப் பறவை போல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போலவே ஒட்டியுறுவார் உறவு’ என்ற பாடலிற் காணலாம். மேலும், நீர்த்துறையில் தாமரையுடன் ஆம்பல் வாழும் என்பதைப் புலப்படுத்துகின்றார் பரணர். ‘தொடியணிந்த அரசர் மகள் சினங்கொண்டவுடன்’ அவளது தோழியர் குழாம் இறைஞ்சி நிற்பது போல, பெருங்காற்று மோதும் போது ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்குமென்கிறார்:

“சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
 மடத்தகை ஆயம் கைதொழு தாங்கு
 உறுகால் ஒற்ற ஓங்கி ஆம்பல்
 தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்”

-நற். 300: 1-4
இதனுள் ஆயத்தார் கைதொழுமாறு போல தாமரையை நோக்கி ஆம்பல் கூம்பும் என்றபடியால் இது காலைப்பொழுதென்றும், அப்போது ஆம்பல் குவிந்து தாமரை மலர்ந்திருக்குமென்றும் அறிதல் கூடும்.

இனி, மதுரை மருதன் இளநாகனார் பாடிய ஒரு பாடலின் ஒரு கூறு சிந்திக்கற்பாலது. தலைவன், பரத்தையிற் பிரிந்து காலங்கழித்து புலந்து நிற்கும் தலைவியிடம் வருகின்றான். காமக்கிழத்தி, பாணர்குலப் பெண் விறலியை நோக்கிச் சொல்லுவாள் போலக் கூறித், தலைவியைப் புலவி தணிக்கின்றாள்:

“முள் போன்று கூரிய பற்களை உடையோய்! ஊரனது வயலில் ஆம்பலின் சூடு தரு புதிய பூ மலர்ந்தது. அதனைக் கன்றை ஈன்ற பசுவானது தின்றது. எஞ்சிய மிச்சிலை உழுது விட்ட, ஓய்ந்து போன பகடு தின்னா நிற்கும். அப்படிப்பட்ட ஊரனுடன் நெடுங்காலம் கூட்டம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் என் சொற்களைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க. நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வர்ப் பயந்த பின்னர் உழுது விடுபகடு, எச்சிலை அயின்றாற்போலப் பிறர் அவனை நுகர்ந்தமை, நினக்கு இழுக்கன்று. “அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கிறாள்” என்று ஊரார் கூறுகின்ற சொல்லை நீ என்னைப் போல வேறு பட்டுக் கொள்ளாதே. அங்ஙனம் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது. அவனை ஊரார் நடுயாமத்து விரியும் பூவில், தேனுண்ணுகின்ற வண்டென்பதன்றி, ஆண்மகன் என்னார். ஆதலின் புலவாதே கொள்” என்று நயந்து கூறியது. (நற். 290)

“வயல் வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
 கன்றுடைப் புனிற்றுஆ தின்ற மிச்சில்
 ஓய்விடு நடைப்பகடு ஆரும் ஊரன்”
-நற். 290: 1-3

என்னும் இப்பாடற் பகுதியில் ஒரு பெரிய தாவரவியல் உண்மை பதிந்து உள்ளது போலத் தோன்றுகிறது. அரும்புகள், போது அவிழ்ந்து மலருங்கால் சிறிது சூடு உண்டாகும். இவ்வெப்பத்தால் அரும்புகள் மலரும். அரும்புகள் மலர்வதற்குச் சிறிது சக்தி (Energy) பிறக்க வேண்டும். இச்சக்தி வெப்பமாக வெளிப்படும். அரும்பிலும், போதிலும், சேமித்து வைக்கப்பட்டுள்ள ATP எனும் ஒரு வகை சக்திக் கூடு உடைந்து ஆற்றலாகும். ATP என்பது நுண்ணிய சேமிப்புச் சக்தியின் முடிச்சு அரும்பு மலருங்கால் ஒரு வகையான ஊக்கி (Hormone) அதன் செல்களில் (Cells) சுரக்கும். அப்போது சக்தியின் முடிச்சு அவிழ்ந்து சக்தி வெப்பமாக மாறி வெளிப்படும். இச்சக்தியைக் கொண்டு அரும்பு போதாகி மலரத் தொடங்கும். இதனையே ஒருவேளை ‘சூடுதரு புதுப்பூ’ என்று மருதன் இளநாகனார் கூறினார் போலும்!

எனினும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வயலில் மள்ளர் அறுக்கும் நெற் கதிரோடு அறுபட்டு அரிசூட்டோடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொழுது மலர்ந்த புதிய பூ’ என்று உரை கூறுவர் பின்னத்தூரார். ஆகவே, ‘சூடு’ என்பது பொதுவாக ‘நெல் அரியை’க் குறிப்பிடும் பெயர்ச் சொல் ஆயினும், ‘சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்’ (மது. கா. 512) என்ற மாங்குடி மருதனாரின் அடிக்கு, நச்சினார்க்கினியர், ‘சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப் பண்ணும் தட்டாரும்’ என்று உரை கூறியுள்ளார். ஆதலின் ‘சூடுறு’ என்புழி ‘சூடு’ என்ற சொல்லுக்குச் ‘சுடுதல்’ என்ற பொருளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றமை பெற்றாம். அதனால் மருதன் இளநாகனாரின் நற்றிணைப் பாடலில் வரும் ‘சூடுதரு புதுப்பூ’ என்பதற்கு ‘வெப்பத்தைத் தரும் பதிய பூ’ என்று பொருள் கோடல் ஒக்கும். அங்ஙனமாயின் அரும்புகள் போதாகி மலருங்கால் சிறிது வெப்பம் உண்டாகும் என்னும் தாவரவியல் உண்மையைச் சங்கச் சான்றோர் அறிந்திருந்தனர் என்பது வலியுறும்.

ஆம்பல் மலர் சுற்றுவட்டமாக அகல விரிந்து மலரும். இதன் முகை கொக்கின் அலகு போன்று கூம்பியது என்றும் இதன் மலர்ச்சி விடிவெள்ளி போன்று ஒளி தருவது என்றும் ஆலங்குடி வங்கனார் கூறுவர்.


“... .... .... .... கொக்கின் கூம்பு முகை
 கணைக்கால் ஆம்பல் அமிழ்து நாறுதண்போது
 குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்கெடவிரியும்”

-நற். 230:2-4

மேலும் இவ்வெள்ளாம்பல் மதி நோக்கி மலரும் இயல்பிற்று எனப் புலவர் கூறுவர்:

“மதிநோக்கி மலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி. 72:6

இனி ஆம்பலைப் பல்லாற்றானும் ஒத்த செவ்வல்லியாகிய அரக்காம்பலைப் பற்றிச் சிறிது சிந்திப்பாம்.

 

செவ்வல்லி
நிம்பேயோ ரூப்ரா
(Nymphaea rubra, Roxb.)

செவ்வல்லியும் அல்லியினத்தைச் சேர்ந்தது. இதன் இதழ்கள் எல்லாம் செந்நிறமாக இருக்கும். ‘செவ்வல்லி கொய்யாமோ’ என்பது பிற்கால இலக்கியம். இதனை ‘அரக்காம்பல்’ என்றும் கூறுவர். செந்தீயனைய செந்நிறமுடைமையின் இவ்வாம்பலை அரக்காம்பல் என்றனர். ஒரு பழனத்தில் ஒரே நேரத்தில் எண்ணற்ற இதன் மலர்கள் பூத்தன. பழனத்தில் வாழும் நீர்ப் பறவைகள், ‘பழனம் தீப்பற்றி எரிவதாக எண்ணித் தமது குஞ்சுகளை அணைத்துக் கொண்டன’ என்று கூறும் முத்தொள்ளாயிரம்.[8] இதன் ஏனைய இயல்புகள் அனைத்தும் வெள்ளாம்பலை ஒக்கும்.

மற்று, செவ்வல்லி மலரும் செங்கழுநீர் மலரும் வேறுபட்டவை.

செவ்வல்லியின் மலர் சற்று பெரியது. இதன் புறவிதழ்கள் அகத்தும் புறத்தும் செந்நிறமானவை. வெண்ணிற அல்லி மலரைப் பெரிதும் ஒத்திருத்தலின் தாவரவியலில் இதனை ‘நிம்பேயா’ என்ற பேரினத்தில் அடக்கியும் மலரில் செந்நிறத்தால் வேறுபடுதலின் ‘ரூப்ரா’ என்ற சிற்றினப் பெயர் கொடுத்தும் விளக்கப் பெறுகின்றது.

வெள்ளாம்பலைப் போன்று இவ்வரக்காம்பல் மலரிலும் நறுமணம் கமழும். தாவரவியலுண்மைகள் இவ்விரண்டிற்கும் பொதுவானவை.

(ஆம்பல், அல்லி, குமுதம்) தாவர அறிவியல்

நிம்பேயா பூபசென்ஸ் (Nymphaea pubescens Willd.)

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பயேசீ (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : பூபசென்ஸ் (pubescens, willd.)
தாவர இயல்பு : பல பருவ நீர்த் தாவரம், நீர்வாழ்க் கொடி
தாவர வளரியல்பு : அருவி, ஓடை, பொய்கை முதலியவிடங்களில் நன்னீரில் வாழும் நீர்ச் செடி.
வேர்த் தொகுதி : தரையில் அதிலும் சேற்றில் அடி மட்டத் தண்டு எனப்படும் கிழங்கு இருக்கும். அதிலிருந்து சிறு வேர்கள் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும்.
அடி மட்டத் தண்டு : கிழங்கு எனப்படும் இத்தண்டில் கணு உண்டு. கணுவிலிருந்து இலையுண்டாகும். இலைக்கோணத்தில் அரும்பும், மலரும் உண்டாகும். இதன் மேற்புறத்தில் தோன்றும் இலைக் காம்பின் நுனியில் இலைகள் காணப்படும்.
இலை : தனி இலை; முட்டை அல்லது வட்ட வடிவமானது; பசிய நிறம் உள்ளது. அடியில் அடர்ந்த உரோமமுள்ளது. இலையைத் தாங்கி நிற்கும் இலைக் காம்பு; இலையின் மேற்புறத்தே இலைத் துளைகள் உள. இலை, காம்புடன் இணைக்கப்பட்டவிடத்தில் இலை நீளமாகப் பிளவுபட்டிருக்கும். இலை விளிம்பு நேரானது; இலைக்
காம்பு இலையின் அடியில் ஒட்டியிருக்கும்; இலையின் நடுவினின்றும் பல இலை நரம்புகள் இலை விளிம்பு வரை விரிந்துள்ளன.
இலைக் காம்பு : நீளமானது. தூம்புடையது. இதனைக் கால் எனவும் தாள் எனவும் இலக்கியங்கள் கூறும். இதில் இரு பெரிய துளைகளும்,பல சிறு நுண் துளைகளும் உள்ளன. இவற்றுள் காற்று நிரம்பி இருக்கும்.
மலர் : தனி மலர். நீரில் மிதந்து கொண்டிருக்கும்; சற்று நீர் மட்டத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருப்பதுமுண்டு; மலர்க் காம்பு இலைக் காம்பு போன்று நீளமானது; தூம்பு உடையது. ஐந்து பெரிய துளைகள் இருக்கும். மலர் இலைக் கோணத்தில் உண்டாகும்.
அரும்பு : நீளமானது; புறவிதழின் வெளிப்புறம் பசுமையானது.
மலர் : அகன்று விரியும்; இரு சமச்சீரானது; ஒழுங்கானது; இருபாலானது; பல இதழ்கள் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன.
புல்லி வட்டம் : 4 புல்லிகள்; நீளமானவை. 5-6 செ.மீ. x 2-3 செ.மீ. வெளிப்புறம் பசுமையானவை. உட்புறம் வெண்மையானவை.
அல்லி வட்டம் : எண்ணற்ற இதழ்கள் வெண்மையானவை; அடுக்கடுக்காய் அமைந்துள்ளன; 5-6 x 2-3 செ.மீ. இவை உட்புறத்தில் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் இயல்பின.
மகரந்தத் தாள்கள் : இதழ்கள் போன்ற மகரந்தக் கம்பிகளுடன் (Petaloid filameants) உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும்; தாள்கள் பூத்தளத்திலிருந்து எழும்.
சூலக வட்டம் : 5 முதல் 35 வரையிலான சூலிலைகள் சதைப்பற்றானவை; பூத்தளத்தில் புதைந்திருக்கும்; பல அறைகளைக் கொண்ட சூற்பையினை உண்டாக்கி அவற்றின் சூல்முடி பல ஆரங்களில் கதிர்களாகப் பிரிந்திருப்பது போல் அமைந்திருக்கும். அனாட்ரோபஸ் வகையானவை.
கனி : அல்லிக்காய் எனப்படும் பல விதைகள் கொண்ட வழவழப்பான சதைக்கனி அடியிலிருந்து கனியும்; விதைகள் மிகச் சிறியவை; அல்லி அரிசி என்று வழங்கப்படும். ஏரில் (Aril) எனப்படும் விதை சூழ்தசையில் புதைந்திருக்கும்.

அல்லி மலர் பொதுவாக வெண்மையானது. வெள்ளாம்பல் எனப்படுவது; சிவப்பு நிறமான இதழ்களை உடைய செவ்வல்லி தமிழ்நாட்டில் குளங்குட்டைகளில், வெள்ளாம்பலுடன் சேர்ந்தோ தனித்தோ வளரும். அன்றி இவ்வினத்தில் மஞ்சள் அல்லியும், நீல அல்லியும் உண்டு. நீல அல்லி இக்காலத்தில் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறதென்பர். தமிழ்நாட்டில் உள்ள நீலோற்பலத்தை (கருநெய்தல்) நீல அல்லி என்றும், நீலம் என்றும் கூறுவாருமுண்டு. இவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் மிக நுண்ணியவை. எனினும், மலரியல்புகள் எல்லாம் அல்லியை ஒத்தனவே ஆம்பல் இந்திய நாட்டிலிருந்து ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்பர் .

பயன் : அல்லிக்காய்களினின்றும் அரிசியை எடுத்து (அல்லி அரிசி) உண்பர்; அல்லி அரிசியைக் கழிகலமகளிர் உணவாகக் கொண்டனர் என்று பண்டைய இலக்கியம் கூறும். பெரிதும் பல வண்ண அல்லிச் செடிகளை அழகுக்காகக் குளங்குட்டைகளில் வளர்க்கின்றனர்.

வெள்ளாம்பலின் (Nymphaea alba, Linn.) குரோமோசோம் எண்ணிக்கை :

2n - 48, 52, 56 என்று டிரே (1947) என்பவரும்.
2n - 84 என்ற லாங்லெட் சோடர்பர்க் (1927) என்பவரும், இதனை வலியுறுத்தி டிஷ்லர் (1934)
2n = 84, 105, 112, 160, என்று உட் (1959) என்பவரும் 84, 112 என்று ஷெல்காப் ஷேரிங்சன் (1955) என்பவருங் கூறுகின்றனர்.


அரக்காம்பல் என்ற நிம்பேயா ரூப்ராவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் (1927) கூறுவர்.

நிம்பேயா பூபெசென்ஸ் என்னும் வெள்ளாம்பலுக்குப் பழைய தாவரப் பெயர் நிம்பேயா ஆல்பா (Nymphaea alba, Linn,) என்பது.

செவ்வல்லி என்றும் அரக்காம்பலென்றும் வழங்கப்படும் செந்நிற அல்லியை நிம்பேயா ரூப்ரா (Nymphaea rubra, Roxb.) என்று கூறுவர். இதன் குரோமோசோம் எண் 2n = 56 என்று சோல்ட்ர்பர்க் கூறியுள்ளார். (1927).


 1. சீ. சிந். 1314
 2. சீ. சிந் . 1662
 3. சிலப். 17 :20:2
 4. வீ. நெ: 355
 5. திணை மொ. ஐ. 40
 6. திணை மா. நூ. 72
 7. .ஞான. தே. கழுமலப்பதி: 3
 8. “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
  வெள்ளம் தீப்பட்டதென வெரீஇ - புள்ளினம்தன்
  கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
  நச்சிலைவேல் கோக்கோதை நாடு”
  –முத்தொள்ளாயிரம்